Loading

திமிர் 6

 

“என்னப்பா, தீவிர யோசனையில இருக்கமாதிரி இருக்கு.”

 

“ஆமாடா!”

 

“அவனைப் பத்தியா?”

 

“இப்போதைக்கு அவனைத் தவிர வேற யாரு இருக்கா… மண்ட மேல ஏறி உட்கார்ந்து ரொம்பக் குடைச்சல் கொடுக்கிறான்.”

 

“அவனைத்தான் நேரம் பார்த்து அடிக்கலாம்னு பேசி வச்சிருக்கோமே அப்புறம் என்ன?”

 

“அந்தச் சமயத்துக்கு முன்னாடியே, அவன் நம்ம வாழ்க்கையை முடிச்சிடுவான் போல கிஷோர்.”

 

“என்னப்பா சொல்றீங்க?” என்ற கிஷோரின் முகத்தில் பல குழப்ப ரேகைகள்.

 

“நேத்து மது அவன்கூடப் போறதை என் கண்ணால பார்த்தேன். ராத்திரி முழுக்க அவன்கூட தான் இருந்துட்டு வந்திருக்கா. அப்படி ஒன்னு நடக்காத மாதிரி என்கிட்டப் பேசுறாடா… அடிச்சிருப்பான் போல, கன்னம் கொஞ்சம் சிவந்து இருந்துச்சு.”

 

“எது, அடிச்சானா? என்ன தைரியம் இருக்கும் அந்த நாய்க்கு.”

 

“பார்க்க அப்படித்தான் தெரியுது.”

 

“என்னப்பா, இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டு இருக்கீங்க. மதுவை எதுக்கு அவன்கூட அனுப்பி வச்சீங்க. அப்பவே போக வேண்டாம்னு தடுத்திருக்க வேண்டியதுதான. நைட் ஃபுல்லா அவன்கூட இருந்தான்னு சாதாரணமா சொல்றீங்க.”

 

“இந்த ஹாஸ்பிடல் விஷயமா தான் அவன்கூடப் போறான்னு அமைதியா இருந்தேன். ஆனா, மதுவோட நடவடிக்கை ரொம்ப வித்தியாசமா இருக்கு. சரியா என்னன்னு யூகிக்க முடியல. அவனுக்கு உன் அக்கா பயப்படுறான்னு மட்டும் புரியுது.”

 

“அதை நானும் கவனிச்சேன். என்னோட யூகம் சரின்னா அவனுக்கும், மதுவுக்கும் நடுவுல பிரிக்க முடியாத பந்தம் உருவாகப் போகுது.”

 

“நோ கிஷோர்! இந்த வார்த்தையக் கேட்கக் கூட என்னால முடியாது. அவன் இந்த வீட்டு மாப்பிள்ளையா… ச்சீ! தயவு செஞ்சு இன்னொரு தடவை இந்த மாதிரிச் சொல்லாத.”

 

“மதுவே அவனுக்கு அடங்கிப் போகும் போது நம்மளால என்ன பண்ண முடியும்? அதுவுமில்லாம, இப்ப இந்த ஹாஸ்பிடலும் அவன் கட்டுப்பாட்டுல இருக்கு. போதாக்குறைக்கு மினிஸ்டர் பையன் வேற. சின்னச் சொடக்கு போட்டா எல்லா அதிகாரமும் சலாம் போடும்.”

 

“அந்த அகம்பன் திவஜ் எவ்ளோ பெரிய இவனா இருந்தாலும், மதுவை நெருங்கக் கூடாது. அதுக்கு உடனடியா ஏதாச்சும் பண்ணி ஆகணும்.”

 

தந்தை சொல்லிய அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு, தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தான் கிஷோர். எந்த வழியும் கிடைக்காமல் எரிச்சலோடு அமர்ந்திருந்தார் முரளி. இருவரையும் பார்க்க வந்திருந்தாள் மதுணிகா.

 

“வலி பரவாயில்லையா கிஷோர்?”

 

“நேத்து நைட்டு அவன் கூட தான் இருந்தியா?”

 

“இல்ல!”

