Loading

தன்னை சுற்றி வளைத்திருந்த ஆடவனின் கரங்களை எடுத்து விட்ட வசுந்தரா, லேசாக நகர்ந்து அமர்ந்து, “இவன் இவ்ளோ நேரம் என்னடா பண்றான்?” என்றாள் கடுப்பாக பார்த்தபடி.

நமுட்டு நகையுடன் ஜிஷ்ணு தான், “எதிரியா இருந்தாலும், இந்த விஷயத்துல நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் பேப்…” என்றவனின் கரங்கள் மீண்டும் அவள் தோள் மீது கை வைத்திருந்தது.

“ஆமா, பெரிய லைலா மஜ்னு. உள்ள ரெண்டு பாரும் தெய்வீக காதல் பண்றாங்க. ஒழுங்கா வந்த வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு போலாம். அம்மா வேற சீக்கிரமே எந்திரிச்சுடுவாங்க” என முறைப்புடன் கூறியவள், இம்முறை அவனை தள்ளவில்லை.

அவனோ அவளின் நெருக்கத்தில் சுயம் இழந்து, கழுத்தோரம் நெருங்கிட, அவள் திகைத்து “ஜிஷு… என்ன பண்ற?” என்றாள் நெளிந்து.

கழுத்து வளைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்த அவனது விழிகளை மெல்ல நிமிர்த்தியவன், “பாத்தா தெரியல! முத்தம் குடுக்க போறேன்.” என்று விட்டு அடுத்த நொடி சொன்னதை செய்தும் இருந்தான்.

அவனது முடிக்கற்றைகள் அவளது முகத்தில் பரவ, இதழ்களோ கழுத்திலிருந்து காதில் பயணிக்க, கிறங்கி மருகியவள், சிறிதளவும் அவன் தீண்டல்களை மறுக்கவில்லை.

பெண்ணவளின் அனுமதி, ஜிஷ்ணுவிற்கும் கர்வப் புன்னகையைக் கொடுக்க, சிவந்திருந்த செவி மடல்களை கவ்விக் கடித்திருந்தான்.

இதனை எதிர்பாராமல், “ஆ” வென கத்தி விட்ட வசுந்தரா, சட்டென வாயை மூடி, திருதிருவென விழித்து, “என்னடா பண்ணி வச்சுருக்க?” என்று காதை தேய்த்துக்கொண்டாள்.

ஜிஷ்ணு வாய்க்குள் சிரிப்பை அடக்க முயன்று தோற்று, சற்று சத்தமாகவே சிரித்து விட, அதில் தான், சங்கர் திடுக்கிட்டு, வேக வேகமாக வெளியில் சென்று பார்த்தான்.

வசுந்தராவோ, ஜிஷ்ணுவின் வாயை வேகமாக மூடி, “எரும மாடு… பொறுக்கி. அவன் வந்து தொலைச்சுற போறான்.” என்று ரகசிய குரலில் பதற,

“அவன் வந்தா தானடி, அடிச்சுட்டு கிளம்ப முடியும்” என்றான் வெகு அருகில் தெரிந்த தன்னவளின் முகத்தை ரசித்தபடியே.

“அட… ஆமால்ல!” என எதையோ கண்டுபிடித்த தோரணையில் கூறியவளின் விழிகள், அவன் விழிகளை ஏறிட, அதுவோ அவளை தனக்குள் புதைத்து விடும் ரீதியில் ஆழ்ந்த பார்வை பார்த்தது.

இருவரின் இதழ்களுக்குள்ளும் இருக்கும் தூரம், அவனின் வாயில் இருந்து தன் கையை எடுத்தால் முற்றிலும் குறைந்து விடும் என்பது புரிய, பாவையின் நயனங்களும் அவனையே தான் ரசித்தது.

மெதுவாக, ஜிஷ்ணுவின் இதழ்களில் இருந்து கையை எடுக்க முயல, அவ்விதழ்களோ மலர் தேடும் வண்டாக, பெண்ணவளின் அதரம் நோக்கி படையெடுக்க நகர, அம்முயற்சியை உணர்ந்தவள், மீண்டும் தன் கரத்தையே கேடயமாக உபயோகித்தாள்.

“ஏண்டி… வேணாமா!” ஏக்கக்குரலில் ஜிஷ்ணு கேட்க, “இங்க வேணாம்…” என்றாள் அவளும் அதே கரகரத்தக் குரலில்.

அந்நேரம், வீட்டில் அனைத்து விளக்குகளும் எரிய, அதில் நினைவிற்கு வந்த இருவரும், அவன் எழுந்ததை உணர்ந்து, யாரும் அறியாமல் வீட்டினுள் புகுந்தனர்.

சங்கர் ஹாலில் நின்று, “யாரு…? யாரு கத்துனது?” என்று சுற்றி முற்றி பார்க்க, ஜிஷ்ணு வசுந்தராவிடம் கண்ணைக் காட்டி விட்டு, வேகமாக சங்கரின் பின் சென்று துணியால் அவனது முகத்தை மூடினான்.

சங்கரால் கத்தக் கூட இயலாமல் மூச்சு முட்ட, அந்நேரம் வசுந்தரா கட்டையால் சங்கரின் தலையிலேயே அடிக்க, அவனோ துள்ளினான்.

ஒரு கட்டத்தில் சங்கர் சோர்வாகி விட, ஜிஷ்ணு அக்கட்டையை வாங்கி ஒரே அடி அடித்ததில், ரத்தம் பீறிச்சிட்டு துணியை மீறி வழிந்தது.

அதற்குள் அவனறையில் இருந்த பெண்ணும் கீழிறங்கி வரும் அரவம் கேட்க, வசுந்தரா சைகையாலேயே “வா போலாம்” என்று ஜிஷ்ணுவைப் பிடித்து இழுத்தாள்.

அவனுக்கோ கோபம் அடங்க மறுத்தது. ‘என் பேப் மேலயே கையை வப்பியா?’ என்ற ஆத்திரம் அவன் தலைக்கு ஏறியதில், கண்மண் தெரியாமல் அடித்திருக்க, அவனை இழுத்து வருவதற்குள் வசுந்தராவிற்கு தான் பெரும் பாடாக இருந்தது.

