Loading

அத்தியாயம் 51

     செல்வாவும் லீலாவும் கோவில் வந்திருக்க, லீலாவைத் தெரிந்தவர்கள் எல்லோரும் செல்வாவை விசாரித்து இரண்டொரு நிமிடம் பேசிச் சென்றனர். அரை மணி நேரம் கழித்து தான் அவர்களுக்குப் பேசவே நேரம் கிடைத்தது.

      “நான் உங்க மேல ரொம்ப மரியாதை வைச்சிருந்தேன் லீலா.” இறந்த காலத்தை முன்னிறுத்தி அவன் பேசத்துவங்க, “அப்போ இப்போ அந்த மரியாதை இல்லைங்களா?” சாதாரணமாகக் கேட்டாள் அவள்.

     “ப்ச்… நான் அப்படி நினைச்சு சொல்லல.” என்க, “ஆனா அந்த வார்த்தைகளுக்குத் தமிழில் அர்த்தம் அதுதானே.” அவன் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடிச் சொன்னாள்.

     “ஏதோதோ பேசி, நீங்க எடுத்த முடிவு தான் சரின்னு நிரூபிக்கப் பார்க்கிறீங்க லீலா.” செல்வாவுக்கும் கோபம் வந்திருந்தது.

     “ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லங்க. சொல்லப்போனா நான் எடுத்த முடிவு தப்புன்னு எனக்கு நல்லாத் தெரியும்.”

     “அப்புறம் ஏன் லீலா? என்னைப் பத்தி யோசிக்காம, என் அப்பாவைப் பத்தி யோசிக்காம, வாழ வந்த பொண்ணுங்க வீட்டை விட்டு கோச்சுக்கிட்டுப் போனா அந்த வீட்டைப் பத்தி வெளியில் என்ன பேசுவாங்கன்னு எதையும் நினைக்காம நீங்க பாட்டுக்குக் கிளம்பி வந்துட்டீங்க. உங்க தங்கச்சிங்களுக்கு நல்ல அக்காவா மட்டும் இருந்தாப் போதுமா?

     என்னோட மனைவியா, வடிவேலுவோட மருமகளா, இராதா இல்லத்தோட மூத்த மருமகளா உங்களுக்குன்னு இருக்கும் கடமைகளைப் பத்தி யோசிக்காம, யாரும் எக்கேடும் கெட்டுப் போனா என்னன்னு கிளம்பிட்டீங்க இல்ல.” குற்றம் சாட்டும் பார்வையுடன் சொன்னான்.

     “நீங்க சொன்ன அதே வார்த்தைகளை நானும் சொல்லலாம் இல்லையா? நீங்க வடிவேலுவோட பையன் மட்டும் கிடையாது. என்னோட கணவர், என் தங்கைகளுக்கு மாமா. இராதா இல்லத்தின் மூத்த மகன். இந்தப் பொன்மணி இல்லத்தோட மூத்த மருமகன்.

     மாமாவுக்கு அப்புறம் நம்ம வீட்டுக்குப் பெரியவங்க நீங்க தானே. மாமாவே ஏதாவது தப்புப் பண்ணா கூட அவரோட தப்பை நேருக்கு நேரா சுட்டிக்காட்டுற முதல் உரியையும், கடமையும் உங்களுக்கு தான் இருக்கு. அப்படி இருக்கும் போது பிரச்சனை நேரத்தில் உங்க தம்பியை நீங்க கண்டிக்காதது பெரிய தப்பு தானேங்க.” என்க, இது என்ன புதுக்குழப்பம் என்பது போல் பார்த்தான் செல்வா.

     “ஒரு பொண்ணு அவ புகுந்த வீட்டுக்கு அவ புருஷனை மட்டும் நம்பி வருவது கிடையாது. கல்யாணத்துக்கு முன்னாடி அந்தப் பொண்ணு குடும்ப வாழ்க்கையைப் பத்தி ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லாத்தையும் தெரிஞ்சு வைச்சிக்கிட்டு வருவதில்லை.

