Loading

அத்தியாயம் 85

     “யார் அந்த கைலாஷ், அவன் எதுக்கு லீலாவைக் கொல்ல நினைக்கணும்.” தங்களின் கட்சிக்கு புதிதாய் ஆள் சேர்ந்துவிட்ட சந்தோஷத்தில் கூடுதல் விபரம் கேட்டாள் லேகா.

     “கைலாஷ், சென்ட்ரல் மினிஸ்டர் பையன். எப்படி, எங்க பார்த்தான் பழகுனான்னு தெரியல. லீலாவை ஒன்சைடா லவ் பண்ணி இருக்கான். ஆனா அந்த லீலா, அவளோட தங்கச்சிங்களுக்காக எல்லாத் தகுதியும் இருந்த இவனைப் வேண்டாம் னு சொல்லி இருக்கா. பிழைக்கத் தெரியாத முட்டாள்.

     அவனும் ஏதோதோ குட்டிக்கரணம் அடிச்சுப் பார்த்து இருக்கான். ஒன்னும் வேலைக்கு ஆகல. லீலா செல்வாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரிஞ்சு ரொம்பக் கோவத்தில் இருந்திருக்கான்.” என்க, லேகாவின் ஆர்வம் அதிகமானது.

     “நேத்து எதேச்சையா நம்ம ஹாஸ்பிடலுக்கு வந்தவன், செல்வாவை அடையாளம் கண்டுபிடிச்சு அவனை முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தான். அதைக் கவனிச்ச நான், அவனை ஒரு ஓரமா தள்ளிக்கிட்டுப் போய், என்ன ஏதுன்னு விசாரிச்சேன். முதல்ல அது வந்து அப்படி இப்படின்னு ஏதோதோ சொல்லி சமாளிக்கப் பார்த்தான்.

     கடைசியில் நான் பேசுற மாதிரி பேசினதும் எல்லா விஷயத்தையும் சொன்னான். அவனோட பேச்சில் லீலா மேல கொலைவெறியில் இருக்கான்னு நல்லாப் புரிஞ்சது.

     நான் அவனைத் தூண்டி விடும் வகையில், ‘அவ கேரக்டர் சரி இல்ல. செல்வாவோட க்ளோஸ் ப்ரண்டு என்கிட்டையே தப்பு தப்பா பேசுறா. தப்பான மெசேஜ் அனுப்புறா. நல்லவேளை நீங்க தப்பிச்சீங்கன்னு’ சொல்லி நல்லா தூபம் போட்டேன். பையன் அதைக் கெட்டியா பிடிச்சிக்கிட்டான்.” பாஸ்கர் தன் போக்கில் சொல்லிக்கொண்டே போக இதுவரை விரிந்திருந்த லேகாவின் முகம் இப்போது சுருங்கியது.

     “லீலாவோட சாவு என் கையில் தான்னு சொல்லிட்டுப் போய் இருக்கான். அவன் இருக்கிற வெறிக்கு எப்படியும் லீலாவைக் கொன்னுடுவான். நம்ம தடையும் விலகின மாதிரி ஆகிடுச்சு, அவ சாவோட பாவமும் நம்ம தலையில் விழாம இருக்க ஏற்பாடு பண்ணியாச்சு. கைலாஷ் என்கிற ஒரே கல்லை வைச்சு இரண்டு மாங்கா அடிச்சாச்சு.” பெருமையாய் சொன்னான் பாஸ்கர்.

     “பாஸ்கர், லீலாவைக் கொல்லாமல் நம்ம எல்லாரோட பிரச்சனையையும் முடிக்கிறதுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதைப் பயன்படுத்துறதை விட்டுட்டு எதுக்காக இப்படிப் பண்ண.” லேகா சொல்லவும் புருவங்கள் நெறிய அவளைக் கூர்மையாகப் பார்த்து, “என்ன சொல்ற நீ?” கோபமாய் கேட்டான்.

