Loading

அத்தியாயம் – 37

நித்திலா கர்ப்பமாக இருக்கும் செய்தி தெரிந்ததிலிருந்து, விக்ராந்த் அவளை ஒரு கண்ணாடிப் பொம்மை போலப் பார்த்துக்கொண்டான். அவளைப் படிக்கட்டுகளில் இறங்கி கீழே வரக்கூட அவன் அனுமதிப்பதில்லை, அவளுக்குத் தேவையான சத்தான உணவுகள் அனைத்தும் அவள் அறைக்கே வந்து சேர்ந்தன.

​தங்கள் பேத்தி தாயாகப் போகிறாள் என்ற செய்தியைக் கேட்டு ஜெயமோகனும் வைத்தீஸ்வரியும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். நித்திலாவைப் பார்ப்பதற்காக அவள் வீட்டிற்கே வந்துவிட்டனர்.
நித்திலா தன் பாட்டி தாத்தாவை பார்க்க வேண்டி, ஒரு வாரத்திற்கு பிறகு அன்று தான் கீழே இறங்கி வந்திருந்தாள்,

அவர்களைப் பார்த்ததும், இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த பாரமெல்லாம் கண்ணீராக வெளியேற, நித்திலா அழுதுவிட்டாள். “இந்தச் சந்தோஷமான நேரத்துல அழக்கூடாது நித்திமா,” என்று அவர்கள் அவளைத் தேற்றினர்.

​”இப்பதான் என் பேத்தியைக் கையில தூக்கி வளர்த்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள அவளுக்கே ஒரு குழந்தை வரப்போகுது! காலம் எவ்வளவு சீக்கிரம் ஓடிடுதுல சம்மந்தி?” என வைத்தீஸ்வரி கேட்க, “ஆமா சம்மந்தி, நிஜம்தான்,” என மரகதப் பாட்டியும் வழிமொழிந்தார்.

​அப்போது சுமித்ரா, “தாத்தா, இதோ உங்களுக்குப் பிடிச்ச பால் அல்வா!” என எடுத்து வந்தாள். அதை ஆசையாக வாங்கப்போன ஜெயமோகனை, “தாத்தா… ஒரு ஸ்பூன் தான்! உங்களுக்கு சுகர் இருக்குல்ல?” என அவள் அதட்ட, “அடேயப்பா… நீ நித்தியை விட மோசமா இருக்கயேம்மா!” என அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

அனைவரும் பேசிக்கொண்டிருக்க, “அட வாங்க வாங்க! எப்ப வந்தீங்க?” என இன்முகத்துடன் வரவேற்றார் அன்னலட்சுமி. கல்யாணத்தன்று விறைப்பாக இருந்தவர், இப்போது இவ்வளவு கனிவாகப் பேசுவதைக் கண்டு ஜெயமோகனும் வைத்தீஸ்வரியும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

​கடந்த சில நாட்களாகவே அன்னத்தின் போக்கில் நல்ல மாற்றம் தெரிந்திருந்தது. சுமித்ராவை முன்போல அவர் திட்டுவதில்லை. அதற்காக அவர் முழுவதுமாக மாறிவிட்டார் என்றும் சொல்ல முடியாது, யாராவது கோபமூட்டினால் கத்திவிட்டுத்தான் செல்வார். ஆனாலும், பழைய கசப்புகளை மறந்து அவர் சகஜமாகப் பழகுவது குடும்பத்தினருக்கு நிம்மதியைத் தந்தது.

வீட்டை விட்டு வெளியேற முயன்ற அன்று, கோபத்தில் நித்திலா பேசிய வார்த்தைகள் குடும்பத்தினரைக் காயப்படுத்தியது உண்மைதான். ஆனால், நித்திலா தன் தவறை உணர்ந்து அனைவரிடமும் தனித்தனியாகச் சென்று மன்னிப்புக் கேட்டுவிட்டாள். அது கோபத்தில் வந்த வார்த்தைகள் தான் என்று புரிந்துகொண்ட அனைவரும், அவளுடன் பழையபடி அன்போடு தான் பழகினர்.

