Loading

அத்தியாயம் 4

அலுவலகத்திலிருந்து அவளது பாஸ் கொடுத்த வேலையைப் பற்றி எண்ணியபடி, யோசனையுடன் வீட்டை அடைந்தாள் உத்ஷவி.

இங்கோ, அக்ஷிதா விஹானாவிடம், தான் அடித்த பர்ஸை பெருமையுடன் காட்டிக் கொண்டிருந்தாள்.

“விஹா… அவன் பர்ஸ தேடும் போதும், நான் தான் அடிச்சேன்னு தெரிஞ்சதும் அவன் மூஞ்சி போன போக்க பார்க்கணுமே… எனக்கு ஒரே குஜாலா இருந்துச்சு டார்ல்ஸ்…” என்று வாய் விட்டு சிரித்தவளை, நொந்து பார்த்தாள் விஹானா.

“அடி பைத்தியமே… பிக் பாக்கட் அடிச்சதும் இல்லாம, அவன்கிட்ட நீதான் திருடி இருக்கன்னு உன் மூஞ்சியை காட்டிட்டு வந்துட்டு, அவன் மூஞ்சியை வர்ணிச்சுட்டு இருக்க. ஷவிக்கு தெரிஞ்சா உன்ன கொன்னே போட்டுருவா…” என்று அதட்டும் போதே உத்ஷவி வந்து விட்டாள்.

வந்தவள், விவரம் அறிந்து, அக்ஷிதாவை நெருப்புக் கக்கும் விழிகளுடன் பார்த்தாள்.

“அறிவு இருக்கா இல்லையா உனக்கு? தனியா போய் திருடணும்ன்னா, போய் உங்க உங்க வேலையை பார்க்க வேண்டியது தான. எதுக்கு என்  உயிரை எடுக்குறீங்க. இது அந்த பாஸ்க்கு தெரிஞ்சா உங்களோட சேர்த்து என்னையும் வெளில அனுப்பிடுவாரு. அப்பறம் நானும் உங்க கூட சேர்ந்து பிக் பாக்கெட் தான் அடிக்கணும்.” என்று கடுமையுடன் திட்டி விட்டு அறைக்குள் சென்றாள் புயலாக.

அக்ஷிதா தான் முகம் வாடி போய் விட்டாள். உத்ஷவிக்கு எரிச்சலாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, அவள் தனிக்காட்டு ராணி தான்! இப்போதோ, பாஸ் என்கிறவன், இவர்களை கூட்டமைத்து, பெரிய இடத்தில் கை வைக்க எண்ணி, கடந்த மூன்று மாதங்களாய் சிறு சிறு ‘ப்ராஜக்ட்’ கொடுத்து அவர்களை தயார் படுத்தினான்.

அவன் எண்ணியதை விட, உத்ஷவி இவர்களை உபயோகித்து, சிறு துரும்பாய் ஆதாரம் கூட கிடைக்காத அளவு கனக்கச்சிதமாக வேலைகளை   முடித்திருக்க, இப்போதோ மிகப்பெரிய சுமையை அவள் தலையில் போட்டிருந்தான்.

உத்ஷவிக்கு எப்போதும் பணத்தைத் திருடும் பழக்கம் கிடையாது. பொருட்களின் மீதே அதிக கண் இவளுக்கு. அதனைப் பயன்படுத்தி அவளது பாஸும், பணக்காரர்களின் வீட்டில் இருக்கும் டாக்குமெண்ட்ஸ், அல்லது அலுவலகங்களில் இருக்கும் முக்கிய திட்டம், ஃபார்முலா என்பது போன்ற பொருட்களை திருட வைப்பான். இதுவரை, ஒரு இடத்தில் கூட அவள் தேங்கி நின்றதோ, சொன்ன வேலையை முடிக்காமல் வந்ததோ கிடையாது.

அதற்கு கத்தையாக சம்பளமும் கொடுக்கப்படும். அடுத்த ப்ராஜக்ட் வரும் வரையில், அதனை விருப்பத்திற்கு செலவு செய்பவள், பின் பணம் தீரும் தருவாயில் மீண்டும் ப்ராஜக்ட் கேட்டு அவனை தொங்குவாள்.

