
அதீதம்-8

யானைக்கல்லில் இருந்த அந்த பெரிய வீட்டில் ஆருத்ரா கால் பதிக்கும் முன்னே, அந்த வீட்டைச் சுற்றிலும் கூட்டம் கூடி நின்றது. அந்த ஊரிலேயே அந்த வீடுதான் மிகப் பெரிதாய் இருந்தது. ஆருத்ராவே மிரட்சியுடன் பார்த்தபடிடே வாகனத்திலிருந்து இறங்கினாள்.
சுற்றி நிற்பவர்கள் அனைவருமே இமயவரம்பனின் உறவுக்காரர்கள் என்பதை அவளால் உணர முடிந்தது. கூட்டத்திலிருந்த மூத்த பெண்மணியொருவர் ஆருத்ராவின் முகம் வழித்துக் கொஞ்சி, நெட்டி முறித்து முத்தம் வைத்தார்.
“நல்லா இருக்கியாத்தா? நான்தேன் இமயனுக்கு அப்பத்தா! நீ உன் விருப்பம் போலக் கூப்பிடு, அம்மாச்சின்னு கூப்பிட்டாலும் சரித்தேன். அப்பத்தான்னு கூப்பிட்டாலும் சரித்தேன்.!” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் செல்லம்மாள்.
“வாம்மா!” என இமயவரம்பனின் அன்னை தனலெட்சுமி அழைத்துப் போக,
“எல்லாரும் பிறகு பேசுங்க! மருமக கொஞ்ச நேரம் உட்காரட்டும்!” எனச் சொன்ன அண்ணாமலை, இமயவரம்பனின் தந்தையாகத்தான் இருக்கும் என்பதை அவளால் உணரமுடிந்தது.
இமயன் அதிகமாய் தந்தையின் சாயலையும், ராகவ் தன் தாயின் சாயலையும் கொண்டிருக்கிறான் என்பதை பார்த்த மாத்திரத்தில் உணர்ந்துக் கொண்டாள் ஆருத்ரா.
அவளை உள்ளே வரவேற்று, அவள் காலை உணவை உண்டு முடிக்கும் வரை, இமயனின் உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்து அறிமுகம் செய்துக் கொள்ள, தலையைச் சுற்றியது ஆருத்ராவிற்கு. ஒரே நாளில் அத்தனை பேரும், அறிமுகம் ஆனதில் அவளுக்கு மூளை குழம்பியது.
“முதல் முதலாய் பார்க்குறீல்ல.. அதேன் அப்படி இருக்கு. அங்கண இங்கணன்னு விஷேஷத்தில் பார்க்கும் போதும், விருந்துக்குப் போகும் போதும், யாரு எவருன்னு தெரிஞ்சுரும்!” எனச் சொன்னார் தனலெட்சுமி. என்ன சொல்வதெனத் தெரியாமல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.
“என்னத்தா! பொம்மை மாதிரி தலையைத் தலையை ஆட்டுற? நான் என்ன மூணாவது மனுஷியா? சரிங்க அத்தைன்னு வாய் நிறைய சொல்லுத்தா! என் மனசு நிறைஞ்சு போகும்ல்ல?!” என அவர் சொல்ல,
“சரி அத்தை!” என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அவளுக்கு அந்தப் புதிய சூழ்நிலை, ஒரு மாதிரி அசௌகரியமாய் இருக்க, யாரிடமும் பேசவோ பதில் சொல்லவோ பிடிக்கவில்லை. அதோடு எல்லாரிடமும் போலியாய் சிரித்து வைப்பதும், அவளுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. தன் அன்னையிடம் பேசலாம் என அவள் தன் குடும்பத்தினரைத் தேட, அவர்கள் இமயன் குடும்பத்தினரோடு கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தனர்.
‘இங்கே வர்ர வரை, எனக்குமே கல்யாணத்தில் விருப்பமில்லை. சந்தேகமா இருக்கு.. அது இதுன்னு சொல்லிட்டு, இப்போ வந்து இங்கே சிரிச்சு சிரிச்சு பேசுறதைப் பார்! இந்த அம்மா வரட்டும்..!’ எனத் தனக்குள் புலம்பியவள்,
“நான் ரூமுக்கு போகலமா அத்தை?!” என வேண்டாவெறுப்பாய் கடைசியில் அந்த அத்தையைச் சேர்துக் கொண்டாள்.
