Loading

 

“மாமனாரும் மருமகளும் என்ன இவ்ளோ காலையில மீட்டிங் போட்டு இருக்கீங்க.” குரல் வந்த திசையில் பேசிக் கொண்டிருந்த தயாளன் திரும்ப, ஆதிலட்சுமி நின்றிருந்தார்.

மகனின் கடந்த காலங்களை சொல்ல ஆரம்பித்தவர் நன்றாக விடிந்து விட்டது என்பதை கூட கவனிக்கவில்லை. மருமகளும் ஆர்வத்தில் இருந்ததால் கவனிக்க தவற, இருவரின் பேச்சுக்களையும் நிறுத்தினார் அவர்.

மகனை நினைத்து நேற்று இரவெல்லாம் அழுது கொண்டிருந்த மனைவியை இன்னும் துயரப்படுத்த விரும்பாதவர், “சீரியஸா ஒன்னும் இல்ல ஆதி. உன் மருமகளோட குழந்தை பருவத்தை பத்தி பேசிட்டு இருந்தோம்.” என்றார்.

“அப்படியா!” என்றவர் மருமகள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, “அது என்ன மாமனாருக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்லிட்டு இருக்க. என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. எங்க இருந்து ஆரம்பிச்சீங்களோ அதை திரும்பவும் ஆரம்பிங்க நானும் கேட்கிறேன்.” என்றார் ஆதிலட்சுமி.

அகல்யாவிற்கு தயாளன் பேச்சு புரியவில்லை. அதனால் அத்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் மாமனாரின் முகத்தை பார்க்க, ஏதோ சைகை செய்தார் மனைவி அறியாமல். ஓரளவிற்கு புரிந்து கொண்டவள்,

“கதை பேசி நாங்க ரெண்டு பேரும் ரொம்ப டயர்ட் ஆகிட்டோம். நாளைக்கு இதே நேரத்துக்கு கரெக்ட்டா வந்துடுங்க பேசலாம்.” என்றிட, கோபம் இல்லாவிட்டாலும் கோபத்தோடு பார்ப்பது போல் முறைத்தார் மருமகளை.

மூவரும் காலை சூரியனை புன்னகை முகமாக வரவேற்றார்கள். பெரியவர்களோடு சற்று இயல்பாக பேச ஆரம்பித்து விட்டாள் அகல்யா. பேச்சுக்கள் பழையது புதியது என்று தரணீஸ்வரன் பக்கம் வந்தது. மகன் பெயர் அடிபட்டதும் வருத்தத்தை காட்ட ஆரம்பித்தார் ஆதிலட்சுமி. கணவன் தோள்களை தட்டி சமாதானப்படுத்த,

“என்னடா இது கல்யாணம் பண்ணிட்டு வந்த மூனு நாள்ல இந்த வீட்ல இவ்ளோ நடக்குதுன்னு உனக்கு குழப்பமா இருக்கலாம். ஆனா இந்த குழப்பம் எல்லாத்தையும் நீ மட்டும் தான் சரி பண்ண முடியும். உன்னோட புருஷனா பார்க்க வேணாம். உன் பக்கத்துல இந்த மாதிரி யாராது ஒரு அம்மா பையன் கஷ்டத்துல இருந்தா நீ என்ன பண்ணுவியோ அதை பண்ணு. எனக்கு நம்பிக்கை இருக்கு என் மகன் நிச்சயம் மாறுவான். அந்த மாற்றம் உன்னால தான் நடக்கும்.” என்றவர் மருமகளின் கைப்பிடித்து,

“என் மகனை காப்பாத்தி என்கிட்ட கொடும்மா. என் உயிர் இருக்கிற வரைக்கும் உனக்கு நன்றியுள்ள ஜீவனா இருப்பேன்.” என்றவர் பிடித்த கைகளை முகத்தோடு ஒட்டி வைத்து கும்பிட்டார்.

பெரும் சங்கடத்தோடு அவற்றை நிராகரித்து எழுந்து நின்றவள், “இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்க. உங்க மேல எனக்கு நிறைய கோபம் இருக்கு. அதேநேரம் வயசுல பெரியவங்க இந்த மாதிரி பண்றதை ஏத்துக்க முடியல என்னால. பெத்தவங்க நீங்களே உங்க பிள்ளைய திருத்த முடியாம அழுகும் போது புதுசா வந்த நான் என்ன பண்ண முடியும்.” என்றாள்.

