Loading

அத்தியாயம்-17

 

அவன் அருவத்தைக் கண்டு உறைந்து நின்றவளுக்குப் பேச்சே இல்லை. மூச்சடைப்பதைப் போல் உணர்ந்தவள் அப்படியே மூர்ச்சையாகி விழ, கீழே விழுந்தவளை வருத்தம் தோய்ந்த விழிகளுடன் பார்த்தது மதிமகிழனின் ஆத்மா.

 

நீண்ட நெடிய நிமிடங்களுக்குப் பின் கண் விழித்தவளுக்குத் தன்னை சுற்றி நடப்பவற்றை கிரகிக்க இயலவில்லை. மணியைப் பார்க்க அது இன்னும் அதிகாலை நான்கைக் கூடத் தாண்டவில்லை. 

 

நடந்த நிகழ்வுகளில் பயந்து போனவள் சுற்றி முற்றி கண்களைச் சுழற்றிப் பார்க்க,

 

“நான் இங்க தான் இருக்கேன். ப்ளீஸ் என்னைப் பார்த்துப் பயப்படாதடி” என்ற குரல் மட்டும் கேட்டது.

 

அந்தக் குரலில் இருந்த பரிதவிப்பு அவளை என்ன செய்ததோ, கண்களில் கண்ணீருடன் “இ..இது கனவில்லையா?” என்றாள். 

 

“ஜானுமா.. இது எதுவும் கனவில்லை. எல்லா விளக்கத்தையும் நான் பிறகு சொல்றேன். இப்ப என்னோட உடம்பை காப்பாத்தணும். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” என்று அவன் கூற, 

 

“எ.. என் முன்னாடி வா” என்றாள். 

 

மெல்ல அவள் முன் அவனது அருவம் தோன்ற, பயமும் பரிவும் கலக்கமும் கலந்த பார்வையோடு அவனை ஏறிட்டாள். 

 

“ஜானுமா.. நான் சாகலைடி” என்று அவன் கூற, 

 

“இ..இது எப்படி?” என்றாள்.

 

“அந்த விளக்கம் எல்லாம் அப்பறம் கேளு. இப்ப என்னோட உடம்பை அடக்கம் பண்ணிடாம தடுக்கணும். என்னோட உடம்பிலிருந்து என் ஆத்மா தனியா பிரிஞ்சு வந்துடுச்சு. திரும்ப என் உடம்புக்குள் என்னால போக முடியலை. இது எதனாலனு எனக்குத் தெரியலை. ஆனா திரும்ப எதும் வழி கிடைச்சாலும் உள்ள போக என் உடம்பு வேணும். எதாவது செஞ்சு என் பாடியை காப்பாத்து” என்று அவன் கூற, 

 

“என்னடா நீ புதுசு புதுசா சொல்ற” என்றாள்.

 

“அடியே.. உன்னை வெச்சுகிட்டு ஆவாது. முதல்ல உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிக்கிட்டு மாடிக்கு வா” என்று அவன் கூற, 

 

“அவங்க எதுக்கு?” என்றாள். 

 

“கேள்வியா கேட்டனு வை. எங்க பாட்டி சொன்ன போல உன்னையும் மேல் லோகத்துக்கு இழுத்துக்கிட்டு போயிடுவேன். போடி” என்று கத்தினான்.

 

அதில் பதறிப் போனவள் தன் அறையை விட்டு வெளியேற, மதியும் மாடிக்குச் சென்றான். மேலே மாடிக்கு வந்தவன் எண்ணம் இரண்டு நாட்களுக்கு முந்தைய நாள் இரவில் சென்று நின்றது.

 

இரவு யாவருக்கும் ஜான்விகாவின் வீட்டில் தான் உணவு ஏற்பாடாகி இருந்ததால் மதிமகிழனையும் அழைத்திருக்க, அதன்படி அவன் வந்து சேர்ந்தான். 

 

விஷ்வேஷ் தன் மனைவியான ‘அத்தை பெற்ற பைங்கிளி’ அமிர்தப்ரியாவுடன் முதலாவதாக ஆஜர் ஆயிருந்தான்.

