Loading

மறுபுறம் ஷாத்விக்கின் மலர்ந்து அடங்கிய புன்னகைக்கு காரணமானவளோ தன் மொபைலை அணைத்துவிட்டு தன் அருகில் அமர்ந்து லாப்டொப்பில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தவனை பார்த்தாள்.

“வசீ” என்ற அழைப்பில் தலை திருப்பி பார்த்தவனின் கண்களில் ஏதோவொரு அசௌகரிய உணர்வு தெரிந்தது.

அதற்கான காரணத்தை உணர்ந்தவள்

“சீக்கிரம் சொல்லிடுறேன்.”என்று கூற அவனோ அவளை நம்பாத பார்வையொன்றையே பார்த்து வைத்தான்.

“இந்த ஒருவருஷமா இந்த ஒரு பதில் தான் உன்கிட்ட இருக்கு.” என்று வசீ என்றழைக்கப்படும் வசீகரன் ஏமாற்றத்துடன் கூற

“நானும் சொல்றதுக்கு எவ்வளவோ முயற்சி செய்துட்டேன் வசீ. ஆனா அவங்க ஆசையாக பேசும் போது என்னால எதுவுமே சொல்லமுடியல. அவங்க நம்பிக்கையோடு விளையாடுறது தப்பு தான். ஆனா என்னால அவங்களை அவாய்ட் செய்ய முடியல வசீ.”என்று மௌனிகா தன் இயலாமையை கூற வசீகரனுக்கு யாரையும் புண்படுத்தக்கூடாதென்ற அவளின் இயல்பு தெரிந்தபோதிலும் இந்த விஷயத்திலும் அவள் அப்படியே நடந்துகொள்ள முயல்வது அவனுக்கு பிடிக்கவில்லை.

“யாரும் ஹர்ட்டாக கூடாதுனு நீ எல்லாரையும் ஹர்ட் பண்ணிட்டு இருக்க மௌனி. நீ இப்படி செய்றது என்னையும் கூட ஹர்ட் பண்ணுது.”என்று வசீகரன் தன் மனவருத்தத்தை வெளிபடுத்தினான்.

தான் விரும்பும் ஒரு பெண் அவளை விரும்புவனின் எண்ணத்திற்கு நம்பிக்கை கொடுப்பது போல் பேசுவது யாருக்கு தான் உவர்ப்பாக இருக்கும்?

“நமக்கு இப்போ அவரை தவிர யாரும் சப்போர்ட்டுக்குள்ள இல்ல வசீ. நாம திரும்பி ஊருக்கு போனதும் நிச்சயம் நம்ம வீட்டுல நம்மளை ஏத்துக்கமாட்டாங்க. இப்போதைக்கு நமக்கு உதவி செய்ய ஷாத்விக் மாமாவை தவிர வேற யாருமில்லை. இப்போலாம் நான் அவர் காலை எடுக்கிறதில்லை. மெசேஜ் மட்டும் தான்.” என்று தன்புறமிருந்து அவள் செய்யும் அர்த்தமில்லாத முயற்சிகளை மௌனிகா சொல்ல வசீகரனுக்கு அவள் இனியும் தங்கள் விஷயத்தை பற்றி சொல்லப்போவதில்லையென்று புரிந்தது.

“அது மட்டும் இல்ல வசீ. இப்போ மாமாவுக்கு தெரிஞ்சா விஷயம் நிச்சயம் அவரு ஃப்ரெண்ட்ஸ் காதுகளுக்கு போகும். அப்புறம் விஷயம் எப்படியும் அப்பாவுக்கு தெரிஞ்சிடும். அப்பாவுக்கு தெரிஞ்சா அடுத்து என்ன நடக்கும்னு என்னால யோசிக்க கூட முடியல.” என்ற மௌனிகா சொல்ல வசீகரனுக்கு இது சுயநலமான செயல் என்று தெரிந்த போதிலும் தன் காதலுக்காக அவள் சொல்வதை ஆமோதிப்பதை தவிர அவனுக்கும் வேறு வழியிருக்கவில்லை.

