Loading

அத்தியாயம் 120

     முகூர்த்தப் புடவை எடுப்பது, நலங்கு மற்றும் மற்ற சம்பிரதாயங்களைப் பற்றி பேசுவதற்காக அறிவின் வீட்டிலிருந்து அவளுடைய அப்பா, அம்மா இருவரும் வந்திருக்க, வேறு வழியில்லாமல் அறைக்குள் அடைபட்டுக் கிடந்த தங்களின் கணவன்மார்களுக்கு விடுதலை கொடுத்தனர் மனைவிமார்கள்.

     வடிவேலு செல்வாவை அலைபேசியில் அழைக்க அதற்கு மேலும் தவிர்க்க முடியாமல், தயங்கித் தயங்கி அறையில் இருந்து வெளியே வந்தான் செல்வா உடன் லீலாவும்.

     வந்ததும் வராததுமாக லீலாவை கைபிடித்து தங்களுடன் சமையலறை அழைத்து சென்றாள் தேவகி.

     “லீலா” என்று அவள் சென்ற திசையைப் பார்த்து கை நீட்டிய செல்வா, “இப்படிப் பாதியில விட்டுட்டு போயிட்டியே டி பாவி. ஐயோ இவனுங்க நாலு பேரும் பார்க்கிற பார்வையே சரியில்லையே எப்படி சமாளிக்கப் போறேனோ.” தனக்குள் நினைத்தவன் அரசுவின் வருங்கால மாமனார் மாமியாரைப் பார்த்து தன்னைச் சமாளித்துக்கொண்டு, அமைதியாகச் சென்று தன் அப்பாவின் அருகில் நல்ல பிள்ளை போல் அமர்ந்துகொண்டான்.

     அறிவின் அம்மாவும், அப்பாவும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அதற்குத் தகுந்த பதில் சொல்லிக் கொண்டிருந்தார் வடிவேலு. அவர் அருகே சங்கடத்துடன்  குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தான் செல்வா.

     “செல்வா என்னாச்சு உங்களுக்கு. நானும் வந்ததில் இருந்து பார்த்துகிட்டே இருக்கேன், ரொம்ப டென்ஷனா இருக்கீங்க.” அறிவின் அப்பா கேட்டேவிட்டார்.

     “மாட்டினோம் டா.” என்று பதறி நிமிர்ந்தான் செல்வா.

     “அது” என்று அவன் ஏதோ சொல்ல வர, “இல்ல எங்க அண்ணன் கொஞ்சம் ஷை டைப். அதனால தான் இப்படி.” சிரிப்போடு சொன்னான் நாகா.

     “நாகா அமைதியா இரு.” கண்டனத்துடன் அவனை அடக்கிய வடிவேலு பெண் வீட்டாரிடம் திரும்பி, “செல்வா ஹாஸ்பிடலுக்கு போகனும் னு சொன்னான். நான் தான் கல்யாண வேலை இருக்கு லீவு போடுன்னு சொன்னேன். என்னை எதிர்த்து பேச முடியாம உட்க்கார்ந்து இருக்கான்.” என்று சமாளித்தார்.

     “ஓ சரிங்க, அப்ப நாங்க வந்த வேலை நல்லபடியா முடிஞ்சது நாங்க கிளம்புறோம்.” என்று அவர்கள் கிளம்ப முயற்சிக்கையில், “நல்லா இருக்கே முதன் முதல்ல எங்க வீட்டுக்கு வந்துட்டு, எதுவும் சாப்பிடாம போனா எப்படி. ருக்குக்கா ஜூஸ் ரெடி பண்றாங்க. அதைக் குடிக்காம எழுந்திரிக்கக் கூடாது.” என்றபடி வந்தாள் ஊர்மி.

     “ஊர்மி நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுற. அதை லீலாகிட்ட கொடுத்து விடு.” மூத்த மருமகளைச் சகஜமாக்கும் முயற்சியில் சொன்னார் வடிவேலு.

     லீலாவிற்குத் தயக்கம் தான். இருந்தாலும் சொல்வது மாமனார் என்பதால் ஜூஸ் டம்ளர்கள் இருந்த தட்டை வாங்கிக்கொண்டு, ஏதோ தன்னையே பெண் பார்க்க வந்துள்ளது போல் அன்ன நடையிட்டு மெதுவாக வந்தாள்.

     அவளுடைய சங்கோஜம் அறிவின் அம்மா, அப்பாவைத் தவிர மற்ற அனைவருக்கும் நன்றாகவே புரிந்தது.