 

அவனையடுத்து துருவன், அவனது அண்ணன் வித்வன் மற்றும் ஐந்து மாத சூழ் தாங்கிய அண்ணி கீர்த்தனா ஆகியோர் வந்துவிட, அகநகை மற்றும் அவளது தங்கை இளநகையும் வந்தனர்.

 

சில நிமிடங்கள் பேச்சில் நகர, “ஏ அகா எங்க அவரு வரலையா?” என்று அந்த அவரில் ஒருவித அழுத்தத்துடன் விஷ்வேஷ் வினவ, 

 

பதட்டத்துடன் கண்கள் அகல அவனைப் பார்த்தவள், ஓரக்கண்ணால் தன் தங்கையைக் காட்டினாள்.

 

அதில் யாவருக்கும் ஒருநொடி பதற்றம் தொற்றிக் கொள்ள, தனது அலைபேசியில் தோழிக்கு ஏதோ விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த இளா அசாத்திய அமைதியில் நிமிர்ந்து பார்த்தாள். 

 

யாவரும் அவளைப் பார்ப்பதில் “அ..அது ஃப்ரண்டுக்கு ஒரு டவுட். அதான் கிளியர் பண்ணிட்டு இருந்தேன்” என்று அவள் கூற, 

 

“ம்ம்.. டாக்டர் மேடம் பயங்கர பிஸி தான்” என்று ஜான்விகா சமாளித்தாள்.

 

“இன்னும் டாக்டருக்குப் படிச்சே முடிக்கலை. பிறகு பேசிப்போம்” என்று விஷ் கேலி செய்ய, 

 

“நான் டாக்டர் ஆனா முதல் ஊசி உங்களுக்குத் தான் போடுவேன்” என்றாள். 

 

அதில் யாவரும் சிரிக்க, அகர்ணனும் வந்து சேர்ந்தான். 

 

வந்ததும் அவன் கண்கள் காதலியைத் தொட்டுத் தழுவ, அவளும் அவனைத்தான் பார்த்தாள். 

 

துருவன் இரண்டு முறை “அஹம் அஹம்” என்று இரும, சட்டெனக் கீழே குனிந்து தடுக்கி விழும்படி ஏதும் இருக்கின்றதா என்று அகர்ணன் பார்த்துக்கொண்டான்.

 

அதில் ஜான்வி விஷ் மற்றும் துருவன் சிரித்துக் கொள்ள, “நான் தான் லேட்டா?” என்று அகர்ணன் வினவினான். 

 

“ஆமா அண்ணா. பசிக்குது வாங்க” என்று யாவரையும் முந்திக் கொண்டு இளாவின் பதில் வந்து விழ, 

 

கோரசாக அனைவரும் “அண்ணாவா?” என்றனர்.

 

அதில் சொத்தெனத் தலையில் அடித்துக் கொண்ட அகா ‘நல்லவேளை ஆத்வி அத்தையும் ஜகன் மாமாவும் கிட்சென்ல இருக்காங்க’ என்று நினைத்துக் கொண்டு யாவரையும் முறைத்து விட்டுத் திருதிருவென விழிக்கும் தங்கையைப் பார்த்து, ‘இவகிட்ட மட்டும் விஷயத்தைச் சொல்லி வைக்கணும். குட்டி வாண்டு படுத்தி எடுக்குறா’ என்று புலம்பியவண்ணம் “சாப்பிட வாங்கடா” என்று எழுந்தாள்.

 

அனைவரும் பேச்சும் சிரிப்புமாக உண்டு முடிய, “ஏ ரொம்ப மாசமாச்சுல.. கார்ட்ஸ் விளையாடலாம்னு நான் கொண்டு வந்தேன்டா” என்று அகா தனது பையிலிருந்து அந்த மாயசீட்டுக் கட்டினை எடுத்தாள்.

 

சோகமான முகபாவத்துடன், “நான் படிக்கப் போறேன் அகா. நீ விளையாடிட்டு வரியா?” என்று இளா வினவ, 

 

யாவருக்கும் பாவமாக இருந்தது அவளைப் பார்க்க. 

