
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 39
குளிர்காற்று தென்றாலாகத் தழுவிக் கொண்டிருக்க, அந்த இரவைத் தன் வெளிச்சத்தால் அழகாக மாற்றிக்கொண்டிருந்தது அன்றைய பௌர்ணமி நிலவு. இரவை மட்டுமல்ல வானையும் கூட அழகாக மாற்றிய இரவு அனுமதியின்றி ஒரு அறையும் அழகாக மாற்றியது. அது சித்தார்த்தின் அறை.
அவனது அறையின் பால்கெனி ஜன்னல் திறந்திருக்க அதில் தனது அழகிய வட்ட முகத்தைக் காட்டி அவ்வறையையே ஓவியமாக மாற்றி, அதில் ஏகாந்தமாய் இருந்த இரு உயிர்களுக்கு மேலும் இனிமையை கூட்டியது.
ஜன்னலின் வழியே அந்த வட்ட நிலவை இரசித்துக் கொண்டு, தன் கைவளைவில் தன்னவளை அணைத்துக் கொண்டு, அவளையும் இரசித்துக்கொண்டிருந்தான் சித்தார்த்.
பல மாதங்களில் கழித்து அவனது இரவுப் பொழுது அன்பு வீட்டில் உள்ள அவனது அறையில். இந்த அறையில் எத்தனை வருடங்களாக இருந்தான் ஆனால் சில மாதங்களாக அவன் இல்லாமல் தனிமையை அனுபவித்த அந்த அறை, இன்று அவர்களின் ஊடலுடன் கூடிய கூடலில் உயிர்ப்பெற்றது.
“எத்தனை நாள் இங்க இருப்ப சித்தத்து?”
“இன்னைக்கு ஆஃப் டே பெர்மிஷன் போட்டுருக்கேன். நாளைக்கு எனக்கு அஃப். நாளான்னிக்கு டியூட்டி போகனும்”
“அப்போ நாளைக்கே கிளம்பிடுவியா?” என்றாள் சோகமாக,
“ஆமா! நாளைக்கு நைட் கிளம்பிடுவேன். எனக்குத் தான் இனி உன்னை விட்டு எப்படி இருக்க போறேனு தெரியல”
“அதான் நானும் வரேனு சொல்றேன். நீ தான் வேணாம்னு சொல்ற”
“இப்போ இருக்குற நிலைமையில டிராவல் வேண்டாம் டா. அங்க நாம தனியா இருக்கனும், நானும் வேலைக்குப் போய்ட்டா நீ மட்டும் தனியா இருப்ப, எதுவும்னா என்ன பண்றது? இங்கனா எல்லாரும் இருப்பாங்க நீ சேஃப்பா இருப்பனு நம்பி என்னால நிம்மதியா இருக்க முடியும். கொஞ்ச நாள் தானே.. வாரா வாரம் நானே உன்னை வந்து பார்க்குறேன். சரியா?” எனக்கேட்க,
சிணுங்கிக்கொண்டே, “நான் தேடுவேன்” என்றாள்.
“எப்படி.. இப்போ ஒரு மாசமா தேடுனியே அப்படியா?” என்றான் குத்தலாக.
“சான்ஸ் கிடைச்சா ஆரம்பிச்சிடுவியே.. தேடமாத்தான் இருந்தாங்க பாரு..” என்றவள் எழுந்து அவளறைக்கு சென்று ஒரு தலையணையை எடுத்து வந்தாள்.
“எங்கடி போன?” என்றான்.
“இத எடுக்கத் தான்” என்றவள் ஒரு தலையணையைக் காட்டினாள்.
“பில்லோ எதுக்கு அதான் நான் இருக்கேனே” என்றான் அவளைத் தன்னருகே இழுத்துக்கொண்டு.
“இத பாரு” என எடுத்து வந்த பில்லோவைக் காட்ட,
“என்னடி இது ஜமிக்கியா இருக்கு.. இதுல படுத்தா குத்தாது?”
