மெல்லிய முறுவலுடன் மேலே சொல்ல ஆரம்பித்தாள் யக்ஷித்ரா.
ஒவ்வொரு மாணவியும் தங்களுடைய மிதிவண்டிகளைப் பெற்றோரிடம் கொடுத்து விட்டு, உடனே பள்ளிக்குள் விரைய வேண்டும் என்று மாணவிகளுக்குத் தலைமை ஆசிரியை உத்தரவிட்டிருந்தார்.
வேகமாகப் பள்ளியிலிருந்து வெளித்திடலுக்கு வந்தவர்கள்,
“பொண்ணைப் பாத்துக்கோ ம்மா!” என்று யக்ஷித்ராவின் தாய் மீனா, மகளுடைய தோழியிடம் கேட்டுக் கொண்டார்.
“சரிங்க ம்மா” என அவருக்குப் பதில் கொடுத்து விட்டுத்,
தன் சகோதரனிடம், “நான் ஈவ்னிங் வந்ததும் தான் சைக்கிளையே எடுப்பேன். அதுக்குள்ளே நீ ஓட்டிப் பார்த்துடாத! அப்படி நடந்துச்சுக் கொன்றுவேன் உன்னை!” என்று மிரட்டினாள் நிவேதிதா.
“நான் புது சைக்கிளே வாங்கிக்கிறேன். போ .. போ” எனப் பள்ளிக்குள் செல்லுமாறு கூறினான் அவளது தம்பி மதன்.
அதற்குள், காவலாளி வந்து,”பேரன்ட்ஸ் கிளம்புங்கம்மா. பிள்ளைங்களா உள்ளே வாங்க” என்று அவர்களைப் பள்ளிக்குள் நுழையச் சொல்லி அவசரப்படுத்தினார்.
“பை” என அவர்களிடம் உத்தரவு பெற்று விட்டு, தங்கள் வகுப்பறைக்குள் வந்தனர் யக்ஷித்ராவும், நிவேதிதாவும்.
ஒவ்வொருவரும் தங்களது மிதிவண்டிகளைப் பற்றி ஆவலாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
ஆனால், இவர்களோ வீட்டுப் பாடங்களைச் செய்து முடித்தனர்.
பயோமேத்ஸ் பிரிவு என்பதால், அங்கே கணக்குப் பாடம் இன்றியமையாதது அல்லவா?
அடுத்து வரும், மாதாந்திர தேர்விற்காக கையில் ஒரு நோட்டுடன் வெகு மும்முரமாக கணக்குகளைப் செய்துப் பார்த்துப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர்.
பள்ளியில் எப்போதும் மாதாமாதம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு, மாணவிகளைக் கோடு போடாத வெள்ளைத் தாள்களைத் தான் பயன்படுத்த வேண்டும் எனச் சட்டம் போடவில்லை நிர்வாகம்.
அதற்குப் பதிலாக, அவர்களே இருக்கின்றப் பாடங்களுக்கு எல்லாம் தனித்தனியாக, நோட்டுக்களைக் கொடுத்து விடுவர். அதை உபயோகித்து தான் மாணவிகள் தேர்வுகளை எழுதி முடிக்க வேண்டும். அதை திருத்தி அவர்களிடமே ஒப்படைத்து விடுவார்கள் ஆசிரியைகள். தேர்வு முடித்து, மதிப்பெண்கள் வழங்கிய பின்னர், வீட்டில் காண்பித்து, அவற்றில் பெற்றோருடைய கையொப்பத்தை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து மீண்டும் பாட ஆசிரியையிடமே அவற்றைச் சேர்ப்பித்து விட வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் தனியாக அதற்கான முதன்மை மாணவி ஒருவர் இருப்பார். அவர் தான், அந்த நோட்டுக்களை எண்ணி எடுத்து வந்து மீண்டும் வைக்கும் பொறுப்பாளி.
கணக்குப் பாடத்திற்கான முதன்மை மாணவியாக யக்ஷித்ரா தான் இருந்தாள்.கணக்கு ஆசிரியையின் உத்தரவின் படி, அனைவரையும் வழிநடத்தி விட்டு, தானும், நோட்டில் போட்டு வைத்தக் கணக்குகளைப் சுயமாகப் பிழைத் திருத்திக் கொண்டிருந்தாள்.