இருவரும், வந்த வேலையை முடித்து விட்டு, யாரும் அறியாமல் வசுந்தரா வீட்டை நோக்கி செல்ல, வசு தான் மூச்சு வாங்கியபடியே, “உனக்கு என்ன பைத்தியமா? சும்மா அடிக்க வந்தா, நீ என்னையும் சேர்த்து கொலை கேஸ்ல ஜெயிலுக்கு அனுப்பிடுவ போல.” என்று முறைத்தாள்.

அதே முறைப்புடன் “நீ வந்ததுனால, விட்டு வைச்சேன். இல்லைனா அவனுக்கு இன்னைக்கு சங்கு தான்.” என்றவனின் விரல்கள் இறுகி மூடி இருக்க, அதனைக் கண்ட வசுந்தரா, அவன் கையைப் பற்றி, மூடி இருந்த விரல்களை எடுத்து விட்டாள்.

“அதான் அடிச்சாச்சுல. இன்னும் என்ன கோபம்?” என அதட்டியதில், சற்று கோபம் தணிந்து மென்னகை புரிந்தவனை, கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவள், எதேச்சையாக எதிரில் பார்க்க அங்கு அவளின் தமையன் வீட்டை விட்டு எங்கோ சென்று கொண்டிருந்தான்.

உடனே, ஜிஷ்ணுவை இழுத்து மறைவாக நின்றவள், “இந்த நேரத்துல இவன் எங்க போறான்?” என்றாள் குழப்பமாக.

“க்கும்… இவன் என்ன ஐனா சபை அதிபரா, அர்த்த ராத்திரியில மீட்டிங் போக. எவள பார்க்க போறானோ” என தோளைக் குலுக்கிய ஜிஷ்ணுவைப் பார்வையால் எரித்த வசுந்தரா, “என் அண்ணன் அப்டி எல்லாம் கிடையாது” என்றாள் வேகமாக.

அவனோ, ‘கிளுக்’ என சிரித்து, “இந்த ஊர்ல எவன் எவன் எங்க எங்க அகௌண்ட் வச்சுருக்கான்னு எனக்கு நல்லாவே தெரியும்டி. வேணும்னா உன் அப்பன்கிட்டயே கேளு உன் அண்ணனை பத்தி.” என ஏளனமாக கூறும் போதே, அவள் விருட்டென வீட்டிற்கு சென்றிருந்தாள்.

மறுநாள், எப்போதும் போல கல்லூரியில் அவர்களின் அரட்டை தொடர, வசுந்தரா மட்டும் ஏதோ சிந்தனையிலேயே இருந்தாள்.

குமரன் தான், “டிபன் பாக்ஸை கூட திறக்காம அப்படி என்ன திங்கிங்? இந்த வாரம் எங்களை எப்படி டார்ச்சர் பண்ணலாம்ன்னு யோசிக்கிறியா?” எனக் கிண்டலடிக்க, அவனை முறைத்தவள், ஜிஷ்ணு புறம் திரும்பி “நீ நேத்து சொன்னது உண்மையா?” எனக் கேட்டாள்.

அவள் எதை பற்றி கேட்கிறாள் எனத் தெரிந்தும், “என்ன சொன்னேன்?” என்று நெற்றியை தேய்த்தபடி பாவனை செய்தவன், அவளின் முறைப்பை கண்டு அடக்கப்பட்ட சிரிப்புடன், “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.” என்றான் அவள் தலையில் கை வைத்து.

“ப்ச்…” என்றே அதனைத் தட்டி விட்டவள், “நீயா தப்பா நினைச்சு இருக்கலாம்ல? என் அண்ணன் அப்படி எல்லாம் கிடையாது” என வேகமாகக் கூற, குமரனும் ஜிஷ்ணுவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

குமரனோ, “இப்ப தான இந்த ஊருக்கு வந்துருக்க போக போக எல்லார பத்தியும் தெரிஞ்சுக்குவ…” என்றதும்,

ஜிஷ்ணு, “பெருசா ஜாதி ஜாதின்னு பேசுவானுங்க. வேற ஜாதி பொண்ணை லவ் பண்ணா மட்டும் சண்டைக்கு வருவானுங்க. ஆனா, படுக்க மட்டும் எந்த ஜாதில தொட்டா கேள்வி கேட்க மாட்டாங்களோ அந்த ஜாதி பொண்ணா பார்த்து…” என்னும் போதே, பற்களை நறநறவெனக் கடித்தவன், “அப்ப தான எந்த பொண்ணும் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டா. அந்த தைரியம்…” என்றான் எரிச்சலாக.

புருவ மத்தியில் தோன்றிய முடிச்சுடன், “அன்னைக்கு அப்பா கூட, ஏதோ ஒரு பொண்ணு மிஸ்ஸிங்ன்னு சொன்னாங்க… ஆனா, ஜாதி வச்சு எந்த பிரச்னையும் இல்லைன்னு… மேக்சிமம் எந்த பிரச்சனையும் வராம பாத்துக்குறாங்க தான?” என்றதில் ஜிஷ்ணு பொங்கி இருந்தான்.

“ஓ… பிரச்சனை வராம பாத்துக்கிட்டா போதுமா? கோவிலுக்கு நேந்து விடுற ஆட தடவிக்கொடுக்குற மாதிரி தான் உன் ஊர்க்காரங்களும் உன் அப்பனும் நாசுக்கா தடவி குடுப்பானுங்க. அப்பறம் நேரம் பார்த்து வெட்டிருவானுங்க.” என்றவனின் முகம் ரௌத்திரத்தில் மின்ன,

“வெள்ளப்பாளையத்துல இருந்து ஒரு பொண்ணு தான் மிஸ்ஸிங். அதை மட்டும் தான் உன் அப்பன் சொல்லி இருக்கான். கன்னிமனூர்ல இருந்து இந்த வருஷம் மட்டும் மூணு பொண்ணுங்களை காணோம். என்ன ஆச்சுன்னு கூட தெரியல. அதை சொன்னானா உன் அப்பன்…” என்றான் விழி இடுங்க.