​விக்ராந்த் தன்னை எவ்வளவுதான் நிழல் போலப் பாதுகாத்தாலும், நித்திலாவின் மனதிலிருந்த காயம் இன்னும் ஆறவில்லை. அவன் எதைச் சொன்னாலும் சிடுசிடுவென விழுவதையே அவள் வழக்கமாக வைத்திருந்தாள்.

அன்று இரவு, நித்திலா ஒரு நாவலில் மூழ்கியிருக்க, விக்ராந்த் அவளுக்காகக் குங்குமப்பூ கலந்த பாலைக் கொண்டு வந்தவன் அவளிடம் நீட்டிட,.. அவளோ “எனக்கு வேண்டாம்,” என மறுத்தாள்…

“வேண்டாம்னா என்ன அர்த்தம்” அவன் கேட்க….”என் வயிறு ஃபுல்லா இருக்குனு அர்த்தம், ஒன்னார்க்கு முன்னாடி தான் சாப்பிட்டேன், அதுக்குள்ள எப்படி மறுபடியும் பாலை குடிக்க முடியும்” என்றாள் சலிப்புடன்

“சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் ஆச்சு நிலா, குடிச்சா ஒன்னும் பண்ணாது,” என அவன் வற்புறுத்த, “குடிச்சா எனக்கு வாந்தி வரும்” என்று அவள் சொல்லியும்.. “பரவாயில்ல” என்றான் அவன்..

“பச்…. உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா, நான் அப்புறம் குடிச்சிக்கிறேன்” என்றாள் எரிச்சல் குரலில்

​”ஆறிப்போயிட்டா அப்புறம் நீ குடிக்க மாட்ட” என அவன் சொல்ல, “ஆமா குடிக்க மாட்டேன் தான், ஆறி போயிட்டா கூட சூடு படுத்தி கொண்டு வந்து தர மாட்டீங்களா என்ன, அதான் அக்கா கிட்டருந்து ஸ்டவ்வை ஆன் பண்ணுறது எப்டினுலாம் கத்துகிட்டீங்களாமே”
என அவள் கிண்டல் செய்ய, விக்ராந்த் அதற்கு மேல் வம்பு செய்யாமல் அமைதியாகப் பாலை மேஜையில் வைத்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கச் சென்றான்.

மடிக்கணினியில் வேலை செய்துகொண்டிருந்த விக்ராந்திற்குச் சட்டென ஒரு சந்தேகம் எழுந்தது. “நீ கடைசியா எப்போ டாக்டரைப் பார்த்த? மறுபடி எப்போ வரச் சொல்லியிருக்காங்க?” என அவன் கேட்க, நித்திலா அப்படியே உறைந்து போனாள்.

​அவன் முகத்தைப் பார்க்காமல் புத்தகத்தையே வெறித்தவளுக்கு, தொண்டை அடைத்திட, அவனோ..
“உன்கிட்ட தான் கேட்டேன், மந்த்லி செக்கப்க்கு டாக்டர் எப்போ வர சொல்லிருக்காங்க” என்றான் மீண்டும்

தொண்டையை செருமிக் கொண்டவள்,..”அ.. அது… கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் போயிட்டு வந்தேன்,” என மழுப்பினாள்.

“நான் வாட்ச் பண்ண வரைக்கும் கடந்த ஒரு மாசத்துக்கு மேலேயே நீ வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போன மாதிரி எனக்கு தெரியலை, செக்கப் விஷயத்துல ஏன் இவ்வளவு அலட்சியமா இருக்க நிலா?” என அவன் கேட்டது நித்திலாவைப் பதற்றமடையச் செய்ய,.. அவனோ.. “நாம நாளைக்கு போயிட்டு வந்துடலாம், அப்பாயின்மெண்ட் வாங்கிடறேன்” என்றான்…

