
சம்பூர்ணாவின் அலுவலகத்தின் வாசலுக்கு வந்து நின்றான் மித்ரன். பைக்கை பார்க்கிங்கில் நிறுத்தி இறங்கியவன் கைபேசியை எடுக்க, அதே நேரம் சம்பூர்ணாவிடம் இருந்து அவனுக்கு செய்தி வந்து விழுந்தது.
“நேரா மேல வா..” என்று அனுப்பி வைத்திருந்தாள். அவன் வந்ததை பார்த்து விட்டாள்.
செய்தியை படித்தவன் பல்லைக்கடித்தான். ‘இவள இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன்’ என்று சபதம் எடுத்துக் கொண்டு, உடனே அலுவலகத்தினுள் நுழைந்தான். ஆட்கள் நிறைய இருந்தாலும், எல்லோரும் தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
யாரும் அவனை கவனிக்கவும் இல்லை. யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவனும் யாரிடமும் கேட்க நினைக்கவில்லை. மேலே செல்ல லிஃப்ட் எங்கே இருக்கிறது என்று மட்டுமே தேட, சம்பூர்ணாவின் அசிஸ்டன்ட் அவனை நோக்கி வந்தான்.
“சார்.. இப்படி வாங்க” என்று கூறி மித்ரனை அழைத்துச் சென்றான்.
லிப்ட்டில் நுழைந்ததும் பட்டனை அழுத்தி விட்டு, அசிஸ்டன்ட் வெளியேறி விட, கதவு மூடிக் கொண்டது. மித்ரன் மட்டும் தனியாக நின்றான்.
மித்ரனுக்கு கோபத்திலும் பதட்டத்திலும் ஒரு நிலையில் நிற்க முடியவில்லை. புவனனுக்கு எதாவது ஆனால் சம்பூர்ணாவை கொல்லவும் தயங்க மாட்டான். ஆனால் அவனை பத்திரமாக காக்க வேண்டும் என்பது தான் இப்போது முக்கியமாக இருந்தது.
லிஃப்ட் கதவு திறந்ததும் வெளியேறியவன், ஒரு நொடி நின்றான். அங்கு யாருமே இல்லை. அமைதியாக இருந்தது. கதவுகளும் பூட்டப்பட்டு இருந்தது.
சுற்றியிருந்த அறைகளில் சம்பூர்ணாவின் பெயர் பலகை இருந்த அறையை பார்த்து விட்டு, வேகமாக அதை நோக்கிச் சென்றான்.
கதவை திறந்து புயல் போல் நுழைந்தவனை, சம்பூர்ணா புன்னகையுடன் வரவேற்றாள்.
“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? மரியாதையா புவனன வெளிய விட சொல்லு.. இல்ல உன்னை இங்கயே கொன்னுடுவேன்” என்று உள்ளே நுழையும் போதே எகிறினான் அவன்.
“நீயா வந்துருந்தா நான் ஏன் இத பண்ண போறேன்?” என்று சாதாரணமாக பதில் சொன்னாள் அவள்.
அவன் கோபம் அவளை எள்ளளவும் பாதிக்கவில்லை. அவளது அமைதி அவனை மேலும் கடுப்பாக்கியது.
“இப்ப அவன வெளிய விட சொல்ல போறியா இல்லையா?” என்று குரலை உயர்த்தினான்.
“வந்தத பத்தி பேசுவோம். உன்னை எதுக்கு கூப்பிட்டேன் தெரியுமா? கல்யாண விசயத்த பேச.. நீ கல்யாணத்துக்கு சரினு சொல்லு.. மிச்சம் தன்னால நடக்கும்.”
இதைக்கேட்டு மித்ரனின் கோபம் எல்லையை தொட்டது.
“உன்னை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கைய இழக்கவா? அதுக்கு வேற ஆள பாரு”
“அதான ப்ளானே.. உன்னை சும்மா விட்டுருவேன்னா நினைச்ச? இப்ப நீ ஓகே சொல்லனும்.. இல்லனா…”
“இல்லனா?” என்று கேட்டவன் குரலில் கோபக்கடலே அடங்கியிருந்தது.
