Loading

அத்தியாயம் 91

     லீலா எடுத்துச் சொன்னதால் ருக்கு கட்டாயம் தன் திட்டத்திற்கு இணங்கி வருவாள் என மனதோடு கணக்கிட்ட தெய்வா சற்றே ஆனந்தமாக இருந்தான். சற்று நேரத்தில் சோர்வுடன் அறைக்கு வந்தவளிடம் மதுரை செல்வதைப் பற்றிப் பேச, பாதி மனதுடன் ஒப்புக்கொண்டிருந்தாள் ருக்கு.

     இரவு சாப்பிடும் வேளையில் வடிவேலுவிடம் பணி மாறுதல் பற்றியும், ருக்குவும் தானும் இன்னும் இரண்டு நாட்களில் கிளம்பப் போவதையும் வெறும் தகவலாகச் சொன்னான் தெய்வா. அனுமதி கேட்டுச் செல்லத்தான் அவனுக்கும் ஆசை. கட்டாயம் மறுக்கப்படும் என்னும் போது, அனுமதியானால் என்ன தகவலானால் என்ன என்று தன்னைத் தேற்றிக்கொண்டான் அந்தக் காவலன்.

     வடிவேலுவின் முகம் சொல்ல முடியாத அளவு வேதனையில் வாடியது. இத்தனை நாளாய் எது நடக்கக் கூடாது என்று படாதபாடு பட்டாரோ அது இப்பொழுது நடக்கத் துவங்கிவிட்டதை உணர்ந்து மனம் கலங்கினார்.

     இவன் ஒருவன் கிளம்பினால் இதையே காரணமாய் காட்டி மற்றவரும் தனியே சென்று விடுவார்களோ, தான் தனிமரம் ஆகிவிடுவோமோ என்னும் பயம் இப்போதே அவரை ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டிருந்தது. இதைக் கவனித்த அரசு அவருடைய எண்ண ஓட்டத்தை அறிந்தவனாய் தானும் வருந்தினான்.

     இதற்கு மேல் எப்படி சாப்பாடு இறங்க, என்று நினைத்த வடிவேலு கையை உதறிக்கொண்டு, “ரொம்ப சந்தோஷம் தெய்வா. நீ சொன்ன செய்தியைக் கேட்டு சாப்பிடாமலே என் வயிறு நிறைஞ்சு போச்சு. இப்பவும், எப்பவும் சந்தோஷமா இரு.” என்றுவிட்டு எழுந்து தன்னறைக்குள் சென்றுவிட்டார்.

     “டேய் உனக்கு எதை எப்ப சொல்லணும் னு அறிவே இல்லையா. சரியா அவர் சாப்பிடும் போது தான் இதைப் பத்தி சொல்லணுமா. இப்பப் பாரு சாப்பிடாமலே போயிட்டாரு.” கோபித்தான் செல்வா.

     “சாப்பாட்டுக்கு மரியாதை கொடுக்கணும், எப்பவும் எதுக்காகவும் சாப்பாட்டை பாதியில் விட்டுட்டு போகக்கூடாதுன்னு அவர் தானே அடிக்கடி சொல்லுவார். சாப்பிடுற நேரத்தில் தேவையில்லாம கோவப்படக் கூடாதுன்னு சொல்லுவாரே. அதனால் தான் விஷயம் பெருசாச்சேன்னு அவர் சாப்பிடுற நேரத்தில் சொன்னேன்.” தான் செய்தது சரியென்று சாதித்தான் தெய்வா.

     “அடேங்கப்பா அப்பாவுக்குத் தப்பாம பிறந்து, அவர் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் அப்படியே பின்பற்றிக்கிட்டு இருக்கிற மாதிரி தான்.” தெய்வாவை சீண்டிவிட்டு, “செல்வா அவரைப் பத்தி கவலைப்பட்டு, தேவையில்லாம நீ டென்ஷன் ஆகாத. அவரை எப்படி சரி பண்றதுன்னு எனக்குத் தெரியும்.” என்றுவிட்டு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வடிவேலுவின் அறைக்குள் சென்றான் அரசு.