 

“பொய் சொல்லாத மது. அப்பா மாதிரிப் பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன். இன்னொரு தடவை அவன் கூட இருந்தன்னு கேள்விப்பட்டேன், அவ்ளோதான்.”

 

“நீயும் தப்பா புரிஞ்சுகிட்டுப் பேசுறடா. நேத்து அகம்பன் கூடப் போனது உண்மைதான். பட், நைட் முழுக்க அவன்கூட இல்லை.” என வாய் கூசாமல் பொய் சொல்லும் அக்காவை,

 

“அப்போ ஏன் உன் கன்னம் சிவந்திருக்கு?” சாமர்த்தியமாக மடக்கினான்.

 

“அது..அது வந்து…”

 

“வேணாம் மது, என்னைக் கோபப்படுத்திப் பார்க்காத. அந்தப் பரதேசி கூட நைட் முழுக்க உனக்கு என்ன வேலை? நினைக்கவே அசிங்கமா இருக்கு எனக்கு. உனக்கு அந்த அருவருப்புக் கொஞ்சம் கூட இல்லையா? நீ இந்த ஹாஸ்பிடலை அவன்கிட்ட இருந்து வாங்க வேணாம், நம்ம குடும்ப மானத்தை வாங்காம இருந்தால் போதும்.”

 

“சாரிப்பா…”

 

முதல்முறையாகத் தன் முன் தலை குனிந்து நிற்கும் மகளைப் பார்த்தவருக்குப் பல எண்ணங்கள். குனிந்த தலை நிமிராது நின்றிருந்தவள் முன் நின்றவர், அனுசரணையாகத் தலை வருடினார். கண் கலங்க அவரை ஏறிட்டவள், “உங்ககிட்டப் பொய் சொன்னதுக்கு சாரிப்பா.” எனக் கட்டிக் கொண்டாள்.

 

“எதுக்குடா அழற?”

 

“இதுவரைக்கும் உங்ககிட்ட நான் எதையுமே மறைச்சது இல்லை. இப்போ மறைக்க வேண்டிய சூழ்நிலை. மனசு முழுக்கக் குற்ற உணர்ச்சியோட தான் பொய் சொன்னேன்.”

 

மகளைத் தன்னிடமிருந்து பிரித்தவர் வழிந்த கண்ணீரைத் துடைத்து, “எனக்குத் தெரியும் மது. என் பொண்ணப் பத்தி எனக்குத் தெரியாதா? என் கோபம் எல்லாம் எதுக்காக மறைக்கிறன்னு மட்டும் தான். அப்பா அந்த அளவுக்கு அந்நியமா உனக்கு? உனக்கும், எனக்கும் நடுவுல எந்த ஒளிவு மறைவும் இல்லன்னு பல தடவை இவன்கிட்டப் பெருமையா சொல்லி இருக்கேன். இப்ப இவன்கிட்டயே வந்து என் பொண்ணு என்கிட்ட பொய் சொல்றான்னு சொல்ல வச்சிட்டியே. அவன் உன்ன எதைச் சொல்லி மிரட்டுறான்னு மட்டும் சொல்லு, மீதிய அப்பா பார்த்துக்கிறேன்.” என்றார்.

 

மதுணிகா மௌனத்தைக் கடைப்பிடிக்க, “சரிடா அழாத. உனக்கு எப்போ அப்பாகிட்டச் சொல்லனும்னு தோணுதோ, அப்போ சொல்லு. நீ இந்த அப்பா மனசைப் புரிஞ்சுக்கலனாலும், அப்பா உன் மனசைப் புரிஞ்சுகிட்டேன். எனக்கு இந்த ஹாஸ்பிடல் வேணும்னு நினைக்கிறது உண்மைதான். அதுக்காக உன்னை இழக்க மாட்டேன்.” என ஆழ்ந்த பாசத்தில் பேசிக் கொண்டிருந்தவர் கதவுப் பக்கம் பார்வையைத் திருப்பினார்.