அதில் திகைத்தவள், “மரியாதையா பேசு.” என விரல் நீட்டி எச்சரித்தாள்.

பின், “அந்த பொண்ணுங்களை தேடலையா? என்ன ஆச்சு?” என வினவ,

குமரன், “இப்ப வரை தெரியலப்பா. அது மட்டும் இல்ல உனக்கே தெரியாத ஒரு விஷயத்தை சொல்லவா? உன் அப்பா காணாம போச்சுன்னு சொன்ன பொண்ணு, உண்மையா காணாம போகல. அவள் வீட்டு ஆளுங்களே கொன்னுட்டாங்க. ஆனா, இப்ப வரை பாடி கிடைக்கல.” எனக் கூறியதில் அவள் உறைந்து விட்டாள்.

“என்னடா சொல்ற? ஏன் பெத்த பொண்ணையே கொல்லனும்?” அவள் பதறிட,

ஜிஷ்ணு “ம்ம். எங்க ஊரு பையனை லவ் பண்ணதுனால தான். ஆனா, பேச்சு மட்டும் பெரிய மஹாத்மா காந்தி மாதிரி பேசுவானுங்க.” என தலையை கோதிக்கொண்டு முணுமுணுத்ததில், அவள் முறைக்க, “உன் அப்பன சொல்லல ஆத்தா. பொதுவா சொன்னேன்.” என்றான் அசட்டையாக.

“இவ்ளோ பேசுறியே ஏன் நீ எதுவுமே பண்ணல? உனக்கு தான் மினிஸ்டரை தெரியுமே. எல்லா ரௌடிசமும் பண்ற தான. அப்போ நீ ஸ்டெப் எடுத்திருக்கலாம் தான…” என்று அவனை மடக்கினாள்.

அதில் நன்றாக சிரித்து விட்டவன், “சின்னப்பிள்ளை தனமா பேசாத வசு பேப். அவனுங்களுக்கு நான் தேவை. அதான் என்னை யூஸ் பண்ணிக்கிறானுங்க. எனக்கு அவனுங்க தேவை. அதான், அவனுங்க பண்ற தப்பை எல்லாம் மறைக்க, நான் எவனை வேணாலும் அடிக்கிறேன். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அவனுங்களுக்காக உயிரையே குடுத்தா கூட, கூப்பிட்டு சீட் எல்லாம் குடுக்க மாட்டானுங்க. நமக்கு ஒண்ணுன்னா, துடிச்சுட்டு வரவும் மாட்டானுங்க பேப்.

அதுலயும் ஜாதி வச்சு தான் இங்க அரசியலே. நியாயம் தர்மம் நீதி இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது. திடுதிப்புன்னு போய் நான் இதுக்குள்ள நுழைஞ்சா, என் படிப்பும் போகும், என் அரசியல் வாழ்க்கையும் போகும். ஏன், உன் அப்பனே என்னை போட்டு தள்ளுவான். சாரி சாரி போட்டு தள்ளுவாரு…” என அதனை மட்டும் அழுத்திக் கூறியவன்,

“நமக்குன்னு ஒரு டைம் வர்ற வரைக்கும் இதெல்லாம் வேடிக்கை தான் பாக்கணும்…” என்றான் பெருமூச்சு விட்டு.

அவனையே ஆராய்ச்சி பார்வை பார்த்த வசுந்தரா, “நீ ரொம்ப செல்ஃபிஷ் டா! ஆனாலும் நீ சொல்றதும் ஒரு வகைல கரெக்ட் தான். சரி, உனக்கு சீட் குடுக்க மாட்டாங்கன்னு சொல்ற. அப்பறம் எதுக்கு நீ அங்க இருக்கணும்? எப்படி சீட் வாங்குவ?” என்று புரியாது வினவ,

மர்மப்புன்னகை ஒன்றை பூத்தவன், “அதுக்கு இன்னும் டைம் இருக்குடி. அந்த நேரத்துல அவனுங்க பண்ற அதே அரசியல் வச்சு, அவனுங்களை நான் லாக் பண்ணுவேன்.” என்றான் கண் சிமிட்டி.

அதில் ஆர்வமானவள், “என்னடா பண்ணுவ?” என வேகமாகக் கேட்க, “அது சஸ்பென்ஸ்!” என அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான், சுழல் போல அவர்களின் இந்த நடவடிக்கைகளே அவர்களை திருப்பி அடிக்கப்போவது அறியாமல்.    

அடுத்த நாள், வெகு நேரம் சென்றும் வகுப்பிற்கு வராது போனவளைக் காணாமல் ஜிஷ்ணுவிற்கு தான் நிலைகொள்ளவில்லை. நொடிக்கொருதரம் வாசலைப் பார்த்தவன், “எங்கடி இருக்க?” என அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப அதற்கும் பதிலில்லை.

மதிய பாடவேளையில் தான் அவசரமாக வகுப்பறைக்குள் நுழைந்தவளை, பேராசிரியர் ஒரு முறை முறைத்து விட்டு பாடத்தைத் தொடர, அவள் வந்ததுமே ஜிஷ்ணு அவளருகில் வந்து அமர்ந்தான்.

“எங்கடி போன?” முணுமுணுப்பாக அவன் வினவ, அவள் நோட்ஸ் எடுத்தபடியே, “க்ளாஸ் முடியவும் சொல்றேன்.” என்றபடி சிரத்தையாக வகுப்பை கவனித்தாள்.

அதன் பிறகு, கல்லூரி முடியும் வரையிலும் தொடர்ந்து பேராசிரியர்கள் வந்து போக இருக்க, மணி அடித்ததும் தான், அவள் புத்தகத்தை வாங்கி மூடி வைத்தவன், “ஏண்டி காலைல வரல?” என்றான் புரியாமல்.