“அந்த ஜமிக்கிய ஆப்போஷிட் பொஸிஸனுக்கு தள்ளிப் பாரு” எனக்கூற, அவள் கூறியவாறு கைகளால் ஜமிக்கியை மேல் பக்கமாகக் கைகளால் தடவ தடவ அவன் முகம் அதில் வந்தது.
“ஹே! என் ஃபோட்டோ” என்றான் சிரித்துக்கொண்டே,
“ம்ம். நார்மலா பார்த்தா ரெட்கலர் ஜமிக்கி பில்லோ போல இருக்கும் இப்படி பண்ணா உன் ஃபேஸ் வரும். நான் மட்டும் இருக்கும்போது இப்படி உன் ஃபேஸ்ஸ பக்கத்துல வச்சி பார்த்துக்கிட்டே, சிலசமயம் கட்டி பிடிச்சுக்கிட்டே தூங்குவேன். காலையில மாத்தி வச்சிருவேன் யாருக்கும் தெரியாது”
“தேவையா இது? கூடவே இருக்க நான் ரெடியா இருக்கும்போது இப்படி கண்டவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து உன்னையும் கஷ்டப்படுத்தி, என்னையும் கஷ்டப்படுத்தி.. போடி” என வாய் சொன்னாலும் கைகள் அவளை இழுத்து அணைத்துக்கொண்டன.
“அவளோ அது தான் எல்லாம் சரியா போச்சுல. விடு. நான் ஒன்னு கேட்பேன் திட்டக் கூடாது”
“நான் எதுக்கு திட்டப் போறேன்.. சொல்லு”
“திட்ட மாட்டத் தான் ஆனா.. நான் சொல்றத செய்வேனு பிராமிஸ் பண்ணு சொல்றேன்”
“நீ சொல்றது சரினு பட்டுச்சுனா செய்வேன் இல்ல செய்யமாட்டேன். இதுக்கு மட்டும் பிராமிஸ் எல்லாம் பண்ண முடியாது. நீ எடக்கு மடக்கா எதையாவது கேட்ப. உன்னை நம்ப மாட்டேன்” என்றான். அவனை முறைத்தவளோ,
“ம்ச்ச். பிராமிஸ் பண்ணு சித்தத்து”
“சத்தியமெல்லாம் சத்தியமா பண்ணமாட்டேன். நீ இப்படி கேட்கும் போதே தெரியுது நீ எதோ எடக்கு மடக்கா தான் கேட்கப் போறனு.. நீ ஒன்னுமே கேட்காத தாயே.. இப்படியே சந்தோஷமா இந்த ஒரு பொழுத கழிச்சுட்டு நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன்”
“அப்போ பண்ண மாட்ட?”
“மாட்டேன்னா மாட்டேன் தான். என்னை ஆள விடு”
“சித்தத்து.. நான் உன் புள்ளைய வயித்துல வச்சிருக்கேன் இது கூட பண்ண மாட்டியா?”
“நீ விஷயத்த சொல்லு முடிஞ்சா கண்டிப்பா பண்றேன். சத்தியம் எல்லாம் பண்ண முடியாது”
“அது.. அது.. நாளைக்கு நம்ம மா.. மாமாவா போய் பார்த்துட்டு வருவோமா?” எனக் கேட்டு விட்டாள். அவனுக்குத் தான் முகம் இறுகியது.
இளங்கோ அன்று மருத்துவமனையில் மயங்கி விழுந்தவர் தான் அதற்குப் பிறகு எழும்பவே இல்லை. ஒரு வாரம் கோமாவில் இருந்தவர் கண்விழிக்கும்போது ஆனந்திக்கு விழுந்தது அடி. ஆம் இளங்கோவிற்கு எதுவுமே ஞாபகமில்லை, யாரையும் தெரியவில்லை. அவர் வாயிலிருந்து வந்த ஒரே வார்த்தை “சித்தார்த்து சித்தார்த்து” மட்டும் தான்.
ஆனந்தி, சிந்து என யாரையும் அவருக்கு அடையாளமே தெரியவில்லை. ஓரிரு நாட்கள் சென்றால் நினைவு திரும்பிவிடும் என மருத்துவர்கள் கூறினார்கள் ஆனால் இன்று வரை அவருக்கு நினைவு திரும்பவில்லை.
