Loading

மறுபுறம் உதயோ பரபரப்பாக இருந்தான். இன்று தான் அவனின் மனம் கவர்ந்தவள்‌ தன்னுடைய ஹோட்டல் மேனேஜ்மென்ட் ட்ரெயினிங்கை முடித்துவிட்டு ஊர் திரும்புகிறாள்.

 

உதயின் உள்ளத்தை இத்தனை நாட்களாய் ஆட்டுவித்தவளின் பெயர் மகிழினி. பெயருக்கேற்றால் போல் எப்போதும் மகிழ்வாய் சுற்றித்திரிவதே அவளின் வாடிக்கை. விளையாட்டு பிள்ளையாய் சுற்றி திரிபவளுக்குள்ளும் சில கனவுகளும் லட்சியமும் பதுங்கியிருக்க அதற்காகவே பயிற்சிக்காக வெளிநாடு சென்றிருந்தாள் மகிழினி. இன்று தான் தன் பயிற்சியனைத்தையும் முடித்துவிட்டு ஊர் திரும்புகிறாள்.

உதய் இந்த தகவலை அறிந்ததிலிருந்தே பரபரப்பாயிருந்தான். இத்தனை நாட்களாய் அவன் ஒத்திகை பார்த்து கனவில் பயிற்சிபெற்ற விஷயங்களை நேரில் செய்து மகிழினியின் காதலை பெறவேண்டுமென்ற எதிர்பார்ப்பே அவனின் இந்த பரபரப்பிற்கு காரணம். 

 

இந்த விஷயத்தில் தனக்கு உதவக்கூடிய ஒரே ஆளான சமுத்ராவை தேடி அவர்களின் ஆபிஸிற்கு வந்திருந்தான் உதய்.

 

அந்நேரத்தில் உதயை எதிர்பார்க்காத சமுத்ரா

“என்னடா திடீர்னு?”என்று சமுத்ரா கேட்க

“நீ பிசியாக இல்லைனா நான் பர்சனலாக சில விஷயங்கள் பேசனும்.”என்று உதய் கூற அவனை சந்தேகமாக பார்த்தபடியே தன் இன்டர்காமை எடுத்து இதயாவிற்கு அழைத்து தன் ஷெடியூல் பற்றி விசாரித்துவிட்டு தான் சொல்லும் வரை யாரையும் தன் அறைக்குள் அனுமதிக்கக்கூடாதென்று அறிவுறுத்திவிட்டு அழைப்பை துண்டித்தவள் உதயை பார்த்தாள்.

“சொல்லு என்ன விஷயம்?”என்று சமுத்ரா கேட்க

“எனக்கு ஒரு பொண்ணை இம்ரெஸ் செய்யனும்.” என்று உதய் சீரியஸாக கூற

“என்னது?”என்று சமுத்ராவோ குழப்பத்துடன் கேட்க

“நான் கமிட்டாகனும் சம்மு. ஹெல்ப் மீ ப்ளீஸ்.” என்று உதய் பள்ளிக்குழந்தை போல் சொல்ல சமுத்ராவோ

“டேய் தெளிவா சொல்லுடா.”என்று கேட்க

“நான் ஒரு பொண்ணை வன்சைடா விரும்புறேன் சம்மு. அந்த பொண்ணுக்கு ப்ரபோஸ் பண்ணனும்.”என்று அவன் தான் அடுத்து செய்யப்போகிறவற்றை கூற

“யாரு அவங்க?”என்று சமுத்ரா கேட்க

“பேரு மகிழினி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சிருக்கா.”என்று உதய் சுருக்கமாக கூற

“நீ எப்போ பார்த்த அவங்கள?”என்று சமுத்ரா கேட்க மகிழினை முதன் முதலாக பார்த்த சந்தர்ப்பத்தை விளக்கத்தொடங்கினான் உதய்.

 

இரண்டு வருடங்களுக்கு முன் தன்னுடைய தூரத்து உறவினரின் இரண்டு வயது குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலேயே மகிழினியை முதன் முதலில் பார்த்தான் உதய்.

