Loading

திருமண பேச்சை ஆரம்பித்ததிலிருந்து, நர்மதாவின் முகம் அவ்வளவு மலர்ச்சியை காட்டவில்லை அதை கவனித்த முத்தரசி மருமகளிடம் விசாரித்தார்.

“கொஞ்ச நாளாவே நீ நீயா இல்ல..” என்று குறை சொல்ல, சாதனாவும் திரும்பிப் பார்த்தாள்.

“ஆமா அத்த.. கலகலனு பேச மாட்டேங்குறீங்க.. அமைதியா இருக்கீங்க” என்று சாதனாவும் சொல்ல, நர்மதா சலிப்பாக தலையசைத்தார்.

“எல்லாம் கல்யாண யோசனை தான்”

“என்ன யோசனை..? எல்லாம் நல்லா தான போகுது? நிச்சயம் வைக்க முடியலனு கவலையா?”

“இல்ல அத்த.. அதெல்லாம் இல்லை..”

“அப்புறம் என்ன?”

“சம்பூர்ணாவ நினைச்சு தான்..”

சாதனா உடனே எழுந்து வந்து அவர்களருகே அமர்ந்தாள்.

“அவளுக்கென்ன? நல்ல பொண்ணு. பிடிச்சு தான சரினு சொன்னோம்?”

“அப்படி சொல்லல.. நல்ல பொண்ணு தான்.. ஆனா பணக்கார பொண்ணா பார்த்துட்டோமேனு யோசனையா இருக்கு”

“ஊர்ல எல்லாம் தான் புள்ளைக்கு பணக்கார பொண்ணா பார்த்து கட்டி வைச்சு, நிறைய சீர் வாங்கனும்னு ஆசைப்படுவான். நீ என்ன அத நினைச்சு கவலைப்படுற?”

“அந்த பொண்ணு பணக்கார வீட்டுல இருந்து வர்ரது பெருசில்ல. ஆனா இங்க எப்படி வாழும்? மினிஸ்டர் எல்லாம் வீட்டுக்கு வருவாங்கனு சொல்லுது.. அவங்க வந்து போற மாதிரியா நாம இருக்கோம்?”

“கரெக்ட் எனக்கும் இதான் யோசனை.. அவர் கிட்ட சொன்னா இதுல என்ன இருக்குங்குறாரு” என்று சாதனா நொடித்தாள்.

“ஏன் நமக்கென்ன குறைச்சல்? நாம எல்லாம் மினிஸ்டர பார்க்க கூடாதா?” என்று முத்தரசி முறைத்தார்.

“அய்யோ பாட்டி.. அது விசயமில்ல.. சம்பூர்ணா பிஸ்னஸ் பண்ணுற பொண்ணு.. அவங்க வீடு அவ்வளவு பெருசு.. அங்க மினிஸ்டரு கலெக்டருனு யார வேணா கூப்பிட்டு வச்சு உட்கார்ந்து பேசும்.. நம்ம வீட்டுல அப்படி ஒருத்தர கூட்டிட்டு வந்து உட்கார்ந்து பேசுனா நல்லா இருக்குமா? இதோ.. நாம இருக்கோம்.. நாம உட்கார்ந்து பேசுறதும்.. பிஸ்னஸ் விசயமா வர்ரவங்க இங்க உட்கார்ந்து பேசுறதும் ஒன்னா?”

சாதனா விளக்க, அப்போதும் முத்தரசிக்கு விளங்கவில்லை.

“ஏய் நாம என்ன குறைஞ்சவங்களா? பணமில்லனா நம்ம வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்களா?” என்று பாட்டி கோபப்பட, சாதனா அப்பாவியாக மாமியாரை பார்த்தாள்.

“அத்த.. அவள கத்தாதீங்க.. அவ சொல்லுறது உங்களுக்கு புரியல.. சம்பூர்ணாவுக்கு அப்பாவோ அண்ணனோ இருந்தா சம்பூர்ணா இந்த வீட்டு மருமகளா மட்டும் வருவா.. அப்படி யாரும் இல்ல.. அவ தொழிலும் சேர்ந்து வரும். அதை நாமலும் கவனிக்க வேண்டி வரும்..”