“பொண்டாட்டியால முடியாதது எதுவுமே இல்லமா.”

“அந்த ஸ்தானத்தை நான் என்னைக்கும் உங்க மகனுக்கு கொடுக்க மாட்டேன்.”

“எனக்கு நம்பிக்கை இருக்கு நீ ஒரு நாள் நிச்சயம் மனசு மாறுவ. இதே வாய் என்கிட்ட வந்து என் புருஷன் இல்லாம என்னால வாழ முடியாதுன்னு சொல்லும்.” என்றதும் அதுவரை இருந்த அமைதி காணாமல் போனது அவளை விட்டு.

முகத்தில் கடுமை கூட, “நான் செத்தாலும் அந்த மாதிரி ஒரு வார்த்தைய சொல்ல மாட்டேன். இன்னமும் பழைய பொண்டாட்டி போட்டோ வச்சு உங்க பையன் உருகிட்டு இருக்காரு தெரியுமா! அந்த மாதிரி இருக்க ஒருத்தன் கூட வாழுற அளவுக்கு நான் அசிங்கமானவ இல்ல.” இந்த தகவல் புதிதாக இருப்பதால் தம்பதிகள் இருவரும் பார்த்துக் கொண்டனர்.

“என் பையன் மனசுல அந்த பொண்ணு இருக்க வாய்ப்பே இல்லை. அவ கொடுத்த வலிகள் மட்டும் தான் இன்னும் பாக்கி இருக்கும். அதைத்தான் உன்னை எடுக்க சொல்றேன்.”

“எவளோ என்னமோ பண்ணிட்டு போவா அதை எடுக்குறது தான் என்னோட வேலையா?”

“இது வேலை இல்ல உன்னோட வாழ்க்கை.”

“இந்த மாதிரி ஒரு வாழ்க்கை எனக்கு வேணாம்.”

“அம்மாடி எதுக்காக இப்ப இவ்ளோ கோபப்படுற. இவ்ளோ நேரம் நல்லா தான பேசிட்டு இருந்த.” என்ற மாமனாரின் புறம் திரும்பியவள்,

“உங்கள மாமனார் மாமியாரா மதிச்சு ஒன்னும் நான் பேசல. பேசுற சந்தர்ப்பம் வந்துச்சு அதனால பேச்சு கொடுத்துட்டு இருந்தேன். இதையே சாக்கா வச்சு உங்க மகன் கூட வாழ வைக்கலாம்னு பார்க்காதீங்க. என்னால இந்த அசிங்கமான வாழ்க்கைய வாழ முடியாது.” என்று விட்டாள் பட்டென்று.

மீண்டும் தம்பதிகள் இருவரும் பார்த்துக் கொண்டனர். இருவர் முகத்திலும் பெரும் துயரம் இருந்தது. இதை எதிரில் இருப்பவள் உணர்ந்தாலும் கோபத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. விரும்பாத ஒரு வாழ்க்கையை தானே விரும்பி வாழப் போவதாக சொல்வதைக் கேட்க சகிப்பில்லை அவளிடம்.

விட்டுக் கொடுத்துப் போக முடிவெடுத்த ஆதிலட்சுமி, “முடிஞ்சது முடிஞ்சு போச்சு. இப்ப இருக்குறது உன்னோட வாழ்க்கை. அதை காப்பாத்திக்காம பாதில விட்டுட்டு போறன்னு சொல்றது நல்லா இல்ல. அவனை உன்னால மட்டும் தான் மாத்த முடியும். என் மகனை பழைய மாதிரி பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு அகல். தயவு செஞ்சு உன் மனச மாத்திட்டு கொஞ்சம் எங்களுக்காக வாழ பாரு.” என்று கையெடுத்து கும்பிட்டார்.

சங்கடம் இருந்தாலும் அவள் வீம்போடு நிற்க, “என்ன பண்ணா இந்த வாழ்க்கைய நீ விரும்பி வாழ ஆரம்பிப்ப. எதுவா இருந்தாலும் சொல்லுமா நாங்க செய்றோம்.” என்றார் தயாளன்.