ஆனாலும் கூட அவள் அறியாத விஷயம் ஷாத்விக் இன்னும் தன் நட்புக்களிடம் கூட தன் காதலை பற்றி பகிரவில்லை.

இதுவரை காலமும் இந்த ஒரு காரணமே அவனை அவள் சொல்வதெற்கெல்லாம் ஆமாம் சொல்ல வைத்தது. மௌனிகாவின் வீட்டார் பற்றி நன்கு அறிந்ததே அவனின் இந்த அமைதிக்கு காரணம்.

தன் யோசனையில் உழன்று கொண்டிருந்தவனின் தலை கலைத்தவள்

“ரொம்ப யோசிக்காத வசீ. இன்னும் இரண்டு மாசத்துல ஸ்டடிஸ் முடிந்ததும் இந்த பிரச்சினைக்கெல்லாம் ஒரு முடிவு வந்துரும். அதுவரைக்கும் பொறுத்துக்கோ மிஸ்டர். மௌனிகா”என்று கூற இப்போது தன் எண்ணங்களை மறந்து சிரித்தான் வசீகரன்.

“சரிங்க மிசஸ். வசீகரன். இப்போ உங்க ரூமுக்கு போறீங்களா?”என்று கேட்க

“எனக்கு தூக்கம் வரல வசீ. வெளியில போயிட்டு வரலாமா?”என்று கேட்க தன் அலைபேசியை எடுத்து நேரத்தையும் காலநிலையையும் பார்த்தவன்

“ம்ம் போகலாம். மறக்காமல் ஜெக்கட்டை எடுத்துக்கோ. வின்டர் சீசன் இல்லைனா கூட குளிர் கொஞ்சம் ஜாஸ்தியாக தான் இருக்கு.”என்றவன் அவனும் தயாராகி அவளோடு வெளியே கிளம்பினான்.

மறுநாள் காலை அமராவதி எழுந்து வரும்போது பரசுராமர் ஹாலில் செய்தித்தாளை புரட்டிக்கொண்டினார்.

“அண்ணா”என்ற அழைப்பில் திரும்பியவர் முகம் மலர

“எழுந்துட்டியா அமரா? இந்திரா அமராவுக்கு குடிக்க எடுத்துட்டு வா.”என்று குரல்கொடுத்தவிட்டு தன் தங்கையை நலம் விசாரித்தார்.

அதற்கிடையில் இந்திராணியும் அமராவதிக்கு குடிக்க எடுத்துவந்துவிட அவரும் அவரை நலம் விசாரித்தார்.

நலவிசாரிப்பு முடிந்ததும் அமராவதி

“ஷாத்விக் எழுந்துட்டானா அண்ணி?”என்று கேட்க

“அவன் ஏதோ வேல இருக்குனு அப்போவே வெளியில கிளம்பிட்டான்” என்று இந்திராணி கூற அதற்கு பின் தம் குடும்பக்கதைகளை பேசத் தொடங்கிட நேரம் கடந்தது.

காலை உணவை முடித்ததும்

“அண்ணா எல்லை கோவிலுக்கு போயிட்டு வருவமா?”என்று அமராவதி கேட்க பரசுராமனும் அவரை அழைத்து சென்றாள்.

ஆலமர விழுதுகளின் மறைவில் அமைதியாய் வீற்றிருக்கும் அன்னையை தரிசித்துவிட்டு அவ்விடத்திலேயே பேசத்தொடங்கினார் அமராவதி.

“அண்ணா நான் எதைபத்தி பேசபோறேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.”என்று ஆரம்பிக்க பரசுராமரோ

“அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட சில விஷயங்களை சொல்லனும்.” என்று கூறியவர் தொடர்ந்து பேசத்தொடங்கினார்.

“நம்ம ஷாத்விக் தர்மதுரையோட பொண்ணை விரும்புறான். அந்த பொண்ணும் இவனை விரும்புது. இது பத்தி நானும் தர்மதுரைகிட்ட பேசிட்டேன்.அந்த பொண்ணு வெளிநாட்டுக்கு படிக்க போயிருக்கு. வந்ததும் நிச்சயத்தை முடிச்சிட்டு கையோட கல்யாணத்தையும் முடிச்சிடலாம்னு பேசியிருக்கோம்.” என்று சொல்ல அமராவதி அதிர்ந்துதான் போனார்.

