
அத்தியாயம் 25
“ சரி வா , சாப்பிட போலாம் .” என்ற தேவ் , வண்டியில் இருந்து இறங்கினான் .
தீப்ஷீயும் அவன் பின்னே இறங்கினாள் . சாப்பிட்ட பின் பணம் செலுத்த தேவ் போக வேகமாக அங்கு வந்த டிரைவர் , “ சார் , சத்யா அண்ணா பணம் தந்திருக்காங்க . இந்த பயணம் முழுசும் அவரோட செலவுனு சொல்ல சொன்னார். “ என்றார் .
‘ சத்யா செய்ற அலப்பறை தாங்க முடியல்லை. ‘ என்று நினைத்த தேவ் வெளியில் , “ சரி. “ என்றவன் வெளியே சென்றான் .
பின் மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர் . “ அண்ணா , எப்படி சரியா எனக்கு பிடிச்ச ரெஸ்டாரன்ட்ல நிறுத்தினீங்க? “ என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
“ சத்யா அண்ணன் தான் இங்க நிறுத்த சொல்லி சொன்னார்.” என்றார் .
“ ஓ ! சரிங்க ணா .” என்றாள் தீப்ஷீ .
‘ இவளின் சின்ன விருப்பத்தையும் தெரிஞ்சி வெச்சிருக்கான் . சென்னை போனதும் முதலில் சத்யாவிடம் கிளாஸ் போகணும் இவளுக்கு பிடிச்சதை தெரிஞ்சிக்க.’ என்று முடிவெடுத்தான் தேவ் .
ஒருவழியாக வத்தலக்குண்டு வர . “ சார் மதியானம் சாப்பிட நிறுத்த வா? “ என்றுக் கேட்டார் டிரைவர் .
“ இல்லை வேண்டாம் , மலையில் ஏறும் போது வாமிட் வரும் . அங்க போய் சாப்பிட்டுக்கலாம். “ என்றான் தேவ் .
“ ஓகே சார். “ என்றார் .
வத்தலக்குண்டுவிலே தொடங்கிவிட்ட இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தாள் தீப்ஷீ . அவளை ரசித்துக் கொண்டு வந்தான் தேவ் .
அவர்கள் தங்க வேண்டிய நேச்சர்ஸ் லவ் ரெசார்ட் வந்துவிட . இவர்கள் இருவரும் இறங்கினர் .
“ வெல்கம் டு கொடைக்கானல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் தேவ். “ என்று அவர்களை பொக்கேவோடு வரவேற்றான் அசோக் .
“ தேங்க்ஸ் மிஸ்டர் அசோக். “ என்ற தேவ் அதைப் பெற்றுக்கொண்டான் .
இருவரும் தங்கள் பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர் .
அவர்கள் தங்க போகும் குடிலின் ரூம் சாவியை ரிசப்ஷனில் பெற்றுக்கொண்டு , அவர்களுக்கு வழியை காண்பிக்கக் கூட வந்தான் அசோக் .
குடிலின் கதவை திறந்த அசோக் வெளியே நிற்க , தீப்ஷீ உள்ளே சென்றாள் .
“ லஞ்ச் இங்கே கிடைக்கும் ஃபோன் செய்து ஆர்டர் பண்ணிக்கோங்க . இல்லணா வெளியே போகலாம்னாலும் ரெப்ரெஷ்ஷாகிட்டு வாங்க . அப்படியே சாப்பிட்டு கொஞ்சம் வெளியே சுத்தி பார்த்துட்டு வரலாம் .” என்றான் அசோக் .
தேவ் திரும்பி ரூமைப் பார்க்க , அங்கு தீப்ஷீ பெட்டில் சோர்வாக படுத்திருந்தாள் .
“ இல்ல அசோக் , நாளையிலிருந்து வெளியே போகலாம் . இன்னைக்கு ஓய்வெடுத்துட்டு ரெசார்ட்ட சுத்தி பார்க்கிறோம் . ரெசார்ட்டே பெருசா , நல்லா இருக்கு. “ என்றான் தேவ் .
“ ஆமா சார் , இங்கு நிறைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும் . இந்த பேப்பரில் ரெசார்ட்டின் நிகழ்ச்சிக்கான இடமும் நேரமும் இருக்கு. “ என்ற அசோக் பேப்பரை தேவ்விடம் தந்தான் .
“ சரி நான் பார்த்துக்குறேன் . டிரைவர் எங்க ? “ என்றுக் கேட்டான் தேவ் .