“நீ போம்மா! முதல் மாடியிலே நடுவாப்ல இருக்கிற ரூமுதேன்.. துணைக்கு தங்கச்சியை கூப்பிட்டுக்கோ!” எனச் சொன்னவர்,
உள்ளே அழைத்துப் போய், அவளுக்கான அறையைக் காட்ட, தன் தங்கை மஞ்சரியுடன் அறையிலிருந்த மெத்திருக்கையில் அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.
“கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தா..! நான் பிறகு வாரேன்!” எனச் சொல்லிவிட்டு, தனலெட்சுமி வெளியே சென்ற பின்னர் தான் அவளால் நிம்மதியாய் மூச்சுவிட முடிந்தது. என்னவோ, அவளால் இந்தச் சூழ்நிலையில் ஒட்டவே முடியவில்லை. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அதோடு மனதிற்குள் நிறைய ஓடிக் கொண்டிருந்தது. முக்கியமாய் அவள் இங்கே வந்ததிலிருந்து தேடிக் கொண்டிருப்பது ராகவைத் தான். அவனை என்ன ஏதென்று இரண்டு வார்த்தைகளாவது கேட்டால் தான் மனம் ஆறும். இமயனை விட அதீதக் கோபம் ரராகவின் மீது அவளுக்கு இருந்தது.
“ஆரு! ஏன் டென்ஷனா இருக்கே? எல்லாம் சரியாகிடும்.! உன் முகமே நீ சரியில்லைன்னு காட்டிக் கொடுக்குது. கொஞ்சம் நார்மலா இரு!” என ஆருத்ராவின் முகத்தை வைத்தே சொன்னாள் மஞ்சரி.
“எனக்கு ரொம்ப ப்ரஷரா இருக்கு மஞ்சு! ஐ கான்ட் கன்ட்ரோல் மைசெல்ஃப்! ஒரு பக்கம் இந்தப் பிடிக்காத கல்யாணம். இன்னொரு பக்கம் இந்த ராகவ். என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் தெரியுமா அவன்.இப்படி என்னை நம்ப வச்சு கழுத்தறுப்பான்னு நினைக்கவே இல்லை! கஷ்டமா இருக்கு மஞ்சு!” என்ற ஆருத்ராவின் குரல் உடைந்தது.
ஆருத்ரா முதன் முறையாய் கொஞ்சம் பலவீனமாய் உணர்ந்தாள்.
எங்கு திரும்பினாலும் ஏமாற்றம். அவளுக்கு நிரம்பவும் வலித்தது. தன் உணர்ச்சிகளைக் கொட்ட முடியாது, மனதிற்குள் தேக்கி வைத்து தேக்கி வைத்து அதுவே பேரழுத்தமாய் அவள் மனதிற்குள் உருப்பெற்றிருந்தது. கோபம், ஆத்திரம், அழுகை எல்லாமே உணர்வுகளின் வெளிப்பாடு தானே? நம் மன அழுத்தங்களை, உள்ளே தேங்கிக் கிடக்கும் ரணங்களைக் கொட்டித் தீர்க்காவிடில் அது அழுத்தமாய் மாறத்தானே செய்யும்.
ஆருத்ராவிற்கும் அப்படித்தான். ஒருபுறம் விவேக்குடன் காதல் முறிவு.. இன்னொருபுறம் இமயனுடனான திருமண ஏற்பாடு.. இறுதியாய் உயிர் நண்பனாய் நினைத்தவன் ஏமாற்றிவிட்டானே.. என்றக் கோபமும் சேர்ந்து அவள் மனதை அழுத்தியது. போதாக்குறைக்கு, இமயன் வீட்டின் புதிய சூழ்நிலையும் சேர்ந்து அவள் மன அழுத்தத்தை இன்னும் கொஞ்சம் கூட்டியது.