“இல்ல இல்ல,… நீங்க எதுக்கு, நானே போயிப்பேன்” என்ற அவளை சந்தேகமாக பார்த்தவன்,…”நீ என்கிட்டருந்து எதையாவது மறைக்கிறியா நிலா”? என்றான்

“நானா இல்லையே” அவள் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு சொல்ல… “அப்போ எதுக்கு முகம்லாம் வியர்க்குது, ஏன் டென்ஷன் ஆகுற?” என்றான்…

முகத்தை புறம் கையால் துடைத்தக் கொண்டவள், “இல்ல சும்மா தான்” சமாளிக்க முயல, அவளை நம்பாமல் பார்த்தவன்,… “என்கிட்டருந்து என்ன மறைக்கிறியோ, அதை இப்போதே சொல்லு” என்றான் அமைதியான குரலில்,…

“நான் எதையும் மறைக்கல” அவள் தெளிவான குரலில் சொல்ல, அவளையே கூர்மையாக பார்த்தவன்,… “ஓகே,.. நாளைக்கு ரெடியா இரு, நாம போயிட்டு வந்துடலாம்” என்றான்…

“நீங்க எதுக்கு” என கேட்டவள் அவன் பார்த்த அழுத்தமான ஒற்றை பார்வையில் அமைதியாகி விட்டாள்,..

​அன்று இரவு நித்திலாவிற்கு உறக்கமே வரவில்லை. ‘நாளை டாக்டரிடம் இவன் வந்தால் உண்மை தெரிந்துவிடுமே! என் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தால், இவன் கண்டிப்பாகக் குழந்தையை வளர விடமாட்டான்.
என்னால அதை ஒரு நாளும் ஏத்துக்க முடியாது, என்ன பண்ணுவேன் நான், அவனுக்கு என்ன சொல்லி புரிய வைக்க போறேன்’ என்ற வேதனையில் தவித்தவள் அன்று தாமதமாக தான் உறங்கினாள்,..

அடுத்த நாள் காலை, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு விக்ராந்தும் நித்திலாவும் காரில் மருத்துவமனைக்குக் கிளம்பினார்கள். விக்ராந்த் அமைதியாக காரை ஓட்டிக்கொண்டிருக்க, நித்திலாவின் மனதுக்குள் ஒரு பெரிய போரே நடந்து கொண்டிருந்தது.

மருத்துவரிடம் சென்ற பிறகு, அவர் மூலமாக உண்மைகள் விக்ராந்திற்குத் தெரிவதை விட, அதற்கு முன்பே தானே அவனிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று நித்திலா காலையிலேயே ஒரு முடிவெடுத்திருந்தாள்.

​தன்னுடைய உடல்நிலை மற்றும் கர்ப்பத்தில் இருக்கும் சிக்கல்களைப் பற்றி அவனிடம் சொல்ல இதுதான் சரியான தருணம் என்று அவளுக்குத் தோன்ற,.. இப்போதே உண்மையைச் சொல்லிவிடலாம் என்று கருதி தொண்டையைச் செருமிக் கொண்டவள்.. “விக்ராந்த்… நான்… நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்,” எனத் தயக்கத்தோடு ஆரம்பித்தாள்.

அவன் வண்டியை ஓட்டிக்கொண்டே இயல்பாக “சொல்லு” என்றான். “அது… நான்… எனக்குக் கொஞ்சம் பிராப்ளம்,” என அவள் இழுக்க, “என்ன பிராப்ளம்? புரியல,” என விக்ராந்த் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

​”வந்து… என்னோட பிரக்னன்ஸில கொஞ்சம் பிராப்ளம்னு டாக்டர் சொன்னாங்க,” என அவள் திக்கித் திணறிச் சொல்லி முடிக்க, விக்ராந்த் அதிர்ச்சியில் உறைந்தான். பதற்றத்துடன் காரைச் சாலையோரம் நிறுத்தினான்.

