Loading

இந்தக் கதையில் வரும் ஃப்ளாஷ்பேக் உண்மை சம்பவம். ஆனால், யக்ஷித்ரா, அற்புதனோட கல்யாணத்துக்குப் பிறகு நடக்கிறது எல்லாம் கற்பனை ஃப்ரண்ட்ஸ்!

🌸🌸🌸

தன்னை மதிக்காமல், தலை குனிந்தவாறே செல்லும் மூத்த மகளைப்‌ பார்த்துப் பார்த்து, கோபம் ஏற்பட்டது கிரிவாசனுக்கு.

“ஏய் யக்ஷித்ரா!” என்று மிகவும் சத்தமாக அவளை அழைத்தார் தந்தை.

அடுக்குப் பெட்டியில் இருந்து மாற்றுடையை எடுத்துக் கொண்டிருந்தவளுக்குத் தந்தையின் கத்தலைக் கேட்டு இதயம் எகிறிப் போனது. 

பயத்திலும்,அதிர்ச்சியிலும் உடையைக் கீழே போட்டு விட்டாள்.

நேரம் தாழ்ந்து சென்றாலும் அவரைச் சமாளிப்பது கடினம், எனவே, கதவைத் திறந்து கொண்டு தந்தையிடம் ஓடிச் சென்றாள் யக்ஷித்ரா.

சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, படிக்க அமர்ந்திருந்த யாதவிக்கும் தமக்கையின் நிலைமை தான் என்பதால், புத்தகத்தை மூடி வைத்து விட்டு, அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். 

மீனாவிற்கு, இவளிடம் என்னச் சொல்லிக் காயப்படுத்தப் போகிறார்? என்ற கலக்கம் கூடிப் போனது.

“என்னப்பா?” என்று வெலவெலத்துப் போய் இருந்தவளிடம்,

“ஸ்கூல் முடிஞ்சிதா?” என்றார் கிரிவாசன்.

“ம்ம். முடிஞ்சிருச்சு ப்பா. டியூஷனும் அட்டெண்ட் பண்ணிட்டுத் தான் வர்றேன்” என்று பதில் சொன்னாள் யக்ஷித்ரா.

“அது சரி. உள்ளே வந்ததும் இங்கே ஒருத்தன் அப்பான்னு உட்கார்ந்து இருக்கேன். பார்த்தும், பார்க்காத மாதிரி போற! டியூஷன் விட்டு வந்துட்டேன்னு இன்ஃபார்ம் செய்துட்டுப் போக மாட்டியா?” என்று வினவினார் கிரிவாசன்.

திருதிருவென்று நடுங்கி உறைந்து நின்றாள் அவரது மகள்.

அவளுக்கு உதவி புரியக் கூட யக்ஷித்ராவின் தாய் மீனாவிற்கு அனுமதியில்லை.

“என்ன?” என்று மீண்டுமொரு முறை அவரிடமிருந்து‌ கர்ஜனை வந்தது.

“சாரி‌ப்பா. நான் டியூஷன் முடிஞ்சிருச்சு. இப்போ போய் ரெஃப்ரஷ் ஆகவா?” என்று கேட்டாள்.

அவரது முன்னிலையில் உணர்வுகள் எதையும் வெளிப்படுத்தினாலும், யக்ஷித்ராவிற்குத் தான் சங்கடம் நேரும்.

“ம்ம்‌. உள்ளே போய் ஃப்ரெஷ் ஆகிட்டுப் படிக்க ஆரம்பிக்கனும்” என்று அவளுக்குக் கட்டளை பிறப்பித்தார் கிரிவாசன்.

நீர்த் துளிர்த்தக் கண்களைப் பொருட்படுத்தாமல் அறைக்குள் நுழைந்து கொண்டாள் யக்ஷித்ரா.

சமையலறையில் நின்று கொண்டிருந்த மீனா, இப்போது உடனே மகளைப் போய்ப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், கணவனைத் தாண்டித் தான் சென்றாக வேண்டும். அதற்கும் ஏதாவது கூரிய வார்த்தைகளைக் கொண்டு தங்களது மனதைத் துளைக்கக் காத்திருப்பார் கிரிவாசன் என்பதை இத்தனை வருடங்களில் புரிந்து வைத்திருந்தார் மீனா.