     போற வீட்டில் மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார் இப்படி எல்லோரும் இருக்காங்க. அவங்க நம்மளை பார்த்துப்பான்னு நம்பி தான் வாழ வருவா. இதில் சில பொண்ணுங்க விதிவிலக்கு.

     ஆனா இப்பவும் முக்கால்வாசிப் பொண்ணுங்க இப்படித்தான் புகுந்தவீட்டுக்கு வராங்க. குடும்ப வாழ்க்கையில் தான் ஏதாவது தப்பு பண்ணா, இல்லை தனக்கும் தன் புருஷனுக்கும் இடையில் பிரச்சனைன்னு வந்தா இரண்டு பேருக்கும் சரி, தப்பை எடுத்துச் சொல்லி புத்தி சொல்ல அங்க நிறைய பேர் இருக்காங்கன்னு தைரியத்தோட இருப்பா. நாங்களும் அப்படி நினைச்சு தான் வந்தோம்.

     ஆனா நம்ம வீட்டில் நாங்க எதிர்பார்த்த எதுவுமே இல்லை.  அன்னைக்கு என் ஊர்மியை அவரு அப்படிப் பேசினதை விட அதைக் கேட்டுக்கிட்டு நீங்க எல்லோரும் அமைதியா இருந்தது தான் எனக்கு ரொம்ப வலிச்சது.

     ஒருவேளை அன்னைக்கு நடந்த பிரச்சனையில் ஏதாவது ஏடாகூடமாகி ஊர்மியோட உயிருக்கு ஆபத்தாகிப் போய் இருந்தா, யாருங்க என்னோட ஊர்மியை எனக்கு திரும்பிக் கொடுத்திருப்பா?” கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்தபடிக் கேட்டாள் லீலா.

     “நான் நம்ம வாழ்க்கையைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க இப்பவும் உங்க தங்கச்சியைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கீங்க. இது எதுவும் நல்லா இல்ல லீலா. நம்ம இரண்டு பேருக்கும் நடுவில் எதுக்காக அவங்களைக் கொண்டு வரீங்க. ஊர்மி கூட அவன் சண்டை போடும் போது, அமைதியா இருந்த நான் அவன் உங்களைக் கஷ்டப்படுத்தும் போது அவனைக் கண்டிச்சேன் தானே.

     என்னோட இயல்பு இல்லன்னு நான் அமைதியா இருந்தது மட்டும் தான் உங்க கண்ணுக்குத் தெரியுமா? நான் உங்க மேல காட்டின அக்கறை உங்க கண்ணுக்கு தெரியவே தெரியாதா? உங்களை விட்டுட்டு இருக்க முடியாமத் தேடி வந்திருக்கேனே அந்த அன்பு தெரியாதா?” செல்வா காட்டமுடன் கேட்க லீலாவால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.

     அவளுடைய அமைதி பொறுக்காமல், “முடிவாச் சொல்லுங்க, நம்ம வாழ்கைக்கு என்ன பதில்.” கேட்டே விட்டான் செல்வா.

     “உங்க மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு. அதே அளவு மரியாதையை நீங்க என் மேல வைச்சிருப்பீங்கன்னு நம்புறேன். எனக்கு என் தங்கச்சிங்க எந்தளவு முக்கியமோ அதே அளவு நீங்களும் முக்கியம். ஆனா உங்களுக்காக அவங்களையோ, அவங்களுக்காக உங்களையோ என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. உங்களால எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?” என்க, “சொல்லுங்க” என்றான் செல்வா.

     “இதுவரைக்கும் உங்க தம்பிகளுக்கு நீங்க ஒரு நல்ல அண்ணனா இல்லை. கொஞ்ச நாளைக்கு ஒரு நல்ல அண்ணனா இருக்க முயற்சி பண்ணுங்க. உங்க தம்பி நாகாவுக்கு எடுத்துச் சொல்லி அவர் மனசை மாத்தி எங்க ஊர்மிகிட்ட நடந்ததுக்கு மன்னிப்பு கேட்க வைங்க. நாங்க நாலு பேரும் உங்க வீட்டுக்கு திரும்ப வரோம்.” தயக்கத்துடன் தான் சொன்னாள். கட்டளை இடுவது போல் சொல்கிறோமோ எனக் குற்றவுணர்வாக இருந்தது.

