Loading

அத்தியாயம் -24

சாம்பவியைப் பார்த்து  சஹா “எ…எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சா…சாகணும்” என்று அவளைப் பார்த்து சொன்னான்.அவளோ கன்னத்தில் கைவைத்துக் கொண்டு “என்ன உண்மை தெரியனும்?” என்று சாதாரணமாகக்  கேட்டாள்.

உடனே பார்த்தி உங்களுக்கும் நிரஞ்சனுக்கும் என்ன பிரச்சினைன்னு தெரியனும்” என்று நேராக கேட்டான்.உடனே சாம்பவி பதில் சொல்வதற்கு முன் காந்தன் “உங்களுக்கு விருப்பம்னா சொல்லுங்க மேம் இல்லைன்னா பரவாயில்லை” என்று காந்தன் கேட்கவும் சாம்பவி இதற்கு மேல் உண்மையை மறைக்காமல் அவர்களிடம் பேசலாம் என்று முடிவெடுத்தாள் சாம்பவி.

தனிமை கொஞ்ச நேரம் இருந்தால்  பரவாயில்லை என்று  தோன்ற நிரஞ்சன் நேராக கடற்கரைக்குச் செல்வதற்காக தன் வாகனத்தை வேகமாகச் செலுத்தினான்.

மூவரும்  சாம்பவியைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.சாம்பவி “எனக்கு நிரஞ்சனை பிடிச்சு இருக்குன்னு சொன்னேன்” அதைக் கேட்டதும் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

உடனே சஹா “அ…அவன் உடனே முடியாதுன்னு சொல்லி இருப்பேனே!” என்றதற்கு சாம்பவி ஆமாம் என்று தலையசைத்தாள்.

உடனே  பார்த்தி “அவன் அப்படித் தான் முதல் காதல் சரியாக வரலைன்னு அடுத்த காதலை வளர்த்துக்க கூடாதா என்ன?” என்று கவலையாகக் கேட்டான்.

உடனே சஹா “அ…அதானே ஆனால் அதுக்காகவா நிரஞ்சன் முகம் இவ்வளவு  கோபமா இருந்துச்சு”

“இல்லை நான் யாழினி தான் பெயரைச் சொன்னேன்”

உடனே காந்தன் அவசரமாக  “யாழினியை உங்களுக்கு தெரியுமா?”

“ம்ம்… தெரியும்”

உடனே பார்த்தி “இது எப்போ?”

“எனக்கு யாழினியை அப்பவே  தெரியுமே” என்றாள்.

தலையில் அடித்துக் கொண்ட சஹா “போ…போச்சு உங்க காதலை நீங்களே புல்டவுசர் வைச்சு இடிச்சுட்டீங்க”

அவளோ புரியாமல் “என்னச் சொல்லுறீங்க?”

உடனே பார்த்தி “அதாவது உங்க காதலை நீங்களா சொல்லி இருந்தால் கூட அவன் யோசித்து இருப்பான் நீங்க சம்பந்தமே இல்லாமல் எதுக்கு யாழினி பெயரை எடுத்தீங்க? அவங்க தான் ஏற்கனவே அவனை ஏமாத்திட்டு போயிட்டாங்களே! இதுல நீங்களும் அதைத் தானே செய்வீங்கன்னு அவன் நினைப்பான்”என்று நிரஞ்சனின் மனநிலைமையைச் சொன்னான்.

உடனே சாம்பவி “ஹோ… அப்படியா! எனக்கு இதைப் பத்தி சரியா தெரியலை நான் பொதுவாகத் தான் சொன்னேன்”

சஹா “எல்லாம்  மு…முடிஞ்சு போச்சு” என்று கவலையாகச் சொன்னான்.

பார்த்தி “பிரச்சினை இல்லை நாம நிரஞ்சன்கிட்டே எதாவது பேசி அவனை சமாதானம் பண்ணலாம்” என்றான்.

சாம்பவி “அதுக்கு வாய்ப்பில்லை” என்றாள்.

மூவரும் ஒன்றாக “ஏன் அதுக்கும் எதாவது பதில் சொன்னானா?” என்று ஆர்வமாகக் கேட்டனர்.

அவளோ சோகமாக ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.மூவரும் சாம்பவியைப்  பார்த்துக் கொண்டிருந்தனர்.அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று.

சாம்பவி அமைதியாக இருந்தாள்.சஹா “அவன் எ…என்ன காரணம் சொன்னான்?”

“சீக்கிரம் சொல்லுங்க” என்று அவசரப்படுத்தினான் பார்த்தி.