‘ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?’ என நினைக்காமல் இருக்க முடியவில்லை. சுற்றிலும் இத்தனை பேர் இருந்தும், தனியே இருப்பதாய் உணர்ந்தாள் ஆருத்ரா. தொண்டைக் குழிக்குள் அடைத்துக் கொண்டு நிற்கும் கோபத்தைக் கொட்டிவிட்டால், அவள் சாதாரணமாய் மாறிவிடுவாளென அவளுக்கே தெரியும். அதுவரை அவளின் இந்த மனநிலை மாறப் போவதில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். இல்லாத பொறுமையை இழுத்து இழுத்துப் பிடித்தவள், நேரடியாய் கேட்டுவிடலாம் என ராகவிற்கே அழைத்துவிட்டாள். முதன் முறை முழு அழைப்பும் சென்று எடுக்கப்படாமல் நின்று போகவும், மீண்டும் கோபத்தோடு அழைத்தாள் ஆருத்ரா.
இரண்டாம் முறை அழைத்ததும் அழைப்பை ஏற்றான் ராகவ்.
“எங்கே இருக்க டா?!” குரலிலே அவள் கோபம் அவனுக்குப் புரிந்தது.
“வீட்டில் தான் ஆரு!” என அவன் சொன்ன மாத்திரத்தில்,
“எந்த வீட்டில் டா? எங்க வீட்டில் இருக்கியா? இல்லை உன்னோட சொந்த வீட்டில் இருக்கியா? இமயனோட தம்பிங்கிறதை மறைச்ச உனக்கு வீட்டை மறைக்கிறது ஒண்ணும் பெருசு இல்லையே? என்னை ஏமாத்திட்டல்ல ராகவ்?!” மூச்சு விடாமல் கேள்வி கேட்டாள் ஆருத்ரா.
“ஆரு.. ப்ளீஸ் காம்டௌன்! நானே உன்கிட்டே பேசணும்ன்னு நினைச்சேன். என்னன்னு நான் தெளிவா சொல்றேன். கொஞ்சம் வெய்ட் பண்ணு!”
“எப்போ வரை வெய்ட் பண்ணுறது டா? உன் அண்ணன் என் கழுத்தில் தாலி கட்டும் வரைக்கும் வெய்ட் பண்ணவா?”
“ஆரு!”
“என்னடா ஆரு? உனக்கு உண்மை தெரிஞ்சப்போவே சொல்லியிருக்கலாமே டா? கடைசியில் நீயே சுயநலமா யோசிச்சுட்டே தானே? உனக்கும் அந்த விவேக்கிற்கும் என்ன வித்தியாசம்? அவன் காதல்ன்னு சொல்லி ஏமாத்தினான். நீ நட்புன்னு சொல்லி ஏமாத்திட்டே! இட்ஸ் ஹர்ட் மீ லாட் ராகவ்.!” தொண்டை அடைக்க அவள் சொன்னதில், ராகவிற்கே ஒருமாதிரியாய் இருந்தது.
“ஆரு ப்ளீஸ்..! வீட்டில் எல்லாரும் போகட்டும், நானே உன்னை வந்து மீட் பண்ணுறேன். அதுவரை மட்டும் கொஞ்சம் பொறுமையாய் இரு.!” அவன் சொல்ல வந்ததைக் கேட்காமல், இணைப்பைத் துண்டித்திருந்தாள் ஆருத்ரா.
இப்போதும், அவளுக்குள் இருந்த கோபம் வடிய மறுத்தது. வழி தெரியாதக் காட்டுக்குள் மாட்டிக் கொண்டதைப் போல் உணர்ந்தவள், கட்டிலில் அமர்ந்த வாக்கிலேயே, கண்கள் மூடி பின்னால் சாய்ந்தாள். கண்கள் கலங்கி அழுகை வரும் போல் இருந்தது அவளுக்கு. யார் தோளிலாவது சாய்ந்து அழுது தீர்த்துவிட்டால், நிம்மதியாய் இருக்குமோ எனத் தோன்றியது. அவளுக்கிருந்த நெருங்கிய தோழிகள் யாரும், இப்போது தொடர்பில் இல்லை.
செய்வதறியாது வழி தொலைந்த குழந்தையைப் போல் உணர்ந்தாள் அவள்.
‘பேசாமல், அன்னையிடம் அத்தனையும் சொல்லி அழுது தீர்த்துவிடுவோமா?’ என மனம் சொன்னாலும், தன் பாரத்தை அவரிடம் இறக்கி வைத்து, அவர் மனதில் பாரமேற்ற வேண்டுமா? இருமனதாய் இருக்க, அன்னையிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தையும் கைவிட்டாள் ஆருத்ரா.