 

மருத்துவம் பயில்பவளுக்கு படிப்பதற்கே நேரம் ஓடிவிடுகிறது. இங்கு பேசிச் சிரித்து உணவு வேளைக்கென்று அவள் இவ்வளவு நேரம் செலவு செய்ததே அதிசயம் தான் என்றாலும் அவளது வாடிய முகம் காண இயலவில்லை.

 

“ஒரு ஆட்டம் மட்டும் விளையாடிட்டு போ” என்று துருவன் கூற, 

 

அவள் யோசனையான பாவத்தில் முகத்தை வைத்துக் கொண்டாள். 

 

“பத்து நிமிஷம் தான் ஆகும். அதுல ஒன்னும் ஆகிடாது. நிறையா பேர் இருக்கோம்ல. சீக்கிரம் முடிஞ்சுடும்” என்று அவன் கூற, 

 

சற்று யோசித்துப் பின் சரியென்று தலையசைத்தாள்.

 

எல்லோரும் மாடியேற அப்போதே அகா மற்றும் அகர்ணனைப் பார்த்தவன், “ஸ்ஸ்..” என்று தன் நெற்றியில் கைவைத்து, “சாரிப்பா” என்றான். 

 

தோழர்கள் நால்வரும் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி ராஜின் காரியதரசி தான் அகர்ணன். முன்பாவது தினமும் வேலையிடத்தில் இருவராலும் சந்தித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் தற்போது ராஜ் தங்களின் வேறு கிளை நிறுவனத்தைக் கவனிக்க இருப்பதால் அங்கே தான் அகர்ணனின் வேலையும் என்றானது. 

 

ஆதலால் இப்படியான சில தருணங்களில் தான் அவர்களால் சந்திக்கவோ பேசவோ முடிகின்றது என்னும்போது இவர்கள் காதல் பற்றித் தெரியாத இளநகையை அங்கு இருக்க வைத்துவிட்டோமே என்று துருவன் மன்னிப்பு வேண்டினான்.

 

அகநகை ஏதோ பேசுவர, “அவ என் அவியோட தங்கச்சி. எனக்கு என் மச்சினி, பொண்ணு மாதிரிடா. பாவம் ஏற்கனவே அவ நம்மகூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலைனு வருத்தத்துல இருக்கா. அவ இப்ப இங்க நம்மகூட இருக்குறது எனக்குச் சந்தோஷம்தான். நீயா எதையாவது யோசிக்காத” என்று அகர்ணன் கூறினான்.

 

தன்னவனைக் கண்டு காதலாய் ஒரு புன்னகை புரிந்தவள், துருவனைப் பார்த்து “வாடா” என்றுவிட்டு தன்னவனைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டுச் செல்ல, துருவன் தோளில் கை போட்டபடி நின்ற அகர்ணன், 

 

“சீக்கிரம் என் மாமனார்கிட்ட பேசணும்” என்றான்.

 

“ஐயா சாமி.. தோள்ல இருந்து கைய எடுங்க‌. உடைஞ்சிட போகுது. உங்க மாமனார்கிட்ட பேசுங்க இல்ல தூக்கிட்டு போய்த் தாலிய கட்டுங்க. அது உங்க பாடு” என்றுவிட்டு துருவன் மேலே செல்ல, சிரித்தபடி தானும் சென்றான்‌. 

 

பிறைநிலவும் மொட்டை மாடியின் தென்றல் காற்றும் அவர்களது சீட்டுக்கட்டும் என சில நிமிடங்களில் முதல் ஆட்டம் முடிய, புறப்பட எழுந்த இளா அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு படிவரை சென்றாள்.

 

ஏதோ யோசித்து சட்டெனத் திரும்பியவள், “மாமா” என்றழைத்தாள். 

 

அவள் அழைப்பில் சட்டென யாவரும் திரும்பவும், அதில் லேசாகச் சிரித்தவள், “அகர்ணன் மாமா” என்று அழைக்க,  

 

அனைவர் கண்களும் வட்டமாய் விரிந்தது. 