     “இவன் வர வர ரொம்ப ஓவரா பண்றான். என்னவோ அப்பா மேல இவனுக்கு மட்டும் தான் பாசம் இருக்கிற மாதிரி நடந்துக்கிறான்.” மெதுவான குரலில் சொன்னான் தெய்வா.

     “நீ சொன்னாலும், இல்லாமப் போனாலும் அதுதான் உண்மை. நீயோ இல்ல நானோ அப்பா சொன்னாருன்னா கண்ணை மூடிக்கிட்டு தண்ணி இல்லாத கிணத்துல குதிப்போமா. ஆனா அவன் குதிப்பான். கிணறுன்னு இல்ல அது கடலாவே இருந்தாலும் அப்பா சொல்லுக்கு எதிர்சொல் சொல்லவே மாட்டான். அவன் தான் அரசு.” பெருமை மற்றும் தன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் நிறைந்த குரலில் சொன்னான் நாகா.

     “மாமாவை அரசு அண்ணா பார்த்துப்பாரு, நீங்க சாப்பிடுங்க.” என்ற ருக்கு மேலும் ஒரு சப்பாத்தியை தெய்வாவின் தட்டில் வைக்க, பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான் தெய்வா.

     அவனுக்குள் பலவிதக் குழப்பங்கள். மனைவி அப்பா என இருவரின் ஆசைக்கும் எதிராக தன்னுடைய ஆசையை மட்டுமே நிறைவேற்ற எண்ணி தான் செய்யும் இந்தச் செயல் உண்மையில் அதிகபட்ச சுயநலம் என்றே அவனுக்குத் தோன்றியது.

     இருப்பினும் இத்தனை ஆண்டுகளாய் தான் கண்டு வந்த கனவு வாழ்க்கை நிறைவேற இருக்கிறது என்னும் சந்தோஷம் மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளியது.

     நான் என் மனைவியை என் கைக்குள் வைத்திருக்கிறேன். எனக்காக அவள் அவளுடைய அக்கா, தங்கைகளை விட்டு தனியே என்னுடன் வருகிறாள். நான் என் உடன்பிறந்தவர்களிடம் போட்ட சபதத்தில், வென்று விட்டேன் என்று உள்ளுக்குள் மார்தட்டிக் கொண்டிருந்தான்.

     மற்ற மூவரின் மனைவிகளும் தன்னுடைய கணவர்களுக்கு வேண்டியதைப் பரிமாற, அவர்களும் எதுவும் பேசமுடியாமல் சாப்பிட ஆரம்பித்தனர். அவரவருக்கு வேண்டியதை எடுத்து வைத்து எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடலாம் என்று வடிவேலு எத்தனையோ முறை சொன்னாலும் பெண்கள் அதற்கு ஒப்புக்கொண்டதில்லை.

     கணவன் சாப்பிடும் முன்பு மனைவி சாப்பிடக்கூடாது என்கிற பழங்காலக் கொள்கைகள் எல்லாம் அவர்களிடம் கிடையாது. சமைப்பதிலும், பரிமாறுவதிலும் அவர்களுக்குக் கிடைக்கும் பேரானந்தம் சாப்பிடும் போது கிடைக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.

     அறையின் உள்ளே ஏதேதோ சொல்லி வடிவேலுவை சமாளித்து சாப்பிட வைத்துக் கொண்டிருந்தான் அரசு. அது என்னவோ தன் மகன்களிடம் வானத்திற்கும், பூமிக்கும் குதித்தாலும் அரசுவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்ல முடிவதில்லை அவரால்.

     சகோதரிகளுடன் இணைந்து சாப்பிட்டு முடித்து, தன்னுடைய அறைக்கு வந்த ருக்குவை, கனவு கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் உற்றாகத்தில் தூக்கி சுத்த ஆரம்பித்தான் தெய்வா.