 

அன்று தன் பெற்றோர்கள் ஊரிலில்லாத காரணத்தால் உதயே அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு செல்லவேண்டியிருந்தது.

குழந்தைக்கு பரிசை வழங்கிவிட்டு கிளம்ப எத்தனித்தவனை அவன் வயது இளசுகள் சூழ்ந்திட உதயால் அப்போதைக்கு கிளம்பமுடியாமல் போக அவர்களோடு சேர்ந்து கதைபேச அமர்ந்துவிட்டான்.

அப்போது தான் அந்த விழாவின் ஒழுங்கமைப்பு குழுவின் ஒருத்தியான மகிழினியை பார்த்தான் உதய்.

பார்த்த மாத்திரத்தில் அவளின் மீது அவனுக்கு எந்த சலனமும் ஏற்படவில்லை. அங்கிருந்த நூறு பெண்களில் ஒருத்தியாகவே தெரிந்தாள் மகிழினி. ஆனால் அதன்பின் நடந்தேறிய சம்பவமே அவனை பெரிதும் கவர்ந்தது.

 

உதய் பார்ட்டி முடிந்த பின்பே அங்கிருந்து கிளம்பியிருந்தான். கார் பார்க்கிங் வாசலுக்கு வந்தவனுக்கு அப்போது தான் தன் கார் சாவி காணவில்லையென்ற உணர்வே வந்தது. எங்கே கடைசியாக பார்த்தோமென்று யோசித்தவனுக்கு அப்போது தான் கடைசியாக வாஸ்ரூம் சென்றபோது பார்க்கெட்டிலிருந்து வெளியில் எடுத்தது நினைவு வர மீண்டும் பார்ட்டி நடந்த ஹோட்டலினுள் சென்றான்.

ஆனால் அவன் தேடி சென்றபோது அவன் வைத்த இடத்தில் சாவி இல்லாதுபோக கைவசம் ஸ்பெயார் கீ இல்லாததால் தன் செக்கரெட்டரிக்கு அழைத்து விஷயத்தை சொன்னவன் ஸ்பெயார் கீயை எடுத்து வரச்சொன்னான்.

இந்த பார்ட்டியை முடித்துவிட்டு வேலை விஷயமாக அவன் வேறிடத்துக்கு செல்லவேண்டியிருந்ததால் அவனுக்கு கார் தேவைபட்டது.

தன் செக்கரெட்டரியிடம் சொல்லிவிட்டு கார் பார்க்கிங்கிற்கு வந்தவன் தன் கார் அருகே மகிழினுயும் ஒரு ஆடவனும் சண்டையிட்டுக்கொண்டிருப்பதை கண்டு அவ்விடம் நோக்கி ஓடினான்.

மகிழினி தன் எதிரே நின்றிக்கொண்டிருந்த ஆடவனின் முன் தன் கையிலிருந்த சிறு கத்தியை காட்டி ஏதோ சொல்லி மிரட்டிப் கொண்டிருக்க அந்த ஆடவனோ முன்னும் பின்னுமாக நகரமுயன்றுக்கொண்டிருந்தான்.

 

அவர்களருகே ஓடி வந்த உதய்

“யாரு நீங்க?”என்று கேட்க சடாரென்று அவனை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் கத்தியை இறுக பற்றிக்கொண்ட மகிழினி கத்தியை இருபுறமாய் ஆட்டியபடியே தன் முன்னே நின்றிருந்தவனை பார்த்த

“நகராத. நகர முயற்சி செஞ்சனா கையை கிழிச்சிடுவேன்.” என்று மிரட்ட

“சார் காப்பாத்துங்க சார். இந்த பொண்ணு கையில கத்தியை வச்சிட்டு மெரட்டுது சார்.”என்று அந்த ஆடவனோ உதயிடம் உதவி கேட்க

“ஏய் நீயும் அசைஞ்ச இரண்டு பேரு மூஞ்சிலயும் கோடு போட்டுருவேன்.”என்று மிரட்டியபடியே மறுகையால் தன் பையிலிருந்த இன்னொரு கத்தியை எடுத்து இரு கையிலும் இரண்டு கத்தியையும் வைத்துக்கொண்டு இரண்டு ஆடவர்களையும் மிரட்டிக்கொண்டிருந்தாள் மகிழினி.

