
தமிழ் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது, தனா இரவு உணவு சமைப்பதற்கு வெங்காயம், தக்காளி அரிந்து கொண்டிருக்க,
“என்ன தனா, நீ செஞ்சிட்டு இருக்க?”.
“இல்ல அண்ணி, நீங்க வரதுக்கு லேட்டாயிடுச்சு இல்ல. அதனால தான்”
“சரி” என்று எதுவும் பேசாமல் ஒரு சில நொடி தனாவை நின்று பார்த்தவள், ‘இவளிடம் பேசலாமா? வேண்டாமா?’ என்று யோசனையுடனே ரூமுக்குள் சென்று விட,
ருத்ரன் ரூமில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘இவரிடம் இதைப் பற்றிக் கேட்கலாமா?’ என்று யோசித்தாள்.
அடுத்த நொடி ‘என் தங்கச்சி வாழ்க்கைல முடிவு செய்ய நீ யாருன்னு கேட்டா?’ என்று யோசித்தாள்.
அதன் பிறகு, ‘எப்படியும் சரவணன் அண்ணா சொல்லி இருப்பாரே’ என்று எண்ணி விட்டு, “மாமா…” என்றாள்.
ருத்ரன் ஏதோ யோசனையில் இருந்தவன் அவள் கூப்பிட்டதைக் காதில் வாங்காமல் இருக்க,
“மாமா…” என்றாள்.
“என்னடி வேணும் உனக்கு? இத்தனை மாசம் இருக்கேனா, செத்துட்டேனானு கூடக் கண்ணுக்குத் தெரியாத மாறி இருந்திட்டு… இப்போ வந்து என்னடி மாமா நோமான்னுட்டு” என்றான்.
“நம்ம பஞ்சாயத்தை அப்புறமா வச்சுக்கலாமா? என் மேல மட்டும் முழு தப்புன்னு சொல்லாத” என்றாள்.
“ஆமாம், மேடம் மேல எந்தத் தப்பும் இல்லை. என் மேல தான் எல்லா தப்பும் சரியா? நான் தான் ஒன்றும் தெரியாத மக்கு. எப்படி இருக்கும்? அப்படி தான் இருக்கேன்” என்று சொல்ல,
“மாமா ப்ளீஸ், நான் இப்பதான் சொன்னேன், நம்மளப் பத்தி அப்புறமா பேசுவோம். நான் உங்ககிட்ட வேற ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”
“ஆமாண்டி, என்னைப் பத்தியோ, உன்னைப் பத்தியோ பேச ஒண்ணுமே கிடையாது. அதை என்கிட்ட நீ ஏன் பேசுவ, ஃபர்ஸ்ட் சரியா? அடுத்தவங்களப் பத்திப் பேசுறதுக்கு மட்டும் தான் உனக்கு என்கிட்ட விஷயம் இருக்கும், அப்படித்தானே” என்று கேட்க,
இவனிடம் பேசுவது சரியாக வராது என்று யோசித்தவள் அமைதியாக பாத்ரூமுக்குள் நுழையப்போக,
“என்னடி பேசணும்னு சொல்லிட்டு இப்பப் போற…”
“பேசணும்னு சொன்னா பேசுறதைக் காது கொடுத்துக் கேட்கணும், அதை விட்டுட்டுத் திரும்பத் திரும்பப் போனதையே, முடிஞ்சதையே பேசிட்டு இருந்தா”
“அப்போ உனக்கும், எனக்கும் நடுவுல ஒன்னும் கிடையாது. அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் அப்படியா?”
“மாமா ப்ளீஸ், போதும் நிறுத்துறீங்களா? திரும்பத் திரும்ப நீங்களே ஆரம்பிக்க வேண்டியது, அப்புறம் நான் பேசுறேன் என்று சொல்ல வேண்டியது. நான் பர்ஸ்ட் பாத்ரூம் போகணும், போயிட்டு வந்து எதா இருந்தாலும் உன்கிட்டப் பேசுறேன்.”
