Loading

அத்தியாயம் 47

     லீலா மன்னிப்புக் கேட்கவும் அனைத்தும் முடிந்து விட்டதாக நினைத்து வடிவேலு தன்னுடைய அறைக்குச் செல்ல முற்படும் வேளையில் அவரைத் தடுத்தாள் ஊர்மிளா.

     “அக்கா பண்ணது தப்புன்னு சொல்லி அவங்களை மன்னிப்புக் கேட்க வைச்சீங்க சரி. உங்க பையன் பண்ண தப்புக்கு அவரை அக்காகிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க. நீங்க இதைச் செய்தா தானே நியாயமா இருக்கிறதா அர்த்தம்.” கோபமாய் கேட்டாள் ஊர்மி. வார்த்தைக்கு வார்த்தை மாமா என்று அழைக்கும் மருமகள் இப்போது இப்படி மொட்டையாகப் பேசுவது வடிவேலுவுக்கு சுருக்கென்று தைத்தது.

     “பிரச்சனையை முடிக்கணும் னு நினைச்சு நான் செஞ்ச காரியம், என் மருமகள்கள் மத்தியில் என்னைக் கெட்டவனா காட்டிடிடுச்சே.” மனதோடு வருந்தினார்.

     “நான் என்ன பண்னேன்னு என்னை அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்ற.” இறங்கி இருந்த கோபம் மீண்டும் எகிற மனைவியிடம் சண்டைக்கு வந்தான் நாகா.

     “நீங்க பண்ண தப்புக்கு அக்கா உங்களைத் தள்ளி விட்டாங்க. அது ரொம்பப் பெரிய தப்புன்னு உங்க அப்பா, எங்க அக்காவை உங்ககிட்ட மன்னிப்பு கேட்கச் சொன்னாங்க. அதே நியாயம் எங்க அக்காவுக்கும் திரும்பக் கிடைக்கணும் இல்ல. நீங்க எங்க அக்காவை கழுத்தை நெரிச்சுக் கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்கீங்க.

     உங்க அப்பாவோட கருத்துப்படி எப்படி எங்க அக்காவுக்கு உங்களை அடிக்கிறதுக்கு ஸ்சாரி தள்ளிவிடுறதுக்கு உரிமை இல்லையோ, அதே மாதிரி தான் உங்களுக்கும் எங்க அக்காவைத் தண்டிக்கிறதுக்கு உரிமையில்லை. அதனால் நீங்க இப்போ எங்க லீலா அக்காகிட்ட மன்னிப்புக் கேட்டு தான் ஆகனும்.” ஊர்மி சொல்ல வடிவேலுவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

     மகனைச் சமாதானப் படுத்த என்று அவர் செய்த ஒரு காரியம் மருமகளைத் தனக்கு எதிராய் திருப்பி விட்டதை நினைத்து வருந்தினார். அதிலும் வார்த்தைக்கு வார்த்தை உங்க அப்பா என்ற அவளுடைய உச்சரிப்பு வேறு உள்ளுக்குள் காயத்தை உண்டாக்கியது.

     லீலா தன்னைப் புரிந்து கொள்வாளா என்று வடிவேலு அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழப்பமாய் நின்று கொண்டிருந்தாள்.

     “என்னப்பா அமைதியா இருக்கீங்க. அவங்க கேட்கிறது நியாயமான விஷயம் தானே, பதில் சொல்லுங்க. உங்க பையன் உங்களுக்கு ஒசத்தி, என் பொண்டாட்டி குறைவாப் போயிட்டாங்களா? அவன் யாரு என் பொண்டாட்டி மேல கை வைக்க.

    லீலா என் மூத்த மருமக. என் வீட்டு குலதெய்வம் அது இதுன்னு பேசுவீங்களே. அது எல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா? உங்க அருமைப் பையன் என் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகனும்.” தீர்மானமாய் சொன்னான் செல்வா.

     “எதுக்காக அவன் மன்னிப்புக் கேட்கணும். புருஷன், பொண்டாட்டி பிரச்சனையில் நடுவில் வந்து நாட்டாமை பண்ண அவங்க யாரு. தங்கச்சிங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. நல்லதோ கெட்டதோ அவங்க தான் பார்த்துக்கணும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாம தான்தோன்றித் தனமா பண்ண காரியத்துக்கு இது தேவை தான்.