அந்த டாக்குமெண்ட்களை வைத்து, அவன் என்ன செய்வான் என்ற அக்கறை எல்லாம் அவளுக்கு இல்லை. இப்போதோ, தன்னுடன் இரு பெண்களை வைத்துக் கொண்டு சில நேரம் பெரும் பாடாக இருந்தது.

கோபத்தில் பொரிந்து கொண்டிருந்த உத்ஷவி, சில நிமிடங்கள் கழித்தே ஆசுவாசமானாள்.

அதன் பிறகே, அக்ஷிதாவைத் திட்டியது மனதை குத்திட, அவர்கள் வந்த பிறகு, ஏனோ தானோவென இருந்த வாழ்க்கைக்கு சற்று அர்த்தம் கிடைத்தது அவளால் மறுக்க இயலாத உண்மை.

தான் திட்டும் போது, அக்ஷிதாவின் விழிகள் லேசாக கலங்கி இருந்தது அப்போது தான் உறைக்க, அவசரமாக வெளியில் வந்தாள்.

இங்கு அக்ஷிதா தான், உதட்டைப் பிதுக்கி, “நான் வேணும்ன்னா அவனை தேடி கண்டுபிடிச்சு, பர்ஸை திரும்பி குடுத்துடவா விஹா…” எனப் பரிதாபமாகக் கேட்க,

“அவனை எங்க போய் தேடுறது?” என விழித்தாள் விஹானா.

மூக்கை உறிஞ்சிய அக்ஷிதாவோ, “என்மேல ரொம்ப கோபமா இருக்காள்ல… என்ன திட்டிட்டு போய்ட்டா. உங்கள ரொம்ப தான் கஷ்டப்படுத்துறேனா. சாரி விஹா… அவளை மாதிரி, நேக்கு போக்காலாம் எனக்கு திருட தெரியாது. காச பார்த்துட்டா கை தானாவே போயிடுது.” என முகத்தை சுருக்கினாள்.

“ஹே… டார்ல்ஸ். இது என்ன கண்ணுல தண்ணிலாம் விட்டுட்டு இருக்க. நான் மட்டும் என்ன… எனக்கும் அதே கதை தான். ஏதோ ஆர்வத்துல பண்ணிட்ட விடு டார்லிங். ஷவி கொஞ்ச நேரத்துல கோபம் குறைஞ்சு வந்து உங்கிட்ட பேசுவா.” என்றாள் ஆறுதலாக.

“என்கிட்ட பேசுவாளா. இல்ல… பாஸ் கிட்ட சொல்லி, என்னை வேலைய விட்டு அனுப்பிடுவாளா. எனக்கு இந்த வேலை இல்லன்னா கூட பிரச்சனை இல்ல, பிக் பாக்கெட் அடிச்சு பொழச்சுக்குவேன். ஆனா, உங்களை விட்டு போறது தான் என்னமோ மாதிரி இருக்கு. அதுக்காகவாவது இந்த பாஸ் கிட்ட வேலை பாக்கணும்ன்னு தோணுது விஹா…” என்றதும் விஹானாவிற்கு மனதுருகிப் போனது.

“உன்னை யாரும் இங்க இருந்து அனுப்ப போறது இல்ல டார்ல்ஸ். அப்படியே இந்த ப்ராஜக்ட் எல்லாம் முடிஞ்சா கூட நம்ம ஒண்ணாவே இருக்கலாம். சரியா…” என்று சமன் செய்ய முற்பட, “இல்ல நீ பொய் சொல்ற. உங்க வேலை எல்லாம் முடிஞ்சதும் ஆளுக்கு ஒரு பக்கம் போய்டுவீங்க” என்றாள் பாவமாக.

“இப்ப என்ன பிரச்சனை உனக்கு?” அக்ஷிதாவை பார்க்கும் பொருட்டு, அறையை விட்டு வெளியில் வந்த உத்ஷவி அமர்த்தலாக பார்த்திருந்தாள்.

