Loading

வணக்கம் தோழமைகளே!

அத்தியாயம் 6- கொஞ்சம் முன்னாடி படிச்சுட்டு வாங்கப்பா.. அப்பதான் கதை புரியும்.

கதை சுருக்கம் சொல்றேன்.

மதுபல்லவி, தணிகை, ஆரெழில், நேரெழில், வேதன், சித்திரன், திருநல்லன் எல்லாரையும் ஒரு இடத்தில் கடத்தி வச்சிருக்காங்க. இவுங்க எல்லாரையும் கண்டு பிடிக்க கணி போறான். திருநல்லனோட ஊருக்கு. அங்க நிறைய விஷயம் மர்மமா இருக்கு. நனியிதழ் கோவமா இருக்கா. கணி திராவிடன் மேல சந்தேப்படுறான்.

இனி…

“வெட்டி பேச்சு பேசாம ஏதாச்சும் உருப்படியா யோசிக்கிறீங்ஙளா..?” ஆரெழில். இரட்டையர்களில் ஒருத்தி.

“எனக்கு தெரிஞ்சு நம்மையெல்லாம் ஏதாவது மருந்தைப் பரிசோதிப்பதற்காக கடத்தி இருப்பாங்களோ..?” மதுபல்லவி.

“என்னது மருந்து குடுத்து டெஸ்ட் பண்றாங்களா..” தணிகை.

“ஆமாடா… இப்போ கொரோனாக்கு மருந்து கண்டுபிடிச்சா மனுசனுக்கு குடுத்து அது ஒழுங்கா வேலை செய்யுதானு பாப்பாங்க..” மதுபல்லவி.

“அக்கோவ்… என்ன அக்கா குண்ட தூக்கி போடுற..” தணிகை.

“உண்மைதான்…”

“ஆமா… அதுக்கு எதுக்கு நல்லாயிருக்க நமக்கு குடுக்கணும்..” வேதன்.

“எந்த மருந்தாயிருந்தாலும் முதலில் ஆரோக்கியமான சில பேருக்கு குடுத்து, அவுங்களுக்கு ஒன்னும் ஆகலைன்னாதான் அடுத்து நோயாளிக்கு குடுப்பாங்க..” மதுபல்லவி.

“அட படுபாவி பயலுங்களா.. விளங்காமப் போக.. ஏதாவது ஆச்சுனா என்ன‌ செய்றது..” தணிகை.

“பரலோகம் போக வேண்டியதுதான்..” மதுபல்லவி.

“ஆத்தி… அக்கா அளந்து விடாத சும்மா..” தணிகை.

“உண்மைதான் தம்பி.. என் கம்பெணி கூட மருந்து கண்டுபிடிக்கிற கம்பெணிதான். அப்படி மருந்தை ஒருத்தர் மேல சோதிக்கும் போது, ஏதாவது ஆச்சுனா நாங்க பொறுப்பித்லைன்னு கையெழுத்து வாங்கிக்கிவோம்…” மதுபல்லவி.

“அப்போ மனிஷன கொல்ற‌ கூட்டத்தை சேந்தவளா நீ..” தணிகை.

“அப்படிலாம் அவ்ளோ சீக்கிரமா யாரும் செத்து போக மாட்டீங்க.. முதல்ல எலிக்கு குடுத்து டெஸ்ட் செஞ்ச அப்பறம்தான் மனிஷனுக்கு கொடுப்போம்… அத்துணூன்டு எலிக்கே ஒன்னும் ஆகலைனா இவ்ளோ பெரிய உனக்கு என்ன ஆக போகுது…” மதுபல்லவி.

“அட போக்கா… இப்போ எலியெல்லாம்‌ முன்ன மாதிரி இல்லை. எலி மருந்து சாப்டுட்டு, அப்புடியே மயக்கமா கொஞ்சம் தூங்கிட்டு, அப்பறம் எந்திருச்சு உக்காந்து ஃபுல் மீல்ஸ் கேக்குது… நீ வேற..” தணிகை.

“ஆமா… அது இவன் பக்கத்துல உக்காந்து சாப்டுச்சாம்..” ஆரு.

“இல்லடி… அவன் சொல்றத பாத்தா அவனுக்கு வச்ச சாப்பாட சாப்டு ஏப்பம் விட்டுட்டு போயிருக்கும் போல…” நேரு.

