Loading

அத்தியாயம் – 31

​”இவ்வளவு விஷயம் நடந்திருக்கு, என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம விட்டுட்டியேடா?” வித்தார்த் சொல்லொணா வருத்தத்துடன் கேட்க, விக்ராந்தால் “என்னை மன்னிச்சிடுடா…” என்பதைத் தவிர வேறெதையும் சொல்ல முடியவில்லை.

​”எனக்கு இப்போ என்ன சொல்றதுன்னே தெரியல. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், நீ நித்திலா மேல உயிரையே வச்சுருக்க, இதை அவகிட்ட நேரடியாச் சொன்னா, அவ நிச்சயம் உன்னை மன்னிப்பாடா,” என்றான் வித்தார்த் நம்பிக்கையுடன்.

​ஆனால் விக்ராந்த் அதை ஏற்கவில்லை. “எனக்கு அப்படித் தோணல, நான் அவளை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன். சாத்தியமா  அந்த வார்த்தைகள் அவளை அந்த அளவுக்கு ரணப்படுத்தும்னு நான் அன்னைக்கு நினைக்கல. ஆனா அதே வலியை இன்னைக்கு நான் அனுபவிக்கும் போதுதான், அவ எவ்வளோ துடிச்சிருப்பான்னு என்னால உணர முடியுது.”

​”அதான் நீயும் அதே வலியை அனுபவிச்சுட்டியே… அப்புறம் என்னடா?” என வித்தார்த் கேட்க, விக்ராந்த் ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்தான். அந்தச் சிரிப்பில் சொல்ல முடியாத வேதனை படிந்திருந்தது.

​”இப்போ ஏன்டா சிரிக்கிற?” என வித்தார்த் அதட்டலாகக் கேட்க, “நீ சொன்னதைக் கேட்டுதான் சிரிச்சேன்,” என்றவன் சட்டெனக் குரலைத் தாழ்த்தி “விது.. நான் சொன்ன எதையும் நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது. முக்கியமா நிலாகிட்ட! என் அன்பு உண்மையானதுன்னு அவளா உணரணுமே தவிர, அது யார் மூலமும் அவளுக்குத் தெரிய வரக்கூடாது. நான் சொல்றது புரியுதா?”

​விக்ராந்தின் பிடிவாதம் புரிந்தாலும் வித்தார்த்தும் அதற்குச் சம்மதித்தான்.

அடுத்த கணம் விக்ராந்த் சட்டெனத் தன் அண்ணனை இறுக்க அணைத்துக் கொண்டவன்.. “இத்தனை நாள் இந்த வீட்ல யாருமே என்னை ஏறெடுத்தும் பார்க்கல அண்ணா, நான் எவ்வளவு தவிச்சுப் போனேன் தெரியுமா? இப்போ நீ என்கிட்ட பேசுனதுக்கு அப்புறம்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.”
​விக்ராந்தின் அந்த ஏக்கம் வித்தார்த்தின் இதயத்தைப் பிழிந்தது.

“என்னை மன்னிச்சிடுடா விக்கி! அன்னைக்கே நான் உன்கிட்ட இன்னும் கொஞ்சம் கண்டிப்பா கேட்டிருந்தா, நீ எல்லாத்தையும் கொட்டியிருப்ப. உனக்கு நானாச்சும் ஆறுதலா இருந்திருப்பேன்,” என வித்தார்த்தும் கலங்கினான்.

“நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிற, நான் தான் கேட்கனும்,” அவன் சொல்ல… “இந்த மன்னிப்பு பேச்சை விடு, நித்திலா கிட்ட எப்போ இதை சொல்ல போற?” என வித்தார்த் கேட்க, “நான் நேசிக்கிறேன்னு சொன்னப்போ அவ அதை ஏளனமாப் பார்க்கிறாடா” என விக்ராந்த் வருந்தினான்.