“இந்த வாழ்க்கைய விட்டு என்னை அனுப்பிடுங்க. அது ஒன்னு தான் நீங்க எனக்கு செய்ற பெரிய உதவி.”

“என் வீட்டு மருமகளை என்னால எங்கயும் அனுப்ப முடியாது. கடைசி வரைக்கும் நீ இந்த வீட்ல தான் வாழ போற.” என்ற மாமியாரின் பேச்சு இன்னும் அவளின் கோபத்தை தூண்டி பார்த்தது.

இருவரும் விடாமல் வாக்குவாதங்கள் செய்து கொண்டிருக்க, மனைவியை அடக்கினார் தயாளன். தன்னுடைய வாழ்க்கையை பணயம் வைத்து மகனின் வாழ்வை நலமாக்க நினைக்கும் ஆதிலட்சுமி மீது வெறுப்பு தோன்றியது. அதை மறைக்காமல் வார்த்தைகளால் கொட்டினாள்.

“உனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல இங்கே இருந்து போய் ஆகணும் அதான!. நான் உனக்கு ஒரு கண்டிஷன் போடுறேன் அதை நீ செஞ்சு முடிச்சிட்டா நானே என் மகன் கிட்ட இருந்து உனக்கு விவாகரத்து வாங்கி தரேன்.” என்றதும் கோபத்தோடு பேசிக் கொண்டிருந்தவள் தன் பேச்சை நிறுத்தினாள்.

“ஆதி என்ன பேசுற?” என்ற கணவருக்கு புன்னகையை பரிசாக கொடுத்தவர், “என் மருமக சவால்ல ஜெயிச்சுட்டா தோல்வியோட அவ ஆசைப்படுறதை செஞ்சு கொடுக்குறன்னு சொல்றங்க.” என்றதும் யோசனையோடு அகல்யாவின் பார்வை அவரிடம் நின்றது.

சந்தேகம் மாறாத கண்ணோடு, “என்ன கண்டிஷன்?” என கேட்டாள்.

“என் மகனை திரும்பி பழைய மாதிரி என் கையில நீ கொடுத்தா அந்த நிமிஷம் நீ இந்த வீட்டை விட்டு போகலாம். அதுக்கப்புறம் நானும் என் மகனும் எந்த விதத்துலையும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டோம். நீ ஆசைப்பட்ட மாதிரி விவாகரத்து உன்னை தேடி வரும். அது மட்டும் இல்ல என்ன கேட்டாலும் செய்ய நான் தயார்.” என்றவர் பேச்சில் விவரிக்க முடியாத அளவிற்கு மிடுக்கான தோரணை.

பதில் சொல்லாமல் சந்தேகப் பார்வையை இன்னும் அதிகமாக்கினாள் அவர் மீது. மனைவியின் பேச்சில் தயாளன் தான் பதறினார். கணவனை கண்களால் பொறுமை காக்கும்படி கூறியவர்,

“எதுக்காக இவ்ளோ யோசிக்கிற அகல்? என் பையன் கூட வாழணும்னு ஆசைப்படுறியா?” என்றிட, சந்தேகம் மறைந்து முறைப்பு தொற்றிக் கொண்டது அவள் முகத்தில்.

“போட்டியில தோத்துட்டேன் அத்தை. உங்க மகன் கூட வாழணும்னு ஆசைப்படுறேன்னு நீ சொன்னாலும் எனக்கு சந்தோசம் தான்.” என்று அவளை இன்னும் வெறுப்பேற்றினார்.

“உங்க வார்த்தை கனவுல கூட பலிக்காது. நீங்க சொல்றது உண்மையா பொய்யான்னு யோசிச்சிட்டு இருந்தேன்.”

அனுபவசாலியாக புன்னகைத்தவர், “என் மகன் மேல சத்தியமா நான் சொல்ற வார்த்தை உண்மை. என்னைக்கு என் மகனை நான் மனசார என் மகனா பார்க்குறனோ அப்போ இந்த வீட்டை விட்டு நானே உன்னை அனுப்பி வைப்பேன்.”