“குந்தாணிகளா.. உங்களுக்கு அவ்ளோதான் மரியாதை சொல்லிட்டேன்” என்று தணிகை கூற, “உன்னோட மரியாதை எங்களுக்கு வேண்டாம். அதை குப்பையில் போடு. போ” என்றனர் இரட்டையர்கள் ஒன்று போல்.

“அக்கா.. அப்படி பார்த்தா நாங்க எல்லாம் ஆரோக்கியமான ஆளுங்க. ஆனா நீ அப்படி இல்லையே. உனக்கு எப்படி மருந்து கொடுக்க முடியும். நீ மாசமா இருக்கியே. அது சட்டப்படி குற்றமாச்சே” ஆரு.

“அப்படியே இருந்தாலும் ஏன் ஓ பாசிட்டிவா தேடி புடிக்கணும்” நேரு.

இதில் எதிலும் கலந்து கொல்லாமல் இருந்தார் திருநல்லன். சித்திரனும் தீவிரமான சிந்தனையில் இருந்தான்.

“ஒருவேளை விபரீதமான மருந்தா இருக்குமோ?” வேதன்‌.

“விபரீதமான மருந்தா..? நமக்கு அப்படி ஒன்னும் கொடுக்கலையே..” தணிகை.

“சாப்பாட்ல கலந்து இருக்கலாம் இல்லையா..?”

“நாமதான சமைச்சு சாப்பிடுகிறோம்…”

“ஆனா அரிசி தண்ணி எல்லாம் அவங்கதான கொடுக்கிறாங்க.”

“இப்ப ஏதாவது மருந்து பரிசோதிக்கும் போது, நம்மைக் கூப்பிட்டு கேட்டால் நம்ம ஓகே சொல்ல மாட்டோமா என்ன? எவ்வளவோ பேர் பணம் வாங்கிகிட்டு மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துக்குறாங்களே.  அதுக்கு எதுக்கு இப்படி கடத்தி வைக்கணும்” என்று கேள்வி எழுப்பினார் திருநல்லன்.

அவரின் கேள்வியில் இருந்த பொருள் மதுபல்லவிக்கு நன்றாகவே புரிந்தது. அவளின் நிறுவனம் இந்த வேலையைத்தானே செய்கிறது. அனைத்தும் முடிந்த பின்னர் அவர்களால் ஒரு முடிவுக்கு மட்டுமே வர முடிந்தது. அது மருந்து பரிசோதனைக்கு கடத்தப்படவில்லை என்பதுதான். அதில் மதுபல்லவியும் சற்றே நிம்மதி அடைந்தாள்.

“இந்த இடத்தை பார்த்தீங்களா? இங்கு உள்ளவரைக்கும் இங்கிருந்து தப்பிச்சு போக முடியாத அளவுக்கு இதோட கட்டமைப்பு இருக்கு. ரொம்ப கவனமா இந்த இடத்தை வந்து தேர்ந்தெடுத்து இருக்காங்க. இந்த இடத்தை உருவாக்கி இருக்காங்க. இதை உருவாக்குவதற்கு அவங்களுக்கு பல கோடி செலவா இருக்கணும். அங்க உள்ள கேமரா பல லட்சம் மதிப்புள்ளதா இருக்கணும்” சித்திரன்.

இந்த கோணத்தில் இருந்து இதுவரை யாரும் சிந்திக்கவில்லை.

“அதெப்படி அவ்ளோ தெளிவா சொல்றீங்க” ஆரு.

“இதெல்லாம் ரொம்ப அட்வாண்ஸ்டு கேமரா” சித்திரன். அவன் சினிமா துறையில் இருப்பதால் அவனுக்கு அந்த கேமராவைப் பற்றிய அறிவு இருந்தது.

“பேசாம இதெல்லாம் ஆட்டைய போட்டோம்னு வச்சுக்கோங்க வாழ்நாள் முழுக்க நல்லா சந்தோஷமா வாழலாம் போல” வேதன்.

“ஏன்டா உனக்கு இப்படி ஒரு வெறித்தனமான புத்தி. நாங்கெல்லாம் எப்படி தப்பிக்கிறதுனு யோசிச்சா, ஆட்டையை போடுறது பத்தி யோசிச்சிட்டு இருக்க” தணிகை.