அவரின் அதிர்ச்சியை பார்த்தவர்

“இதுனால தான் நான் முன்னாடி உன்கிட்ட மறுத்தேனே தவிர வேறொரு காரணமும் இல்ல.”என்று சொல்ல அமராவதிக்கு தான் பேசுவதற்கு வார்த்தை வரவில்லை‌.

அவர் எதிர்பார்த்து வந்தது ஒன்று இப்போது நடப்பது வேறு.

இந்த செய்தி அவரை பெரிதாய் பலவீனப்படுத்திட கண்ணீர் அவரை ஆக்கிரமித்துக்கொண்டது. பொங்கி வழிந்த கண்ணீரை ஆற்றாமையுடன் துடைத்துக்கொண்ட அமராவதியை கண்ட பரசுராமருக்கோ உள்ளம் பிசைந்தது.

ஆனால் தங்கையின் கண்ணீரில் வருந்தி மகனின் விருப்பத்தை பஸ்மமாக்க அவர் விரும்பவில்லை.

அமராவதியோ தன் ஆற்றாமையை யாரிடம் காட்டுவதென்று தெரியாமல் சில கணங்களுக்கு முன் கண்மூடி மனமுருகி வணங்கிய தெய்வத்திடமே வாய்விட்டு முறையிடத் தொடங்கினார்.

“ஏன்மா அவளை இப்படி சோதிக்கிற? அவ பொறந்ததே இப்படி கஷ்டங்களை அனுபவிக்க தானா? அவளுக்கு பிடிச்சமாதிரி ஒரு விஷயம் கூட அவ வாழ்க்கையில நடக்காதா? ராணி மாதிரி வாழவேண்டிய பொண்ணு. குடும்பம் குடும்பம்னு மொத்தமா தன் வாழ்க்கையையும் தேவையையும் சுருக்கிக்கிட்டா.இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் அவள சோதிப்ப? அவ சந்தோஷமாக இருக்க ஒரு வாய்ப்பு கூட கொடுக்கமாட்டியா? எதுக்காக அவளை இந்த வயித்துல பொறக்கவச்சு கஷ்டப்படுத்துற? ஏன்மா என் பொண்ண இப்படி கஷ்டப்படுத்துற?” என்றவரின் அழுகை கதறலாக மாறியது.

ஆரம்பத்தில் சமுத்ரா- ஷாத்விக் திருமணம் சமுத்ராவிற்கு பாதுகாப்பு என்ற எண்ணம் மட்டுமே அமராவதியின் மனதில் இருந்தது. எப்போது ஸ்டோர் ரூமிலிருந்து அந்த கடிதத்தை எடுத்து படித்தாரோ அப்போது தான் அது தன் மகளின் பலநாள் விருப்பமென்று அறிந்துகொண்டு அதனை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிடவிடமென்ற உறுதியுடனேயே தன் ஊருக்கு வந்திருந்தார் அமராவதி. 

ஆனால் இங்கு அவர் இப்படியொரு திருப்பத்தை எதிர்பார்த்திருக்கவில்லை‌.

“அமரா தயவு செஞ்சு இப்படி அழாத.”என்று பரசுராமர் தன் தங்கை அழுவது பொறுக்காமல் அவரை சமாதானப்படுத்தமுயல

“இப்படி அழுவதை தவிர என்னால வேற என்ன செய்ய முடியுங்கிற? அவளுக்காக என்னால ஒரு துரும்பைகூட அசைக்கமுடியலயே. அவ வாழ்க்கையை நெனச்சு பெத்த மனசு பதறுதுணே. அவ இப்படி தனிச்சிருவாளோனு பயமா இருக்குண்ணே.” என்று அமராவதி தன் துக்கத்தை முழுதாக கக்கிட பரசுராமருக்கு தான் தன் தங்கையின் அழுகையை காணப்பொறுக்கவில்லை.