“பேச்சு மாறக்கூடாது”

“நினைச்சதை அப்படியே செஞ்சு தான் எனக்கு பழக்கம். உனக்கு அது நல்லாவே தெரியுமே மாமியாராவும் கம்பெனி முதலாளியாவும்.”

“சரி! உங்க மகனை முன்ன மாதிரி நான் மாத்தி காட்றேன். நீங்க கொடுத்த வார்த்தைய காப்பாத்த பாருங்க.” என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

மருமகள் சென்றதும் தயாளன் மனைவியை திட்ட, “எனக்கு என் மருமகள் மேல முழு நம்பிக்கை இருக்கு. ரெண்டாவது திருமணத்தை தவிர என் மகனை அவ வெறுக்க எந்த ஒரு காரணமும் இருக்காது. அவனோட மனசு புரிஞ்ச அடுத்த நிமிஷம் அவளையும் அறியாம வாழ ஆரம்பிச்சிடுவா. இப்போதைக்கு இவ தரணி கிட்ட பேசுறது தான் ரொம்ப முக்கியம். அதுக்காக தான் சவால் விட்டு அனுப்பி இருக்கேன்.” என்று சமாதானப்படுத்தியவருக்கு தெரியாது பின்னாளில் தானே தன் மருமகளை வீட்டை விட்டு அனுப்பப் போகிறோம் என்று.

***

அறைக்கு வந்தவள் நினைவுகள் ஆதிலட்சுமி வார்த்தைகளை வட்டமிட்டது. அவரை நம்பலாமா வேண்டாமா என்ற நிலையில் இருந்தவள் சொன்னதை செய்துவிட்டு உரிமையாக கிளம்பலாம் என்று முடிவெடுத்தாள்.

அதற்கான வழியைத் தேடிக் கொள்ள தயாளனிடம் மீதி கதையைக் கேட்க முடிவெடுத்தாள். தரணீஸ்வரன் மெல்ல அசைவது போல் தெரிய, எழுந்து நின்றாள். தலைவலி பெருமளவு அச்சுறுத்தியது அவனை. நேற்று முதல் சாப்பிடாதது வேறு அவனை பலவீனமாக்க, எழுந்ததும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் தரையில்.

அவன் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் இவனை திருத்த முடியுமா என்ற யோசனையில் இருக்க, தட்டு தடுமாறி குளியலறை சென்றான். கண்ணாடியில் முகம் பார்த்தவன் காயம் இருப்பது அறிந்து கோபமாக வெளியில் வந்தான்.

“நேத்து ராத்திரியும் என் அடிச்சியா? இன்னொரு தடவை என் மேல கைய வச்ச பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்.” என்று கத்திவிட்டு மீண்டும் குளியலறை கதவை அடைத்துக் கொண்டான்.

எதற்காக பேசிவிட்டு சென்றான் என்பதை தாமதமாக உணர்ந்தவள் அவன் வரும்வரை காத்துக் கொண்டிருந்தாள். முடிந்த அளவு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவன் அவளை பார்த்த முறைக்க,

“உங்கள நான் அடிக்கணும்னு அவசியம் இல்லை. அந்த வேலைய நீங்களே நல்லா பண்றீங்க. இன்னைக்கு ராத்திரியாது முடிஞ்சா கொஞ்சம் நிதானமா வர பாருங்க அப்போ தான் என்ன நடக்குதுன்னு புரியும்.” என்றவள் வெளியேற செல்ல… கிழித்துப் போட்ட புகைப்படம் கண்ணில் விழுந்தது.

“நேத்து ராத்திரி பேசுனது உங்களுக்கு நிச்சயம் ஞாபகம் இருக்காதுன்னு தெரியும். அதனால தெளிவா இருக்கும் போது சொல்றேன் கேட்டுக்கோங்க. இந்த வீட்ல இனிமே உங்க எக்ஸ் ஒய்ஃப் ஞாபகங்கள் ஒன்னு கூட என் கண்ணுல படக்கூடாது. பட்டா உங்கள ஒன்னும் பண்ண மாட்டேன் எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச உங்க அம்மாவ போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வைக்க வேண்டியதா இருக்கும்.” அவள் வார்த்தையில் பெருமூச்சு விட்டவன் பார்வையை தொடர்ந்தான் செல்பவளின் உருவம் மறையும் வரை.