“அது மட்டுமில்ல.. இப்ப நாம உட்கார்ந்து பேசுறோம்.. வீட்டு வேலை பார்க்குறோம்.. அவளால அது முடியாது. காலையில எந்திரிச்சு கிளம்பி ஆஃபிஸ் ஓடிருவா.. நைட் வந்து சாப்பிட்டு தூங்கிடுவா.. இடையில அவள பார்க்குறேன்னு பெரிய பெரிய ஆளுங்க வந்து நிப்பாங்க.. சிலர வீட்டுக்கு கூப்பிட்டு பேசுறது தான் மரியாதைனு அவளே சொன்னா.. அது தான் சரியும் கூட.. பிஸ்னஸ் ஆளுங்க வரும் போதும், அவ ஆபிஸ்க்கு ஓடும் போதும் வீட்ட பார்த்துக்க அங்க அவளுக்கு வேலைக்காரவங்க இருக்காங்க.. இங்க? அவ இந்த குடும்பத்துக்கு மருமகளா இருக்கிறது ரொம்பவே கஷ்டம்.. புரியுதா?”

நர்மதாவும் சாதனாவும் சொல்ல, முத்தரசிக்கு இப்போது விசயம் புரிந்தது.

“அவளோட பொறுப்பும் சேர்ந்து நம்ம வீட்டுக்கு வரும்.. அதை நாம தான் கவனிக்கனும்..”

“இது போதாதுனு அங்க தான் இவரும் வேலை பார்க்குறாரு.. முதலாளி வீட்டுலயே இருந்தா அவருக்கு நல்லா இருக்குமானு வேற கவலையா இருக்கு” என்று சாதனா வருத்தமாக பேசினாள்.

நர்மதாவும் இப்போது அதையே யோசிக்க, முத்தரசி இருவரையும் பார்த்தார்.

“இப்ப புரியுது.. சம்பூர்ணா மருமகளா வர்ரது பிரச்சனை இல்ல.. அவளோட வேலையும் பதவியும் தான் பிரச்சனை இல்ல?”

“ஆமா.. அது தான் எப்படி சமாளிக்கிறதுனு தெரியல..”

“நான் ஒன்னு சொல்லுறேன்.. கோபப்படாம கேளு.. பேசாம தனிக்குடித்தனம் வச்சுடுவோம்”

இருவரும் அதிர்ந்து போக, “அப்ப அவ வேலை நம்மல பாதிக்காது.. நாமலும் அப்ப அப்ப போய் பார்த்துட்டு வந்துடலாம் பாரு” என்றார்.

“தனியாவா?” என்ற நர்மதாவுக்கு மகனை பிரிய மனமில்லை.

“தனியா அனுப்புறதுல தப்பில்ல நர்மதா.. என்னையும் பாரு.. மூணு பசங்கள பெத்தேன்.. மூணு பேரும் ஒன்னா ஒரே குடும்பமா வாழனும்னு தான் ஆசைப்பட்டேன். நடந்துச்சா? கூடவே இருந்ததுல பகை தான் வளர்ந்துச்சு.. பகை முத்திப்போய் ஆளுக்கொரு பக்கமா வெடிச்சு பிரியுறத பார்த்தப்போ, முதல்லயே தனித்தனியா போய் உங்க வாழ்க்கைய வாழுங்கனு அனுப்பாம போனேனேனு எத்தனை நாள் வருத்தப்பட்டுருக்கேன் தெரியுமா?”

நர்மதாவிடம் பதில் இல்லை. சாதனாவும் அமைதியாள்.

“என்னை கேட்டா ரெண்டு பேரையும் தனித்தனியா அனுப்பி விடுறது நல்லதுனு சொல்லுவேன்”

“என்னது? நான் ஏன் போகனும்?” என்று சாதனா அதிர்ந்தாள்.

முத்தரசி அவளை பார்த்து சிரித்து விட்டு, “அப்போ எப்போ குடும்பப் பொறுப்ப பழகுவ?” என்று கேட்டார்.

“இப்ப எனக்கு பொறுப்பில்லாமலா இருக்கேன்?”