 

விசில் சத்தம் காதைப் பிளந்தது. லேசாகத் திறந்திருந்த கதவை ஷூவால் மறைந்திருந்த தன் வலது காலால் தடுத்துப் பிடித்து, இடது புறமாகச் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான். எப்போதும் போல் அந்த ஆளுமையான கண்ணைக் கருப்பு நிறக் கண்ணாடி அம்சமாக மறைத்திருக்க, இடது ஆள்காட்டி விரலும், பெருவிரலும் கீழ் உதட்டோடு பொருத்தி விசில் சத்தத்தைப் பறக்க விட்டது.

 

“வாவ்! வாவ்! அடடடே… அப்பப்பா! என்ன ஒரு கண் கொள்ளாக் காட்சி… இப்படி ஒரு தந்தை மகள் பாசத்தைப் பார்க்க, என் கண்ணு எப்போ என்ன புண்ணியம் பண்ணிச்சோ…” என்றவன் மீதுதான் மூவரின் கண்களும்.

 

“ஏண்டா கமல்?”

 

“சார்…”

 

“இதுக்கு முன்னாடி இந்த மாதிரி சீனை நீ எங்கயாச்சும் பார்த்திருக்கியா?”

 

மதுவைப் பார்த்துக் கொண்டே, “இ…இல்லயே சார்.” என்றிட, “அப்ப முன்னாடி வந்து நல்லாப் பாருடா லூசுப் பயலே” எனப் பின்னால் இருந்தவனைப் பிடித்து முன்னுக்குத் தள்ளிவிட்டான்.

 

“என்னடா கிண்டலா?”

 

“அய்யய்யோ! ஃபாதர் சார் சத்தியமா இல்ல. இந்தப் பையன் இதுக்கு முன்னாடி இந்த மாதிரி சீனை எல்லாம் பார்த்ததில்லயாம். அதான், பார்த்துக்கடா பன்னாடன்னு பத்திரமா தள்ளி விட்டேன்.”

 

அகம்பன் பேச்சைக் கேட்ட முரளி, நாசித் துவாரம் வழியாகப் பலத்த மூச்சை இழுத்து விட, “ஃபாதர் சார் எதுக்கு அப்படிப் பார்க்குறீங்க? என் வார்த்தையில நம்பிக்கை இல்லையா?” என ஒரு அடி முன் வந்து திறந்திருந்த கதவைப் பின்னங்காலால் எட்டி உதைத்து மூடினான்.

 

“நீ எதுக்குடா இங்க வந்த?”

 

“அச்சோ பிரதர் சார், உங்களை மறந்துட்டனே. என்னதான் ஃபாதர் சார் அளவுக்கு பெர்ஃபார்மன்ஸ் பண்ணலனாலும், உங்க கண்ணுலயே அந்த ஃபயர் தெரியுது.”

 

“இவன் நம்மளை வெறுப்பேத்த வந்திருக்கான்.”

 

“சத்தியமா இல்ல பிரதர் சார்.” என்பதை அங்கிருந்த எவரும் நம்பவில்லை.

 

“இவன் மேல சத்தியமா!” எனக் கமல் தலையில் கையை வைக்க, ‘அடப்பாவி!’ என்ற ரியாக்ஷன் தூக்கலாக இருந்தது அவன் முகத்தில்.

 

“ப்ளீஸ் அகா, பிரச்சினை பண்ணாமல் கிளம்பு.”

 

சிரித்த முகமாக அடி மீது அடி வைத்து அவளை நெருங்கியவன், “என்ன ஃபாதர் சார் உங்க டவுட்டு? உங்க ஆருயிர் பொண்ணு ராத்திரியெல்லாம் எங்க இருந்தான்னு தான…” கேட்டுக்கொண்டு அவள் தோள் மீது கை போட்டான்.

 

மதுணிகா தட்டிவிட, மீண்டும் போட்டான். தந்தையைப் பார்த்தவள் கோபம் துளிரக் கையை எடுத்து விட, அழுத்தமாகக் கை போட்டு அவளைத் தன்னோடு இழுத்துக் கொண்டு, “உன் அப்பா முன்னாடி சீன் போடுறியா? அவன் கண்ணு முன்னாடியே கையக் கால உடைச்சுக் குண்டு கட்டா தூக்கிட்டுப் போவேன். பேசாம மூடிட்டு நில்லுடி.” என மிரட்டியவன் மீது கை வைத்தார் முரளி.