     “ருக்கு, எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? எனக்காக நீ எவ்வளவு பெரிய விஷயம் பண்ணி இருக்க. உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு.” பேரானந்தத்தை சுமந்த இதழ்களுடன் சொன்னான்.

     அவன் தோள்களைப் பிடித்தபடி அவனின் கைப்பிடியில் இருந்தவண்ணம், “நான் என்னங்க பெருசா பண்ணிட்டேன். எல்லாப் பொண்ணுங்களும் பண்றதைத் தானே நானும் பண்ணேன்.” உயிர் இல்லாத குரலில் சொன்னாள்.

     கண்கள் வழி அவள் அகத்தைச் சென்றடைய வழி தேடுவது போல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் தெய்வா.

     “எல்லாப் பொண்ணுங்களுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா, அப்பா, கூடப்பிறந்தவங்க, ப்ரண்ட்ஸ் அப்படின்னு நிறைய பேர் முக்கியமானவங்களா இருப்பாங்க. ஆனா கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் புருஷன் தான் எல்லாரையும் விட முக்கியமாகிடுறாங்க. எனக்கும் அப்படித்தான் ஆகிடுச்சு.” கண்கள் நிறைந்துவிட்ட கண்ணீருடன் சொன்னாள் ருக்கு.

     “நீ கவலையே படாத ருக்கு. உன்னை என் கண்ணுக்குள் வைச்சுப் பார்த்துக்கிறேன். நீ ஒரு வேலையும் செய்ய வேண்டாம், எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.” ஆனந்தத்தில் வார்த்தைகளையும், வாக்குகளையும் பன்னீராய் அள்ளித் தெளித்தான் தெய்வா.

     “எத்தனை நாளைக்கு”

     “என்ன?”

     ”எத்தனை நாளைக்குன்னு கேட்டேன். எத்தனை நாளைக்கு என்னை வேலை செய்ய விடாம எல்லா வேலையும் நீங்க பார்ப்பீங்க, வாழ்நாள் முழுக்குமா. அது நடக்கிற கதையா?” ருக்கு இப்படிச் சொல்லவும் தான் அவள் குரல் பேதத்தை உணர்ந்தவனாக அவளை இன்னும் உற்று நோக்கினான் தெய்வா.

     “எனக்கு மகாராணி கவனிப்பு ஒன்னும் தேவையில்லங்க. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. எல்லாத்துக்கும் தயாரா தான் உங்க கூட வரேன். என்னால வீட்டு வேலையோட சேர்த்து உங்களையும் நல்லாவே பார்த்துக்க முடியும். இப்ப என்னை இறக்கி விட்டீங்கன்னா நான் போய் படுத்துத் தூங்குவேன்.” என்றாள் ருக்கு.

     மனைவியின் உயிரில்லாத குரலில், உணர்வில்லாத முகத்தில், அவ்வளவு நேரம் இருந்த உவகை ஊற்று சட்டென்று வற்றிப் போனது தெய்வாவுக்கு. அவனுக்கு ருக்குவின் மனவேதனை புரியத்தான் செய்தது.

     கணவன், மனைவி இருவரும் வேறுபட்ட ரசனை கொண்டவர்களாக இருக்கும் போது, இப்படியான சூழல் வருவது தவிர்க்க முடியாதது தான். சில காலங்கள் போனால் மனைவி சரியாகிவிடுவாள். அதுவரை தான் காத்திருக்கத் தான் வேண்டும் என்று அமைதியாக இருந்தான்.

     தங்கை மனவேதனை கொண்டிருக்க, தமக்கை மட்டும் அமைதியாக இருப்பாளா என்ன. “லீலா ஏன் இப்படி இருக்கீங்க. ருக்கு என்ன அமெரிக்காவுக்கா போறாங்க. இங்க இருக்கு மதுரை, நினைச்சா போய் பார்த்துக்கலாம்.” தங்கையை நினைத்து தவித்துக்கொண்டிருக்கும் மனைவிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான் செல்வா.

