Loading

மனைவியின் அருகில் இருந்த அன்னையின் பின்னால் ஒளிந்து கொண்டான் அற்புதன்.

 

அவனது சேட்டைகளை ரசித்தக் கீரவாஹினி, “எங்களை அழைச்சிட்டு வரக் கூட உனக்குச் சோம்பேறித்தனமாடா?” என்று அவனை அதட்டினார்.

 

“ஐயோ இல்லைம்மா! நான் வரலாம்ன்னு தான் இருந்தேன். எழுந்திரிக்க முடியலை.அதான், அப்பாவுக்கு மெசேஜ் போட்டுட்டுத் தூங்கிட்டேன். அதுக்கப்புறம் நீங்க வர்றப்ப கூட முழிக்க முடியலை.சாரிம்மா!” என அவரது அன்னையிடம் கெஞ்சினான் அற்புதன்.

 

“இப்போதாவது சீக்கிரம் போய்ப் பல்லை விளக்கிக், குளிச்சிட்டு வா. சேர்ந்து சாப்பிடலாம்” என்று ஆணையிட்டார் அவனது தந்தை அகத்தினியன்.

 

அவர்களது இல்லத்தில், குளிக்காமல் உணவு உண்ணக் கூடாது என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.

 

விடுமுறை நாளில் கூட, அதிகாலையிலேயே எழுந்திரிக்க இயலவில்லை என்றாலும், எப்பொழுது கண் விழித்தாலும், பல் துலக்கிக் குளித்து விட்டுத் தான் டைனிங் டேபிளுக்கு வர வேண்டும். இல்லையென்றால், அதைச் செய்து முடித்தால் தான் சாப்பாடு எனும் நிலை. 

 

அதனால், அற்புதன் வருவதற்குள், செய்தப் பதார்த்தங்களை சாப்பாட்டு மேஜைக்குக் கொண்டு வந்து அடுக்கினர் மாமியாரும், மருமகளும்.

 

அன்றைய நாளிதழை எடுத்துப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார் அகத்தினியன்.

 

தலையைத் துவட்டி முடித்து வந்த அற்புதன்,”அப்பா! சாப்பிட்டுட்டுப் பேப்பரைப் படிச்சிக்கலாம். வாங்க” என அவரை அழைத்தான் அற்புதன்.

 

டைனிங் டேபிளின் அருகே போடப்பட்ட இருக்கைகளில், ஒவ்வொருவராக அமர, உணவுப் பரிமாறியதும், அற்புதனின் பெற்றோருக்கு நல்லப் பசி போலும். மருமகளின் கைப்பக்குவத்தில் தயாரானவற்றை, அந்தப் பசியிலும் ரசித்து உண்டனர்.

 

“இப்படி உட்காரு” என ஊரிலிருந்து வந்து இவ்வளவு நேரமாகியும், சோர்வின்றித் தன்னை அருகில் அமர்த்திக் கொண்ட அத்தையைக் குழப்பத்துடன் பார்த்தாள் யக்ஷித்ரா.

 

“உங்கம்மா, தங்கச்சியோட முடிவென்ன?” என்று அவளிடம் கேட்டார் கீரவாஹினி.

 

அவரது கேள்விக்குப் பதிலளிக்க இயலாமல் கணவனைப் பார்த்தாள் யக்ஷித்ரா.

 

அதிலேயே புரிந்து விட்டது அவளது மாமியாருக்கு.

 

“இப்பவும் சம்மதிக்கலை! அப்படித்தான?” என்று கூர்பார்வையுடன் அவளிடம் வினவினார் கீரவாஹினி.

 

உடனே யக்ஷித்ராவின் கணவனோ,”அதெப்படி உடனே வருவாங்கம்மா? யோசிக்கனும்ல?” என்றான்.

 

“உங்க கல்யாணம் நடந்தப்போ இருந்து, இன்னும் யோசிக்கிறாங்களா என்ன?” என்று நக்கலாக கேட்டார் அவனது அன்னை.

 

“வாஹி!” என மனைவியைக் கூப்பிட்டார் அகத்தினியன்.

 

தங்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தான், தந்தை அவரை அழைத்தார் என்று எண்ணினர் யக்ஷித்ராவும், அற்புதனும்.

 

ஆனால், அவரோ,”நாம் நேரில் போய்ப் பேசி அழைப்போம்” என்று கீரவாஹினியிடம் கூறவும்,

 

“மாமா! வேணாம். அப்படி செஞ்சிடாதீங்க!” என்று பரபரத்தாள் யக்ஷித்ரா.

 

“ஏன்?”

 

“அவங்க வாழ்ந்த வீட்டை விட்டு வர்றதுக்குப் பிடிக்கலை போல அப்பா” என்று சொல்லி, மனைவிக்கு உதவி புரிந்தான் அற்புதன்.

