
அத்தியாயம் 113
அடுத்த நாள் காலை எட்டு மணி அளவில் கண்விழித்த லேகா, “என்ன இது காலங்காத்தால இவ்வளவு சத்தமா இருக்கு. ஒரு மனுஷி நிம்மதியா தூங்குறதா வேண்டாமா.” என்று புலம்பிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள்.
இராதா இல்லத்தின் உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்பரையில் ஒன்றாக அமர்ந்து எதை எதையோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். அந்த சத்தம் தான் அவளுடைய அறைக்குள் கேட்டு அவள் தூக்கத்தை கலைத்திருந்தது.
லீலா காண்பித்த மேல் அறையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு கீழ் அறையை தேர்ந்தெடுத்தது தவறோ என்று தோன்றியது இப்பொழுது.
“செல்வா என்ன விஷேஷம். காலங்காத்தால இவ்வளவு சத்தமா சந்தோஷமாக எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து பேசி சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க.” என்றவாறு வந்தவள் செல்வாவின் அருகே அமரப்போக, அதை உணர்ந்த தெய்வா வேகமாக எழுந்து அண்ணனின் அருகில் அமர்ந்துகொண்டு, அவளுக்கு ஒற்றை சோபாவைக் காட்டி, “நீங்க இதில் சௌகரியமா உட்காருங்க.” என்றான்.
தெய்வாவின் செயலைப் பார்த்து நாகாவிற்கும், ஊர்மிக்கும் சிரிப்பு சிரிப்பாக வந்தது. “இவன் லீலா அண்ணியையே செல்வா கிட்ட போகவிட மாட்டான். இதில் இவளை விட்டுட்டாலும்.” என்று சிரித்தான் நாகா.
“பொறாமைப் பட வேண்டியவளே, அமைதியாக இருக்கும் போது இவனுக்கு அப்படி என்ன வந்துச்சாம்.” உள்ளுக்குள் நினைத்தவாறு கடுகடுப்புடன் தனியாய் அமர்ந்தாள் லேகா.
அவள் வருகையைப் பெரிதாக நினைக்காமல், விட்ட இடத்தில் இருந்து பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தனர் அனைவரும். “அரசு அண்ணா இது உங்களுக்கே நியாயமா இருக்கா. நம்ம ஊரில் கல்யாண வயசில் இருக்கிற அத்தனை பொண்ணுங்க போட்டோவையும் காட்டியாச்சு. புடிக்கல புடிக்கலன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க. போற போக்கைப் பார்த்தா உங்களுக்கு தேவலோகத்திலிருந்து தான் பொண்ணு கொண்டு வரனும் போல.” சலிப்பாய் சொன்னாள் லீலா.
“அவ்வளவு தூரம் ஏன் போறீங்க. மேட்ரிமோனி இருக்கு இல்ல. அதில் தேடிப் பாருங்க. நிறைய பொண்ணுங்க ப்ரைபைல் இருக்கும். மேபி அதில் இருக்கிற யாரையாவது இவருக்குப் பிடிக்கலாம்.” யோசனை சொன்னாள் லேகா.
“நல்ல ஐடியாவா இருக்கே. நமக்கு இந்த விஷயம் தோணல பார்த்தியா ருக்கு.” உடன் ஒப்புக்கொண்டாள் லீலா. நல்ல விஷயத்தை யார் சொன்னால் என்ன என்று அவள் என்னவோ இயல்பாகக் கேட்டுக்கொண்டாள். ஆனால் மற்றவர்களுக்கு லேகாவின் தலையீடு பிடிக்கவில்லை. என்ன தான் நான் தேவதை என்று சொல்லிக்கொண்டு சாத்தான் வேதம் ஓதினாலும், அதைக் கண்டுகொள்ள முடியாதா என்ன என்பது மற்றவர்கள் வாதம்.
“அரசு அண்ணா இங்க வாங்க, வாங்கன்னு சொல்றேன் இல்ல.” என்று அவன் கையை பிடித்து இழுத்து வந்து தன் அருகில் அமர்த்திக் கொண்ட லீலா, மேட்ரிமோனி வெப்சைட் ஒன்றில் அரசுவின் பெயரை பதிவு செய்து, அவனுக்கு பொருத்தமான பெண்களைத் தேட ஆரம்பித்தாள்.