“அமரா இப்போ எதுக்கு நீ இப்படி அழுது உன் உடம்பை கெடுத்துக்கிற? அவளுக்கு நல்லது கெட்டது பார்த்து செய்ய நான் இருக்கேன். அப்படி அவ வாழ்க்கையை விட்டுற மாட்டேன். ” ஏதேதோ சமாதானம் சொல்ல அமராவதியோ கேட்பதாகயில்லை.

“அமரா இது புள்ளைங்க வாழ்க்க. நம்ம இஷ்டத்துக்கு ஏதாவது செஞ்சு கடைசியில அது அவங்க நிம்மதிக்கே உலையா போயிடும். சமுத்ரா அளவுக்கு ஷாத்விக்கிற்கும் பிடிவாதம் ஜாஸ்தி. நீ சொல்றங்கிறதுக்காக என்னால முடிவை மாத்திக்கமுடியாது‌.” என்று உறுதியாக கூற தன் விழிகளை நிறைத்த கண்ணீரை துடைத்த அமராவதி

“சரி இதுதான் உன் முடிவுனா என் முடிவையும் இங்கேயே சொல்லிடுறேன். இனிமே சமுத்ராவுக்கு ஒரு நல்லது நடக்கும் வரைக்கும் இந்த ஊர்பக்கமே வரமாட்டேன். இதுவே நான் இங்க வர கடைசி முறையாக இருக்கட்டும்.” என்று அமராவதி உறுதியோடு சொல்ல

“அமரா என்ன பேசுற நீ?” என்று பரசுராமர் அதட்ட

“எனக்கு இரண்டு புள்ளைங்க சந்தோஷமும் முக்கியம். ஷாத்விக் இன்னொரு பொண்ணு கழுத்துல தாலிகட்டுறதை பார்த்து என்னால சந்தோஷமாக வாழ்த்தமுடியாது. நான் தள்ளிநிற்கிறது தான் எல்லாருக்குமே நல்லது.” என்று அமராவதியின் வார்த்தைகளில் ஒரு வித ஏமாற்றம் படர்ந்திருந்தது.

அவரின் எதிர்பார்ப்பு நிறைவேறாதது ஒரு புறம் தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்றாது ஏமாற்றப்போகிறோமே என்ற குற்றவுணர்வு ஒருபுறமென்று வேறெதுவும் அவரை சிந்திக்கவிடவில்லை.

பரசுராமருக்கோ அந்த சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பதென்று புரியாதபோதிலும் தன் தங்கையை எவ்வாறேனும் சரிப்படுத்தலாமென்ற நம்பிக்கை இருந்ததால் அப்போதைக்கு அமைதியாகவே இருந்துவிட்டார் பரசுராமர்.

 

வீடு திரும்பிய அமராவதியோ உடனேயே ஊருக்கு கிளம்புவதாக சொல்ல இந்திராணிக்கு தான் எதுவும் புரியவில்லை. அவர் என்ன ஏதென்று விசாரிக்க முயல அமராவதியோ அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் கிளம்பி தன் பையோடு வந்திருந்தார்.

பரசுராமருக்கு அமராவதியின் நடவடிக்கை வருத்தத்தை கொடுக்க அவரும் அமைதியாய் இருந்திடும் முடிவிலேயே இருந்தார்.

“அண்ணி இன்னைக்கு ஒரு நாள் தங்கிட்டு போகலாமே.” என்று இந்திராணி அப்போதைய நிலைமையை சமாளிக்க முயல

“ஏமாற்றத்தோட ஒருநாளை கழிக்கிறதை விட நான் இப்போவே கிளம்புறது தான் நல்லது.” என்றே அமராவதி கூற

“கொஞ்ச பொறுக்க சொல்லு இந்திரா. வண்டிக்கு சொல்லியிருக்கேன். வந்ததும் கிளம்பலாம்னு சொல்லு.” என்று இப்போது பரசுராமரும் முறுக்கிக்கொள்ள இந்திராணிக்கு தான் தலையை பிய்த்துக்கொள்ளலாம்போல் இருந்தது.