மாற்றுடை கேட்பாரற்றுக் கிடக்க, மங்கையவளோ, கட்டிலில் அமர்ந்து விட்டாள்.

பூனையைப் போல மெல்ல நடந்து வந்து, தங்கள் இருவரது அறைக்குள் புகுந்தாள் யாதவி.

அதையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார் கிரிவாசன். ஆனால், வயிறு பசித்தது போலும் அவருக்கு.அதனால், சிற்றுண்டியைக் கேட்டுக் கொண்டு வர சொல்லி, அவற்றை உண்டு விட்டு, அறைக்குள் போய் விட்டார். 

அதற்காக காத்திருந்த மீனாவும், மகளிடம் போனார்.

“டிரெஸ்ஸை மாத்து அக்கா” என்று யக்ஷித்ராவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் யாதவி.

அறைக்குள் வந்த தாயை வெறுமையுடன் ஏறிட்டாள் மூத்தவள்.

மெல்ல எழுந்து துணியை எடுத்துக் கொண்டு, அறைக்குள்ளேயே இருந்த குளியலறைக்குள் போய் விட்டாள் யக்ஷித்ரா.

“அவளைச் சாப்பிட வைக்கனும் யாது” என்று இவளிடம் சொல்லும் போது,

“எனக்குப் பசிக்குது” எனக் குளியலறையில் இருந்து வந்ததும் கேட்டாள் அவருடைய மூத்த மகள்.

அந்த அளவிற்குப் பசியோடு இருந்த மகளிற்கு, அன்றைய மாலைச் சிற்றுண்டியாக செய்து வைத்திருந்தவற்றைப் பரிமாறினார் மீனா.

அந்த காலகட்டத்தில், விதவிதமான வடிவமைப்புகளில் எல்லாம் செல்பேசி அறிமுகமாகி இருக்கவில்லை.

பட்டன் மாடல்கள் தான் அப்போதைய உபயோகத்திற்காக, வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அதனால், அனைவருக்கும் பொதுவான உபயோகத்திற்கு, இவர்களது வீட்டில் லேண்ட் லைன் இருக்கும்.

கிரிவாசனிடம் மட்டும் நோக்கியா மொபைல் இடம் பெற்றிருக்கும். அந்த ஒரே காரணத்தினால் தான், யக்ஷித்ராவால் , தோழி நிவேதிதாவிடம் நினைத்த நேரத்தில், அழைத்துப் பேச இயலவில்லை.

பத்தாம் வகுப்பிற்குப் பொது தேர்வு இருப்பதால், கணிதம் மற்றும் அறிவியலுக்குச் சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருக்கிறாள் யக்ஷித்ரா.

ஒரு சில தனிப்பட்டக் காரணங்களால் நிவேதிதாவால், இந்த வகுப்புகளுக்கு வர முடியவில்லை. 

ஆனால் வகுப்பில் அவளுக்குப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை யக்ஷித்ரா தான் தீர்த்து வைப்பாள்.

இப்படியாக, இந்தப் பத்தாம் வகுப்புப் பொது தேர்வுகளை எழுதி முடித்து, நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருந்தார்கள்.

ஐந்நூறு மதிப்பெண்களுக்கு, நானூற்று இருபது மதிப்பெண்கள் எடுத்திருந்தாள் யக்ஷித்ரா. அவளது தோழியான நிவேதிதாவும் நானூற்றுப் பதினொன்று வாங்கி இருந்தாள்.

அன்றைய வருடங்களில், பதினொன்றாம் படிப்பைப் பொறுத்தவரை உயிரியல் கணிதமும் (bio maths) , கணிணி அறிவியலும் (computer science) தான் பெரும்பாலான மாணவர்கள் விருப்பப்பட்டு எடுக்கும் பிரிவுகளாக இருந்தன.

அதிலும், நானூறு மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் சில மாணவர்கள் இதைத் தான் எடுக்க வேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது.

