
அதிகாலை ஐந்து மணி. மாளிகையின் ஜன்னல் வழியே புகுந்த மெல்லிய பனிப்புகை, நிலாவின் அறையை இன்னும் குளிரூட்டியது. ஆனால், நிலாவின் மனமோ அனலாய் எரிந்து கொண்டிருந்தது. நேற்று இரவு நடந்த அந்த நரக விசாரணைக்குப் பிறகு அவளுக்குத் தூக்கம் வரவில்லை. ரம்யாவின் டைரியைத் தன் மார்போடு அணைத்தபடி சுவரோரம் அமர்ந்திருந்தவளின் கண்கள் வீங்கிப் போயிருந்தன.
திடீரென கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உள்ளே நுழைந்த விக்கி, கையில் ஒரு பெரிய வேலைப் பட்டியலை வைத்திருந்தான். “நிலா… எழுந்திரு. இன்னைக்கு இந்த வீட்டுல வேற வேலைக்காரங்க யாரும் இல்ல. சமையல்ல இருந்து தோட்டம் வரைக்கும் எல்லாம் உன் பொறுப்புதான். முதல்ல காபி போட்டுட்டு ஹாலைச் சுத்தம் பண்ணு. சார் எழுந்து வர்றதுக்குள்ள எல்லாம் பளிச்சுன்னு இருக்கணும்,” என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.
நிலா மெல்ல எழுந்து சமையலறைக்குச் சென்றாள். ஐந்து நட்சத்திர ஹோட்டல் தரத்திலான அந்தப் பிரம்மாண்டமான சமையலறையில் எங்கே என்ன இருக்கிறது என்று தெரியாமல் அவள் திணறினாள். எனினும், தன் தோழிக்காக எதையும் செய்யத் துணிந்தவள், கஷ்டப்பட்டு காபியைத் தயார் செய்தாள்.
எட்டு மணி அளவில் ஆதித்யா மாடிப் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்தான். கறுப்பு நிற டீ-ஷர்ட் மற்றும் ட்ராக் பேண்ட் அணிந்து, ஜிம்முக்குச் சென்று வந்த களைப்பில் அவனது மேனி இன்னும் மினுமினுத்தது. நிலா நடுங்கும் கைகளுடன் காபியை அவனிடம் நீட்டினாள்.
ஆதித்யா காபியை ஒரு வாய் குடித்தான். அடுத்த நொடியே முகம் சுளித்து, “சீ… இது என்ன காபியா இல்ல கஷாயமா?” என்று கத்தி, அந்தக் காபியை நிலாவின் கால்களுக்கு அருகிலேயே தரையில் கொட்டினான்.
”இப்போவே இதைச் சுத்தம் பண்ணு!” என்று கர்ஜித்தான். நிலா திகைத்து நின்றாள். “என்ன பாக்குற? குனிஞ்சு துடைடா!” என்று அவன் அதட்டியதில் நிலா மிரண்டு போனாள். கண்களில் நீர் முட்ட, அந்த விலையுயர்ந்த பளிங்குத் தரையில் மண்டியிட்டுத் தன் முந்தானையால் அந்தக் காபியைத் துடைக்கத் தொடங்கினாள்.
.ஆதித்யா சோபாவில் அமர்ந்து, குனிந்து வேலை செய்து கொண்டிருந்த நிலாவை ஒரு கழுகைப் போலப் பார்த்தான். “இங்க பாரு நிலா… நீ இங்க குனிஞ்சு தரை துடைக்கணுமா, இல்ல நிமிர்ந்து உன் வீட்டுக்குப் போகணுமான்னு உன் கையில தான் இருக்கு. அந்த ஃபைல் இப்போ எங்க? ரம்யா அந்த ஃபைலோட எங்கே ஒளிஞ்சிருக்கா?” என்று அழுத்தமாகக் கேட்டான்.
