
தமிழ் தங்களது ரூமுக்குள் வர,
ருத்ரன் தன் தலையில் கை வைத்துக் கொண்டு பித்துப் பிடித்தவன் போல் உட்கார்ந்து இருந்தான்.
தமிழ் ஒரு சில நொடி பார்த்தவள், அவன் அப்படி உட்கார்ந்து இருப்பது பிடிக்காமல், “மாமா” என்று அழைக்க, அவளை அமைதியாகப் பார்த்தவன், அவளது தாடையில் ஓங்கி அறைந்திருந்தான்.
அவள் தாடையில் கை வைத்துக் கொண்டு அதிர்ச்சியுடன் ருத்ரனைப் பார்க்க,
“உன் அண்ணா சொல்லிட்டுப் போனது உண்மையா? பொய்யா? என்று கூட இப்போ நான் கேட்கலடி. ஆனா, அவன் சொன்ன மாதிரி உன் மனசுல தோணி இருக்கப் போய் தானே, எனக்குக் கழுத்தை நீ நீட்டி இருக்க?” என்று கேட்க, அதிர்ச்சியுடன் நின்று கொண்டு இருந்தாள் தமிழ்.
“நான் ஆச்சம் எதையும் புரியாமல் தான் இருந்திருக்கேன்டி ஆனா, நீ புரிஞ்சு, தெரிஞ்சு என்னைப் பழி வாங்கி இருக்க, இல்லையா? அவ்வளவுதான் தமிழ் விட்ரு. இவ்வளவு நாளா நான் பண்ணது தப்பு. அதனால என் மேல நீ வெறுப்போடு இருக்கேன்னு நினைச்சேன்.
உன் தங்கச்சி என்கிட்ட ஒரு கேள்வி கேட்டா, நான் இருக்க அகிலா இருக்க நீ ஏன் மாமா தமிழ்கிட்ட மட்டும் போய் கேட்டேன்னு… சத்தியமா செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சுடி. ஒத்துக்குறேன், அத்தனைப் பேர் இருக்கும்போது உன்கிட்ட ஏன் வந்து கேட்டேன். அதுக்குப் பதில் எனக்கு இந்த நிமிஷம் வரைக்குமே புரியலடி.
நானே இத்தனை நாள் குழம்பிப் போய் தான் இருந்தேன். ஆனந்தியை வேணாம்னு நான் சொன்னது கூடத் தப்பு கிடையாது. அது என்னோட மாமாவோட வளர்ப்பு. ஆனா, அந்தச் சபையில அத்தனப் பொண்ணுங்க இருக்காங்க. உன் அண்ணன் சொன்ன மாதிரி என் அத்தை பொண்ணு இருக்கா.
இத்தனைப் பேரு இருக்கும்போது உன்கிட்ட ஏன் நான் வந்து நின்னேன்? எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாம குழம்பித் தவித்து இருக்கேன். ஆனா, இத்தனை நாளும் என்னை வார்த்தையால வதைச்ச. அதோடு நிறுத்தி இருந்தால் கூட உண்மையாவே நான் பண்ணது தப்பு, அதுக்கான தண்டனைனு நினைத்து இருப்பேன்டி.
ஆனால், எனக்கே தெரியாம நீ என் மனசுல இருக்கன்றதை நீ உணர்ந்து என்கிட்டச் சொல்லல, பாத்தியா? உன் காதலைச் சொல்லத் தாண்டி செஞ்ச. அது போல நான் உன்ன விரும்புறேன்னு எனக்குச் சொல்லி இருந்திருக்கலாமே” என்று அவளை உலுக்கிக் கேட்க,
அவனது கையை வேகமாகத் தட்டி விட்டாள்.
“சொல்லி இருந்தா மட்டும் என்னடா பண்ணி இருப்ப? என்ன பண்ணி இருந்திருப்ப? இன்னும் என்னைக் கேவலமாகப் பேசி இருப்ப. ஏற்கனவே நான் உன்னைக் கட்டிக்கணும் என்பதற்காக அந்த ஆனந்தியைப் பணத்தாசை பிடித்தவள் என்று நான் உன்கிட்டச் சொன்னேன் என்று சொல்லிட்ட.
இன்னும் நீ என்ன விரும்புற அதை நீயே உணரவில்லை அப்படின்னு சொல்லி இருந்தா… இன்னும் கேவலமா கூட நான் உடம்புக்கு ஆசைப்பட்டேன்னு கூடச் சொல்லுவ…” என்றவுடன் ருத்ரனின் ஐந்து விரல்களும் தமிழின் தாடையில் பதிந்திருந்தது.