“மன்த்லி டெஸ்ட்டுக்கான டைம் டேபிள் வந்திடுச்சுப்பா” என வகுப்பாசிரியைக் கொடுத்திருந்த தாளைப் பார்த்துக் கரும்பலகையில் எழுதினாள் அவர்களுடைய வகுப்பின் தலைமை மாணவி.
அனைவரும் அதை எழுத தொடங்கியதும், “இனிமேல் வீட்டிலும் டெஸ்ட் தான்!” என்று குறைபட்டாள் யக்ஷித்ரா.
தந்தை கிரிவாசனின் பொறுப்புணர்வு படிப்பில் மட்டும் சற்று அதிகப்படியானதாக இருக்கும். அவ்வப்போது, யக்ஷித்ராவிற்கும், யாதவிக்கும் வீட்டிலேயே தேர்வு நடத்தி, அவர்களது அறிவைச் சோதித்துக் கொண்டே இருப்பார்.
“அப்போ இன்னும் நல்லா எக்ஸாம்க்குத் தயாராகிடுவ!” என அவளைப் சமாதானம் செய்தாள் நிவேதிதா.
அதற்குப் பிறகு, யக்ஷித்ராவுக்கு தேர்வு அட்டவணையை மனப்பாடம் செய்வதிலேயே நேரம் செலவாயிற்று.அதுவும் தந்தையின் கட்டளை தான்.
“வா சாப்பிடுவோம்” என அவளை இழுத்துச் சென்றாள் நிவேதிதா.
மாலையில் தந்தையிடம் சென்றவள்,”அப்பா! மன்த்லி டெஸ்ட் டைம் டேபிள்” என்று அவரிடத்தில் காகிதத்தை வழங்கினாள் யக்ஷித்ரா.
அவர் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தன் சின்ன மகளிடம்,”உனக்கு எக்ஸாம் எப்போடி?” என்று வினவினார் மீனா.
“அவளுக்கு முடிஞ்சு தான்மா, எனக்கு எக்ஸாம் ஆரம்பிக்கும்” என்றாள் யாதவி.
” ஸ்டடி டேபிளில் பேப்பரை ஒட்டி, அதில் இதை எழுதி வை. இதே சிலபஸ் தான். படிச்சு வை. சனிக்கிழமை டெஸ்ட் வைக்கிறேன்” என்றவர்,
“புது சைக்கிளை நீ வச்சிக்கிட்டுப் பழையதை யாதவிக்குக் கொடு” என்று உத்தரவிட்டார் கிரிவாசன்.
யக்ஷித்ராவும், யாதவியும் அக்கா தங்கைகள் என்றாலும், முன்பெல்லாம் ஒரே பள்ளியில் படிப்பதால், தங்கையைத் தன்னுடன் மிதிவண்டியில் அமர வைத்துப் பள்ளிக்கு அழைத்துச் செல்வாள் மூத்தவள்.
போகப்போக, யாதவியும் வளர்ந்து விட, அவளே, இனிமேல் தனியாகப் போய்க் கொள்ள விருப்பம் என்று சொல்லி விட்டதால், தானும் ஒற்றை ஆளாக, மிதிவண்டியை அழுத்திக் கொண்டுப் பள்ளிக்குச் சென்று விடுவாள் யக்ஷித்ரா.
இப்போது அவளுடையதை தங்கை வாங்கிக் கொள்ள முன் வருவாளா? என்ற யோசனையில் இருந்தவளிடம்,”என்ன? கொடுத்துடுவ தானே?” என்றார் கிரிவாசன்.
“கொடுக்கிறேன் அப்பா” என்று கூறினாள் யக்ஷித்ரா.
“யாது!” என இளையவளை அழைத்தார்.
மிதிவண்டியைப் பற்றியப் பேச்சு அவளுக்கும் கேட்டிருக்கும் போல, அதனால் தங்கையுடைய வெளிறிய முகத்தைக் கண்டு கொண்டாள் தமக்கை.
“பழைய சைக்கிளை நீ யூஸ் பண்ணிக்கோ” எனக் கூறி, யக்ஷித்ராவிடம்,”நல்ல கண்டிஷனில் இருக்கா? சர்வீஸ் பாக்கனுமா?” என்றார் தந்தை.
“தேவையில்லை ப்பா! புதுசு மாதிரி தான் பாத்துக்கிட்டேன்” என்று தன் மிதிவண்டியின் தற்போதைய நிலையைப் பற்றிக் கூறினாள் மூத்தவள்.