“பச்… அவ கோவத்துல அப்படி பேசுறா, ஸ்டார்டிங்ல இருந்து நடந்ததை சொன்னா, அவ உன்னை புரிஞ்சிப்பா” என்றான் வித்தார்த்

“அவ என்னை முழுசா வெறுத்துட்டாளோனு பயமா இருக்கு டா”

“ஏன்டா இப்படி நினைக்கிற, அவ அப்படியெல்லாம் பண்ண மாட்டா, உன் மேல உயிரையே வச்சிருக்கா”

“அவ என் முகத்தை கூட பார்த்து பேச மாட்டேங்கிறா, என் முகத்தை பார்க்க கூட அவ தயாரா இல்ல”

“அவ கோபத்துல அப்படி பண்ணறா டா, நீ அவ கிட்ட முதல்ல பேசு”

“இல்லடா வேணாம், நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், அவளுக்கு எதுவும் தெரிய வேணாம், இனி நான் காட்டுற அன்புல அவ என்னை புரிஞ்சிக்கிட்டா போதும், இதுவரைக்கும் நான் அவளுக்குக் கொடுத்த ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும், ஒவ்வொரு கஷ்டத்துக்கும் சேர்த்து… இனி அவளோட வாழ்க்கையில சின்னத் துன்பம் கூட வராம, அவளைத் தாங்கப்போறேன். உலகத்துலயே மிகச் சந்தோஷமான பொண்ணா அவளை நான் வச்சுக்கப்போறேன்டா!”
​விக்ராந்தின் இந்த வார்த்தைகளில் ஒரு கணவனின் பொறுப்பும், ஒரு காதலனின் வைராக்கியமும் ஒருசேரத் தெரிந்தது, ஆனால் அடுத்த கணம் அவன் முகம் சுருங்கியது,..

“என்னடா” வித்தார்த்
“அந்த பையன் யாருடா,…? பாட்டி சத்தியத்துக்கு கட்டு படுறதா நினைச்சு, நிலா மொத்தமா என்னை விட்டு போக போறாளா? ” நினைக்கும் போதே அவனது உடலெல்லாம் நடுங்கியது,….

​”நித்திலா உன் மேல இருக்கிற கோபத்துல உன்னை விட்டுப் போவாளே தவிர, இன்னொருத்தனை எப்போவும் கட்டிக்க மாட்டாடா! அவளை பத்தி தெரிஞ்சும் நீ ஏன்டா இப்படிலாம் யோசிக்கிற” என வித்தார்த் தைரியம் சொன்னான்.

​”அவளைப் பத்தி எனக்குத் தெரியும்… ஆனா பாட்டி மேல அவ வச்சிருக்கிற அன்புதான் எனக்குப் பயமா இருக்கு” என விக்ராந்த் தன் அச்சத்தை வெளிப்படுத்தினான்.

​”அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. இனி நான் உனக்குத் துணையா இருப்பேன்,” என வித்தார்த் வாக்குக் கொடுக்க, மீண்டும் தன் அண்ணனின் அரவணைப்பில் தஞ்சமடைந்தான் விக்ராந்த்.

தமையன் வித்தார்த்தின் ஆதரவு கிடைத்த தைரியத்தில், விக்ராந்த் அன்று இரவு நிம்மதியாக உறங்கினான். மறுநாள் காலை அலுவலகம் செல்லத் தயாரானவனுக்கு, நித்திலா அறைக்கு வராதது ஏமாற்றத்தைத் தந்தது. நேராகச் சமையலறைக்குச் சென்றவன், சுமித்ராவுடன் பேசிக்கொண்டிருந்த நித்திலாவிடம்,.. ​”இங்க என்ன பண்ற? நான் ஆபீஸ் கிளம்பணும், வந்து எனக்கு டிரஸ் எடுத்துக் கொடு!”  விக்ராந்தின் குரலில் இருந்த அந்த பழைய உரிமை நித்திலாவைத் திகைக்க வைத்தது.

அவள் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து நிற்க, “உன்கிட்ட தான் சொல்றேன் வா” அவன் உரிமையாக விக்ராந்த் மீண்டும் அழைக்க,.. ​”உங்க வேலையை நீங்களே பண்ணிக்கோங்க, இல்லன்னா…” என நித்திலா இழுக்க, “இல்லன்னா ?” என அவன் அவள் முகத்தையே பார்த்தான்.

​”இல்லன்னா… உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு ஒருத்தி சுத்திட்டு இருக்காளே, அவகிட்ட கேட்டுக்கோ!” மரகதப் பாட்டியின் குரல் இடியாக அங்குக் கேட்க, விக்ராந்த் நிதானமாகத் திரும்பினான்.

​”என் பொண்டாட்டி இருக்கும்போது, நான் ஏன் மத்தவங்ககிட்ட போய் நிக்கணும்?” என விக்ராந்த் அமைதியாகக் கேட்க, பாட்டியோ..
“பொண்டாட்டியா? யார் உனக்கு பொண்டாட்டி? இன்னொருத்தனை கட்டிக்க சம்மதிச்சவ உனக்கு எப்படிப் பொண்டாட்டியாவா?” எனச் சீறினார்.