“சொல்றேன்டா. அவ்ளோ பெரிய விஷயம் இல்ல. ராதி பஸ் ஸ்டாண்ட்ல வெய்ட் பண்ணிட்டு இருப்பா அங்க போலாம்.” என்றவள், பேருந்து நிலையத்திற்கு விரைய, அங்கு அவளை முறைத்தபடி ராதிகா நின்றிருந்தாள்.

குமரன் அவளிடம், “நீயும் மதியம் தான் காலேஜ் வந்தியா ராதி?” எனக் கேட்க, அவள் ஆமாவென தலையாட்டினாள்.

“அப்ப ரெண்டு பேரும் காலேஜ கட் அடிச்சுட்டு ஊர் சுத்தி இருக்கீங்க கரெக்ட்டா?” என எதையோ கண்டுபிடித்தவன் போல கேட்டதில், ராதிகா இப்போது அவனை திரும்பி முறைத்து, “இங்க குடும்பமே கட் ஆகிடுச்சு. இதுல எங்க காலேஜை கட் அடிக்க?” என்று சிலுப்பியதில் அவன் தலையை சொரிந்தான்.

ஜிஷ்ணு தான், “ப்ச்… இப்ப என்ன ஆச்சுன்னு சொல்ல போறீங்களா இல்லையா?” என ஒரு அதட்டலை போட, ராதிகா “எல்லாம் இவளால தான் தர்மா. காலைலயே வீட்ல பெரிய பிரச்சனை…” என்றவள், நடந்ததை கூறினாள்.

தன் தமையன் மீது கடுங்கோபம் இருந்தாலும், அப்போதைக்கு அவனிடம் வசுந்தரா எதுவும் கேட்கவில்லை. இன்று காலையில், உறங்கி எழுந்தவள் சோம்பல் முறித்தபடியே பின் பக்கம் செல்ல, அங்கோ காம்பௌண்ட் சுவற்றிற்கு பின்னால், சுந்தர் ஏதோ ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிய, அவனை உற்றுக்கவனித்தாள்.

அப்பெண் அழுதிருப்பதும், அவன் மிரட்டும் பாவனையுடனும் பேசுவதைக் கண்டு கொதித்தெழுந்தவள், விறுவிறுவென அவர்கள் முன் நிற்க, அவளை எதிர்பாராமல் சுந்தர் அதிர்ந்தான்.

“இங்க என்ன பண்ற? யார் இந்த பொண்ணு?” என அவள் வினவ, சற்றே தடுமாறிய சுந்தர், “எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான். நீ உள்ள போ தாரா.” என்றதில், அவள் அந்த பெண் புறம் திரும்பி “யாரு நீ?” எனக் கேட்டாள்.

சுந்தரோ பதற்றத்தில், “இந்த மாதிரி பொண்ணுக்கு இதான் வேல தாரா. நம்ம மேல வந்து விழுக வேண்டியது அப்பறம் காசு கேட்டு இம்சை பண்ண வேண்டியது” என்றதில், அப்பெண் சன்னமாக அதிர்ந்தாள்.

அதனை குறித்துக்கொண்ட வசுந்தரா, “இப்போ நீ என்ன ஆச்சுன்னு சொல்ல போறியா… இல்லையா?” எனக் கடுமையாக கேட்க,

அப்பெண் முல்லை பயந்தபடியே, “ஐயா… அப்போ அப்போ என் வீட்டுக்கு வருவாக. யாருக்காவது தெரிஞ்சா பிரச்சனையாகும்ன்னு எவ்ளோவோ சொல்லியும் கேட்கவே இல்ல. என்னையவே கல்யாணம் செஞ்சுக்குறேன்னு சொல்லிட்டு, இப்போ ஏமாத்திட்டாக.” என்றதில், இருவரையும் முறைத்த வசுந்தரா,

“இவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு பையனும் இருக்கான். அது உனக்கு தெரியுமா?” எனக் கேட்டதில் இன்னுமாக அப்பெண்ணின் முகத்தில் அதிர்ச்சி பரவ, அதில் கடுங்கோபமான வசுந்தரா, சுந்தரை பளாரென அறைந்து விட்டாள்.

முல்லையை தரதரவென வீட்டினுள் அழைத்து சென்று, ராஜசேகரின் முன் நிறுத்தி நடந்ததைக் கூற அவரும் திகைத்து சுந்தரைப் பார்க்க, அவனோ தன்னை விட சிறிய பெண் தன்னை அறைந்ததை எண்ணி சினந்தான்.

முல்லையோ திடீரென அனைவர் முன்பும் நிற்க வைப்பாள் என்று அறியாது நடுங்கி, வேகமாக நகர எத்தனிக்க வசுந்தரா விடவே இல்லை.

“அப்பா… இவன் இந்த பொண்ணை ஏமாத்தி இருக்கான். புடிச்சு உள்ள போடுங்க இவன.” என்று சுந்தரை முறைத்தபடி கூறி விட்டு, முல்லையிடம் “இவன் மேல கம்பளைண்ட் குடு. நான் பாத்துக்குறேன்” என்றதில், முல்லை “அதெல்லாம் வேணாம்மா” என்றாள் பதறி.

“ஏன்? நீ சொன்னது எல்லாம் உண்ம தான?”

“உண்மை தான்மா. ஆனா, கோர்ட்டு கேஸுன்னு என்னால வாழ்க்கை முழுக்க அலைய முடியாது.” என்றவள் பயத்துடன் வீட்டில் இருப்பவர்களை பார்க்க, அதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர். அப்போது தான் ராதிகாவும் நடந்தது அறிந்து அதிர்ந்தாள்.

முல்லை, “என்னை விட்ருங்க மா. எனக்கு எதுவுமே வேணாம்.” என்று கண்ணீருடன் கூறிட, வசுந்தரா தைரியம் கூறியும் அவள் காதில் வாங்காது கிளம்பி விட்டதும், சகுந்தலா வசுந்தராவை கோபத்துடன் ஏறிட்டாள்.

