Loading

அத்தியாயம் 115

     அறிவு அழைத்திருக்க அவளிடம் அன்பாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, தன்னால் இன்னும் நம்ப முடியாமல் இருக்கும் கேள்வியை முன்வைத்தான் அரசு.

     “என்னங்க நீங்க இந்தக் கேள்வியை என்கிட்ட இதோட பத்தாவது தடவை கேட்கிறீங்க. உங்களுக்கு என் அப்பா அம்மா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சதில் ஏன் இவ்வளவு சந்தேகம் னு எனக்கு சத்தியமாப் புரியல.” சங்கடமாய் கேட்டாள் அறிவு.

     “எனக்கு என்னவோ உங்க அப்பா, அம்மா முழு மனசோட இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கலையோன்னு தோணுது அறிவு. அதனால் தான் நான் திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருக்கேன்.” சொன்ன அரசுவிற்கு மனதிற்கு என்னவோ ஒப்பவே இல்லை.

     “ஏங்க, நீங்க சரியான மொக்கைங்க.” சொல்லிவிட்டு தாளமாட்டாமல் சிரித்தாள் அறிவு.

     “என்னடி சொன்ன மொக்கையா. மகளே கல்யாணம் முடியட்டும், அதுக்கப்புறம் தெரியும் நான் யாருன்னு.” சொன்ன அரசு தன்னையும் அறியாமல் மீசையை நீவிவிட்டுக்கொண்டான்.

     “பின்ன, உங்களை நான் என்ன சொல்றது. நீங்க என்னைக் கவனிக்க ஆரம்பிச்சு, சரியா நாலு நாளில் நானும் உங்களைக் கவனிக்க ஆரம்பிச்சேன்.

     நீங்களும் பார்த்தீங்க, பார்த்தீங்க இத்தனை மாசமா பார்த்துக்கிட்டு மட்டும் தான் இருந்தீங்க. சரி லவ்வை சொல்ல தான் பயமா இருக்குன்னா, ஒரு ஹாய் ஹலோ கூடவா சொல்ல கூடாது.” சிரிப்பாய் வந்தது அறிவுக்கு.

     மற்றதை மறந்து சிரித்தவனாய், “அடிப்பாவி அப்ப நீயும் இரண்டு வருஷமா என்னை சைட் அடிச்சிக்கிட்டு தான் இருந்தியா?” பெருமையாய் கேட்டான்.

     “ஆமா ஆமா சைட் அடிச்சாங்க இவரை.” சொல்லியவளுக்குள் சின்னதாய் வெட்கம்.

     “ச்சே எனக்கு இவ்வளவு மவுசு இருந்திருக்கே. இது தெரியாம தான் என்னோட வாழ்க்கையை ஆஞ்சிநேயர் மாதிரி வாழ்ந்திட்டு இருந்தேனா நானு.” காலரை உயர்த்தினான் அரசு.

     “அடேங்கப்பா நீங்க ஆஞ்சநேயரா, அப்பா உண்மையான ஆஞ்சநேயர் யாராம்.” அறிவு கேட்க, “அது சும்மா விளையாட்டுக்கு சொன்னது. ஆமா எனக்கு ஒரு சந்தேகம். இரண்டு வருஷமா நீ என்னை லவ் பண்ணியும், ஏன் என் கிட்ட அதைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல.” என்றான் விசாரிப்பாய்.

     “அதுவா” என்று லேசாக சிணுங்கியவள், “இல்ல நீங்க என்ன தான் என்னை இமைக்காம பார்த்துக்கிட்டே இருந்தாலும், நீங்களா முன்வந்து ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசினதே இல்லையா. அதனால சின்னதா ஒரு தயக்கம்.”

     “அது ஒன்னும் இல்ல அறிவும்மா, நான் ஒரு கொள்கைவாதி. எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு பொண்ணு பின்னாடி சுத்தி, என்னை லவ் பண்ணு லவ் பண்ணுன்னு கெஞ்சியோ, டார்ச்சர் பண்ணியோ அவளை லவ் பண்ண வைச்சு, பீச் பார்க், ஐஸ்கிரீம் பார்லர், மூவி தியேட்டர் எல்லா இடத்துக்கும் போய் பார்க்கிறவங்க எல்லார்கிட்டயும் இவ என் ஆளு, நான் அவ ஆளுன்னு சொல்லி பெருமை பேசுறதோ,

     உங்க அப்பா அம்மாவை விட நான் உன்னை நல்லா பார்த்துப்பேன், என்னோட அப்பா அம்மாவை விட நீ தான் எனக்கு முக்கியம் அப்படி இப்படின்னு பொய் பேசுறதோ, அந்தப் பொண்ணு மனசுல அவளோட அப்பா அம்மாவைத் தாண்டி அதிகமா இடம் பிடிக்கிறதுக்காக பொய்யா சில செயல்கள் செய்வதோ சுத்தமா பிடிக்காது.”

