Loading

மெல்லினம் 22:

தன் முன் காதலுடன் ஒருவனும், பாசத்துடன் ஒருவனும், அமர்ந்திருந்ததை கண்டு முதலில் திகைத்து, பின் அவர்களின் வாழ்த்தில் சுய உணர்வு திரும்பியவளுக்கு, சந்தோஷத்தில் அவள் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் இறங்க,

அதனை கண்ட கதிர் “ப்ச் முல்லை” என புன்னகையால் அதட்ட முல்லையின் உதடுகள் தன்னால் விரிந்தன அவனின் அதட்டலில்.

ஆம், நாளை முல்லையின் பிறந்த நாள்..!

இடையில் நடந்த பல குளறுபடிகளில் தான் பிறந்த தினம் அவளிற்கு ஞாபகத்தில் இருந்திருந்தால் தான் அதிசயமே!!

நேற்று அழைத்த மங்கை பேச்சு வாக்கில் “துணி எடுத்துட்டியா தேனு, எப்புடி உன் பொறந்த நாளுக்கு அங்க இருப்பீங்களா இல்லை இங்க வந்துடுவீங்களா??” என கேட்டிட,

“அய்யோட!” என அப்போது தான் ஞாபகம் வந்தது இவளின் பிறந்த தினம்.

கதிருக்கு தெரியுமோ தெரியாதோ, சரி நாளை சொல்லி கொள்ளலாம் என நினைத்து இருந்தவளிற்கு அவனின் இந்த செய்கை இன்ப அதிர்ச்சியே!!

தங்களையே அவள் இன்னமும் பார்த்திருப்பதை கண்டு

“பாஸ்ட்…..பாஸ்ட்….சீக்கிரம் கேக் கட் பண்ணு.” என கதிர் அவளை முடுக்க.

“ஆமா, ம்மா பாச்ட், பாச்ட், யம்மி” என அத்வி கேக்கினை கண்டு சப்பு கொட்ட,

கண்களில் நீருடன் இதழில் சிரிப்புடன் அவளும் அவர்கள் முன் மண்டியிட்டு அமர்ந்து கேக்கினை வெட்டியவள் முதல் பீஸை எடுத்து எச்சி ஊற‌ தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்த அத்விக்கு முதல் ஊட்ட,

சப்பு கொட்டி உண்டவன் “ம்ம்ம் யம்மி டேஸ்ட் ம்மா ” என முல்லையின் விரல்களை விடாது இழுத்து ருசி பார்க்க,

அதில் சன்னமாக பொறாமை எழ “அடேய் மவனே, போதும் விடுடா அதான் கேக்கு மொத்தமா இங்க இருக்குல்ல அப்பறம் எதுக்கு உங்க அம்மா விரலை இப்புடி கடிக்குற விடுடா மொதல்ல” என அதட்ட,

“ம்ம்ம், அங்கி அம்மா பிங்கரும் டேஸ்ட்டா இக்குது.” என்றவன் கதிர் முன்பு கூறியது போல் “ஹப்பி பத்டே, முல்யை” என தான் வைத்திருந்த பூங்கொத்தை நீட்ட,

“தாங்ஸ் பட்டு குட்டி” என அவனை அணைத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“ம்கூம், இங்க ஒருத்தன் ரொம்ப நேரமா வெட்டியா உட்காந்துருக்கேன். எனக்கு கொஞ்சம் ஏதாவது வேலை கொடுக்கலாம்.” என கதிர் உரைக்க,

“என்ன வேலையா??” என அவள் புரியாது கேட்க.

“ஆமா வேலை தான் இப்புடி சும்மா உட்கார்ந்து உங்க ரெண்டு பேரையும் வேடிக்கை பார்க்குறதுக்கு பதிலா, ஒண்ணு உன் விரலை கடிக்கிற வேலை,  இல்லையின்னா உன்னை கட்டிபிடிக்கிற வேலையாச்சும் கொடுக்கலாம், அத்விக்கு தந்த மாதிரி” என அவன் குறும்புடன் கூற,

அதில் சிவந்து விட்டது அவளது முகம்.

கதிர் சிவந்த அவள் முகத்தினையே மெல்ல கிறங்கி பார்க்க அவனின் பார்வையின் வீரியத்தில் அவள் விரல்கள் நடுங்க ஒரு கேக் துண்டினை எடுத்து கொண்டு அவன் இதழருகே செல்ல,

அவளை விழுங்க முடியாது தாபத்தில் அவளது விரல்களை மொத்தமாக தனக்குள் முழுங்கி கொண்டான் கதிர்.