 

“பிளடி ராஸ்கல்!” முரளியின் சட்டைக் காலரைப் பிடித்தான் கமல்.

 

இதழுக்கு நோகாமல் புன்முறுவல் புரிந்தவன், “ரிலாக்ஸ் கமல்!” என அவன் தோளைத் தட்டி ஆசுவாசப்படுத்தி விட்டு, “எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் என் மேல இருக்க கைய எடுத்துடு. இவன் பிஏ மட்டும்னு தப்புக் கணக்குப் போட்டுடாத. என் கூடவே இருக்க நிழல். நிஜத்துக்கு ஒண்ணுன்னா நிழல் ருத்ர தாண்டவம் ஆடிடும்.” பகிரங்கமாக மிரட்டல் விடுத்தவனை வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்தான் கிஷோர்.

 

வீம்பாக அவன் மீது வைத்த கையை முரளி எடுக்காமல் இருக்க, முதலாளியையும் தாண்டி அவர் கையைப் பிடித்து வளைத்த கமல், பொசுக்கென்று தள்ளி விட்டான். அடிபட்டுப் படுத்திருந்த மகன் மீது குப்புற விழுந்தார்.

 

“கமல்!”

 

“சாரி மேடம். எனக்கு என்னோட சார் தான் முக்கியம். என்னை நம்பித்தான் வேற எந்தப் பாதுகாப்பும் இல்லாம அவரை அனுப்பி வச்சிருக்காங்க. என் உயிரே போனாலும் அவரைக் காப்பாத்துறது தான் என்னோட முதல் கடமை.”

 

எட்டு ஆண்டுகளாகத் தெரியும் கமலை. ஏற்கெனவே வேலை செய்து கொண்டிருந்த ராமின் மூத்த மகன். நவரத்தினத்தோடு ஒருமுறை தொழில் விஷயமாக வெளியூர் சென்றவரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது நவரத்தினம் எதிர்க்கட்சியில் முக்கியப் பதவி வகித்திருந்தார். அந்தச் சமயம் நடந்த கோரச் சம்பவத்தில், அவரைக் காப்பாற்ற உயிரைத் தியாகம் செய்தார் ராம். அவர் தியாகத்திற்காக, அவர் குடும்பத்தை இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கிறான் அகம்பன் திவஜ். கமல் விரும்பியே அகம்பனோடு பணிபுரியக் கேட்க, இன்று வரை இவர்களின் பந்தம் தொடர்கிறது.

 

தம்பியானவன் வார்த்தையில் உள்ளம் மகிழ்ந்தவன், “உன் பொண்ணு, ராத்திரி எல்லாம் என் கூட ஒரே பெட்ல தான் இருந்தா… இந்த விளக்கம் போதுமா, இல்ல இன்னும் டீப்பா வேணுமான்னு சொல்லு.” என்றதும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டவளின் மொத்த உடலும், அளவில்லாத அருவருப்பிற்கு ஆளானது.

 

நடுங்கும் உடல் கொண்டு அதை அறிந்தவன், பிடித்திருந்த கையில் இறுக்கத்தைக் கூட்ட, உடல் கூசியது அந்தத் தழுவலில். கண்ணில் இருந்து தானாகக் கண்ணீர் வடிந்தது.

 

“நேத்து நைட்டு மட்டும் இல்ல, நான் எப்பக் கூப்பிட்டாலும் உன் பொண்ணு வருவா…” என்ற அகம்பனின் கையைத் தட்டி விட்டு ஒரே ஓட்டமாக ஓடினாள்.

 

ஒரே ஒரு நொடி இமை தாழ்த்தி நிலை தடுமாறியவன் அடுத்த நொடியே, “இந்த ஹாஸ்பிடலும், மதுவும் என்னோட கண்ட்ரோல்! ரெண்டையும் உன்னால வாங்க முடியாது.” எனக் குரோதம் மின்னும் கிஷோரின் முகத்தையும் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

 

***

நேராக ஓடி மீட்டிங் ஹாலுக்குள் புகுந்தவள், தரையில் கால் மடக்கி அமர்ந்து அழத் தொடங்கினாள். பெற்றவர் முன்பு நிற்கக் கூடாத கோலத்தில் நின்ற துயரம் அவள் உயிரை வதைத்தது. துணியை வெட்டிக் கிழிப்பது போல் அவள் நரம்பு ஒவ்வொன்றையும் வெட்டிக் கூறு போட்டு விட்டான் அகம்பன். நேற்றிரவு அவனோடு இருக்கும்பொழுது குத்தாத மனது இப்போது குத்தியது.