அவனுக்கு இந்த வார்த்தை அதிக வலியை தந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்,… ​”தாராளமா கட்டிக்கட்டும் பாட்டி! ஆனா இப்போ அவ என் பொண்டாட்டி… எனக்கு மட்டுமே உரிமையானவ!” எனச் சொன்னவன், அடுத்த நொடி நித்திலா சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவளை அப்படியே அள்ளிக் கையில் ஏந்திக்கொண்டான்.

பாட்டியின் மிரட்டலையும் நித்திலாவின் போராட்டத்தையும் பொருட்படுத்தாமல், அவளைச் சுமந்தபடி விறுவிறுவென்று தன் அறைக்கு நடந்தான்.

​”என்ன பண்றீங்க? எல்லாரும் பாக்குறாங்க, விடுங்க!” என அவள் அவன் கைகளில் இருந்து இறங்க முயன்றும் அவன் விடவில்லை. அறைக்குள் வந்ததும் அவளை இறக்கிவிட்டவனிடம்.. “நீங்க செய்றது எதுவும் எனக்கு பிடிக்கல” அவள் கோபமாக சொல்ல,… “உன்கூட ஆர்கியூ பண்ண டைம் இல்லை பேபி, டிரஸ் எடுத்து வை,” என சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்தான்.

​நித்திலா கோபத்தில் முறைத்தாலும், அங்கிருந்து கிளம்பினால் அவன் மீண்டும் ஏதாவது அதிரடி செய்வான் என்று பயந்து அங்கேயே அமர்ந்திருந்தாள். விக்ராந்த் குளித்துவிட்டு வெளியே வந்தபோது, அவனுக்கு வேண்டிய உடைகள் மெத்தையில் தயாராக இருந்தன.

​அவன் வந்ததும் அவள் வெளியேறப் பார்க்க, “நான் கிளம்புறதுக்குள்ள நீ போனா, உன்னை எப்படித் திரும்பக் கூட்டிட்டு வரணும்னு எனக்குத் தெரியும்,” என அவன் மிரட்டலாகச் சொல்ல, அவள் வேறு வழியின்றி மீண்டும் அமர்ந்தாள்.

அவளது பாரா முகத்தை பார்த்துக் கொண்டே ​உடை அணிந்து கொண்டிருந்த விக்ராந்த், தற்செயலாகத் தன் சட்டையில் ஒரு பட்டன் இல்லாததைக் கவனித்தான். சட்டென அவனது இதழில் ஒரு குறும்பான புன்னகை அரும்பியது. முன்பு ஒருமுறை இதேபோல் பட்டன் இல்லாதபோது, அவளை தைக்கச் சொல்லி அவன் செய்த சின்னச் சின்னச் சில்மிஷங்கள் மின்னலென அவன் நினைவில் வந்து போயின.

​”பேபி… ஷர்ட்ல பட்டன் இல்ல,” என்று விக்ராந்த் மெல்லிய குரலில் சொல்ல, நித்திலா அவனை ஏறிட்டுப் பார்த்தவள், மௌனமாக எழுந்து சென்று ஊசி நூலை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

​”இதுக்கு என்ன அர்த்தம்?” என விக்ராந்த் நெற்றி சுருங்கக் கேட்க, “நீங்களே தைச்சுக்கணும்னு அர்த்தம்,” என்றாள் அவன் முகத்தைப் பாராமலேயே..

​”எனக்கு அதெல்லாம் தெரியாது பேபி, ப்ளீஸ் நீயே பண்ணேன்,” என அவன் கெஞ்ச, “ஷர்ட்டைக் கழட்டிக் கொடுங்க,” என்றாள் நித்திலா. ஆனால் விக்ராந்த் விடவில்லை, “நேரமில்லை பேபி, அப்படியே தைச்சுக் கொடு,” என்றான்

​”முடியாது, சட்டையைக் கழட்டிக் கொடுங்க!” என நித்திலா பிடிவாதமாகக் கூற, விக்ராந்தோ “ப்ளீஸ்… ப்ளீஸ் பேபி, நேரமில்லை, இப்ப” என்று மீண்டும் கெஞ்சிட,
​வேறு வழியின்றி, ஒரு பட்டனையும் ஊசி நூலையும் எடுத்து வந்தவள், அவன் சட்டையிலேயே வைத்துத் தைக்கத் தொடங்கினாள்.