     “நினைச்சா போய் பார்த்துக்கலாம் தான். ஆனா நினைச்ச நேரம் எல்லாம் பார்க்க முடியாது தானேங்க. என் நிழலில் வைச்சு நான் பார்த்துக்கிட்ட வளர்ந்த குழந்தை அவ. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.” என்றபடி ஆறுதலுக்காய் அவன் தோள் சாய்ந்தாள் லீலா.

     “கொஞ்ச நாள் போனா எல்லாம் பழகிடும்.” என்றான் செல்வா. அவனாலும் தான் வேறு என்ன சொல்ல முடியும்.

     “எல்லாம் பழகிடும் தான். ஆனா எதுவும் சரியாகாது.” என்ற லீலா அடுத்த வார்த்தை பேசாமல் அமைதியாய் படுத்துக்கொண்டாள்.

     ஊர்மி, நாகா அறையில், “ஏய் லீலா அண்ணி ஏதோ சொன்னாங்கன்னா அவங்ககிட்ட போய் சண்டை போடுடி. அதை விட்டுட்டு இப்படி முகத்தைத் தூக்கி வைச்சிக்கிட்டு இருந்தன்னா என்ன அர்த்தம். நீ இப்படி அசிங்கமா மூஞ்சை வைச்சிக்கிட்டு இருந்தா என் குழந்தைங்களோட அழகான முகமும் உன்னை மாதிரி ஆகிடுமே.” வம்பிழுத்தான் நாகா.

     “ஏன் சொல்ல மாட்டீங்க உங்களைக் குற்றம் சொல்லிட்டாங்களேன்னு நான் என் அக்கா கூட சண்டை போட்டா, நீங்க என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா. வரவர நீங்க ரொம்பத் தான் அண்ணி கோண்டு ஆகிட்டீங்க.” குரல் கரகரக்க அழத் தயாரான நிலையில் சொன்னாள் ஊர்மி.

     “ஏய் லூசு நீங்க பேசுறதை அந்த தெய்வா பய ஒட்டுக் கேட்டுக்கிட்டு இருந்திருக்கான். அந்த நேரம் பார்த்து தான் மேடம் என் உடப்பிறப்பைப் பத்தி ரொம்ப உயர்வா சொல்லி இருக்கீங்க. அவன் உன் மேல கோவப்படக்கூடாதுன்னு தான் அண்ணி என்னை வைச்சு உன் வாயை மூடி இருக்காங்க.” என்றான் நாகா.

     “என்னங்க சொல்றீங்க, ஆமா இது எப்படி உங்களுக்குத் தெரியும். அக்கா உங்ககிட்ட வந்து சொன்னாங்களா?” ஆச்சர்யமாய் கேட்டாள் அவள்.

     “இல்ல தெருவில் போற குடுகுடுப்பைக்காரன் சொன்னான் போவியா.” நக்கலடித்து அவள் கவனத்தை திசைதிருப்பினான் நாகா.

     “ஆமா, என்கிட்ட மட்டும் தான் இந்த வாய் எல்லாம். இந்த பேச்சை கோர்ட்டில் பேசி இருந்தா, நாலு நல்ல கேஸ் பார்த்து இருக்கலாம். வெளியில் வீரத்தை காட்ட முடியாதவங்களுக்கு இளைச்சது வீட்டில் இருக்கிற பொண்டாட்டி தானே. நடத்துங்க, எனக்கும் ஒரு காலம் வரும். அப்ப என் கை ஓங்கி இருக்கும். அப்ப பார்த்துக்கிறேன் உங்களை.” வீரமாய் பேசினாள் ஊர்மி.

     “ஏது இந்த தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லும் னு மகாபாரதத்தில் சொல்லுவாங்களே அதே மாதிரியா?” நல்ல மனநிலையில் இருந்ததாலோ என்னவோ மனைவியை அதிகமாகச் சீண்டிக் கொண்டிருந்தான் நாகா.