“அவ்வளவு தாண்டி உனக்கு மரியாதை, கொன்றுவேன்”
“இதைவிடக் கேவலமா உன்னால என்னை நினைக்க முடியாது இல்ல” அவளை முறைத்துப் பார்த்துத் தன்னோட மொத்த வெறுப்பையும் அவளிடம் கொட்டியவன் வெளியே செல்ல,
மற்ற மூவரும் வெளியே அதிர்ச்சியுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு, “இன்னும் என்ன வேணும்? உங்க மூணு பேத்துக்கும்” என்று முறைப்புடன் கேட்க,
மூவரும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து ருத்ரன் எதற்காக இப்படிக் கத்துகிறான்? என்று பார்த்துக் கொண்டிருக்க, ருத்ரனின் சத்தம் கேட்டுப் பாக்கியமும், தனாவும் கூட என்ன என்று கேட்க,
தனது தாயையும், தங்கையையும் பார்த்தவன் மொத்தக் குடும்பத்தையும் முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் வெளியில் சென்று விட்டான்.
“என்னடா சரவணா, எதுக்கு அவன் இப்படிக் கத்திட்டுப் போறான்?” என்று கேட்க,
“ஒன்னும் இல்ல, நான் பார்த்துக்கிறேன்” என்று விட்டுத் தனது இரு தங்கைகளையும் பார்த்தவன், எதுவும் பேசாமல் “ருத்ரா…” என்று கத்திக் கொண்டே தனது நண்பனின் பின்னாடியே சென்றான்.
இங்கு தமிழ் தான் உள்ளே அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நின்று கொண்டு இருந்தாள்.
இப்போது தமிழைப் பார்ப்பதா? இல்லை தங்களது அத்தைக்குப் பதில் சொல்வதா? என்று புரியாமல் அகிலாவும், காயுவும் நின்று கொண்டிருக்க,
“அண்ணன் எதுக்குக் கத்திட்டுப் போகுது அண்ணி” என்று தனா கேட்க,
அகிலா தான், “அவரோட ரூம்ல நானும் காயுவும் தமிழ்கிட்ட அவரப் பத்திப் பேசிட்டு இருந்தோமா, அதனாலதான்…”
“அதுக்காக எதுக்கு அண்ணன் இப்படிக் கத்துச்சு?”
“ஒன்னும் இல்ல” என்று சொல்லி விட்டு நகர,
“எனக்குத் தெரியாம எல்லாரும் ஏதோ ஒன்னு மறைக்கிறீங்கடி” என்று விட்டு பாக்கியமும் அமைதியாக உள்ளே சென்றுவிட,
தனா தான் இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றாள்.
“உன்கிட்டச் சொல்லும் போது சொல்லுவோம் தனா” என்றவுடன் இருவரையும் பார்த்துவிட்டு அமைதியாக நகர்ந்து விட்டாள் தனா.
வேகமாக இருவரும் தமிழ் ரூமுக்குள் செல்ல தமிழ் அதிர்ச்சியாக நின்று கொண்டு இருக்க,
இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் தோளில் கையை வைக்க,
வேகமாக ஓடிச் சென்று பெட்டில் படுத்துக் கொண்டு அழுதாள் தமிழ்.
இருவரும் அவளைத் தொட, “எனக்குக் கொஞ்ச நேரம் தனிமை வேணும். தனியா இருக்க விடுங்க” என்று சொல்ல, இருவரும் வாய் திறக்க “ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க, என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்க. எனக்கு இப்போ தனிமை வேணும்” இருவரும் எதுவும் பேசாமல் வெளியில் வந்து விட்டார்கள்.
வாரங்கள், மாதங்களாகவும் சென்று இருந்தது.
இருவரிடமும் பெரிதாக எந்தப் பேச்சு வார்த்தையும் கிடையாது.
வெளியில் ஹாலில் வைத்துப் பெரியோர்கள் இருக்கும்போது இருவரும் பேசிக் கொள்வதோடு சரி.
அவர்கள் ரூமுக்குள் வந்த பிறகு இருவருமே ஆளுக்கு ஒரு பக்கம் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
தமிழும் ருத்திரனிடம் பேச முன்வரவில்லை.
ருத்ரனும் தமிழிடம் பேச முன்வரவில்லை.
அப்படியே மாதங்கள் ஓடி இருந்தது.
அகிலாவின் திருமணத்தைப் பற்றி ஏற்கனவே பேசிக் கொண்டு வந்திருந்ததால், கோதை தனது மகன் மகியிடமும் பேச,
ஒரு வாரம் கழித்து, “சரி, நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன்” என்றான் மகி.