     எல்லாத்துக்கும் மேல பொண்ணா இருந்துக்கிட்டு ஒரு ஆம்பிளையை, அதுவும் தங்கச்சி புருஷனை கை ஓங்குறது எவ்வளவு பெரிய தப்பு.” நாட்டாமை செய்தான் தெய்வா.

     “அப்ப, அவன் லீலாவைக் கழுத்தைப் பிடித்து நெறிச்சானே அது மட்டும் ரொம்ப சரியோ.” செல்வா கேட்க இந்தக் கேள்விக்கு தெய்வாவால் பதில் சொல்ல முடியவில்லை.

     “விடு ஊர்மி, இதில் மாமாவைக் குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம். ஆயிரம் இருந்தாலும் உன் புருஷன் அவரோட பையன். நாம வெளியில் இருந்து வந்தவங்க தானே.” மாமனாரின் மீது இருந்த அதிருப்தியை அப்பட்டமாக வார்த்தைகளில் காட்டினாள் ருக்கு.

     “என்னம்மா ருக்கு இப்படியெல்லாம் பேசுற. நான் என்னைக்காச்சும் உங்களை வேறுபடுத்திப் பார்த்து இருக்கேனா?” மனம் வருந்திக் கேட்டார் வடிவேலு.

     “ருக்கு அக்கா பேசின வார்த்தை கொஞ்சம் அதிகம் தான். ஆனா நீங்க இப்படி ஒருதலைபட்சமா நடந்துக்கிட்டது எனக்கும் பிடிக்கல தான். நான் உங்களை என் அப்பா ஸ்தானத்தில் வைச்சிருக்கேன். அதுக்காக நீங்க தப்பு பண்ணா அதை ஏன்னு கேட்காம அமைதியா இருக்க எங்களால் முடியாது.” என்றாள் தேவகி.

     “தேவகி, ருக்கு, ஊர்மி இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். பேசாம அவரவர் ரூமுக்குப் போங்க.” லீலா சொல்ல, “அதெப்படிப் போவீங்க. என்னோட கேள்விக்கு பதில் சொல்லிட்டுப் போங்க. எதுக்காக உங்க தங்கச்சி இப்படியெல்லாம் பண்றான்னு கேட்டுச் சொல்லுங்க. அதுக்கு அவ சொல்ற பதிலை வைச்சு தான் அவ எங்க ரூமுக்குள்ள வருவதா இல்லை வீட்டை விட்டுப் போவதான்னு முடிவு பண்ணனும்.” நாகா அவள் வழியை மறைத்துக்கொண்டு கேட்டான்.

     அவனுக்கு அத்தனை ஆதங்கம். ஊர்மி மேல் எந்தத் தவறும் இல்லை, அவள் சுத்தமான மாணிக்கம் போன்றவள் என்பது உறுதியான பிறகு, அதுநாள் வரை செய்து கொண்டிருந்த தவறை உணர்ந்து, தன்னைத் தானே நொந்து வருந்தி திருந்தி இருந்தான்.

     அவள் தான் இனி எல்லாம் என்கிற முடிவுக்கு எப்போது வந்தானோ அன்றில் இருந்து அவளுக்கு உண்மையாக, அவளுக்குப் பிடித்தமான வகையில் தான் நடந்துகொண்டிருக்கிறான்.

     அதை அவளால் நம்ப முடியாமல் போனது கூட அத்தனை வலிக்கவில்லை. திடீரென இத்தனை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அவனுக்கும் புரிந்திருந்தது.

     ‘உன்மேல் நம்பிக்கை இல்லை அதுவரும் வரை காத்திரு’ என்று அவள் சொல்லி இருந்தால், அவளுக்காக காத்திருக்கும் அளவுக்கு அவனுள் நல்ல குணம் நிறையவே இருக்கிறது. அவளோடு அவளுக்காக வாழத்தான் அவனுக்கு விருப்பம்.