​”என்ன சொல்ற நிலா? என்ன பிராப்ளம்னு சொன்னாங்க? நம்ம குழந்தை… குழந்தைக்கு ஒன்னும் இல்லைல?” எனக் கலவரத்துடன் கேட்டவன், அவளது வயிற்றை மென்மையாக வருடினான்.
​அவன் பதற்றத்துடன் குழந்தையைப் பற்றி விசாரித்ததும், நித்திலாவுக்குத் தன் உயிருக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றிச் சொல்லத் தோன்றவில்லை. குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது என்று மருத்துவர் சொன்னது மட்டுமே நினைவுக்கு வர, அவளது கண்கள் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தன.

​அழுகையினூடே, குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருப்பதைப் பற்றி மட்டும் அவனிடம் சொல்லி முடித்தாள். இத்தனை நாட்களும் பிறக்கப்போகும் தன் வாரிசைப் பற்றிப் பல கனவுகள் கண்டிருந்த விக்ராந்திற்கு, இந்தச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் தீராத கவலையையும் அளித்தது.

​”இதை எதுக்காக நீ என்கிட்ட முன்னாடியே சொல்லல?” என விக்ராந்த் அதட்டலாகக் கேட்க, “பயமா இருந்தது,” என அழுதுகொண்டே பதிலளித்தாள் நித்திலா. அவனது கோபம் நொடியில் மறைந்து, அவளுக்கு ஆறுதலாகத் தோள் கொடுத்தான்.

​சற்று நேரம் கழித்துத் தன் அழுகையைச் சீர் செய்துகொண்டவள், “நான் உங்ககிட்ட இன்னொன்னும் சொல்லணும்,” என மீண்டும் ஆரம்பிக்க, விக்ராந்த் கலவரம் நிறைந்த முகத்துடன் அவளைப் பார்த்தான். நித்திலா இப்போது தன் உயிருக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றியும்  அவனிடம் முழுமையாகச் சொல்லி முடித்தாள்.

அவள் சொன்னதைக் கேட்டு விக்ராந்த் நிலைகுலைந்து போனான். “பைத்தியமாடி உனக்கு? இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி என்கிட்ட இருந்து மறைக்க முடிஞ்சது? டாக்டர் அவ்வளவு எச்சரிச்சும் நீ!” என்று வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணறியவனின் கண்கள் கலங்கி போயின..

அவனது கண்ணீரைப் பார்த்ததும் நித்திலாவிற்கு மனது பிசைந்தது. “இல்ல… இதுல பெரிய ஆபத்து ஒன்னும் இல்லை, ஆபரேஷன் பண்ணிக்கலாம்னு சொன்னாங்க,” என அவள் சமாதானம் செய்ய முயல, “ஆபரேஷன் பண்ணிக்கிறது உனக்கு அவ்வளவு சாதாரணமாப் போச்சா? ஏன் இப்படி இருக்க நிலா?” எனக் கோபமும் வலியும் கலந்த பார்வையுடன் கேட்டான்.

​”எனக்கு என் குழந்தை வேணும்,” என நித்திலா அமைதியாகத் தன் உறுதியை வெளிப்படுத்தினாள். ஆனால் விக்ராந்த் அவளை ஆழமாகப் பார்த்து, “ஆனா எனக்கு நீதான் வேணும் பேபி!” என்றான். அந்த ஒரு வார்த்தையில் அவனது ஒட்டுமொத்த காதலும் வலியும் தெரிந்தது.

அவனது அந்தப் பதில் நித்திலாவிற்கு ஒரு பக்கம் சந்தோஷத்தைத் தந்தாலும், மறுபக்கம் அவன் எடுக்கப்போகும் முடிவை நினைத்துக் கவலையைத் தந்தது.

​விக்ராந்த் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ஒரு தீர்க்கமான முடிவுடன் மருத்துவமனையை நோக்கி காரைச் செலுத்தினான்.

விக்ராந்தும் நித்திலாவும் மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர். நித்திலாவின் மருத்துவ அறிக்கைகளை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் மருத்துவர். நித்திலாவின் மனது தவிப்பில் இருக்க, விக்ராந்தோ எதற்கும் துணிந்த ஒரு தீர்க்கமான முடிவுடன் அமர்ந்திருந்தான்.