அதே நேரம், அவள் மனம் இன்னொருவிதமாய் சிந்தித்தது.
‘என்னை ஏமாற்றியவர்களுக்காக, எனக்கு துரோகம் செய்தவர்களுக்காக நான் ஏன் யோசிக்க வேண்டும்.? ராகவ் என்னைத் திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறான். அவன் அண்ணனின் வாழ்க்கைக்காக என் வாழ்க்கையை அழிக்கத் துணிந்தவனுக்காக நான் ஏன் இங்கே இருக்க வேண்டும்? இந்தத் திருமணம் நின்று போனால், ராகவிற்கு வலிக்கும் தானே? எனக்கு வலித்ததைப் போல் அவனுக்கும் வலிக்க வேண்டும்!’ என யோசித்தவள், அதற்கு மேல் துளியும் தாமதிக்கவே இல்லை. ஏனோ அவளைச் சுற்றியிருந்த தடைகள் விலகியதைப் போல் உணர்ந்தாள். இனி யாருக்காகவும் யோசிக்கப் போவதில்லை.. என முடிவு செய்துக் கொண்டவள், தன் பயணத்திற்கான பயணச் சீட்டை பதிவு செய்தாள்.
மாலை நான்கு மணிக்கு பேருந்து குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் என, பேருந்தின் பெயர், எண், நேரம் எல்லாம் அவளுக்குக் குறுஞ்செய்தியாய் வந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பேருந்து நிலையம் செல்வதற்காய் வாடகை வாகனத்தையும் புக் செய்துவிட்டு, முதலில் உடையை மாற்றினாள். புடவையை அவிழ்த்து வீசிவிட்டு, தனக்கு வசதியாய் சுடிதார் அணிந்துக் கொண்டாள்.
“ஆரு.. என்ன செய்யப் போற? எதுக்கு ட்ரெஸ் மாத்துறே? எங்கே போகப் போற?!” தமக்கையின் செயல்களைப் பார்த்து, பயந்து போய் கேள்வி கேட்டாள் மஞ்சரி.
“நான் இங்கிருந்து கிளம்பப் போறேன். யார் கேட்டாலும் சொல்லிடு.!” எனத் தங்கையிடம், மறைக்காமல் உண்மையைச் சொன்னவள், தனக்கு தேவையான பொருட்களை மட்டும், தனக்கான பெட்டியில் அடுக்கத் துவங்கினாள்.
“ஆரு அம்மா கேட்டால் என்ன சொல்லட்டும்?!”
“அம்மாகிட்டே நான் கிளம்பிட்டேன்னு சொல்லு! அப்பறம், எல்லா ஜுவல்ஸும் அந்த மெரூன் பேக்கில் தான் இருக்கு. நான் எதையும் எடுத்துட்டுப் போகலை! அதையும் சொல்லிடு. நான் கழுத்தில் காதில் போட்டிருக்கிறது எல்லாமே இமிட்டேஷன் ஜுவல்லரிஸ் தான் புரியுதா?!”
“ஆரு.. எனக்கு பயமா இருக்கு.. நான் இப்போவே அம்மாகிட்டே போய் சொல்லப் போறேன்.!”
“போய் சொல்லு! எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாரும் பார்க்க, எல்லாருக்கும் தெரிஞ்சே நான் போறேன். யார் தடுத்தாலும், இந்த முறை நான் கேட்கப் போறது இல்லை. இந்தக் கல்யாணமும் வேணாம். கண்ணராவியும் வேணாம்!” என அவள் சொல்ல, என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி நின்றாள் மஞ்சரி. ஒருபுறம் தாயிடம் சொல்லி விடலாம் என அவள் மனம் சொன்னாலும், தன் உடன்பிறந்தவளைக் காட்டிக் கொடுக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை.
“ஆரு.. நாம வேணும்ன்னா யார்கிட்டேயாவது பேசி பார்க்கலாமா?!”
“யார்க்கிட்டே பேசச் சொல்ற? நாம பேசுறதை யார் காதுகொடுத்து கேட்பாங்க? அவங்க அவங்களுக்கு, அவங்க கௌரவம் தான் முக்கியம். இவங்களோட, வெட்டி கௌரவத்திற்கு என் வாழ்க்கையை நான் பலியாக்கணுமா? என்னால் முடியாது.!” என உறுதியாய் சொன்னாள் ஆருத்ரா.