சிறிது நேரம் யோசித்த தணிகை வேதனை பார்த்து, “ஆமா நீ திருடனா? உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.. பார்த்த மாதிரி இருக்குன்னு சொன்னேனே. கரெக்ட். உன்னை ஒரு தடவை பார்த்திருக்கேன் ஏதோ திருட்டு கேஸ்ல மாட்டிக்கிட்டவன்தான நீ?” என்றான்.

திருடன் என்று தணிகை கூறியதும் வேதனுக்கு கோபம் வந்தது. அவனிடம் சண்டைக்குச் சென்றான்.
இருவரும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டனர். அவர்களை பிடிக்க அனைவரும் முற்பட்டபோதும், யாராலும் பிரிக்க இயலவில்லை.  இறுதியாக சித்திரன் வந்து இருவரையும் பிரித்து விட்டான்.

“பேசாம இருக்க மாட்டீங்க. இருக்கிற பிரச்சினை பத்தாது. யாருக்காவது ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது?” சித்திரன்.

“ஐயோ சின்சான் தயவு செஞ்சு நீ பேசாத… ரொம்பக் கொடுமையா இருக்கு. அதுக்கு இந்த தடிமாடுக்கிட்ட நாலு அடி கூட வாங்கிக்குவேன்” என்று தணிகைக் கூற, அவனின் கன்னம் பழுக்க, சித்திரன் ஒரு‌ அறை விட்டான். அந்த இடமே கலவரமாகிவிட்டது‌. அதன்பிறகு அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை மூண்டது. அவர்களைப் பிரித்துவிட்டு, திருநல்லனும் மதுபல்லவியும் நன்றாக வசை பாடிவிட்டனர்.

“தங்கச்சி, இனி அவன் என்னை சின்சான்னு கிண்டல் செஞ்சா அவ்ளோதான். இதுதான் கடைசி முறை” என்று தணிகையை முறைத்துக் கொண்டே சித்திரன் கூறினான்.

“தணிகை, ஏன் இப்படி இருக்க. இங்க எல்லாரயும் எதுக்கு கடத்தி வச்சிருக்காங்கனு தெரியாம தவிக்கிறோம்‌. கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க” என்று‌ மதுபல்லவி கூற, பல்லை நறநறவென்று கடித்தான் தணிகை. உன்னை பிறகு ஒரு சமயம் பார்த்துக் கொள்கிறேன் என்றது அந்தப் பார்வை.

*********************

இவர்களின் செயல்களை இருவர் தீவிர சிந்தனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“சென்னி, இன்னும் கவனமா ஆளுங்களை தேர்வு செஞ்சிருக்கணுமோ. பாதி பேருக்கு மேல பொறுப்பு இல்லை. ஒற்றுமையும் இல்லை. இந்த கூட்டத்தை வச்சிக்கிட்டு நாம நினைச்சதை சாதிக்க முடியுமா?” காப்பியன்.

“இதெல்லாம் மனிஷனோட குணங்கள் தான். அதனால எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியல. மனிஷன் எப்போ ஒற்றுமையா இருப்பான்?” என்று சென்னி வினவ, காப்பியன் அவனை புரியாத பார்வை ஒன்றைப் பார்த்து வைத்தான்.

“என்ன புரியலையா?” சென்னி‌.

“உன்னோட கேள்விக்கும் இப்போ நடக்குறதுக்கும் என்ன சம்மந்தம். அப்படியே ஏதாவது காரணி இருந்தாலும், அதை வைத்து அவுங்க ஒற்றுமையின்மையை எப்படி சீர் செய்வ?” காப்பியன்.

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லேன்” சென்னி.

“தனக்கு தேவையிருக்கும் போது மனிஷன் ஒற்றுமையுடன் இருப்பான். அன்பு இருக்க இடத்தில் ஒற்றுமையுடன் இருப்பான்” காப்பியன்.

“ரொம்ப எளிமையான பதில். உண்மையும் கூட. இப்போ தேவையை உருவாக்கலாம். அன்பை வளர்க்கலாம்” என்று சென்னி கூற, “ஏன்டா… புரியாம பேசுறதே பொழப்பா வச்சிருக்க” என்று கடிந்து கொட்டான் காப்பியன்.