“மித்ரு.. நீ தேவையில்லாம என்னை சீண்டி விடுற.. அப்புறம் எதுவுமே நல்லதா முடியாது”
“அப்படி கூப்பிடாதடி.. இன்னொரு தடவ கூப்பிட்ட.. உன்னை கொன்னுடுவேன்” என்றவனுக்கு உண்மையில் அவளை கொல்லும் வெறி தான் இருந்தது.
“அப்ப என்னங்க.. ஏங்கனு கூப்பிடவா? புருஷன தமிழ் நாட்டுல அப்படி தான கூப்பிடுறாங்க?” என்று நக்கலாக கேட்டு வைத்தாள்.
மித்ரன் கோபத்தில் மேசையிலிருந்த பேனா வைத்திருந்த ஸ்டான்டை தூக்கி கீழே போட்டு உடைத்தான். அவளை உடைக்க முடியாத வெறி. பரிதாபமாக பேனா அனைத்தும் தரையில் சிதறி விழுந்தது.
சம்பூர்ணா கீழே விழுந்ததை எட்டிப் பார்த்து விட்டு உதட்டை பிதுக்கினாள்.
“அவ்வளவு தானா?” என்றவள் குரலில் சலிப்பு மட்டுமே இருந்தது.
“இப்ப புவனன விட முடியுமா? முடியாதா?”
“நீ சரினு சொல்லு மித்ரு.. அண்ணன் மேல இவ்வளவு பாசம் இருக்குனா இன்னேரம் நீ சம்மதிச்சுருக்க வேணாம்? நீ லேட் பண்ண பண்ண என் மூளை நிறைய யோசிக்குது.. உன் அண்ணனோட சேர்த்து உன்னையும் உள்ள தூக்கி போட்டா உன் குடும்பம் என்னாகும்? உன் பாட்டிக்கு வேற உடம்பு சரியில்ல. அம்மா அண்ணி.. உங்க ரெண்டு பேரோட வருமானம் இல்லனா குடும்பத்த எப்படி நடத்துவீங்க? ப்ச்ச்.. நிறைய யோசிக்கிறேன்ல? பரவாயில்ல.. சீக்கிரமே நீ சரினு சொல்லிட்டா.. நான் இதெல்லாம் பண்ண மாட்டேன்.”
“என் குடும்பத்து மேல கை வைச்சா? நான் உன்னை சும்மா விட மாட்டேன் சம்பூர்ணா.. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு”
“நீ சரினு சொல்லிட்டா நானும் உன் வீட்டுல ஒரு மருமக மித்ரு. நாம ஒரே குடும்பம். நீ அத சொல்ல மாட்டேங்குறியே? அதான பிரச்சனை.”
“பொண்ணாடி நீ? பேய்.. பிசாசு.. ராட்சசி.. ஏன்டி என் உசுர வாங்குற? உன் விளையாட்டுக்கு வேற எவனும் சிக்கலயா? விஷால் வாழ்க்கைய அழிச்ச.. செந்தில் மனச உடைச்ச.. இப்ப நான் தான் கிடைச்சனா?’
“இங்க பாரு.. சும்மா பொண்ணுங்க மாதிரி கம்ப்ளைண்ட் பண்ணாத. ரீசண்ட்டா பொண்ணுங்களே கம்ப்ளைண்ட் பண்ணுறது கிடையாது. நேரா ரிவேன்ஜ் தான். சோ டக்குனு முடிவுக்கு வா.. உன் அண்ணன காப்பாத்தனும்ல? இல்ல.. நான் அடுத்து யோசிக்கவா?” என்றவள் கொஞ்சமும் கோபப்படுவதாக இல்லை.
மித்ரன் உடனே ஆழ மூச்செடுத்து அமைதியானான். சம்பூர்ணாவை பார்த்தான். இது வரை எந்த பெண்ணையும் அவன் தவறாக நினைத்தது இல்லை. மனித குலத்தில் தவறாக பிறந்த அரக்கி இவள் என்று நினைத்தது உண்டு. இன்று அதை நிரூபித்து விட்டாள்.