மஞ்சரி சில நிமிடங்கள் யோசித்தபடியே நின்றாள். பின் ஏதோ முடிவெடுத்து நிமிர்ந்தவளாக,
“ஆரு! நீ சென்னை போய்ட்டு, எனக்கு மட்டும் கால் பண்ணி சொல்றியா? நீ பத்திரமா போய்ட்டியா இல்லையான்னு தெரியாமல், எனக்கு பயமா இருக்கும் ஆரு! உனக்கு பிடிக்காத விஷயத்தை நீ யாருக்காகவும் ஏத்துக்க வேண்டாம். நீ கிளம்பு! நான் யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டேன். தோட்டத்துப் பக்கமா இன்னொரு வழி இருக்கு. பேசாமல் அந்த வழியாய் போய்டு!” என தமக்கையைப் புரிந்துக் கொண்டவளாய் மஞ்சரி சொல்ல, தன் தங்கையை இறுக அணைத்துக் கொண்டாள் ஆருத்ரா.
“தேங்க்ஸ் டி மஞ்சு!” நீர் தேங்கிய கண்களோடு சொன்னாள் ஆருத்ரா. யாருமே புரிந்துக் கொள்ளாத போது, தன் உடன்பிறந்தவளாவது புரிந்துக் கொண்டாளே.. என்ற நிம்மதியும் நெகிழ்ச்சியும் அவள் மனதை நிறைத்திருந்தது.
*******
மதிய உணவிற்குப் பிறகு உறவினர்க் கூட்டம் வீட்டை விட்டு கிளம்பியிருக்க, அந்த வீடு முழுவதும், அமைதியாய் இருந்தது. தன் அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள். வெளியே யாரையும் காணோம், கையில் பயணப் பொதியைத் தூக்கிக் கொண்டு மஞ்சரியிடம் மட்டும் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டு வெளியே கிளம்பியிருந்தாள்.
அவள் நல்ல நேரமோ என்னவோ வீட்டில் யாரும் அவளைப் பார்க்கவும் இல்லை. அவள் யார் கண்ணிலும் விழவும் இல்லை.
மஞ்சரி சொன்னபடியே, வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தின் கதவைத் திறந்துக் கொண்டு, கண்ணுக்குத் தெரிந்த ஒற்றையடிப் பாதையைப் பிடித்து விறுவிறுவென நடக்கத் தொடங்கிவிட்டாள். பின்னால் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தவள், பிரதான சாலையை அடைந்த அதே நேரம், அவள் ஏற்கனவே புக் செய்திருந்த வாடகை வாகனமும் வந்து சேரவும், ஏறி அமர்ந்தவள் ஒருபுறம் நிம்மதியாய் ஈணர்ந்தாலும், அன்று போல், இன்றும் இமயன் வந்துவிடுவானே? என்ற பயமும் அவளுக்குள் இருந்தது.
‘எப்படியாவது சென்னை சென்று சேர்ந்துவிட வேண்டும்!’ என நினைத்தவளுக்கு, முன்பு இல்லாத அளவிற்கு மனவுறுதி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தது. ஒருவேளை ராகவ் தந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடு தான் இந்த மனவுறுதியோ என்னவோ? வீட்டுக்குள்ளேயே அமர்ந்து, புழுங்கிக் கொண்டிருக்காமல், தனக்காக யோசித்து, தானாக முடிவெடுத்த பின், தன் மனம் லேசாவதை உணர்ந்தாள் ஆருத்ரா.
மகிழுந்தின் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்தபடி அவள் அமர்ந்திருக்க, அவள் அலைபேசி இசைந்து, அவள் கவனத்தை திசை திருப்பியது. கைப்பைக்குள் தேடி எடுத்து அலைபேசியின் திரையைப் பார்த்தாள். இரண்டு முறை ராகவ் அழைத்திருந்தான். அவனின் அழைப்பை அவள் துளிகூடக் கண்டுக்கொள்ளவில்லை. ராகவின் அழைப்பு மட்டுமல்லாது, இன்னும் சில அழைப்புகள் வந்திருக்க,
‘வேற யார் கால் பண்ணினா?!’ என எடுத்துப் பார்த்தவளுக்கு, விவேக்கின் எண்ணைக் கண்டு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. என்னதான் அவன் எண்ணை அவள் அலைபேசியிலிருந்தே அழித்திருந்தாலும் கூட, விவேக்கின் எண் அவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது.