“ஒருநாள் சாப்பாடுக்கு பொருள் அனுப்பாத. நீ கேட்ட தேவை உருவாகும். அதனோட நீட்சியா அங்க உள்ள எல்லோருக்கும் பரஸ்பர அன்பும் உருவாகும்” என்று சென்னி கூற, திடுக்கிட்டு பார்த்தான் காப்பியன்.

“டேய்.. மதுபல்லவி ஈஸ் ப்ரெக்னன்ட்” காப்பியன்.

“இருக்கட்டும்.”

“இது பாவம்டா.”

“இது மாதிரி எத்தனை பேர் பசில செத்துருப்பாங்க. அப்போ இவுங்க எல்லாம் எங்க போனாங்க. அப்படிலாம் பாவம் பார்க்காத.”

“இரக்கம் இல்தாதவன் மனிஷனாவே இருக்க முடியாது.”

“இப்போ ட்ரெண்ட் மாறியாச்சு. இரக்கம் இருக்கவன் பைத்தியம்” சென்னி.

“சென்னி… நீ செய்றது தப்புடா..” என்று காப்பியன் கூற, “ஷ்ஷ்… சரி… விடு… ஆனா நான் சொன்னதை செய். ஒரு நாள் மட்டும். மதுபல்லவி ஈஸ் பெர்ஃபெக்ட்லி பிட். அவளுக்கு ஒன்னும் ஆகாது. அவுங்ககிட்ட மிச்சம் இருக்க சாப்பாட்டை அவளுக்கு கொடுத்து, எல்லாரும் ஒற்றுமையா இருக்காங்களான்னு பாக்கலாம்” என்று கூறிவிட்டு எழுந்து சென்றான் அவன்.

செல்லும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான் காப்பியன். அவன் மனதில் இருக்கும் காயம் சற்றே பெரிதுதான். ஒரு நிகழ்வு ஒரு மனிதனின் அடிப்படைக் குணத்தை மாற்றியமைக்க முடியுமா என்ன‌. முடியாது என்றுதான் எண்ணியிருந்தான். ஆனால் சென்னி இப்படி மாறிவிட்டானே. சில வருடங்களுக்கு முன்பு அவன் அறிந்த ஒரு நல்லவன் சென்னி மட்டும்தான். இரக்கமும் ஈகையும் குணமாய்க் கொண்டவன், இறுகிப்‌ போய் நிற்கிறான்.

இது எங்கு சென்றா முடியப் போகிறதோ என்று யோசனையுடன் சென்னி சொல்லிச் சென்றதை செயலாற்றினான்.

*********************

அங்கிருக்கும் வரை இரவும் தெரியவில்லை. விடியலும் தெரிவில்லை‌. பசித்த நேரம் உண்டனர். உறக்கம் வந்த நேரம் உறங்கினர். அடுத்த வேளை உணவு தயார் செய்யக் காத்திருந்தனர். ஆனால் உணவு தயார் செய்ய ஒன்றும் வந்தபாடில்லை. அனைவருக்கும் பசிக்க ஆரம்பித்தது.

“ஏய் போண்டாக் கோழி… சமைக்கலை. கொஞ்சமாவது வேலை செய்யணும். அப்பத்தான் உடம்பு குறையும்” என்று தணிகைக் கூற, இரட்டையர் இருவருக்கும் கோவம் வந்தது.

“உனக்கு கொமட்டுலே அடி வாங்கினாலும் புத்தி வருதா பாரு. சமைக்க ஏதாவது இருந்தாதான் சமைக்க முடியும். இன்னைக்கு இன்னும் எதுவுமே வரல” என்று சீறினாள்.

அவன் எழுந்து சென்று பார்த்து வந்தான். வழக்கமாக பொருட்கள் வரும் துவாரம் இன்று மூடியே இருந்தது.

“ஐயோ, பசிக்குதே.. நான் பசி தாங்கமாட்டேன்” என்றான் அறிவிப்பாக.

“ஆமா எங்களுக்கு பல நாள் பட்டினி கிடந்து பழக்கம்” ஆரு.

தணிகையுடன் பதறியவன் இன்னோருவனும் இருக்கிறான். வேதன்தான் அந்த மற்றொருவன்.