தமிழ் பாத்ரூக்கு செல்ல, தனா கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த ருத்ரன், என்ன என்று கேட்க,
“அண்ணா, நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும், அண்ணி எங்க?” என்றாள்.
“உங்க அண்ணி பாத்ரூம்ல இருக்கா, சரி தனா அவ வந்த உடனே ரெண்டு பேரும் வெளியே வரோம், பேசலாம்” என்றான்.
“இல்ல நான் தனியாப் பேசணும்.”
“யார்கிட்ட தனியாப் பேசனும், அவகிட்டயா? என்கிட்டயா?”
“உங்க ரெண்டு பேர் கிட்டயும் அண்ணா” என்றாள்.
தனது தங்கையைக் குறுகுறுவென்று பார்த்துவிட்டுச் சரி என அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தமிழ் பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தாள்.
“என்ன தனா?” என்று கேட்டுக் கொண்டே வர,
“உங்க கிட்டயும் அண்ணன் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அண்ணி” என்றவுடன்,
தமிழ் ஒரு சில நொடி ருத்ரனைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் தனாவைப் பார்த்தவள்,
‘இப்போது என்ன செய்வது? இவரிடம் பேசலாம் என்று வந்தால் இவரும் அதற்குப் பிடி கொடுத்துப் பேசவில்லையே… இப்பொழுது இவள் வேற பேச வேண்டும் என்று வந்து நிற்கிறாளே’ என்று யோசிக்க,
“தமிழ், உன்கிட்ட தானே பேசணும்னு சொல்லிட்டு இருக்கா” என்று ருத்ரன் சொல்ல,
ருத்ரனைப் பார்த்து முறைத்துவிட்டு, “சொல்லு தனா” என்றாள்.
தமிழின் நடவடிக்கையை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.
‘இவ ஒன்னும் சரி இல்லையே’ என்று யோசித்து விட்டுத் தனது தங்கையின் பக்கம் கண்ணைப் பதிக்க,
“நான் சுத்தி வளைச்சிப் பேச விரும்பல அண்ணா” என்றாள்.
“சரி சொல்லு” என்று அமைதியாகத் தனா சொல்லுவதைக் கேட்க, “என்ன சொல்லணும்னு சொல்றீங்க?” என்று தமிழ் வேகமாகக் கேட்டாள்.
அதிர்ச்சியுடன் தனா தமிழைப் பார்த்துக் கொண்டு இருக்க,
‘இவளுக்கு என்ன ஆச்சு? என்கிட்ட அப்படிப் பேசுறா வந்ததுல இருந்து’ என்று எண்ணி விட்டுத் தமிழ் கையைப் பிடித்து அவள் கையில் அழுத்தம் கொடுத்து தமிழைப் பார்த்துவிட்டு அமைதியாக இருக்க,
அவன் கொடுத்த அழுத்தத்தில் ‘எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற நம்பிக்கை இருப்பது போல் உணர்ந்த தமிழ், “சாரி தனா வேற ஒரு டென்ஷன், நீ சொல்லு” என்றாள்.
“இப்ப நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா, பேசலாமா அண்ணி”
“பேசு தனா, நான் தான் வேற ஒரு டென்ஷன்ல உன்கிட்ட அப்படிப் பேசிட்டேன்” என்று விட்டு அமைதியாகி விட,
“அண்ணா, என் வாழ்க்கையோட முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேச வந்திருக்கேன். உங்ககிட்ட தான் பேசணும் என்பதற்காக வந்திருக்கிறேன். நான் பேசுற விஷயம் சரியா தப்பா எனக்குத் தெரியல. ஆனா பேசி முடிச்சிடனும்னு தோணுது” என்றவுடன் இருவரும் எதையோ யோசித்தார்கள்.
இருவரும் ஒரே போல் “சரி சொல்லு” என்று கேட்க,
ஒரு சில நொடி திருதிருவென முழித்த தனா, “நான் சொல்வேன், ஆனால் என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாது.”