கூடவே, கோபம் மறைந்து, அவளது அலப்பறையில் புன்னகையும் மலர்ந்திருந்தது.

“நீ தான் என்மேல கோபமா இருக்கீல…” என அழும் பாவத்துடன் கேட்பவளிடம் எப்படி கோபத்தை இழுத்துப் பிடிப்பது?

நெற்றியை தேய்த்துக் கொண்ட உத்ஷவி, “கோபம்லாம் இல்ல டார்ல்ஸ்…” என்றாள் மென்மையுடன்.

“போ… நாங்க தான் உன் உயிரை எடுக்குறோம்ல” என்று மீண்டும் தலையை வெட்டினாள்.

“எடுத்துக்கோ அக்ஷி. எடுத்துக்கோ. இந்த உயிர் உனக்கு. எடுத்துக்கோ…” என்று வெகு தீவிரத்துடன் தளபதி வசனத்தை லேசாய் மாற்றிக் கூறியவளை மற்ற இருவரும் முறைத்துப் பார்க்க, உத்ஷவி பக்கென புன்னகைத்து, அக்ஷிதாவின் தலையில் நறுக்கென கொட்டினாள்.

“உன்னை அப்படி எல்லாம் எங்கயும் அனுப்பிட மாட்டேன் டார்ல்ஸ். தேவை இல்லாம, ஏதாவது சின்னதா செஞ்சு, நீ பிரச்சனைல மாட்டிக்க  கூடாதுன்ற பதட்டத்துல தான் கத்திட்டேன். சாரி…” என்று தலை சரித்துக் கண்கள் கொஞ்ச மன்னிப்பு வேண்டினாள்.

அவளது கூற்றில் மனம் ஆறுதலடைய, “நான் தான் சாரி சொல்லணும். இனிமே இப்படி பண்ண மாட்டேன் ஷவி” என்றவளை, திருப்தியுடன் ஏறிட்டாள்.

விஹானா தான், “ஐயோ போதுமே… உங்க செண்டிமெண்ட் சீனு பார்க்க முடியல…” என விளையாட்டாய் முறுவலித்து, பின், “பாஸ் என்ன சொன்னாரு ஷவி?” எனக் கேட்டாள்.

அதில் உத்ஷவியின் முகம் தீவிரமடைய, “ஏதோ பெரிய பணக்காரங்களாம்… அந்த வீட்ல டாக்குமெண்ட்ஸை சுருட்ட சொன்னாரு. பட் என்னன்னா அங்க வெறும் மூணு பேச்சுலர்ஸ் தான் இருக்காங்களாம்.” என்றாள் யோசனையாக.

“சூப்பரு… அப்போ, ஸ்கெட்ச் போட ஸ்டார்ட் பண்ணிடலாம்.” என்று அக்ஷிதா ஆர்ப்பரித்ததும்,

“நான் ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணிட்டேன். பாஸ் சொன்ன அந்த பங்களாவுக்கும் போய் பார்த்தேன். ரொம்ப கெடுபிடி, சேஃப்டி, செக்கியூரிட்டின்னு எதுவுமே இல்ல. மூணு பேருமே, காலைல போனா நைட்டு தான் வீட்டுக்கு வருவானுங்களாம். ஆனா, சில நேரம், யாராவது ஒருத்தர் வீட்லயே இருப்பானுங்க போல. அந்த வீட்டுல வேலை பார்க்குற பாட்டி ஒருத்தவங்ககிட்ட நைசா பேசி விஷயத்தை வாங்கி இருக்கேன். நைட்டு அவனுங்க தூங்குற டைம்ல போனா ஈஸியா வேலைய முடிச்சுடலாம்.” என்று திட்டவட்டமாகக் கூறினாலும், எதுவோ உறுத்தியது.

அத்தனை பெரிய பங்களாவிற்கு ஒரு வாட்ச்மேன் கூட இல்லை என்றது, பெரும் ஆச்சர்யம் தான்.