அவளுக்கு இருக்கும் திமிரை அவன் தான் அடக்க வேண்டும் என்றால் அதையும் செய்து விட வேண்டியது தான்.
“ஓகே?” என்று சம்பூர்ணா தலை சாய்த்து கேட்க, “சரி..” என்று தலை நிமிர்த்தி சொல்லி விட்டான்.
“கல்யாணம் பண்ணிக்கிறேன். புவனன வெளிய விட சொல்லு” என்ற போது, புயலுக்கு முன்பு வரும் அமைதி அவனது குரலில்.
சம்பூர்ணா பளிச்சென புன்னகைத்து, “பேச்சு மாற மாட்டியே?” என்று கேட்டாள்.
மறுப்பாக தலையசைத்தான்.
“ப்ராமிஸ்?”
“எங்கப்பா மேல ப்ராமிஸ் போதுமா? அவன வெளிய விட சொல்லு” என்று எரிந்து விழுந்தான்.
அதிக நேரம் அமைதியை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
“குட்..” என்றவள் எழுந்து மேசையை சுற்றி அவனருகே வந்தாள்.
“அப்போ இங்க கிஸ் பண்ணு.. கல்யாணம் கண்ஃபார்ம் ஆகிடுச்சுனு முடிவு பண்ணிக்கலாம்” என்று கன்னத்தைக் காட்டினாள்.
“வாட்? ஆர் யூ…” என்று மித்ரன் அதிர, “கமான்.. கல்யாணம் பண்ண போற பொண்ண கிஸ் பண்ண மாட்டியா? டூ இட்..” என்று அடம்பிடித்தாள்.
மித்ரனுக்கு அவள் கழுத்தை பிடித்து நெரிக்கும் வெறி வந்தது. இப்படியே கொன்று விட்டால் என்ன? என்று கையை தூக்கியவன், பிறகு முடிவை மாற்றி அவளது கழுத்தை பிடித்து இழுத்து, முத்தமில்லாத முத்தமாக அவனது உதடுகளை அவள் கன்னத்தில் கடுப்போடு புதைத்து எடுத்தான்.
அவன் முத்தமிட்டதை கைபேசியில் அவள் படமாக எடுத்துக் கொண்டதை அதன் பிறகு தான் கவனித்தான். உடனே அவளை பிடித்து தள்ள, அசையாமல் நின்றாள்.
“என்ன இது?”
“எவிடன்ஸ்.. பேச்சு மாறிடக்கூடாதுல?” என்று சிரித்து விட்டு மீண்டும் நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“இப்ப சொல்ல போறியா இல்லையா?” என்று மித்ரன் கத்த, சம்பூர்ணா கைபேசியில் எண்ணை அழுத்தி காதில் வைத்தாள்.
“ஹலோ?”
“எஸ் மேம்”
“வேலை முடிஞ்சதா புவனன்?”
“முடிஞ்சது மேடம்..வாங்கிட்டேன்”
“வக்கீல் கிட்ட கொடுத்துட்டு உங்க வேலைய பாருங்க”
“ஓகே மேடம்”
வைத்து விட்டாள்.
“முடிஞ்சது” என்று தோளை குலுக்கினாள்.
மித்ரன் குழப்பத்தோடு பார்த்தான்.
“என்ன சொன்ன?”
“புவனன் போன வேலை முடிஞ்சதாம்.. வந்துடுவாரு உன் அண்ணன்”
மித்ரன் அப்போதும் புரியாமல் பார்க்க, சம்பூர்ணா சிரிப்போடு நாற்காலியில் இப்படியும் அப்படியும் ஆடினாள்.
“இன்னும் புரியலயா? உன் அண்ணன ஒரு எஃப்.ஐ.ஆர் காபி வாங்குறதுக்காக போலீஸ் ஸ்டேஷன் போக சொன்னேன்”
மித்ரனுக்கு அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உலகமே புரியவில்லை.
“பொய் சொல்லிருக்க.. யூ ப்ளடி…” என்று ஆரம்பித்தவன் அடுத்து பேசாமல் பல்லைக்கடிக்க, “திட்டேன்.. ஏன் நிறுத்திட்ட?” என்று கேட்டு வைத்தாள்.