     “அண்ணி நீங்க இப்படி நடந்து வந்தீங்கன்னா, இவங்க கிட்ட வந்து சேர இன்னும் ஒரு வருஷம் ஆகும் பரவாயில்லையா” நாகா கேட்க, அவன் குரலில் பதற்றமானவள் நிமிர்ந்து வேகவேகமாக அவர்களிடம் வந்து தட்டை நீட்டினாள்.

     “புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும் பேய் அடிச்சிருச்சா என்ன. எதுக்காக இப்படி இருக்கீங்க. சம்பந்தி நாங்க கிளம்பினதுக்கு அப்புறம் பிள்ளைங்களுக்கு விபூதி வைச்சு விடுங்க.” வெள்ளந்தியாக சொல்லிவிட்டு வெளியேறினார் இருவரும்.

     “அங்கிள் நான் அவங்களை அனுப்பி வைச்சிட்டு வந்துடுறேன்.” என்று தானும் அவர்களுடன் தானும் வெளியேறினான் அரசு.

     எங்கே தான் நகர்ந்தால் தன்னுடைய மற்ற புதல்வர்கள் மூத்தவனைக் கிண்டல் செய்வார்களோ என்று அரணாய் அவன் அருகிலேயே அமர்ந்திருந்தார் வடிவேலு. அதில் அரசுவைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்.

     “அங்கிள் ஒரு நிமிஷம், நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று தன் வருங்கால மாமனாரை நிறுத்தினான் அரசு.

     “சொல்லுங்க மாப்பிள்ளை, என்ன விஷயம்.” என்று உரிமையாக அழைக்கும் அவரைப் பார்க்க புதிதாய் இருந்தது அரசுவிற்கு.

     “அம்மா, அப்பா, அண்ணன், தம்பின்னு சொந்தபந்தம் யாருமே இல்லாத நீங்க என்ன தைரியத்தில் என் பொண்ணைக் கேட்டு எங்க வீட்டு வாசலுக்கு வந்திருக்கீங்க.” என்று அன்றொரு நாள் இதே மனிதர் கேட்ட கேள்விகள் அரசுவிற்குள் பசுமரத்தாணி போல் இன்னும் நினைவில் நின்று கொண்டிருந்தது.

     “என்ன மாப்பிள்ளை நம்மளோட முதல் சந்திப்பைப் பத்தி நினைச்சுப் பார்க்கிறீங்களா. என்னடா அன்னைக்கு வீரப்பா சொந்த பந்தம் இல்லாத அநாதைக்குப் பொண்ணு குடுக்க மாட்டேன்னு சொன்னானே. இன்னைக்கு அதே அநாதையை மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு உரிமையாக கூப்பிடுறானேன்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்க, அரசுவின் தலை தன்னால் மேலும் கீழும் ஆடியது.

     “மாப்பிள்ளை நீங்க என்னைப் பத்தி தப்பா நினைச்சாலும் பரவாயில்லை. அன்னைக்கு நான் உங்களை வேணாம் னு சொன்னது, உங்களுக்கு யாரும் இல்லங்கிறதால் நீங்க நல்லவரா இருக்க மாட்டீங்கங்கிற சந்தேகத்தால் இல்லை.

      நாளைக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என் பொண்ணு உங்க வீட்டுக்கு வரும் போது, அவளைக் கண்டிக்கிறதுக்கு, அவளுக்கு எதுவும் னா கூட இருந்த பார்த்துக்கிறதுக்கு யாரும் இல்லாம போயிடுவாங்களேங்கிற நியாயமான பயத்தில் தான்.” என்க, அரசுவின் புருவங்கள் உயர்ந்தது.

     “அப்பா, அம்மா இல்லாமப் போனது என்னோட தப்பான்னு நீங்க கேட்கலாம். ஆனா பொண்ணு வாக்கப்பட்டு போற இடத்தில் அவளுக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல பெரியவங்க வேணும் னு நினைக்கிறது ஒன்னும் தப்பு இல்லையே.” அவர் சொல்ல அரசுவும் அதை ஒப்புக்கொண்டான்.

     “இவர் இதை நினைச்சு கவலைப்பட்டாருன்னா எனக்கு உங்க சம்பாத்தியத்தை பத்தி பயம் இருந்துச்சு. சொத்து பத்துன்னு பெருசா இல்லை தான். இருந்தாலும் நாளைக்கு ஒரு எமர்ஜென்சி வந்தா சமாளிக்கிற அளவுக்கு சேமிப்பாவது இருக்கணுமேங்கிற நியாயமான பயம் என்னோடது.