     “என்னோட நல்ல வாழ்க்கைக்கு செல்வா வேணும். அதுக்கு லீலாவை அவன் வாழ்க்கையில் இருந்து விலக்கணும் என்கிற ஒரே காரணத்துக்காகத் தான் அவளைக் கொல்ல நினைச்சேன்.

     ஆனா யாருக்கும் பாதகம் இல்லாத, ஒரு நல்ல வாய்ப்பு தானா அமைஞ்சு வந்திருக்கு. கைலாஷ், லீலா மேல இன்னும் காதலோட தான் இருக்கான். பேசாம அவனையும் நம்ம கூட்டணியில் சேர்த்து, எல்லோருமா சேர்ந்து செல்வாவையும் லீலாவையும் பிரிச்சு, நான் செல்வாவையும் அவன் லீலாவையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன. நமக்கும் எந்த விதமான பிரச்சினையும் வராது, நல்ல பொண்ணு லீலாவும் உயிரோடு இருப்பா தானே.” ஒருவித பதற்றத்துடன் கேட்டாள் லேகா.

     “இங்க பாரு லேகா, நீ சொல்றது வாய் வார்த்தையாக் கேட்பதற்கு வேண்ணா நல்லா இருக்கும். நடப்பில் சாத்தியப்படாது. அப்படியே சாத்தியமானாக் கூட, இதெல்லாம் நடக்க எத்தனை நாள் ஆகுமோ தெரியாது. அப்புறம் இலவு காத்த கிளி மாதிரி ஆகிடப் போகுது உன் நிலைமை. காத்து இருக்கும் போதே தூத்திக்கிறது தான் புத்திசாலித்தனம்.

     நாம நல்லா இருந்தாப் போதும், நம்மளைச் சுத்தி இருக்க எல்லோரும் நல்லா இருக்கனும் னு அவசியம் கிடையாது. அந்த லீலா உயிரோட இருந்தா என்ன, செத்தா உனக்கு என்ன. புதுசா என்ன கரிசனம் உனக்கு அவ மேல.” கடுப்பாய் கேட்டான் பாஸ்கர்.

     “கரிசனம் எல்லாம் ஒன்னும் இல்ல பாஸ்கர். என்ன இருந்தாலும் ஒரு கொலையைப் பண்ணிட்டு, எத்தனை நாளைக்கு நம்ம போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்க முடியும். இந்த மாதிரி பண்ணா யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாம எல்லோரும் சுமூகமாக வாழலாம் னு நினைச்சேன். மத்தபடி லீலா எனக்கு எப்பவும் எதிரி தான்.” என்றாள் லேகா.

     “இந்த மனநிலையோடவே இரு, இது தான் நம்ம எல்லோருக்கும் ரொம்பவே நல்லது.” என்றான் பாஸ்கர்.

     “சரி பாஸ்கர், போன தடவை செல்வா இல்லாத நேரத்தில் லீலாவை அட்டாக் பண்ணாங்க. இப்ப செல்வா அவ கூட இருக்கானே. லீலாவைக் காப்பாத்த முயற்சி பண்ணி அவனுக்கு ஏதாவது ஆகிட்டா முதலுக்கே மோசமாகிடுமே.” பதற்றமாய் சொன்னாள் லேகா.

     “அங்க சுத்தி இங்க சுத்தி உன்னோட பிரச்சனையிலே வந்து நிக்கிற. சரி, என்னால உன்னைப் புரிஞ்சிக்க முடியுது. இன்னிக்கு ஈவ்னிங் செல்வா கிளம்பும் போது, அவனுக்கு ரொம்ப மைல்டான தூக்க மாத்திரை கலந்த டிரிங்க்ஸ் குடுத்து அனுப்புறேன்.” என்க, “என்ன பைத்தியக்காரத்தனம் இது.” பதறினாள் லேகா.

