Loading

அத்தியாயம் 68

     “இதை வாங்கிட்டு வரதுக்கு உங்களுக்கு இவ்வளவு நேரமா? எழுந்ததே லேட் தான். உங்களால் இன்னும் ரொம்ப நேரமாகிடுச்சு. இவ்வளவு லேட்டா கீழே போனா அக்காங்க எதுவும் நினைப்பாங்க.” சிணுங்கினாள் தேவகி.

     “ஏன் கேட்க மாட்டீங்க. இவ்வளவு சீக்கிரம் எந்தக் கடையும் திறந்து இருக்காதுன்னு தெரிஞ்சும், உங்களுக்காக வாங்கப் போனேன் இல்ல என்னைச் சொல்லணும். அங்க இங்கன்னு அலைஞ்சு கடைசியா ஒரு கடைக்காரன் வீட்டு காலிங்பெல் அடிச்சு, அவனை எழுப்பி கடையைத் திறக்க வைச்சு உங்களுக்காக வாங்கிட்டு வந்திருக்கேன்.” சங்கடத்துடன் சொன்னபடி தலையைக் கோதினான் தர்மா.

     “சரி கோச்சுக்காதீங்க.” எனத் தேவகி தான் இறங்கி வர வேண்டியதாகிப் போனது.

     “ஏன் தேவகி இந்த மேக்கப் திங்க்ஸ் எல்லாம் இப்ப பொண்ணுங்களோட அத்தியாவசியத் தேவையாகிடுச்சே. நீங்க மட்டும் ஏன் தேவகி இப்படி இருக்கீங்க. மேக்கப் பண்ணாத பொண்ணை நான் இப்ப தான் பார்க்கிறேன், கேள்விப்படுறேன்.” என்றான் தர்மா.

     “இத்தனை நாளா எனக்கு மேக்கப் போட வேண்டிய தேவையே இல்லை. நம்மளை அழகா காட்டுதுன்னு நாம பயன்படுத்துற ஒவ்வொரு பொருளும் நம்ம சருமத்தோட வயசை அதிகமாக்கும் னு அக்கா அடிக்கடிச் சொல்லுவாங்க. நாங்க நாலு பேரும் க்ரீம் கூட போட மாட்டோம். நம்ம நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் மாமா ஆசைக்காக வேற வழி இல்லாம போட்டுக்கிட்டோம். நானா முதல் முறையா இன்னைக்கு தான் மேக்கப் போடப் போறேன். அதுவும் உங்களால.” சிறிது வெட்கத்துடன் சொன்னாள்.

     “முன்ன பின்ன செத்தா தான் சுடுகாடு தெரியும் னு சொல்லுவாங்க. அந்த மாதிரி தான் ஆகிடுச்சு நம்ம நிலைமை. நல்லவேளை நீங்க கவனிச்சீங்க. கவனிக்காம அப்படியே கீழ போய் இருந்தா இரண்டு பேரு மானமும் காத்துல போயிருக்கும்.” என்றபடி மனைவியின் கன்னம், கழுத்து என  ஆராய்ந்தான் தர்மன்.

     “இப்ப தெரியுதா பாருங்க?” சங்கடமாக தேவகி கேட்க, “தெரியுது தேவகி அப்பட்டமா தெரியுது.” சின்னதாய் சிரிப்புடன் சொன்னான் தர்மா.

     “இன்னும் தெரியுதா? கடவுளே இதுக்கு மேல போட்டா என்னை எனக்கே அடையாளம் தெரியாது.” தலையில் கை வைத்தாள் அவள். பேசாமல் இன்று முழுவதும் அறைக்குள்ளேயே அடைந்துகொள்ளலாமா என்று யோசிக்கும் அளவு போனது அவள் மனநிலை.

     “நான் தெரியுதுன்னு சொன்னது உன்னோட அழகை.” சொல்லிவிட்டுச் சிரித்தான் தர்மா.

     “மேக்கப் போட்டதுக்கு அப்புறம் தான் நான் அழகா தெரியுறேனா? மேக்கப் போடாம நான் அழகா இல்லையா?” வேண்டுமென்றே கேட்டாள்.

     “நீ மேக்கப் போடாம அழகுன்னா, மேக்கப் போட்டா அதைவிட அழகு.” என்றுவிட்டு கண்சிமிட்டினான்.