“இப்படி பண்ண உனக்கு அசிங்கமா இல்ல? பிடிக்காத ஒருத்தன கல்யாணம் பண்ண துடிக்கிற? நீயெல்லாம் பொண்ணா?”
“ஏன்? எப்பவும் பசங்க தான் பிடிக்காதவள கல்யாணம் பண்ணி அவள அழ வைக்கனுமா? திருப்பி செய்ய கூடாதா? உன் பொண்டாட்டி நான்னு சொல்லும் போதெல்லாம் உனக்கு வலிக்கும்ல மித்ரு? ப்ச்ச் பாவம் நீ”
மித்ரன் இருந்த கோபத்திற்கு அந்த மேசையிலிருந்த தொலைபேசியை தூக்கிப் போட்டு உடைத்தான்.
சம்பூர்ணா அதை சலிப்பாக பார்த்தாள்.
“நீ என்ன அஞ்சு வயசு பையனா? கோபம் வந்தா டாய்ஸ தூக்கி போட்டு உடைக்கிற மாதிரி உடைக்கிற? போ.. போய் உன் வீட்டுல கல்யாண விசயத்த சொல்லு.. அப்படியே நீ ஏமாந்த கதையையும் சொல்லு.. எல்லாரும் பரிதாபப்படட்டும்”
அவளது நக்கல் பேச்சு அவனை வெறியேற்றியது. ஆனால் இன்னமும் சண்டை போட்டுக் கொண்டு நிற்க பிடிக்கவில்லை.
“என் லைஃப் உன் கிட்ட மாட்டிருச்சுனு நினைக்காத.. உன் லைஃபும் தான் என் கிட்ட மாட்டியிருக்கு.. அத என்ன செய்யனும்னு நான் பார்க்குறேன்” என்று விட்டு வந்ததை விட அதிகமான வேகத்தில் வெளியேறி விட்டான்.
சம்பூர்ணா சலிப்பாக தலையசைத்தாள்.
“வருத்தப்படுவ யோகமித்ரன்.. இன்னும் அதிகமா வருத்தப்படுவ..” என்றவள் உடனே சுதாராணியை அழைத்தாள்.
“பாட்டி..”
“என்னமா?”
“யோக மித்ரனுக்கும் எனக்கு கல்யாண ஏற்பாட ஆரம்பிங்க. அவங்க வீட்டுல பேசுங்க. மிச்சத்த வீட்டுல வந்து சொல்லுறேன்” என்று விட்டு வைத்து விட்டாள்.
அடுத்து என்ன? என்று அவளது மூளை யோசிக்க ஆரம்பித்து விட்டது. மித்ரன் சம்மதித்து விட்டதால் இந்த திருமணம் பிரச்சனை இல்லாமல் நடந்து விடுமா? சந்தேகம் தான்.
அவனது வீட்டில் அவன் உண்மையை சொல்லக்கூடாது என்பதற்காக வெறுப்பேற்றி அனுப்பி விட்டாள். மீறி விசயத்தை சொல்லி விட்டால்? அடுத்த பிரச்சனை அவன் வீட்டிலிருந்து தான் வரும்.
அதை யோசிக்கும் போதே கண் சிதறிக்கிடந்த பேனாக்கள் மீது சென்றது.
“இதே மாதிரி உன் வாழ்க்கையையும் சிதறடிக்குறேன் மித்ரு.. இல்ல.. இனி நீ எனக்கு மித்ரு இல்ல.. ஹஸ்பண்ட்” என்றவளுக்கு சிரிப்பு வந்தது.
“நைஸ் ஜோக்” என்று சிரித்துக் கொண்டாள்.
திருமண பந்தத்தில் எப்போதுமே இருமணங்கள் இணைவதில்லை. சில நேரம் நிர்பந்தங்களும் வியாபாரங்களும் தான் இணைகிறது. அதையும் தாண்டி கட்டாயமும் வெறுப்பும் கைகோரக்கும் திருமணமும் உண்டு. ஆனால் அனைத்துக்கும் ஒரே பெயர்!!
வாசம் வீசும்.