     “ரொம்ப பயப்படாதே. இப்பெல்லாம் இராத்திரி பகலா வேலை செய்யுறதால் டிரைவரோட தான் வரான், போறான். அதனால் அவனுக்கு ஒன்னும் ஆகாது. வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலேயே அசந்து தூங்கிடுவான். என்ன நடந்தாலும் அவனுக்குத் தெரியாது. சோ நடக்கப் போற அட்டாக்கினால் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. இப்போ உனக்கு ஓகே தானே.” பாஸ்கர் கேட்க,

     “சரி பாஸ்கர், நாளைக்கு நம்ம எல்லோருக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கும் என்கிற நம்பிக்கையோட விடியலுக்காக காத்திருக்கேன்.” சொல்லிவிட்டு மருந்துகளின் உபயத்தினால் உறக்கத்திற்காக கண்களை மூடினாள் லேகா.

     இங்கே, செல்வாவும், தர்மாவும் சேர்ந்து பிரித்து விட்ட நாகாவும், தெய்வாவும் இன்னும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி தான் நின்று கொண்டிருந்தனர்.

     “இந்த இழவுக்குத் தான் நான் உங்க கூட இருக்க முடியாதுன்னு தலைபாடா அடிச்சுக்கிறேன். அப்பாவும், ருக்குவும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. அவங்க போதாதன்னு இப்ப இவன் வேற.

     உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு ப்ரோமோஷன் வித் ட்ரான்ஸ்பர் தான் கிடைச்சிருக்கு. நான் நினைச்சிருந்தா நீங்க எக்கேடும் கெட்டுப் போங்கன்னு விட்டுட்டு, இதையே காரணமா காட்டி, ருக்குவை மறுக்க முடியாத சூழ்நிலையில் நிறுத்தி என்கூட தனியா கூட்டிட்டு போய் இருக்க முடியும்.

     ஆனா நான் அப்படிப் பண்ணல. சும்மா இருந்தவங்களுக்கு நாம தான் இப்படி ஒரு ஆசையை வளர்த்து விட்டோம். இப்போ அவங்க எல்லாரையும் தனியா விட்டுட்டு, நாம மட்டும் தனிக் குடித்தனம் போறதான்னு யோசிச்சு அமைதியா இருந்துட்டேன். ஆனா இப்ப தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது.” என்றான் தெய்வா.

     “ஆமா இவரு கூப்பிட்டா, அப்படியே இவரு பொண்டாட்டி நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே வந்துடப் போறாங்க. நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்குமாம்.

     உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? எங்களுக்காக ஒன்னும் நீ டிரான்ஸ்பர் ஆபரை நிராகரிச்சு இருக்க மாட்ட. உன் பொண்டாட்டி எப்படியும் இதுக்குச் சம்மதிக்க மாட்டாங்கன்னு உனக்குத் தெரியும். அதனால் வேண்டாம் னு சொல்லிட்டு எங்ககிட்ட வந்து சீன் போட்டுட்டு இருக்க.” என்றான் நாகா.

     கோபமாக தெய்வா ஏதோ பதில் சொல்ல வரும் முன்னர், “உனக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தா, உன் பொண்டாட்டிகிட்ட போய் டிரான்ஸ்பர் பத்தி சொல்லி, அவங்களை உன் கூட தனியா கூட்டிட்டு போ பார்ப்போம்.” ஏற்றி விட்டான் நாகா.

     “என்னால முடியாதுன்னு நினைக்கிறியா? இதுவரைக்கும் உங்களைப் பத்தி யோசிச்சு பைத்தியக்காரத்தனமா இருந்துட்டேன். இனிமேல் அப்படி யோசிக்க வேண்டிய அவசியமில்லை. என் வாழ்க்கையை மட்டும் பார்த்துப் போய்க்கிறேன். சொல்லப்போனா எனக்கு அது சுலபமும் கூட.