     “சமாளிக்கிறது எல்லாம் இருக்கட்டும். இன்னொரு தடவை இப்படி ஆகாமப் பார்த்துக்கோங்க. நான் இப்ப கீழ போறேன்.” என்றுவிட்டு கதவைத் திறந்து வெளியே வந்த தேவகி கதவருகே தாமதித்து நின்று, “எல்லாம் பண்ணியாச்சு, இப்போ அக்கா யாராவது எதுக்கு திடீர்னு இவ்வளவு மேக்கப்புன்னு கேட்டா என்ன சொல்றது.” எனத் திறுதிறுவென விழிக்க ஆரம்பித்தாள்.

     “இல்லாத உன் குட்டி மூளையை வைச்சு ரொம்ப யோசிக்காத. உங்க அக்காங்க ஏதாவது கேட்டா நான் தான் இதைப் பண்ணச் சொன்னேன்னு என் மேல பழியைத் தூக்கி போடு. அவங்களும் இதையெல்லாம் கடந்து தான் வந்திருப்பாங்க. அதெல்லாம் புரிஞ்சுப்பாங்க.” அறைக்குள் இருந்தபடியே பதில் சொன்னான் தர்மா.

     “கடவுளே, ஏன் இந்தக் கத்து கத்துறீங்க. நான் சொல்லாம நீங்க சொல்றதே என் அக்காங்களுக்குக் கேட்கும் போல.” என்றுவிட்டு சங்கடத்துடன் கீழே வந்தாள் தேவகி.

     “வா தேவகி டீ குடிக்கிறியா?” சாதாரணமாய் கேட்டாள் லீலா.

     “இதையெல்லாம் போயா அவ கிட்ட கேட்டுட்டு இருப்பீங்க. அவ முகத்தை பார்த்தாலே தெரியல எவ்வளவு டயர்டா இருக்கான்னு. சீக்கிரம் டீயை ஊத்திக் கொடுங்கக்கா.” நமட்டுச் சிரிப்புடன் சொன்னாள் ஊர்மி.

     “தேவகி ஏன் உன் கண்ணெல்லாம் இப்படிச் சிவந்து இருக்கு. ராத்திரி எல்லாம் தூங்கலையா என்ன?” விஷயம் தெரியாததால் என்னவோ என்று கேட்டாள் ருக்கு.

     “இரண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? தேவகி இதுல டீ இருக்கு. நீ ஒன்னை எடுத்துக்கிட்டு உன் புருஷனுக்கும் கொண்டு போய் கொடுத்து கொஞ்ச நேரம் அங்கேயே இரு, நான் கூப்பிடும் நேரம் சாப்பிட வந்தாப் போதும்.” என்று அவளைத் தன் மற்ற தங்கைகளிடம் இருந்து காப்பாற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தாள் லீலா.

     தேவகியின் தலை அங்கிருந்து மறையவும், “அக்கா தேவகியோட புருஷன் இவ்வளவு காலங்காத்தால என்னத்தை மறைச்சு மறைச்சு எடுத்துட்டுப் போனாருன்னு இப்போ புரியுது.” சிரித்தாள் ஊர்மி.

     “ஊர்மி கிண்டலுக்கு ஒரு எல்லை இருக்கு, அமைதியா இரு.” அதட்டினாள் லீலா.

     “செல்லங்களா உன் பெரியம்மா வரவர அம்மா மேல கோபப்பட்டுக்கிட்டே இருக்காங்க. இது எல்லாம் நல்லதுக்கே இல்லன்னு சொல்லிவைங்க. அப்புறம் நீ பொறந்த உடனே நான் அவங்ககிட்ட உங்களைக் கொடுக்கவே மாட்டேன் ஆமா.” தலையைச் சிலுப்பினாள் அவள்.

     “நீ யாருடி என் பிள்ளைகளை நான் தூக்கக்கூடாதுன்னு சொல்றதுக்கு. நீ பிள்ளைகளைப் பெத்து போட்டு டயர்டாகி படுத்து இருப்ப. உனக்கு முன்னாடியே நான் தான் பிள்ளைகளைக் கையில் தூக்கப் போறேன் பாரு. நான் மட்டும் இல்ல ருக்கு, தேவகின்னு எல்லோரும் தூக்கினதுக்கு அப்புறம் கடைசியா தான் நீ தூக்கப் போற.” வம்பிழுத்தாள் லீலா.

     “செல்லாது செல்லாது. நான் எவ்வளவு டயர்டா இருந்தாலும், இரண்டு பிள்ளைகளையும் என் கையில் தூக்கிப் பார்த்துட்டு தான் உங்களுக்கெல்லாம் கொடுப்பேன்.” என்றாள் ஊர்மி.