“நீங்க மூணு பேரும் அமைதியா இருந்தீங்க அதான் நானும் பேசாம இருந்தேன்.நிரஞ்சன் வேற யாரையோ  விரும்ப ஆரம்பிச்சு இருக்கேன்னு சொன்னாங்க  அதனால என்னுடைய காதலை ஏற்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்று  கவலையாகச் சொன்னாள்.

அதைக் கேட்ட மூவரும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயினர்.சஹாவோ “யா…யாருடா அது? நமக்கு தெரியாமல் அவனுக்கு பிடிச்சு இருக்காமே!” என்று யோசனையில் கேட்டான். பார்த்தியோ “அவன் பொய் சொல்லி இருப்பான் சாம்பவி மேடம்கிட்டே இருந்து தற்போது எதாவது பதில் சொல்லனும் சொல்லி இருப்பான் அவனைப் பத்தி நமக்குத் தான் தெரியுமே” என்றான்.

மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர்.சாம்பவியிடம் காந்தன் “சாம்பவி மேம் நாங்க பேசினதை பெரிசா எடுத்துக்காதீங்க அவன் டென்ஷனா போகவும் தான் உங்ககிட்டே கேட்டோம் மற்றபடி ஒன்னுமில்லை.நீங்களும் எங்ககிட்டே ரொம்ப ஓப்பனா பேசுனீங்க இந்த நிறுவனத்தோட தலைவராக இருந்தும் ரொம்ப ப்ரெண்ட்லியா பேசினீங்க தாங்ஸ் மேம்” என்றான்.

உடனே சாம்பவி “எனக்கு இந்த மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் ஜாலியாக எடுத்துக் கொண்டு போறதுக்கு ப்ரெண்ட்ஸ்ஸீம் இல்லை அதற்கான நேரமும் இருந்தது இல்லை பர்ஸ்ட் உங்க கூட பேசினது நல்லா ஒரு குட் பிலீங்கா இருந்துச்சு”  என்றாள்.

உடனே பார்த்தி “அதனால என்ன மேம் இனிமேல் நாம நல்ல ஒரு ப்ரெண்ட்ஸ்ஸா இருப்போம்” என்றான்.

அதற்கு சஹாவும் காந்தனும் ஒத்துக் கொண்டனர்.சாம்பவி “அப்போ இனி மேடம் வேண்டாம் சாம்பவின்னு கூப்பிடுங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அதற்கு காந்தன் “நாம எல்லோரும் தனியாக சந்திக்கும் பொழுது அது ஓகே தான். ஆனால் வெளியில் வைத்து உங்களுக்கான மரியாதையை நாங்க எப்பவும் கொடுப்போம் அதான் எல்லோருக்கும் நல்லது” என்றான்.

காந்தனின் தன்மையான பேச்சு சாம்பவிக்கு பிடித்து இருந்தது.மற்ற இருவரையும் போல் அவன் விளையாட்டா இல்லாமல்  எல்லாவற்றையும் யோசித்து  கவனமாக பேசினான்.

பிறகு நால்வரும் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தனர்.

சாம்பவி பொதுவாக “நிரஞ்சன்  இந்த மாதிரி தனியா போய் இருக்காங்களே  உங்களுக்கெல்லாம் கவலையாக இல்லையா?”

சஹா சிரித்துக் கொண்டு “எ…எங்கே போவான்? பீச்சுல அப்படியே வானத்தை பார்த்துட்டு சோகமா நடந்துட்டு அப்படியே கொஞ்ச நேரம் கண்ணை மூடி உட்கார்ந்து வந்துடுவான் ரொம்ப அவனைப் பத்தி கவலைப்படாதீங்க” என்றான்.

இவன் இப்படி பேசியதும் அவனது முதுகில்  ஒரு அடி போட்ட காந்தன் “சும்மா இருடா அவனோட பீலிங்ஸை கிண்டல் பண்ணாதே சாம்பவி உங்களுக்கு யாழினியைப் பத்தி எப்படி தெரியும்?”

“யாழினி நானும் அடுத்தடுத்த வீடு அப்புறம் தூரத்து உறவினர்கள்.எனக்கும் அவளுக்கும் மூன்று வயது வித்தியாசம் இருக்கும்னு நினைக்கிறேன் நான் இங்கே வீட்ல இருக்கிறது கொஞ்சம் கம்மித் தான் ஏன்னா படிப்புக்காக வெளிநாட்டில் இருந்தேன் அவள் யாரையோ காதலிச்சிட்டு இருந்தான்னு தெரியும் ஆனால்  விடுமுறையில் வீட்டுக்கு வந்த பொழுது நிரஞ்சனும் யாழினியும் கல்லூரியில் படிக்கும் பொழுது காதலிச்சுட்டு  இருந்தோம் மியூஸிக்ல ரொம்ப ஆர்வம்னு எப்பவும் நிரஞ்சனைப் பத்தி தான் சொல்லிட்டே இருப்பாள்” என்றாள்.