ஒவ்வொரு விரலாக ரசித்து, லேசாக கடித்து கேக்கினை அவன் உண்ண,

அவளிற்கு தான் அடிவயிற்றில் ஏதோ உருண்டது. அவனின் மீசை முடிகள் அவள் விரல்களை குத்தி காயமாக்க அதன் சுகமான இம்சையினை தாக்க முடியாதவளின் உணர்வுகள் உடல் எங்கும் பரவி அவளை நிலைகுழைய செய்ய சட்டென அவனிடம் இருந்து தனது விரல்களை உருவி கொண்டாள்.

அவளின் உணர்வு குவியல் நிலை அவனை மேலும் கிறங்கடிக்க இருக்கும் இடத்தினை உணர்ந்து தனது உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவளையும் கொண்டு வரும் பொருட்டு,

“அப்பறம் நீ எனக்கு தாங்கஸ் சொல்லணும் முல்லை ” என்க,

‘இந்த ஏற்பாட்டிற்கு நன்றி சொல்ல கூறுகிறானோ’ என நினைத்தவளிற்கு இங்கு நடந்தவைகளுக்கு அவனிடம் நன்றி கூற அவள் மனம் மறுத்தது.

‘நான் என்ன இவருக்கு வெளியாள தாங்க்ஸ் சொல்ல’ என அவள் மனம் சிணுங்க அதனை மறுக்காது அப்படியே கண்களில் காட்டிட,

அதனை உணர்ந்த கதிரோ “ஹலோ முல்லை‌ மேடம், உங்க கைய கழுவ தேவையே இல்லை அந்த அளவுக்கு க்ளீன் பண்ணி கொடுத்துருக்கேன் அதுக்கு தான் தாங்க்ஸ்” என வெடித்த சிரிப்புடன் கூற,

அதில் சட்டென அவள் தன் கைகளை பார்க்க, அவன் கூறியது போல் இருந்ததில் வெட்கம் பிடிங்கி தின்றது அவளிற்கு. அதனை மறைக்கும் பொருட்டு,

“சரி சரி வாங்க, இந்த கேக்கை இங்க இருக்குற குழந்தைகளுக்கு கொடுக்கலாம்” என அவள் எழுந்து கொள்ள, உடன் மற்ற இருவரும்.

அவள் கூறியது போல், கேக்கினை வெட்டி அதற்கான பிளேட்டில் வைத்து, அங்கிருந்த குழந்தைகளுக்கு கொடுத்தவர்கள் கிளம்ப தயராக கதிர் கிளம்ப மறுத்து அடம் பிடித்தான்.

“என்னங்க இன்னும் என்ன?? இருட்டிடுச்சு வாங்க போகலாம்” என முல்லை அழைக்க,

“ம்ஹீம்!!!” என‌ முகத்தை திருப்பி கொண்டு கைகளை கட்டி மறுபுறம் திரும்பி கொண்டான் அவன்.

அவன் செய்ததை பார்த்து என்னவென்று புரியாவிட்டாலும் “ஆமா ம்ஹீம்….” என பதிலுக்கு நானும் முகத்தினை திரும்பி கைகளை கட்டி கொண்டு மறுபுறம் திரும்பி நின்றான் அத்வி.

கதிரின் முகதிருப்பம் எதற்கு என்று தெரியாது மண்டை காய்ந்தவள், அத்வியும் அவனை மாதிரியே செய்ததில் கடுப்பானவள்,

“டேய் உனக்கு என்ன? நீ எதுக்குடா முகத்தை திரும்புற” என அவள் அதட்ட,

“ம்ம்ம்,தெய்யாது கதி அங்கி கோவம் முல்யை மேல, ச்சோ நானும் கோவம் முல்யை மேல” என்றிட அதில் கதிருக்கே சிரிப்பு வந்து விட்டது. 

அதிலும் கதிரை போலவே அவனும் நின்றதில் இன்னுமே சிரிப்பு பீறிட்டது இருந்தும் அடக்கியவாறு நின்றான்.

“கோவமா என் மேலயே, சரி எதுக்கு குட்டிக்கு கோவம்” என அவள் கேட்க,

“தெய்யாதே!!!” என‌ கைகளை விரித்தது குழந்தை.

“தெரியாதா???அச்சோ எதுக்கு கோபம்னே தெரியாதா? சேம், சேம் பப்பி சேம்” என அவள் அத்வியை வம்பிழுக்க,

அதில் ரோசம் வர பெற்றவன் “எனக்கு தான் தெய்யாது, ஆனா கதி அங்கிக்கு தெய்யும்” என அவன் பெருமையாக கூற,

“இல்லை, இல்லை அவருக்கும் தெரியாது” என மீண்டும் அவள் தொடர,

“இல்லை ம்மா அங்கிக்கு தெய்யும்” என அவனும் மல்லுக்கு நிற்க,

“அப்போ அவர சொல்ல சொல்லுடா பாப்போம். அவருக்கு தெரியாதுடா அதான் சொல்லாம இருக்காரு” என அத்வியை சீண்டி விட,