     “என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகுற வரை அவளோட அப்பா, அம்மா தான் உயர்ந்தவர்களா இருக்கணும். யாருக்காகவும் அந்தப் பொண்ணு அவங்களோட நிலையை தரம் தாழ்த்தக் கூடாது. இந்த எண்ணத்தில் இருந்து மாறுற பொண்ணுங்களையும், அதுக்கு காரணமாக இருக்கிற ஆண்களையும் எனக்கு சுத்தமா பிடிக்காது.

     பிறந்ததில் இருந்து பார்த்து பார்த்து ஒவ்வொன்னையும் செஞ்சு கொடுத்து, பொத்தி பொத்தி வளர்க்கிற அப்பா, அம்மாவை விட எந்த சொந்தமும் பெருசில்லைன்னு ஆணித்தரமா நம்புறவன் நான்.” உறுதியாகவே சொன்னான்.

     “ஓஹோ, அப்ப நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் கூட எனக்கு என்னோட அப்பா, அம்மா தான் முதலில் னு நான் சொன்னா அதை நீங்க ஏத்துப்பீங்களா? இல்ல அப்படித்தான் நான் சொல்லணும் னு எதிர்பார்க்கிறீங்களா?” என்றாள்.

     “கண்டிப்பா என்னால ஏத்துக்க முடியும். சொல்லப் போனா  நீ அப்படி இருந்தா எனக்கு உன்னை இன்னும் இன்னும் அதிகமாகவே பிடிக்கும்.

     நம்ம வாழ்க்கையில் புதுசா எத்தனை பேர் வந்தாலும், பழைய உண்மையான உறவுக்கு நாம கொடுக்கிற முக்கியத்துவம் என்னைக்கும் குறைஞ்சிடக் கூடாது. இது தான் என்னோட கொள்கை.” உணர்ந்து சொன்னான் அரசு.

     “நீங்க வித்தியாசமான ஆள் னு எனக்குத் தெரியும். ஆனா எந்தளவுன்னு இப்ப தான் புரியுது. உங்ககிட்ட இப்படி ரொம்ப நேரம் மனசுவிட்டுப் பேசனும் னு ரொம்ப நாள் ஆசை. அதுக்கு இப்ப தான் நேரம் கூடி வந்திருக்கு.” அனுபவித்து சொன்னாள் அறிவு.

     “நான் யாரு அரசும்மா, இந்த ராதா இல்லமே என்னை நம்பித்தான் இருக்கு. நீ நினைச்ச நேரத்தில் எல்லாம் என்கிட்ட பேச முடியாது.

     ஏதோ உன் நல்ல நேரம் என் தலைக்கு மேலே இருந்த ஒரு பெரிய பாரத்தை நான் இறக்கி வைச்சிட்டேன். அதனால இப்ப கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேன். இல்லைன்னா பேசிக்கலி ஐம் எ பிஸி மேன் யூ நோ.” சொல்லி சிரித்தான் அரசு.

     “அப்படியா சரி சொல்லுங்க சார். அப்படி என்ன சிறப்பான தரமான வேலைகள் செய்தீங்கன்னு நானும் தெரிஞ்சுக்கிறேன்.” என்றாள் சிரிப்புடன்.

     “யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிற. சேரவே சேராதுன்னு உலகமே சொன்ன நாலு எருமை மாடுகளை சேர்த்து வைச்சிருக்கேன் நான். இதை நடத்திக் காட்டினதுக்காக என்னோட பேரை கின்னஸ் புத்தகத்தில் எழுதலாமா அப்படின்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்க.

     என்னால தான் ஒரு பெரிய மனுஷன் பத்து வயசு குறைஞ்சு போய், எகிறி குதித்தேன் வானம் இடித்தது, பாதங்கள் இரண்டும் பறவையானதுன்னு பாடிக்கிட்டு சுத்துறார்.”