இரட்டையர் இருவரும் இருந்த அரிசியை கஞ்சி போல் காய்ச்ச, அது அரைவயிறு கூட வராது போல.

திருநல்லன் தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். சித்தரனும் தனக்கு இது பழக்கம்தான் என்று கூறிவிட்டான். இரட்டையர் இருவரும் தங்களுக்கும் வேண்டாம் என்று கூறினர். இவர்கள் அனைவரும் மதுபல்லவி வயிறு நிறைய வேண்டும் என்று நினைத்தனர். மதுபல்லவியை குடிக்கும்படி கூற, அவள் வேதனையும் தணிகையையும் பார்த்தாள். குழந்தை அலர்விழி உறங்கிக் கொண்டிருந்தாள்.

நேராக அவர்களிடம் எழுந்து சென்றவள், “நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. மிச்சம் இருக்கதை நான் சாப்பிடுறேன்” என்றாள்.

தணிகையின் கண்கள் கலங்கிவிட்டது. உண்மையில் அவன் இதை எதிர்பார்க்கவில்லை. என்னதான் பசி இருந்தாலும், அங்கு முதன்மையாக மதுபல்லவியும் குழந்தையும் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று நன்கு அறிந்திருந்தான். ஆனாலும் மற்றவர்கள் தங்ளுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்ள, நிச்சயம் தனக்கு கிடைக்கும் என்று எண்ணியிருந்தான்.

வேதன் தனக்கு வேண்டும் என்று மட்டுமே நினைத்தான். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அவன் மனதில் தோன்றாத எண்ணங்கள்.

“அக்கா… எங்க அம்மா கூட என்னை இப்படி கேட்டதில்லக்கா…. நீ சாப்பிடு. ஒருநாள் பட்டினியாவும் இருந்து பாக்குறேன்” என்றான் தணிகை.

“எனக்கு இப்போ பசிக்கலை. பசியோட நீங்க இருக்கும் போது நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன். நீங்க குடி..” என்று கொடுக்க, வேதன் மறுக்காமல் வாங்கிக் குடித்தான்.

“அக்கா.. நீ குடிச்சுட்டு பாப்பாவுக்கு வை” என்று தணிகை மறுத்துவிட்டான். அனைவருக்கும் வேதனின் செயல் விசித்திரமாய் இருந்தது. மருந்துக்கும் மறுக்காமல் இருக்கிறானே. இவன் மனிதன்தானா.. கொஞ்சமேனும் மனிதம் இருக்கிறதா என்று ஆராய்ந்தனர்.

ஆனால் வெளியில் சொல்லவில்லை. தணிகை கூட அவனை எதுவும் சொல்லவில்லை.

அவனை அனைவரும் சபிக்கப் போகின்றனர் என்றுதான் நினைத்தான் வேதன். ஆனால் ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. பசியில் அனைவரும் சீக்கிரமாகவே உறங்கிவிட்டனர். மறுநாள் பொழுது எப்படி இருக்கப் போகிறதோ என்ற அச்சுறுத்தல் அனைவருக்குமே இருந்தது. எப்படி தப்பிக்கலாம். கடத்தியதன் காரணம் என்ன என்ற சிந்தனைகள் எல்லாம் தொலை தூரம் சென்றிருந்தது. அவசியத் தேவைகளுக்கு பிறகே அறிவின் சேவைகள் மனிதனுக்கு தேவையாக இருக்கும். அவசிய தேவைகள் பூரணம் பெறவில்லெயெனில், மனம் மூளையை சிந்திக்கவிடாது.

ஆனால் அடுத்த நாளும் உணவு வரவில்லை. அனைவருமே சோர்ந்து போயினர். என்ன செய்வது என்று தெரியாமல் நீரை மட்டுமே அருந்தி கொண்டிருந்தனர். பட்டினி போட்டுக் கொல்லவா இந்த கடத்தல் என்று கூட தோன்றியது.

மது பல்லவியால் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. கொஞ்சம் மயக்கம் வருவது போல் இருந்தது அவளுக்கு.

இரட்டையர்கள் அவளை சோதித்தனர். முடிந்த அளவு சர்க்கரையும் உப்பும் கலந்து கொடுத்தனர் அவளுக்கு.

குழந்தைக்கு மட்டும் ஏதோ கொஞ்சம் உணவை கொடுத்து பார்த்துக் கொண்டனர்.