“வாட்டர் வாஷ் பண்ணிக் கொடுக்கிறேன்” என யாதவியிடம் கூற,
அவளோ முகத்தைச் சுருக்கிக் கொண்டு,”எனக்கு இந்தப் புதுசு தான் வேணும் ப்பா!” என்று அடம் பிடித்தாள்.
“அப்போ இதையே வச்சுக்கோ” என்று உடனே தங்கைக்கு விட்டுக் கொடுத்து விட்டாள் யக்ஷித்ரா.
“ஹேய்! நான் இங்க ஒருத்தன் இருக்கேன்! நீ என்னடான்னா, நான் சொன்னதை மீறி அடம் பிடிக்கிற, நீ சம்மதம் சொல்ற! என்ன நடக்குது? மீனா!” என்று மனைவியை அழைத்தார் கிரிவாசன்.
“ஏங்க!”
“சைக்கிளை ரெடி பண்ணித் தருவேன். உன் சின்ன மகளை ஓட்டிக்கச் சொல்லு. இன்னைக்கு வந்தது, பெரிய மகளுக்குத் தான்!” என்று அவருக்குக் கட்டளையிட்டார்.
அதில் ஏமாந்து போன யாதவியோ,”எனக்குச் சைக்கிளே வேணாம்ப்பா! நான் நடந்து போவேன் ஸ்கூலுக்கு!” என்று தடாலடியாக உரைத்து விட்டு இனி அங்கிருந்தால் தன்னை இழுத்துப் போட்டு அடித்து விடுவார் தந்தை என்று விறுவிறுவென அறைக்குப் போய் விட்டாள்.
அவளுடைய துணிவை வியந்து நோக்கினாள் யக்ஷித்ரா. தந்தை சொல்லை மதிக்க வேண்டி, தன் புது மிதிவண்டியைத் தியாகம் செய்ய முன் வந்தவளுக்குத் தங்கையின் இந்தச் செயல் அதிர்ச்சி தான் என்றாலும், யாதவியின் இடத்தில் இருந்து யோசிக்கையில், நிலைமை புரிந்தது அவளுக்கு.
தனக்கானதையும் தான் புதிதாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது யாதவிக்கு நியாயமாகப்பட்டது.
கன்னாபின்னாவென்றுக் கத்திக் கொண்டிருந்த தந்தையை, வெளியே வந்து ஏறிட்டுப் பார்க்கும் தைரியம் இல்லை. அதனால் உணவையும் மறுத்து விட்டு, அன்றிரவு முழுவதும் அறையிலேயே குடி கொண்டாள் யாதவி.
“அவளுக்குக் கொழுப்புடி! அவர் பேசப்பேச உள்ளே போய் அடைஞ்சிக்கிட்டா! நீயும் அங்கே தானே தூங்குவ? உன்னையும் ரூமுக்குள்ள வர விட்டாளா? மனுஷன் காலையில் என்னப் பண்ணப் போறாரோ?” என்று புலம்பியவாறு மீனாவும், யக்ஷித்ராவும் வேறொரு அறையில் தங்கிக் கொண்டனர்.
மறுநாள் காலை விடியலோ, மீனாவின் அர்ச்சனைகளுடன் பள்ளிக்குத் தயாரானாள் யாதவி.
மீனா,”அவர்கிட்ட இருக்கிற பயத்தில் எங்களை விட்டுட்டு ரூமில் பதுங்கிட்டல்ல? அப்பறம் ஏன் சொல் பேச்சு கேட்க மாட்டேங்குற?” என்று கடுப்புடன் கேட்டார் அவளிடம்.
“எல்லாமே செகண்ட் ஹேண்ட் – ல எனக்குத் தர்றது பிடிக்கலை ம்மா” என்று கத்தினாள் யாதவி.
“யக்ஷி!” என வீடு அதிர அழைத்தார் கிரிவாசன்.
“உங்க ரெண்டு பேருக்கும் நான் தான் சளைச்சவளா?” என்று தங்கையிடம் உறுமி விட்டு, தந்தையிடம் சென்றாள் யக்ஷித்ரா.
“இந்த சைக்கிளை நான் மெக்கானிக் ஷாப்பில் கொடுத்து, நட்டு, போல்ட் மாட்டி சரியாக இருக்கான்னுச் செக் பண்ணிட்டு ஒரு வாரம் கழிச்சு வாங்கித் தர்றேன்” என்று அவளிடம் கூறினார் கிரிவாசன்.