“இந்தப் பொண்ணு நல்லா இல்லை. கண்ணு ரொம்ப பெருசா இருக்கு. இந்த பொண்ணுக்கு மூக்கு பெருசா இருக்கு. இந்த பொண்ணு முகம் ஊசியா இருக்கு. பொண்ணு ரொம்ப ஒல்லியா இருக்கு. முடி நீளமா இல்லை. இந்தப் பொண்ணுக்கு புடவை கட்டத் தெரியாது போல ஒரு போட்டோ கூட புடவையில் இல்ல.
இந்தப் பொண்ணு வேற மாநிலம் நமக்கு வேண்டாம் பா. இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கு அதனால எனக்கு வேண்டாம்.” என்று காட்டும் ஒவ்வொரு பெண்ணையும் ஏதாவது ஒரு சப்பைக் காரணம் காட்டி நிராகரித்து கொண்டே இருந்தான் அரசு.
“லீலா எதுக்காக எல்லாருமா சேர்ந்து எனர்ஜியைவேஸ்ட் பண்றீங்க. இவ்வளவு நேரமா எனக்கு சின்ன சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. இப்ப அது க்ளியர் ஆகிடுச்சு.” சிரிப்போடு சொன்னான் செல்வா.
“என்ன சந்தேகம்.” லீலா புரியாமல் கேட்க, “உன் அருமை அண்ணன் அவனுக்குப் பொண்ணு பார்க்கிற வேலையே மிச்சப்படுத்திட்டான்.” உறுதியாகச் சொன்னான் செல்வா.
“வாட் டூ யூ மீன், அப்ப நம்ம அரசு ஏதோ ஒரு பொண்ணை சைட் அடிக்கிறான்னு சொல்றியா?” நாகாவால் நம்ப முடியவில்லை.
“டேய் சைட்டுன்னு ஏன்டா தப்பா சொல்ற லவ்வுன்னு சொல்லு.” சிரிப்போடு திருத்தினான் தெய்வா.
“அடப்பாவி அரசு, இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கிற ரேன்ஞ்சுக்கு இருந்திட்டு, இப்ப பார்த்த ஏகப்பட்ட பீர் உள்ள போய் இருந்திருக்கே.” என்றான் தர்மா.
“டேய் சும்மா இருங்கடா. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.” இதைச் சொல்லும் போதே அரசுவிற்கு வெட்கம் வந்து தலை தானாகக் குனிந்தது.
“அண்ணா இது சீட்டிங். இத்தனை நாளா நீங்க எங்க எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருந்திருக்கீங்க. அட்லீஸ்ட் உங்க கல்யாண பேச்சு ஆரம்பிக்கும் போதாவது இதைப் பத்தி சொல்லி இருந்திருக்கணும். போங்கண்ணா இனி எங்க கூட பேசாதீங்க.” கடைக்குட்டிக்கு தேவகிக்கு செல்லக் கோபம் வந்தது. எத்தனை வயதானாலும் பிடித்தவர்கள் அருகில் இருக்கையில் சிறுபிள்ளைத்தனம் வந்து ஒட்டிக்கொள்ளும். தேவகிக்கு அடிக்கடி வந்துவிடும்.
“அரசு ஒரு விஷயத்தை சொல்லாம விட்டான்னா அதுக்கு பின்னாடி ஆயிரம் காரணம் இருக்கும். குறைஞ்சது ஒரு காரணமாவது இருக்கும்.” என்றபடி மருமகளிடம் அரசுவிற்குப் பரிந்து கொண்டு வந்தார் வடிவேலு.
“இதுக்குத் தான் ஒல்டுமேன் நீங்க வேணும் னு சொல்றது. இந்த வீட்டில் இருக்கிற யாரும் என்னைப் பத்தி புரிஞ்சுக்காம போனாலும், நீங்க ரொம்ப சரியா புரிஞ்சிக்கிட்டீங்க. நீங்க இந்த நாலு பேரையும் பெத்ததுக்கு பதிலா என் ஒருத்தனைபெத்து இருக்கலாம்.” என்றான்.
