Loading

அதீதம்-23

இன்னும் இரு வாரங்கள் என்பது, இமயனுக்கு, மிகக் குறைவான கால அவகாசம் தான். அதோடு இரு வாரங்களுக்கு, அவன் தன் நடிப்பைத் தொடர்ந்தாக வேண்டும். அவன் தோளில் துப்பாக்கி தோட்டா துளைக்க முயன்றதெல்லாம் நிஜம் தான். அவன் எலும்பைத் துளைக்காமல், உரசிச் சென்றதால், அவனுக்குப் பெரிதாய் பாதிப்பு இல்லை. ஏதோ முன் கூட்டியே யோசித்து செயல்பட்டதால், உயிரோடு இருக்கிறான். இந்த சுதாரிப்பும் தெளிவும் இல்லையென்றால், அவனைப் புதைத்த இடத்தில் என்றோ புல் முளைத்திருக்கும். மயில்ராவணன் அதை என்றோ செயல்படுத்தியிருப்பார்.

“டேய்.. ஆரு கோபமாய் போறா டா.. அவளைக் கூப்பிட்டு சமாதானப்படுத்து!” என அர்ஜுன் சொல்ல,

“அதை விட முக்கியமான வேலை நமக்கு இருக்கு அர்ஜுன். ஆராவைச் சமாதானப்படுத்த நேரம் இருக்கு. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாம செய்யப் போற வேலைகளுக்கு நேரம் போதாது.!” என உறுதியாய் சொன்னான் இமயன்.

“அப்போ! நீ உடனே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வா..!”

“இப்போ நான் வீட்டுக்கு வந்துட்டால், தேர்தலில் ஜெய்க்க முடியாது டா. நாம வாங்கப் போற ஒவ்வொரு ஓட்டுக்கும் மக்களோட அனுதாபம் நமக்கு வேணும். அதோட நாம ஜெய்ச்சால், செயல்படுத்த வேண்டிய திட்டங்களைப் பற்றிய தெளிவும் வேணும்.!”

“இப்போ நாம என்ன தான் செய்யப் போறோம்?!”

“உங்க அப்பாவே என்னை நேரடியாக அந்தத் தொகுதியில் நிறுத்தியதால், ஓட்டு வர்ரதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனால், அவர் அதற்கும் எதாவது திட்டம் வச்சிருப்பார். இந்த தேர்தலில் நான் உள்ளே வர்ரதை தடுத்து நிறுத்திட்டால், என்னை ஒட்டு மொத்தமா அழிச்சுடலாம்ங்கிறது தான் அவர் நினைப்பு. அதை நாம பொய்யாக்கணும்ன்னா, அவர் வழியிலேயே போய் தான் நாம அவரை அடிக்கணும்.!”

“அவர் பெருசா என்ன செஞ்சிடப் போறார்? இந்நேரத்திற்கு பணப் பட்டுவாடா நடந்து முடிஞ்சு, தேர்தலுக்கு முன்னாடியே ரிஸல்ட் அவருக்கு தெரிஞ்சுருக்கும்.!”

“இந்த முறை நமக்கு நேரம் குறைவா இருக்கு அர்ஜுன். இதைச் செய்றேன், அதைச் செய்யறேன்னு சொல்லி ஓட்டு வாங்க முடியாது. அதோட, நாம ஜெய்ச்சுடக் கூடாதுன்னு தான், தேதியை முன்னாடியே அறிவிச்சுருக்காங்க. இப்போ நமக்கு வேற ஆப்ஷன் இல்லை. நம்ம ஆப்ஷனும் பணம் மட்டும் தான். மக்கள் மனுஷனை நம்பறதை விட, பணத்தை தான் அதிகம் நம்பறாங்க!” என வேதனையோடு சொன்னான் இமயன்.

அவனுக்கு தனிப்பட்ட முறையில், பணத்திற்கு பண்ட மாற்றாக ஓட்டு வாங்குவதில் எல்லாம் துளியும் விருப்பமே இல்லை. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில், அதைத் தவிர அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.

“புரிஞ்சு தான் பேசுறியா இமயன்? அதுக்கெல்லாம் நிறைய பணம் வேணும். அந்த ஆளு சுரண்டி, சுரண்டி பதுக்கி வச்சிருக்காரு.. அதனால் கொடுக்கிறார். நாம அவ்வளவு பணத்திற்கு எங்கே போக?”

“ம்ம்ம்.. அதைத் தான் நானும் இவ்வளவு நேரமா யோசிச்சுட்டு இருந்தேன். உங்க அப்பாக்கிட்டேயே கேட்டுடுவோம்!” என சாதாரணமாய் இமயன் சொல்ல, அதிர்ந்து நின்றான் அர்ஜுன்.

“அந்தாளு தருவாருன்னு நினைக்கிறியா? அவர்கிட்டே எல்லாம் வேணாம் டா!” என அர்ஜுன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மயில்ராவணனுக்கு அழைத்திருந்தான் இமயன்.

“என்ன மாமனாரே.. என்னைப் பத்தி எப்போ தகவல் வரும், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டலாம்ன்னு காத்துட்டு இருக்கீங்களா?” என நக்கலாய் கேட்டான் அவன்.