“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் புருஷனை பத்தியே தப்பா பேசுவ?” என எகிற,

“உளறாதீங்க அண்ணி. உங்க புருஷன் ஒரு பொண்ணை ஏமாத்தி இருக்கான்” என முகத்தை சுளிக்க, அவளோ, “அதுக்குன்னு எல்லார் முன்னாடியும் நிக்க வைச்சு கேள்வி கேப்பியா?” என தான் ஒரு அக்மார்க் மனைவி என்று நிரூபித்தவளை வேற்று கிரகவாசி போல பார்த்தாள் வசுந்தரா.

சுந்தரோ, “அப்பா… ஒன்னு இவ இந்த வீட்டுல இருக்கணும். இல்ல நான் இருக்கணும். உங்களுக்கு யார் வேணும்ன்னு நீங்களே முடிவு பண்ணுங்க” என்றதில், மரகதம் பதறிட, வசுந்தராவோ தோளைக் குலுக்கி, “நான் இருந்துக்குறேன். நீ கிளம்பு” என்று விட்டாள்.

அதன் பிறகு, மரகதம் மகனிடம் அழுது மன்றாட, அதனை காதில் வாங்காமல் குடும்பத்தோடு வீட்டை விட்டு சென்று விட்டான்.

பெருமூச்சுக்கள் வாங்க, ராதிகா நடந்ததை கூறி முடிக்க, குமரனோ “சரி ராதி. அதுக்கு எதுக்கு இவள் மேல கோபமா இருக்க?” எனக் கேட்டதில்,

“என்ன புரியாம பேசுற குமரா. பாவம் அவங்க அம்மா எப்படி அழுதாங்க தெரியுமா. இவள் வந்து குடும்பத்தை பிரிச்சுட்டான்னு எல்லாரும் பேசுறாங்க. இவள் எதுக்கு அந்த பொண்ண எல்லார் முன்னாடியும் கொண்டு வந்து, அவளையும் இன்சல்ட் பண்ணி, அண்ணனையும் இன்சல்ட் பண்ணனும்” என்று கூறி முடிக்கையில் வசுந்தரா வெகுண்டு எழுந்தாள்.

“ஏண்டி, அவன் தப்பு பண்ணிருக்கான். அதை பத்தி யாரும் பேச மாட்டுறீங்க. தேவையே இல்லாம எது எதுக்கோ கோபப்படுறீங்க. லூசா நீங்க எல்லாம்.”

“யப்பா சாமி. நீ தான் ரொம்ப தெளிவு. நாங்கல்லாம் லூசு தான்.” என கையெடுத்து கும்பிட்ட ராதிகா,

“அதெப்படிடி, உன் அண்ணன் வீட்டை விட்டு போய்ட்டாங்க. உன் அம்மா அங்க அழுதுட்டு இருக்காங்க. உன் அப்பா உடைஞ்சு போய் இருக்காரு. நீ எதை பத்தியும் கவலைப்படாம மதியம் பிரியாணி சாப்பிட்டுட்டு இருக்க?” எனக் கேட்டதில்,

அவளை முறைத்த வசுந்தரா, “இப்ப நான் பிரியாணி சாப்பிட்டது தான் உனக்கு பிரச்சனையா? நான் காலைல இருந்து ஒண்ணுமே சாப்பிடலடி. கடைல அதை தான் வச்சுருந்தான். என்னமோ அவனை நான் ஒன்னும் இல்லாம துரத்தி விட்ட மாதிரி பேசுற. அந்த நாய், தெளிவா சொத்துல பங்கு எல்லாம் வாங்கிட்டு தான் போயிருக்கு. இதுல என் நகையையும் சேர்த்து அண்ணி எடுத்துட்டு போய்டுச்சு. சரி போனா போகுதுன்னு விட்டுட்டேன்.” என்னும் போதே, பேருந்து வர,

“உங்கிட்ட மனுஷன் பேச முடியாது. கொஞ்சம் கூட ஃபீலிங்ஸ் இல்லாத செல்ஃபிஷ் தாரா நீ. உனக்கு சென்னைல ஃப்ரெண்ட்ஸ்ஸே இல்லன்னு சொல்லும் போது கூட நான் நம்பல. ஆனா இப்ப தான் தெரியுது, ஏன் உனக்கு ப்ரெண்ட்ஸ் இல்லைன்னு. இப்படி இருந்தா யாரு தான் உன்கூட இருப்பா. உன்ன அத்தனை வருஷம் வளர்த்த சித்தி இறந்தப்ப கூட ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாம கல்லு மாதிரி தான இருந்த.” என வாய் வந்த போக்கில் அவள் பேசி இருக்க வசுந்தராவின் முகம் இறுகியது.

அவள் பேச வரும் முன்னே, ராதிகாவின் கன்னத்தில் இடியென ஒரு அறை விழ, எதிரில் ஜிஷ்ணு தான் தீப்பிழம்பாக நின்றிருந்தான்.

“நானும் பாத்துகிட்டே இருக்கேன். கீச்சு கீச்சுன்னு பேசிக்கிட்டே இருக்க. சாவடிச்சுடுவேன்.” என விரல் நீட்டி கண்டித்தவன் மேலும் அறையப் போக, குமரன் தடுத்தான்.

“மாப்ள மாப்ள… விடுடா” என்றவன், “ராதி நீ கிளம்பு நாளைக்கு பேசிக்கலாம்” என அவளை அனுப்ப முயல, அவளோ உதட்டைப் பிதுக்கி அழுகத் தயாரானாள்.

வசுந்தராவும் அடிப்பான் என்றெல்லாம் எண்ணவில்லை. ஒரு நொடி திகைத்தவள், “ஜிஷு… விடு என்ன பண்ற?” எனப் பதறிட, அவளோ அழுது கொண்டே பேருந்தில் ஏறி சென்று விட்டதில்,

“ப்ச்… அவளை ஏண்டா அடிச்ச. அது ஒரு புள்ளப்பூச்சி. இன்னைக்கு தான் அதிசயமா நாலு வார்த்தை பேசி இருக்கு.” என தோழிக்கு ஆதரவிற்கு வந்தவளை, திரும்பி பார்வையால் சுட்டான்.