     அவளானால் அவள் அக்கா, தங்கைகளுக்காக இந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறாள். கணவனாகிப் போய்விட்டதால் தன் மீது நம்பிக்கை இல்லாமல் போனாலும் தாம்பத்திய வாழ்விற்கு ஒப்புக்கொண்டிருக்கிறாள் என்கிற நினைப்பு ஏதோ பிச்சை போட்டதைப் போல அவனுக்குத் தோன்ற வைக்க, அதன் விளைவு தான் பொங்கிவிட்டான்.

     என்ன தங்கை வளர்த்து வைத்திருக்கிறாய் என்று லீலாவைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப் பார்த்தான். “நான் எதுக்கு உங்களுக்காக அவகிட்ட கேட்கணும். உங்களுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதில் விருப்பம் இல்லைன்னு கல்யாணத்துக்கு முன்னாடி அவளோட அக்காங்கிற முறையில், என்கிட்டச் சொல்லி என்ன பண்ணலாம் னு கேட்டீங்களா? அவ பணத்தாசை பிடிச்சவன்னு சொல்லி கொடுமைப்படுத்தின விஷயத்தை என்கிட்ட சொன்னீங்களா?

     இத்தனை நாளா அவ இந்த வீட்டில் அவளோட சொந்தக் காசில் சாப்பிடுறா, இதையாச்சும் என்கிட்ட சொன்னீங்களா? இது எதையும் என்கிட்ட நீங்களும் சொல்லல, அவளும் சொல்லல. அப்படி இருக்கும் போது எதுக்காக இப்ப மட்டும் என்கிட்ட வரீங்க.

     இத்தனை நாளா எப்படி எல்லா விஷயத்தையும் நீங்க இரண்டு பேருமே பார்த்துகிட்டீங்களோ, அதே மாதிரி இனியும் பார்த்துக்கோங்க. என்னை நடுவில் இழுக்காதீங்க.” சொல்லிவிட்டு கோபமாக முன்னே நடந்தாள் லீலா.

     “சபாஷ் லீலா சரியா சொன்னீங்க.” மனைவியை நிறைந்த சபையில் பாராட்டினான் செல்வா.

     “பார்த்தியாடி ஏதோ அக்கா ஆட்டுக்குட்டின்னு பெருசா பேசுனியே. இப்பப் பார்த்தியா அவங்க என்ன சொல்றாங்கன்னு. இப்பவாச்சும் புரிஞ்சிக்கோ உனக்கு இனி என்னை விட்டா வேற ஆள் இல்லைன்னு. எனக்கும் உன்னை விட்டா பெருசா ஆள் இல்லை தான். அதனால் எப்படியாச்சும் நீ பண்ண காரியத்தை மறக்க முயற்சி பண்றேன். கோமாளித்தனம் பண்ணாம இனியாச்சும் ஒழுங்கா இரு.

     இத்தனை நாளா நீ அனுப்பின பணத்தை நான் உன்கிட்ட கொடுத்திடுறேன். நீ வேற எதுக்காகவாது அதைப் பயன்படுத்திக்கோ. என்னை இன்னொரு முறை கோபப்படுத்திப் பார்க்காத, வா என் கூட.” என்றபடி மனைவியின் கரத்தைப் பிடித்தான் நாகா.

     “ருக்கு எனக்கு நாகாவைப் பிடிக்காது தான். ஆனா இப்ப அவன் சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மை. அதை எவ்வளவு சீக்கிரம் நீங்க புரிஞ்சிக்கிறீங்களோ அவ்வளவு நல்லது.” என்றான் தெய்வா.

     நாகா இழுக்க இழுக்க ஊர்மி அசையாமல் நின்றாள். “இன்னும் என்னடி, நீ தப்பே பண்ணி இருந்தாலும் நான் உன்னைத் திட்டி இருக்கக்கூடாதா? இல்ல உன்னைத் திட்டினதுக்கு மன்னிப்புக் கேட்கணுமா?” ஆத்திரமாகக் கேட்டான்.

     “நீங்க என்னோட புருஷன் அந்த ஒரே காரணத்துக்காக நீங்க என்னைப் பேசின அத்தனை வார்த்தைகளையும் நான் மறந்திடுறேன். ஆனா நீங்க நிச்சயம் எங்க அக்காகிட்ட மன்னிப்புக் கேட்டு தான் ஆகனும்.” அக்காவின் மரியாதை துளியும் குறைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள் ஊர்மி.