அப்போது இரண்டு ஆடவர்கள் அவர்களை நோக்கி ஓடி வர அதனை ஒற்றை கண்ணால் கவனித்த மகிழினி

“இரண்டு பேரையும் புடிங்க”என்று சத்தமிட இப்போது மத்த ஆடவன் தப்பியோட முயற்சிக்க உதய்யிற்கு தான் தன்னை சுற்றி என்ன நடக்கின்றதென்று புரியவில்லை.

பின்னால் வந்த இருவரும் ஓடி செல்ல முயற்சித்தவனை வளைத்து பிடிக்க உதயை இன்னும் தன் கத்தி முனையில் வைத்திருந்தாள் மகிழினி.

“போலீஸூக்கு கால் செஞ்சுட்டீங்களா அண்ணா?” என்று மகிழினி கேட்க மற்ற ஆடவனை வளைத்து பிடித்திருந்த இருவரில் ஒருவன்

“ஆமாம்மா. இப்போ வந்திடுவாங்க.”என்று அந்த இருவரில் ஒருவன் கூற உதயிற்கு குழப்பமாக இருந்தது.

 

“எதுக்கு எங்களை பிடிச்சி வச்சிருக்கீங்க?”என்று உதய் கேட்க

“அது போலிஸ் வந்து சொல்லுவாங்க. இப்போ அசையாம நில்லு.”என்று கத்தியை மீண்டும் முன்னால் நீட்டி மிரட்ட உதயிற்கும் இதற்கு மேல் ஏதாவது கேட்டால் அவள் சொன்னது போல் முகத்தில் கோடு போட்டாலும் போட்டுவிடுவாளென்ற பயத்தில் அமைதியாக நின்றுகொண்டான்.

சற்று நேரத்தில் போலிஸூம் வர மகிழினியோ

“இவங்க இரண்டு பேரும் தான் சார் இந்த காரை திருடப்பார்த்தாங்க.” என்று உதயின் காரை காட்டி சொல்ல உதயோ அதிர்ந்துவிட்டான்.

முதலில் அதிர்ந்தவன் அவள் சொன்னதை நினைத்து சிரித்துவிட்டான்.

 

அவனின் சிரிப்பை கண்ட அந்த போலீஸ் அதிகாரி உதயை மேலும் கீழும் பார்த்துவிட்டு

“எதுக்கு சிரிக்கிற?”என்று ஆராய்ச்சிப் பார்வையோடு கேட்க உதயோ

“என் காரை நான் எதுக்கு சார் திருடப்போறேன்?” என்று கேட்க இப்போது அந்த அதிகாரியின் பார்வை மகிழினியின் புறம் திரும்பியது.

“பொய் சொல்றான் சார். இதோ முதல்ல இவன் தான் இந்த காரை திருட வந்தான். அவனை நான் பிடிச்சதும் அவனுக்கு உதவி செய்ய பின்னாடியே இவனும் வந்துட்டான் சார்.”என்று உதயையும் மற்ற ஆடவனையும் மகிழினி காட்ட அதிகாரிக்கோ உதயை பார்த்த முதல் பார்வையிலேயே அவனிடம் எந்த தப்புமில்லையென்று புரிந்துவிட்டது.

அனுதினமும் பல்வேறுபட்ட குற்றவாளிகளை கையாள்பவருக்கு இதனை கண்டறிய சில கணங்களே போதுமானதாகயிருந்தது.

“உங்களுக்கு எப்படி இவங்க திருட வந்தது தெரியும்?”என்று அந்த அதிகாரி மகிழினியிடம் கேட்க சற்று முன் நடந்தது விவரிக்கத்தொடங்கினாள்.