 

தன்னையும், தன் உடலையும் உச்சபட்சமாக அருவருத்தாள். அவன் தொட்ட உடலை அடித்துச் சேதப்படுத்தினாள். அருவருக்கத்தக்க எண்ணங்கள் பேயாய் சுழற்றியது. தவறு செய்து விட்டதாகத் தாமதமாக எண்ணியவள், தன்னை என்ன நினைத்து இரவெல்லாம் இருந்தான் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

 

அவளிடத்தில் இருந்து சற்றும் யோசிக்காது, மாபெரும் தவறைச் செய்த அகம்பன் குற்ற உணர்வு இல்லாது உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டதும் இறுக்கமாகக் கண்களை மூடிக்கொண்டு,

 

“தயவு செஞ்சு போயிடு!” கத்தினாள்.

 

“நீயும் கிளம்பு, சேர்ந்து போகலாம்.”

 

“எதுக்குக் கூப்பிடுறன்னு தெரியும். உன் கூடப் படுக்க எனக்கு விருப்பமில்லை. உன்னைக் கெஞ்சிக் கேக்குறேன், என்னை விட்டுடு.”

 

“எதுக்கு இப்ப அழற?” என்றதும் சீறி எழுந்தவள், “என்ன மனுஷன்டா நீ? மனசாட்சி இல்லயா… ஒரு அப்பா முன்னாடி பொண்ணைப் பேசக்கூடாத வார்த்தையைப் பேசிட்டு எதுக்கு அழறன்னு கேக்குற. உன்னை நம்பித்தான உன் கூட இருந்தேன். அதை இப்படி மத்தவங்க பார்க்க அசிங்கப்படுத்திட்டியே. இதுக்கு அன்னைக்கு மாதிரிப் பணத்தைத் தூக்கி அடிச்சிருக்கலாம்.” என்ற பின்னும் ஆத்திரம் அடங்காது அவனைப் போட்டு அடிக்க ஆரம்பித்தாள்.

 

மார்பில் விழும் பலமான அத்தனை அடிகளையும் அமைதியாக வாங்கிக் கொண்டான். கை இரண்டையும் கால் சட்டையில் நுழைத்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தவனைப் பார்க்க அத்தனை ஆத்திரம். அடித்தடித்துக் கை வலியில் ஓய்ந்து போனவள்,

 

“உன்னை எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கல. என் முன்னாடி நிக்காமல் போயிடு.” தள்ளி விட்டாள்.

 

ஒரு அடி கூட நகராதவன், “இட்ஸ் ஓகே, அது உன்னோட விருப்பம்!” எனக் கையை உதறிக் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்த அகம்பன், “ஒன் ஹவர் மட்டும்தான் உனக்கு டைம். ரெடியா இரு, கமல் வந்து பிக்கப் பண்ணிப்பான்.” என மனசாட்சியே இல்லாமல் நகர்ந்தவனை என்ன சொல்லித் திட்டுவது என்று தெரியாமல் நின்றாள்‌.

 

***

 

அகம்பன் திவஜ் கொடுத்துவிட்டுச் சென்ற ஒரு மணி நேரம் முடிந்துவிட்டது. மதுணிகாவை அழைத்துச் செல்ல வந்த கமல், “கிளம்பலாமா மேடம்” பவ்யமாகக் கேட்க, “என்னால எங்கயும் வர முடியாதுன்னு உங்க சார்கிட்டச் சொல்லிடு.” என்று விட்டுத் தன் வீட்டிற்குக் கிளம்பினாள்.