அவள் கரத்தில் அலைபேசியை வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, மீண்டும் விவேக்கிடமிருந்து அழைப்பு வந்தது.
“இவன் எதுக்கு கால் பண்ணுறான்?” என எரிச்சலுடன் முணுமுணுத்தவள், எடுக்காமல் விட்டாலும், திரும்ப அழைப்பான் என்றெண்ணி, அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“இப்போ எதுக்கு கால் பண்ணுற? உனக்கும் எனக்கும் ஒண்ணும் இல்லைன்னு ஆகிடுச்சே.. அப்பறம் ஏன் கால் பண்ணுற? ஒழுங்கா ஃபோனைக் கட் பண்ணிட்டு ஓடிரு!” எனக் கோபமாகவே சொன்னாள் அவள்.
“முடிஞ்சு போன உறவைப் புதுப்பிக்கவெல்லாம் நான் கால் பண்ணலை., நீ என்னதான் நிறுத்த முயற்சி பண்ணினாலும், எனக்கும் நந்தினிக்குமான கல்யாணம் நிற்கப் போறதில்லை. நடக்கத்தான் போகுது.!”
“என்னமோ பண்ணித் தொலை! அதுக்கு ஏன் எனக்கு கால் பண்ணின? போ.. போய் உன் கல்யாண வேலையைப் பாரு!” அவனின் பேச்சு இவளுக்குள் கோபத்தைக் கிளப்ப, நக்கலாகவே பதில் சொன்னாள் ஆருத்ரா.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நானாவது என் குடும்பத்திற்காக, உன்னை விட்டுட்டு நந்தினியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். ஆனால் நீ.. கேவலம் பணம்.. பணத்திற்காக ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்ட பார்த்தியா? ஹவ் சீட் யூ ஆர்? நான் துரோகம் பண்ணிட்டேன், அது, இதுன்னு கத்தினே? இப்போ பணத்துக்காக நீ செய்றதுக்கு பேர் என்ன?!” என அவன் கேட்க, அவளுக்கு அதிதக் கோபம் தலைக்கு மேல் ஏறியது.
“நீ கேட்கிற எந்தக் கேள்விக்கும், நான் பதில் சொல்லப் போறதில்லை. சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கில்லை.!” எனச் சொன்னவள், அழைப்பைத் துண்டித்துவிட்டு, அப்போது தான் வாகனம் வழிமாறி செல்வதைக் கவனித்தாள். அவள் பயணிக்கும் வாகனம், பேருந்து நிலையம் செல்லாமல், ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்குள் சென்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.
“ஹலோ.. ப்ரோ.. நான் சொன்னதை விட்டுட்டு வேற எங்கேயோ போறீங்க? ஸ்டாப் பண்ணுறீங்களா இல்லையா? நான் பஸ் ஸாண்ட்க்கு போகணும்!”
“எதுக்கும்மா பயப்படுற? இது குறுக்கு வழிம்மா! உனக்கு பஸ் ஸ்டாண்ட்டுக்கு தானே போகணும்? நான் கூட்டிட்டு போறேன், என அந்த ஓட்டுநர் ஒருமாதிரியானக் குரலில் சொல்ல, கொஞ்சம் பயந்து போனாள் ஆருத்ரா.
அதே நேரம் சிறிது தூரம் சென்றதும், மகிழுந்து ஓரிடத்தில் நிற்க, அவசரமாய் இறங்கி ஓட முயன்றவளின் இருபுறமும் ஆண்கள் இருவர் ஏறி அவள் பக்கத்தில் அமர, ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து போய்விட்டாள் அவள்.
“ஹலோ! இப்போ வண்டியை நிறுத்துறீங்களா? இல்லையா? நான் போலீசுக்கு கால் பண்ணிடுவேன். யாரு நீங்க? எதுக்காக இதெல்லாம் பண்ணுறீங்க?!” என அவள் சத்தமாய் கத்தியபடி கேள்வி கேட்க, யாருமே அவளுக்கு பதில் சொல்ல தயாராய் இல்லை.