“அடப்பாவி அரசு கடைசியில் எங்க அப்பாவை எங்களுக்கு எதிராவே திருப்ப பார்க்குறியா.” விளையாட்டு போலவே கேட்டான் செல்வா.
“செல்வா அவனைப் பத்தி தெரிஞ்சும் அவன் வலையில் விழப் பார்க்கிற பார்த்தியா? அவன் வழக்கம் போல தகிடுதத்தம் பண்ணி பேச்சை மாத்தி ஓடிடலாம் னு நினைக்கிறான். இன்னைக்கு அவனை விடக் கூடாது.” என்ற தெய்வா, அரசுவிடம் திரும்பி, “மரியாதையா அந்தப் பொண்ணு யாரு, என்னன்னு உண்மையைச் சொல்லு. இந்த தடவை உன்னோட நடிப்புக்கு இங்க இருக்கிற யாருமே ஏமாறப்போறது இல்லை.” கராராகக் கேட்டான்.
“இப்படி எல்லார் முன்னாடியும் கேட்டா, நான் எப்படி சொல்லுவேன். எனக்கு ஒரே ஷையா இருக்கு.” வெட்கம் என்கிற பெயரில் சிணுங்கினான் அரசு.
“அந்த மண்ணாங்கட்டி எல்லாம் இப்ப எதுக்கு தேவையில்லாம வெளியே வருது. அது எல்லாத்தையும் மூட்டை கட்டி ஒரு ஓரமா வைச்சிட்டு, உண்மையை சொல்லு.” என்றான் தர்மா.
“போங்கடா நீங்க இப்படி எல்லாம் மிரட்டுனீங்க நான் அந்த பொண்ணைப் பத்தி எதுவுமே சொல்ல மாட்டேன்.” என்று ஓடப் பார்த்தான் அவன்.
“இது சரிவராது. ருக்கு, நம்ம ரூமில் இருக்கிற அந்த இலத்தியை எடுத்துட்டு வா. இவனுக்கு இன்னைக்கு போலீஸ் அடி என்னன்னு காட்டினா தான் வாயிலிருந்து உண்மை வெளியே வரும் போல.” கைகளில் இருந்த காப்பை முறுக்கினான் தெய்வா.
“இதோ உடனே கொண்டு வரேங்க.” என்றபடி துள்ளிக் குதித்து சந்தோஷமாக ஓடும் ருக்மணியை பார்த்த அரசு,
“அடிப்பாவி தங்கச்சி, எத்தனை நாள் வன்மம் இது. இப்படி அநியாயமா உன் கடன்காரப் புருஷன்கிட்ட அண்ணனை மாட்டி விட்டுட்டியே.” புலம்பினான் அரசு.
“நான் கேட்கிறேன் என்கிட்ட அந்த பொண்ணைப் பத்தி சொல்லுவீங்களா மாட்டீங்களா?” லீலா தீவிரமான முகத்துடன் கேட்க, மொத்தமாக சிக்கினான் அரசு.
“அவ பெயர் அறிவரசி.” அரசு லீலாவிடம் சரணடைந்தான்.
“அப்பா, நீங்க இவனை அறிவில்லாதவன், அறிவு இல்லாதவன்னு சொல்லி திட்டுவீங்க தான. கடவுளைப் பார்த்தீங்களா அறிவையே அவனுக்குப் பொண்டாட்டியா அனுப்பி வச்சிருக்காரு.” செல்வா சொல்ல அங்கே பெரிய சிரிப்பலை எழுந்தது.
ஆனால் வடிவேலு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அவருடைய மூளை இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டு இருக்கிறோமே என்று தன் நினைவடுக்கில் தேட வைத்தது.
“டேய் அந்த பொண்ணைப் எங்க பார்த்த, எப்படிப் பார்த்த, எப்ப எப்படி ப்ரபோஸ் பண்ண. அந்தப் பொண்ணு எப்ப ஓகே சொன்னுச்சு.” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை அவசரமாய் முன்வைத்தான் தெய்வா. அதில் கண்டிப்பாக அந்தப் பெண் அரசுவை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும் என்கிற அவன் பேராசை அப்பட்டமாகத் தெரிந்தது.