     “அக்கா, அக்கா… எப்ப பார்த்தாலும் அக்கா தானா?” கோபத்தில் அருகே இருந்த பூஜாடி ஒன்றை நாகா போட்டு உடைக்க, அதில் ஒரு துண்டு பறந்து சென்று ருக்குவின் நெற்றியைக் கிழித்து இரத்தத்தை வரவழைத்தது.

     “ஹே ருக்கு என்னாச்சு.” என்று தெய்வா பதறியபடி ஓடி வர, “வந்துட்டான் பொண்டாட்டி தாசன். இப்பவே இப்படி அலையுறான். இதுவே இன்னும் கொஞ்சம் அழகா இருந்திருந்தா, அவ்வளவு தான். ரொம்ப ஓவரா சீன போடாத.

    நாலு சொட்டு இரத்தம் சிந்துறதால உன் அருமைப் பொண்டாட்டி ஒன்னும் செத்திட மாட்டா. வொர்த்லெஸ் வுமன்” யார் மீது இருக்கும் கோபத்தை யார் மீது காட்டுகிறோம் என்றே புரியாமல் விஷத்தைக் கொட்டிக்கொண்டிருந்தான் நாகா.

     “என்னடா சொன்ன ராஸ்கல்” என்று அவன் சட்டைக் காலரைப் பற்றிக் கொண்ட தெய்வா, “எல்லாப் பிரச்சனைக்கும் காரணமே நீதான்டா. உன்னைக் கொன்னுட்டா எல்லாம் சரியாகிடும்.

     நீ செத்துட்டா இங்க வருத்தப்படப் போறது அப்பா மட்டும் தான். அதுவும் கொஞ்ச நாளைக்கு தான். உன் பொண்டாட்டி கூட, அவளைப் பிடிச்ச பீடை ஒழிஞ்சதுன்னு சந்தோஷமா அவ வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிடுவா.

     ஏன்னா உன்னை நினைச்சு உருகி மருகி அழுகுறதுக்கு எல்லாம் நீ வொர்த் இல்லன்னு அவளுக்கே தெரியும். வொர்த்லெஸ் கேரக்டர் நீதான்டா.” தெய்வா சொல்ல ஏனோ தர்மாவிற்கு சிரிப்பு வந்தது.

     “என்னடா சிரிப்பு.” என்று பாய்ந்து வந்து அவனையும் அடிக்க கை ஓங்கினான் நாகா.

     “நிறுத்துங்க இப்ப எதுக்கு இவரை அடிக்கப் பார்க்கிறீங்க. கேட்கிறதுக்கு ஆள் இல்லைன்னு நினைச்சீங்களா? மரியாதையா இங்க இருந்து போயிடுங்க. இல்லைன்னா அக்கா புருஷன்னு கூட பார்க்க மாட்டேன்.” ஏற்கனவே ஊர்மியை அவன் நடத்திய விதம் பிடிக்கவில்லை. லீலாவிற்கு மனக்காயத்தையும், ருக்குவிற்கு இரத்தக்காயம் உண்டாக்கி விட்டான், கடைசியாகக் கணவனையும் அடிக்க வந்துவிட்டான் என்பதில் கோபம் வந்துவிட்டது தேவகிக்கு.

      “ஏய் என்னடி வளர்த்து வைச்சிருக்க உன் தங்கச்சிங்களை.” நாகாவின் ஒட்டுமொத்த கோவமும் இப்பொழுது லீலா பக்கம் திரும்பியது என்றே சொல்லலாம்.

     “என்னது டியா? ஹலோ யாரைப் பார்த்து டி சொல்றீங்க. அவங்க உங்களுக்கு அண்ணி முறை, அண்ணின்னா அம்மா மாதிரி. பார்த்து மரியாதையாப் பேசுங்க.” தன்னைப் பேசும் போது வராத கோபம் இப்போது வந்தது ருக்குவிற்கு.

     “யாரு இவ எனக்கு அம்மாவா. என் அண்ணனுக்கு தானே இவ பொண்டாட்டி. நீங்க சொல்ற படி பார்த்தா இவ” நாகாவின் நாவில் சனி உட்கார்ந்து நர்த்தனம் ஆட, அவன் பேச நினையாத வார்த்தைகள் எல்லாம் வாயில் இருந்து விழத் தயாரானது.