அதன் பிறகு கோதை தமிழிடம் விஷயத்தைச் சொல்ல,
தமிழ் போன் நம்பர் கொடுத்து விட்டு வந்திருந்ததால், அவள் சரவணனிடம் சொல்ல,
சரவணன் ருத்ரனிடம் சொல்லி, சிறியவர்கள் மூவரும் செல்வம் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரிடமும் சொல்ல,
அதன் பிறகு பெரியவர்கள் மகி வீட்டிற்குச் சென்று பேச,
இருவருக்கும் மூன்று மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.
கடகடவென்று ஒவ்வொரு வேலையாக நடக்க மூன்று மாதம் ஓடி இருந்தது.
கல்யாணத்தில் மும்மரமாக இருந்ததால் மேற்கொண்டு இதைப் பற்றியும் தமிழ், ருத்ரன் இருவரும் பேசவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இருவருக்கும் ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்த பாக்கியமும் சரி, தனாவும் சரி அவர்களாகப் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று அமைதியாகி விட்டார்கள்.
அவ்வப்போது பாக்கியம் தான் தனத்திடம் புலம்ப,
“அப்படிச் சந்தோசமாக இருந்தாலும், சண்டை சச்சரவோடு இருந்தாலும் இருந்துட்டுப் போகட்டும் பாக்கியம், நீ அதுல தலையிடாதே. முட்டி மோதி அவங்க வாழ்க்கையை அவங்களே வாழ்ந்து காட்டட்டும்.”
“எப்ப தான் அவங்க வாழ்க்கையை அவங்க வாழ்றது?”
“நம்ம விருப்பம் சொல்லிக் கட்டி வச்சிட்டோம், அதுக்காக நம்மளே போய் அவங்க வாழ்க்கைக்குள்ள ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட முடியுமா? ஒரு நல்ல முடிவு எடுக்கட்டும். தப்பான முடிவு எடுப்பாங்கனு நினைக்கறியா? ருத்ரன், தமிழ் மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“அண்ணி அவங்க ரெண்டு பேருமே என் அண்ணனோட வளர்ப்பு. அதனால ரெண்டு பேரும் எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்க மாட்டாங்க”.
“அப்பறம் என்ன? விடு பாக்கியம். அடிச்சுப் புடிச்சுட்டு அவங்க வாழ்க்கையை அவங்களே சரி செஞ்சுக்கட்டும்” என்று தனம் சொல்லிவிட பாக்கியம் அமைதியாகி விட்டார்.
அதன்பிறகு ருத்ரன், தமிழைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை.
அகிலா திருமணத்திற்குத் தேவையான ஒவ்வொன்றும் வேகமாக நடந்தது.
அகிலா திருமண நாளும் வந்து சேர்ந்தது.
தமிழும், ருத்ரனும் ஒவ்வொன்றாக எடுத்துக்கட்டிச் செய்ய அகிலாவின் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டான் மகி.
திருமணம் முடிந்த கையோடு மகி வீட்டிற்கு அகிலா செல்லும் பொழுது தங்கள் வீட்டை விட்டுச் செல்வதை எண்ணி அகிலா கண்ணீர் வடிக்க,
தன்னை மீறித் தனது அண்ணன் சரவணனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
சரவணன் தனது தங்கையைப் பார்த்துச் சிரித்து விட்டுத் தன் கண்ணில் துளிர்க்கும் கண்ணீரை லேசாகச் சுண்டி விட்டு,
“நீ விருப்பப்பட்ட வாழ்க்கை அகி, அங்க நீ சந்தோஷமாக வாழ வேண்டும்” என்றான்.
அப்போது தனா தான் சிரித்துக்கொண்டே, “என்ன அண்ணி, உங்க வீட்டை விட்டுப் போறீங்கனு ரொம்ப பீலிங் போல… அதுவும் உங்க அண்ணனை இப்படிக் கட்டிப்பிடித்து அழுவுறீங்க, உங்களை நம்பலாமா? இது உண்மையான பாசமா?” என்று கேட்க,
“ஏண்டி, எனக்கு என் அண்ணன் மேல பாசம் இருக்கக் கூடாதா?” என்று விட்டு, தனது அண்ணனைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு இருந்தாலும்,
“என்னைவிட என் அண்ணன் மேல பாசம் வைக்கிற ஒருத்தி என் அண்ணன் வாழ்க்கையில வராமலா போயிடுவா?” என்றவுடன்,
தனா திருதிருவென முழிக்க,
“இப்படி முழிச்சு முழிச்சுத் தாண்டி என் அண்ணனைக் கவுத்துட்ட” என்று சிரித்துக் கொண்டே அகிலா சொல்ல,
“அண்ணி, என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே” என்றாள் தனா.
“ஒன்னும் சொல்லல சும்மா…” என்று விட்டுப் போக,
இங்கு சரவணன் தான் தனது அருமைத் தங்கை அகிலாவை முறைத்துக் கொண்டு நின்றான்.