 

“அங்கே தான் அவங்களுக்கு நிம்மதி கிடைக்கலையே?” என்று கேட்டார் கீரவாஹினி.

 

“இருந்தாலும் அது அவங்களோட சொந்த வீடும்மா!” என்று விளக்கினான் மகன்.

 

அந்த உரையாடலில் தன்னைத் தலையிட விடாது சாமர்த்தியமாகவே தன் பெற்றவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தவனை விந்தையாகப் பார்த்தாள் யக்ஷித்ரா.

 

மருமகளுக்காக மகன் வாதிடுவதை அறிந்து கொண்டு தான், அற்புதனிடம் அடுத்தடுத்தக் கேள்விகளை அவர்களும் முன் வைத்தனர்.

 

“அதுக்கு? அதை வித்திடலாமே? நமக்கு நிம்மதி, சந்தோஷத்தைத் தராதது எதுக்குங்குறேன்?” என்று வாதிட்டார் கீரவாஹினி.

 

“அது எங்க அப்பா கட்டின வீடு அத்தை! அங்கே இருந்து வெளியே வர அவங்க இஷ்டப்படலை” என்று பதில் உரைத்தாள் யக்ஷித்ரா.

 

“மருமக சொல்றதும் சரி தானே வாஹி? நம்மக் கட்டிய வீட்டை விட்டுட்டுப் போக முடியுமா?” என்று இந்தமுறை அவளுக்காகப் பரிந்து வந்தார் அகத்தினியன்.

 

“புரியவே புரியாதுல்ல உங்களுக்கு எல்லாம்?” என மூவரையும் பார்த்துப் பொதுவாக வினவிப் பொருமினார் கீரவாஹினி.

 

அதில், மாமியாரின் கரம் பற்றிக் கொண்டவள்,”எனக்குப் புரியுது அத்தை. யாதவியும், அம்மாவும் சேஃப் ஆக இருக்கனும்னு தான் நீங்க வரச் சொல்றீங்க! ஆனால்…” என்று பரிதவித்தவள்,

 

அவர் அமைதியாக இருக்கவும்,”யாதவியுமே இங்க வரச் சட்டுன்னுச் சம்மதிச்சிட‌ மாட்டா அத்தை. ப்ளீஸ்! நீங்க வீட்டுக்குப் போய்ச் பேச வேண்டாமே!” என்று அவரிடம் கெஞ்சிக் கேட்டாள் யக்ஷித்ரா. 

 

“சரி. நாங்கப் போகல” என்று சுமூகமாகச் சொன்னார் கீரவாஹினி.

 

“தாங்க்ஸ் அத்தை” எனப் பெருமூச்செறிந்தாள் யக்ஷித்ரா.

 

“அவங்க அப்படி யாரும் இல்லாமல், அத்துவானாக்காட்டில் இருக்கிறா மாதிரி, தனியாக வாழ்க்கையை நடத்துறது எங்களுக்கு ரொம்பவே வருத்தம் தான்! நீயும், இவனும் சொன்னதால், அதை மதிச்சு விட்டுட்றோம். ஆனால், இது உறுத்திக்கிட்டுத் தான் இருக்கும்” என்று தீர்க்கமாக கூறினார் அகத்தினியன்.

 

“அவங்களும் மனசு மாறுவாங்க அப்பா” என அதுவரை காத்திருக்க முடிவு செய்தனர் அனைவரும்.

 

அன்று தான் ஊரை அடைந்திருந்தால், கீரவாஹினியும், அகத்தினியனும் போர்வை நீக்கிக் கொள்வதற்காக சிறிது நேரமாவது ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினர்.

 

அதனால், மதிய உணவின் பின்னர், உறக்கத்தை மேற்கொண்டனர்.

 

அப்போது யாதவிக்குத் தன் செல்பேசியில் அழைத்தாள் யக்ஷித்ரா.

 

“ஹலோ அக்கா” 

 

“ஹாங் யாது! என் மாமனார், மாமியார் காலையில் வந்துட்டாங்க. அம்மாகிட்ட சொல்லிடு” என்று அவளிடம் அறிவித்தாள்.

 

“சரிங்க அக்கா. சொல்லிடறேன்” என்றதும்,

 

அவர்களது உரையாடலும் அவளுக்குப் பகிரப்பட்டது.

 

“இதையும் அம்மாகிட்ட சொல்லனுமா?” என்று வினவினாள் யாதவி.

 

“யெஸ்” என்றாள் யக்ஷித்ரா.

 

“சொல்றேன் அக்கா” என்று அழைப்பை வைத்தாள் யாதவி.