மிக நெருக்கத்தில் நின்று அவள் தைத்துக் கொண்டிருந்தபோது, அவளது கூந்தலின் வாசமும், மூச்சுக் காற்றின் வெப்பமும் விக்ராந்தை என்னவோ செய்தது. பல நாட்களுக்குப் பிறகு அவளை இவ்வளவு அருகில் பார்ப்பதால், அவனது உணர்வுகள் கட்டுக்கடங்காமல் அவளைத் தீண்டத் துடித்தன.

​அவள் கோபப்படுவாள் என்று தன்னைத் தடுத்துக் கொள்ள முயன்றவனின் கண்கள், தற்செயலாக அவளது இடையின் மீது படிந்தன. காற்றில் மாராப்பு விலகி அவளது பளிங்கு மேனி மின்னிய அந்தத் தரிசனம், விக்ராந்தின் பொறுமையைச் சோதித்தது.

இதே பழைய விக்ராந்தாக இருந்திருந்தால் அந்த நொடியே அவளைத் தன் வசப்படுத்தியிருப்பான். ஆனால், இப்போது ஒரு பக்கம் குற்றவுணர்வும் மறுபக்கம் அவளது கோபத்தைப் பற்றிய பயமும் அவனைத் தடுத்தன.

இருந்தாலும் அவனது மனம், ‘நடப்பது நடக்கட்டும்… அதிகபட்சம் கோபப்படுவாள், அவ்வளவுதானே!’ என்று விபரீதமாக எண்ணியது.

அடுத்த கணம் ​தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் அவளது மென்மையான இடையில் தன் கரத்தை மெல்லப் பதித்தான் விக்ராந்த். அவனது தீண்டல் பட்ட அடுத்த நொடி, மின்சாரம் தாக்கியது போல நித்திலா துள்ளி விலகினாள்.

அவனது செய்கையில் எரிமலையாய் வெடித்தவள், அவனைத் தன் கூர்மையான பார்வையால் சுட்டெரித்தபடி, அவன் மார்பில் கை வைத்துத் தன்னிடமிருந்து ஓங்கித் தள்ளினாள்.

​”என்னைத் தொட உங்களுக்கு யார் உரிமை தந்தது?” நித்திலாவின் கர்ஜனை அந்த அறை முழுக்க எதிரொலித்தது. அவளது விழிகளில் தெறித்த ஆவேசம் விக்ராந்தை ஒரு கணம் பின்வாங்கச் செய்தது.

​”பேபி நான்…” என அவன் ஏதோ சமாதானம் சொல்லத் தொடங்க, அதை பாதியிலேயே வெட்டியவள்.. “தயவு செஞ்சு என்னை இனி அப்படி கூப்பிடாதீங்க… இரிடேட்டிங்கா இருக்கு!” அவனது ஒவ்வொரு சொல்லும் அவளுக்கு இப்போது கசப்பையே தந்தது.

​அவளது பார்வையில் இதுவரை பார்த்திராத ஒரு வைராக்கியத்தைக் கண்டான் விக்ராந்த்.

“இன்னும் ரெண்டு மாசம் தானே இருக்கு, அந்த ரெண்டு மாசத்துக்கு என்னை யூஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சு நெருங்குனீங்கன்னா… அது என் உயிர் இல்லாத ஜடத்தைத்தான் தொட முடியும்!” என அவள் ஆத்திரத்தில் வீசிய வார்த்தை, விக்ராந்தின் இதயத்தை அடியோடே சாய்த்துவிட்டது.

​”ஏன் நிலா இப்படிப் பேசுற?”  விக்ராந்தின் குரல் உடைந்து, கண்கள் கலங்கின..

“இப்போதான் நான் சரியா பேசுறேன். பிரச்சனை வேண்டாமேனுதான் நீங்க கேட்டதைச் செஞ்சேன். ஆனா முன்னாடி மாதிரி உரிமைனு சொல்லி அத்துமீறினா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.”