அவன் சொன்னதும் அதிர்ச்சியாய் தொலைக்காட்சி திரையைப் பார்த்தார் அவர்.

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, ஆளும் கட்சி பிரமுகர் இமயவரம்பனின் உடல் நிலையில் பின்னடைவு!” என தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்ததைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன். ஆனாலும், இது பொய்யாக இருக்குமோ? என்ற சந்தேகமும் அவருக்குள் இருந்தது. அரசியலில் எத்தனை பேரைப் பார்த்திருப்பார்.. இதை யூகிக்க முடியாதா என்ன? இப்படி நடந்தால் என்ன செய்வது? என யோசித்து முன்னேற்பாடாக இன்னொரு திட்டத்தையும் அவர் கைவசம் வைத்திருந்தார்.

“டிவியில் நியூஸ் பார்த்து ஏமாந்துட்டீங்களா மாமா? அச்சோ.. பாவம் மாமா நீங்க.. அந்த நியூஸைக் கிளப்பி விட்டதே நான் தான். இது தெரியாமல் ஏமாந்துட்டீங்களே..!” என அவன் நக்கலாய் சொல்ல,

“ரொம்ப ஆடாதே இமயன்! இது எல்லாம் நிரந்தரம் இல்லை. எலெக்ஷன் மட்டும் முடியட்டும். தேர்தலில் ஜெய்ச்சுடலாம்ன்னு கனவு காணாதே.. இப்போ ஆடுறதுக்கெல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாக மண்ணைக் கவ்வப் போற..!” எனத் தெனாவட்டாகவே பேசினார் மயில்ராவணன்.

“நீங்க இருக்கும் போது, எனக்கென்ன கவலை மாமா? உங்க மருமகன் நான்.. என்னை அப்படியே விட்டுட மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்.!”

“உன்னை தோற்கடிக்கிறது தான் என்னோட முதலே வேலையே..! ஒரேயொரு தொகுதி தானே? போனால் போகுதுன்னு எதிர்க்கட்சிக்கு விட்டுக் கொடுத்துடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். எல்லா வேலையும் முடிஞ்சுருச்சு. நீ இந்த தேர்தலில் தோற்று அசிங்கப்பட்டு நிற்கிறதை நான் பார்க்கணும்! உன்னை ஒரேடியாய் போட்டுத் தள்ளிடலாம்ன்னு நினைச்சேன். ஆனால்.. நீ சாகிறதை விட, நீ அசிங்கப்பட்டு நிற்கிறது தான் எனக்கு வேணும்! ஹாஸ்பிட்டல் நாடகம் போட்டு ஜெய்ச்சுடலாம்ன்னு நினைக்காதே! நான் விடமாட்டேன்.!” என அதீத கோபத்துடனே சொன்னார்.

“நான் தேர்தல் நடந்து முடிஞ்சு, அதோட முடிவுகள் வந்தப் பிறகு, அசிங்கப்பட போறேன்னா, நீங்க அதுக்கு முன்னாடியே பட்டுடுவீங்க மாமா! நான் தோற்றுப் போனேன்னா அது வெறும் தோல்வி மட்டும் தான். ஆனால் நீங்க அசிங்கப்பட்டால் பதவிக்கே வர முடியாது!” அவருக்கு கொஞ்சமும் அழுத்தம் குறையாமல் மிரட்டினான் இமயன்.

“என்னடா மிரட்டுறியா? மிரட்டி காரியம் சாதிக்கலாம்ன்னு பார்க்கிறியா? நீ அப்படி என்ன கிழிச்சுடவன்னு நானும் பார்க்கிறேன்.!” என ஆத்திர மிகுதியில் அவர் உறும,

“ரிலாக்ஸ் மாமா! ரிலாக்ஸ்..! உடம்புக்கு எதாவது வந்துடப் போகுது.. அப்பறம் நான் யாரை வச்சு காரியம் சாதிக்கிறது?” எனப் பொறுமையாய் கேட்டான் அவன். அவனது பேச்சில் நிதானமும் தெளிவும் இருந்தது. இப்போதிருக்கும் காலச் சூழ்நிலையில், நேர்மையாக நின்று வெற்றி பெறுவதெல்லாம் சாத்தியப்படாத ஒன்று. எது தேவையோ அதுவே தர்மம் என்ற மனநிலைக்கு காலம் அவனைத் தள்ளிவிட்டுவிட்டது. இப்போதைய சூழ்நிலையில் அவனைப் பொருத்தவரையில், அவனுக்கு எது தேவையோ.. அது மட்டுமே தர்மம்.

“என்ன நடிக்கிறியா இமயன்?”

“நீங்க கத்துக் கொடுத்தது தானே மாமா? நீங்க என்கிட்டே நடிச்சு தானே கவி கழுத்தில் தாலிக்கட்ட வச்சீங்க? காலில் கூட விழுந்தீங்களே மாமா மறந்துட்டீங்களா? நான் வேணும்ன்னா இன்னொரு முறை ஞாபகப்படுத்தவா? அப்படியே உங்கப் பொண்ணு கவிநயா எங்கே இருக்காள்ன்னு கூட ஞாபகப்படுத்தணும் போல..!”