 

தகவல் பறந்தது சம்பந்தப்பட்டவனுக்கு. வெறும் சரி என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். அவன் எண்ணம் புரியாது குழம்பிப்போன கமல், அந்த மருத்துவமனையில் இருந்து கிளம்ப, கிஷோரும் வீட்டிற்குக் கிளம்பினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கண்கள் பேசிக் கொண்டது.

 

***

 

அவள் வீட்டு முன்பு நின்றது கார். கண்ணாடியை இறக்கியவன், மர்மமான புன்னகையோடு மதுவைத் தொடர்பு கொண்டான். அவன் அழைப்பை எடுக்க விரும்பவில்லை மதுணிகா. பொறுமை இழந்து காரை விட்டு இறங்கியவன்,

 

“பிளைட் எத்தனை மணிக்கு?” விசாரித்தான்.

 

“இன்னும் டூ ஹவர்ஸ் டைம் இருக்கு சார்”

 

“ரொம்ப அதிகம்”

 

தோள்களைக் குலுக்கிக் கொண்டு செல்லும் முதலாளியை எண்ணாமல் மதுவை எண்ணினான். இவர் செல்லும் தோரணையே நடக்கும் கலவரத்தைச் சொல்லியது. என்ன பாடுபடப் போகிறாரோ என்ற அனுதாபத்தில் அமர்ந்திருந்தவன் செவியில் முரளி கத்தும் சத்தம் நன்றாகக் கேட்டது. ஆரம்பம் ஆகிவிட்டது கச்சேரி என்ற குதூகலத்தில் அவன் அமர்ந்திருக்க,

 

“யாரைக் கேட்டுடா, என் வீட்டுக்குள்ள வந்த?” குதிக்கத் தொடங்கினார் மதுவின் தந்தை.

 

சற்று நேரத்திற்கு முன்னர் தான் இல்லம் திரும்பியதால், நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தான் கிஷோர். வந்த மகனுக்குப் பழச்சாறு எடுத்துக்கொண்டு வந்த அஞ்சலை தான் முதலில் அகம்பனைப் பார்த்தது. அவருக்குக் கையசைத்து,

 

“ஹாய் ஆன்ட்டி! நான் எங்க வீட்டுக்குக் கிளம்புறேன். உங்க பொண்ணையும் கூட்டிட்டுப் போகப் போறேன். ஒரு வாரத்துல ரிட்டர்ன் பண்ணிடுறேன்.” ஏதோ பொருளை அனுப்புவது போல் கூறிவிட்டு நகர்ந்தவனைத் தான் பிடிபிடி என்று பிடித்துக் கொண்டிருக்கிறார் முரளி.

 

“அவனை அப்படியே துரத்தி விடுங்கப்பா. எவ்ளோ தெனாவட்டு இருந்தா நம்ம வீட்டுக்கு வந்து நம்ம வீட்டுப் பொண்ணக் கூட்டிட்டுப் போவன்னு சொல்லுவான்.”

 

“ஏண்டா பொடிப் பயலே! உங்க அக்காகாரி இங்கதான இருக்கா. அவளைக் கூட்டிட்டுப் போக இங்க வராம பக்கத்து வீட்டுக்கா போக முடியும்?”

 

“நீ எதுக்குடா அவளைக் கூட்டிட்டுப் போகணும்?”

 

“டைம் பாஸ்க்கு!”

 

“வேணாம் அகம்பன். உன்னோட லிமிட்ட கிராஸ் பண்ணிப் போயிட்டு இருக்க. இது எதுவுமே நல்லதில்லை. நான் திருப்பி அடிக்க ஆரம்பிச்சா துரும்பு கூடக் கிடைக்காது.”

 

“உங்களை அடிக்க நான் விட்டால் தான.”

 

“ரொம்ப எகத்தாளமா ஆடாத. உங்க அப்பா மினிஸ்டரா இருக்கலாம், அதுக்காக எல்லா இடத்துலயும் உன்னோட பவர் ஜெயிக்கும்னு நம்பாத. அவள் உன் கூட வரமாட்டாடா. கழுத்தப் புடிச்சு வெளிய தள்ளுறதுக்குள்ள போயிடு.”

 

“ப்ச்! பிளைட்டுக்கு டைம் ஆகுது, நகரு!”