“இந்தா பாரும்மா பொண்ணு! வாயை முடிட்டு அமைதியாய் உட்கார்ந்தீன்னா, உன்னை ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைச்சுட்டு, எங்களுக்கு வேண்டியதை வாங்கிட்டு கிளம்பிட்டே இருப்போம். மீறி சத்தம் போட்ட, கழுத்தறுத்து ஹைவேஸில் தூக்கி வீசிட்டு போய்ட்டே இருப்போம்.!” என அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த நபர்களில் ஒருவன் சொல்ல, உள்ளூற நடுங்கிப் போனாள் ஆருத்ரா. இருந்தாலும், தன்னைத் தானே தேற்றி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
“யா.. யார் என்னைக் கடத்திட்டு வரச் சொன்னது?”
“அவங்க பேர் என்ன?!”
“எதுக்காக இதெல்லாம் செய்றாங்க?!” என அவள் கேள்விமேல் கேள்வியாய் கேட்க,
“வாயை மூடிட்டு வர்ரியா? இல்லை சொருவிடவா?!” என அவளுக்கு மறுபுறம் அமர்ந்திருந்தவன் கத்தியை எடுத்து நீட்ட, பயந்து நடுநடுங்கிப் போய் தன் கரத்தால் வாயை மூடிக் கொண்டாள் ஆருத்ரா.
இதயம் படபடவென வேகமாய் துடித்தது. தன் அருகில் கத்தியுடன் அமர்ந்திருப்பவனைப் பார்த்து பயம் வந்தது. பயம் தந்த அதிர்வின் விளைவால், மூளை யோசிக்க மறுத்தது.
‘எப்படி இங்கிருந்து தப்பிப்பது? யாருக்காக என்னைக் கடத்துகிறார்கள்? எதற்காக? ஏன்? இயக்கத்திலிருக்கும் வாகனத்திலிருந்து தப்பிப்பது அத்தனை எளிதில்லை.. இப்போது நான் என்ன செய்யப் போகிறேன்? அந்தத் திருமணத்திலிருந்து தப்பிப்பதற்காக, வேறெதிலோ வந்து சிக்கிக் கொண்டோமோ?’
என அவளுக்குத் தோன்றியது.
அப்போது தான் அவளுக்கு தன் கையிலிருந்த அலைபேசி நினைவிற்கு வந்தது. தன் கைப்பேசியை மடியில் வைத்து, அவள், தன் கைப்பையால் மறைத்து வைத்திருந்ததால், பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களின் கண்ணில் அது படவில்லை. ஆருத்ராவோ, அவர்களின் கருத்தில் படாமல் காவல்துறைக்கு அழைக்க முயன்றுக் கொண்டிருக்க, யாராவது பார்த்துவிடுவார்களோ.. என்ற பயத்தில் அவள் விரல்கள் நடுங்கியது.
அதே நேரம், ஆருத்ராவின் இருபுறமும், அமர்ந்திருந்தவர்களில், ஒருவனுக்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்,
“நீங்க சொன்ன மாதிரியே துக்கியாச்சு சார்..! நீங்க அனுப்பின ஃபோட்டோவில் இருந்த அதே பொண்ணு தான் சார்! அப்பறம், இவ்வளவு ரிஸ்க் எடுத்து செய்றோம், கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க சார்..!” என அவன் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரம், சிரமப்பட்டு அவள் காவல்துறைக்கு அழைத்துவிட, இவர்கள் சென்றுக் கொண்டிருந்த வாகனம் தடுமாறி ஓடி, பின் பெரிய குலுக்கலுடன் நின்றது.
வாகனம் அதிவேகமாய் க்ரீச்சிட்டு, தடுமாறி நின்றிருக்க, தடுமாறி நின்ற வேகத்தில், ஆருத்ராவின் நெற்றி முன்னிருக்கையில் மோதியிருக்க, லேசான காயம்பட்டு உதிரம் கசிந்துக் கொண்டு இருந்தது.
“ஸ்ஸ்ஸ் ஆஆஆ!”