குமரன் தான், “இவளை முதல்ல நாலு அடி அடிக்கணும்டா.” என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வசுந்தராவை முறைக்க, இருவரும் இப்போது அவனை முறைத்தனர்.

“பின்ன என்ன, உன் அண்ணன் வீட்டை விட்டு போனதை கொண்டாட நீ மட்டும் பிரியாணி சாப்ட்ருக்க. எங்களுக்கு வாங்கி தரணும்ன்னு உனக்கு தோணவே இல்லைல…?” என்று இடுப்பில் கை வைத்து கண்கள் சுருங்கக் கேட்ட தோரணையில், இருவரும் பக்கென சிரித்து விட்டனர்.

ஜிஷ்ணு தான் அவளின் சிரிப்பை ஆழ்ந்து ஊடுருவி விட்டு, “பேப்” என அழைத்தான். அவள் சிரிப்பை நிறுத்தி விட்டு என்னவென பார்க்க, “படிப்பை முடிக்கிற வரைக்கும் இங்க நடக்குற எதையும் கண்டுக்காத. எதுலயும் தலையிடாத. புரியுதா?” என்றான் கண்டிப்புடன்.

மறுத்து பேச வந்தவள், அவனின் அழுத்தத்தில் என்ன கண்டாலோ, “ம்ம்” என்று தலையாட்டினாள்.

அதன் பிறகு வீட்டிலும் இறுக்கமான சூழ்நிலை தான். ராஜசேகரின் உத்தரவின் பேரில், மரகதம் அவளை திட்டவில்லை. அதே நேரம் சரியாக பேசவும் இல்லை. அதனை அவள் கண்டுகொள்ளவும் இல்லை. தப்பு பண்ணது அவன், தண்டனை எனக்கா? என்றே எரிச்சலாய் எண்ணியவள், ராதிகாவையும் பார்க்கவில்லை, அந்த வாரம் முழுக்க.

இதற்கிடையில், அவ்வப்பொழுது அமைச்சர் அழைப்பதாக ஜிஷ்ணுவும் சென்று விடுவான். சில நேரம் அமைச்சர் கல்லூரி வழியாக வரும் போது, அவன் சென்று காரினுள் இருப்பவரிடம் பணிவாக பேசிக்கொண்டிருப்பதையும் காண்பாள். ஏனோ, அமைச்சர் நீலகண்டனை அவளுக்கு முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனது. ஆனாலும், ஜிஷ்ணுவிடம் எதை பற்றியும் கேட்டுக்கொள்ள மாட்டாள்.

வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்து கிளம்பும்போதே, ஜிஷ்ணு “பேப்… நாளைக்கு காலைல அஞ்சு மணிக்குலாம் கிளம்பி இரு.” என்றதில், புரியாமல் பார்த்தாள்.

“மலைக்கு போகணும்ன்னு சொன்னீலடி. நாளைக்கு போகலாம்” என்றதில், அவள் சற்றே தயங்கினாள்.

“இல்ல ஜிஷு. அம்மா வேற பேசுறதே இல்ல. அப்பாவும் அமைதியா இருக்காரு. இதுல கன்னிமனூர் வர்றேன்னு சொன்னா கூட கொஞ்சம் ப்ராப்ளம் ஆகுமோன்னு…” என யோசனையுடன் கூற, அவளை அழுத்தமாக பார்த்தவன், “ஓகே உன் இஷ்டம்.” என்று அசட்டையாக கூறி விட்டு அகன்று விட்டான்.

நேரம் செல்ல செல்ல, அவளுக்கு தான் வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. அவன் ‘வா’ வென்று வருத்தி அழைக்காதது ஒரு புறம் கடுப்பை கொடுத்தது. அதே நேரம், அவளால் செல்லாமலும் இருக்க இயலவில்லை.

இரவு வரை பொறுமை காத்தவள், அதற்கு மேல் இயலாமல், ராஜசேகரின் முன்பு நிற்க, அவர் நிமிர்ந்தார்.

“அப்பா… நாளைக்கு கன்னிமனூர் போறேன். ஜிஷு அம்மா வர சொன்னாங்க.” என்று பழியை அவர் மீது போட, மரகதம் கோபத்துடன் முறைத்தார்.

“அவக என்ன, நம்ம உறவுக்காரங்களா வாரா வாரம் வர சொல்ல…” எனக் கடுகடுக்க, ராஜசேகர், “நீ போறதுன்னா போம்மா. ஆனா, உன் மேல இருக்குற நம்பிக்கைல தான் அனுப்புறேன்.” என்று விட, அவளுக்கு ஆச்சர்யம் தான். மேலும் அதை பற்றி சிந்திக்காமல் குஷியானவள், ஜிஷ்ணுவிற்கு அழைக்கப் போனாள்.

பின், ‘உன் இஷ்டம்ன்னு சொல்லிட்டா போற… இருடா நாளைக்கு காலைல சர்ப்ரைஸ் – ஆ வந்து உன் தலைல தண்ணி ஊத்துறேன்’ என்று சபதம் எடுத்துக்கொண்டு சிறு புன்னகையுடன் உறங்கிப் போனாள்.

மறுநாள், அழகாகத் தன்னை தயார் செய்து கொண்டவள், ஐந்து மணிக்கு எல்லாம் கும்மிருட்டில் வெளியில் வந்தாள். ‘பேசாம அப்பாவையே பஸ் ஸ்டாண்ட்ல விட சொல்லலாமா?’ என்ற யோசனையுடன் இருட்டைக் கண்டு சற்றே பயமாக இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், நடையைத் தொடர, அவள் முன்பு பைக் ஒன்று வந்து நின்றது.

‘யாருடா இவன்?’ என்று எரிச்சலாக நிமிர்ந்தவளின் விழிகள் மின்ன, “ஜிஷு? நீ எப்படி இங்க?” என்றாள்.

“உன்ன பிக் அப் பண்ண தான் வந்தேன். இந்த நேரத்துல பஸ் இருக்காது.” என அவளை மேலிருந்து கீழ் வரை அளந்தபடி கூற, “நான் தான் வரலைன்னு சொன்னேனே. அப்பறம் எதுக்குடா வந்த?” அவள் குழப்பமாக பார்க்க,  மீசையை லேசாக நீவி விட்டவன், “நீ வருவன்னு தெரியும்” என்றான் அமர்த்தலாக.