விஹானாவோ, “செம்ம… எப்போ அங்க போக போறோம்?” எனக் கேட்டதும்,

“இன்னைக்கு நைட்டு” என்றாள் சிந்தனையுடன்.

இரு பெண்களும் திகைத்து, “இன்னைக்கேவா?” என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

உத்ஷவி, “ம்ம்… இன்னைக்கே தான். பாஸ் ஓட ஆஃபர் அப்படி. எவ்ளோ சீக்கிரம் முடிக்கிறோமோ அவ்ளோ சீக்கிரம் நமக்கான செட்டில்மென்ட் கிடைக்கும். ஐ மீன், லைஃப் லாங் செட்டில்மென்ட்.” என்றதும் இருவரும் புரியாமல் நின்றனர்.

“புரியல…? இந்த வேலையை முடிச்சா, நமக்கு பத்து கோடி கிடைக்கும்” என்றாள் உத்ஷவி.

அவர்களோ திகைத்து நின்றனர். அக்ஷிதா “பத்து கோடியா? என்னடி சொல்ற? நிஜமாவா?” என்க,

“ஆமா டார்ல்ஸ். பாஸ் அப்படி தான் சொன்னாரு. ஆனா எனக்கு ஒன்னு தான் உறுத்துது” என்று லூசான போனி டெய்லை சரி செய்தாள்.

“என்ன ஷவி?” என புருவம் சுருக்கி விஹானா கேட்க,

“இவ்ளோ ஆஃபர் குடுக்குற அளவு, அங்க செக்கியூரிட்டின்னு எதுவும் இல்ல. ஈஸியா முடியிற வேலைக்கு ஏன் அவரு அவ்ளோ பரபரப்பா இருந்தாருன்னு தான் புரியல.” என்றதும்,

விஹானா, “ஒருவேளை நம்ம எடுக்க போற டாக்குமெண்ட்ஸ் அவ்ளோ முக்கியமானதா இருக்கலாம்ல.” என்றதும், அதனையும் ஒப்புக்கொண்டாள்.

மேலும் விஹானாவே, “எதுக்கும் நம்ம ஒரு ரெண்டு மூணு நாள் பொறுத்து பார்த்து…” என ஆரம்பிக்க,

“நோ, இதை இன்னைக்கே பண்றோம்.” என உறுதியாய் கூறியவளுக்கு, நாள் குறைய குறைய பேமெண்ட்டும் குறையும் என்று பாஸ் சொன்னது நினைவில் வந்தது.

———

இரவு நேரத்தில், முகக்கவசம், கையுறை, பாக்கெட் கத்தி, மேலும் டூல்ஸ் உடன் திருடத் தயாரானது பெண்கள் அணி.

வாடகைக்கு எடுத்த நேம் போர்ட் இல்லாத ஆம்னி வேனை ஓட்டிக் கொண்டு, பங்களா வாசலில் வந்து நின்றனர்.

பகலில் பார்த்ததை விட, இரவு விளக்கில் அவ்விடமே ஜொலித்தது.

உத்ஷவியே ஒரு கணம் அதன் அழகில் இலயித்துப் போனாள். மற்ற இருவருமோ வாயில் ஈ போவது கூட தெரியாமல் பங்களாவையே பார்த்திருந்தனர்.

கூடவே ஒரு மெல்லிய பயமும் எழுந்தது.

அக்ஷிதா “டார்ல்ஸ், உண்மையாவே இந்த பங்களாவுக்கு வாட்ச்மேன் இல்லையா?” என ஐயத்துடன் கேட்க, உத்ஷவிக்கும் அது உறுத்தினாலும், ‘சமாளிப்போம்… வெறும் பேச்சுலர்ஸ் தான இருக்கானுங்க. இந்நேரம் சரக்கை போட்டு மட்டையாகி இருப்பானுங்க’ என்று அசட்டையுடன் எண்ணினாள்.