     “திரும்ப நம்ம வீட்டுக்கு வந்தா கூட, உங்க தங்கச்சிங்களுக்காக தான் வருவீங்க எனக்காக இல்லை அப்படித்தானே.” செல்வாவின் வருத்தம் நீங்கவே இல்லை.

     “நான் இதுவரைக்கும், உங்களையும், அவங்களையும் பிரிச்சுப் பார்த்தது கிடையாது. சாதாரண நேரத்தில் வலது கண் வேணுமா, இடது கண் வேணுமான்னு கேட்டா பதில் சொல்ல முடியாது தான்.

     ஆனால் ஒரு கண்ணு காயம்பட்டு இருக்கும் போது இரண்டில் எது வேணும் னு கேட்டா, காயம் பட்ட கண் பக்கம் தான் நிற்கத் தோணும். அதுக்காக மத்த கண் வேண்டாம் னு அர்த்தம் ஆகிடாது.

     இதுக்கு முன்னாடி எங்க குடும்பத்தில் நாலு பேர் இப்ப ஒன்பது பேர். நான் நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொன்னது எல்லாருக்காகவும் சேர்த்து தான் புரிஞ்சிக்கோங்க.” என்றாள் லீலா.

     “எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்தும் அந்த விஷயத்தை செஞ்சே ஆகனும் னு என்னைக் கட்டாயப்படுத்துறீங்க. இது உங்களுக்கு நல்லா படுதா லீலா.”

     “நம்ம வாழ்கைக்கு வழி கேட்டீங்க. நான் நம்ம எட்டு பேரோட வாழ்கைக்கும் சேர்த்து வழி சொல்றேன்.” தலவிருட்சத்தைப் பார்த்தபடி பதில் சொன்னாள்.

     “அந்த நாகா பையன் உங்க தங்கச்சியை வேண்டாம் னு சொல்லிட்டா, அதுக்கு அப்புறமும் அவனை நாங்க தாங்கணுமா?” கல்யாண வாழ்க்கை இத்தனை சிரமம் வாய்ந்ததா என்னும் தவிப்போடு கேட்டான் செல்வா.

     “நான் சொன்னதை நீங்க சரியாக் கவனிக்கலன்னு நினைக்கிறேன். நீங்க அவரை என் தங்கச்சிகிட்ட மன்னிப்பு கேட்க வைங்க, அது போதும். எங்களுக்கு அது மட்டும் போதும். அதைத் தாண்டி அவர் வேணுமா வேண்டாமான்னு ஊர்மி முடிவு பண்ணிக்குவா.

     இத்தனை ரிஸ்க் எடுத்து எதுக்காக அந்த மன்னிப்பு, அதனால் என்ன ஆகிடும் னு நீங்க நினைக்கலாம். கணவனிடத்தில் இருந்து மனைவிக்கு நடக்கும் அவமரியாதைகள் ஆரம்பத்திலேயே களைந்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று.

     அஸ்தினாபுரத்தில் கௌரவர்கள் முதல்முதல் தப்புப் பண்ணும் போதே அரசர் திருதிராஷ்டிரர் அதைத் தட்டிக் கேட்டிருந்தால், குருஷேத்திர யுத்தம் நடந்திருக்காது.

     இப்ப நாங்க செய்யுற இந்த அகிம்சை யுத்தம் கூட ஊர்மிக்கு நடந்தது, நாளைக்கு எங்க யாருக்கும் நடந்திடக்கூடாதுன்னு தான்.” தன்னளவில் சரியாகத் தான் பேசினாள் லீலா.

     “என்னவோ லீலா எனக்கு இதெல்லாம் பிடிக்கவே இல்லை. கல்யாணத்துக்கு முன்னாடி நான் உண்டு, என் வேலை உண்டுன்னு அமைதியா வாழ்ந்துட்டு இருந்தேன். உங்களைக் கல்யாணம் பண்ணி உங்களோட இணைஞ்ச என்னோட கல்யாண வாழ்க்கையைக் காப்பாத்த எனக்கு பிடிக்காத விஷயங்களை எல்லாம் செய்யச் சொல்றீங்க.