ஒரு சிலர் , மருத்துவப் படிப்பிற்காக, பயோமேத்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுப்பர்.

யக்ஷித்ராவின் தந்தை கிரிவாசன்,

“உனக்குப் பிடிச்சதையே எடுத்துப் படி. அப்பறம் என்னைச் சொல்லிடக் கூடாது” என்று அவளுக்கு அனுமதி கொடுத்து விட்டார்.

“இந்த ஒரு தடவை பர்மிஷன் கிடைச்சாச்சு!” என்று மீனாவும் மகளிடம் எந்தப் பிரிவை தேர்ந்தெடுக்கவுள்ளாள்? என்று கேட்டார். யாதவியும் ஆவலாக எதிர்பார்த்திருந்தாள்.

“மேத்ஸ் எனக்குப் பிடிக்கும் , நல்லா வரும். சோ, பயோமேத்ஸ்ஸையே செலக்ட் பண்றேன்” என்று கூறி விட்டாள் யக்ஷித்ரா.

அவளது விருப்பத்தைக் கேட்ட கிரிவாசனுக்கு நல்ல எண்ணம் தோன்றியது மகளின் மேல்.

ஏனெனில், மகள் அதை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தான் அவர் விருப்பப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக நிவேதிதாவும் அதே பிரிவை எடுத்திருந்தாள். வகுப்பில், ஒன்றாக, ஒரே பெஞ்சில் அமர்ந்து கொண்டனர்.

……………………….

“கதை இன்னும் போகும் போலவே! அதை இடைவெளி விட்டுச் சொல்லு யக்ஷித்ரா” என்று முகிழ்நகையை இதழ்களில் படர விட்டு,

“அப்பாவும், அம்மாவும் வரப் போறாங்க, அவங்களைக் கன்வின்ஸ் பண்ணனும். உங்க வீட்டில் போய்ப் பேசவும் அவங்க டிரை பண்ணுவாங்க” என்றான் அற்புதன்.

“ஐயோ! அம்மாவும், யாதவியும் கண் காணாத இடத்துக்குப் போகவே முடிவு பண்ணிடுவாங்களே ங்க!” என்று கலங்கினாள் யக்ஷித்ரா.

“நாமப் பாத்துக்கலாம்” 

ஊரிலிருந்து, அற்புதனுடையப் பெற்றோர் வந்து சேர்ந்தனர்.

மருமகள் அவர்களுக்கு மகளைப் போன்றவள், மகன் உறக்கத்திலிருந்து எழுவதற்குள் தங்களுக்காகத் தயாராகி காத்திருந்த யக்ஷித்ராவை அணைத்து விடுவித்தார் அவளது மாமியார் கீரவாஹினி.

“அந்த படவா எங்கே ம்மா?” என்று மகளைப் பற்றிக் கேட்டார் அகத்தினியன்.

“தூங்கிட்டு இருக்காரு மாமா” என்று புன்னகை செய்தாள் யக்ஷித்ரா.

“இந்தப் பையைப் பிடி” என அவளிடம் கொடுத்து விட்டு, உறங்கிக் கொண்டிருக்கும் மகனிடம் சென்று விட்டார்.

“நீ வா. நமக்கு வேலையிருக்கு” என்றவரைத் தடுத்தாள் மருமகள்.

” இதை தான் செய்வீங்கன்னுத் தெரியும் அத்தை. அதெல்லாம் நானே முடிச்சிட்டேன். நீங்க ஒய்வு எடுக்க வேண்டியது தான் உங்களுக்கான வேலை!” என்று கூறிச் சிரிக்கவும்,

“ஹூம்” என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார் கீரவாஹினி.

“நாங்க ஊரிலிருந்து வர்றோம்னு தெரிஞ்சும், இழுத்துப் போர்த்தித் தூங்குறியா நீ!” என மகனுடைய சிகையைப் பிடித்து இழுத்தார் அகத்தினியன்.

“அப்பா!!!” என்று துள்ளிக் குதித்து, அவரிடமிருந்து தப்பித்து, வெளியே ஓடி வந்தான் அற்புதன்.

– தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்