அடியும் தெரியாமல் நுனியும் புரியாமல் இருவேறு துருவங்களாய் முறுக்கிக்கொண்டு நிற்பவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு விழிப்பதை தவிர இந்திராணிக்கும் வேறு வழியிருக்கவில்லை‌.

ஒரு வழியாக வண்டியும் வர இந்திராணியிடம் மட்டும் சொல்லிக்கொண்டு கிளம்பினார் அமராவதி.

அவர் செல்வதற்காகவே காத்திருந்தது போல்

“என்ன சொன்னீங்க?” என்று இந்திராணி தன் விசாரணையை தொடங்க

“நான் எதுவும் சொல்லலை.”என்று பரசுராமர் விட்டேற்றியாக பதில் சொல்ல

“நீங்க எதுவும் சொல்லாம தான் அண்ணி கோவிச்சிக்கிட்டு போறாங்களா?”என்று இந்திராணி மீண்டும் கேட்க

“இப்போ என்ன தெரிஞ்சிக்கனும் உனக்கு?” என்று பரசுராமர் கேட்க

“அங்க என்ன நடந்துச்சுனு சொல்லுங்க.”என்று கேட்க பரசுராமரும் நடந்தனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிமுடிக்க தலையில் அடித்துக் கொண்டார் இந்திராணி.

“அவனுக்கு தான் அறிவில்லை உங்களுக்காவது கொஞ்சம் நிதானம் வேணாமா?”என்று கேட்க பரசுராமரோ குழப்பத்துடன்

“ஹே இப்போ நான் என்ன செஞ்சிட்டேன்னு இப்படி கேட்குற?”என்று இந்திராணி கேட்க

“அவன் ஏதோ கிறுக்கு தனமா காதல்னு சுத்துரான்னா நீங்களும் சரின்னு சொல்லலாமா? அந்த வீட்டுல தர்மதுரை அண்ணன் மட்டும் தான் கொஞ்சம் நல்லவரு. மத்தது எல்லாமே சுயநலப்பேய். அதுவும் அந்த மீனாட்சி இருக்காளே அம்மாடி காசு இருந்தா மட்டும் தான் மனுசரையே மதிப்பா. அவ பெத்தவளும் ஊருல இருக்குறவரை வசதி பார்த்து தான் பழக்கம் வச்சிக்குவான்னு கேள்விப்பட்டேன். நம்ம குடும்பத்துக்கு இப்படிபட்டவங்க சரிவருமா? அதுவும் இவன் குணத்துக்கு இரண்டு வாரம் கூட தாக்குபிடிக்காது.”என்று இந்திராணி சொல்ல

“அவன் விரும்புறான்னு தெரிஞ்ச பிறகு என்னை வேற என்ன செய்யச்சொல்லுற?”என்று பரசுராமர் கேட்க

“உங்களை யாரு அவசரப்பட்டு அண்ணி கிட்ட இதெல்லாம் சொல்லச்சொன்னா? என்கிட்ட கூட இதபத்தி பேசாமல் நீங்களா ஒரு விஷயத்தை பேசிட்டு இப்போ நான் என்ன செஞ்சேன்னு கேட்குறீங்க?”என்று இந்திராணி குற்றப்பத்திரிகையை தொடர்ந்து வாசிக்க

 

“சரி இப்போ என்ன செய்யனும்னு சொல்லு?” என்று பரசுராமர் கேட்க

“இப்போதைக்கு எதுவும் செய்யவேண்டாம். தர்மதுரை அண்ணா பொண்ணு படிப்பு முடிஞ்சு வரட்டும். அவ தனியா வாராளா இல்லை யாரையாவது துணைனு அழைச்சிட்டு வாராளானு பார்த்துட்டு மீதியை முடிவு செய்யலாம். அது வரைக்கும் நீங்க எந்த குளறுபடியும் செய்யாமல் இருந்தா போதும்.”என்று ஆரூடம் சொல்வதை போல் இந்திராணி சொல்ல அதனை அமைதியாக கேட்பதை தவிர பரசுராமருக்கும் வேறு வழியிருக்கவில்லை.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
4
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்