“தப்பா நினைக்கக் கூடாது என்றால், எங்க வளர்ப்பு தப்பா போயிருக்காதுன்னு நம்புறோம். நீ விரும்பினவர் எப்படியும் நல்லவராக இருப்பார் என்று நம்புகிறோம். உன் மனசுல இருக்கறதை நீ சொல்றதில் எந்தத் தயக்கமும் வேண்டாம். தயக்கமும், பயமும் எதுக்கு தனா?” என்று இருவரும் ஒரே போல் சொல்ல,
இருவரும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டு “சொல்லு தனா” என்றார்கள்.
“எனக்கு சரோ மாமாவைப் புடிச்சிருக்கு அண்ணா, ஏன் எப்படி எல்லாம் எனக்குத் தெரியாது. அவருக்கும் என்னைப் புடிச்சிருக்குன்னு நானா நினைச்சுட்டு இருக்கேன். ஆனா, அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியல.
அகிலா அண்ணி அவங்க கல்யாணம் ஆன அன்னைக்கு ஏதோ சொன்னாங்க. அதை வச்சு ஓரளவுக்கு அவருக்கும் என்னைப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனா, இந்த நிமிஷம் வரைக்கும் அவர் என்கிட்டப் பேசினது இல்ல. அது உண்மையான்றதும் எனக்குத் தெரியல. ஆனா எனக்கு அவரப் புடிச்சிருக்கு. நான் இந்த நிமிஷம் வரைக்கும் அவர்கிட்ட இதைப் பத்திப் பேசல.
உங்ககிட்டப் பேசணும்னு நினைச்சேன், அவ்வளவுதான்.” என்று ஒரே மூச்சாகச் சொல்லி முடித்துவிட்டு, தன் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு இருக்க,
இருவருக்கும் தங்களை மீறிச் சிரிப்புதான் தோன்றியது.
வேகமாகவே சிரித்து விட்டார்கள்.
கண்ணைத் திறந்து இருவரையும் அதிர்ச்சியுடன் பார்க்க,
“அண்ணா நான் பொய் சொல்லல, உண்மையா தான்” என்ற உடன் தமிழ் வேகமாகத் தனாவைக் கட்டிக்கொண்டு அவளது நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு, “என் தங்கம் டா. உண்மையாவே பயந்துட்டு இருந்தேன் தனா.
எங்க நீ வேற யாரையோ விரும்புகிறேன்னு சொல்லிருவியோனு…”
ருத்ரன் சிரித்துக் கொண்டே இருக்க, “என்ன மாமா சிரிச்சிட்டு இருக்க?”
“அவ மேல நம்பிக்கை இல்லையாடி.”
“அப்படிச் சொல்லலை மாமா, அவ நடவடிக்கை பார்த்து யாரையோ விரும்புறானு நினைத்தேனே தவிர, அவ மனசுல யாரு இருப்பாங்கன்னு யோசிக்கல… பயம்தான் இந்த நிமிஷம் கூட அவகிட்டக் கேட்டுட்டேனே தவிர, என்னையும் மீறி என் மனசுக்குள்ள பயம். பட்டுப்பட்டுனு அடிச்சுகிச்சு மனசு…”
“ஏன்? அண்ணி, நான் சரோ மாமாவை விரும்பறது உங்களுக்குப் புடிக்கலையா? “என்று பயத்துடனே கேட்க, எங்கே ‘அவருக்கும் உனக்கும் செட் ஆகாது என்று சொல்லி விடுவார்களோ?’ என்று எண்ணிக் கொண்டே இருவரையும் பார்க்க,
ருத்ரன் சிரித்துக் கொண்டே தனது தங்கையின் தோளில் கை போட்டவன், “உனக்குத் தெரியாமலே அவன் உன்னை எட்டு வருஷமா விரும்பிகிட்டு இருக்கான்” என்று சொல்ல,
அதிர்ச்சியுடனே தனாவை விடத் தமிழ் பார்க்க,
கண்ணை மூடித் திறந்து சிரித்தவன், தன் தங்கையைப் பார்க்க,
அவள் அதிர்ச்சியுடன் பார்க்க,
“ஆமா தனா எட்டு வருஷமா உன்னை விரும்புறான். இன்னும் சொல்லப் போனால் உன்னை விரும்புறேன்னு என்கிட்ட அப்பவே சொல்லிட்டான். நீ சின்னப் புள்ள அப்படின்னு ஒரே காரணத்துக்காக, உன்னை விட்டு விலகிப் போயிட்டு இருக்கான்.”