***

மகனைப் பார்க்க முடிவெடுத்தார் ஆதிலட்சுமி. அவனோ அவரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அறைக்குள் முடங்கி இருந்தான்.   மருமகள் மூலம் அவன் எழுந்து விட்டான் என்ற செய்தியை கேட்டவர் நேற்று நடந்த அனைத்தையும் மறந்து,

“தரணி நேத்து மதியத்துல இருந்து சாப்பிடாம இருக்க. இப்படியே இருந்தா திரும்பவும் ஹாஸ்பிடல் போக வேண்டியது தான். வந்து சாப்பிடு.” என்று அழைத்தார் எதுவும் நடக்காது போல்.

அவன் அவர் முகத்தை பார்ப்பதை தவிர்க்க, “இப்ப தல குனிஞ்சு நின்னு எதுவும் ஆகப்போறது இல்ல. உன்னால வீட்டுக்கு வந்த பொண்ணு முன்னாடி நாங்க தான் தல குனிஞ்சு நிற்கிறோம்.” என்றதும் முகத்தை நோக்கினான் மகன்.

“இதுக்கு மேல நாங்க சொல்ல எதுவும் இல்ல தரணி. நீயாச்சு உன்ன நம்பி வந்த பொண்ணாச்சு. கொஞ்ச காலம் இரண்டு பேரையும் பார்ப்போம். ஒத்து வந்தா கடைசி காலம் உங்க கண்ணு முன்னாடி. இல்லனா கண் காணாத திசைக்கு கிளம்பிடுவோம்.”

“சாரி மாம்!” என அவரை நெருங்க, “அம்மா கிட்ட சாரி சொல்லணும்னு அவசியம் இல்ல தரணி. நீ நல்லா வாழ்றது தான் எங்களுக்கு கொடுக்கிற மிகப்பெரிய சந்தோஷம். முடிஞ்சா அதை கொடுக்க பாரு.” என்றவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அறைக்குள் நுழைந்தாள் அகல்யா.

மாமியாரை கண்டுகொள்ளாதவள் ஒரு ஓரத்தில் அமர, மருமகளை பார்த்த பின், “தரணி அம்மா மேல சத்தியமா ஒன்னு கேட்பேன் பதில் சொல்லுவியா?” என்றார்.

வார்த்தையில் தம்பதிகள் இருவரும் அவரை நோக்க, “இன்னமும் உன் மனசுல சிவானி மனைவி ஸ்தானத்துல தான் இருக்காளா?” என்றவரின் பார்வை மருமகள் மீதுதான் அதிகமாக நகர்ந்தது.

இவ்வார்த்தையை நேரடியாக மகனிடம் கேட்பார் என்று அகல்யா எதிர்பார்க்கவில்லை. அவனும் இப்படி ஒரு கேள்வி வரும் என்று நினைக்கவில்லை. இருவரையும் திகைப்போடு கட்டிப் போட்டவர் பதிலை எதிர்பார்க்க,

“அவளை என்னைக்கும் என்னால மறக்க முடியாது அம்மா.” என்றான் தரணீஸ்வரன்.

கணவனின் வார்த்தையில் நக்கல் சிரிப்பு பாய்ந்தது மாமியாரிடம். அவரோ எந்த முகபாவத்தையும் பிரதிபலிக்காமல், “ரொம்ப சந்தோஷம் தரணி.” என்று நகர்ந்தார்.

“அவ கொடுத்த வலி அந்த மாதிரி. சாகுற வரைக்கும் என்னை விடாம துரத்திட்டு இருப்பா. ஆனா நீங்க கேட்ட மாதிரி மனைவியா இல்ல. என்னை ஏமாத்திட்டு போனவளா. என் விருப்பம் இல்லாம ஒருத்தி கழுத்துல தாலி கட்டி இருந்தாலும் இப்போ அவ என்னோட மனைவி. அந்த இடத்துல இன்னொரு பொண்ண வைச்சு அவளை அசிங்கப்படுத்த மாட்டேன்.” என்றதும் வெளியில் சென்றவர் அப்படியே நின்று விட்டார்.