     இன்னைக்கு நைட்டு ருக்கு கிட்ட பேசுறேன். இன்னும் ஒரு வாரத்துல தனிக்குடித்தனம் போறேன். நீங்க மூணு பேரும் எப்படியும் போங்க.” என்றுவிட்டு கோபித்துக் கொண்டு கிளம்பினான் தெய்வா.

     “நாகா, எப்ப தான் உன் முன் கோபத்தைக் குறைச்சுக்கப் போற. உன்னால பாரு தெய்வா கோச்சுக்கிட்டுப் போயிட்டான். அவன் சொல்றது உண்மையா இருந்திருந்தா, என்னடா பண்றது. நமக்கும் சேர்த்து தானே நல்லது பண்ண நினைச்சான் அவன். நிஜமாவே நமக்காக ட்ரான்ஸ்வர் ஆர்டரை வேண்டாம் னு அவன் சொல்லி இருக்கலாம் இல்லையா?” ஆதங்கமாகக் கேட்டான் செல்வா.

     “அது உண்மையோ, பொய்யோ அதைப் பத்தி எல்லாம் எனக்குக் கவலை கிடையாது. ஆனா என்னால அடிச்சு சொல்ல முடியும், அவன் பொண்டாட்டி அவன் கூட கிளம்ப மாட்டாங்க. எப்படியும் திரும்ப நம்மைத் தேடி வரத் தான் செய்வான். அதனால கவலைப்படாமல் போய் உங்க வேலையைப் பாருங்க.” சாதாரணமாகச் சொன்னான் நாகா.

     “எனக்கு என்னவோ தெய்வா அவன் பொண்டாட்டியைக் கூட்டிகிட்டுக் கிளம்பிடுவான்னு தோணுது. நாம மூணு பேரும் தான் கடைசிவரைக்கும் இப்படிக் கஷ்டப்பட போறோம். எல்லாம் உன்னால தான் நீ கொஞ்சம் அமைதியா இருந்திருக்கணும் நாகா.” என்றான் தர்மா.

     “ஐயா சாமி அப்படியே அவன் அவனோட பொண்டாட்டி கூட தனிக்குடித்தனம் போனாலும், அது அவன் திறமை. உன் திறமையைக் காட்டி உன் பொண்டாட்டியை தனியா பிரிச்சு கூட்டிட்டு போ. சும்மா அடுத்தவங்க மேல பழிய போட்டுக்கிட்டு இருக்காதே.” என்று விட்டு தானும் கிளம்பி விட்டான் நாகா. சில நாள்களாக அவர்களுக்குள் இருந்த இணக்கம் இப்போது சற்றே விரிசல் விட்டிருந்தது.

     வேகமாகக் கிளம்பி வந்த தெய்வா, இரவு வரை கூட பொறுத்திருக்க மனம் வராமல், ஹாலில் டீவி பார்த்துக்கொண்டிருந்த மனைவியை அழைத்தான்.

     ”ருக்கு”

     “வாங்க இப்ப தான் வரீங்களா? காபி வேணுமா டீ வேணுமா?” அக்கறையாய் விசாரித்தாள்.

     “அது எதுவும் வேண்டாம். இப்படி பக்கத்தில் வந்து உட்கார். நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.” என்றான் அவன்.

     “சொல்லுங்க” என்ற படி அவன் அருகே வந்து அமர்ந்தாள் ருக்கு.

     “எங்க உன் வாலுங்க யாரையும் காணும் தனியா உட்கார்ந்து இருக்க.” என்க, “என்ன கிண்டலா எல்லாரும் ஊர்மி கூட இருக்காங்க. நீங்க வருவீங்கன்னு நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.” என்றாள்.

     “ஏன் ருக்கு, நீ என்னை விரும்புற தானே. என் மேல ரொம்ப பாசம் வச்சு இருக்க தானே.” தூண்டில் போடும் வேலையைச் செவ்வெனே செய்தான்.