     வடிவேல் அண்ணா அன்னைக்குப் பேசினதுக்கு அப்புறம் தான் எங்ககிட்ட இருந்த சின்னச்சின்னக் குழப்பங்கள் கூட தீர்ந்து போச்சு.” என்றார் அறிவின் அம்மா.

     “அப்படி அன்னைக்கு என்ன பேசிக்கிட்டீங்க.” கேட்ட அரசுவிற்குள் பெண் பார்க்கச் சென்று திரும்பிய நாளில் இருந்து, இராதா இல்லத்தைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் எதையோ மறைக்கிறார்கள் என்று உருவாகியிருந்த சந்தேகம் இப்போது உறுதியாகி இருந்தது. அன்று நடந்ததில் தன் காதிற்கு வராத விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக தயாராகினான்.

     “உங்களுக்கும், அறிவுக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், இப்போ வடிவேல் அண்ணா பெயரில் இருக்கிற நிர்வாகத்தை உங்க பெயருக்கு மாற்றி எழுதி தருவதாக சொன்னார். அவரோட பசங்க கூட எந்த எதிர்ப்பும் சொல்லாம சந்தோஷமா ஒத்துக்கிட்டாங்க.” அறிவின் அம்மா பெருமையாகச் சொல்ல, அரசுவிற்கு கோபம் கோபமாக வந்தது.

     அதை இவர்களிடம் காட்டுவதில் பிரயோஜனம் இல்லை என்பதால் அவர்களை இன்முகத்துடன் வழியனுப்பி வைத்துவிட்டு, அடங்காத கோவத்துடன் வீட்டிற்குள் வந்தான்.

     “செல்வா என்ன ஆச்சு உனக்கு. எதுக்காக உன் கண்ணு எல்லாம் சிகப்பா இருக்கு. இராத்திரி முழுக்க தூங்கவே இல்லையா.” இன்று விட்டால் செல்வாவைக் கிண்டல் செய்யும் பாக்கியம் இந்த ஜென்மம் முழுவதுக்கும் கிடைக்காது என்று நினைத்தானோ என்னவோ தெய்வாவைத் தடுக்க யாராலும் முடியவில்லை.

     “உன்னையும், என்னையும் மாதிரியா அவன். அவனுக்கு நிறைய வேலை இருந்திருக்கும் அப்படித்தானே செல்வா.” என்றான் நாகா.

     “இவ்வளவு நாள் நீ எப்படி தாக்குப்பிடிச்சன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.” வெளிப்படையாகவே சொல்லிவிட்டான் தர்மா.

     “டேய் பசங்களா விடுங்கடா, பாவம் என் பையன்.” காப்பாற்ற வந்தார் வடிவேலு.

     “அதெப்படி விட முடியும். எங்க அண்ணன் எங்க உரிமை.” என்றான் தர்மா.

     “ஆமா செல்வா, நாம பேசிட்டு இருக்கும் போது உன்னை எறும்பு கடிச்சிதுன்னு சொன்னியே. எங்க கடிச்சது இங்கேயா இங்கேயா.” என்று தெய்வா செல்வாவிற்கு கிச்சு கிச்சு மூட்ட துடித்துப்போனான் செல்வா.

     “டேய் விடுடா, எருமை மாடு என்னடா பண்ற. ஐயோ ஆண்டவா யாராவது காப்பாத்துங்களேன்.” கத்திக்கொண்டே அப்படியும் இப்படியுமாய் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான் செல்வா.

     “வாவ் செல்வா உனக்குள்ளே இவ்வளவு திறமை இருக்கா. எவ்ளோ அழகா டான்ஸ் ஆடுற. ஏய் இரு இரு அவன் ஒருத்தன் கிச்சுகிச்சு காட்டினதுக்கே இப்படி ஆடுறியே நானும் கிச்சுகிச்சு காட்டினா இன்னும் நல்லா ஆடுவ போலயே.” என்று தெய்வாவின் பணியைத் தானும் தொடர்ந்தான் நாகா. செல்வா கத்திய கத்தில் அந்த வீடே ஆடியது.

     இந்த கலவரத்திற்கு நடுவே வடிவேலுவை நைஸாக தனியே அழைத்து வந்த அரசு அவரிடம் காட்டு கத்து கத்தலானான்.