அவர் மட்டும் அல்ல அமர்ந்துக் கொண்டிருந்த அகல்யாவும் எழுந்து விட்டாள் அவன் பதிலில். ஆனால் அவனோ எதார்த்தமாக  அவ்விருவரையும் கடந்து வெளியில் சென்றான். திரும்பிய  மாமியார் மருமகளை பெருமை பொங்க பார்க்க, முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள் வேறு புறம்.

***

சாப்பிட்டு முடித்த தரணீஸ்வரன் தன் அறையில் முடங்கிக் கொள்ள, மகனை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார் மருத்துவமனைக்கு. நேற்று ஏற்பட்ட காயத்திற்கு மருந்து கொடுத்து மதுவை தொடக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுப்பி வைத்தார்கள்.

வீட்டிற்கு வந்த ஆதிலட்சுமி மருமகளிடம் அதை பகிர, அவள் மாமனாரிடம் பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவரோ கைக்கு சிக்காமல் அலுவலகம் பறந்து விட்டார். ஆடவனின் மீதி கதையைக் கேட்க இப்பொழுது அதிகமாக ஆர்வம் பொங்கியது அவளுக்கு.

ஒன்று நன்றாக சென்று கொண்டிருந்த கதை பயணம் பாதையில் நின்ற கடுப்பு. மற்றொன்று மாமியார் போட்ட சவாலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவனின் தோல்வியை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டிற்கும் பதில் மாமனாரிடம் இருப்பதால் அவரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாள்.

மாலை வேலை வரை தாக்குப்பிடித்த தரணீஷ்வரன் கைகள் நடுங்க ஆரம்பித்தது. மனமும் உடலும் மதுவை கேட்டு அடம் பிடித்தது. அன்னையின் கண்ணீருக்காக இன்று ஒரு நாளாவது குடிக்காமல் இருக்கலாம் என்றவன் எண்ணம் நொடி கடக்க… கடக்க வீரியம் கொண்டு எழுந்து நின்றது. தன்னை அறியாமல் அவனுக்குள் கோபம் உருவாகியது.

கட்டுப்படுத்த நினைத்தவன் குளியலறை சென்று நான்கு முறை குளித்து விட்டான். பத்து நிமிடங்களுக்கு மேல் சென்றதும் உடல் சூடு மதுவை கேட்டு கெஞ்சியது. வேண்டாம் என்று உறுதியாக இருந்தவன் உள்ளம் கொஞ்சம் வேண்டும் என்று இறங்கி வந்தது. கூடவே அன்னையின் முகமும் சேர்ந்து வர, செய்வதறியாது கத்த ஆரம்பித்தான்.

அவனின் சத்தத்தில் வேகமாக ஓடி வந்தார்கள் பெண்கள். இருவரையும் பார்த்த பின் கொஞ்சம் நிதானம் கொண்டவன் எதுவும் நடக்காது போல் நடை பழகிக் கொண்டிருந்தான் அறைக்குள். ஆதிலட்சுமி மருமகளை ஒரு பார்வை பார்த்து விட்டு நகர, அந்தப் பார்வை புரிந்ததோ என்னவோ அவள் அங்கேயே அமர்ந்திருந்தாள்.

அன்னை இருக்கும் வரை பொறுமை காத்தவன் கைகள் வேகமாக நடுங்க ஆரம்பித்தது. தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சுவற்றில் நான்கைந்து முறை முட்டிக்கொண்டான். அதை கவனித்தவள் தடுக்க செல்ல, தன் இயலாமை மொத்தத்தையும் அவளிடம் காட்டினான் வேகமாக பிடித்து தள்ளி. விழுந்த வேகத்தில் கைமுட்டியில் லேசாக வீக்கம் ஏற்பட்டது அகல்யாவிற்கு.

வலியோடு எழுந்தமர்ந்தவள் அவனை பயத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அறையின் மூலையில் அமர்ந்தவன் கை கால்களை கட்டிக்கொண்டு என்னவோ உளறிக் கொண்டிருந்தான். பயம் அதிகமாக அவளுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது. அருகில் சென்று தொட,

“ஏய்ய்ய்! கிட்ட வராத. நான் இப்போ குடிக்கணும். இல்லன்னா செத்துடுவேன். குடிக்கணும்…. குடிக்கணும்…” என்று ஆக்ரோஷமாக கத்த ஆரம்பித்தான்.