“டேய் என்கவுண்டர் ஏகாம்பரம், கொஞ்ச நேரம் வாயை வைச்சிக்கிட்டு சும்மா இருக்கியா. நான் இரண்டு வருஷமா அந்தப் பொண்ணை லவ் பண்றது என்னவோ உண்மை தான். ஆனா இதுவரைக்கும் அவகிட்ட என்னோட லவ்வை சொல்றது என்ன சேர்ந்தாப்பில் இரண்டு நிமிஷம் பேசினது கூட இல்ல.
கிட்ட போனாலே கை, காலெல்லாம் சுகர் பேஷண்ட் மாதிரி நடுங்க ஆரம்பிச்சிடுது. இந்த லட்சணத்துல நான் எப்படி ப்ரப்போஸ் பண்ணுறதாம்.” பல கவலையைச் சுமந்து பத்திரமாக கரையேற்றி வைத்த அரசுவிற்கு தன் சொந்தக் கவலை தாங்கமுடியாததாய் மாறி இருந்தது.
“சரிப்பா நீ அவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னும் அந்தப் பொண்ணுக்கு ப்ரப்போஸ் பண்ண வேண்டாம். அவங்க யாரு என்னன்னு சொல்லு. நாங்க பேசி உனக்குக் கட்டி வைக்கிறோம்.
கல்யாணத்துக்கு அப்புறம் நீ ப்ரப்போஸ் பண்ணுவியோ, அந்தப் பொண்ணு ப்ரப்போஸ் பண்ணுமோ. அது உங்க பாடு.” எளிதான தீர்வு கண்டுபிடித்தான் செல்வா.
“யப்பா சாமிகளா வேண்டாம்டா. என் வாழ்க்கையை நானே பார்த்துக்கிறேன்.” கையெடுத்துக் கும்பிட்டான் அரசு.
“அது எப்படி, எங்களுக்கு நல்லதுன்னு எங்க வாழ்க்கையில் நீ இஷ்டப்பட்ட எல்லாத்தையும் பண்ண தானே. அதை நாங்களும் எங்களோட முழு மனசோட ஏத்துக்கிட்டோம் வேற. இப்போ நாங்க உனக்குப் பண்ண நினைக்கிறதை ஒழுங்கு மரியாதையா பண்ண விடு.” நியாயம் பேசினான் தெய்வா.
“இப்ப அந்தப் பொண்ணு எங்க இருக்கான்னு சொல்ல போறியா இல்லையா?” நாகா கேட்க, “அட ஏன்பா அவனைப் போட்டு சும்மா சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அந்த பொண்ணு யாரு என்னன்னு எனக்கு தெரியுமே. நான் சொல்றேன் வாங்க எல்லாருமா சேர்ந்து போய் அந்த பொண்ணை பொண்ணு கேட்போம்.” அமர்த்தலாய் சொன்னார் வடிவேலு.
“என்னப்பா சொல்றீங்க.” ஆசையாய், ஆர்வமாய் அவர் அருகே வந்தான் தர்மா.
“பயபுள்ள ஒரு நாள் கூட லீவ் போடாம கரெக்டா ஆபீஸிக்கு வருதே என் மேல அவ்வளவு பாசம் போலன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தா, நம்ம ஆபீஸ்ல அக்கௌன்டன்ட்டா வேலை செய்யுற பொண்ணைப் பார்க்க தான் அவன் இவ்வளவு சின்சியரா வந்து இருக்கான்னு இப்ப தானே தெரியுது.” வடிவேலு சொல்ல, தன் குட்டு மொத்தமாய் உடைந்ததை எண்ணி தலையில் கை வைத்தபடி அமர்ந்தான் அரசு.
“அடப்பாவி, கேடி, ப்ராடு, திருடன்” என்று பல வார்த்தைகள் காதில் விழுந்தது அரசுவிற்கு. ஆனால் யார் எதை சொன்னார்கள், என்றெல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.
“அப்புறம் என்ன, வாங்க எல்லாரும் உடனடியா கிளம்புவோம் பொண்ணு வீட்டுக்கு.” லீலா சொல்ல மற்றவர்களும் வேக வேகமாக எழுந்தனர்.