திருநல்லனுக்கு நன்றாக விளங்கியது. மது பல்லவியின் உடலில் சக்தி குறைந்து கொண்டு வருகிறது என்று. அதனால் அவளுக்கு அதீத அசதி. மற்றவர்கள் சாதாரணமாக இருப்பதால் அவர்களால் பசி தாங்க முடிந்தது. வேதனும் தணிகையும் கூட தாங்கிவிட்டனர். ஆனால் அவள் வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டு இருப்பதால் பசி பொறுக்க முடியவில்லை என்று அனுமானித்து சுற்றுமுற்றும் தேடினார். அவள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கூட்டி விட்டால் பயம் ஒன்றும் இல்லை என்று சிந்தித்தபடி அங்கிருந்த கற்றாழைச் செடியின் ஒரு தடிமனான பகுதியை வெட்டியெடுத்தார்‌.

“அம்மாடி.. ஆறு… இதை ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா” என்று அவளை அனுப்பி வைத்தார்‌. அவளும் அதை எடுத்துக்கொண்டு போய் மிக்ஸியில் அரைத்து சர்க்கரை எல்லாம் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை அவளுக்கு புகட்டியதும் மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்தாள் மதுபல்லவி‌.

பின் அனைவருக்கும் ஒரு கோப்பையில் கொடுத்தாள் நேரெழில்‌.

“நாளைக்கும் வரலைனா என்ன செய்றது. இதை ஏன் இப்போ செஞ்ச” என்றான் சித்திரன்.

“பரவாயில்லை.. குடிங்க சித்திரன்.  நீங்க எல்லாம் இல்லாம நானும் பிள்ளையும் மட்டும் எப்படி வாழ முடியும்” என்று மதுபல்லவி கூறினாள்.

அன்று இரவு உணவு வந்தது. அனைவரும் ஆனந்தமாய் உண்டனர். சண்டைகளும் சச்சரவுகளும் இல்லை அங்கு.

“எல்லாரும் சேர்ந்து இருந்தா இப்படிதான் இருக்குமா” வேதன்‌. அவன் குரலில் ஏக்கம் தொணித்தது.

யாரும் பதில் கூறவில்லை. அனைவரும் அவனை சிந்தனையுடன் பார்த்தனர்.

“எனக்கு யாரும் கிடையாது. எங்கிட்ட யாரும் இதுவரை அன்பு காட்டியதும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை எனக்கு நான் மட்டும்தான் முக்கியம்” என்றான் வேதன்.

அவனைப் பார்க்க பாவமாகவே இருந்தது.

“நேத்து நான் செஞ்சது தப்பா எனக்கு இப்பவும் தோணல. எனக்கு கிடைக்கலைனா பிடுங்கி சாப்டிருப்பேன் நேத்தைக்கு. ஏனா சின்ன வயசுல எனக்கு நிறைய ஏமாற்றங்கள். நல்லவுங்களையே பாக்கலையோன்னு தோணுது. மது அக்கா மாதிரி யாராவது ஒருத்தர் எங்கிட்ட நடந்திருந்தாலும் நான் இப்படி சுயநலக்காரனா இருந்திருக்க மாட்டேன்” என்று வேதன் கூற, அனைவருக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது.

“நேத்து உனக்கு சாப்பாடு கொடுத்தது, உன் உயிரைப் பிடிச்சு வைக்கும்ங்கிறதுக்காக இல்லை. திரும்பவும் உன் மனசை சாகடிக்க வேண்டாம்னுதான். சின்ன சின்னதா பல ஏமாற்றங்கள் மனசைக் குப்பை ஆக்கிரும்” திருநல்லன்.

எவ்வளவு முதிர்ச்சியான வார்த்தைகள். இந்தக் கூற்றை அவர் கூற வேண்டும் என்றால், அவர் அவனைப் படித்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் வேதனைக் காணும் பொழுது தவறாகத் தெரியவில்லை.

“ச்ச…. இது என்ன கொடுமை. எனக்கு இப்படி உள்ள வீடுலாம் செட் ஆகாது. யாராவது நாலு பேருக்கிட்ட ஒரண்டை இழுக்கணும். யாராவது என்னைத் திட்டிட்டே இருக்கணும்” என்று தணிகை கூற, அனைவரும் சிரிப்பொலியில் அந்த இடத்தை நிறைத்தனர்.