 

அதே புன்னகையுடன், “தேங்ஸ் மாமா” என்று அவள் கூற, 

 

அகர்ணன் முகத்தில் மென்மையான புன்னகையை அவளுக்குப் பதிலாய் கூறி, ஒற்றைக் கை நீட்டி அவளை அழைத்தான். 

 

அவனிடம் வந்தவள் அவனுக்கும் அகாவுக்கும் இடையில் அமர, 

 

“ஒட்டுக் கேட்டியாடி?” என்று அகா வினவினாள்.

 

அக்காளை முறைத்த அந்தச் சுட்டி வாண்டு, “எனக்கு ஏற்கனவே தெரியும்” என்று யாவரையும் அதிர வைத்தாள். 

 

“எப்போ?” என்று மதி வினவ, 

 

“மாமாவை அகா ஃப்ரண்டுனு கூட்டிட்டு வந்தப்பவே” என்றாள். 

 

“அப்பவே தெரியுமா?” என்று அமிர்தா ஆச்சரியப்பட, 

 

“ம்ம்..” என்றவள், “உனக்கு என்கிட்ட பொய் சொல்ல வரலை அகா. பெட்டரா ட்ரை பண்ணு” என்று கேலி செய்ய, 

 

“வாண்டு” என அவள் தலையிலேயே கொட்டினாள்.

 

“ஆனா நைஸ் செலெக்ஷென்” என்று அகர்ணனைப் பார்த்தவள், 

 

“அகா என்கிட்ட எதையும் மறைக்கமாட்டா. இதை மறைச்சிருக்கானா அதுக்கு வேலிடான காரணம் இருக்கும். அவ்வளவு உறுதியான காரணம் இருக்கும்போது நீங்களும் அந்த உறுதிக்கு பாத்திரமாதான் இருப்பீங்கனு தெரியும்” என்று கூற, 

 

இத்தனை நாட்கள் சிறுபிள்ளையாய் தங்கள் முன் தெரிந்த இளாவின் இந்த முதிர்ந்த பேச்சில் அனைவருக்கும் ஆச்சரியமே. 

 

“கண்டிப்பா குட்டி” என்றவன், “போய்ப் படுடா. லேட்டாகுது” என்று கூற, 

 

சிறுதலையசைப்புடன் சென்றாள். 

 

என்னதான் அகாவின் தாய் தந்தையர் காதலுக்கு எதிர்ப்பு கூறமாட்டர் என்று அகாவுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலும் பெண்ணைப் பெற்றவர்கள் முன்பு சென்று உங்கள் பெண்ணை எனக்கு மணம் முடித்து வையுங்கள் என்று கேட்கும்போது தனது தகுதி அதற்கேற்றார் போல் இருக்க வேண்டும் என்று அகர்ணன் கருதினான். 

 

‘எனக்குனு ஒரு நிலையில் நான் செட்டில் ஆன பிறகு முறையா வந்து நானே பேசுறேன்’ என்று அவன் கூறியிருக்க, அந்த நேர்மையான எண்ணத்தில் இன்னுமின்னும் அவன்மீது காதல் வயப்பட்டாள், பெண்.

 

மீண்டும் விளையாட்டு மும்முரம் பெற, “ஏ.. நியூஸ் பார்த்தீங்களா? பல்ஸ் ரேட் அடங்கி இறந்து போயிட்டார்னு சொன்ன ஒருத்தர் அரைமணி நேரம் கழிச்சு மீண்டும் உயிர்ப்பெற்று வந்திருக்காரு” என்று மதி கூறவும், 

 

“ம்ம்..பாத்தேன். ஆனா இதெல்லாம் நம்புற மாதிரியா மகி இருக்கு?” என்று ஜான் வினவினாள்‌.

 

“நம்பவே முடியாத என்ன என்னமோ நடந்திருக்கு” என்று அர்த்தமுள்ள அழுத்தத்துடன் அகா கூற, 

 

காலம் கடந்த தங்கள் பயணத்தை நினைத்துப் பார்த்துச் சிலிர்த்து அடங்கிய ஜான், “ம்ம்.. உண்மை தான்” என்றாள்.