“ஐயோ தெய்வங்களா நான் உங்க காலில் கூட விழுறேன். தயவு செஞ்சு அமைதியா இருங்க. நானே அந்த பொண்ணு கிட்ட போய் பேசுறேன்.” என்றான் அரசு.
“அரசு சொல்றதைக் கேளு. உனக்கு விவரம் பத்தாது. அதனால நீ என்ன பண்ற, அமைதியா வீட்டில் இரு. பெரியவங்க நாங்க போய் எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு வந்திடுறோம்.” என்றான் நாகா.
“எனக்கு விவரம் பத்தாது, உங்களுக்கு ரொம்பத் தெரியுமோ. பேசக்கூடாத பேச்செல்லாம் பேசி அதுக்குப் பரிசா தினம் தினம் பொண்டாட்டி கால் பிடிச்சு விடும் ஆள் எல்லாம் என் விவரத்தைப் பத்தி பேசுறதைப் பாரேன்.” நக்கலடித்தான் அரசு.
“பொண்டாட்டி காலை புருஷன் பிடிக்கிறது தப்போ, எல்லோருக்கும் சொல்லிக் காண்பிக்கும் அளவு பெரிய செயலோ கிடையாது. அது சாதாரண ஒரு செயல். எல்லா வீட்டிலும் நடக்கிறது தான். இது கூட தெரியல பார். அதனால் தான் சொல்றேன் உனக்கு விவரம் பத்தாது. நீ போன பொண்ணு கொடுக்க மாட்டாங்க.” என்றான் நாகா.
“எங்களுக்கு எது நல்லதுன்னு தான் எங்களுக்குத் தெரியாது. ஆனா உனக்கு எது நல்லதுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். உன்னை உன் போக்கில் விட்டா, நீ இன்னும் நாலு வருஷம் கழிச்சு தான் கல்யாணத்துக்கு ரெடி ஆவ.
அதுவரைக்கும் காத்திருக்க எங்களால முடியாது. உனக்கு இப்பவே கல்யாணம் நடக்கணும். நீயும் எங்களை மாதிரி சந்தோஷமா இருக்கணும், அவ்வளவு தான்.” திருமணம் வரை யோசித்துப் பேசினான் செல்வா.
“எல்லாம் சரிதான். ஆனா அந்த பொண்ணு கிட்ட என்னோட லவ்வைப் பத்தி நான் பேசுற மாதிரி இருக்காதே நீங்க பேசுறது.” அரசு பாவமாய்க் கேட்க, “டேய் நீ பேசி, அந்த பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிச்சா அது லவ் மேரேஜாகிடும். எங்க நாலு பேருக்கும் அரேன்ஜ் மேரேஜ் நடந்து, உனக்கு மட்டும் லவ் மேரேஜ் நடக்க விடுவோமா. நாளைய சந்ததிகள் எங்களைப் பத்தி என்ன நினைக்கும்.” தெய்வா கலாட்ட செய்ய,
“என்ன தான் பார்த்து, பழகி, லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அரேன்ஜ் மேரேஜில் இருக்கிற கிக் இருக்காது டா. அதனால என்ன பண்ற நல்ல புள்ளையா வீட்டுக்கு அடங்கின பையனா நாங்க குறிக்கிற தேதியில் அந்தப் பொண்ணு கழுத்தில் தாலி கட்டி அவளுக்கு புருஷனாகுற. அதுக்கு அப்புறம் உன் இஷ்டப்படி எவ்வளவு நாள் வேண்ணாலும் லவ் பண்ணிக்கோ.” என்றான் தர்மா.
“அடப் பாவிங்களா ஏன்டா இப்படி பண்றீங்க?” என்ற அரசுவுக்குத் தாங்கவில்லை. மனது பக்பக்கென்று அடித்துக்கொண்டது. அடுத்தவர்களுக்குச் செய்கையில் மலையைப் பிரட்டும் அளவு இருக்கும் தைரியம் தனக்கென்று வரும் போது சுண்டெலியைப் பிடிக்கும் அளவில் கூட இல்லை.