 

“வெளிய போடா…” என்றான் கிஷோர்.

 

“இன்னொரு வார்த்தை உன் வாயிலிருந்து ‘டா’ வந்துச்சு, அந்தக் கையையும் உடைச்சிடுவேன்.”

 

அகம்பனின் எச்சரிக்கையை உதாசீனம் செய்த கிஷோர், “நீ பெரிய இவனா… உன்ன ‘டா’ போட்டா என்னடா பண்ணுவ?” அவனை நெருங்கி வருவதற்குள் எட்டி நெஞ்சில் மிதித்து இருந்தான் அகம்பன்.

 

அடிபட்ட கை சோபாவில் விழுந்து பாதுகாப்பாக இருந்தாலும், எட்டி உதைத்ததில் நெஞ்செலும்புகள் நொறுங்கும் வலியைக் கொடுத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்ததில் பெற்றோர்கள் பதறி மகனைக் காப்பாற்ற,

 

“இந்த சவுண்ட் விடுற வேலை எல்லாம் இங்க ஆகாது. இந்த வீட்ல இருக்க மதுணிகா நான் இஷ்டப்படுற பொம்மை! என் இஷ்டத்துக்கு மட்டும் தான் இருக்கணும்! தடுக்க எவன் வந்தாலும் வெட்டி வீசிட்டுப் போய்கிட்டே இருப்பேன்.” என்ற கலவரத்தையும் அறியாது தன் அறையில் அழுது கொண்டிருந்தாள்.

 

***

 

“ஏய்!” என்ற ஓசை கேட்டு அலறி அடித்து எழுந்தமர்ந்தாள்.

 

“கிளம்பச் சொன்னா கிளம்ப முடியாதோ? உன்னைக் கூட்டிட்டுப் போக நான் வரணுமா, எந்திரிடி!”

 

“இங்க எதுக்கு வந்த?”

 

“தரதரன்னு இழுத்துட்டுப் போக வைக்காத…”

 

“நான் எதுக்கு உன் கூட வரணும். உனக்கும் எனக்கும் என்ன இருக்கு. புதுசு புதுசா பிரச்சினை பண்ணாம தயவு செஞ்சு போ…”

 

எட்டி அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து, “இதெல்லாம் என் வாழ்க்கைல விளையாடுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். பழைய பிரச்சினைக்கே இன்னும் தீர்வு கிடைக்கல. இதுல புதுப் பிரச்சினைய ஆரம்பிச்சுக் கழற்றப் போறனா… என்னைக் கோபப்படுத்துறது நல்லதில்ல உனக்கு. மரியாதையா கிளம்பிடு. இல்ல… கீழ இருக்கற ரெண்டு பேரும் மாத்துக் கட்டுல மிதிபடுவாங்க.” என்றவனிடமிருந்து தன் முடியைக் காப்பாற்றிக் கொண்டு தள்ளி விட்டாள்.

 

“சைக்கோவாடா நீ? பைத்தியக்காரன் மாதிரிப் பண்ணிட்டு இருக்க. உன்னைப் பார்க்க பயமா இருக்கு அகா… தெரியாம உன்கிட்ட வந்து சிக்கிட்டேன்.”

 

“அதான் சிக்கிட்டியே, இனி விடுபட முடியாது!”

 

“என்னால எங்கயும் வர முடியாது. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க.”

 

உதடு குவித்து உஷ்ணத்தை வெளியிட்டவன், சட்டைக் காலரை மடித்து முட்டிவரை ஏற்றினான். அவனைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தவளை, அலேக்காகத் தூக்கி கொண்டு நடந்தவனை என்ன செய்தும் தடுத்து நிறுத்த முடியவில்லை மதுவால்.

 

கீழே இருந்த அனைவரும் மதுவைத் தூக்கிக் கொண்டு வரும் அகம்பனைப் பயத்தோடு பார்த்தனர். யாரையும் கண்டுகொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினான். இருக்கையில் அமர்ந்தவள் கதவைத் திறக்கப் போக,

 

“எதுக்கு மேடம் வீணா எபெக்டை வேஸ்ட் பண்றீங்க. எப்படியும் சார் உங்களை விட மாட்டாரு.” என்றான் பின்னால் இருந்தவன்.