“அவள் வெளிநாட்டில் இருக்கா.. அவளை வச்சு புதுசா ஏதாவது திட்டம் போடலாம்ன்னு பார்க்கிறியா?”

“முழுக்க முழுக்க என்னையே கண்காணிச்ச நீங்க.. உங்கப் பொண்ணை மறந்துட்டீங்களே மாமா! உங்கப் பொண்ணு, இப்போ இந்த நிமிஷம் என் வீட்டில் தான் இருக்கிறாள். அதுவும் புருஷன், குழந்தையோட..!” என அவன் சொல்ல, மயில்ராவணனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

“உங்களைச் சார்ந்த, உங்க சாதி ஆட்களுக்கு, கவிக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆனது மட்டும் தானே தெரியும். அவள் தீபக்கோட இருக்கிறதும், அவங்களுக்கு குழந்தை இருக்கிறதும் தெரிஞ்சால்..? உங்க சாதி ஓட்டுக்காக தான், தீபக்கை தூக்கிட்டு, என்னை கவி கழுத்தில் தாலிக்கட்ட வச்சீங்கன்னு எனக்குத் தெரியும். இதில் அந்த சங்கத்தோட தலைவர் பொண்ணே இப்படின்னு தெரிஞ்சால், என்ன ஆகும்ன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நல்லா யோசிங்க மாமா.. அவசரப்பட்டு எந்த பதிலும் சொல்லிடாதீங்க! நான் வெய்ட் பண்ணுறேன்.. இன்னும் ரெண்டு வாரம் இருக்கே!”

“விளையாடாதே இமயன்..!”

“உங்கக்கிட்ட விளையாடுற ஐடியா எதுவுமே எனக்கு இல்லை.! இது விளையாடுற நேரமும் இல்லை. அதோட நீங்க சொல்ற பதிலை வச்சு தான், அடுத்து நான் என்ன செய்யறதுன்னு முடிவு பண்ணணும். நீங்க வழிக்கு வரலைன்னா என்னோட கடைசி திட்டத்தை தான் செயல்படுத்தணும்.!” என அவன் மென் குரலில் சொல்ல, அந்தப் பக்கம் குழப்பமாய் புருவம் சுருக்கினார் மயில்ராவணன்.

‘அவனுடைய கடைசி திட்டம் என்னவாக இருக்கும்?’ என்ற யோசனை அவருக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அவனுடைய திட்டம் பெரிதாக இருக்கும் என்பது தான் அவருடைய எண்ணமும்.

“மிஞ்சி, மிஞ்சிப் போனால் என்ன செஞ்சுவ? எதிர்க்கட்சியில் சேர்ந்துடுவேன்னு என்ன மிரட்டுவ.. அவ்வளவு தானே?” என அவன் திட்டத்தைத் தெரிந்துக்கொள்ள முயன்றார் அவர்.

“என்கிட்டேயே போட்டு வாங்கப் பார்க்குறீங்க மாமனாரே..? ஆனாலும் நீங்க இவ்வளவெல்லாம் சிரமப்பட வேண்டாம். நானே சொல்றேன்.!” எனச் சொன்னவன்,

“ஒரேயொரு சின்ன க்ளிக்.. உங்களோட பதுக்கல் இரகசியங்கள் அத்தனையும் மத்திய அரசுக்குப் பறந்துடும். கணக்கே காட்ட முடியாத அளவிற்கு பதுக்கி வச்சிருக்கீங்க.. பார்த்து பத்திரமாய் வச்சுக்கோங்க!” எனச் சொன்னவன், அவர் பதில் சொல்லும் முன்னே அழைப்பைத் துண்டித்திருந்தான்.

“என்னடா கட் பண்ணிட்ட? அவர் என்ன சொல்லப் போறார்ன்னு தெரியலையே?” என அர்ஜுன் கேட்க,

“அவரே கால் பண்ணுவார் டா! அவருக்கு பயம் இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் எவ்வளவு அமௌண்ட் அடிச்சிருக்காருன்னு எனக்குத் தெரியும் அர்ஜுன். நான் பக்கத்திலிருந்து பார்த்திருக்கேன். எல்லாமே கட்சி வளர்ச்சிக்கு, மண்ணாங்கட்டிக்குன்னு நம்மளையே நம்ப வச்சிடுவார். அவரைப் பத்தின இரகசியமெல்லாம் வெளியே வந்தால், எதிர்க்கட்சி சதி, அது இதுன்னு சொல்லி தப்பிச்சுடலாம்ன்னு நினைச்சுருப்பார். ஆனால், நான் சென்ட்ரல் கிட்டே போவேன்னு அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.! இது மட்டுமில்லை, பண மோசடி, நில மோசடின்னு எதையுமே விட்டு வைக்கலை. நாம பார்க்கிற கோணம் மாறினால் தான் அவங்க செய்ற தப்பு கூட நம்ம கண்ணுக்கு தெரியுது அர்ஜுன். நான் அவர் கூட இருந்தவரை, அவர் செஞ்ச எதுவுமே எனக்கு தப்பா தெரியலை.! ஆனால் இப்போ யோசிச்சு பார்த்தால், நானும் எல்லாத்துக்கும் துணை போயிருக்கேன்னு நினைக்கும் போது, குற்றவுணர்ச்சியாக இருக்கு!” நிஜமான வருத்தத்துடன் சொன்னான் இமயன்.

