Loading

ஐந்து வருடங்களுக்கு முன் திருவிழாவுக்காக சமுத்ரா தன் குடும்பத்தோடு தன் அன்னையின் ஊருக்கு வந்திருந்தாள்.

ஒரு நாள் இரவு பாத்ரூம் செல்வதற்காக வீட்டின் கொல்லைபுறத்திற்கு சமுத்ரா வந்தபோதே அந்த சம்பவம் நடந்தது. 

வெளியே வந்தவளின் பார்வையில் மங்கிய ஒளியின் துணையால் தூரத்தில் யாரோ வேகமாய் நடந்து செல்வது தென்பட திருடனோ என்ற சந்தேகத்தோடு அந்த நபரை பின்தொடர்ந்தாள்‌.

அந்த உருவம் தன்னை கருப்பு நிற துண்டால் முழுதாக மூடியிருந்த படியால் அந்த நபரை அவளால் அடையாளம் காணமுடியவில்லை. 

ஓசையில்லாமல் அந்த உருவத்தை பின்தொடர்ந்தவள் அந்த உருவம் அந்த வீட்டிற்கு பின்னிருந்த தோட்டம் பக்கம் செல்ல இனி தனியே செல்வது சரிப்படாது என்று எண்ணியவள் டார்ச் லைட்டுக்காக எடுத்து வந்திருந்த போனை எடுத்து தன் மாமாவுக்கு தகவலை தெரிவித்து விட்டு அவளும் அந்த நபரை பின்தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்தாள்‌.

சுற்றும் முற்றும் பார்த்தபடியே யாரும் கண்ணுக்கு தெரிகின்றனரா என்று ஆராய்ந்தபடியே வந்தவளின் கண்ணில் நான்கு பேர் கருப்பு நிற போர்வையோடு நிற்பது தெரிய தைரியமாய் முன்னேறினாள்.

“டேய் யாருடா நீங்க? தோட்டத்துல திருட வந்திருக்கீங்களா?”என்று கேட்க அந்த நான்கு பேரும் இப்போது ஓடத்தொடங்கினர்.

அவர்கள் ஓடத்தொடங்கியதுமே சமுத்ராவும் தன் முழு பலத்துடன் அவர்களை துரத்த தொடங்கினாள்.

ஒருகட்டத்தில் அந்த நால்வரில் இருவர் அவள் கையில் சிக்கிட சுற்றி இருட்டாக இருந்ததால் யாரென்று தெரிந்துகொள்ளாமலேயே தன் மொத்த வித்தையையும் அவர்களிடம் காட்டிவிட்டாள் சமுத்ரா.

அவளிடம் சிக்கிக்கொண்ட இருவரையும் காப்பாற்றுவதற்காக மற்ற இருவரும் இவர்களை நோக்கி ஓடிவர அவர்களையும் வளைத்து பிடித்து அடி பின்னிவிட்டாள்.

அப்போது தூரத்தில் ஆட்கள் வரும் சத்தம் கேட்டு தரையிலிருந்த மண்ணை அள்ளி சமுத்ரா அசந்த நேரம் அவளின் கண்ணில் தூவிவிட்டு அந்த நால்வரும் ஊரார் கையில் சிக்காமல் தப்பி ஓடி மறைந்தனர்.

நெடு தூரம் மூச்சிறைக்க ஓடிவந்த நால்வரும் யாரும் தம்மை பின்தொடரவில்லையென்று உறுதி செய்தபின்னரே தன் ஓட்டத்தை நிறுத்தினர்.

“டேய் இதுக்கு மேல முடியலடா. துணியை வெளுக்குற மாதிரி துவைச்சி எடுத்துட்டாடா”என்று நாதன் சொல்ல 

“ஆ… அம்மா… அந்த பொண்ணு கழுத்தை புடிச்சதுல இன்னைக்கு என் சங்கு அவ கையில வந்துரும்னு நெனச்சேன்டா. ஆ வலிக்கிதே.”என்று பாலுவும் வலியில் முணங்கியபடியே கழுத்தை பிடிக்க

“அடேய் ஏன்டா நீங்க வேற. அங்க பாரு பிறந்த நாள் கொண்டாட வேண்டியவனை பொளந்து வச்சிருக்கா பாரு.” என்று சிவசங்கரன் ஷாத்விக்கை காட்ட அவனோ எழமுடியாமல் தரையில் உருண்டுகொண்டிருந்தான்.

மற்ற மூவரும் தம்மை சமாளித்துக்கொண்டு ஷாத்விக்கின் அருகே வந்து அவனை மெதுவாக தூக்கிவிட்டனர்.