சரி எனத் தலையை ஆட்ட மட்டுமே முடிந்தது அவளால்!
அதைக் கேட்டுக் கோபம் கொண்டாலும், தனக்குப் பள்ளியில் தலையாய கடமைகள் அணிவகுத்துச் கொண்டு இருப்பது போல, கிளம்பிக் கொண்டிருந்தாள் யாதவி.
“இவளை ஒழுங்காக வளக்கனும்” என்று வேறு மனைவிக்குப் புத்திமதி சொல்லி விட்டுத் தன் வேலைக்குச் சென்றார் கிரிவாசன்.
“ஓர வஞ்சனை குணமுள்ளக் குடும்பம்!” என்று முணுமுணுத்தவாறு வெளியேறி விட்டாள் யாதவி.
கடைசி வரை, தமக்கையின் மிதிவண்டியில் அவளது கவனம் பதிய முற்படவில்லை!
“நீயும் கிளம்பு” என யக்ஷித்ராவையும் அனுப்பி விட்டப் பின்னர் தான், மீனாவால் அவ்வீட்டில் மூச்சு விட முடிந்தது.
யாதவியின் கூற்று சரியாக இருப்பதாயும் அவருக்குத் தோன்றியது தான்! ஆனால், அது பெரியவளுக்காகப் பள்ளியில் வழங்கியதாயிற்றே! அதை இவளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட முடியாது என்று எண்ணியவர், இவளுக்கும் அடுத்த வருடமே இதே பள்ளியில், இதே மாதிரியான அல்லது புதுவித வடிவமைப்பில் மிதிவண்டி வழங்கப்படலாம். அதனால் தான், அதுவரை நடந்து செல்ல முடிவெடுத்தாள் போலும்! என்று தெரிந்து கொண்டார்.
“சைக்கிளுக்குக் கூட சண்டை!” என அந்த நிகழ்வைக் கணவனிடம் கூறி முடித்தாள் யக்ஷித்ரா.
“ம்ஹ்ம்! நான் சிங்கிள் சைல்ட் – ன்றதால், அப்பா, அம்மாவுக்கு பாகப்பிரிவினைச் செய்ற வேலை இல்லாமல் போயிடுச்சு. யாதவி ரொம்பவே பாவம், மோசம் செய்துட்டீங்க அவங்களை!” என்று தன்னை விட வயதில் சிறியவளாக இருந்தாலும், மனைவியின் தங்கைக்கு மரியாதை கொடுத்துப் பரிந்துப் பேசினான் அற்புதன்.
“சொத்துக்காக கூட இப்படி வாதாட மாட்டாள்! இதுக்காக எல்லாம் வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வருவாள்” என்று சலித்தாள் யக்ஷித்ரா.
“உங்க அப்பா இந்த விஷயத்தில் நல்லா தான் முடிவெடுத்து இருக்கார். ஆனால் பழைய சைக்கிளை மாத்திட்டுப் புதுசு வாங்கி உன் தங்கச்சிக்குக் கொடுத்து இருக்கலாமே?” என்று வினவினான்.
“அவளுக்கு நெக்ஸ்ட் இயர் இதைப் போல புதுசே கிடைக்கும்ங்க!” என்று விளக்கினாள் அவனது மனைவி.
“அதுக்கு வெயிட் பண்ண முடியாமல் தான் உன்னோடதைப் பார்த்ததும் ஆசை வந்துடுச்சு அவங்களுக்கு!” என்று கூறினான் அற்புதன்.
“ஆமாம். நேஹாவோட ஹஸ்பண்ட் ஸ்ரீஹரி நீங்க எப்படி இருக்கீங்கன்னுக் கேட்டார்!” என அவன் முகம் பார்த்தாள் யக்ஷித்ரா.
“ஏன்? மீட் பண்ணனும்னு கேட்டாரா?”
“இல்லை. நீங்கப் பண்ணிய சாகசத்துக்குக் கிடைச்ச அடி குணமாகிடுச்சான்னுக் கேட்டார்!” என்று கோபமாக கூறினாள்.
“அதுவா? அன்னைக்கு எனக்கும் இவ்வளவு கோபமும், தவிப்பும் ஏன் வந்துச்சுன்னு உனக்குத் தோனவே இல்லையா யக்ஷி?” என்று மனைவியின் முகத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் அற்புதன்.
– தொடரும்