     “என்னால மட்டும் தான் பேய், பூதம், பிசாசு, காட்டேரி மாதிரி இருக்கிற நாலு பேருக்கு வாக்கப்பட்ட நாலு பொண்ணுங்க சந்தோஷமாக வாழ்றாங்க அது தெரியுமா உனக்கு.” அவன் பாடுவது சுயபெருமை என்றாலும் சிரித்துக்கொண்டே இரசிப்புடன் கேட்டாள் எதிரே இருந்தவள்.

     “இது மட்டும் இல்ல, இன்னும் நீங்க என்ன எல்லாம் பண்ணி இருக்கீங்கன்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும்.” என்றாள் அறிவு.

     “இன்னும் என்ன பண்ணி இருக்கோம். நம்ம விஷயம் இவ்வளவு தானே. இதை மீறி நாம ஒன்னும் பண்ணலையே. இந்த சில விஷயத்தை தான் மாத்தி மாத்தி எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு என்னோட பெருமையை நானே பாடிக்கிட்டு இருக்கேன். இது இல்லாம இவளுக்கு அப்படி என்ன தெரிஞ்சிருக்கும்.” என தன்னோடு நினைத்தவன், “எங்க நான் விட்ட இடத்தில் இருந்து நீ உன் அத்தானோட புகழ் பாடு பார்ப்போம்.” எனத் தன் வருங்கால மனைவியிடமே சரணடைந்தான்.

     “இமயமலை உயரமா இருக்கிறதுக்கு நீங்க தான் காரணமாம். பனிப்பாறைகள் கட்டியா இருக்கிறதுக்கும் நீங்க தான் காரணம் னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

     மழை பெய்யுறதுக்கு காரணம் நீங்க தானாம், காத்து அடிக்கிறதுக்கு கூட காரணம் நீங்க தான்னா பார்த்துக்கோங்களேன். பூ வாசம் அடிக்கிறதும் உங்களால் தானாம். ஒட்டுமொத்தத்தில் இந்த உலகம் இயங்குவதற்கு காரணமே நீங்க தான் அரசு.” சொல்லிவிட்டு சிரித்தாள் அறிவு.

     “ஹேய் என்ன கிண்டல் பண்றியா?” சிரிப்புடன் கேட்க, “இல்ல நக்கல் அடிக்கிறேன்.” என்றாள் அவள்.

     “இங்க பார், நீ பண்றது எதுவுமே சரியில்ல. என்னைப் பத்தி உனக்கு சரியாத் தெரியல. இந்த அரசு ரொம்ப மோசமானவன். இந்த ஒரு தடவை போனா போகுதுன்னு மன்னிச்சு விடுறேன். இன்னொரு முறை இப்படி பேசின கல்யாணத்துக்கு அப்புறம் நீ ரொம்ப வருத்தப்படுவே ஆமா.” முடிந்தவரை கரடுமுரடான குரலில் சொல்லத்தான் அவன் நினைத்தான் என்றாலும் அது என்னவோ சின்னக்குழந்தையின் சிணுங்கல் போலத்தான் கேட்டது அவளுக்கு.

     “என்னங்க இப்படி எல்லாம் பேசுறீங்க. எனக்கு பயத்தில் கை காலெல்லாம் நடுங்குது. ஐயோ முகத்தில் வியர்வை அருவி மாதிரி வடியுதே, நான் என்ன பண்ணுவேன். இவ்வளவு கோபக்காரனையா எனக்கு கட்டி வைக்கப் போறாங்க. இல்லல்ல என்னால் உங்க கோபத்தைத் தாங்க முடியும் னு தோணல. பேசாம இந்தக் கல்யாணத்தை நிறுத்தப் போறேன்.” சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டே சொன்னாள்.

     “அடியே அடியேய் என்னடி பண்ற. ஒரு பேச்சுக்கு சும்மா சொன்னா கல்யாணத்தை நிறுத்திடுவியா நீ.” கேட்ட அரசுவிற்கு மூச்சுவாங்க ஆரம்பித்தது அறிவின் விளையாட்டில்.

     “ஆமா நீங்க என்னை மிரட்டுனீங்க, திரும்ப நான் மிரட்டினேன் அவ்ளோ தான்.” இலகுவாகச் சொன்னாள்.