“அரசு அண்ணா என்ன இதுக்கே இப்படி சொல்லிட்டீங்க. எங்க நாலு பேருக்கும் ஒரே நாளில் கல்யாணம் நடந்ததால் நாங்க பெருசா கொண்டாடவும் இல்ல, ஆர்ப்பாட்டம் பண்ணவும் இல்லை. அது எல்லாத்தையும் உங்க கல்யாணத்தில் செய்து எல்லோரையும் ஒருவழி பண்ண நினைச்சிருக்கோம்.” என்றாள் ஊர்மி.
“தங்கச்சி மேடம் அண்ணன் பாவம் இல்லையா? உங்களுக்காக இந்த பாவப்பட்ட அண்ணன் என்ன எல்லாம் பண்ணி இருக்கேன்னு கொஞ்சம் யோனை பண்ணி பாருங்கம்மா ப்ளீஸ்.” படுத்தே விட்டான் அரசு.
“சரியா சொன்னீங்கண்ணா. நீங்க எங்களுக்கு நிறைய பண்ணியிருக்கீங்க. அதில் பாதியாவது நாங்கள் உங்களுக்கு திரும்ப பண்ண வேண்டாம். அதுக்கு தான் இது.” இதழ்களைப் பற்களால் கடித்தபடி சொன்னாள் தேவகி.
“ஆம்பளைப் புள்ளையா இலட்சணமா அமைதியாக வீட்டில் இருப்பீங்களாம். நாங்க எல்லாரும் போய் எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு வந்துடுவோமாம்.” என்றாள் ருக்கு.
“என்னது என்னைத் தனியா விட்டுட்டுப் போறீங்களா. இவ்வளவு பெரிய வீட்டில் நான் எப்படி தனியா இருக்க முடியும்.” நிஜமாகவே பயம் வந்தது அரசுவிற்கு.
“அதான் இத்தனை பேர் சொல்றோம் தானே. அமைதியா வீட்டில் இருடா. கொஞ்ச நேரம் தான். உனக்கு ஒரு தேதியைக் குறிச்சிட்டு வந்திடுறோம். அதோட நீ ஒன்னும் தனியா இருக்கப் போறதில்லை உனக்கு துணையா தான் செல்வாவோட ப்ரண்டு இருக்கப் போறாங்களே.” என்றான் தெய்வா.
“நான் உங்களோட வரேனே.” வேகவேகமாகக் கேட்டாள் லேகா. அவளுக்கு இவர்களின் இத்தனை அட்டகாசங்களைப் பார்க்கவும், கேட்கவும் பிடித்திருந்தது.
“ஸ்சாரி சிஸ்டர், இது ஃபேமிலி பங்க்ஷன்.” என்றான் தெய்வா சாட்டையடியாக.
அவன் வர வேண்டாம் என்று சொன்னது கூட வலிக்கவில்லை. ஆனால் சிஸ்டர் என்று சொல்லி விட்டானே என்று மனதுக்குள் குமுறினாள் அவள். யாரும் அறியாதவண்ணம் தெய்வாவின் கையில் அடித்துக்கொண்டான் நாகா.
நல்ல நேரம் எல்லாம் பார்த்து அறிவரசியின் வீட்டிற்கு கிளம்பினார்கள் அனைவரும். திடீரென பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று சொன்னதும் முதலில் கோபத்தில் கத்தியவள் மாப்பிள்ளை அரசு என்று சொன்னதும் உடனடியாக சம்மதித்தாள். அது அவளுடைய பெற்றோர்களுக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது.
நன்றாக அலங்காரம் செய்து காபி, கப்புகளுடன் வரவேற்புரை வந்தவள் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்து அரசு இல்லாமல் போக லேசாக ஏமாற்றம் அடைந்தாள். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் வந்திருந்த அனைவருக்கும் காபியைக் கொடுத்தாள்.
“உங்க பெயர் என்ன?” லீலா விசாரணையை ஆரம்பித்து வைக்க, “அறிவரசி.” என்று பொறுப்பாகப் பதில் சொன்னாள் இளையவள்.
“உங்க பெயரை மாதிரியே நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களை யாருக்காக பொண்ணு கேட்டு வந்து இருக்கோம் னு தெரியுமா?” ஊர்மி கேட்க,
“தெரியும் எங்க கம்பெனியில் வேலை செய்யும் அரசு தான் மாப்பிள்ளை. ஆனால் அவருக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லாத மாதிரி தெரியுதே.” அவன் இல்லாத குறைபாடு என்ன முயன்றும் முடியாமல் அவள் வாயில் இருந்து வந்துவிட்டது.