சிந்துவை மட்டும் தன்னருகில் அனுமதித்தார். அவள் உணவு கொடுத்தால் மட்டுமே கொஞ்சமேனும் சாப்பிடுவார் ஆனால் ஆனந்தியை பார்த்தாலே மூர்கமாக மாறிவிடுவார். அவருக்கான சுய தேவைகளுக்கு உதவி செய்ய மட்டுமே அந்த அறைக்குச் செல்வார் ஆனந்தி. ஆனால் குளிக்கவைத்து, உடையை மாற்றுவதற்குள் பல அடிகளை வாங்கிவிடுவார்.
மகனும் தன்னை விட்டுச் செல்ல, கணவரும் இந்த நிலைமைக்குச் செல்ல அடங்கிவிட்டார் ஆனந்தி. கடையை இப்போது சிந்து கணவர் தான் பார்த்துக் கொள்கிறார். வீடு, இளங்கோவின் சிகிச்சையென எல்லாம் அவர் தான் பார்த்துக் கொள்கிறார். கணவரிடம் உரிமையாய் பணம் பெறுவதற்கும், மருமகனிடம் பெறுவதற்கும் வித்தியாசம் இருக்கும் அல்லவா!
தன் கெட்ட புத்தியால் தான் அத்தனையையும் இழந்து இப்படி அடுத்தவர்கள் கையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். மகனையும், மருமகளையும் அனுசரித்து அவர்களுடன் நல்லுரவை பேணியிருந்தால் கணவருக்கும் இப்படி ஆகியிருக்காது, தனக்கும் இந்த நிலைமை வந்திருக்காது என உணர்ந்தவர் மனம் வருந்தி, திருந்தி இருந்தார். ஆனால் யாரிடமும் இறங்கி போய் மன்னிப்பு கேட்க மனம் வரவில்லை.
இளங்கோவின் உடல்நிலை பற்றி அரசல் புரசலாக அன்பு வீட்டினருக்கு தெரிய, அன்புவும், ஈகையும் இளங்கோவை பார்க்கலாமெனச் சென்றனர். வாசலில் அமர்ந்திருந்த ஆனந்தி அவர்களைப் பார்க்கவும் “வாங்க!” என வழிவிட்டு மட்டும் நிற்க, சிந்து தான் அவர்களைக் கவனித்துக் கொண்டாள்.
இளங்கோவுக்கு இவர்களையும் தெரியவில்லை. முரட்டு தனமாக எல்லாம் நடக்கவில்லை ஆனால் அறிமுகமற்ற பார்வை மட்டுமே. எதுவும் பேசவும் இல்லை. அவர் வாயைத் திறந்தால் “சித்தார்த்” என்னும் வார்த்தையைத் தவிற வேறு வார்த்தை இதுவரை வந்ததே இல்லை. அதனால் தான் மது இன்று சித்தார்த்தை அழைத்தாள். அவனைப் பார்த்தாலாவது அவருக்கு நினைவு திரும்பலாமென நினைத்தாள். ஆனால் அவனோ,
“தேவையில்லாத வேலை” எனப் பல்லைக்கடித்துக் கொண்டு அவளிடம் கோபத்தை காட்ட முடியாமல் அடக்கிக் கொண்டு கூற,
“நீ வர சித்தத்து. ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை மட்டும்” என்றாள். அவளுக்கு தான் கருவுற்று இருக்கும் போது யாரின் அதிர்ப்தியும் தன் குழந்தையை தாக்கிவிடக் கூடாது என நினைத்தாள்.
“சொன்னா கேட்கவே மாட்டியா?” எனக் கடிந்தான் சித்தார்த்.
“மாட்டேன். நீ என்னோட வரனும்” என்றாள் அவளும் பிடிவாதமாக.