     “பார்க்கலாம்” கெத்தாகச் சொன்னாள் லீலா. “அதையும் பார்க்கலாம்.” என்று ஊர்மியும் கெத்துக் காட்ட, அடுத்த நொடி அவர்கள் இருவரும் சத்தம் போட்டு சிரிக்கும் சத்தம் அந்த இராதா இல்லம் முழுக்க எதிரொலித்தது.

     “என்னமா லீலா, காலையிலே சிரிப்புச் சத்தம் காதைக் கிழிக்கிது. என்ன விஷயம் னு சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல.” சத்தம் கொடுத்துக் கொண்டே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தார் வடிவேலு.

     “ஒன்னும் இல்ல மாமா, சும்மா பேசிட்டு இருந்தோம்.” என்றுவிட்டு தினசரி மாத்திரை எடுத்துக்கொள்ளும் மாமனாருக்கு காலை உணவு சீக்கிரம் கொடுக்க வேண்டும் எனத் தங்கையை அனுப்பினாள் லீலா.

     “செல்வா என்னடா இவ்வளவு சீக்கிரமே வேலைக்குக் கிளம்பிட்ட.” மருத்துவமனைக்குத் தயாராகி வந்த மகனையும், கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டே கேட்டார் வடிவேலு.

     “ஹாஸ்பிடலில் ஒரு கேஸ் நான் பக்கத்துல இருந்து பார்த்துக்கணும். அதான் சீக்கிரமே கிளம்புறேன்.” பட்டும் படாமல் சொன்னான் அவர் மைந்தன்.

     “என்னவோப்பா நீயும் மத்தவங்கள மாதிரி வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் வேலையைப் பத்தி எந்த யோசனையும் இல்லாம, நிம்மதியா இருக்கணும் னு தான் உனக்குத் தனி ஹாஸ்பிடல் வைச்சுக் கொடுக்காம, இன்னொருத்தர் கிட்ட வேலை பார்க்க விட்டேன்.

     நீ என்னடான்னா மாசத்துல நாலஞ்சு நாள் கேம்ப் அது இதுன்னு போயிடுற. சரி மத்த நாளாவது வீட்ல இருப்பன்னு பாத்தா, இம்பார்ட்டன்ட் கேஸ் அது இதுன்னு சொல்லி இவ்வளவு சீக்கிரம் போறியே. சரி போறது போற டீ குடிச்சிட்டு போ, லீலா செல்வாக்கு ஒரு டீ கொண்டு வாம்மா.” மகனிடம் ஆரம்பித்து மருமகளிடம் முடித்தார்.

     டீ எடுத்துக்கொண்டு வந்த லீலா, “நீங்க கொஞ்ச நாளாவே ஹாஸ்பிடல் கேண்டினில் தானே சாப்பிடுறீங்க. உங்களுக்கு ஓகேன்னா இன்னைக்கு நான் சாப்பாடு எடுத்துட்டு வரவா.” ஆசையாய் கேட்டாள்.

     “அதெல்லாம் வேண்டாம் லீலா. உங்களுக்கு எதுக்குச் சிரமம், நீங்க வீட்டிலேயே இருங்க. நான் பாத்துக்கிறேன். எங்க ஹாஸ்பிடல் கேண்டீன் சாப்பாடு ஒன்னும் அவ்வளவு மோசமா இருக்காது. ருசிக்குச் சாப்பிடாம பசிக்குச் சாப்பிடணும் னு நினைக்கிறவன் நான். அதனால் எதுவா இருந்தாலும் உள்ளே இறங்கிடும், நான் போயிட்டு வரேன்.” என்றவன் லீலா கொடுத்த டீயைக் கூடக் குடிக்காமல் சென்றுவிட்டான்.

     நிபந்தனைக் காகிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பின்னால் தான் என்னிடம் பேசத் தோன்றுமா? இவ்வளவு நாள் இந்த அக்கறை சக்கரை எல்லாம் எங்கே போய் இருந்தது என்னும் கடுப்பில் கிளம்பிவிட்டான். காலியாகாத தேநீர் குவளையைப் பார்த்தபடி சற்றே வருத்தமாக நின்றிருந்தாள் லீலா.

     “இவன் என்ன இப்படி இருக்கான். இத்தனை நாளா அந்தப் பொண்ணு பேசலன்னு முகத்தைத் தூக்கி வைச்சுக்கிட்டு இருந்தான். இப்ப அவங்களே தானே வந்து பேசுறாங்க.  இதுதான் சாக்குன்னு பேசி ராசியாகுறதை விட்டுட்டு, வீம்பு பிடிக்கிறான் பாரு, பெரிய இவன்.” தனக்குள் நினைத்துக் கொண்டான் தெய்வா

     “லீலா அவன் அப்படித்தான் சொல்லுவான். நீ மத்தியானத்துக்கு ஏதாவது கம்மியா செஞ்சு எடுத்துட்டு போய் அவன் கிட்ட கொடு, சந்தோஷப்படுவான்.” என்றார் வடிவேலு.