     என்னோட வேண்டுதல் எல்லாம் இதனால நான் உங்களை வெறுத்திடக் கூடாதுங்கிறது தான். நான் கிளம்புறேன், நீங்க சொன்னதைச் செய்ய முடியுமான்னு எனக்குத் தெரியல பார்ப்போம்.” என்றுவிட்டுக் கிளம்பினான் செல்வா.

     அன்றைய இரவில், “ஊர்மிக்கா என்னாச்சு உனக்கு. எதுக்காக உன் உடம்பு இவ்வளவு டயர்டா தெரியுது.” ஊர்மிக்கு கஞ்சியை ஊட்டிவிட்டபடியே விசாரித்தாள் தேவகி.

     “உன் மாமா ஆடின ஆட்டத்தில் கொஞ்சம் பயந்துட்டேன். அதனால் தான் இப்படி இருக்கு. இரண்டு நாள் போனா தானா சரியாகிடும். நீ போய் சாப்பிட்டுத் தூங்கு.” சொன்னவளுக்கு அப்படி இல்லை என்று தெரியும்.

     “லீலாக்கா என்ன இது புதுசா இருக்கு. எதுக்காக என்னை ஊர்மி அக்காட்ட பேச அனுப்பினீங்க. நீங்களே பேசி இருக்கலாம் இல்ல.” அறைக்கு வெளியே காத்திருந்தவளிடம் கேட்டாள் தேவகி.

     “எல்லாம் ஒரு காரணமாத் தான் தேவகி. நீ போய் படு, நான் ஊர்மிகிட்ட பேசிட்டு வரேன்.” என்றுவிட்டு ஊர்மி இருந்த அறைக்குள் வந்தாள் லீலா.

     அடுத்த நாள் காலை, “அரசு எனக்கு என்னவோ இது எதுவும் சரி வரும் னு தோணல. நாகா அவன் பொண்டாட்டியை அடிக்கும் போது, நாங்க அவனைத் தடுத்து இருக்கணுமாம், கண்டிச்சு இருக்கணுமாம். அதைவிட்டுட்டு அமைதியாய் இருந்தது ரொம்பப் பெரிய தப்பாம். சொல்லி வைச்ச மாதிரி எல்லோரும் இதையே சொல்றாங்க.

     அது எல்லாத்தையும் விட நாங்க மூணு பேரும் சேர்ந்து நாகாவையும் அவன் பொண்டாட்டியையும் சேர்த்து வைக்கணுமாம், இதெல்லாம் நடக்கிற காரியமா?” கடுப்பாகக் கேட்டான் தெய்வா.

     “லீலா சொல்றாங்க, நாகா ஊர்மிகிட்ட மன்னிப்பு கேட்கிற வரைக்கும் அவங்க இந்த வீட்டுக்கு வருவதைப் பத்தி யோசிக்கக் கூட மாட்டாங்களாம்.” குறைபடித்தான் செல்வா

     “அதையே தான் தேவகியும் சொன்னாங்க. என்ன ஒன்னு தனியா சொன்னா நான் வருத்தப்படுவேன்னு, என்னை விட்டு தனியா இருக்கிறது கஷ்டமா இருக்குன்னு ஒரு வாசகத்தைச் சேர்த்துக்கிட்டாங்க.” சலிப்பாய் சொன்னான் தர்மா.

     “நீ கொடுத்து வைச்சவன் உன் பொண்டாட்டி உன்னை சமாதானப்படுத்துற மாதிரி இப்படி ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கா. ஆனா நான் ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்ட ருக்கு என்னை ஒரு ஆளாக் கூட மதிக்கல.” சொன்ன தெய்வாவிடத்தில் பொறாமையின் சாயல்.