“ எனக்கும் , டிரைவருக்கும் இங்கு தான் ரூம் புக் செஞ்சிருக்கான் சத்யா . நீங்க எந்த உதவி வேண்டும்னாலும் எனக்கு உடனே கால் பண்ணுங்க . நாளைக்கு கொஞ்சம் ஏர்லி மார்னிங் ரெடியா இருங்க. அப்போதான் இந்த கொடைக்கானலின் அழகை முழுமையா ரசிக்க முடியும். “ என்றான் அசோக் .
“ ஓகே அசோக் , நான் உனக்கு காலைல போன் பண்றேன். “ என்றான் தேவ் .
அசோக் சென்றுவிட கதவை சாத்தி உள்ளே வந்தான் தேவ் .
பெட்டில் அசதியாக தூங்கிக் கொண்டிருந்தாள் தீப்ஷீ . அவளின் டாப் சற்று மேல் ஏறி அவளின் இடையை காண்பிக்க. அவளின் ஆடையை சரி செய்து போர்வை போட்டுவிட்டான் .
“ வெளியே பார்க்க குடில் போல் இருந்தாலும் உள்ளே வசதியா தான் இருக்கு. “ என்று சத்தமாக தனியே பேசினான் தேவ் .
உள்ளே சுற்றி பார்க்க போனான் . தனியாக குடில் உள்ளே நீச்சல் குளம் இருந்தது . அதன் வழியே சென்றான் தேவ் . முதலில் மறைவாக இருந்த நீச்சல் குளம் பின் வெளியே வந்தது , அங்கு தண்ணீரில் நின்றுக் கொண்டே நீர்வீழ்ச்சி மற்றும் மலைகளின் அழகை ரசிப்பதுப் போல் அமைந்திருந்தது . தண்ணீரை சூடாக்கவும் வழி செய்திருந்தது தான் இதன் சிறப்பே .
‘ இவ்வளவு அழகா இந்த குடிலை அமைத்தவன் உண்மையிலே திறமைசாலி தான். ‘ என்று நினைத்தான் தேவ் .
மீண்டும் உள்ளே வந்த தேவ் மணியை பார்த்தான் மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது .
போனை எடுத்தவன் இருவருக்குமான உணவை ஆர்டர் செய்தான் .
“ தீப்ஷீ , எழுந்து முகம் கழுவி வா , ஃபுட் ஆர்டர் பண்ணியிருக்கேன் , சாப்பிடலாம். “ என்றான் தேவ் .
“ எனக்கு வேண்டாம். “ என்ற தீப்ஷீ மறுபுறம் திரும்பி படுத்தாள் .
“ சரி நீ அப்படியே படுத்துக்கோ நான் உனக்கு ஊட்டிவிடுறேன். “ என்றான் தேவ் .
வேகமாக எழுந்த தீப்ஷீ , முகம் கழுவ சென்றாள் .
தேவ் அமைதியாக சிரித்துக்கொண்டான் .
முகம் கழுவி வந்தவள் , குடில் உள்ளே சென்று பார்க்க அசந்து தான் போனாள் அதன் அழகில் .
“ சும்மா சொல்லக்கூடாது உன் நண்பன் ரொம்ப அழகான ரெசார்ட்டை தான் நமக்கு புக் பண்ணிருக்கான்.” என்றான் தேவ் .
அவன் கூறிய விதம் ஏனோ சத்யாவை கேலி செய்வது போல் இருக்க. தேவ்வை பார்த்து முறைத்தவள், பின்பு திரும்பிக் கொண்டாள் .
உணவு வர , இருவரும் அமைதியாக உண்டனர் . உணவும் சுவையாக இருக்க , இருவரும் அதிகமாகவே உண்டனர் .
சாப்பிட்டு முடிந்ததும் , “ வா தீப்ஷீ , வெளியே ரெசார்ட்டை சுத்தி பார்க்கலாம். “ என்றான் தேவ் .
“ நான் வரமாட்டேன். “ என்றாள் தீப்ஷீ வீம்பாக .
“ ஓ ! அப்போ இங்கே இரண்டு பேரும் ஜாலியா இருக்கலாம்னு சொல்கிறாயா? எனக்கும் ஓகே தான். “ என்ற தேவ் டீஷர்ட்டை கழட்டினான் .
வேகமாக மறுபுறம் திரும்பிய தீப்ஷீ , “ வெளிய போகலாம். “ என்றவள் குடிலைவிட்டு வெளியே ஓடினாள் .
‘ச்ச நான் என்ன சொன்னாலும் என்ன ஈசியா கார்னர் பண்றான். ‘ என்று நினைத்தாள் தீப்ஷீ .
சிறு புன்னகையோடு மீண்டும் டீஷர்ட்டை அணிந்தவன் வெளியே வந்தான் .