“என் கால் அந்த வீட்டு வாசல் படியை மிதிக்காது”
“சரி மிதிக்க வேண்டாம், தாண்டி வா” எனச் சிரிக்காமல் கூற,
“கொன்றுவேண்டி”
“உன்னைப் பார்த்தா அவருக்குச் சரியாக வாய்ப்பிருக்குல அதான் கூப்பிடுறேன்”
“அவங்க செஞ்ச நல்லதுக்கு எல்லாம் சேர்த்து கடவுள் கொடுத்த சன்மானம் அது. அனுபவிக்கட்டும். நான் யாரையும் பார்க்கப் போறதில்ல” என ‘நல்லது’ என்பதில் கூடுதல் அழுத்தம் கொடுத்துக் கடுப்பாகக் கூறினான்.
“என் செல்லம்ல, என் பட்டுல”
“தள்ளிப்போடி நீ என்னா தில்லாலங்கடி வேலை பண்ணினாலும் நான் அங்க வரமாட்டேன்”
“ஏன் சித்தத்து இப்படி பண்ற?”
“நம்ம நல்லதுக்கு தான் சொல்றேன் அங்க போனா திரும்ப சாபம் விடுற போல எதாவது பேசுவாங்க. மாசமா இருக்க நீ.. அப்புறம் அவங்க பேசினதை நினைச்சு நீயா ஒன்னு பண்ணுவ.. இடையில நான் தான் கிடந்து உன்கிட்ட அல்லாடனும். என்னால முடியாது தாயே.. இப்படியே நிம்மதியா இருந்துட்டு போயிடலாம். யாரும் நமக்குத் தேவையில்ல”
“இல்ல இப்போ அத்தை அப்படியெல்லாம் பேசுறதில்ல. அம்மா அப்பா போனப்போ கூட அமைதியா தான் இருந்தாங்களாம் தெரியுமா?”
“ம்ம் அமைதியா இருந்தாங்க.. செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கலயே.. அப்போவே தெரியலயா? உள்ள இன்னும் வன்மம் இருக்குனு”
“எனக்கு அப்படி தெரியல.. பாவம் அவங்களுக்கு இறங்கி வந்து மன்னிப்பு கேட்கத் தயக்கமா இருக்கும்.. ஆனா அவங்க மாறிட்டாங்க”
“நீ வேணா நம்பு. என்னால யாரையும் நம்ப முடியாது. நம்பி நம்பி நான் பட்டதெல்லாம் போதும் டா சாமி. அவங்களுக்கு ஒரு கும்புடு.. உனக்கு ஒரு கும்புடு.. எனக்குத் தூக்கம் வருது நான் தூங்க போறேன்” எனக் கண்களை இறுக மூடிப் படுத்துவிட்டான்.
“பே.. உன்னை போய் கூப்பிட்டேன் பாரு” என இவளும் கடுப்பாகக் கூறி படுத்துவிட்டாள்.
மறுநாள் காலையில் முதல் வேலையாக மருத்துவமனை சென்று அனைத்து சோதனையும் செய்து, மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வந்தனர். வரும் வழியில் ஆனந்தி வீட்டு அருகில் வரும்போது,
“சித்தத்து! ஒரு நிமிஷம்.. சேலை மாட்டிக்கிச்சு” எனக் கத்த, அவனும் பதறி வண்டியை நிறுத்திவிட்டு பார்க்க, அவளோ வண்டியிலிருந்து கீழே இறங்கி,
“நான் போய் பார்க்கப் போறேன். வரதா இருந்தா வா.. இல்ல நீ வீட்டுக்குப் போ. நான் மட்டும் போய் பார்த்துட்டு வரேன்” எனக்கூறியவள் அவன் அழைக்க, அழைக்கக் காதில் வாங்காமல் வீட்டிற்குள் சென்றாள்.
கூடத்திலேயே தான் அமர்ந்திருந்தனர் ஆனந்தியும், சிந்துவும். இவளைக் காணவும் சிந்து,
“வா! வா! மது.. எப்படீக்கிற?”
“நல்லா இருக்கேன் அண்ணி” எனக்கூறிக் கொண்டே ஆனந்தி என்ன சொல்வாரோ எனப் பார்க்க, அவரோ “வா” என்று அழைக்கும் படியான ஒரு தலையசைப்பு, அதோடு அடுக்களையில் நுழைந்து கொண்டார்.