“ம்ப்ச்.. நீ தெரிஞ்சு எதையும் செய்யலை டா! இப்படித்தான் நடக்கணும்ன்னு இருந்திருக்கு. கவிக்கும், உனக்கும் அவர் கல்யாணம் பண்ணி வைக்காமல் இருந்திருந்தால், நீ உண்மையை உணர்ந்து அவருக்கு எதிராக நின்னுருக்க மாட்டே! அவர் சொல்ற எல்லாத்தையும் கண்மூடித் தனமாய் நம்பியிருப்ப. நீ பார்க்கும் கோணமும் மாறியிருக்காது. உன் கண்ணுக்கு தெரியுற காட்சிகளும் மாறியிருக்காது.!” என அர்ஜுன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், இமயன் கரத்திலிருந்த அலைபேசி செல்லமாய் சிணுங்க, அதில் மயில்ராவணன் பெயர் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

********

“மேலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் கட்சியைச் சேர்ந்த திரு.இமயவரம்பன் சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். தமிழக முதல்வர் மயில்ராவணன் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.” என தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தியை முகம் நிறைய மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

இந்த பதவியேற்பிற்காக அர்ஜுனும், இமயனும் சென்னை வந்திருந்தனர்.
அவனுக்கு தன் நண்பனை நினைத்து நிரம்பவும் பெருமையாக இருந்தது. என்னவோ தானே வெற்றி பெற்றதைப் போல் உணர்ந்தான் அவன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது சாதாரண விஷயமாகத் தெரியலாம். தன் தந்தையின் அரிசியல் ஆலோசகராய் இருந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவி வரை சென்றிருக்கிறான் என்றால், அது சாதாரண விஷயமில்லை.

அதிலும் கடைசியில் மயில்ராவணனையே அவனுக்கு ஆதரவாய் ஓட்டு சேகரிக்க வைத்ததெல்லாம், அவ்வளவு எளிதானக் காரியம் இல்லை. வெறுமனே அவன் மயில்ராவணணை மிரட்டி மட்டும் காரியம் சாதித்துவிடவில்லை.
கட்சிக்குள் இருந்த நற்பெயரோடு, அவனின் உழைப்பும் தான் இதற்குக் காரணம். தேர்தலுக்கு முன்னிருந்த பதினைந்து நாட்களும் அவன் உறங்கியதே சிலமணி நேரங்கள் தான். தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் முதல், தொகுதி முழுதும் வாக்கு சேகரித்தது.. பணப் பட்டுவாடா என ஒவ்வொன்றையும் மருத்துவமனையில் இருந்தாலும், நேரடி கண்காணிப்பில் செய்ய வைத்திருந்தான். அதிலும் 1,24,053 வாக்குகள்.. கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது ஒன்றும் அத்தனை சாதாரண விஷயமில்லை.

அர்ஜுன் தன் நண்பனின் வெற்றியை எண்ணி சிலாகித்துக் கொண்டிருந்த வேளையில்,

“நீயெல்லாம் என் புள்ளைன்னு வெட்கமில்லாமல் சொல்லிக்காதே..! அது நீ இருக்க வேண்டிய இடம் அர்ஜூன்! எம்.எல்.ஏ, எம்.பின்னு முன்னேறி முதலமைச்சர் சீட்டில் உட்கார வேண்டியவன் நீ..! நீ என்னடான்னா அவனுக்கு விட்டுக் கொடுத்துட்டு, அவன் ஜெய்க்கிறதைப் பார்த்து சந்தோஷப்படுறே?” எனக் கேட்டபடியே உள்ளே வந்நதார் மயில்ராவணன்.

“நான் ஏற்கனவே உங்கக்கிட்டே சொல்லிட்டேன்.. எனக்கு இந்த அரசியல், பதவியெல்லாம் செட் ஆகாது. முதலில் எங்களைப் பெத்த அப்பாவா, எங்களோட விருப்பங்களை தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க! நீங்க எந்த முயற்சியும் பண்ண மாட்டீங்க! அரசியல், கட்சின்னு போய்டுவீங்க! நாங்க மட்டும் உங்க புள்ளையாக உங்களைப் புரிஞ்சு நடந்துக்கணும்.!” என அவன் கோபமாய் கேட்க, மயில்ராவணனிடம் பதில் இல்லை.