     “இவ்வளவுக்குப் பின்னாடியும் இந்தச் சந்தேகம் உங்களுக்குப் போகலையா?” சிரிப்பு தான் வந்தது ருக்குவிற்கு.

     “கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு ருக்கு. இதுக்கு முன்னாடி சொல்லி இருந்தா, இப்ப நான் கேட்கும் போது சொல்லக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன?” தம்பியால் ஏறிய கோபம் மனைவியிடம் கொப்பளிக்கப் பார்க்க, சிரமப்பட்டு அதை அடக்கினான்.

     “இருக்குங்க, எனக்கு உங்க மேல் நிறையவே பாசம் இருக்கு. நாளைக்கு நமக்கு எத்தனை குழந்தைங்க பிறந்தாலும், என்னோட முதல் பிரையாரிட்டி நீங்களா தான் இருப்பீங்க போதுமா?” என்க, அக்கா தங்கைகளை இழுக்காமல் வருங்காலக் குழந்தைகளை வைத்து அவள் சொன்ன பதில் இன்பமாய் இருக்க, அதே மனநிலையுடன், “எனக்காக என்ன வேண்ணாலும் பண்ணுவியா?” ஏக்கமாகக் கேட்டான்.

     ஏதோ வில்லங்கம் வரப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டவள், “என்னால பண்ண முடிஞ்ச எல்லாத்தையும் நான் உங்களுக்காக கட்டாயம் பண்ணுவேன்.” சுதாரிப்பாகச் சொன்னாள்.

     “நான் உன்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லப் போறேன். அதைக் கேட்டதுக்கு அப்புறம் நீ கோபப்படக் கூடாது.” என்பதாய் பீடிகை போட, இவள் முகத்தில் குழப்ப ரேகைகள் ஓடியது.

     “என்னங்க பெரிய பில்டப் எல்லாம் கொடுக்குறீங்க. அப்ப கண்டிப்பா எனக்குப் பிடிக்காதது ஏதோ ஒன்னு தான் பண்ணப் போறீங்க கரெக்டா.” கணவனைச் சரியாகவே கணித்திருந்தாள்.

     “எப்பப் பாத்தாலும் இப்படியே தான் நினைப்பியா?” என்று கத்தியவன் அடுத்த கணம் தன் தவறை உணர்ந்தவனாக பெருமூச்சு விட்டவாறு தொடர்ந்தான்.

     “எனக்கு ப்ரமோஷன் கிடைச்சது இல்லையா?”

     “ஆமா அதைச் சொல்லித்தான் வீட்டையே இரண்டாக்கிட்டீங்களே, இப்ப எதுக்கு மறுபடியும் தனியா சொல்லிக்கிட்டு இருக்கீங்க.”

     “ருக்கு என்னைப் பேச விடு.”

     “சரிப்பா” என்றவாறு தனது வாயை மூடிக்கொண்டு அமைதியாக அவன் சொல்லப் போவதை கேட்க தயாரானாள் அவள்.

     “என்னோட ப்ரமோஷனோட சேர்த்து எனக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்து இருக்காங்க. இன்னும் ஒரு வாரத்தில் நான் அந்த புது ஊரில் போய் ஜாயின் பண்ணனும்.” என்றுவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான் தெய்வா.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. என்னடா இன்னும் சண்டை ஆரம்பிக்கலையே அப்படின்னு பார்த்தேன்.. ஆனா நாகா ஓரளவுக்கு இப்போ நல்ல வார்த்தைகளா பேசுறான்.. இல்ல இந்த லேகா பைத்தியம் முன்னாடியே செல்வாவை கல்யாணம் பண்ணாம இப்போ எதுக்கு லீலாவை கொல்லனும்னு யோசிக்குது.. எனக்கென்னவோ கைலாஷ் நல்லவனோ அப்படின்னு தோணுது..