“நான் தப்பான நோக்கத்துல அப்படிப் பண்ணல நிலா…”விக்ராந்த் தன் நிலையை விளக்க முற்பட..​  அவளோ கேட்கத் தயாராக இல்லை. “நீங்க எந்த நோக்கத்துலயும் என்னை நெருங்கக் கூடாது. நான் வேற ஒருத்தரை கட்டிக்கச் சம்மதம் சொல்லிட்ட பிறகும், எப்படி உங்களால இப்படி நடந்துக்க முடியுது?” என அவள் சீறினாள். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அவள் உதிர்த்த அந்த வார்த்தை, விக்ராந்தைக் கதிகலங்க வைத்தது.

நித்திலா வீசிய அந்த வார்த்தைகளை விக்ராந்த் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘பாட்டிக்காகத்தான் அவள் சம்மதித்தாள், மற்றபடி அவளும் என்னைத்தான் நேசிக்கிறாள்’ என்று அவன் வளர்த்துக் கொண்டிருந்த அத்தனை நம்பிக்கைகளும், அவளது அந்த ஒற்றை வரியில் சுக்குநூறாக உடைந்து போயின. அந்த வேதனை அவனது பேச்சை அடியோடே பறித்துவிட்டது. அதற்கு மேல் அவளிடம் பேச ஏதுமில்லை என்பது போல மௌனமானான்.

​இங்கு நித்திலாவின் நிலையும் கொடூரமாக இருந்தது. ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டாலும், சில நொடிகள் கழித்துதான் தான் என்ன பேசிவிட்டோம் என்பது அவளுக்கு உறைத்தது. அவள் சொன்ன வார்த்தைகள் அவனை எந்தளவுக்குச் சிதைத்திருக்கும் என்பதை உணர்ந்து, தயக்கத்துடன் அவன் முகம் பார்த்தாள். அங்கே தெரிந்தது ரத்தமும் சதையுமான ஒரு மனிதனின் முகமல்ல, உயிரற்றுப்போன ஒருவனின் நிழல்! அதைக் கண்டு அவளும் உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.

​விக்ராந்த் அதற்கு மேல் அந்த அறையில் நிற்க விரும்பாமல் வெளியேற எத்தனித்தான். அவனது அந்த வலி நிறைந்த முகம் அவளை என்னவோ செய்ய, “ஐம் ஸாரி… நான்… நான்… தெரியாம…” என்று வார்த்தைகளை முடிக்க முடியாமல் தவித்தாள், வேதனை அவளது தொண்டையை அடைத்தது.

​அவள் தடுமாறிய அந்த நொடி, விக்ராந்தின் இதழில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. அவள் வாய்தவறி கோபத்தில் சொன்ன வார்த்தைகள்தான் அது என்பதை அவளது அந்தத் தவிப்பே அவனுக்குப் புரியவைத்துவிட்டது. இருப்பினும், அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய காயம் என்னவோ ஆறாததுதான்.

​அவன் அவள் கண்களை நேராகப் பார்த்தான். அந்தப் பார்வையில் அத்தனை ஏக்கம் தேங்கிக்கிடந்தது.

“ஸாரி… இந்த ஒரு வார்த்தையை நானும் உன்கிட்ட கேட்டா, என்னை நீ மன்னிப்பியா நிலா?” என்று அவன் உருக்கமாகக் கேட்டான், அவள் பதில் சொல்லாமல் தலை குனிய, வலி நிறைந்த பார்வையுடன் அவளை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன், அடுத்தநொடியே வெளியேறிவிட்டான்…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
26
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. வித்தார்த் இடமாவது மனதில் இருப்பதை பகிர்ந்து கொண்டேனே அழுத்தகாரன்.

    யாரும் சொல்லாமல் அவளாகவே காதலை உணர நீங்க என்ன செஞ்சிருக்கீங்க விக்ராந்த்.

    அவகிட்ட காதலை காட்டிய பொழுதில் எல்லாம் ஆறு மாத கணக்கை சுட்டி காட்டியிருக்கீங்க, குழந்தையை வைத்து மிரட்டக் கூடாதுனு குத்திக்காட்டிருக்கீங்க.

    அப்படி எல்லாம் செய்து வெச்சிட்டு இப்போ தெளிவான விளக்கம் கொடுக்காம இருக்கும் போது அவ எப்படி தெளிவா உங்களுடனான உறவை பற்றி யோசிப்பா?

    செய்த தவறின் குற்ற உணர்வு, அவள் கோவப்படுவாளோ என்ற பயம் என எல்லாத்தையும் தள்ளி வெச்சிட்டு உங்க வீம்பை அவகிட்ட பேசறதுல காட்டுங்க விக்ராந்த்.