     லீலா அவன் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டு அவனை தீப்பார்வை பார்த்தாள். “என்ன அப்படிப் பார்க்கிற, பெரிய பத்தினி தெய்வம். இவ பார்த்த உடனே நான் எரிஞ்சி சாம்பலா போறதுக்கு.

     கல்யாணத்துக்கு முன்னாடி நான் உங்க நாலு பேரைப் பத்தியும் நல்லா விசாரிச்சேன். சென்ட்ரல் மினிஸ்டர் பையனையே உன்னைச் சுத்தி வர வைச்சிருக்க உண்மையில் நீ பெரிய கைகாரி தான்.” அவன் சொல்லி முடிக்க செல்வாவிற்கும் அவனுக்கும் பெரிய கைகலப்பாகியது.

     பெண்கள் நால்வரும் வேடிக்கை மட்டும் பார்க்க, மற்ற ஆண்கள் இருவரும் அவர்களைப் பிரித்துவிடப் பார்த்தனர்.

     “நிறுத்துங்க” என்ற வடிவேலுவின் சத்தம் தான் அனைவரையும் ஒரு நிதானத்திற்கு கொண்டு வந்திருந்தது.

     “தப்பு நீங்க யாருமே பண்ணல. நான் தான் மிகப்பெரிய தப்பு பண்ணி இருக்கேன். உங்க இலட்சணம் தெரிஞ்சிருந்தும், இவங்க நாலு பேரைக் கல்யாணம் பண்ணி வைச்சா நீங்க ஒத்துமையா இருப்பீங்கன்னு நினைச்சேன் பாரு. நான் தான் உலகத்தின் நம்பர் ஒன் முட்டாள்.

     லீலா உன்னையும், உன் தங்கச்சிங்களையும் மருமகளா இல்லாம, இந்த வீட்டுக்கு மகாராணியாக் கூட்டிட்டு வந்ததுக்கு நல்ல பிரதிபலன் பண்ணிட்டம்மா.

     என் நாலு பசங்களைப் பத்தியும் தெளிவா உன்கிட்ட சொல்லித் தானே இந்தக் கல்யாணத்தை நடத்தினேன். நாகா கொஞ்சம் ஈகோயிஸ்ட். அவன் உன்கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகனும் னு ஊர்மி சொல்லிக்கிட்டு இருந்தப்ப, நீ அவளை அடக்கி இருந்தா பிரச்சனை இவ்வளவு தூரத்திற்கு வந்து இருக்காது இல்ல. அப்ப நீயும் அவன் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் னு தானே எதிர்பார்த்து இருந்திருக்க.

     கோபத்தில் தோன்றும் செயல்கள் எல்லாத்தையும் அப்படியே செய்ய எல்லோராலும் முடியும். ஆனால் கோபத்தில் கூட குடும்பத்தோட நல்லது நினைச்சு, வளைஞ்சு கொடுத்துப் போறவங்க தான் அந்தக் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் அமரத் தகுதியானவங்க.

     அண்ணிங்கிற உறவுக்கு நிறைய பொறுமையும், பொறுப்பும் வேணும். அது உனக்கு இல்ல லீலா. தயவுசெஞ்சு உன் தங்கச்சிங்களைக் கூட்டிக்கிட்டு உள்ள போ.” பழியை பெண்கள் மீது போட்டு அனைவரையும் அமைதியாக்கி பிரச்சனையை முடித்துவிடலாம் என்று நினைத்து மீண்டும் தவறான முடிவையே எடுத்தார் வடிவேலு.

     “என்ன மாமா நானும் அப்ப இருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன். எங்க அக்காவையே குற்றம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. உங்க பசங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க வேண்டாம் னு சொல்லல. அதுக்காக எங்களை மட்டம் தட்டாதீங்க. அது உங்க வயசுக்கும், மரியாதைக்கும் நல்லா இருக்காது.” முறைப்பாகச் சொன்னாள் ஊர்மி.

     “அவங்க எங்க அப்பா கொஞ்சம் பார்த்துப் பேசுங்க.” என்றான் தர்மா.

     “அக்கா சொல்றது சரிதாங்க. இந்த விஷயத்தில் மாமா பண்ணது தான் தப்பு.” என்றாள் தேவகி தர்மாவிடம்.