*****************

தோகைமயில் சிறகொடிச்சு,
கோகிலத்தின் குரலறுத்து,
கோலமகளுக்கு மூளி வேசம் –
விழி முன்னே கடைப்பரப்பி விரிச்சு வச்சாலும் கண் கொண்டு காண்பவரும் இல்ல.
காது கொடுத்துக் கேட்பவரும் இல்ல.
புருவ மத்தியில் முடிச்சும் விழாம கடந்து போறான், நான் விதைச்ச நெல்லில் வயிறு வளத்தவன்.

அஞ்சாறு பயிர் செஞ்சு அறுசுவை நான் படைச்சேன்.
ஊருக்கு வயிறு நிறைஞ்சா என் வீட்டு பத்தாயமும் நிறைஞ்சு போகுமே.
நான் கேட்டதெல்லாம் என் வீட்டு பத்தாயம் முழுக்க பச்சை நெல் மட்டும்தான்.
பட்டினியாக் கிடக்கும் என் வீட்டுக்கு வருஷம் முழுக்க பந்தி வைப்பேனே வயிறு வளர்க்க.
கதையொன்னு சொல்லி, வாழ வகையொன்னு சொல்றேனு வெள்ளாமை செஞ்ச பூமிய அரிச்செடுக்க அமிலக்கரைச்சல் ஊத்தியாச்சே.
சீமையில் சமர்த்தனா என் புள்ள வருவான்னு கணாக் காண, கழனியில் உழவினத்தை அழிக்க ஒருத்தன் வருவான்னு நினைக்கலையே!
நான் பெத்தெடுத்த ரத்தினத்தை என் கண் முன்னே சீரழிக்க வருவான்னு எண்ணாம போனேனே!

வாழ வகையுமில்லை.
வயிறு நிறைய தொகையுமில்லை.
பரதேசியாய் பல தேசம் சுத்தியும் நெஞ்சு நிறையல – அதனால பல பனுவலுக்குள் அடைக்கலம் புகுந்துவிட்டேன். நஞ்செய்யும் புன்செய்யும் காகிதத்திலாவது வாழட்டும் என்று.

பரவாயில்லை. அதுக்கு கொஞ்சம் நெஞ்சில் ஈரம் இருக்கு. மரக்கூழில் இருந்து வந்தேன்னு அது பெருமை பேசல. மாறா என் வரண்டு போன பசுமையை காய்ந்து போன காகிதத்தில் தாங்கி நிக்கிது.

வாழ வழியில்லாம பிச்சை கேட்டு வரல.
உங்களுக்கும் வாழ வழிவகை செஞ்சு தாரேன்.
எனக்காக குரல் மட்டும் குடுங்க

என்று தன் மனப்புழுக்கத்தை எல்லாம் ஒப்பாரியாய் கொட்டிக் கொண்டிருந்தான் உழவன் ஒருவன்.

கணி, அதி மற்றும் கீர்த்தி அங்கு வந்தனர். அந்த ஊரையே அலசிவிட்டனர். அவர்களுக்கு ஆச்சரியம் மட்டுமே மிச்சம். எப்படி ஒரு கட்டுக்கோப்புடன் வாழ்கிறார்கள். படித்து முடித்து பட்டம் பெற்ற இளைஞர்களும், கழனிக்கே முதலுரிமை கொடுத்தனர். பணம் ஒரு பொருட்டாக கருதப்படவில்லை அங்கு.

“ஐயா, என்னங்க ஆச்சு? ஏன் இங்க உக்காந்தருக்கீங்க?” என்று கணி வினவ, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார் அவர்.

“எனக்கு பைத்தியம் புடிச்சிருக்கு” என்று அவர் கூற, மூவரும் திடுக்கிட்டனர்.

“என் உயிரை வேணாலும் எடுத்துக்க. என் நிலத்தைக் கொடுன்னு சொன்னேனே. யாரும் கேக்கலையே” என்று புலம்பிவிட்டு சென்றார் அவர்.

அவரின் செயல்கள் அனைத்தும் விசித்திரமாக இருந்தது. கிட்டத்தட்ட பைத்தியம் போல்தான்.