     “யாரைக் கேட்டு அறிவோட அப்பா அம்மாவுக்கு அப்படி ஒரு சத்தியம் பண்ணிக் கொடுத்தீங்க. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல. நீங்க என்ன சொன்னாலும் அதைக் கேட்டு நான் நடந்துக்கிறேங்கிறதுக்காக என்னைக் கேட்காம என்னோட வாழ்க்கையில் நீங்க என்ன வேண்ணா பண்ணலாம் னு நினைக்கிறீங்களா?” கோபமாய் கேட்டான்.

     “என்னடா வார்த்தை எல்லாம் பலமா இருக்கு. விட்டா உனக்காக பண்றதுக்கு நான் யாருன்னு கேட்ப போல.” என்க, அரசு முகத்தைச் சுளித்தான். ஆனாலும் கோபம் மட்டும் குறைவேனா என்றது அவனுக்கு.

     “எங்களுக்காக நீ என்ன வேண்ணா பண்ணலாம், அதை நாங்க ஏத்துக்கணும். ஆனா நாங்க உனக்காக ஒரு சின்ன விஷயம் பண்ணா அதை ஏத்துக்க சாருக்கு குத்துமா.

     நான் ஒன்னும் திடீர்னு இதைச் சொல்லல. ரொம்ப நாளா இதைச் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன். நீ தான் பெருசா எடுத்துக்கல. அதுக்க நான் என்ன பண்ண முடியும். என்னோட பசங்க நாலு பேரும் என் தொழிலைப் பார்த்துக்க முடியாதுன்னு தனித்தனி தொழிலை தேர்ந்தெடுத்துக்கிட்டாங்க.

     எனக்கு அப்புறமும் இந்த தொழில் நிக்காம ஓடுதுன்னா அதற்கு முழுமுதற் காரணம் நீதான். சொல்லப் போனா கடந்த நாலஞ்சு வருஷமா என்னோட உழைப்பே இதில் இல்லை.

     முழுக்க முழுக்க உன்னோட உழைப்பில் தான் அந்த கம்பெனி ஓடுது. அப்படி இருக்கும் போது அதை உன் பேருக்கு எழுதி வைக்கிறது தான் சரின்னு தோணுச்சு. அது தான் நியாயமும் கூட.” என்க, இல்லை என்று தலையசைத்தான் அரசு.

     “இவ்வளவு சொல்லியும், இல்ல நான் சொந்தக்காலில் தான் நிப்பேன் கடைசி வரைக்கும் அந்த கம்பெனியில் ஒரு வேலைக்காரனா தான் இருப்பேன்னு நீ சொன்னா, இந்த முடிவை எடுத்தது என்னோட பசங்க. அவங்ககிட்ட போய் இதில் எனக்கு உடன்பாடு இல்லைன்னு நீயே சொல்லிடு.” என்றார் வடிவேலு.

     “அவங்க நாலு பேரும் தன்னால் இந்த முடிவை எடுத்தாங்களா, இல்ல நீங்க அவங்களைக் கட்டாயப்படுத்துனீங்களா?” சந்தேகமாய் கேட்டான்.

     “நான் சொல்ற எல்லாத்தையும் என்ன ஏதுன்னு கூட கேட்காமல் நம்புற நீ, இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏன்டா ஏத்துக்க மாட்டேங்கிற. நம்புடா, நீ என் பசங்க மேல எவ்வளவு பாசமும், மரியாதையும் வைச்சிருக்கியோ அதே அளவு பாசமும், மரியாதையும் அவங்களும் உன் மேல வைச்சிருக்காங்க.

     அவங்க உன்னைத் தங்களோட கூடப் பிறந்த ஒருத்தனா தான் நினைக்கிறாங்க. நீ இப்படி சந்தேகப்படுறன்னு தெரிஞ்சாலே அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க.

     ஏதோ சின்ன வயசுல ஒரு முறை அவங்க உன்னைக் குற்றம் சொல்லி இருக்கலாம். ஆனா அது அறியாத வயசு டா. அதே மாதிரி நிலையிலே இப்ப வரைக்கும் இருப்பாங்களா என்ன?” உணர்ந்து சொன்னார் வடிவேலு.

     “ஹலோ ஒல்டு மேன் நான் உங்க கிட்ட சொன்னேனா நான் அவங்களை சந்தேகப்படுறேன்னு. வரவர உங்களுக்குக் கற்பனைத்திறன் ரொம்ப அதிகமா போய்கிட்டு இருக்கு.” என்றான்.