     “அதுதான் சங்கதியா, அப்ப நான் கொஞ்சினா நீ திரும்ப என்னைக் கொஞ்சுவியா?” என்க, “ஐயோ நீங்க அப்படியே கொஞ்சிட கிஞ்சிடப் போறீங்க. முயல் பிடிக்கிற நாயை முகத்தைப் பார்த்தால் தெரியும் னு சொல்லுவாங்க. அதே மாதிரி ரொமான்ஸ் பண்ற ஆளை முகத்தைப் பார்த்தா தெரியாதா என்ன?” என்றாள்.

     “அறிவு நீ இந்த அரசுவை ரொம்ப டேமேஜ் பண்ற. நீ மட்டும் பக்கத்துல இருந்தன்னு வை” பேச்சை முடிக்காமல் நிறுத்தினான்.

     “என்ன பண்ணுவீங்க கட்டிப்பிடிப்பீங்களா இல்ல முத்தம் கொடுப்பீங்களா? அப்படிக் கொடுத்தா எங்க கொடுப்பீங்க. நெத்தியிலா, கன்னத்திலா, உதட்டிலா?” பட்டென்று கேட்டு வைத்தாள் அறிவு. தன்னவன் என்று முடிவாகிவிட்ட பின்னால் எதற்காக தயக்கம் என்று நினைத்தாளோ என்னவோ.

     “அடிப்பாவி நீ என்னடி இப்படி எல்லாம் பேசுற.” பேசிய அவளுக்கு வெட்கம் வந்ததோ இல்லையோ கேட்டுக்கொண்டிருந்த அரசுவுக்கு நன்றாகவே வந்தது.

     “ஏன் என் பேச்சு பிடிக்கலையா துரைக்கு.” என்க, “ச்சே ச்சே உன்னை மாதிரி கொழு கொழுன்னு இருக்கிற பொண்ணை யாருக்குத் தான் புடிக்காம போகும்.” ரசகுல்லா மாதிரி என்ன  அழகு என மனதோடு நினைத்து ரசித்து சொன்னான் அரசு.

     “ஓகோ அப்ப கொழு கொழுன்னு யாரு இருந்தாலும் உங்களுக்குப் பிடிக்குமோ.” பெண் புத்தியைக் காட்டினாள் அறிவு.

     “நீ கொழு கொளுன்னு இருக்கிறதால தான் அப்படிச் சொன்னேன் டி என் சக்கரைக்கட்டி.”

     “ஓ அப்ப நான் டயட் இருந்து உடம்பைக் குறைச்சிட்டா சாருக்கு என்னைப் பிடிக்காம போயிடும் அப்படித்தானே.” அறிவு அவனை உண்டு இல்லை என்று ஆக்கிக் கொண்டிருக்க, “கடவுளே” என்று கத்தியே விட்டான் அரசு.

     “நான் சொல்லல நீங்க வேஸ்ட்டு னு. என்கிட்ட பேசியே ஜெயிக்க முடியலையே, மத்த விஷயங்களில் எப்படி ஜெயிப்பீங்க.” என்றாள் சீண்டலாய்.

     “மத்த விஷயங்கள் னா?” தெரிந்து கொண்டே கேட்டான்.

     “மத்த விஷயம் னா மத்த விஷயம் தான். தெளிவா எல்லாம் சொல்ல முடியாது டா.”

     “என்னடி மரியாதை இல்லாம பேசுற?”

     “நீயும் நானும் தான் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் எதுக்கு தேவையில்லாத மரியாதை எல்லாம்.” பட்டென்று ஒருமைக்குத் தாவினாள் அறிவு.

     “அடிப்பாவி நீ இப்படி இருப்பன்னு நான் சுத்தமா எதிர்பார்க்கல.” அரசுவுக்கு நிஜமாகவே ஆச்சர்யம் தான் அறிவின் தோரணையில்.

     “ஓகோ இப்ப தெரிஞ்சிடுச்சு இல்ல. என்ன பண்ணப் போற கல்யாணத்தை நிப்பாட்டப் போறியா?”

     “அட இவ வேற ஒருத்தி எப்பப் பாத்தாலும் அபசகுனமா பேசிக்கிட்டு” என்க,

     “அப்படித் தான்டா பேசுவேன்.”

     “டா… மீ…”

     “ஆமா டா”

     “அகென் டா. திஸ் இஸ் நாட் ரைட் அறிவு.” சிரிப்புடன் அவன் சொல்ல எதிர் இருப்பவளுக்கு மறுக்கவா தோன்றும்.