“இப்படி அரசியலில் இருக்கும் ஒவ்வொருத்தரும், பணம், பதவி, புகழ்ன்னு ஏதோவொரு காரணத்திற்காக பிள்ளைகளை வற்புறுத்துவதால் தான், வாரிசு அரசியல் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கு. உண்மையிலேயே அரசியலுக்கு வர்ரதுக்கு விருப்பம் இருந்தால் பரவாயில்லை. விருப்பம் இல்லாதவங்களை விட்டுடலாம் தானே? ஏற்கனவே நீங்க செஞ்சுட்டு போன பாவங்களை நான் தான் சுமக்கணும்.. சுமக்கிறது பத்தாதுன்னு அதே பாவத்தை என்னையும் செய்ய சொல்றீங்க? ஒருவேளை நீங்க சொல்றதைக் கேட்டு நான் அரசியலுக்குள்ளே வந்துட்டேன்னு வைங்க.. என்னை தனிச்சு செயல்பட விடுவீங்களா.? உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு, நீங்க நினைக்கிறதை என்னை செய்ய வைக்கத்தான் முயற்சிப்பீங்க. நீங்க ஆட்டி வைக்கிற பொம்மையாய் என்னால் நிச்சயமாய் இருக்க முடியாது.!” தெள்ளத்தெளிவாய் தன் மனதில் இருப்பவற்றைச் சொன்னான் அர்ஜுன்.

“எல்லாத்தையும் அவனுக்கு விட்டுக் கொடுத்துட்டு, நீ என்ன செய்யப் போற அர்ஜுன்? ஒரு முதலமைச்சரோட பையன், அரசியல் வேணாம்ன்னு சொல்றது உனக்கே அசிங்கமா இல்லை?”

“எனக்கு அசிங்கமா இல்லை! நான் உருவாக்கின சாம்ராஜ்ஜியத்திற்கு தான் நான் ராஜாவா இருக்கணும். உங்க சிம்மாசனத்தில் உட்கார நான் தயாராய் இல்லை. நீங்க இந்த மாநிலத்தோட முதலமைச்சராக இருக்கலாம். ஆனால், முதலமைச்சர் பையன் அரசியலில் இருக்கணும்ன்னு எந்தக் கட்டாயமும் இல்லை. அதோட இமயனுக்கு நான் எதையும் விட்டுக் கொடுக்கலை. அவனோட இடத்தை அவனே உருவாக்கிக்கிட்டான். உங்கக் கட்சியை உங்களுக்குப் பின்னால் வழி நடத்திக் கொண்டு போகும் தகுதி இமயன் கிட்டே இருக்கு. அதைப் புரிஞ்சுக்காமல், என்னை இதுக்குள்ளே இழுக்கணும்ன்னு நினைச்சால், உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.!”

“இப்போ என்னை என்ன தான்டா செய்யச் சொல்ற?”

“என்னை விட்டுடுங்கன்னு சொல்றேன். என்னை என் வழியில் விட்டுடுங்க! கேவலம் பதவிக்காக, மிருகம் தன் இரையை வேட்டையாடுறது போல, இமயனை அழிக்க நீங்க போட்ட திட்டத்தையெல்லாம் நானே என் கண்ணால் பார்த்தேனே.. அவன் கட்சிக்குள்ளே வந்துடக் கூடாதுன்னு இவ்வளவு பண்ணுற நீங்க, முதலமைச்சர் நாற்காலியில் உட்காருவதற்காக என்னென்ன பண்ணியிருப்பீங்க? அதையெல்லாம் யோசிச்சாலே உங்க மேலே மரியாதையோ பாசமோ வர மாட்டேங்குது. எனக்கு அப்பாவே இல்லைன்னு நினைச்சுக்கிறேன்.. தயவு செய்து என்னை விட்டுடுங்க!” என கொஞ்சம் சத்தமாகவே கத்தியிருந்தான் அர்ஜுன்.

அவன் இத்தனை வருடமாய் மனதிற்குள் சுமந்துக் கொண்டிருந்த அழுத்தம் முழுவதும், வார்த்தைகளாய் வெளியே வந்திருந்தது. சிறு வயதில் அவன் இழந்த நாட்கள் எல்லாம் கண் முன் வந்து போனது. ஒரு தகப்பனாய் அவர் பிள்ளைகளின் பக்கத்தில் அமர்ந்து பேசிய நாட்கள் அவன் நினைவில் இல்லை.

“வார்த்தையைப் பார்த்து பேசு அர்ஜுன்! நான் மட்டும் இல்லைன்னா பணம், படிப்பு எதுவுமே உன்கிட்டே இருக்காது. எல்லாம் நீ வேண்டாம்ன்னு சொல்ற இந்த அப்பனால் வந்தது. பறக்க இறக்கை முளைச்சதும், மரத்தை மறந்துட்டு போற பறவை மாதிரி தான் நீயும் உன் தங்கச்சியும். நீ என்னை வேண்டாம்ன்னு சொல்றதால் எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை.!” என அவர் சொல்ல,

“உலகத்திலேயே நீங்க மட்டும் தான், பணம், படிப்பு இதையெல்லாம் பிள்ளைகளுக்கு கொடுக்குறீங்களா? பிள்ளைகளை படிக்க வைக்கிறதும், வளர்க்கிறதும், ஒவ்வொரு பெத்தவங்களோட கடமை. இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு பெத்தவங்களும் அதைத் தான் செய்றாங்க! அதைப் போய் சொல்லிக் காட்டுறீங்க? என் வாழ்க்கையில், அப்பாங்கிற உறவு, என் பெயருக்கு முன்னால் நிற்கிற வெறும் இனிஷியல் மட்டும் தான். இதுக்கு மேலே உங்கக் கிட்டே பேசுறதுக்கு எதுவும் இல்லை.!” எனச் சொன்னவன் விறுவிறுவென வெளியேறியிருந்தான்.