மகிழினி அன்றைய பிறந்தநாள் விழா ஏற்பாட்டு குழுவில் வேலை செய்வதற்காக வந்திருந்தாள். விழா முடிவதற்கு சில விநாடிகளுக்கு முன் யாரையோ தேடிக்கொண்டு வெளியே வர அப்போது தான் அந்த திருடன் போனில் யாரிடமோ தான் ஒரு கார் சாவியை திருடிவிட்டதாகவும் அதனை கொண்டு காரை திருடப்போவதாகவும் பேசியது மகிழினியின் காதில் விழுந்தது. அதன் பின் அந்த திருடனை பின்தொடர்ந்து வந்து பிடித்ததென்று இதுவரை நடந்த அனைத்தையும் விளக்கமாக கூறினாள் மகிழினி.

அடுத்து உதயின் புறம் திரும்பிய அந்த அதிகாரி அவனை பற்றி விசாரித்துவிட்டு அவனின் அடையாள அட்டை மற்றும் சில அட்டைகளை வாங்கி ஆராய்ந்துவிட்டு என்ன நடந்ததென்று விசாரித்தார்.

பின் மற்ற ஆடவனிடம் விசாரிக்க அவனோ பயத்தில் என்னென்னவோ உளற அங்கிருந்த அனைவருக்கும் யார் திருடனென்று புரிந்துவிட்டது.

உடன் வந்திருந்த மற்ற அதிகாரிகள் அந்த திருடனை பிடித்துக்கொள்ள அவனை பிடித்திருந்த மற்ற இருவரும் தங்கள் பிடியை விட்டனர்.

“மரியாதையாக உண்மையை சொல்லு. இல்லைனா உள்ள இருக்க அத்தன எலும்பையும் நொறுக்கிடுவேன்.” என்று அந்த பெரிய அதிகாரி மிரட்ட அவனை பிடித்திருந்த மற்றைய அதிகாரிகள் தத்தமது வகையில் அந்த திருடனை கவனிக்க அவனோ நடந்ததனைத்தையும் விளக்கத்தொடங்கினான்.

இதுபோல் பெரிய இடங்களில் திருடுவதே இந்த ஆடவனின் வாடிக்கையாம். உள்ளே வருவதற்கு கெடுபிடிகள் இருப்பதால் சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி ஏதேனும் திட்டம் தீட்டி உள்ளே நுழைவதோடு யாருக்கும் சந்தேகம் வராதபடி எவ்வளவு முடியுமோ அத்தனையும் திருடுவதே இவனின் தொழில். இன்றும் ஏதேனும் திருடலாமென்று உள்ளே நுழைந்தவனுக்கு உதயின் கார் சாவி கிடைத்திருந்தது.

உதய் பாத்ரூம் செல்லும் போது இந்த திருடனும் அங்கு தான் இருந்திருக்கிறான். அப்போது தான் உதய் சாவியை மறந்து வைத்துவிட்டு சென்றது தெரிய அதனை எடுத்துக்கொண்டவன் கார் சாவியின் உதவியோடு காரை கண்டுபிடித்து திறக்க முயலும் போதே மகிழினி அவனை கத்தி கொண்டு மிரட்டி தடுத்து விட்டாள்.

நடந்ததை அந்த திருடன் முற்றாக கூறிமுடிக்க அந்த அதிகாரி 

“அவனை ஜீப்ல ஏத்துங்க.”என்று கூறிவிட்டு

“சார் நீங்க கொஞ்சம் ஸ்டேஷன் வரவேண்டி இருக்கும்.”என்று கூறியவர்

“நீங்களும் தான் மேடம்.”என்று மகிழினியை பார்த்து கூற இப்போது அவளோ சற்று தயங்கினாள்.

“சார் நான்…” என்று அவள் இழுக்க உதயிற்கு அவள் தயங்குவது புரிய

“சார் அவங்க இதுல இன்வால்வ் ஆக வேண்டாம் சார். நானே இதை பார்த்துக்கிறேன்.”என்று கூற அவ்வதிகாரியும் சம்மதிக்க அப்போது தான் மகிழினிக்கு ஆசுவாசமாக இருந்தது.

போலீஸ் ஸ்டேஷன் போவதில் அவளுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் இது வீட்டிற்கு தெரிந்தால் வேறு பிரச்சினைகள் கிளம்புமென்ற காரணத்தினாலேயே தயங்கினாள்.