“அண்ணன் வந்திருக்கும் போல.. பார்த்தேன். இன்னும் எங்களாண்ட கோபமா இருக்கோ? பேசாமயே போய்டுச்சு. நீ மட்டும் ஒண்டியாவா வந்த? ஆரும் வரல?”
“இல்ல உங்கண்ணனும் நானும் தான் ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தோம். நான் இங்க வந்தேன் அவர் வரமாட்டேனுட்டு போய்ட்டார்”
“இன்னாத்திக்கு ஹாஸ்பிடல்? உடம்புக்கு முடியலயா இன்னா?”
“இல்ல.. அது.. அது.. நான்..” எனத் தயங்க,
“மாசமா இருக்கியா மது?” என ஆர்வமாகக் கேட்டாள் சிந்து. ஆமாம் எனத் தலையசைக்க, உண்மையிலுமே சந்தோஷப்பட்டாள் சிந்து. இது அனைத்தையும் அடுக்களையிலிருந்து கேட்ட ஆனந்திக்கும் சந்தோஷமே!
கையில் பால் டம்ளருடன் வந்தவர் மதுவிடம் கொடுத்து, “நல்ல விஷயம். சூதானமா இரு.. இந்தா குடி” எனக்கொடுத்தார். அவளும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.
“மாமா எப்படி இருக்கார்?” எனக்கேட்க,
சிந்து “இருக்கார்” எனக்கூறினார் வருத்தமாக.
“நான் அவர பார்க்கலாமா?”
ஆனந்தி “வூணாம் வூணாம்.. அந்த மனுஷன் எப்படி இருப்பானோ! நீ வேற புள்ளத்தாச்சி புள்ள.. எசக்கு பசக்கா எதுவும் ஆயிடாம”
மதுதாரா “ஒரு தடவை பார்த்துட்டு, இந்த விஷயம் சொன்னா எதுவும் மாற்றம் வருதானு பாப்போம். நான் சித்தத்துவ கூட கூப்பிட்டேன் ஆனா வர மாட்டேனுச்சு” எனக்கூற யோசித்த சிந்து,
“ம்ம். சரி வா மது. ஆனா என் பின்னாலயே வா.. அவர் முன்னுக்க போயிடாத” என அழைக்க,
ஆனந்தி “அடியேய் கூறுகெட்டவளே! வூணாம்டி”
“நான் இருக்கேன்லம்மா பார்த்துக்கிறேன்” என அழைத்துச் சென்றாள். அவரோ அதே அறியாத பார்வை மதுவை பார்த்தார் பின் விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்தார்.
மது “நல்லா இருக்கீங்களா மாமா?” எனக்கேட்க, அது அவருக்குப் புரிந்ததா எனக்கூடத் தெரியவில்லை.
“அப்பா! மதுப்பா.. சித்தார்த் அண்ணன் பொண்டாட்டி” எனக்கூற, “சித்தார்த் சித்தார்த்” எனக்கூறி வாயிலைப் பார்த்தார். யாரும் இல்லாமல் மீண்டும் விட்டத்தைப் பார்க்க,
“சித்தார்த் அண்ணனுக்குப் புள்ள வர போவுதாம்ப்பா அதான் உன்னாண்ட சொல்ல வந்துருக்கு மது” எனக்கூற மீண்டும் வாயிலைப் பார்த்தார் ஆனால் எதுவும் பேசவில்லை. திரும்பிப் படுத்துக்கொண்டார்.
“வா மது! அப்புறம் கோபப்பட போறாரு” என அழைத்துச் சென்றாள். பின் ஆனந்தியிடம் வந்தவர் “நான் கிளம்புறேன் அத்தை” எனக்கூற, “மன்னிச்சிடு.. எல்லாரும் மன்னிச்சிடுங்க” என அழுதவாறு கூறி, முன்னர் மது இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டார். அவளும் சிந்துவிடம் கூறிவிட்டு வெளியேறி வர, அடுத்த வீட்டு வாயிலிலேயே காத்திருந்தான் சித்தார்த்.