     “என் வருங்காலப் புருஷனை அப்படித்தான் டா கூப்பிடுவேன் டா. அதில் உனக்கு என்னடா பிரச்சனை டா.”

     “எத்தனை டா, யூ ஆர் கிராசிங் தி லிமிட் அறிவு.”

     “ஆமா இவரு வெள்ளக்காரத் துரை வாயைத் திறந்தா இங்கிலீஸ் அருவி மாதிரி கொட்டுது. மரியாதையா தமிழ் ல பேசு.” என்றாள்.

     “உனக்கு இங்கிலீஸ் தெரியாதுங்கிறதுக்காக என்னைத் தமிழ் ல பேச சொல்றியா கேடி.”

     “ஆமா எனக்கு இங்கிலீஸ் ல கோர்வையா பேசத் தெரியாது தான். என்ன பண்ணப் போற. நுனி நாக்குல இங்கிலீஸ் பேசுற பொண்ணுங்க ஊருக்குள்ள நிறைய இருக்கு. போ அதுங்க பின்னாடி போய் ஹேண்ட்பேக் தூக்கிட்டு சுத்து.” காட்டமாய் சொன்னாள் அறிவு.

     இவ்வளவு நேரமாக அவனை வாங்கு வாங்கென்று வாங்கும் போது பெரிதாகத் தெரியாத ஒன்று தன்னை அவன் ஒரு வார்த்தை சொன்னதும் சுர்ரென்று மண்டைக்கு ஏறியது.

     “ஆண்டவா மத்தவங்க எல்லாரையும் பேசிப் பேசி நான் சாகடிப்பேன். அவங்க விட்ட சாபமோ என்னவோ என்னை சாவடிக்க பொண்டாட்டியா இவளை எனக்கு கொடுக்கிறியா?” நிலாவினால் ஒளிர்ந்த வானைப் பார்த்து சொன்னான் அரசு.

     “என்னங்க ரொம்ப மலைச்சுப் போயிட்டீங்களா? நான் எப்பவும் இவ்வளவு எல்லாம் பேச மாட்டேன். இது உங்களோட ப்ரதர்ஸ் கொடுத்த ஐடியா. நான் மாட்டவே மாட்டேன்னு சொன்னேன். அவங்க ரொம்ப கெஞ்சினாங்க. அதனால் தான் ஒத்துக்கிட்டேன்.

     கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் நாகா கொடுத்தது. உங்களை நல்லா டார்சர் பண்ணச் சொன்னாங்க. என்னால முடிஞ்ச அளவுக்குப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.” சிரித்தபடியே சரணடைந்தாள் அறிவு.

     “அடிப்பாவி” என அதிர்ந்தவன் கூடவே, “அந்தக் கருநாகம் இந்த வேலையெல்லாம் பார்த்து இருக்கா. இருக்கட்டும் இருக்கட்டும் எல்லாத்துக்கும் சேத்து வைச்சு செஞ்சு விடுறேன்.” என்றான்.

     “அரசு, என்னடா பண்ற. டேய் எருமை மாடு எவ்வளவு நேரமா கூப்பிடுறேன். எங்கடா இருக்க சீக்கிரமா வந்து தொலைடா.” கீழே இருந்து வடிவேலு அலரும் சத்தம் கேட்க, என்னவோ ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தான் அரசு.

     அவன் வந்ததும் வராததுமாக அவனுடைய வாயில் ஒரு முழு லட்டைத் திணித்தார் வடிவேலு.

     “ஓல்டு மேன் என்னாச்சு உங்களுக்கு. எனக்கு தானே கல்யாணம் நிச்சயம் ஆச்சு. என்னவோ உங்களுக்கு இந்த வயசுல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ற மாதிரி இந்த குதி குதிக்கிறீங்க.” லட்டை மென்று கொண்டே கேட்டான் அரசு.

     “விஷயம் அவ்வளவு பெருசு டா. நீ மட்டும் இதை கேள்விப்பட்ட வானத்துக்கும் பூமிக்குமா சந்தோஷத்தில் குதிப்ப ஆமா.” பூரிப்பாய் சொன்னார் வடிவேலு.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஐ அரசும் சம்சார​ சாகரத்தில​ குதிச்சாச்சு. லேகாவை ஏன் வீட்டுக்க​ லீலா விட்டுச்சோ.