     “இது காரணம் இல்லன்னா அப்புறம் நீ எங்களோட ஒட்டுதலா இல்லாம இருக்குறதுக்கு அப்படி என்னடா பெரிய காரணம் இருக்கு.” இன்று உன்னை விடுவதில்லை என்னும் தோரணையில் வீராப்பாய் கேட்டார் வடிவேலு.

     “இதோ பாருடா மறுபடியும் ஒரு பொய். நான் உங்களோட ஒட்டுதலா இல்லையா. இந்த ஊர் உலகத்துக்கே தெரியும். இந்த அரசு உங்களோட எப்படி பசை போட்டு ஒட்டின மாதிரி இருக்கான்னு.” கேட்டுக்கொண்டே வடிவேலுவை அணைத்தான் அரசு.

     அவனைத் தன்னை விட்டு தள்ளி நிறுத்தியவர், “என் பசங்களை விட உன்னை நான் நல்லாப் புரிஞ்சு வைச்சிருக்கேன்னு கர்வமா இருந்தேன் டா. இப்ப பார்த்தா இல்லையோன்னு தோணுது.

     வழக்கம் போல் குழப்பாம இன்னைக்காச்சும் உன் மனசில் என்ன இருக்குன்னு உடைச்சுப் பேசு. எங்க வீட்டில் எங்களோட ஒன்னா இருக்கிறதுக்கு உனக்கு என்ன பிரச்சனை. அது எதுவா இருந்தாலும் நான் அதை சரி பண்றேன். என் நாலு பசங்களோட சேர்த்து ஐந்தாவது பையனா நீ என் கண்ணு முன்னாடியே இருந்திடு அரசு.” ஏக்கமாய் கேட்டார் வடிவேலு.

     “நீங்க தெரிஞ்சு சொன்னீங்களோ, தெரியாம சொன்னீங்களோ. ஆனா உண்மையைத் தான் சொல்றீங்க. நான் உங்களோட ஐந்தாவது பையன் தான்.

     இந்த உலகமே உங்களைத் தசரதன்னு சொல்லலாம். ஆனா எனக்கு மட்டும் தான் தெரியும் நீங்க பாண்டு னு.” தன்னோடு நினைத்த அரசு கண்களை அழுந்த மூடித்திறந்து அமைதியானான்.

     “இராதா அம்மாவுக்கு இரண்டாவது பிரசவத்தில் பிறந்தது இரண்டு குழந்தைங்க இல்ல மூணு குழந்தைங்க. நாகா, தர்மா கடைசியா இந்த அரசு. மூணாவது குழந்தையா நான் பிறக்கும் போது தான் அம்மா இறந்து போனாங்க.” என்று நினைத்தவன் கண்களில் கண்ணீர்.

     “இராதா அம்மாவுக்குப் பிரசவம் பார்த்தது என்னை வளர்த்த என்னோட அம்மா. அவங்களுக்கு ரொம்ப வருஷமா குழந்தையே இல்லை. அவங்ககிட்ட தான் ஆரம்பத்தில் இருந்து வைத்தியம் பார்த்தாங்க இராதாம்மா.

     செல்வா, தெய்வா பிறந்ததும் அவங்ககிட்ட தான். இராதாம்மா இரண்டாம் முறை கர்ப்பமா இருந்த போது கருவில் மூணு குழந்தைங்க இருக்குன்னு தெரிய வந்த நேரத்தில் இருந்து, டாக்டர் அம்மாவுக்கு ஒரு எண்ணம்.

     பிறக்கப்போற மூன்று குழந்தைகளில் ஒன்னை அவங்க எடுத்துக்கிட்டா குழந்தை இல்லாத அவங்க ஏக்கம் சரியாகிப் போகும் னு நினைச்சு, ஆரம்பத்தில் இருந்து வயித்தில் இருப்பது இரண்டு குழந்தைன்னு நம்ப வைச்சிருக்காங்க. சிரமப்பட்டு தன்னோட புருஷனையும் இதுக்கு சம்மதிக்க வைச்சிருக்காங்க.” என நினைக்கும் போதே மனம் தவியாய் தவித்தது அரசுவிற்கு.

     “டாக்டர் அம்மாவும், அவங்களோட புருஷனான உங்களோட ப்ரண்டும் திட்டம் போட்டபடி உங்களுக்குப் பிறந்த என்னை உங்களுக்குத் தெரியாமலேயே அவங்களுக்கு சொந்தமாக்கிக்கிட்டாங்க.