“ வா இந்த பக்கம் பாஸ்கெட்பால் ஸ்டேடியம் இருக்கு. “ என்ற தேவ் தன் கையில் உள்ள பேப்பரை வைத்து வழி பார்த்துக் கொண்டே வந்தான் .
இவர்கள் சென்ற நேரத்தில் யாரும் இல்லாததால் , போனதும் பாலை எடுத்த தேவ் அதை தீப்ஷீயிடம் தூக்கி போட்டான் .
பாலை அசால்டாக பிடித்த தீப்ஷீ மீண்டும் தேவ்விடம் தூக்கி போட்டவள் , “ ஐ எம் நாட் இன்ட்ரஸ்ட்டடு. “ என்றாள் .
“ கமான் தீப்ஷீ , என்னப் பார்த்து பயப்படாதே. “என்ற தேவ் அவளை சீண்டிவிட்டு , பாலை தூக்கி போட்டான் .
“ ஓகே நாம விளையாடலாம் . ஆன , போட்டி வெச்சுக்கணும். “ என்றாள் தீப்ஷீ .
“ ஓகே . உனக்கு த்ரி சான்ஸ் எனக்கு த்ரி சான்ஸ் , யார் அதிக பால் ஷூட் செய்றாங்களோ அவங்க வின்னர் . ஓகே வா?” என்றான் தேவ் .
“ ஓகே. “ என்ற தீப்ஷீ பாலை எடுத்துக் கொண்டு முன்னே வர .
அவளை சாதாரணமாக எடை போட்ட தேவ் அவளிடமிருந்து பாலை வாங்க வர , அவன் முயற்சி எடுக்கும் முன்பே தீப்ஷீ நின்ற இடத்திலிருந்து குதித்து பாலை சரியாக ஷூட் செய்தாள் .
பாலை எடுத்த தேவ் , தீப்ஷீ அருகே வர . தீப்ஷீ அவனை தடுக்க தயாராக இருந்தாள் . ஆனால் , தேவ் , தீப்ஷீக்கு முதுகை காண்பிப்பதுப் போல் திரும்பி நின்றான் .
அவன் என்ன செய்கிறான் என்பதுப் போல் தீப்ஷீ பார்த்துக் கொண்டு நிற்க . அவன் அசால்டாக பாலை கூடையை பார்க்காமலே போட அது சரியாக ஷூட் ஆனது .
தீப்ஷீ , தேவ்வை வியப்பாக பார்க்க அவன் முகத்தில் சிறு புன்னகை மட்டுமே.
தீப்ஷீ முன்னே வர, இந்த முறை அவளிடம் இருந்து எளிதாக பாலை வாங்கிய தேவ் அதை ஷூட் செய்தான் . இப்போது அவனுக்கு டூ பாயிண்ட்ஸ் தீப்ஷீக்கு ஒன் பாயிண்ட் .
தேவ் முன்பு போல் இப்பொழுதும் பின் புறமாக போட முயற்சி செய்ய . இந்த முறை தீப்ஷீ சரியாக குதித்து பாலை தடுத்தவள் தேவ் திரும்பியதும் பாலை ஷூட் செய்து அவளின் பாயிண்ட்டையும் இரண்டாக்கிக் கொண்டாள் .
இந்த முறை தேவ் அவளை பெருமிதமாக பார்த்தான் .
கடைசி முறை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று வேகமாக தீப்ஷீ வர . அந்த இடத்தில் இருந்த தண்ணீரை அவள் கவனிக்கவில்லை . அதை கவனித்த தேவ் வேகமாக அவள் அருகே வந்தான் .
அவள் சரியாக விழ போன நேரத்தில் அவளை தூக்கிக் கொண்ட தேவ் கூடை அருகே அவளை தூக்கி சென்றான் .
முழு கவனமும் விளையாட்டில் இருக்க , பாலை ஷூட் செய்தாள் தீப்ஷீ . பின் தான் தேவ் தன்னை தூக்கி இருப்பது புரிய கோபமாக , “ என்ன கீழே விடு? “ என்றாள் .
தீப்ஷீ கோபமாக வெளியே போக நினைக்க . “ என்ன பயந்து பாதியிலே ஓடுற? “ என்றான் தேவ் .
மீண்டும் விளையாட வந்தாள் தீப்ஷீ . ‘ நீ தான் ஜெயிக்க போற . உன் கண்ண நேரா பார்த்தால் என் கவனமே போயிடும் . அதான் பின் பக்கமா போட்டுட்டிருக்கேன் . இந்த முறை கண்டிப்பா நேரா போட்டா தான் ஜெயிக்க முயற்சியாவது செய்ய முடியும். ‘ என்று நினைத்த தேவ் , தீப்ஷீ அருகே சென்றான் .