“இது வேற.. நாளைக்கு உனக்கு பிள்ளை பிறக்கும்.. உனக்குனு நிறைய பொறுப்பு வரும்.. நிறைய முடிவுகள எடுக்க வேண்டி இருக்கும். அந்த நேரத்துல மாமியாரோ பாட்டியோ அறிவுரை சொன்னா பிடிக்காம போயிடும். மனக்கசப்பு வந்து பிரியுறத விட, நீ தனியா ஒரு குடும்பத்த நடத்து.. நாங்க வந்து மாசத்துல பத்து நாள் தங்கிட்டு போறோம்னு சொல்லுறது நல்லது இல்லையா?”

சாதனா நர்மதாவை பார்க்க, அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“நீங்க என்ன அத்த சொல்லுறீங்க?”

“தெரியலயே” என்று பெருமூச்சு விட்டார்.

“ரொம்ப யோசிக்காத நர்மதா.. நான் சொல்லுறத செய்.. ரெண்டு பேரும் சந்தோசமா வாழனும்.. பிரச்சனையில்லாம வாழனும்.. கடைசி வரை அண்ணன் தம்பி பாசம் விட்டுப்போகாம வாழனும். இப்ப இவ சொன்னாளே.. ஒரே ஆபிஸ்ல வேலை செய்யுறதால புவனனுக்கு சரிவருமானு.. யோசிச்சு பாரு.. புவனன் ஆஃபிஸ் விசயத்த வீட்டுல சாதாரணமா பேசக்கூட முடியாம, எப்பவும் சம்பூர்ணா கூட இருந்தா நல்லா இருக்குமா?”

“இருக்காது தான்”

“இப்பவே இவளுக்கு புருஷன நினைச்சு கவலை.. நாளைக்கு அவ வந்தப்புறம் அது போட்டியா மாறிடும்.. என் புருஷன் இவ ஆஃபிஸ்ல வேலை செஞ்சா இவ பெரிய மகாராணியானு தோணும்.. அவளுக்கு சமைச்சு போட்டு ஆஃபிஸ் அனுப்புறாங்க.. நானும் தான இந்த வீட்டு மருமகனு மனசு மாறும்.. மாறும் தான?” என்று சாதனாவை பார்த்து கேட்க, அவள் உதட்டை கடித்து தரையை பார்த்தாள்.

இதை எல்லாம் அவள் எப்போதோ யோசித்து விட்டாள். அதையே பாட்டி சொன்ன போது அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

“நமக்கு ரெண்டு பசங்களும் முக்கியம்.. ரெண்டு மருமகளும் முக்கியம். தனித்தனி வீட்டுல இருந்தா நீ தாராளமா மாமியார் கெத்தோட போய் தங்கிட்டு வரலாம்.. பழகலாம். அவங்களும் சம்பாதிக்கிற பணத்த வச்சு எப்படி குடும்பத்த ஓட்டுறதுனு கத்துக்குவாங்க. நமக்கு பின்னாடியும் பகையில்லாம வாழுவாங்க. மனக்கசப்பு வர வாய்ப்பு ரொம்ப கம்மி தான்.”

நர்மதா இதை மனதில் ஏற்க போராட, சாதனா இதன் லாப நஷ்டத்தை யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

“சரி.. நீங்களா ஒரு முடிவுக்கு வாங்க.. இப்ப ஒன்னும் அவசரமில்ல.. கல்யாணம் வரை நேரமிருக்கே” என்று விட்டு தொலைகாட்சியில் ஓடும் படத்தை பார்க்க ஆரம்பித்து விட்டார் முத்தரசி.

இரவு பாட்டி சொன்னதை சாதனா தன் கணவனிடம் சொன்னாள்.

“தனிக்குடித்தனமா?” என்று அவனும் யோசித்தான்.

“ஆமாங்க.. ஆனா பாட்டி சொல்லுறதுலயும் ஒரு நியாயம் இருக்கு.. நான் ரொம்ப நல்லவளாம் கிடையாது.. அத்தைய எனக்கு பிடிக்கும் தான்.. ஆனா மித்ரன் பொண்டாட்டினு ஒருத்தி வந்து அவளுக்கு அத்தை சேவகம் பண்ணுறத பார்த்தேன்னா எனக்கு பொறாமை வராம இருக்காது.”

“அதுக்காக நாம தனியா போகனுமா? அவங்கள மட்டும் அனுப்பிட்டா என்ன?”