அதில் முல்லையை தன் குட்டி கண்களால் முறைத்தவன் “அங்கி சொல்லுங்க உங்களுக்கு தெய்யும் தான சொல்லுங்க ” என அவன் அடம்பிடிக்க,

அதுவரை அவளின் பேச்சினை கவனித்து கொண்டிருந்தவன் அசந்து தான் போய் விட்டான். கடைசியில் அவன் வாயாலேயே என்ன கோபம் என்று கூறுமாறு செய்து விட்டாளே,

அதில் சிரித்தவன், “ஏண்டா மவனே, பூவுல இருந்து கேக்கு வரைக்கும் ரெடி பண்ணது நானு, அதை கையில பிடிச்சு கொடுத்த உனக்கு மட்டும் உங்கம்மா அவள ஹக் பண்ற வேலை கொடுப்பாளாம்.

எனக்கு மட்டும் எந்த வேலையும் இல்லையாம், கதிருனால இளிச்சவாயான் தான் போல” என அவன் தன் கோபத்தை சுட்டி காட்டிட முதலில் திகைத்தவளுக்கு அவனின் பேச்சில் சிரிப்பு தான் வந்தது.

‘இந்த வாய் மட்டும் இவருக்கு அடங்காது போல’ என அவள் ரசித்து நினைக்க,

“ஹக்” என்ற வார்த்தை மட்டும் புரிந்ததில் “ம்மா…அங்கிக்கும் ஹக் கொடுங்க, எனக்கு கொடுத்த மாதிரி குட் கேர்ள்ள நீங்க” என அத்வி அவளை தாஜா செய்ய,

அதில் மேலும் சிரிப்புடன் நின்றவளுக்கு கதிரை அவளாக அணைக்க வெட்கம் வந்து தடுக்க தடுமாறி சிவந்து நின்றாள்.

“ம்ம்ம் அப்புடி ஒண்ணும் கஷ்டப்பட்டு யாரும் ஹக் பண்ண வேண்டாம்” என அவள் தடுமாறியதில் முறுக்கி கொண்டு கூறியவன் அத்வியை தூக்கி கொண்டு அங்கிருந்து நகர,

அவன் நான்கடி தான் எடுத்து வைத்திருப்பான் தன் தயக்கத்தினை விடுத்து “கதிர்!!!” என்றவாறு அவனை நோக்கி வேகமாக முன்னேறியவள் அவனை பின்பக்கம் இருந்து மொத்தமாக அணைத்து நின்றாள்.

அவளாக மனதார கொடுக்கும் முதல் அணைப்பில் இருவருக்குமே சுகமான தாக்கம்.

“என்ன?” என அவன்‌ பொய்யாக முறுக்கி கொண்டு கேட்க,

“என்ன என்ன? ரொம்ப தான்” என அவன் குட்டு அறிந்து கேட்டவள் தன் கைகள் கொண்டு அவன் நெஞ்சின் மீது லேசாக அடித்திட,

அடித்த கையினை இழுத்து பிடித்து உள்ளங்கைகளில் அழுந்த இதழ் பதித்து தன் மீசையால் குறுகுறுப்பு காட்டினான் கதிர்.

அடுத்த நொடியே முல்லையின் தன்னையும் சேர்த்து அணைத்தவாறு கதிரின் நெஞ்சின் மீதிருந்த இன்னொரு கையினை தன் பிஞ்சு விரல்களால் இழுத்து கதிரை போலவே உள்ளங்கைகளில் முத்தம் பதித்தான் அத்வி.

முத்தமிட்ட அத்வி அமைதியாக இருக்காமல் கதிரை பார்த்து சிரிக்க அதில் சீண்டப்பட்டவன் “ஆரம்பிக்கலாமா??” என தனது புருவத்தை உயர்த்த,

அதுவரை இருவரது செயல்களிலும் அமைதியாக இருந்து அந்த உணர்வினை ரசித்து கொண்டிருந்தவள், கதிரின் கேள்வியில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்து பட்டென்று அவனிடம் இருந்து விலகிட,

அவளின் அணைப்பின் சுகத்தில் திளைத்திருந்தவன் அது பறி போனதில் “ப்ச்ச் முல்லை” என அழைத்தவாறு திரும்பி அவளை அணைக்க வர, அதில் அவனை முறைத்தவள்

“போதும் அடுத்து ரெண்டு பேரும் எதுக்கு அடி போடுறீங்கன்னு தெரியும், கிளம்புங்க ஒழுங்கா, வெளில இருக்கோம்ன்ற நெனப்பு கொஞ்சமாச்சும் இருக்கா??” என அதட்டியவள் முன் நடக்க,