பார்த்தி “அப்போ ஏன் நிரஞ்சனை விட்டு போனாங்க?”

“எல்லாம் குடும்பப் பிண்ணனி தான் காரணம் அவங்க நல்ல வசதி நிரஞ்சன்கிட்டே அது இல்லை. அதோடு அப்போத் தான் நிரஞ்சனும் இசைத் துறையில் தன்னுடைய திறமையை ஆரம்பிக்கிற நேரம் குடும்பம்னு இருக்க முடியுமா?கனவை நோக்கி போகனும்னு இருக்கும் போது யாழினி நகர்ந்து போறது தானே நல்லது” என்று அவள் பக்கமாக பேசினாள் சாம்பவி.

அதை மறுத்த காந்தன் “ஒரு பொண்ணாக நாம யோசித்தால் அது சரிதான். ஆனால் அவங்க சொன்னது தானே உங்களுக்குத் தெரியும் ஆனால் நடந்ததே வேறு.ஏன்னா அப்போ நிரஞ்சனோடு நான் தான் இருந்தேன்.நிரஞ்சனை யாழினி வீட்டோடு மாப்பிள்ளையாக வரச் சொன்னாங்க அவன் அப்போத் தான் ஒரு குழுவே ஆரம்பித்தான்.இன்னும் இரண்டு வருஷம் டைம் கேட்டான்.ஆனால் யாழினி அவங்க சொன்னதுக்கு ஒத்துக்கலைன்ற கோபத்துல அவனை ரொம்ப அசிங்கப்படுத்தியதோடு அவங்க திருமணம் செய்யப் போறவருடைய பணத்தையும் புகழை வைத்து இவனை கீழ்த்தரமாக பேசினாங்க எல்லாக் காதலும் சேருவது இல்லை தான்.ஆனால் சூழ்நிலை புரிந்து பிரியும் காதலில் புரிதல் இருக்கும் இப்படி இயலாமையை சொல்லி காயப்படுத்துவது காதல் இல்லை” என்று தன் நண்பனுக்கு ஆதரவாகப் பேசினான் காந்தன்.

அவனது பேச்சைக் கேட்டு எல்லோரும் அமைதியாக இருக்கவும் ஒருவிதமான அமைதி அங்கே நிலவியது.பார்த்திக்கும் சஹாவிற்கும் நிரஞ்சனின் காதல் தோல்வியையும் அவன் யாரோடும் ஒட்டிக் கொள்ளாதது வரை தான் தெரியும்.ஆனால் அவனுக்குள் இருக்கும் அவமானத்தினால் உண்டான வலி இப்போது தான் தெரிந்தது.அதனால் இருவரும் காந்தனிடம் “காந்தா நாங்க கிண்டலாக பேசியதிற்கு சாரிடா இனி எப்பவும் இந்த மாதிரி பேச மாட்டோம் நிரஞ்சனுக்கும் தெரிய வேண்டாம் அவன் ரொம்ப வருத்தப்படுவான்” என்று  உண்மையான வருத்தத்துடன் சொன்னார்கள்.

காந்தனும் “சரி விடுங்க இனிமேல் இதைப் பத்தி பேச வேண்டாம்” என்றான்.

சாம்பவிக்கு யாழினி நிரஞ்சனைப் பற்றி அடிக்கடி சொல்லியதால் ஒரு ஆர்வத்தோடு கூடிய காதல்.

ஆனால் இப்போது காந்தனின் பக்குவமான பேச்சில் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு கடற்கரைக்கு வந்தான் நிரஞ்சன். அன்றைய நாள் பொழுதும் இருந்த உற்சாகமும் சந்தோஷமும் ஒரேநொடியில் தன்னை விட்டு விலகிப் போனது போல் உணர்ந்தான்.

சில நேரங்களில் ஆறாத வடுக்களைப் பற்றி திரும்ப திரும்ப நினைக்கும் போது காயம் பட்ட இடத்தினை இன்னும் கொஞ்சம் ஆழமாக கத்தியால் அதை கிளறியதைப் போல நிலைதான் எல்லோருக்கும்.நிரஞ்சனும் இப்போது அந்த நிலையில் தான் இருந்தான்.