“ஓஹோ…!” என நக்கலாகப் புன்னகைத்தவள், வேறு பதில் பேசாமல் பின்னால் அமர்ந்து கொண்டாள். அந்த சில்லென்ற காலை வேளையும், இருட்டும் இருவருக்குள்ளும் புது வித உணர்வைத் தூண்ட, அந்நிலையை ரசித்தபடியே பயணம் செய்தனர்.

அதனை கலைக்கும் விதமாக, வசுந்தராவே, “ஆமா, உன்கிட்டதான் வண்டி இருக்கே. அப்பறம் ஏண்டா பஸ்ல வர்ற?” என கேள்வியாய் கேட்க, கண்ணாடியை சரி செய்து அவளைப் பார்த்தவன், “வீட்ல இருந்து காலேஜ் 15 கிலோமீட்டர். பெட்ரோலுக்கு காசு உன் அப்பனா தருவான்.” என்று எகத்தாளமாக கூறியதில், “ரைட்டு விடு!” என்றாள் அசடு வழிந்து.

அதில் அவனுக்கும் புன்னகை எழ, “விழுந்துடாம பிடிச்சுக்கோ பேப்” என்றான்.

“நீ என்னையவே பாக்காம, ரோட்டை பார்த்து ஓட்டு. எங்களுக்கு பிடிச்சுக்க தெரியும்” என்று நாக்கை துருக்கிட, அவனோ குறும்பு சிரிப்புடன், சட்டென பிரேக் போட்டான்.

அதனை எதிர்பாராமல் அவள் அவன் மீது மொத்தமாக சரிந்து விட, மீண்டும் பிரேக் போட்டான்.

அப்போதும், அவன் தோள்களை இறுக்க பற்றிக்கொண்டவள், “டேய்… நடு ரோட்ல என்னடா விளையாடிட்டு இருக்க. ஒழுங்கா போ” என அவள் புன்னகையை அடக்கிக்கொண்டு அதட்ட, “அப்போ புடிச்சுக்கோ” என்றான் ரசனையுடன்.

“முடியாது…” எனக் கூறும்போதே, மீண்டும் சடன் பிரேக் போட, அதில் கடுப்பானவள், அவன் வயிற்றை சுற்றி இறுக்கிப் பிடித்துக்கொண்டு, “பிடிச்சுட்டேன். போதுமாடா” எனக் காட்டமாகக் கேட்க, “போதுமே…” என்றவன் அதி வேகத்தில் பறந்தான்.

இருவரின் மோனநிலையும் மலை அடிவாரத்திற்கு வரும் வரை அப்படியே தொடர்ந்தது. வண்டியில் இருந்து இறங்கியவள், “குமரா வரலையா ஜிஷு?” எனக் கேட்க, “இல்ல” என்றான் அவளைப் பாராமல்.

அவளோ சிரிப்பை அடக்கியபடி, “கழட்டி விட்டுட்டு வந்துட்ட தான?” என கேலியாய் கேட்டதில், “இல்லையே. அவன் தான் வரலைன்னு சொன்னான்” என வீம்பாக கூற, “போன் பண்ணி கேட்கட்டா?” என்றாள் கண் சிமிட்டி.

அதில் உதட்டைக் கடித்து, கேசத்தை கோதி மந்தகாசப் புன்னகை ஒன்றை வீசியவன், அவளின் பின்னங்கழுத்தை பற்றி தரதரவென இழுத்து வந்தான், “வாய மூடிக்கிட்டு வாடி” என்று.

முதன் முறை போல் அல்லாது, இந்த முறை சற்று சுலபமாகவே ஏற முடிந்தது அவளால். அது அவனின் உரசலினாலா என்பதை ஆராயாமலேயே அவனுடன் வளவளத்துக் கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில் மூச்சு வாங்க அமர்ந்தாள்.

“இன்னும் எவ்ளோ நேரம் ஜிஷு போகணும்?”

“கொஞ்ச நேரம் தாண்டி” என்றவன், நீரைக் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தி விட்டு, அவளை ஒட்டிக்கொண்டே பாறையின் மீது அமர்ந்தான்.

“ரொம்ப மூச்சு வாங்குதா?” கிசுகிசுப்பாக கேட்டவன், அவளது முகத்தை தன் புறம் இழுத்து, பெண்ணவளின் தேனுதட்டை வருடி விட்டு, “இது வேணும். இப்போ குடுக்கவா?” என்றான் கண்ணை அவளை விட்டு நகர்த்தாமல்.

அவன் தீண்டலில் தொலைந்திருந்த வசுந்தரா, “ம்ம்…” என வாய்க்குள் முனகிட, அடுத்த நொடி அவளிதழ்கள் அவனின் கட்டுக்குள் இருந்தது.

இருவரின் விழிகளும் சிறிதும் மூடவில்லை. அது மற்றவரின் விழிகளை ஆழமாய் சிறை எடுத்துக்கொண்டிருந்தது. அப்பார்வையின் அழுத்தம் தொடர தொடர, அவன் இதழ்களும் அழுத்தம் கொள்ளத் தொடங்கியது. வேண்டுமளவு, இருவரும் முத்தத்தில் தங்களை பிணைத்துக்கொண்டு விலக, அப்போதும் இருவரின் பார்வையும் நகரவில்லை.

மீண்டும் அவளை ஆவேசத்துடன் பிடித்து தன் அதரங்களுக்கு இடையில் இழுத்தவன், “பாக்காதடி. வெறியாகுது…” என்றான் அழுந்த முத்தமிட்டு.

“நீயும் பாக்காத. என்னமோ ஆகுது…” வசுந்தரா அவன் சட்டையை கொத்தாகப் பற்றி, கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட, அதுவோ ஆடவனை இன்னும் அவளை நெருங்க வைத்தது.