நிலா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “சார்… சத்தியமா எனக்குத் தெரியாது சார். ரம்யா காணாம போனதுல இருந்து நான் அவளைத் தேடிட்டு தான் இருக்கேன். அவ எங்கே இருக்கான்னு எனக்கே தெரியாது சார்,” என்று விம்மினாள்.
ஆதித்யா சட்டென்று அவளது கையைப் பிடித்து இழுத்துத் தனக்கு முன்னால் நிற்க வைத்தான். “பொய்! ரம்யா உன் உயிர்த் தோழி. அவ உன்கிட்ட சொல்லாம எதையும் பண்ண மாட்டா. அந்த டைரியில அவளே எழுதியிருக்கா, ‘நிலாவிடம் சொல்ல வேண்டும்’னு. அப்போ அவ உன்கிட்ட ஏதோ ஒரு இடத்தைப் பத்தி சொல்லியிருக்கா. அந்த ரகசிய இடம் எது? அவளை நீ எங்கே ஒளிச்சு வச்சிருக்க?”
ஆதித்யாவின் கண்கள் நிலாவின் கண்களை ஊடுருவின. அவனது பிடியில் நிலாவின் கை மணிக்கட்டு வலிக்கத் தொடங்கியது. “நிஜமாவே எனக்குத் தெரியாது சார்… ப்ளீஸ் என்னை நம்புங்க…” என்று அவள் கதறினாள்.
நம்புறதா? ஆதித்யா தேவ் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டான் நிலா. நீ இப்போ உண்மையைச் சொன்னா, ரம்யாவைக் கண்டுபிடிச்சு அவளை நான் தண்டிக்க மாட்டேன், விட்டுடுவேன். ஆனா நீ மறைக்கிற ஒவ்வொரு நிமிஷமும், அவளுக்குத் தான் ஆபத்து. சொல்லு… ரம்யா இப்போ எங்கே?” என்று அவளை உலுக்கினான்.
நிலாவுக்குத் தலை சுற்றியது. ரம்யா எங்கே இருக்கிறாள் என்பது தனக்குத் தெரிந்தால் இப்போதே சொல்லிவிடலாமே என்று அவள் ஏங்கினாள். ஆனால், அவளுக்குத் தெரிந்ததெல்லாம் ரம்யாவிற்கு ஆபத்து என்பது மட்டும்தான்.
ஆதித்யா அவளை ஏளனமாகப் பார்த்துவிட்டு, “சரி… உனக்கு இப்போ உண்மை சொல்லத் தோணல. ஆனா இந்த வேலைகளையெல்லாம் செஞ்சு முடிக்கும்போது உன் மூளை வேலை செய்யும்னு நினைக்கிறேன். இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள இந்த வீடு முழுக்க ஒரு தூசி கூட இருக்கக் கூடாது. இல்லைன்னா… ரம்யாவோட போனை டிரேஸ் பண்ணி அவளைக் கண்டுபிடிக்கிறதை விட, அவளைத் தேடி வர்றவங்கள்கிட்ட அவளைக் காட்டிக் கொடுத்துடுவேன். ஜாக்கிரதை!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
நிலா அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள். ஒருபுறம் ஆதித்யாவின் வற்புறுத்தல், மறுபுறம் ரம்யாவுக்குத் தான் தெரியாமல் ஏதேனும் ரகசியத்தைச் சொல்லியிருப்பாளா என்ற குழப்பம். நிலா மெல்லத் தரையைத் துடைக்கத் தொடங்கினாள். அப்போது சோபாவின் இடுக்கில் ஒரு சிறிய காகிதத் துண்டு இருப்பதை அவள் கவனித்தாள். அதில் ஒரு முகவரி அரைகுறையாக எழுதப்பட்டிருந்தது. அது ரம்யாவின் கையெழுத்தா?
அந்தக் காகிதத் துண்டில் இருப்பது என்ன? நிலா அதை ஆதித்யாவிடம் சொல்வாளா? அல்லது ரகசியமாக ரம்யாவைக் கண்டுபிடிக்க முயற்சிப்பாளா?
அரக்கன் வருவான்.