     “எனக்குத் தூக்கம் வருது. லைட் ஆப் பண்ணிட்டு படுங்க. உங்க மேல காலைத் தூக்கிப் போட்டா தான் எனக்கு நல்லாத் தூக்கம் வரும்.” வேண்டுமென்றே சொன்னாள் ஊர்மி.

     “ஏன்டி அவ்வளவு காசு போட்டு மெத்தை வாங்கிப் போட்டா, அதில் தூக்கம் வரல. என் மேல கால் போட்டாத்தான் வருதுன்னு சொல்றியே இதெல்லாம் நியாயம் தானா?” பொய்யாய் சலித்தான் நாகா. அவனுக்கும் மனைவியின் அந்தச் செயல் பெரும் ஆனந்தத்தை தரும் என்பதை அவன் மட்டுமே அறிவான்.

     “எல்லாம் நியாயம் தான் பேசாம படுங்க.” என்றுவிட்டு படுத்துக்கொண்டாள் ஊர்மி.

     “இன்னைக்கு லீலாக்கா பண்ணது சரியே இல்லங்க. ருக்குக்கா அவங்களுக்குத் தங்கச்சின்னா, எனக்கும் ஊர்மி அக்காவுக்கும் அக்கா. அவங்களை அவங்க புருஷனோட அனுப்பலாமா வேண்டாமான்னு அவங்க முடிவெடுத்தாங்க சரி. ஆனா எங்ககிட்ட அபிப்ராயம் கூடக் கேட்கல. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குங்க.” கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் தேவகி.

     “தேவகிம்மா நான் ஒரு நல்ல மூடில் இருக்கேன். அதையும் இதையும் பேசி கெடுத்திடாத.” தர்மா சங்கடமாக மனைவியைப் பார்த்தான்.

     “நான் கஷ்டத்தில் இருக்கேன். உங்களுக்கு சந்தோஷம் கேட்குதோ. அதெல்லாம் முடியாது, போய் குளிச்சுட்டு வந்து படுத்துத் தூங்குங்க.” என்றுவிட்டு படுத்துக்கொண்டாள் தேவகி.

     நால்வரும் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டி, எப்படியும் தனிக்குடித்தனம் சென்றுவிடலாம் என மனதில் ஆசையை வளர்த்து விட்டு, இப்பொழுது தெய்வா மட்டும் சாதுர்யமாக தன் எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டு விட்டானே.

     நாகாவிடம் போட்ட சபதத்தில் ஜெயிக்கத்தான் இப்படி அவசர அவசரமாக வெளியூர் செல்கிறானா, இல்லை கிடைத்த வாய்ப்பை சரியாக உபயோகித்துக்கொள்ள நினைக்கிறானா? என்பதாய் சிந்தையை நிறைத்த பல சிந்தனைகளால் தூக்கம் வராமல் மெத்தையில் உருண்டு கொண்டிருந்தான் தர்மா.

     வடிவேலு ஆரம்பித்திருந்த மை பேமிலி என்ற வாட்ஸ்அப் குரூப் நெடுங்காலமாக ஒரு குருந்தகவலும் இன்றி அமைதியாக இருக்க, தன்னுடன் தன்னுடைய சகோதரர்கள் மூவரையும் இணைத்து செல்வா தனியாக ஒரு வாட்ஸ்அப் குரூப் ஓபன் செய்தான்.

     குரூப்பிற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் பொதுவாக ஏ பி சி டி என்று வைத்தவன், மனைவிமார் உறங்கிய பின்னர் மொட்டை மாடியில் சந்திக்கலாம் என்று ஒரு குறுந்தகவலை அதில் அனுப்பி இருந்தான்.

     அந்தத் தகவல் அனுப்பிய ஒரு நிமிடத்திற்குள் எல்லாம் மற்ற மூவரும் அதை பார்த்து விட, “அடப்பாவிங்களா என் பொண்டாட்டி தான் அதையும், இதையும் சொல்லி புலம்பி என் தூக்கத்தைப் பறிச்சிட்டு அவ நிம்மதியா தூங்குறான்னு நினைச்சா, உங்களுக்கும் அதே நிலைமை தானா.” என்று மனதோடு நினைத்து சிரித்துக்கொண்டான்.