     “அமைதியா இருங்கடா அப்பரசண்டிங்களா? நான் உங்களை அவங்ககிட்ட பேசச் சொன்னது, நீங்க கூப்பிட்ட உடனே உங்க கூட அவங்க கிளம்பி வந்திடுவாங்கன்னு இல்ல. அவங்க மனசுல நிஜமாவே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கத் தான்.

     அவங்க இங்க இருக்கிற பணம், பகட்டு வாழ்க்கை மேல் ஆசைப்படுறவங்க இல்லங்கிறது நம்ம எல்லோருக்குமே தெரியும். உங்க அப்பா மாதிரி இல்லாம அவங்க சரியான நியாயம் தெரிஞ்சவங்க.

     நாகாவை விட்டுட்டு மத்த மூணு பேருக்காக இங்க வர நினைக்கிறாங்களா? இல்ல யாருமே வேண்டாம் னு நினைக்கிறாங்களான்னு பயந்துக்கிட்டே இருந்தேன். பரவாயில்லை காத்து இன்னமும் உங்க பக்கம் அடிக்கிது. சொல்லுங்க அடுத்து என்ன பண்ணலாம்.” என்றான் அரசு.

     “என்ன பண்றது கொஞ்ச நாள் பார்க்கலாம் அவங்களா வராங்களான்னு இல்லைன்னா?” என்ற தெய்வாவிற்குத் தான் ஆரம்பித்து வைத்த வார்த்தையை முடிக்கத் தெரியவில்லை.

     “இல்லன்னா டிவோர்ஸ் பண்ணிடலாமா தெய்வா.” எனக் கேட்டு அதைத் தான் முடித்து வைத்தான் அரசு.

     “உன் வாயைக் கழுவு. பேச்சுக்கு கூட அப்படியெல்லாம் சொல்லாத. அப்புறம் நாங்க வடிவேல் பையனா இருக்கிறதுக்கு அருகதையே இல்லாதவங்க. கொஞ்ச நாள் கழிச்சும் அவங்க வரலன்னா அப்பாவை அனுப்பி அவங்களை இங்க கூட்டிட்டு வரணும் னு சொல்ல வந்தேன். என்னோட இந்த ஜென்மத்தில் ருக்கு மட்டும் தான் எனக்குப் பொண்டாட்டி.” அழுத்தமாகச் சொன்னான் தெய்வா.

     “அந்த அளவு உனக்கு ருக்குவைப் பிடிக்குமா தெய்வா?” என்க, “எனக்கு ருக்குவை ரொம்பப் பிடிக்கும், அவங்களுக்குத் தான் என்னைப் பிடிக்கல.” சோகமாகச் சொன்னான்.

     “அப்படின்னு அந்தப் பொண்ணு சொன்னுச்சா?”

    “அதைத் தனியா வேற சொல்லணுமா? அவங்களோட ஒவ்வொரு செயலிலும் நான் புரிஞ்சிக்கிட்டேன். அவங்களுக்கு இந்த உலகத்தில் ரொம்பப் பிடிச்சது அவங்களோட அக்கா தங்கச்சிங்க தான். அதுக்கு அப்புறம் தான் யாரா இருந்தாலும்.”

     “எனக்கு ஒரு விஷயம் சொல்லு. உனக்கு உன் அப்பா முதல் பிரையாரிட்டியா இல்ல ருக்குவா?” அரசு கேட்க, “ப்ச்… இதே கேள்வியைத் தான் அவங்களும் கேட்டாங்க. எனக்கு அப்பா ரொம்ப முக்கியம். அதுக்காக ருக்கு எனக்கு முக்கியமில்லாதவங்கன்னு ஆகிட மாட்டாங்க.” தெய்வா சொல்ல,

     “ஏன் தெய்வா உனக்கு வந்தா இரத்தம் அவங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா? ஏன்டா உன்னோட பொஸஸிவ்னஸ்க்கு ஒரு அளவே இல்லையா? அவங்க நாலு பேரும் கருவில் இருந்து ஒன்னா இருக்கிறவங்க.