பயந்து இரு அடி தள்ளி அமர்ந்தாள் அகல்யா. மகனின் குரல் கண்ணீரை கொடுத்தாலும் பூஜையறையில் அமர்ந்திருந்தார் ஆதிலட்சுமி. நொடி முள் கடப்பது போல் அவனின் நிலமையும் தீவிரமானது. தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தன்னைத்தானே தாக்கிக் கொள்ள ஆரம்பித்தான். தடுக்க அவள் சென்றாலும் அவளையும் அடிக்க ஆரம்பித்தான்.

என்ன செய்வதென்று தெரியவில்லை அவளுக்கு. அறையில் இருக்கும் பொருட்களை போட்டு உடைத்தவன் தண்ணீரை எடுத்து வேகமாக குடித்தான். எச்சில் விழுங்கிக் கொண்டு அவனை நெருங்கியவள், “இப்போ உங்களுக்கு என்ன வேணும்.” என்றாள் பயந்து கொண்டு.

“குடிக்கணும்” என்றதும் பலம் இல்லாமல் தரையில் கால் மடக்கி அமர்ந்தான்.

“குடிக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. ஒரு ரெண்டு நாள் கொஞ்சம் கண்ட்ரோலா இருங்க.”

குடிக்கக்கூடாது என்ற வார்த்தையை கூட கேட்க தயாராக இல்லை அவன் மனம். பேய் பிடித்தவன் போல் வேகமாக அவளை நோக்கி தவழ்ந்து நெருங்கியவன்,

“எனக்கு குடிக்கணும். இல்லன்னா என்னை நானே குத்திட்டு செத்துடுவேன். குடிக்காம என்னால இருக்க முடியாது. இப்பவே நான் குடிச்சு ஆகணும். ப்ளீஸ்! எனக்கு கொஞ்சம் குடிக்க கொடு.” என்று கை வணங்கினான்.

இதுவரை இப்படி ஒரு நிலையில் அவனை பார்க்காததால் திகைத்தாள். “இ…இல்ல.. இப்ப நீங்க குடிச்சா இன்னும் மோசமா  நடந்துப்பீங்க. ரெண்டு நாளைக்கு எதையும் தொடக்கூடாது.” என்றவளை அடிக்க சென்றவன் முழுமையாக தன் செயலை செய்யாமல் நிறுத்தினான்.

அடிக்க வருவதை அறிந்தவள் முகத்தை மூடிக்கொண்டாள். அடி விழாமல் இருப்பதால் விழி திறந்தவள் அவனைப் பார்க்க, தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டான். அவள் பயந்து பின்னால் நகர,

“சொன்னா கேளு என்னால குடிக்காம இருக்க முடியாது. எனக்கு வெறி பிடிக்கிற மாதிரி இருக்கு. என்னயவே நான் ஏதாச்சும் பண்ணிட்டு சாகறதுக்குள்ள என்னை காப்பாத்து.” என்று ஆக்ரோஷத்தில் கத்த ஆரம்பித்தவன் தன் ஆடையை கிழித்துக்கொள்ள ஆரம்பித்தான்.

அவள் தடுப்பதையும் மீறி அடித்து அடித்து தன்னை காயப்படுத்திக் கொண்டவன் தலையில் ஒட்டி இருந்த பேண்டேஜை பிய்த்து எறிந்தான். வேகமாக உருவியதில் லேசாக அங்கு ரத்தம் வர, தரையில் படுத்தவன் தன் தலையை முட்டிக் கொள்ள ஆரம்பித்தான்.

“நான் குடிக்கணும் யாராது எனக்கு குடிக்க கொடுங்க. ப்ளீஸ்….! கொஞ்சமாது கொடுங்க. நான் குடிக்கணும்… இப்பவே குடிக்கணும்.” சுத்தியல் கொண்டு அடிப்பது போல் பெரும் சத்தம் கேட்டது அவளுக்கு.

இவை இன்னும் சில முறை தொடர்ந்தால் நிச்சயம் பெரும் ரத்தத்தை இந்த அறை பார்க்கும் என்று உணர்ந்தவள் வேகமாக தன் மடியில் தாங்கிக் கொண்டாள் அவன் தலையை.  அதில் அவனின் ஆத்திரம் அதிகமாக மனைவியின் மடி மீது படுத்தவாறு முட்டினான். கால் இரண்டும் வலியில் துடித்தது.

இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், “தரணி உங்கள நான் குடிக்க அனுப்பி வைக்கிறேன் கொஞ்ச நேரம் அமைதியா படுங்க.”

….

“இந்த மாதிரி பண்ணிட்டு இருந்தா அத்தை உங்கள குடிக்க அனுப்ப மாட்டாங்க.”

….

“அவங்க இல்லாத நேரம் பார்த்து நான் உங்களை அனுப்பி வைக்கிறேன். என்னை நம்பி கொஞ்ச நேரம் அமைதியா படுங்க.” பல மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு மெல்ல செவி சாய்க்க ஆரம்பித்தான் அவளுக்கு.

ஆத்திரம் குறைந்து மிதமான செயலில் தன்னை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தான் தரணீஸ்வரன். அதையும் கட்டுப்படுத்த முயன்றவள், “நீங்க அமைதியா இருந்தா தான்  நான் அனுப்பி வைப்பேன்.” அவன் நம்புவது போன்று பேச்சை வளர்த்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் அடைந்தவன் அவள் மடிமீது கண்மூட, நிம்மதி பெருமூச்சு விட்டாள் அகல்யா. அந்த நிலை ஒரு இருபது நிமிடம் சென்றிருக்கும்,

“நான் குடிக்கணும் அகல் எப்படியாது என்னை அனுப்பி வை. அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாங்க. அவங்களுக்கு தெரியாம என்னை எப்படியாது இங்க இருந்து அனுப்பு. குடிக்கலன்னா என்னால இருக்க முடியாது.” என்றவன் தலையில்  அடித்துக் கொண்டு,

“இங்க தேவையில்லாம ஏதாச்சும் ஓடிக்கிட்டே இருக்கும். என்னால அதை சமாளிக்க முடியாது அகல். உன்ன கெஞ்சி கேட்கிறேன் இந்த ஒரு தடவை மட்டும் அனுப்பு.” என்று அழ ஆரம்பித்து விட்டான்.

நயமாக பேசி ஒவ்வொரு முறையும் அவனை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். மாலை வேளை சென்று இரவு வேளையும் வந்து விட்டது வீட்டில். இருட்டில் அமர்ந்திருந்தாள் மடியில் கணவனை தாங்கிக் கொண்டு. கருமை நிழலில் முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் இப்பொழுது அவள் கைகள் தட்டிக் கொடுக்க துவங்கியிருந்தது அவனை.

விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தவன் மனம் மீண்டும் உச்சிக்கொம்பில் ஏறி அமர்ந்து விட, அவளைப் பிடித்து தள்ளிவிட்டவன் கத்த ஆரம்பித்தான். இரவு விளக்கை போட முயன்றாள். அதற்கு கூட நேரம் கொடுக்காதவன் மெத்தையில் இருக்கும் துணிகளை கிழிக்க ஆரம்பித்தான்.

“அறிவில்லையா உனக்கு? எத்தனை தடவை சமாதானப்படுத்துறது. உன்ன கூட உன்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியலன்னா எதுக்காக உயிரோட இருக்க. கேவலம் ஒன்னும் இல்லாத ஒரு போதைக்கு இப்படி நடந்துக்குறியே அசிங்கமா இல்ல உனக்கு. பெத்தவங்களை கஷ்டப்படுத்தி உன்னையும் கஷ்டப்படுத்தி இப்படி வாழ்றதுக்கு செத்துப்போலாம்.” என்று கோபத்தில் கத்தி விட்டாள் அவனிடம்.

தரணீஸ்வரன் அப்படியே நின்றான். இருட்டில் அதை கண்டு கொண்டவள் இனி தொந்தரவு செய்ய மாட்டான் என்று நம்பி விளக்கை போட்டாள். வெளிச்சத்தில் அவன் முகம் பார்க்கலாம் என்று திரும்பியவள் அதிர்ந்தாள் பால்கனி கம்பியில் ஏற முயல்வதை பார்த்து.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
32
+1
53
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்