“அப்போ அப்போ…” என்று திக்கித் திணற,
“அப்போ நான் ஏஜ் அட்டன்ட் பண்ணதுல இருந்தா?” என்று விட்டு ருத்ரனைப் பார்க்க, தனா அழுகையுடன் ருத்ரனைக் கட்டிக்கொண்டு ஒரு சில நொடி நின்றாள்.
“அவ்வளவு தான தனா, வேற எதுவும் பேசுவதற்கு இல்லையா?” என்று உறுதி செய்து கொண்டே கேட்க,
“நான் உன்கிட்டச் சொல்லணும்னு நினைச்சதைச் சொல்லிட்டேன். இனிச் சொல்றதுக்கு எதுவும் இல்லை. இன்னொரு விஷயம், நீங்க என்கிட்டச் சொன்னதையோ, இல்ல நான் உங்ககிட்டச் சொன்னதையோ, நீங்க சரோ மாமா கிட்டச் சொல்ல மாட்டீங்க என்று நினைக்கிறேன்” என்று விட்டு வெளியில் செல்லப் போக,
“இது ஆர்டரா டா தனா” என்றான்.
“நீ அவனை விரும்புறேன்னு நான் அவன்கிட்டச் சொல்லக் கூடாது. அதே மாதிரி, அவன் உன்னை விரும்புறான்னு நான் உன்கிட்டச் சொன்ன விஷயத்தை அவன்கிட்டச் சொல்லக் கூடாது. அப்படித்தானே” என்று சிரிப்புடனே கேட்க,
தனா முறைத்துக் கொண்டு, “அப்படிக் கூட வச்சுக்கலாம்” என்று விட்டு வெளியில் சென்று விட்டாள்.
தமிழ் தான் வேகமாக ருத்ரனின் முதுகில் அடித்துக் கொண்டே, “என்கிட்ட ஒரு நாள் கூட ஒரு வார்த்தை சொல்லல”
“ஏன்? உன் அண்ணன் சொன்னானா?” என்றான்.
“அவர் சொல்லல… நீங்க சொன்னீங்களா?”
“நான் ஏண்டி உன்கிட்டச் சொல்லணும்”
“என் பிரண்டு அவன் விருப்பத்தை என்கிட்டச் சொன்னான். நான் கேட்டு கிட்டேன். அவனோட விருப்பத்தை நான் உன்கிட்டச் சொல்லணும் என்றால், நீ யாரு எனக்கு?” என்று கேட்டான்.
அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, அவனது நெஞ்சிலே குத்தியவள், “ஆமாண்டா, நான் உனக்கு யாருமே இல்ல தான்… என்கிட்ட எதுக்கு நீ உன் தங்கச்சி பத்தியும், இந்தக் குடும்பத்தைப் பத்தியும் பேசணும்” என்று இன்னும் பல அடிகளை அவனது நெஞ்சில் குடுத்து விட்டுச் செல்ல,
அவளது கையை வேகமாக இழுத்துப் பிடித்தான்.
“விடு மாமா” என்றாள்.
“விடக்கூடாது என்று தாண்டி புடிச்சிருக்கேன். ஆனா, உனக்கு இன்னும் கூட என் மேல கொஞ்சம் கூட கருணையே இல்ல”.
“கருணையா? அது எங்க இருந்து வரும்?” என்று அவன் பக்கம் திரும்பிக் கேட்க,
“வேணும்னே வச்சு செய்யுறடி, நானும் பார்க்குறேன், இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்னு” என்று அவளை முறைத்துப் பார்த்துச் சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டான். போகும் ருத்ரனைப் பார்த்துவிட்டு, ‘நான்தான் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுறேன் இல்லையா?’ என்று முனகினாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Interesting