என்ற முனகலுடன் தன் நெற்றியை இடக் கரத்தால் பிடித்துக் கொண்டு, எட்டிப் பார்த்தவள், குறுக்கே நின்றிருந்த இமயவரம்பனின் வாகனத்தைப் பார்த்து ஒருபக்கம் நிம்மதியும், மறுபுறம் அதிர்ச்சியாகவும் இருக்க, தான் அமர்ந்திருந்த வாகனத்தை நோக்கி, கம்பீரமாய் நடந்து வந்துக் கொண்டிருந்த இமயவரம்பனை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.
இனி, தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற எண்ணம், அவளறியாமலே அவளுக்குள் எழுந்தது.
இமயவரம்பன் இறங்கி வருவதைப் பார்த்த ஓட்டுநர் உட்பட மூவரும், அவனின் அழுத்தமான பார்வைக்கு பயந்து நடுங்கினர். மயில்ராவணனையே ஆட்டிப் படைக்கும் அவனுக்கு இவர்கள் எம்மாத்திரம்.? இவர்கள் ஓடாமல் எதிர்த்து நின்றிருந்தால் தான் அதிசயம். இவர்கள் மாட்டினால் சகலமும் வெளியே வந்துவிடும் என அவர்களுக்கு தெரியாதா என்ன?
“இவன் கையில் சிக்குனோம், அவ்வளவு தான். நாம மாட்டிக்கிட்டா யாரு என்னன்னு எல்லா சங்கதியும் தெரிஞ்சுரும் இறங்கி ஓடிருவோம்!” எனக் கதவைத் திறந்துக் கொண்டு, தலைதெறிக்க ஓடியிருக்க, அழுத்தமான காலடிகளுடன் அவளை நோக்கி வந்தவன், அவள் புறமாய் குனிந்து, அவன் கரம் நீட்ட, அவன் கண்களைப் பார்த்தபடியே, அவன் கரம் பிடித்து வெளியே இறங்கினாள். பயத்தில் அவள் முகம் வெளிறிப் போயிருந்தது. அவள் வாகனத்திலிருந்து இறங்கும் வரை, இழுத்துப் பிடித்த பொறுமையுடன் நின்றவன், அவள் இறங்கிய மறுநொடி, அவளை ஓங்கி அறைந்திருந்தான்.
அவன் தன்னை அறைவான் என எதிர்பார்த்திராதவள், அதிர்வுடன், கன்னைத்தைப் பிடித்துக் கொண்டு, புரியாமல் நின்றதெல்லாம் சில நொடிகள் தான். அந்த சில நொடிகளில், தன்னைச் சமாளித்து, சுதாரித்து நிமிர்ந்தவள், அவனை அறைவதற்காய் கரத்தை ஓங்கியிருக்க, அவள் ஓங்கிய கரத்தை லாவகமாய் பிடித்தவன், அவளைத் தன் வாகனத்தை நோக்கி இழுத்துப் போனான்.
“என்னை விடு! நான் உன்னோட வர மாட்டேன். எனக்கு இந்தக் கல்யாணமும் வேணாம்! ஒண்ணும் வேணாம்.! என்னை விடப் போறியா இல்லையா? நான் போலீஸில் உன் மேல் கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறேன். விருப்பமில்லாதப் பொண்ணைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணுறது சட்டப்படி குற்றம்ன்னு உனக்குத் தெரியாதா?!”
எனக் கத்தியபடியே அவள் தன் கரத்தை விடுவிக்கப் போராடிக் கொண்டிருக்க, அவளைப் பின்னிருக்கையில் தள்ளி, கதவை சாத்தியவன், பதிலேதும் பேசாது வாகனத்தைக் கிளப்பியிருந்தான்.
யாரிடமிருந்து தப்ப முயற்சி செய்தாளோ, அவனிடமே மீண்டும் சிக்கிக் கொள்ள, தன்னைக் கட்டாயப்படுத்தி இழுத்துப் பிடிக்க நினைக்கும் அவனை சுத்தமாய் வெறுத்தாள் அவள்.
“வாழ்வதில் எனக்கொன்றும்
வருத்தங்களோ சிக்கல்களோ
எப்போதும் இருந்ததில்லை.
இப்படித்தான்
வாழ்ந்தாக வேண்டுமென்ற
உங்கள்
நியதிகளிலும் நிபந்தனைகளிலும்
நிரம்பியிருக்கிறது
எப்போதும் எனக்கான சிக்கல்.”
(படித்ததில் பிடித்தது)