மயில்ராவணனோ, அதிர்ந்து போய் நின்றிருந்தார். தன் மகன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் அவரிடம் பேரதிர்வை ஏற்படுத்தி இருந்தன. அதிலும் அவர் கடைசியாய்ச் சொன்னது, அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர் தன் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்ததில்லை தான். அது அவருக்கே தெரியும் தான். ஆனால் அவர் ஓடியது, உழைத்தது, பிறரைச் சுரண்டியது எல்லாமே அவரின் வாரிசுகளுக்காக தான். பிள்ளைகளுக்காக தானே இவ்வளவும்செய்கிறோம்? என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது தான். ஆனால் மகனின் ஒற்றைக் கேள்வி அவரின் எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்திருந்தது. அவர் ஒரே நாளில், உணர்ச்சிவசப்பட்டு திருந்தும் ரகம் இல்லை தான், ஆனாலும் மகனின் கேள்வி அவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்னவோ நிஜம்.

‘நான் இத்தனையும் செய்தது எதற்காக? யாருக்காக? நாளை என் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே? மூட்டைத் தூக்கி பிழைப்பு நடத்திய நான், என் பிள்ளைகளுக்கு அப்படியொரு வாழ்க்கையைக் கொடுத்துவிடக் கூடாதென்பதற்காகத் தானே இத்தனையும் செய்தேன்? ஆனால், நான் வெறும் இனிஷியலாக மட்டும் இருந்திருக்கிறேன் என்றால்..? என் பிள்ளைகளுக்கு நான் யாரோவாக இருந்திருக்கிறேனா?’
என்ற கேள்விகள் அவர் மனதிற்குள், தன்னையறியாமல் ஓடிக் கொண்டே இருந்தது.
கண்கள் கலங்கியது.

முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் அரும்பத் துவங்கியிருந்தன. இடப்புற தோள்ப்பட்டை வழியாய் மெல்லிய வலி பரவுவதை உணர்ந்தார் அவர். அடுத்த சில நிமிடங்களிலேயே கண்கள் இருட்டிக் கொண்டு வர, மார்பைப் பிடித்தபடி மயங்கி சரிந்து அவர் கீழே விழப் போன அந்தத் தருணத்தில், வலிமையான இரு கரங்கள் அவரைத் தாங்கிப் பிடித்தது. அந்த வலிமையான கரங்கள் இமயனுக்குச் சொந்தமானது என்பதை மயில்ராவணனால் உணர முடிந்தது.

“ஐயய்யோ! சார் என்ன ஆச்சு?” எனப் பதறியபடி அவன் தாங்கிப் பிடிக்க, மயத்தில் சொருகிய தன் இமைகளின் இடைவெளியில், இமயனின் பதற்றமான முகம் அவர் கண்களுக்குள் விழுந்தது. கண்கள் சொருக, அவர் மொத்தமாய் மயங்கவும்,

“யாராவது வாங்க! சார் மயங்கி விழுந்துட்டார்!” எனக் கத்தி அழைத்தபடியே அவரைத் தரையில் கிடத்தி, இரண்டு கரங்களையும் ஒன்றின் மீது ஒன்று வைத்து, சீரான இடைவெளியில் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தான்.
இமயனின் குரல் கேட்டு அவசரமாய் ஓடி வந்த ராதிகா,
“ஐயோ.. என்ன ஆச்சு? அவரை என்னடா செஞ்ச? நீ நினைச்ச மாதிரி எம்.எல்.ஏ ஆகிட்டியே அப்பறம் என்ன?” எனக் கோபமாய் அவர் வினவ,

“முட்டாள்தனமா பேசாதீங்க! மயங்கி விழுந்துட்டார்! முதலில் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க!” எனச் சொன்னான். திடீரென அவன் அப்படிச் சொன்னதும், பதறி செய்வதறியாமல், அங்குமிங்கும் ஓடியவர், இறுதியாய் அலைபேசியை எடுத்து, மருத்துவ உதவி வாகனத்திற்கு அழைத்திருந்தார்.
அடுத்த அரைமணி நேரத்தில், முதல்வர்.மயில்ராவணன் அந்தப் பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அனைவருக்கும், தகவல் தெரிவிக்கப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர்.

அர்ஜுனும், கவிநயாவும் கூட வந்திருந்தனர். கவியின் கண்கள் கலங்கியிருக்க, தன் கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி, அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அர்ஜுனோ உணர்வற்ற முகத்துடன் சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.

“நீ ஏன்டா அங்கே போன?” என இமயனிடம் கேட்டான் அர்ஜுன்.

“ஏன்டா இப்படி கேட்கிற? அவர் உன் அப்பா டா!”