 

“எங்க தான் கூட்டிட்டுப் போறான்?”

 

“எங்கேஜ்மென்டுக்கு!”

 

“யாருக்கு?”

 

“சாருக்கு!”

 

“ஹான்… யாருக்கு?”

 

“அகம்பன் சாருக்கும், அனு மேடத்துக்கும் எங்கேஜ்மென்ட்!”

 

அவளை இருக்கையில் அமர வைத்துச் சுற்றிக்கொண்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். கமல் சொன்னதை நம்ப முடியாது அவனைப் பார்த்தாள். எந்தப் பாவனையும் இன்றிக் காரை இயக்கினான். அதன்பின் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை மதுணிகா. அவனும் எதுவும் பேசவில்லை.

 

“நீ உள்ள போய் வெயிட் பண்ணிட்டு இருடா. ஒரு போன் பேசணும், முடிச்சுட்டு வந்துடறேன்.” என்றவன் தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளிடம்,

 

“நீயும் அவன் கூடப் போ…” என்றான்.

 

அவளோ நகராமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். காத்திருந்த கமல் அமைதியாகக் கிளம்ப, அவள் பார்வையில் விழுந்து விடாமல் இருக்கக் காரை விட்டு இறங்கினான். விடாமல் துரத்தியது அவள் பார்வை. நேராகப் பார்க்கவில்லை என்றாலும், தன் முதுகைத் துளைக்கும் வீரியத்தில் அதை உணர்ந்து மீண்டும் காருக்குள் அமர்ந்தான்.

 

“எதுக்குடி என்னை இப்படிப் பார்க்குற?” கன்னம் பிடித்துக் கேட்டவனை ஆழ நோக்கினாள்.

 

பார்வையை மாற்றாமல் அடம் பிடித்தாள் மதுணிகா. அதில் தோற்றுப் போனவன் அவளை இருக்கையில் சாய்த்து விட்டு, “எனக்கும், அனுவுக்கும் எங்கேஜ்மென்ட்! அதை நீ பார்க்கணும்னு தான் கூட்டிட்டுப் போறேன்.” என்றதும் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தவள்,

 

“அப்போ அம்மு?” கேட்டாள்.

 

“அவதான் நான் வேணாம்னு போயிட்டாளே!”

 

“நீயும் வேணாம்னு முடிவு பண்ணிட்டியா?”

 

“ஏற்கெனவே முடிவான விஷயத்தை முடிவு பண்ண நான் யாரு?”

 

“பேசி சமாளிக்காத அகா… உன்னோட சம்மதம் இல்லாம இந்த எங்கேஜ்மென்ட் நடக்காது. வேற ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன், எதுக்காக அம்முவக் கேட்டு டார்ச்சர் பண்ண? உனக்குன்னு ஒருத்தி இருக்கும்போது எதுக்காக என் கூட இருந்த…”

 

“எனக்கும், அனுவுக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு உனக்குத் தெரியாதா?” என்ற கேள்விக்குப் பதிலாக அவன் சட்டையைப் பிடித்திருந்த மதுவின் கைகள் விலகியது.

 

ஏளனத்தோடு இதழ் வளைத்தவன், “என்னை எல்லா விதத்துலயும் ஏமாத்திட்டடி!” என்றான்.

 

கண் கலங்க, “அகா…” என்றழைத்தாள்.

 

“உன் தலைமையில தான் என் எங்கேஜ்மென்ட் நடக்கணும். என் பக்கத்துல வேற ஒரு பொண்ணு உரிமையா நிக்கப் போறதை, உரிமையே இல்லாமல் பார்த்துச் சாவுடி!” எனக் காரை விட்டு இறங்கினான்.

 

அவன் சொன்னது போல் பார்க்கும் வல்லமை இல்லையே மதுணிக்கு. கத்தி மேல் நிற்கிறாள். எப்போது வேண்டுமானாலும் இரத்தம் சொட்டும். அது யாருடையது என்ற கேள்வி தான் வருங்காலம்.

 

 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
16
+1
3
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்