     “சரிங்க மாமா” என்று லீலா நகரும் நேரம், “லீலா யாரும்மா இவங்க, புதுசா இருக்காங்க.” அறையில் இருந்து கீழே வந்த தேவகியைக் காட்டி கேட்டார் வடிவேலு.

     “மாமா என்ன நக்கலா?” தடுமாற்றத்தை மறைத்துக் கேட்டாள் தேவகி.

     “அடடா என்ன நம்ம தேவகி சத்தம் மாதிரி இருக்கு. அட நிஜமாவே தேவகி தானா? அடையாளமே தெரியல.” சிரிப்பை மறைத்துக்கொண்டு மருமகளைக் கிண்டல் பேசினார் வடிவேலு.

     “மாமா காலையிலே அவளை ஏன் வம்புக்கு இழுக்கிறீங்க. என் தங்கச்சி ஒன்னும் மேக்கப் பைத்தியம் கிடையாது. உங்க பையன் தான் எங்கேயோ வெளியே போகணும் னு காலங்காத்தால போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து கொடுத்திருக்காரு. உங்க பையன் சொல்லி தான் என் தங்கச்சி கோமாளி மாதிரி நிக்கிறா.” தங்கையைக் காப்பாற்றுவது போல் கவிழ்த்துவிட்டாள் தேவகி.

     அதை உண்மையென்று நம்பிய வடிவேலுவும், “தர்மா எதுக்குடா உனக்கு இந்த வேண்டாத வேலை. என் மருமகளுங்க அலங்காரமும், அகங்காரமும் தேவைப்படாத அம்மன் விக்கிரகங்கள் டா. அவங்களைத் தாங்குற கருவறை டா இந்த இராதா இல்லம்.” சிலாகித்துச் சொன்னார்.

     “மருமகளுங்க புராணம் பாட ஆரம்பிச்சா உங்களுக்கு சாப்பாடு தண்ணீர் கூடத் தேவை இருக்காது.” தந்தையை நக்கல் செய்தபடி அருகே வந்து அமர்ந்தான் தர்மன். அதுவரை சற்று தொலைவில் அமைதியாய் அமர்ந்திருந்த தெய்வா அவர்களோடு வந்து இணைந்து கொண்டான்.

     “அவரு பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு, என்னை அடுக்கடுக்காய் இப்படிப் பொய் சொல்ல வைச்சுட்டாரு.” உள்ளுக்குள் கருவிக்கொண்டு கணவனுக்கு வேண்டியதைக் கவனித்தாள் தேவகி.

     நீண்ட நேரமாக தங்கையை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த லீலா அவளின் சங்கடம் புரிந்தவளாக,  தனியே அழைத்துச் சென்று, பூமியைப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் தலையை நிமிர்த்தினாள்.

     “எதுக்காக இவ்வளவு சங்கடப்படுற. எனக்கு எல்லாம் தெரியும். இதை மறைக்கிறதுக்காக இவ்வளவு தடுமாறத் தேவையில்லை. இது வாழ்க்கையோட ஒருபகுதி தான். இதை நினைச்சு வெக்கப்படுறது, எங்க முகத்துல முழிக்க சங்கடப்படுறது எதுவும் தேவை இல்லை. நீ நார்மலா இரு.” லீலா சொல்ல நிமிர்ந்திருந்த தலையை மீண்டும் குனிந்து கொண்டு தலையைத் தலையை ஆட்டிவைத்தாள் தங்கை.

     “அப்புறம் உன் புருஷனை கொஞ்சம் பார்த்து நடந்துக்கச் சொல்லு, இல்லன்னா ஒவ்வொரு தடவையும் இப்படி மேக்கப் போட்டுக் காட்டிக் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.” தங்கையின் மனநிலையை மாற்றுவதற்காக மூத்தவளாய் தானும் சீண்டலில் இறங்கினாள் லீலா. அவள் நினைத்தது போலவே அக்கா என்று சிணுங்கிப் பின் சிரித்தாள் தேவகி.

     “சரி சரி விடு அக்கா தானே கிண்டல் பண்ணேன்.” என்றவளுக்குக் கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்பு வந்துவிட, “போக்கா” என்றுவிட்டுத் தன்னறைக்கு ஓடினாள் தேவகி.