முன்பு எல்லாம் ஏமாற்றத்தினை கோபத்தின் மூலமாக வெளிக்காட்ட தெரிந்தவனுக்கு இப்போது அதை  கொஞ்சம் தடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான் சிற்பியால்.

அவசியமில்லாத விஷயங்களுக்கெல்லாம் அவளை காயப்படுத்த அவன் விரும்பவில்லை.முதலில் தெரியவில்லை போகப்போக கற்றுக் கொண்டிருக்கிறான்.

அதனால் தான் சாம்பவியிடம் கொஞ்சம் நிதானமாகவே பேசி விட்டு வந்தான்.

இல்லையென்றால் அப்பொழுதே நேருக்கு  நேராக மனம் நோகும் படி பேசி இருப்பான்.ஆனால் இப்போது அப்படி எல்லாம் இல்லை.சில நேரங்களில் பொறுமையும் நிதானமும் அவசியமாகிறது.

வெற்று பாதங்களை மண்ணில் புதைத்து நடந்தான்.ஏதோ தனிமை வந்து சூழ்ந்துக் கொள்ள அப்பொழுது அவனுடைய கைப்பேசி அழைத்தது.

யாரென்று சற்றே கடுப்பாக எடுத்துப் பார்த்தவனுக்கு அதில் சிற்பியின் பெயர் தெரியவும் தென்றலாய் ஒரு உணர்வு.இருந்தாலும் தற்போது அவளிடம் பேச மனம் இல்லாததால் அவளது அழைப்பினை எடுக்கவில்லை.

மறுமுறை இன்னொரு அழைப்பு அவளிடம் இருந்து தான்.இம்முறை அவனால் அதை எடுக்காமல் இருக்க மனம் ஒவ்வவில்லை.காரணம் “யார் மீதோ உள்ள கோபத்தை எல்லாம் தெளிந்த பாலைப் போல் இருக்கும் உறவுகளிடம் காட்டி கடைசியில் அவர்களை கெட்டுப்போன பாலாக மாற்றி விடுகிறோம்” என்று படித்தது நினைவுக்கு வந்ததது.

அதனால் அழைப்பு எடுத்தவன் “ஹலோ” என்று மெதுவாகச் சொன்னான்.

மறுமுனையில் சிற்பி “ஹலோ நிரஞ்சன் சார்”

“ம்ம்..சொல்லு சிற்பி”

“பிஸியா இருக்கீங்களா?”

“இல்லை ப்ரீயாத் தான் இருக்கேன் என்னாச்சு?”

“ஹோட்டல்ல தானே இருந்தீங்க”

“ஆமாம் யாரு சொன்னாங்க?” என்று யோசனையாகக் கேட்டான்.

“காந்தன் தான் சொன்னாங்க”

“நான் கொஞ்ச நேரம் வெளியே வரலாம்னு தனியாக வந்து இருக்கேன்”

அவளோ பதற்றமாய் “என்னாச்சு? எதாவது பிரச்சினையா?”

“இல்லை இன்னைக்கு வொர்க் அதிகம் அதனால  கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்கலாம்னு வந்தேன்”

“சரி அப்போ நான் போனை வைக்கிறேன்”

“அதெல்லாம் ஒன்னுமில்லை நீ எதுக்காக கால் செய்தே?”

“வாழ்த்துக்கள் சொல்லலாம்னு தான் அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கீங்கல்ல அதற்குத் தான்” என்று சொன்னாள் சிற்பி.

அவனிடம் எந்தவிதமான பதிலும் வரவில்லை.

சிற்பி “சார் லைன்ல இருக்கீங்களா?”

நிரஞ்சன் “ம்ம்… இருக்கேன் சிற்பி நான் ஒன்னு கேட்பேன் அதுக்கு உண்மையான பதிலைச் சொல்லனும்”

சிற்பி “ம்ம்… கேளுங்க”

“மனசு பாரமாக கவலையாக இருந்தால் என்ன செய்வே?”என்று தன் மனதில் உள்ள எண்ணத்தைக் கேட்டான் நிரஞ்சன்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. யாழினி கதை தெரிஞ்சுடுச்சு .. காந்தனுக்கு சாம்பவி தான் ஜோடி போல ..

    1. Author

      பார்க்கலாம் எப்படி போகுது மனமார்ந்த நன்றிகள்

  2. அடேய், நல்லா இருந்தவன் மனசை யாழினி பெயரை சொல்லி மாத்தி விட்டுட்டீங்களே…

    பாவம் நிரஞ்சன்.