“இப்போ நீ அவரைக் காப்பாத்திட்டதால் மட்டும், அவர் மாறிடுவார்ன்னு நினைக்கிறியா? உன்னைக் கொல்ல நினைச்சவர் டா அவரு.. அவரை எப்படி நீ காப்பாத்த நினைச்ச.? உனக்கு கொஞ்சமும் கோபமே வரலையா?”

“அர்ஜுன்! அவரால் என் வாழ்க்கை போய்டுச்சுன்னு அவர் மேலே எனக்கு கோபம் இருந்தது நிஜம் தான். அவர் செஞ்சதுக்கான நஷ்ட ஈடாக நான் பதவி கேட்டதும் நிஜம் தான். ஆனால், அவர் உயிரோட இருக்கக் கூடாதுன்னு நான் நினைச்சதில்லை டா. ஏன்னா அவர் என் அர்ஜுனோட அப்பா! என் நண்பன் அர்ஜுனோட அப்பா!” என இமயன் சொல்ல, தன் நண்பனை ஆரத் தழுவிக் கொண்டான் அர்ஜுன். முதன் முறையாய் அர்ஜுனின் கண்கள் கலங்கியது. வார்த்தைகள் வர மறுத்து தொண்டை அடைத்தது அர்ஜுனுக்கு. ஆனாலும் அவன் வார்த்தைகள் பேசாததை அவனது இறுகிய அணைப்பு பேசியது. இருவரின் நட்பின் ஆழத்தை அவர்களுக்கு இடையே இருந்த புரிதல் சொல்லாமல் சொன்னது.

“மச்சி! இதுக்கெல்லாம் எமோஷ்னல் ஆகாதே.. ஓவர் எமோஷன் உடம்புக்கு ஆகாது டா! கவலைப் படாதே டா மயில்ராவணன் சாருக்கு ஒண்ணும் ஆகாது!” என தன் நண்பனை இயல்பிற்குக் கொண்டு வர முயன்றான் அவன்.

“அவர் இந்த தமிழ்நாட்டு மக்களை இன்னும் கொஞ்ச காலத்திற்கு தொல்லைக் கொடுக்காமல் போக மாட்டார்ன்னு எனக்கும் தெரியும் டா. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாரு.. உன்னை யாருடா என்னைக் காப்பாத்த சொன்னதுன்னு கத்தப் போறார்.. உன் முன்னாள் மாமனார்!” என அர்ஜுன் சொல்ல, இமயனும் அர்ஜுனும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அதே நேரம், தன் நண்பன் ராகவுடன் அங்கு வந்து சேர்ந்தாள் ஆருத்ரா.

“ஏய் ராகவ்.. இவளை ஏன்டா இங்கே கூட்டிட்டு வந்தே?” என இமயன் ராகவைப் பார்த்துக் கோபமாய் கேட்க,

“ஐயோ.. நான் வேணாம்ன்னு தான் சொன்னேன். அண்ணி தான்..!” என ஆருத்ராவை கை காட்டினான் அவன்.

“நான் தான் இங்கே யாரும் வர வேண்டாம்ன்னு சொன்னேனே? எதுக்காக இங்கே கூட்டிட்டு வந்த? முதலில் ரெண்டு பேரும் மதுரைக்கு கிளம்பி போங்க!” என இமயன் அழுத்தமாய் சொல்ல,

“பார்த்துட்டே நிற்கிறியே.? உனக்காக தானே வந்தேன்.. என்னைக் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிற பார்த்தியா? என் அண்ணன் வேற உன் மூஞ்சியைப் பார்க்காமல் என்னைப் பார்த்தே பேசுறான். ஆளாளுக்கு என்னை வச்சு செய்ங்க!” என ஆருத்ராவின் காதுக்குள் முணுமுணுத்தான் ராகவ்.

“இல்லை.. நான் பேசணும்..!” என ஆருத்ரா சொல்ல, அவள் பக்கம் திரும்பாமல் வேறு எங்கோ பார்த்தபடி நின்றான் இமயன்.

“நானும் பேசணும்ன்னு தான் உனக்கு கால் பண்ணினேன். நான் என்ன சொல்றேன்னு கேட்கிறதுக்கான பொறுமை கூட உன்கிட்டே இல்லல்ல? இப்போ நீ பேசுறதைக் கேட்கிற மனநிலையில் நான் இல்லை. இப்போதைக்கு இங்கிருந்து கிளம்பு. ராகவ்! அவளைக் கூட்டிட்டு போ!” எனச் சொன்னவன் அவள் சொல்ல வருவதைக் கேட்காமலே அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

என்னதான் தேர்தல் வேலைகள் இருந்தாலும், அதற்கிடையில் நேரம் ஒதுக்கி, அவளைச் சந்திப்பதற்கும், அவளோடு பேசுவதற்கும் முயற்சித்தான். ஆனால், அவள் ஒருமுறைக் கூட, அவள் அனுமதிக்கவே இல்லை. அவன் செய்தது தவறு தான். அவள் கோபமும் நியாயமானது தான்.. ஆனால் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைக் கூட கேட்க அவளுக்கு மனமில்லை என்பது தான் அவன் கோபத்திற்குக் காரணம். அவளைக் காணாத இத்தனை நேரமும் அவன் இழுத்துப் பிடித்திருந்த கோபம் முழுவதும், அவளைக் கண்டதும், வெயில் உருகும் பனித்துளியைப் போல், கொஞ்சம் கொஞ்சமாய் உருகிக் கரையத் துவங்கியிருந்தது.