     மதியம் செல்வாவிற்கு என்று மதிய சாப்பாடு எடுத்துக் கொண்டு அவன் வேலை செய்யும் மருத்துவமனை வந்தாள் லீலா.

     “அடடே மிஸஸ் செல்வராஜ் வாங்க.” லீலாவைப்  பார்த்ததும் இனம் கண்டுகொண்டான் செல்வாவின் நண்பன் பாஸ்கரன்.

     “அவர் இல்லையா?” சுற்றும் முற்றும் பார்த்தபடிக் கேட்டாள். “அவனா, அவனுக்குன்னு ஒரு ஸ்பெஷல் பேசண்ட் வந்திருக்காங்க. அவங்களைப் பார்த்துக்கிறதில் கொஞ்சம் பிஸியா இருப்பான். அதோ அதுதான் அவனோட கேபின். நீங்க உள்ள போங்க நான் போய் அவனை வரச் சொல்றேன்.” என அடையாளம் காட்டிய பாஸ்கர் நகரப் பார்க்கும் போது,

     “ஒரு நிமிஷம், நீங்க தானே என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி எனக்குப் போன் பண்ணி அவரைப் பத்தி தப்பாச் சொன்னது.” என்கிற கேள்வியுடன் அவனை நிறுத்தினாள் லீலா.

     “அட அதை இன்னும் நீ மறக்கலையாம்மா. நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன்.” சமாளித்தான் பாஸ்கர்.

     “விளையாட்டா இருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. இனிமே என்கிட்ட மட்டுமில்ல எந்த ஒரு பொண்ணுகிட்டேயும் அவளோட வருங்காலப் புருஷனைப் பத்தியோ, இல்ல அவளோட புருஷன் பத்தியோ எதுவும் தப்பாச் சொல்லாதீங்க.” சற்றே கண்டிப்பான குரலில் சொல்ல, தொங்கிய முகத்துடன் தலையாட்டினான் பாஸ்கரன்.

     “லீலா நீங்க எதுக்கு இங்க வந்தீங்க. நான் உங்களை இங்க வரவேண்டாம் னு சொன்னேன் தானே.” என்றபடி வந்தான் செல்வா.

     “நான் இங்க வந்ததுல உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?” பாஸ்கரிடம் காட்டிய அதே கோபத்தை இப்போது கணவனிடம் காண்பித்தாள் அவள்.

     “அப்படி எல்லாம் ஒன்னுமில்ல.” மனைவியின் கோபத்தின் காரணம் புரியாமல் குழப்பத்துடன் பதில் சொன்னான் செல்வா.

     “இடைப்பட்ட நாளில் நீங்க கொஞ்சம் இல்ல நிறையவே இளைச்ச மாதிரி தெரியுது. நீங்க ருசிக்குச் சாப்பிட வேண்டாம், பசிக்கே சாப்பிடுங்க. ஆனா கொஞ்சம் நல்லாவே சாப்பிடுங்க. நீங்க கண்டிஷன் பேப்பரில் கையெழுத்துப் போடாம இருந்திருந்தாக் கூட நான் கட்டாயம் இன்னைக்கு இதைப் பத்தி பேசுற யோசனையில் தான் இருந்தேன்.

     நான் உங்க மேல கோவமா இருக்கலாம். அதுக்காக நீங்க எக்கேடும் கெட்டுப் போங்கன்னு அமைதியா இருக்க முடியாது. நீங்க என்னோட புருஷன் உங்க மேல எனக்கு நிறையவே அக்கறை இருக்கு. அந்த அக்கறை எல்லாம் தாண்டி அதிக அளவு அன்பும் இருக்கு.

     இனிமேல் நீங்க சாப்பிடாம இங்க வந்தா, கண்டிப்பா உங்களைத் தேடி நானும் பின்னாடியே வருவேன்.” லீலா சொல்லச் சொல்ல செல்வாவிற்கு உள்ளுக்குள் அத்தனை இதமாக இருந்தது. அந்த இதம் அவனையும் மீறி அவனுடைய இதழ்களை புன்னகையால் விரிக்கச் செய்தது.

     அவர்களுக்கு இடையே இருக்கும் அந்த இதத்தைப் போக்கும் சக்தி கொண்ட ஒருவர் அந்த மருத்துவமனையிலே தான் இருக்கிறார் என்பது அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. எனக்கு பாஸ்கரன் மேல தான் டவுட் .. ஆமா லீலாவை கொல்ல வந்தவனை இன்னும் கண்டுபிடிக்கலையே .. செல்வா ஹாஸ்பிடல்ல அவனை பிடிக்காதவங்க யாராவது இருக்கலாம் ..