அப்படி என்ன அந்த நிலத்தின் மீது காதல். இப்படி பைத்தியமாய் சுற்றுமளவு. கை நிறைய ரூபாய் நோட்டுகள் தந்தாலும் வேண்டாம் என்று மறுக்கக் காரணம் என்ன? உன் பிள்ளை வளமான வாழ்வு வாழ்வான் என்று ஆசையும் எடுபடாமல் போகும் காரணம் என்ன? பதிலே இல்லாத வினாக்கள் எல்லாம். கொஞ்சம் காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் விற்கும் இந்த உலகத்தில், இவர்கள் மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்? அதற்கு ஒரு உழவனாய் பிறந்து உணர வேண்டும் போல.

ஒன்றும் புரிபடவில்லை கணிக்கு.

“நனி சொல்லிட்டு போனதுக்கு அர்த்தம் இன்னும் புரியலை” அதி.

“இந்த மீத்தேன் திட்டம் அவளோட கோவத்துக்கு காரணமா இருக்கலாம்” கணி.

“சார், அப்படினா, விவசாயி மேல ஏன் கோவமா இருக்கணும். அவுங்க பாவப்பட்டவுங்க இல்லையா?” கீர்த்தி.

“அதிகமான மகசூலுக்கு ஆசைப்பட்டு, பூச்சி மருந்தையும், மருந்து உரத்தையும் ஆதரிச்சது யாரு” கணி.

“அது அவுங்க தப்பு இல்லையே. அரசாங்கம் பரிந்துரை செஞ்சதை ஏத்துக்கிட்டாங்க. அதை பரிசீலனை செய்ற அளவு அவங்களுக்கு படிப்பறிவு இல்லையே” அதி.

“இதெல்லாம் உனக்கும் எனக்கும் தெரிஞ்ச ஞாயமான காரணிகள். ஆனா நனி ஒத்துக்குவாளா?” கணி.

“உண்மையா அவ வந்து சோழ பூமிய மீட்டுக் கொடுத்தா ரொம்ப நல்லாருக்கும். நம்மளால ஒன்னும் செய்ய முடியலையே” கீர்த்தி.

“அதி… உனக்கு ஏதாவது தோணுதா அந்த நிலத்தைப் பத்தி?” கணி.

“அந்த காத்தவராயன் நிலத்தைப் பத்தியா?” அதி.

“ஆமா..?”

“ப்ப்ஸ்… ஒன்னும் சொல்றதுக்கு இல்லை சார். அதெப்படி நெல் அப்படியே இருக்கும். ஏதோ மர்மம் இருக்கு” அதி.

“அதுதான் தெரியுமே. அது என்னவா இருக்கும்னு கேட்டா நீ இப்படி பதில் சொல்ற” என்ற கீர்த்தியை முறைத்தான் அதி.

“அந்த விளக்கெண்ணைத் தெரிஞ்சா நாங்க ஏதும் செய்ய மாட்டோமா?” அதி.

“போன தடவை மாதிரி சீக்கிரம் முடிக்க முடியுமா இந்த பிரச்சனையை. எல்லாமே மர்மமா இருக்கு” கணி.

“முடியும். நனி வந்து க்ளூ கொடுத்தா முடியும்” கீர்த்தி.

“சார்… எனக்கு அந்த நிலத்திலிருந்து ஒரு கைப்பிடி நெல் வேணும்” அதி.

“டேய் என்னடா… விளையாட்டா இருக்கா?” கீர்த்தி.

“எதுவுமே இல்லாம எப்படிடா சொல்ல முடியும்” அதி.

“ஏற்பாடு செய்றேன்” கணி.

“எப்படி?” கீர்த்தி.

“நாமளே களத்தில் இறங்க வேண்டியதுதான்” கணி.

“சார். தெரிஞ்சே உயிரை பணயம் வைக்க வேண்டாம்” கீர்த்தி.

“இன்னைக்கு நைட் போறோம். எடுக்குறோம்” என்று கணி கூறி முன்னே நடக்க, கீர்த்தி நனியை நினைத்துக்கொண்டே வந்தான்.

இந்த பிரச்சனைக்கு விடுவு காலம் வர வேண்டும் என்றால், அது ஒருத்தியால் மட்டுமே முடியும். நனி வருவாளா?

ஆரல் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்