     “எத்தனை மணிக்கு வரனும்.” தர்மா கேட்க, “நான் ஆல்ரெடி மொட்டைமாடிக்கு வந்துட்டேன்.” நாகாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.

     “நான் மாடிப்படி ஏறிக்கிட்டு இருக்கேன்.” என்று அனுப்பி இருந்தான் தெய்வா.

     அவர்களை ஒரு வார்த்தை கேட்காமல் இப்படி ஒரு குரூப் ஆரம்பித்ததற்காக மற்ற மூவரும் தன்னைத் திட்டுவார்கள் என்று நினைத்திருந்த செல்வாவிற்கு, அவர்களிடமிருந்து வந்த குறுஞ்செய்திகள் வித்தியாசமாகவும், சொல்ல முடியாத அளவு சந்தோஷமாகவும் இருந்தது. தங்களின் குணநலன்கள் எல்லாம் மாறிவிட்டதைப் போல உணர்ந்தான்.

     அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் ஆண்கள் நால்வரும் மொட்டை மாடியில் நிலவின் நிழலில் கூடி இருந்தனர். “தெய்வா நான் நேரடியாக் கேட்கிறேன், என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ. தனிக்குடித்தனம் போகலாம் னு சொல்லி எல்லார் மனசிலும் ஆசையை விதைச்சவனே நீ தான். இப்ப இப்படி நட்டாத்துல விட்டுட்டு நீ மட்டும் கிளம்பிப் போனா என்ன அர்த்தம்.” மூத்தவனாய் பேச்சுவார்த்தை ஆரம்பித்து வைத்தான் செல்வா.

     “நாகா ஏதோ உளறினா நீ பாட்டுக்கு கோச்சுக்கிட்டு கிளம்பிடுவியா. எங்களைப் பத்தி யோசிக்க மாட்டியா.” தன் பங்கிற்கு தானும் பேசினான் தர்மா.

     “நான் வேண்ணா ஸ்சாரி கேட்டுக்கிறேன். தனிக்குடித்தனம் எல்லாம் போகாத.” நாகா சொன்னதைக் கேட்டு மற்ற மூவரும் திகைப்பில் ஆள, “எதுக்கு டா மூணு பேரும் இப்படிப் பார்க்கிறீங்க. தனியா தனிக்குடித்தனம் போகாதன்னு சொன்னேன் டா.” எனத் தன் பேச்சை நாகா மாற்ற, அவன் சொன்ன தொணி சிரிப்பை ஏற்படுத்த மற்றவர்களும் மனம் திறந்து சிரித்தனர்.

     இவர்களிடம் இருந்து சற்று தொலைவில் நின்றபடி, “ஏன்டா இப்படியெல்லாம் என் பசங்களுக்கு ஐடியா கொடுக்கிறன்னு கேட்டீங்களே. பாருங்க என் ஐடியா அவங்களை எந்த அளவு ஒன்னு சேர்த்து இருக்குன்னு. அவங்க நாலு பேரும் சண்டை போட்டு பார்த்து இருப்பீங்க. ஒருத்தரை ஒருத்தர் இரத்தம் வரும் அளவு அடிச்சு பார்த்திருப்பீங்க. இப்படி சிரிச்சுப் பேசி பார்த்து இருக்கீங்களா. இப்ப நல்லாப் பாருங்க.

     இப்ப இப்படி இருக்கிறவங்க, கூடிய சீக்கிரத்திலே ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பாவும், ஆதரவாவும் இருப்பாங்க. அப்படி நான் அவங்களை மாத்துவேன் என்னை நம்புங்க.” தன் கை வளைவில் பாதுகாப்பாக நிற்க வைத்திருந்த வடிவேலுவிடம் சொன்னான் அரசு.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. புதுசு புதுசா ஏதேதோ பண்றாங்க ராஜ் பிரதர்ஸ்..