     இது பெரிய தப்பு தான். ஆனா அவங்க நிலைமையில் இருந்து பார்த்தால் இது தப்பில்லை. ஒருபக்கம் குழந்தையே இல்லாத அவங்க. இன்னொரு பக்கம் ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இப்ப மூன்று மொத்தமா ஐந்து பிள்ளைகள். அதில் ஒன்று குறைவதால் உங்களுக்கு பெரிய இழப்பு வராதுன்னு தங்களைத் தாங்களே தேத்திக்கிட்டாங்க.”

     “எனக்குப் பதினைந்து வயசு இருக்கும் போது, நடந்த விஷயம் அது. என்னை உட்கார வைச்சு பக்குவமா நடந்த எல்லாத்தையும் சொன்னாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு.

     அது வரைக்கும் அங்கிள் அங்கிள் னு சொல்லிக்கிட்டு இருந்த ஒருத்தர் என்னோட அப்பா. சேர்ந்து விளையாட பயந்து போய் எட்டி நின்னு பார்த்துக்கிட்டு இருந்த நாலு பசங்க என்னோட அண்ணனுங்க.

     இதையெல்லாம் விட எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது என்னைக் கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துக்கிட்ட என்னோட அப்பா, அம்மா பண்ண தப்பு.

     வடிவேல் அங்கிள் கிட்ட உண்மையைச் சொல்லுங்க, என்ன ஆனாலும், எப்படி சூழ்நிலை மாறினாலும், யார் வந்து கூப்பிட்டாலும் நான் எப்பவும் உங்களுக்கு மட்டும் தான் சொந்தம் னு சத்தியம் பண்ணிக் கொடுத்தேன்.” மனதோடு நினைத்தவனுக்கு அந்த நாள் நினைவு வந்து கண்ணீர் பொங்கியது.

     “அந்த சத்தியத்தில் நம்பிக்கையோடு சேர்த்து அவங்க உயிரையும் வைச்சுக்கிட்டு உங்களைப் பார்க்க கிளம்பி வரும் போது தான் ஆக்சிடெண்ட் ஆகி இரண்டு பேரும் இறந்து போனாங்க. நான் அன்னைக்கு அவங்களை உங்ககிட்ட அனுப்பாம இருந்திருக்கலாம் னு வருத்தப்படாதே நாளே இல்லை.

     அந்த துர் சம்பவத்துக்கு அப்புறம் நீங்க என்னைப் பார்த்துக்க ஆரம்பிச்சீங்க. என்னையும் மீறி உங்க மேல எனக்கு அளவுக்கு அதிகமா பாசம் வந்துச்சு. அதுதான் ரத்தபாசமோ என்னவோ. அந்த நொடி நான் பயந்தேன். அளவுக்கு அதிகமாவே பயந்தேன்.”

     “என்னை வளர்த்த என்னோட அப்பா, அம்மாவை உங்களோட பாசத்தால மறந்திடுவேனோன்னு உள்ளுக்குள்ள உதறல் வந்துச்சு.

     உண்மை தெரிஞ்சா என்னோட அப்பா, அம்மாவை நீங்க வெறுத்திடுவீங்க. என் அண்ணனுங்க என்னை வெறுத்திடுவாங்கன்னு பயம் வந்துச்சு. அதனால் தான் உங்களை விட்டு விலகியிருக்க ஆரம்பிச்சேன். இப்ப வரைக்கும் அதையே தொடர்ந்து பண்ணிக்கிட்டு இருக்கேன்.”

     “நான் எங்க இருந்தாலும் நான் உங்களோட பையன் தான். ஆனா மொத்தமா உங்களோட வந்துட்டேன்னா என்னோட அப்பா அம்மாவோட பையனா நான் இருக்க முடியாதே.

     நான் சாகுற வரைக்கும் அவங்களோடமகனா தான் இருக்க ஆசைப்படுறேன். அப்படித்தான் இருக்கணும். அதுதான் சரி. அவங்களோட ஆசையும் அதுதான். அவங்களுக்கு எதுவும் பண்ற கொடுப்பனை எனக்கு இல்ல. இந்த ஒன்னைத் தவிர.

     என்னை மன்னிச்சிடுங்க அங்கிள். நீங்க கடைசிவரைக்கும் எனக்கு அங்கிள் மட்டும் தான்.” வடிவேலுவைப் பார்த்து  மனதில் நினைத்துக் கொண்டான் அரசு.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு. அரசு வடிவேல் பையனா, ஆனால் டொக்டர் செய்தது மிகப் பெரிய​ தப்பு.

  2. இதென்ன டா பயங்கரமான ட்விஸ்ட் டா இருக்கு.