     பசங்க நீங்க வேணும்னா தொப்புள்கொடி பாசத்தை உணராம வெட்டிக்கிட்டு நிக்கலாம். ஆனா பொண்ணுங்க அப்படிக் கிடையாது. அவங்களுக்குள்ள நிறைய பேசிப்பாங்க, நிறையப் பகிர்ந்துப்பாங்க.

     சாதாரண அக்கா, தங்கச்சிங்களுக்கே அப்படின்னா இங்க அந்தப் பொண்ணு லீலா அக்காங்கிற ஸ்தானத்தைத் தாண்டி அம்மாவா இருந்து, மத்த பொண்ணுங்களைப் பார்த்துக்கிட்டு இருந்திருக்கா. அப்புறம் எப்படி மத்த மூணு பேரும் அவளை விட்டுக் கொடுப்பாங்க.

     பாசம் வைக்கிறவங்களை எதுக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி கொடுத்த லீலாவையே விட்டுக் கொடுத்துட்டு, ருக்கு பொண்ணு நீ தான் முக்கியம் னு சொல்லியாகணும் னு எப்படி நீ எதிர் பார்க்கலாம்.” என்க, தெய்வாவிற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

     “சரி கட்டின புருஷன் உனக்காக இன்னைக்கு அவளோட அக்காவை வேண்டாம் னு தூக்கிப் போட்டுட்டான்னு வைச்சிக்குவோம். இதுல நீயும் ரொம்ப சந்தோஷமா இருந்திடுவ.

     இப்படி ஒருத்தருக்காக இன்னொருத்தரை விட்டுக்கொடுப்பது தப்பு இல்லன்னு மனசில் பதிஞ்சுபோய், நாளைக்கு உங்களோட பசங்களுக்காகவோ இல்லை வேற யாருக்காகவோ அவ உன்னை விட்டுக்கொடுக்கிற நிலைமை வந்தா என்னடா பண்ணுவ.” அரசு சொல்ல சொல்ல என்னவோ போல் ஆனான் தெய்வா.

     “பொண்டாட்டிங்கிற பேரில் ஒரு பொண்ணு வந்திட்டா உன் குடும்பம், உன் அப்பா, நீ, உன்னோட குழந்தைங்கன்னு மட்டும் தான் வாழனுமா. அவங்களோட பிறந்தவீட்டுச் சொந்தங்களை அறவே ஒதுக்கிடணுமா. இதெல்லாம் ரொம்பத் தப்பு.

     உடனே எங்களை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு வராதே. அது முடிந்து போன கதை. அதை விட்டுட்டு இப்ப நடப்பைப் பத்தி மட்டும் பேசுவோம்.”  மறுத்துப் பேச முடியாத அளவு உறுதியுடன் சொன்னான் அரசு.

     “கல்யாணத்துக்கு அப்புறமும் என்ன என் குடும்பம், இது எங்க குடும்பம் னு நினைப்பு வந்தா எதுவுமே கஷ்டமா இருக்காதே. எங்க குடும்பச் சந்தோஷதுக்கு எதையும் பண்ணலாம் னு தோணுமே.” தெய்வா இன்னும் திருப்தியடையாதவனாகக் கேட்க,

     நான் கஷ்டப்பட்டு யோசிக்க வேண்டாம் நீயே எனக்கு பாயிண்ட் எடுத்து கொடுக்கிற டா என்கவுண்டர் ஏகாம்பரம் மனதோடு நினைத்தவன், “இப்ப நீ சொன்னியே இதை உனக்கு நீயே சொல்லிப் பாரு. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் ருக்குவோட குடும்பம் உன்னோட குடும்பம் இல்லையா. லீலா, ஊர்மி, தேவகி உன்னோட சொந்தங்கள் இல்லையா?” என்று கேட்க பதில் சொல்லத் தெரியாமல் அமைதியானான் தெய்வா. அவனுக்கு ஏதோ புரிவது போலவும், புரியாதது போலவும் இருந்தது.