​”நீங்க நித்திலாவோட கணவர் தானே?” என மருத்துவர் கேட்க, “ஆமா டாக்டர்,” என்றான் விக்ராந்த். “நித்திலா உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன்,” என அவர் மீண்டும் சொல்ல, விக்ராந்த் ஒரு நிமிடம் நித்திலாவைப் பார்த்துவிட்டுப் பேச ஆரம்பித்தான்.

​”ஆமா டாக்டர்… எனக்கு என்னோட வைஃப் தான் முக்கியம். இந்த குழந்தை இல்லைன்னா, கடவுள் எங்களுக்கு இன்னொரு குழந்தையை நிச்சயம் கொடுப்பாருன்னு நம்பிக்கை இருக்கு. அதனால…” என விக்ராந்த் பேச்சை இழுத்து நிறுத்தினான். அவனது நோக்கம் தெளிவாக இருந்தது, நித்திலாவின் உயிருக்கு ஆபத்து என்றால் அவனுக்கு இந்தக் குழந்தை வேண்டாம் என்பதே அது.

​”நானும் நித்திலாக்கு இதைத்தான் அட்வைஸ் பண்ணேன். ஆனா அவங்கதான் ரொம்ப எமோஷனலாகி எதையும் கேக்க மாட்டேனுடாங்க,” என மருத்துவர் கூற, நித்திலா குறுக்கிட்டு. “டாக்டர்… என் குழந்தை…” என ஏதோ சொல்ல வந்தவளிடம் “புரியுதுமா, வருத்தப்படாத. இந்தக் குழந்தை மறுபடியும் உன்கிட்டயே வந்து சேரும்,” என்றார் மருத்துவர். நித்திலாவிற்கு அழுகை பொங்கி வந்தது.

​”நாம முதல்ல இன்னொரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாம். அதுக்கப்புறம் தான் என்ன பண்ணலாம்னு முடிவெடுக்கணும்,” என மருத்துவர் சொல்ல, விக்ராந்தும் அதற்குச் சம்மதித்தான்.

​மீண்டும் ஒரு ஸ்கேன் எடுக்கப்பட்டு, அதன் முடிவுகளுக்காக இருவரும் காத்திருந்தனர். விக்ராந்திற்கு நித்திலா மீது அளவு கடந்த கோபம் ஏற்பட்டது.

‘இவ்வளவு பெரிய ஆபத்துன்னு தெரிஞ்சும், எதற்காக இவ இப்படி ஒரு பைத்தியக்கார முடிவை எடுத்தா? மத்தவங்களைப் பத்தி இவ யோசிச்சுப் பார்க்கவே இல்லையா? என்னைத் தவிக்க விட்டுட்டுப் போகணும்னு நினைக்கிற அளவுக்கு இவளுக்கு என் மேல வெறுப்பா?’ அவனது கோபத்திற்குப் பின்னால் ஒரு தீராத வருத்தமும் மறைந்திருந்தது.

சற்று நேரத்தில் இருவரும் மருத்துவரின் முன்பு இருந்தனர், ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்த மருத்துவரின் நெற்றியில் யோசனையில் சுருக்கங்கள் விழுந்தன.

“என்னாச்சு டாக்டர்? ஏதாச்சும் பெரிய பிராப்ளமா?” என விக்ராந்த் படபடப்புடன் கேட்டான்.

​”எனக்கு இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல மிஸ்டர் விக்ராந்த்… இதுல சந்தோஷமும் இருக்கு, அதே சமயம் பிராப்ளமும் இருக்கு,” என்றார் மருத்துவர்.
நித்திலா எதற்கும் தயாரானவள் போல அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

​”முன்னாடி எடுத்த ரிப்போர்ட்ல குழந்தையோட வளர்ச்சி குறைவா இருக்குன்னு சொல்லிருந்தேன். ஆனா இப்போ ஆச்சரியமா குழந்தையோட வளர்ச்சி ரொம்ப நல்லா இருக்கு. இட்ஸ் நார்மல்!” என மருத்துவர் சொன்னதைக் கேட்டு நித்திலா மகிழ்ச்சியில் கண்கள் கலங்கினாள்.