“புருஷன் வீட்டுக்குப் போறது தான் போற, என்னை எதுக்கு இவகிட்ட இப்போ கோர்த்து விட்டுப் போற?” என்று தனது தங்கையின் தலையில் கொட்ட,
“பின்ன? என்னைத் துரத்தி விட்டுட்டு, நீ சந்தோஷமா இருந்திடலாம் என்று நினைச்சா?”
“அதுக்குன்னு விளையாடுவியா? அவ சின்னப் பொண்ணு அகிலா, கொஞ்ச நாள் அமைதியா இருன்னு தானே சொல்லி இருக்கேன்” என்றான்.
“ஏண்ணா, நீ வேற… இவ்ளோ நாளா அவ டிகிரி முடிக்கணும்னு சொல்லிட்டு இருந்த. அவ இப்போ இப்போ UG முடிச்சிட்டா. மேற்கொண்டு எம்எஸ்சி ஜாயின் பண்ணி இருக்காங்க ரெண்டு பேரும்.
இதுக்கப்புறம் உன் கையில தான் இருக்கு உன் வாழ்க்கை. இதுக்கு மேல நான் பேசறதுக்கு ஒன்னும் இல்ல…”
“அமைதியா இரு அகிலா, ப்ளீஸ்” என்றான்.
“ஆமா, இது ருத்ரன் மாமாவுக்குத் தெரியுமா? தெரியாதா?”
“இப்ப எதுக்கு அவனை வேற ஞாபகப்படுத்துற?” என்று கேட்க,
அப்போது இருவரது அருகில் வந்த ருத்ரன், “என்னடா அங்க ரகசியம் பேசிட்டு இருக்கீங்க, அண்ணனும் தங்கச்சியும்” என்று கேட்டான்.
“அதுவா மாமா…” என்று அகிலா பேச வருகையில்,
“அமைதியா இரு” என்று தன் தங்கையை முறைத்தான் சரோ.
“என்ன அகி, எதுக்காக உன் அண்ணன் அமைதியா இருக்கச் சொல்றான்?”
“அது ஒன்னும் இல்ல மாமா… எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு இல்லையா… அடுத்து என் அண்ணனுக்குத் தானே, அதைப்பத்தி தான் பேசிட்டு இருக்கேன்”
“அதுக்கு என்ன அகிலா இப்போ அவசரம்? பண்ணிக்கலாம்” என்றான்.
“என்ன அவசரமா? என் அண்ணனுக்கும் உன் வயசு தான மாமா. உனக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகுது. உங்கள விடச் சின்னப் புள்ள எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. என் அண்ணனுக்கும் வயசு ஆகலையா? அவனுக்குக் கல்யாணம் பண்றதா இல்லையா? நீ மட்டும் கல்யாணம் பண்ணிட்டுச் சந்தோசமா இருப்ப…” என்று சொல்லும் போதே,
“எது?”என்று ருத்ரன் கேட்க,
“சரி சரி கஷ்டப்படுற, இருந்தாலும் கல்யாணம் ஆயிடுச்சு இல்ல… குடும்பஸ்தன் ஆயிட்ட இல்ல, என் அண்ணன் மட்டும் அப்படியே ஒண்டிக்கட்டையா சுத்தணுமா?”
“அதுக்கு நீ மனசு வச்சா மட்டும் போதுமா? உன் அண்ணன் மனசு வைக்க வேணாமா?”
“இப்ப நீ என்ன மாமா சொல்ல வர?”
“நான் என்ன சொல்ல வரேன் என்று நீ புரிஞ்சுகிட்ட, அதை இன்னும் கன்ஃபார்ம் பண்ணிக்கக் கேக்குற சரியா? உன் அண்ணன் தான் அந்த முடிவு எடுக்கணும். அதுக்கும், எனக்கும் சம்பந்தம் கிடையாது.
அவன் வாழ்க்கை அவன் தான் வாழனும். அவனுக்கு வேணும்னா அவன் தான் கல்யாணம் பண்ணிக்கணும். நம்ம நடுவுல நின்னு நாட்டாமை பண்ண முடியுமா? நாளைக்கு உன் அண்ணன் ஒரு வார்த்தை என்னைப் பார்த்துக் கேட்க மாட்டானா?
என் வாழ்க்கையில முடிவெடுக்க நீங்க யாருன்னு?” என்று சிரிப்புடனே சொல்லிவிட்டுச் செல்ல,
இங்கே அதிர்ச்சியாக நின்றது என்னவோ அகிலா தான்.
சரவணன் சிரித்த முகத்துடன் நின்று கொண்டு இருந்தான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்னடா நடக்குது இங்க…. இன்ட்ரெஸ்டிங்க்