உதயின் புறம் திரும்பியவள் 

“ரொம்ப நன்றி சார்.”என்று மகிழினி கண்ணில் நன்றியுணர்வுடனும் உதட்டில் புன்னகையுடனும் சொல்ல உதய்க்கோ அவளின் செயல் மனதை சலனப்படச்செய்தது.

சட்டென்று தன் மனதை சரிசெய்துகொண்டவன்

“நீங்க கிளம்புங்க மேடம். நான் பார்த்துக்கிறேன்.” என்று உதய் கூற அவளை தவிர அங்கு நின்றிருந்த அவளின் துணைக்கு வந்திருந்த மற்ற இருவரும் அவளை அழைத்துக்கொண்டு கிளம்ப உதயும் தன் காரை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனை நோக்கி கிளம்பினான்.

“அன்னைக்கு தான் அவளை முதலும் கடைசியுமாக பார்த்தேன். அதுக்கு பிறகு அவ ஃபைனல் இயர் ட்ரெயினிங்னு பாரின் போயிட்டா. இன்னைக்கு தான் ஊருக்கு வரா.” என்று உதய் கூற

“அப்போ இத்தனை நாளாக அவளை ஆள் வச்சு கண்காணிச்சிருக்க?”என்று சமுத்ரா கேட்க உதயோ திருதிருத்தான்.

ஆம் இந்த ஒருவருடமாக மகிழினியில் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் அவனுக்கு தெரியும். அவளின் தோழியான மலரையே தன் டிடெக்டிவ்வாக பயன்படுத்துக்கொண்டான் உதய்.

“என் காலேஜ் ப்ரெண்டோட சிஸ்டர் மலர் தான் அவளோட ப்ரெண்டு. மலரோட இன்ஸ்டா அக்கவுண்டுல ஒரு போட்டோ போட்டிருந்தா. அப்படி தான் தெரியும்.” என்று கூற சமுத்ராவோ அவனை முறைத்தாள்.

“ஹே முறைக்காத சம்மு. எனக்கும் வேற வழி தெரியல. அவளை பத்தி தெரியாமல் எப்படி அவகிட்ட பேச முடியும்? ஒரே சந்திப்புல காதல்னு சொன்னா என்னை பைத்தியம்னு நெனைக்கமாட்டா?”என்று உதய் தன் பக்க நியாயத்தை கூற

“இப்போ நீ அந்த பொண்ணு மூலமாக அவ நடவடிக்கைகளை ஸ்பை பண்ணனு தெரிஞ்சா மட்டும் அமைதியாக இருப்பாளா?”என்று சமுத்ரா லாஜிக்காக கேள்வி கேட்க உதய்யிடமும் பதிலில்லை.

“சரி இனிமேலாவது இப்படி செய்யாமல் டிரெக்டா அப்ரோச் பண்ணு.”என்று சமுத்ரா அறிவுரை கூற

“அதை எப்படி ப்ரசீட் பண்ணுறதுனு தெரியாமத்தானே உன்கிட்ட ஐடியா கேட்க வந்தேன்.”என்று உதய் கூற

“அந்த பொண்ணை நேரடியாக சந்தித்து பேசி உன் விருப்பத்தை சொல்லு.” என்று சமுத்ரா யோசனை கூற 

“நான் சந்திக்கனும்னு சொன்னா அவ வந்திடுவாளா?”என்று உதய் கேட்க

“இங்க பாரு. ஐடியா மட்டும் தான் கொடுக்க முடியும். இந்த ப்ளான் எக்சிகியூஷன் எல்லாம் நீ தான் செய்யனும். இது கூட செய்யமுடியலான உனக்கு எதுக்கு லவ்வு?”என்று சமுத்ரா கேட்க உதயிற்கு இதற்கு மேல் அவளிடம் இருந்து எந்த யோசனையும் வராதென்று புரிந்திட

“சரி நானே மீட்டிங் ப்ளானை யோசிக்கிறேன்.”என்றவன் கிளம்பிவிட்டான்.

அவன் சென்றதும் சமுத்ராவின் அலைபேசி ஒலிர திரையில் அமராவதியின் எண் ஒளிர்ந்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்