     “இங்க பார் தெய்வா சொந்த பந்தங்கள் இல்லாம ஒருத்தராலும் இருக்க முடியாது. சண்டை போட்டுக்கிட்டே என்றாலும் இங்க உன்னைச் சுத்தி நிறைய ஆள் இருக்காங்க. அதனால் உன் எண்ணம் தான் சரின்னு உனக்குப் படுது.

     சொந்தம் னு சொல்லிக்க ஆள் இல்லாதவங்களுக்குத் தான் தனியா இருப்பதோட வலியும், வேதனையும் புரியும்.” அரசு சாதாரண குரலில் சொல்ல, அவன் அவனைத் தான் குறிப்பிடுகிறான் என்று புரிந்த தெய்வாவிற்கும் அவன் சகோதரர்களுக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

     “என்னடா அவங்க நிலைமையில் இருந்து யோசிச்சு இந்த அளவு பேசுறவன், நம்மளைப் பத்தி யோசிக்க கூட இல்லையேன்னு நீங்க யோசிக்கலாம். அங்கிள் ஆசைப்பட்ட மாதிரி உங்களை ஒத்துமையா பார்க்கணும் என்பது தான் என்னோட ஆசையும். ஆனா உங்க மனசை மதிச்சு தான் நான் இதுவரைக்கும் அதைப் பத்தி பெருசா உங்ககிட்ட பேசினது இல்லை.

     எனக்குப் புரிஞ்ச வரை சொல்றேன், உங்க பொண்டாட்டிங்களை இந்த விஷயத்தில் சமாதானம் பண்ணுவது அவ்வளவு சுலபம் இல்ல. முதலில் அந்தக் கருநாகத்தை மன்னிப்பு கேட்க வைச்சு, பொண்ணுங்களை  வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டு வாங்க, அவங்களைச் சந்தோஷமா பார்த்துக்கோங்க.

     யார் கண்டா ஒருவேளை நீங்க பொழியுற அன்பு மழையில் நனைஞ்சு குளிர்காய்ச்சல் வந்து, நாம தனியாப் போகலாம் வான்னு எதிர்காலத்தில் நீங்க கூப்பிட்டா உங்க பின்னாடி அந்தப் பொண்ணுங்க வந்தாலும் வரலாம்.” தூபம் போட்டான் அரசு. அவன் நாரதர் கலகத்திற்காக விதைத்த விதை அழகாய் துளிர்விட்டது அவ்விடத்தில்.

     “சூப்பர் ஐடியா அரசு. நான் ஏற்கனவே இதை யோசிச்சு வைச்சிருந்தேன். ஆனா சரியா வராதோன்னு தள்ளி வைச்சுட்டேன். இப்ப நீயே சொல்றன்னா கண்டிப்பா இது பலிக்கத் தான் போகுது.” ஆர்ப்பட்டமாய் சொன்னான் தெய்வா.

     “போச்சு எல்லாம் போச்சு. இவ்வளவு நேரமா வாய் கிழிய நான் பேசினது எல்லாம் செவிடன் காதில் ஊதின சங்கு மாதிரி ஆகிடுச்சு. சரி இப்போதைக்கு இந்த ஐடியாவை மனசில் வைச்சிக்கிட்டாவது உங்க பொண்டாட்டிங்களைக் கூட்டிக்கிட்டு வாங்க.” என்பதாய் சகோதரர்கள் நால்வருக்கும் நடுவில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டான் அரசு.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அதான தெய்வா நீங்க மூணு பேரும் திருந்திட்டாலும் … பக்கம் பக்கமா பேசினாலும் முடிஞ்சதும் எப்போ தனியா போகலாம்னு கேட்பீங்க … என்ன எல்லாரும் எங்க நாகத்தை ஈசியா எடை போட்டுட்டீங்க … நீங்க போய் கேளுங்க … அந்த நாகம் பொண்டாட்டி கிட்ட போய் மன்னிப்பு கேட்குமா … அதுவும் நீங்க ஒண்ணா போய் கேட்டா ஒத்துக்கவே மாட்டான் … அவனும் வாழ மாட்டான் .. உங்களையும் வாழ விட மாட்டான் … உங்களுக்கு வில்லனே அவன் தான் …