ஆனால் அவனால் எழும்ப கூட முடியவில்லை. சமுத்ராவின் அடி அத்தனை வீரியமாக இருந்தது.

“டேய் வேண்டாம்டா. முடியலடா.”என்று ஷாத்விக் சிறு பிள்ளையை போல் அழ

“டேய் கத்தாதடா. யாராவது பார்த்தா மானக்கேடா போயிடும்”என்று நாதனும் தன் வலியை பொறுத்துக்கொண்டு சொல்ல

“இப்போ எப்படிடா வீட்டுக்கு போறது? நாம இப்படியே போனா கண்டுபிடிச்சிடுவாங்களே.”என்று சிவசங்கரன் சொல்ல

“நாம போகலைனாலும் கண்டு பிடிச்சிடுவாங்க. நல்ல வேளை மூஞ்சில எந்த டேமேஜூம் இல்லை. இல்லைனா ரொம்ப கஷ்டம்.” என்று பாலு கூற

“ஆமாடா. இப்படியே சத்தம் இல்லாமல் அவங்கவங்க வீட்டுக்குள்ள போறது தான் இப்போ இருக்க ஒரே வழி.”என்று நாதனும் அவர்களின் கூற்றை ஒப்புக்கொள்ள

“டேய் நான் எப்படிடா போறது? என்னால எழுந்து கூட நிற்க முடியல.”என்று ஷாத்விக் தன் இருப்பை உணர்த்த

“அவ தான் அடி பொளந்து எடுக்குறானு தெரியுதுல. தெரிஞ்சும் அவகிட்ட தலையை குடுத்த வாங்கிக் கட்டிக் கிட்டு இப்போ என்ன செய்றதுனு எங்ககிட்ட கேட்டா நாங்க என்ன செய்றது?”என்று பாலு கேட்க

“துரோகிகளா உங்களை முழுசா பொளந்துருவானு உங்களை காப்பாத்த வாலண்டியரா நான் போய் அவகிட்ட அடிவாங்குனேன்டா. வாலண்டியரா வாங்குனதுக்கு எனக்கு இது தேவை தான்.” என்று ஷாத்விக் கூற மற்றவர்களுக்கும் அது புரிந்து தானிருந்தது.

சமுத்ரா நால்வரையும் புரட்டியெடுக்கும் போது ஷாத்விக் தான் சமுத்திராவின் கவனத்தை தன்புறம் திருப்பி மற்றவர்களை தப்பிக்கச்செய்ததோடு அவள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு அவனும் தப்பித்து வந்திருந்தான்.

“எல்லாம் சரிதான்டா. ஆனா நீ எப்படி வீட்டுக்கு போவ? உன்னை தான் டோட்டலா டேமேஜ் பண்ணிட்டாளே உன் அத்தை பொண்ணு.”என்று நாதன் கேட்க

“ஏதாவது செஞ்சு சமாளிப்போம். இப்போ நான் வீட்டுக்கு போகலனு வை. என்னை பெத்தவரு கண்டுபிடிச்சிடுவாரு. அப்புறம் அதுக்கு வேற தனியா வாங்கிக்கட்டிக்கனும்.”என்று ஷாத்விக் சொல்ல மற்றவர்களுக்கும் அது சரியென்றேபட்டது.

“ஆனாலும் இது உனக்கு மறக்க முடியாத பொறந்தநாளில்ல?”என்று அது தான் சமயமென்று பாலு ஷாத்விக்கை கிண்டல் செய்ய

“ஆமாண்டா பர்த்டே மெமரிஸ் வித் சண்டைக்காட்சிகள்”என்று சிவசங்கரனும் கூறி சிரிக்க ஷாத்விக்கிற்கோ அவர்களை முறைக்க மட்டுமே முடிந்தது.

“ஆனா எப்படிடா உன் அத்தை பொண்ணுக்கு இந்த வித்தையெல்லாம் தெரியும்? ஒத்தைக்கு ஒத்தை நின்னாலே கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா இந்த பொண்ணு அசால்டா நாலு பேரையும் பொரட்டி எடுத்துட்டா?”என்று பாலு கேட்க

“அம்மா ஒரு தடவை அவளுக்கு இந்த சைனா காரன் சண்டையெல்லாம் தெரியும்னு சொன்னாங்கடா. நான் தான் அவங்க சொன்னதை காதுலயே போட்டுக்கல” என்று ஷாத்விக் ஒரு முறை தன் அன்னை கூறியதை நினைவு படுத்தினான்.