​ஆனால் விக்ராந்தின் முகத்திலோ நிம்மதி ஏற்படவில்லை. “இது சந்தோஷமான விஷயம்தான் டாக்டர், ஆனா பிராப்ளம்னு எதைச் சொல்றீங்க?” என அவன் மீண்டும் கேட்டான்.

​”பிராப்ளம் என்னன்னா, இப்போ உங்க மனைவிக்கு அபார்ஷன் பண்ண முடியாது. அந்த ஸ்டேஜை அவங்க தாண்டிட்டாங்க. கரு இப்போ குழந்தையா முழுமையா உருவெடுத்திடுச்சு. நீங்க ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க!” என்றார் மருத்துவர்.

விக்ராந்திற்குத் தலை சுற்றியது. “டாக்டர்… அப்போ நிலாக்கு இனி பிராப்ளம் இல்லை தானே?” என அவன் மீண்டும் ஒரு நம்பிக்கையில் கேட்க, மருத்துவர் உண்மையை உடைத்தார்.

​”நித்திலாக்கு இருக்கிற பிராப்ளத்தை நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அவங்களால ஒரு குழந்தையைச் சுகப்பிரசவத்துல பெத்தெடுக்க முடியாது. பிரசவ நேரத்துல அவங்க உயிருக்கு அதிக ஆபத்து இருக்கு. அவங்களுக்குப் பிரசவ வலி வர்றதுக்கு முன்னாடியே ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்கணும். இது ஒன்னுதான் இப்போ இருக்கும் ஒரே வழி!” என மருத்துவர் கறாராகச் சொன்னார்.

​விக்ராந்த் நொறுங்கிப் போனான். “டாக்டர் ப்ளீஸ்… என் வைஃப்க்கு எதுவும் ஆகக்கூடாது. இந்த ஆபரேஷன் வேண்டாமே… வேற ஏதாச்சும் வழி இருந்தா சொல்லுங்க,” என அவன் கெஞ்சினான்.

​”ஸாரி மிஸ்டர் விக்ராந்த்… வேற வழியே இல்லை. இதனால்தான் நித்திலா கிட்ட அவ்வளவு தூரம் சொன்னேன். ஆனா அவங்க அதைக் காதுல வாங்காம இவ்வளவு லேட்டா வந்திருக்காங்க,” என்றார் மருத்துவர்.

​விக்ராந்த் தன் மனைவியை விவரிக்க முடியாத வலியுடன் பார்த்தான். ஆனால் நித்திலாவோ, தன் உயிருக்கு வரப்போகும் ஆபத்தைப் பற்றித் துளியும் கவலைப்படாமல், தன் குழந்தைக்கு உயிர் வந்துவிட்டது என்ற பூரிப்பில்  தன் வயிற்றை வருடியபடி அமர்ந்திருந்தாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
26
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. பாட்டி தாத்தாவின் வருகை 😍 அன்னப்பூரணி அம்மாவின் மனமாற்றம் அருமை.

    அவளை சுற்றி இருக்கும் இந்த அன்பான உறவுகளுக்காவது நித்திலா கொஞ்சம் யோசிக்கலாம்.

    ப்ரெக்னன்ட் என்று அறிந்த பின்னர் hospital doctor checkup பற்றி கேட்க இப்பொழுது தான் நேரம் வாய்த்ததா விக்ராந்த்?

    தன்னை தவிக்க விட்டு செல்லும் அளவுக்கு தன் மேல் வெறுப்பா என்ற ஆதங்கம் விக்ராந்துக்கு.

    அவள் baby நினைப்பில் இவன் அவனது baby நினைப்பில்.