தேவ் அவளின் கண்களை பார்த்துக்கொண்டே பாலை கீழே தட்டிக் கொண்டிருந்தான் சரியான நேரத்தில் ஷூட் செய்ய அவன் காத்திருக்க .
அவளின் விழியில் தேவ் மாட்டிக்கொள்ள அவனின் கையிலிருந்த பாலை தீப்ஷீ வாங்கி ஷூட் செய்து ஜெயித்துவிட்டாள் .
அவளின் முகத்தில் கர்வமான வெற்றி புன்னகை இருந்தது .
‘ நான் உன்னிடம் இன்றில்லை, பல வருடங்களாக தோற்றுக்கொண்டு தான் இருக்கிறேன் . ஆனா , உனக்கு தான் அது தெரியல்லை. ‘ என்று நினைத்தான் தேவ் .
அவன் முகத்தில் புன்னகை மட்டுமே சிறுவயதில் அவனுக்கிருந்த கோபம் , ஈகோ எல்லாம் மாயமாய் மறைந்து போனது .
“ எக்ஸ்க்யூஸ் மீ. “ என்று அவர்கள் அருகில் வந்தான் ஒரு சிறுவன் .
இருவரும் அவனை கேள்வியாக பார்க்க .
“ என் பெயர் சஞ்சய் . நான் உங்களோட தீவிர ரசிகன் . எனக்கு உங்களின் ஆட்டோகிராப் கிடைக்குமா ?” என்றுக் கேட்டான் .
“ ஒய் நாட்? “ என்ற தேவ் அவன் தந்த நோட்டில் கையெழுத்து போட்டான் .
“ நீ டைக்குவாண்டோ ப்ளேயரா ? “ என்றுக் கேட்டான் தேவ் .
“ எஸ். “ என்றான் சஞ்சய் .
“ வரீயா நாம விளையாடலாம் . ஆனா, இங்கு டைக்குவாண்டோ ரிங் இல்ல. உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே? “ என்றுக் கேட்டான் தேவ் .
“ எனக்கு உங்களோடு விளையாட வாய்ப்பு கிடைச்சா , ஐ எம் தி லக்கியஸ்ட் பாய் இன் தி வேர்ல்ட். “ என்றான் சஞ்சய் .
தேவ் திரும்பி தீப்ஷீயை பார்க்க , அவள் அங்கு பார்வையாளர்கள் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்திருந்தாள் .
தேவ் , சஞ்சயோடு விளையாடிக் கொண்டே அவனுக்கு பல விளையாட்டு முறையை கற்று தந்தான் .
அவன் மேல் முதல் முறையாக மரியாதை வந்தது தீப்ஷீக்கு , “ ஆட்டோகிராப் கேட்டு வந்தவனுக்கு சொல்லி தருகிறான் எந்த தலைகனமும் இல்லாமல் . இவனுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம் போல். “ என்று நினைத்துக் கொண்டாள் தீப்ஷீ .
இருபது நிமிடம் கழித்து வந்த தேவ் , “ வா தீப்ஷீ , இங்கு பிடிஎஸ் கிபாப் நைட் மியூசிக் டிஸ்கோ நடக்குது போலாம் .” என்றான் தேவ் .
தீப்ஷீ பிடிஎஸ் இன தீவிரமான விசிறி. அதுவும் அவங்க பாட்டை அதிக சத்தத்தில் கேட்க ரொம்ப பிடிக்கும் என்பதால் அமைதியாக அவனோடு அங்கு சென்றாள் .
அங்கு சென்றதும் அமைதியாக உட்கார்ந்து மற்றவரின் ஆட்டத்தை ரசித்தாள் தீப்ஷீ .
‘ நான் ஆட கூப்பிட்டா இவள் எப்படியும் வர மாட்டாள் .’ என்று நினைத்த தேவ் அவன் மட்டும் மற்றவர்களோடு ஆடினான் .
அவனோடு ஆட பல பெண்கள் முன்வர அதைக் கண்டு எந்த பொறாமையும் படவில்லை தீப்ஷீ , ‘ இவன் பின்னால் வர இவ்வளவு பேர் இருந்தும் எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டான்? ‘ என்று நினைத்தாள் தீப்ஷீ .
அவளின் ரியாக்ஷனை திரும்பி பார்த்தான் தேவ் . எந்த கோபமோ , பொறாமையோ இல்லாமல் அமைதியாக இருந்தாள் தீப்ஷீ .