“எனக்கென்னமோ உன் அத்தைபொண்ணு அந்த சைனா காரனுக்கே சண்டை க்ளாஸ் எடுக்குதோன்னு தான் தோனுது. என்னா அடிடா சாமி. ஆனா கட்டிக்கப்போற உன் நிலைமையை நெனச்சா தான் பாவமா இருக்கு.”என்று நாதன் கூற

“ஏது இவள நான் கட்டிக்கப்போறேனா? கடைசி வரைக்கும் சந்நியாசியாக இருப்பேனே தவிர இவளை கட்டிக்கிட்டு என்னால தெனம் தெனம் அடிவாங்கமுடியாது.”என்று ஷாத்விக் சொல்ல

“எல்லாரும் இப்போ இப்படி தான்டா சொல்லுவீங்க. பிறகு அந்தர் பல்டி அடிச்சிட்டு ஆகாசத்துல பறப்பீங்க. உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்போம்?”என்று சிவசங்கரன் ஷாத்விக்கை வம்பிழுக்கவென்று பேசியபடியே நால்வரும் அவரவர் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

 

“டேய் நீ என்னடா யோசிக்கிற?”என்ற ஷாத்விக்கின் குரலில் நினைவு மீண்டான் நாதன்.

“அதை விடு. இப்போ நீ என்ன செய்யப்போற?” என்று நாதன் கேட்க

“அதான் தெரியலடா.” என்று ஷாத்விக் கூற

“கேட்குறேன்னு தப்பா நெனைக்காத. இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுறதுல உனக்கு என்ன பிரச்சினை?” என்று நாதன் கேட்க 

“பெருசா எந்த பிரச்சினையும் இல்ல. ஆனா அவள பார்த்தாலே பயமா இருக்கேடா.” என்று ஷாத்விக் சிறுபிள்ளை போல் ஒரு காரணத்தை சொல்ல

“டேய் நம்புற மாதிரி ஒரு காரணத்தை சொல்லு. அந்த பொண்ணு டெரர் பீஸூ தான். ஆனா அதுக்காக பார்த்தா பயப்படுற அளவுக்கு பயங்கரமில்ல.”என்று நாதன் கூற

“அது …. அவளோட அத்தை பையன் பவனும் அவளும் விரும்புறாங்கடா.”என்று ஷாத்விக் புதிதாக ஒரு கதையை சொல்ல

“என்னடா சொல்லுற?”என்று நாதன் குழப்பத்தோடு கேட்க

“ஆமாடா. அவளோட அத்தை பையன். அங்கேயே ப்ரொபெசரா இருக்கான். அவளுக்கு சரியான ஜோடி அவன் தான்.”என்று ஷாத்விக் கூற

“உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்? உனக்கு யாரு சொன்னா?”என்று நாதன் கேட்க

“போனமுறை பவன் லீவுக்கு ஊருக்கு வந்திட்டு போனபோது தான் எனக்கே விஷயம் தெரியும். இது தெரிஞ்சா வீட்டுல பிரச்சினை வரும்னு தான் இரண்டு பேரும் அமைதியாக இருக்காங்க.”என்று ஷாத்விக் கூற நாதனோ

“இப்படியே எத்தனை நாளைக்கு அமைதியாக இருக்க முடியும்?”என்று நாதன் கேட்க

“அது அவங்க இரண்டு பேரும் தான் முடிவு செய்யனும். என்னால முடிஞ்ச ஒரே உதவி என்பக்கத்துல இருந்து எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கிறது தான்.”என்று ஷாத்விக் சொல்ல

“எல்லாம் சரிதான்டா. ஆனா எப்படி உன் அத்தையை சமாளிக்கப்போற?”என்று நாதன் கேட்க

“அது தான் தெரியல. ஆனா ஏதாவது செய்து நிறுத்திடனும். இல்லைனா பிறகு பெரிய பிரச்சினையாகிடும்”என்று ஷாத்விக் கூற நாதனும் அதனை தலையாட்டி ஆமோதித்தான்.

பின் சற்று நேரம் பேசிவிட்டு ஷாத்விக் வீடு திரும்பினான்.

காலை ஐந்து மணிபோல் தன் ஊரான பேரூரை வந்தடைந்தார் அமராவதி. ஷாத்விக் அவரை அழைத்து செல்வதற்காக தன் பைக்கினை எடுத்து வந்திருந்தான்.

பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஷாத்விக் அவரின் கண்ணில்பட அவனுமே அவரை நோக்கி தான் வந்துக்கொண்டிருந்தான்‌.