“லூசு மாதிரி பேசாதீங்க.. அவங்க மட்டும் எப்படி போவாங்க? மித்ரன் நீ மட்டும் போனு சொன்னா மித்ரன் ஒத்துக்குவானா? அவன மட்டும் குடும்பத்த பிரிச்சு அனுப்புற மாதிரி இருக்காதா?”

“சரி.. நான் லூசு தான்.. நீயே ஒரு முடிவு சொல்லு”

“மித்ரனும் சம்பூர்ணாவும் தனிக்குடித்தனத்துக்கு ஒத்துக்கிட்டா.. நாமலும் ஒத்துக்கலாம்”

“அடிப்பாவி! முடிவே பண்ணிட்டியா?”

“ஆமா.. போறதுனா ரெண்டு பேருமே போவோம்.. அப்ப தான் சரியா இருக்கும்”

“அப்போ எங்கம்மா?”

“அத்தைய நாம விடவா போறோம்? அத்தை நம்ம கூட தங்கட்டும். அவங்கள போய் பார்த்துட்டு வரட்டும். எனக்கு பெரிய பிரச்சனை இல்ல”

“இதுக்கு அம்மா ஒத்துக்கிட்டாங்களா?”

“அத்த எதுவும் சொல்லல.. ஆனா இந்த முடிவு தான் கடைசியில வரும்னு நினைக்கிறேன். ஏன்னா பாட்டி அவங்க பசங்களுக்கு நடந்தத பத்தி பேசுனப்போ அத்தை முகமே சரியில்ல.. அந்த குடும்பத்த விட்டு தனியா வந்தப்புறம் தான் நிம்மதியா இருக்கேன்னு அடிக்கடி சொல்லுவாங்க. பாட்டி என்ன தான் நல்ல மாமியாரா இருந்தாலும் ரொம்ப நாள்லாம் கூட்டு குடும்பமா வாழ முடியாது”

“உன்னாலயும் முடியாது அதான?”

“ஆமா.. மித்ரன் மேலயோ சம்பூர்ணா மேலயோ எனக்கு பொறாமை இல்ல.. ஆனா என் புருஷனோட முதலாளினு சொல்லிட்டு இந்த வீட்டுல என்னை மாதிரியே ஒரு மருமக இருந்தா அது எனக்கு குத்தும்.. நான் அத ஏத்துக்க முடியாது”

“இந்த மாதிரிலாம் பொம்பளைங்களால மட்டும் தான் யோசிக்க முடியும்” என்று நக்கலடித்தான்.

சாதனா கணவனை முறைத்து வைத்தாள்.

“பொம்பளைங்களாலயா? இருக்க நிலைமையில யாரா இருந்தாலும் அப்படித்தான் யோசிப்பாங்க”

“எனக்கு அப்படித்தோணலயே?”

“இப்படி வருவோம்.. உங்கள மாதிரி நான் வேலைக்கு போறேன்னு வைங்க.. என் முதலாளி என் அக்கா புருஷன்.. நீங்களும் நானும் எங்கம்மா வீட்டுக்கு போகும் போது.. அக்கா புருஷன் முதலாளிங்குறதால என் குடும்பம் அவர தூக்கி வச்சு கொண்டாடுது.. நானும் என் முதலாளிங்குறதால மரியாதையா தான் பேசுறேன். அப்ப உங்களுக்கு கோபம் வராது? நானும் மருமகன் அவனும் மருமகன்.. அதென்ன அவன மட்டும் தலையில தூக்கி வச்சுட்டு ஆடுறாங்கனு கேட்க மாட்டீங்க? கட்டுன பொண்டாட்டியும் அவன தான் மதிக்கிற நிலைமையில இருக்கானா அந்த வீட்டுக்கு போக பிடிக்குமா?”

சாதனா தன் நிலைமையில் தன் கணவனை நிறுத்தி விட்டு கேட்க, புவனனுக்கு இப்போது தான் அனைத்தும் விளங்கியது. முக்கியமாக இந்த விசயம் சாதனாவை எவ்வளவு வருத்தும் என்று புரிந்தது.

வருத்தத்தோடு ஏற்படும் பிரிவை விட, சந்தோசமாக கையாட்டி, மீண்டும் சந்திக்க ஏங்கும் ஆசையோடு ஏற்படும் பிரிவு சுகம் தான்.

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்