அதில் அடக்க மாட்டாமல் சிரித்தவன் “கண்டுபிடிச்சிட்டியா முல்லை” என்றவாறு அவள் பின்னே நடந்தவன் எட்டி அவள் கைகளை பிடித்து தன்னுள்‌ அடக்கி “என்ன அவசரம், இப்படி வேகமா போற பயப்படாத இங்க எல்லாம் அந்த வெளையாட்ட விளையாட மாட்டோம். ரூம்ல போய் தான்!!!” என அவன் இழுக்க,

‘ஷ்ஷ்ஷ் கொஞ்ச நேரம் கூட பேசாம இருக்க முடியாது போலயே இவரால, பேசுற பேச்சுல காது எல்லாம் சிவந்து போய்டுது’ என நினைத்தவள் அமைதியாக அந்த சூழ்நிலையை ரசித்தபடி நடக்க,

அதை உணர்ந்தவனும் அமைதியாகி அவளுடன் நடந்திட,

‘அதிசயம் தான் அமைதியாகிட்டாங்க’ என்று அவள் நினைத்து முடிக்க கூட இல்லை,

“அப்பறம் முல்லை!!!” என அவன் வாய் திறந்திட,

“அதான பாத்தேன் இவரு அமைதியாகிட்டாளும்’ என நொடித்தவள் “மூச்..ரூம் போற வரைக்கும் பேசவே கூடாது” என அவன் இதழ்களில் விரலை பதித்து மிரட்டிட,

“நீயும் இப்புடியே வர்றதா இருந்தா, ஊர் வரைக்கும் கூட பேசாம வர்றேன்” என அவள் விரல்களை கண்களால் காட்டி பேச,

“உங்களை….” என்றவளிற்கு அடுத்து பேச வராது போக அவனை இழுத்து கொண்டு சிரிப்புடன் நடந்தவளின் முன் நந்தி போல குறுக்கே வந்து நின்றனர் ஹரிஷீம் சுரபியும்.

சட்டென தங்கள் முன் வந்து வழிமறைத்தவர்களை கண்டு முல்லை சற்றே தடுமாறிட அவள் இடையில் கை கொடுத்து தாங்கி நின்ற கதிர் ‘இதுங்க எங்க இங்க’ என யோசனையாக பார்த்தவன்.

ஹரிஷின் கண்கள் முல்லையை தழுவுவதை கண்டு கதிரின் பிடி இன்னும் இறுக அவளை நெருக்கத்தில் கொண்டு வந்தவன் ஹரிஷை முறைத்து பார்க்க,

சுரபியின் பார்வையோ முல்லையின் இடை தழுவிய கதிரின் கைகளிலேயே நிலைகுத்தி நின்றது.

 அதனை கண்ட முல்லை பயத்தில் தன்னையும் அறியாது, கதிரை நெருங்கி நின்று தன் இடை மீதிருந்த அவன் கைகளில் மீது தன் கைகளை வைத்து தன்னை நிலைப்படுத்தி கொள்ள,

பார்த்திருந்த சுரபிக்கு அப்போது அவளின் இடை மீது இருந்த கதிரின் கைகளையும், 

கதிரின் கைகள் மீது பதிந்திருந்த முல்லையின் கைகளையும் தட்டி பிடுங்கி பிய்த்து எரியும் ஆத்திரம் எழந்ததில்,,

தன்னையும் மீறி அவர்களை நோக்கி அடி எடுத்து வைத்தவளின் கைகள் அவர்களை நோக்கி வேகத்துடன் நீண்டிட,

அவளின் நோக்கம் புரிந்து ஓங்கி பலமாக ஒரு அறை வைத்து சுரபியின் கைகளை தட்டி விட்டவன்,

கோபத்தில் சிவந்த முகத்துடன் விழிகள் நெருப்பு கனலை கக்க…

“தொலைச்சிடுவேன் ராஸ்கல்!!” என தன்னையும் மீறி கர்ஜித்தவன் அடுத்த நொடி அந்த இடத்தினை விட்டு புறப்பட்டு இருந்தான்.

அவன் தட்டிய வேகத்தில், கைகள் வலி எடுக்க முகம் அவமானத்தில் சுருங்க,

‘ஓ, அவ மேல என் கை கூட பட விடமாட்டியோ’ என நினைத்த சுரபியின் பார்வை செல்லும் அவன் மீது ஆத்திரத்துடன் படிந்தது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
43
+1
1
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அத்தியாயம் படிக்க ஆரம்பிச்சதுல என் முகத்துல இருந்த சிரிப்பு மாறவே இல்ல. அவ்வளவு குறும்பு கதிரும் அத்வியும் பண்றாங்க. ஆனா அந்த ஹரீஷ் சுரபியை பார்த்து எனக்கும் முகம் சுருங்கிருச்சு. எங்க இருந்து தான் வருவாங்களோ