 

தனியறையில் தங்களது கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்த அற்புதன்,”அப்பாவும்,அம்மாவும் சொன்னதைக் காப்பாத்துவாங்க. நீயா சொல்ற வரைக்கும், உங்க வீட்டாளுங்க வர்ற வரைக்கும் அவங்கப் போய்ப் பார்க்காமல் இருப்பாங்க. என்னை நம்பலாம்!” என்று மனைவியிடம் மொழிந்தான்.

 

 “ம்ம்…என்னோட ஃப்ளாஷ்பேக்கை கண்டினியூ பண்ணவா? இல்லை, நாளைக்குக் கேட்கிறீங்களா?” என்று உணர்வற்றக் குரலில் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“நான் ஆஃபீஸிலோ, வீட்டில் லேப்டாப் வச்சிருக்கிற நேரம் தவிர, எப்போ வேணும்னாலும் நீ உன் கடந்த காலக் கதையைச் சொல்லலாம். நான் தடுக்க மாட்டேன்” என்று அவளுக்கு உறுதி அளித்தான் அற்புதன்.

 

அவள் அங்கே கதையை மீண்டும் சொல்லத் தொடங்கிய போது, இங்கு யக்ஷித்ராவின் அன்னையின் இல்லத்தில்,

 

“அவளோட அத்தையும் , மாமாவும் வந்ததுமே நம்மளைப் பத்தி தான் கேட்டாங்களாம் அம்மா! அக்கா நமக்காகப் பேசவும், புரிஞ்சிக்கிட்டாங்களாம்” என்று தன் தாயிடம் விவரித்தாள் யாதவி.

 

“சம்பந்தி அம்மாவுமே நம்மோட நலனுக்குத் தான் பேசுறாங்க யாது! ஆனால் நாம் தான் வேண்டாம்னு ஒதுங்கி இருக்கோம்” எனத் திருத்தினார் மீனா.

 

“அக்காவைக் கொடுமைப்படுத்தாமல், வீட்டு மகளாக நடத்தினால் சரி தான்!” என்று அனுசரணையாகப் பேசினாள் யாதவி.

 

அவர்களுக்காகத் தேநீர் கலந்து கொண்டார்கள்.

 

முத்த மகளின் நினைவும் தங்களைச் சுற்றித் தான் இருக்கும் என்பது மீனாவுக்கும் தெரியும். அவருமே யக்ஷித்ராவைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

 

அவளது உடல்நிலை, மனநிலை மற்றும் தினசரி வாழ்க்கை இவற்றையெல்லாம், தடங்கலின்றி நிம்மதியுடன் மகள் கழிப்பது, ஆசுவாசம் மற்றும் நிம்மதியைத் தந்தது அவருக்கு.

 

இனி, இளைய மகளின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்க மட்டுமே அவருக்கு நேரமிருக்கிறது.

 

🌸🌸🌸

 

இப்போது, யக்ஷித்ரா தன் கணவன் அற்புதனிடம் கதையைக் கூறிக் கொண்டு இருக்கிறாள்…

 

‘பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்குப் பன்னிரெண்டின் போது, வகுப்பை மட்டும் மாற்றிக் கொடுப்பார்கள் தவிர, உடன் படிப்பவர்கள் மாற மாட்டார்கள் தானே!

 

அதனால், இப்போதிருந்தே, இருவருக்கும் குஷியாகிப் போனது.

 

பள்ளி முடிந்து , மாலையில் தன் வீட்டிற்கு அருகிலிருக்கும் சிறப்பு வகுப்பிற்குத் தான் யக்ஷித்ரா செல்வாள் என்பதால், அவளுடன் கூடுதல் நேரம் நடந்து வருவாள் நிவேதிதா.

 

அன்றைய கால கட்டத்தில், அரசுப் பள்ளியில் படிக்கும், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்படும்.

 

இவர்களும் அப்படியானதொரு பள்ளியில் தானே பயில்கிறார்கள்‌. எனவே, மிதிவண்டிகள் வழங்குவதற்கான விழா ஒன்றை நடத்தியது பள்ளி.

 

மாணவிகளை ஊக்கப்படுத்திப் பேசி முடித்து விட்டு, மிதிவண்டிகளை வழங்க உத்தரவிட்டார் அந்தப் பள்ளியின் முதல்வர்.

 

அந்தக் குறிப்பிட்ட நாளில் மட்டும், அனைத்து மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளிக்குள் வர அனுமதி வழங்கப்பட்டது.

 

அப்போது, நிவேதிதாவின் பெற்றோரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது யக்ஷித்ராவிற்கு.

 

தன்னுடைய அம்மாவையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

 

“ம்ம்… ஸ்டோரி ஸ்மூத் ஆகப் போயிட்டு இருக்கு” என்றான் அற்புதன்.

 

தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்