“அவன் இங்க வராததை நினைச்சு இப்படிக் கேட்கிறியாம்மா. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. அவன் கொஞ்சம் அதிகம் வெட்கப்படுவான். அது மட்டும் இல்ல உன்னோட விருப்பத்தை தெரிஞ்சுக்காம அவனை எப்படி இங்க கூட்டிட்டு வருவது.
எங்க இத்தனை பேரைப் பார்த்து நீ சங்கோஜப்பட வேண்டாம். உன்னோட மனசுல என்ன தோணுதோ அதை சொல்லு போதும்.” வளர்ப்பு மகனுக்காக பரிந்து கொண்டு வந்தார் வடிவேலு.
வந்தவர்களின் பேச்சுகள் முழுக்க முழுக்க தங்கள் மகளிடம் மட்டுமே இருக்க, பெற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“அப்பா கொஞ்ச நேரம் சும்மா இருங்க. இங்க பாருங்க அறிவு, அரசு ரொம்ப நல்ல பையன். எங்க நாலு பேரையும் விட நல்லவன். இந்த ஊர் உலகத்தில் எங்க தேடினாலும் அவனை மாதிரி ஒரு நல்ல பையனை நீங்க பார்க்கவே முடியாது. இத்தனை நாள் ஒரே இடத்தில் வேலை செஞ்சிருக்கீங்க. அவனைப் பத்தி கொஞ்சமாச்சும் தெரிஞ்சிருக்குமே.
எங்க நாலு பேருக்கும் அவன் எவ்வளவோ பண்ணி இருக்கான். அவனுக்கு நாங்க பண்ண முடிஞ்சது அவனோட கல்யாணம் மட்டும் தான். நீங்க எவ்வளவு டைம் வேணாலும் எடுத்துக்கோங்க, ஆனா நல்லா யோசிச்சு சம்மதம் அப்படிங்கிற ஒரு வார்த்தை சொல்லுங்க அது போதும்.
அவனை மட்டும் நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க வாழ்க்கையோட கடைசி நொடி வரைக்கும் உங்களை சந்தோஷத்தோட எல்லையில் வைச்சிருப்பான்.” உணர்ந்து பேசினான் நாகா. அவன் பேச்சு கண்டிப்பாக அவள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.
“அரசு எங்களுக்கு கூடப்பிறக்காத அண்ணன். எந்தக் கோவிலுக்கு வேண்ணாலும் கூப்பிடுங்க. சூடம் அணைச்சு சத்தியம் பண்ண நான் தயார். என் வீட்டுக்காரரை விட என் அண்ணன் ரொம்ப நல்லவர்.“ என்றாள் ருக்கு.
“அண்ணாவுக்கு கோபமே வராதுங்க. ரொம்ப ரொம்ப சாது அவர்.” என்றாள் தேவகி.
“என்னடா யாரோ வந்தாங்க ஒருத்தரைக் காட்டி மாப்பிள்ளைன்னு சொன்னாங்க அவரைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு எல்லோருமா சேர்ந்து வற்புறுத்துறாங்களேன்னு நினைக்காதீங்க.
நாங்களும் பொண்ணுங்க தான். இந்த மாதிரி நிலைமையில் நீங்க என்ன யோசிப்பீங்கன்னு எங்களுக்குப் புரியுது. உங்களை நாங்க கட்டாயப்படுத்த விரும்பல. எங்க வீட்டுப் பையனுக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு.
உங்களை அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க நாங்க எல்லோரும் ஆசைப்படுறோம். இதுக்கு அப்புறம் எல்லாமே உங்களோட முடிவில் தான் இருக்கு.” பொறுப்பாய் பேசினாள் லீலா. அனைவரும் அவரவர் மனதில் தோன்றிய அனைத்தையும் சொல்லிவிட்டு அறிவின் பதிலிற்காக காத்திருந்தனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
11
+1
1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அந்த பொண்ணு தான் பதில் சொல்லிடுச்சே