“இங்கன நிக்கிறதுக்கு உள்ள வந்திருக்கலாம்ல” எனக் கோபமாகக் கேட்க,
“கோபமா இருக்க வேண்டியது நான். இப்போ எதுக்கு அங்க போன?”
“இது அவங்க வீட்டு வாரிசு. யாரோ சொல்லி அது தெரியுறதுக்கு நானே சொன்னா அவங்க மனசு சந்தோஷப்படும் அதான் போனேன். மாமாவையும் பார்க்கனும்னு போனேன். அவர் உன்னைத் தான் சித்தத்து தேடுறார். ஒருதடவை அவர பாரேன். அவர் சரியாக வாய்ப்பிருக்கு”
“பேசி முடிச்சிட்டியா வண்டில ஏறு போலாம்” எனக்கூற, வண்டியில் ஏறியவள் திரும்பிப் பார்க்க, வாயில் முந்தானையை வைத்து அழுதுகொண்டே செல்லும் மகனைப் பார்த்துக்கொண்டிருந்தார் ஆனந்தி.
வீட்டிற்கு வந்து இவள் செய்ததை கூற, வைரம் பாட்டியோ,
“ஏண்டி வீதியில போற ஓணான தூக்கி வேட்டிலபோடுற? அங்க எதுக்கு போன? அவ திரும்ப கரிச்சு கொட்டவா?”
“அதெல்லாம் இல்ல அப்பத்தா. அத்தை என்கிட்ட மன்னிப்பு கேட்டுச்சு. எல்லார் கிட்டயும் கேட்டுச்சு தெரியுமா? சித்தத்துவ பார்த்து அழுதுச்சு. முன்ன மாதிரி இல்ல மாறிடுச்சு”
“சரிதான். கிழக்க உதிக்கிற சூரியன் மேற்கால உதிக்குதுனு சொல்லு நம்புறேன் ஆனா நான் பெத்த மவராசிய நம்ம மாட்டேன்” எனக்கூற,
சித்தார்த் “அப்படி சொல்லு அம்மாச்சி.. அவங்க நடிப்ப நம்பிட்டு வந்துருக்கா”
ஆனந்தியை இன்னும் வீட்டில் யாரும் நம்பவில்லை. இப்படியே நாட்கள் செல்ல, மதுவை வீட்டில் உள்ள அனைவரும் பத்திரமாகப் பார்த்துக்கொண்டனர். ஆனந்தியும் கூட மது கோவில், மருத்துவமனை என வெளியில் வரும் நேரம் பார்த்தாலும் அவர்களின் நலனைக் கேட்டறிந்து கொள்வார். அவருக்கும் நல்ல மனமாற்றம் வந்திருக்கிறது தான் ஆனாலும் அனைவரிடமும் தானாக சென்று பேசவோ மன்னிப்பு கேட்கவோ தயக்கம். மகன் நினைப்பு அதிகமாக வாட்ட, மகன் என்றாவது தன்னை மன்னித்து தன்னை தேடி வரமாட்டானா என கோவில் கோவிலாக அலைகிறார். மகன் தாயை மன்னிப்பானா?
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
17
+1
+1
⬅ Prev Episode
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 38
Next Episode ➡
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 40
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கர்மா இஸ் பூமராங். பண்ணதுக்கெல்லாம் அனுபவிக்கணுமே
மிக்க நன்றி😍
ஒவ்வொரு முறையும் அவளை பிரிந்து சென்று அதற்கு பலனாய் கிடைத்த வலிகளை அனுபவித்தவனுக்கு தானே தெரியும் அது எவ்வளவு கொடுமை என்று.
அம்மா அப்பா குடும்பம் என்று பார்த்து அவன் அன்பானவளை மீண்டும் இழந்து விடுவோமோ என்ற பயம் அவனுக்கு.
மது மனம் புரிந்தும் ஒரு முறை சென்று பார்க்க எண்ணி அவர்கள் வாழ்வில் மீண்டும் குழப்பங்கள் நிகழ அதுவே காரணமாய் அமைய வேண்டாம் என்று எண்ணுகின்றான் சித்தார்த்.
செய்த தவறிற்கு தகுந்த தண்டனை தான் அவர்களுக்கு.