     “ஏய் உனக்கு என்ன தைரியம் இருந்தா எங்க அப்பாவை எதிர்த்துப் பேசுவ. போடி, என் வீட்டை விட்டுவெளியே போ.” தவறு செய்தவள் அவளாக இருக்க, தான் இத்தனை இறங்கி வந்த பின்னாலும் அவள் அசையாமல் இருப்பது கோபத்தைக் கொடுக்க, இழுத்துப் பிடித்த பொறுமை அத்தனையும் பறந்தது போல் கத்தினான் நாகா.

     “நான் போக மாட்டேன். உங்களுக்கு என் கூட வாழமுடியலன்னா அதைச் சட்டப்படி பார்த்துக்கலாம். அதுவரை என்னால் இங்க இருந்து போக முடியாது.” தான் செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தால் தன் கால்களோடு சேர்த்து இன்னும் ஆறு கால்களும் வீட்டு வாசல்படியைத் தாண்டத் தயங்காது என்பதால் ஊர்மியும் எதற்கும் துணிந்தவளாகப் பேசினாள்.

     “உன்கிட்ட எல்லாம் பேச்சால சொன்னா பத்தாது இப்பப் பாரு.” என்றவன் அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்து அவளை வெளியே இழுத்துச் செல்ல, லீலா தன் தங்கையை அவள் கணவனிடம் இருந்து காப்பாற்றப் போராடினாள். அவன் லீலாவைத் தள்ளிவிட அவள் போய் ஒரு தூணில் நன்றாக முட்டிக்கொண்டாள்.

     “மாமா அக்காவை விடுங்க. மாமா ஊர்மியை விடச் சொல்லுங்க.” நாகா மற்றும் வடிவேலுவிடம் தேவகி, ருக்கு இருவரும் மாற்றி மாற்றி கத்த, இதற்கு மேலும் பொறுமையாக இருக்கக் கூடாது என நினைத்த வடிவேலு வாயைத் திறக்கும் முன்னர் லீலா கத்தினாள்.

     “என் தங்கச்சியை விடுறா” என்றாள் நின்ற இடத்தில் இருந்து கத்தி. அவள் குரலில் இருந்த வெறியும், கண்களில் இருந்த கோவமும் ஏனோ உள்ளுக்குள் பதற்றத்தைக் கொடுக்க, ஊர்மியின் கழுத்தில் இருந்து கையை எடுத்தான் நாகா.

     “ஊர்மி, ருக்கு, தேவகி மூணு பேரும் அக்காகிட்ட வாங்க.” லீலா அழைக்க அவர்களும் வந்தனர். லீலாவின் முகமே அவள் ஏதோ தீர்க்கமான முடிவெடுத்துவிட்டதாய் காட்டியது.

     “அக்கா என்ன சொன்னாலும் கேட்பீங்களா?” லீலா கேட்க, “சொல்லுக்கா” என்றனர் மூவரும் கோரஸாய்.

     “நமக்கு இந்த வீடு வேண்டாம்.” என்றாள் லீலா அதிரடியாய்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. அடப்பாவி நாகா … இப்படி பண்ணிட்ட … இப்படி பேசுற … வடிவேலு உங்களை நான் என்னமோ அப்படின்னு நினைச்சேன் … இப்படி பண்ணிட்டீங்க … இப்போ இங்க நடந்த பிரச்சனைல யாருக்காவது ஏதாவது பெரிய காயம் ஆகி இருந்தா … உயிருக்கு ஆபத்தா ஆகி இருந்தா அப்பவும் பொறுமையா பேசுவீங்களா …

    உங்க பசங்க கேட்ட அளவு கூட அந்த நாகா வை எதுவும் கேட்கலையே நீங்க … லீலா வை வேற எதுக்கு தேவையில்லாம பேசுறீங்க …

  2. சகி இந்த அத்தியாயத்தை வேற தொடர்கதை ல தெரியாம சேர்த்துட்டீங்க போல … நானும் இந்த அத்தியாயத்தை படிக்காம அந்த next episode option கிளிக் பண்ணி அடுத்த எபிசோட் படிச்சேன் … இடையில இந்த எபிசோட் தொடர்ல மிஸ் ஆகுது …