‘ காதலோ அன்போ என் மேல் இருந்தால் தான நான் வேறு ஒருத்தியோடு ஆடும் போது கோபம் வர ? எங்க, அங்க அதெல்லாம் இல்லையே . ‘ என்று வேதனையாக நினைத்த தேவ் தன் ஆட்டத்தை தொடர்ந்தான் .
“ ஹலோ லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் , நம்ம ரெசார்ட்டின் வழக்க படி தினமும் இரண்டு ஹனிமூன் கப்புள்ஸை தேர்ந்தெடுத்து அவங்களை டான்ஸ் ஆட வெச்சி , பெஸ்ட் டான்ஸிங் கப்புள் வில் கேட் பெஸ்ட் கப்புள் அவார்டு அண்ட் கிப்ட் . சோ, டுடே கப்புள்ஸ் ஆர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆதி அண்ட் மிஸ்டர் அண்ட் மிஸஸ் தேவ் .” என்றான் டிஜே .
ஆதி ஜோடி முதலில் ஏறி மகிழ்ச்சியில் ஆர்ப்பாட்டம் செய்துக்கொண்டிருந்தனர் .
தீப்ஷீயை பார்த்த தேவ் பின் டிஜேவிடம் வர விருப்பமில்லை என்றுச் சொல்ல நினைத்து திரும்பினான் .
ஸ்டேஜ்ஜில் நின்ற ஜோடி இவர்களிடம் நீங்க தோற்றுவிடுவீர்கள் என்பதை சொல்வதுப் போல் தம்ஸ் டவுன் காண்பிக்க .
‘ நான் தோற்பதா? ‘ என்று நினைத்த தீப்ஷீ . தேவ் பேசுவதுக்கு முன் அவன் கையை பிடித்து ஸ்டேஜ்ஜிற்கு அழைத்துச் சென்றாள் .
தேவ் தரையில் நடக்கிறானா இல்லை வானத்தில் பறக்கிறானா என்று அவனுக்கே தெரியவில்லை . தேவ்வின் நீண்ட நாள் கனவு தீப்ஷீயோடு டான்ஸ் ஆடுவது . அது இன்று நிஜமாக போகும் மகிழ்ச்சியில் இருந்தான் தேவ் .
முதலில் ஆதி கப்புள் டான்ஸ் ஆடினர் பின் இவர்கள் முறை வர ,
“ மழையில் நனையும் பனி மலரை போலே
என் மனமே நனைந்தேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உன்னை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய் “
என்ற பாடலுக்கு இருவரும் கண்களை பார்த்துக்கொண்டு மிகவும் அழகாக ஆடினர் .
அங்கிருந்திருந்த அனைவரும் இவர்களின் நடனத்தை மெய் மறந்து பார்த்து ரசித்தனர் . எந்த சந்தேகமும் இல்லாமல் பெஸ்ட் கப்புள் அவார்டு பெற்றனர் தேவ் ஜோடி .
டிஜேவிடம் தீப்ஷீ அறியாமல் அவர்கள் ஆடிய நடனத்தின் போட்டோஸ் மற்றும் வீடியோவை பெற்றுக்கொண்ட தேவ் , தீப்ஷீயோடு ரெசார்ட்டின் ரெஸ்டாரன்ட் சென்றான் .
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக உணவு உண்டனர் . பின் அறைக்குச் சென்றனர் .
“ தீப்ஷீ , ஏர்லி மார்னிங் கோக்கர்ஸ் வாக் போகணும். சீக்கிரமா ரெடியாகிடு. “ என்றான் தேவ் .
சரி என்பது போல் தலை ஆட்டிய தீப்ஷீ அமைதியாக சென்று படுத்துக் கொண்டாள் . தேவ்வோடு டான்ஸ் ஆடியதால் எங்கு அவன் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்ளுவானோ என்று பயந்தாள் .
அவளின் பயத்தை தேவ்வும் உணர்ந்திருந்தான் , ‘ என்னை நீ புரிந்துக்கொண்டது அவ்வளவு தான் . உன்னோடு நான் வாழ்ந்த இந்த ஒரு நாள் போதும் ஆயுள் உள்ளவரை நான் சந்தோஷமா வாழ .’ என்று நினைத்தவன் குளிரையும் கண்டுக்கொள்ளாது நீச்சல் குளத்தில் விழுந்தான் .
இந்த நாளின் இனிமையை தண்ணீரின் குளுமையோடு நினைவுக் கொண்டான் தேவ் .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தேவ் நீயும் என்னென்னமோ செஞ்சு தான் பார்க்குற .. தீப்ஷி மனசுல என்ன இருக்கு தெரியலையே