‘நான் தவிர்த்த போதும், அவனுக்கும் இப்படித்தானே வலித்திருக்கும்?’ என யோசித்தபடியே வாடிய முகத்துடன் அவள் ராகவோடு நடந்துக் கொண்டிருந்தாள்.

“நான் தான் சொன்னேனே ஆரு.. நீ தான் கேட்கவே இல்லை. இமயன் இத்தனை நாள் மதுரையில் இருந்தப்போ எல்லாம், நீ பேசவே மாட்டேன்னு பிடிவாதமாய் இருந்த.. இமயன் சென்னை வந்த பிறகு அவனைப் பார்க்கணும்ன்னு அடம் பிடிக்கிற? இந்த லவ்வில் சுத்தமா லாஜிக்கே இருக்காது போல..!” என ராகவ் புலம்பிக் கொண்டே நடந்துக் கொண்டிருந்த அதே நேரம், அதிரடியாய் ஆருத்ராவின் முன் வந்து நின்றிருந்தான் இமயவரம்பன்.

“மாயன்..!” அவள் நெகிழ்ந்து அழைக்க,

“இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுக்காதே டி! எனக்காக என்னைத் தேடி வந்திருக்க.. உன்னை நேரில் பார்த்த பிறகு கோபம் கூட வர மாட்டேங்குது.. லவ் யூ ஆரா..!” என அவள் விழி பார்த்துச் சொன்னவன்,

“இப்போ கிளம்பு.. சீக்கிரமே உனக்காக வந்துடுவேன்..!” எனச் சொல்லிவிட்டு அவளை இறுக அணைத்து விடுவித்து அதே வேகத்தில் விரைந்து சென்றிருந்தான்.

“ஆமா.. இங்கே இப்போ என்ன நடந்துச்சு? அவன் என்னடான்னா ஆரான்னு உருகுறான்.. நீ மாயன்னு புதுசா கூப்பிடுற? சரி, உங்களுக்குள்ளே என்னமோ பண்ணிக்கோங்க.. இங்கே நான் ஒருத்தன் இருக்கேன்னு கூடவா தெரியலை?” என ராகவ் கேட்க, புன்னகையுடன் பதில் சொல்லாது முன்னோக்கி நடந்தாள் அவள்.
அவளோடு வேகமாக இணைந்து நடந்த ராகவ்,

“இமயன் தான் என் அண்ணன்னு தெரிஞ்சதும், என்னை ஒரு பொண்ணு திட்டிச்சே.. ஃப்ரெண்ட்ஷிப்பே வேணாம்ன்னு சொல்லிச்சு.. அந்தப் பொண்ணை நீ எங்கேயாவது பார்த்த?” எனக் கிண்டலாய் கேட்டான்.

“போடா.. எருமை!”

“சந்தோஷமா இருக்கு ஆரு! ரொம்ப பயந்துட்டு இருந்தேன். உனக்குப் பிடிக்காத வாழ்க்கை. அதுவும் இமயனுக்கு செக்கெண்ட் மேரேஜ்.. என்னதான் அவன் என் அண்ணனாக இருந்தாலும், உன் வாழ்க்கை என்ன ஆகுமோ? என்னால் எதுவுமே பண்ண முடியலையேன்னு கில்ட் இருந்தது. இப்போ உன்னையும் இமயனையும் சேர்த்து பார்த்த பிறகு ரொம்பச் சந்தோஷமா இருக்கு!” என அவன் கள்ளமில்லா அன்புடன் நெகிழ்ந்து சொல்ல, அவனைப் பார்த்துச் சிரித்தபடியே அவன் கரம் கோர்த்து உடன் நடந்தாள் ஆருத்ரா. இமயனின் நேசத்திலும், ராகவின் ஆழமான நட்பிலும் அவள் மனம் நெகிழ்ந்திருந்தது.

“உன்னை யாரோவாக என்னால்..

கடந்து போகவே முடியவில்லை..!

உன் மீதான காதல் பித்து..

என் எல்லையற்ற கோபத்தையும்..

நமத்துப் போக வைத்துவிடுகிறது..!

உனக்கென்ன ஒற்றை முகச் சுளிப்பில்..

என்னை உன் முன் நிறுத்திவிடுகிறாய்..!

மூக்கு நுனி சிவந்து நிற்கும் உன் கோபத்திற்கே..

நான் கிறங்கிப் போய் நிற்கிறேனென்றால்..

உன் மோகப் பார்வைகளை..

எங்கணம் எதிர்கொள்ளப் போகிறேனோ?

இந்த மாயனையே மயக்கி வைத்திருக்கும்..
மாயாவி நீயடி..!”

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
21
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்