“அத்தை எப்படி இருக்கீங்க?”என்று அவரிடம் நலம் விசாரித்தவன் அவர் கையிலிருந்த கைப்பையை வாங்கிக்கொண்டான்‌.

“நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க?”என்று அவரும் நலம் விசாரிக்கவென்று இருவரும் பேசியபடியே ஷாத்விக்கின் வண்டியில் ஏறினர்.

“என்ன அத்த திருவிழாவுக்கில்ல நீங்க வர்றதா அம்மா சொன்னாங்க‌. இப்போ என்ன திடீர்னு வந்திருக்கீங்க?”என்ற ஷாத்விக் ஏதும் தெரியாதது போலவே கேட்க 

அமராவதி அவனின் அத்தை ஆயிற்றே அவனின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டு 

“நீ எது கேட்கிறதுனாலும் என்கிட்ட நேரடியாகவே கேட்கலாம் ஷாத்விக்.”என்று கூற

“நீங்க கேட்குறதால நானே சொல்றேன். நீங்க பேச வந்த விஷயத்துல எனக்கு துளி கூட விருப்பமில்லை. நான் வேறொரு பொண்ணை விரும்புறேன்”என்று சொல்ல அமராவதிக்கு இந்த செய்தி சற்று அதிர்ச்சியை தான் கொடுத்தது.

 

“ஷாத்விக் விளையாடுற விஷயமில்லை‌ இது.”என்று அமராவதி எச்சரிக்கும் தொனியில் சொல்ல

“நான் நிஜத்தை தான் சொல்றேன். நானும் தர்மதுரை மாமா மக மௌனிகாவும் விரும்புறோம். அவ மேல்படிப்புக்காக வெளிநாடு போயிருக்கா. அவ திரும்பி வந்ததும் இது பத்தி பேசலாம்னு இருக்கோம்.”என்று ஷாத்விக் சொல்ல அமராவதிக்கு இது பெருத்த ஏமாற்றமானது.

ஆனால் இனி இதில் அவர் செய்வதற்கு எதுவும் இல்லை. 

தன் மகளின் இந்த ஒரு விருப்பத்தை கூட நிறைவேற்றமுடியவில்லை என்ற ஏமாற்றமே அவரிடம் அதிகமாயிருந்தது.

அதற்கு பின் இருவருக்கும் இடையில் எந்த பேச்சுவார்த்தையும் இருக்கவில்லை.

வீட்டிற்கு வந்ததும் தனக்கு சற்று ஓய்வு தேவையென்று கூறி அமராவதி அறைக்குள் சென்றிட இந்திராணி ஷாத்விக்கை அழைத்து தனியா விசாரித்தார்.

“என்னடா சொன்ன அத்தை கிட்ட? அவங்க முகமே சரியில்லை.”என்று இந்திராணி கேட்க அவர் காதருகே ரகசியம் சொல்வதை போல் வந்தவன்

“உன்கிட்டயே சொல்லாத ஒரு ரகசியத்தை சொன்னேன்.”என்று சொல்ல இந்திராணியோ குழப்பத்துடன்

“என்ன ரகசியம்?”என்று கேட்க

“அது தான் ரகசியம்னு சொல்லிட்டேனே. அதுனால சொல்ல முடியாது மிசஸ்.இந்திராணி”என்றவன் அடுத்து அவனின் அன்னை கேள்வி கேட்கும் முன்னேயே அங்கிருந்து கழன்று விட்டான்.

 

அவனுக்கு தெரியும் இன்னும் சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தால் தன் அன்னையிடமிருந்து தொடர் படையாய் கேள்விகள் வருமென்று. 

இன்னும் முழுதாக விடியாததால் தன் அறைக்கு வந்தவன் தன் மொபைலோடு படுக்கையில் விழுந்தான்.

அவன் மொபைலில் பல குறுஞ்செய்திகள் படிக்கப்படாமல் குவிந்துகிடக்க ஒவ்வொன்றாக அதனை படித்து பார்த்தவன் அந்தவொரு குறுஞ்செய்தியில் முகம் மலர்ந்தான்.

அதற்கு பதிலொன்றை அனுப்பியவன் தனது மொபைலை தூரவைத்துவிட்டு விழிகளை மூடினான்.

அந்த மூடியவிழிகளுக்குள் ஒரு உருவம் வந்துபோக இதழ்களோ அழகாய் மலர்ந்து விரிந்தது.

ஆனால் இந்த மலர்ச்சியும் மகிழ்வுக்குமான ஆயுட்காலம் மிக அற்பமென்று ஷாத்விக் அப்போது அறிந்திருக்கவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.