மலை ஏறும் வரை முத்தங்கள் நீண்டு கொண்டே செல்ல, அப்போது நன்றாகவே விடிந்திருந்தது.

“ஸ்ஸ்ஸ்… செம்ம குளிரா இருக்கு ஜிஷு. ஹே மேல பாரேன் தலைக்கு மேல பனி மூட்டமா இருக்கு. நம்ம மேல வந்துட்டோமா?” என வியப்புடன் கேட்க, சிறு சிரிப்புடன் “ம்ம்” என்றான்.

“ஜிஷு… அங்க பாரு. குளம் எல்லாம் இருக்கு. தண்ணி செம்ம ஜில்லுன்னு இருக்கும்ல.” என்றவளுக்கு உச்சியில் இருந்து பார்க்கையில் மொத்த ஊரும் அழகாக தெரிந்திட, குஷி தாளவில்லை.

“ஐயோ அழகா இருக்குடா. இங்க கோவில் இருக்குன்னு சொன்ன எங்க இருக்கு?” எனக் கேட்டவளிடம், “இன்னும் கொஞ்ச தூரத்துல இருக்குடி. வா…” என்று அங்கிருந்த பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.

அவளோ கையெடுத்து கும்பிட்டு தீவிரமாக, “பிள்ளையாரப்பா பிள்ளையாரப்பா, என் அரசியல்வாதி அடியாளுக்கு ஒரு எம். எல். ஏ… ப்ச் ப்ச் வேணாம் ஒரு எம். பி சீட்டு மட்டும் ரெடி பண்ணிடுங்க.” என சத்தமாக கூறியவள், சற்றே குரலைத் தணித்து, “ஆனா, எலக்ஷன்ல அவன் தோத்து போய்டணும்… ஓகே வா?” என்று பிள்ளையாரிடம் டீல் பேசினாள்.

அவனோ அவளைத் தீயாய் முறைத்து வைத்து, “ஏய்… என்னடி செஞ்சுட்டு இருக்க?” என்றதில், “எனக்கும் காடுக்கும் ஆயிரம் கொடுக்கல் வாங்கல் இருக்கும். அதை ஏண்டா நீ ஒட்டுக்கேக்குற? நீ வேணும்ன்னா ஜெயிக்கணும்ன்னு டீல் பேசிக்கோ.” என அழகு காட்டினாள்.

“அப்டியே மலைல இருந்து தள்ளி விட்டுருவேன்டி.” என அவன் பல்லைக்கடிக்க,

“போடா டொமேட்டோ!” என்றதில், அவளை தூக்கிக்கொண்டு உண்மையாகவே பள்ளத்திற்கு அருகில் சென்றவன், “இந்த விசயத்துல என்கிட்ட விளையாடாத. உன்ன தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.” என்றவன் நெற்றிக்கண்ணை திறந்தான்.

பல்லாயிரம் அடி ஆழத்தை சற்றே மிரண்டு பார்த்த வசுந்தரா, “என்… என்னடா மிரட்டுறியா?” எனத் தடுமாற,

“இங்க பாரு. நான் நினைச்சது நடக்குற வரை ஓயவே மாட்டேன். அதுக்கு தடையா நீ இருந்தாலும் அடுத்த செகண்ட் தூக்கி போட்டுட்டு போய்டுவேன். உன் முத்தமும், உன் வாசமும் என்னை இந்த விசயத்துல மயக்காது. ஜாக்கரத.” என்றவனின் கண்கள் அனலைத் தெறித்தது.

அவளும் அதே அனல் பார்வை பார்த்து விட்டு, காலை ஆட்டியபடியே, “கால் வலிக்குதேன்னு நினைச்சேன். நல்லவேளை நீயே தூக்கிட்ட. அப்படியே தூக்கிக்கிட்டே இறங்கு” என அவனின் கோபமும் வார்த்தைகளும் அவளைத் தாக்கவே இல்லை என்ற ரீதியில் பேச, அவளின் திமிரில் கரைந்தான் ஜிஷ்ணு தர்மன்.

ஆனாலும், இறக்கி விடவில்லை. அப்படியே மீண்டும் கோவில் வாசலுக்கு வந்து இறக்கி விட்டவனை, ஏனென்று பார்க்க, அங்கிருந்த விபூதியை எடுத்து அவள் மீது தெளித்தவன், “பிள்ளையாரப்பா, இந்த வக்கீலுக்கு நல்ல புத்திய குடு” என்றான் பயபக்தியுடன்.

“டேய்ய்…” என முறைத்த வசுந்தராவும், விபூதியை எடுத்து அவன் மீது தெளித்து, “இவன் இந்த ஜென்மத்துல அரசியல்வாதி ஆக கூடாது…” என்று சாபமிட, ஜிஷ்ணு கோபமாக அருகில் நெருங்கும் முன் அவன் நெற்றியில் விபூதியை பூசியவள், “சாமி ஆடாத, சாமி… விளையாட்டுக்கு தான் சொன்னேன்.” என்று விட்டு நகர போனவளை பிடித்து இழுத்தான்.

“கோவிலுக்கு வந்துட்டு குங்குமம் கூட வச்சுக்க மாட்டியா…?” என அதட்டியபடியே இயல்பாக குங்குமத்தை அவள் நெற்றியில் தீட்டியவன், அவளை கையில் அள்ளிக்கொண்டு இறங்கத் தொடங்கினான்.

‘உண்மையாவே தூக்கிட்டு இறங்க போறானா?’ என அவள் விழிக்க, அந்த இமைகளுக்கு முத்தமிட்டவன், “கிஸ் பண்ண இதான் கரெக்ட் – ஆ இருக்கு…” என்று அவளின் முகம் முழுதும் தோன்றும்போதெல்லாம் அழுத்த முத்தங்களை கொடுத்துக் கொண்டே இருந்தான். ஆணவனின் கழுத்தை கட்டிக்கொண்டு, அவன் இதழ்கள் ஓய்வெடுக்கும் நேரத்தில், வசுந்தராவின் முத்தங்கள் தொடர்ந்திருக்கும் தித்திப்பாக…

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
83
+1
6
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்