 

“அப்படினா அரைமணி நேரம் அவங்க ஆத்மா உலகத்துக்குள்ளயே தான சுத்திக்கிட்டு இருந்திருக்கும்? ஏன் மகி மேல் லோகத்துக்கும் பூமிக்கும் எவ்வளவு டிஸ்டென்சு? உங்க உளவியல்ல இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்களா?” என்று ஜான் வினவ, 

 

“நான் சைக்காலஜி தான் படிச்சேன். பேயோட்டுறதுக்கில்ல. விட்டா என்னையவே பார்டைமா செத்துட்டு ஆராய்ச்சி பண்ணி பார்த்துட்டு வரச் சொல்லுவ போல” என்றான்.

 

“நம்ப முடியாது மதி. இவ சொன்னாலும் சொல்லுவா” என்று விஷ் கூற, 

 

“அதானடா.. உன் ஃப்ரண்டு இல்லாத எல்லா குட்டிக்கரணமும் என்னை அடிக்க வச்சுட்டா. இன்னும் இது ஒன்னு தான் பாக்கி” என்று மதி கூறினான். 

 

“நாங்க ஸ்கூல் படிக்கும்போது பிரண்ட்ஸ் கிட்ட பேசிப்போம். நீ செத்துபோயிட்டு பேயா வந்தா எனக்கு எக்ஸாம்ல ஆன்ஸர் சொல்லி ஹெல்ப் பண்ணுனு. இப்ப எனக்கு எழுத எந்த எக்ஸாமும் இல்லை தான். ஆனா நீ ஏன் எதும் புதுசா எதாவது கண்டுபிடிச்சு யாருக்கும் ஹெல்ப் பண்ண கூடாது? பார்டைமா சாவுறதுனாலும் ஒரு பாயிண்டோட சாவனும்ல?” என்று ஜான் வினவ, 

 

“அடியே நெசமாவே நீயே எனக்குச் சமாதி ரெடி பண்ணிடுவ போல. போடி அங்குட்டு” என்றான்.

 

மேலும் சிரிப்பும் கலகலப்புமாக நேரம் கழிய யாவரும் அவரவர் வீட்டுக்குப் புறப்பட்டனர்.

 

தன்னவளுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை வழங்கிய மதியும், தன் வீட்டை அடைந்து உறங்கிவிட, மறுநாள் பொழுதும் அழகாய் புலர்ந்தது. 

 

எப்போதும் போல் சிரித்த முகமாக மருத்துவமனைக்குக் கிளம்பிச் சென்றவன் மாலை நேரம்வரை நன்றாகவே இருந்தான்.

 

திடீரென்று தலை சுற்றுவது போன்ற உணர்வு எழ, கழிவறை சென்று முகம் கழுவி வரலாம் என்று எழுந்தான். எழுந்தவன் நாசியை வித்தியாசமான மணம் கவர, தங்க நிறத் துகள்கள் அவன் மேல் பொழிவதைப் போன்றிருந்தது. 

 

அவற்றைக் கிரகிக்கும் முன் அவன் விழுந்திட, சில வினாடிகளில் தன் முன் கிடக்கும் தன் உயிரற்ற உடலை அதிர்ச்சியோடு பார்த்து அருவமாய் நின்றான், மதிமகிழன்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இவன் என்ன அவ நண்பர்களையும் கூட்டிட்டு வர சொல்றான். இவன் கிட்ட மாட்டிட்டு அவங்க தான் முழிக்கனும் போல.

    இளாவை துருவ் அக்கறையா கவனிச்சுக்குறான்.

    அகர்ணன் எதுக்கு மாமனார தூக்கிட்டு போய் தாலி கட்ட போறான் துருவ். 🤣

    மாய சீட்டுக்கட்டுகளை கையில் வைத்து விளையாடியதன் விளைவா! ✨

    நீயா நீயாவே தான் வாய விட்டு பார்ட் டைம் டெட் பாடி ஆக ஆசைபட்டியா மகி. 🫢

    தனக்கு தானே குழி தோண்டி படுத்த மாதிரி தனக்கு தானே சூனியம் வச்சிருக்கான்.