பின், “விஹா நீ என் கூட வா. அக்ஷி, நீ கார்ல இருந்து, யாரும் வர்றாங்களான்னு வாட்ச் பண்ணு.” என்று ப்ளூடூத்தை காதில் மாட்டிக்கொண்டு, இறங்கினாள்.

‘விஹானாவும் உசுரோட இந்த பங்களாவை விட்டு வெளிய வரணும்ப்பா கருப்பசாமி…’ என ஒரு கும்பிடை போட்டு விட்ட, உத்ஷவியுடன் சென்றாள்.

சுவர் ஏறி குதிக்கும் பொருட்டு, விஹானா மதில்சுவரில் கை வைக்கப்போக, அவசரமாக உத்ஷவி தடுத்தாள்.

“விஹா… இங்க பாரு… கண்ணுக்கு தெரியாத கம்பியா இருக்கு…” என்று டார்ச்சை வைத்து கூர்ந்து நோக்கியவள், டெஸ்டரை உபயோகித்து அதனை சோதிக்க, அவள் எண்ணியது போன்றே அதில் இருந்து மின்சாரம் வெளிப்பட்டதில் இரு பெண்களும் அதிர்ந்தனர்.

“கரெண்ட் ஷாக் அடிக்கிற மாதிரி செட் பண்ணிருக்கானுங்க டார்ல்ஸ்” எனத் திகைத்த உத்ஷவிக்கு, எந்த பாதுகாப்பும் இல்லை என்ற போதே சந்தேகம் தான். அதனாலேயே ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைத்தாள்.

“ஆத்தாடி… இப்ப என்னடி பண்றது?” என விஹானா கேட்க, அவள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த டூல்சை வைத்து, அந்த கம்பிகளை முறிக்க முயற்சித்தாள்.

சில நிமிட நேரம் செலவழித்து, ஒரு ஆள் செல்லும் படி வழியை சரி செய்தவள், பின் உள்ளே குதிக்க, விஹானாவும் அவளுடன் குதித்தாள்.

இருந்தும், “ஒவ்வொரு அடியும் பார்த்து வை டி. அடுத்து என்ன வச்சுருக்கானுங்கன்னு தெரியல…” என்று உத்ஷவி எச்சரிக்க, விஹானாவும் மெல்ல அடியெடுத்து வைத்தாள்.

சட்டென, “ஷவி நில்லு!” என்று அவளை நிறுத்தி விட்டவள், “ஹே… அடுத்த ஸ்டெப் எடுத்து வச்சா கால் தரையோட புதையுதுடி. நான் மெல்ல ஸ்டெப் எடுத்து வச்சதுனால விருட்டுன்னு எடுத்துட்டேன். இல்லன்னா, அப்படியே உள்ள போயிருப்பேன்” என்று மிரண்டாள்.

“தெளிவா இருக்கானுங்கடி. பொதுவா இப்படி சுவர் ஏறி குதிச்சா, யாரும் நிதானமா வரமாட்டாங்க. வேக வேகமா பங்களாக்குள்ள போக தான் பார்ப்பாங்க. அதை கெஸ் பண்ணி தான் இப்படி புதைகுழி வச்சு இருக்கானுங்க. உள்ள போகணும்ன்னு நினைச்சாலே சங்கு தான்…” என்று உத்ஷவி, கணித்து கூறியதும், விஹா எச்சிலை விழுங்கினாள்.

பின், “சரி, நீ என்னை புடிச்சுக்கோ, எத்தனை ஸ்டெப்க்கு புதைகுழி இருக்குன்னு செக் பண்றேன்…” என்றவளால் டார்ச்சும் அடிக்க இயலவில்லை. அது வீட்டினரின் கவனத்தை அவர்களின் பக்கம் திருப்பும்.

விஹானா, உத்ஷவியை பிடித்துக் கொள்ள, அவளது உதவியுடன், கால்களை இயன்ற அளவு அகல விரித்து, தரையை சோதித்துப் பார்த்தவள், “ஒரு நாலு அடிக்கு புதை குழி இருக்குடி. அப்படியே குதிச்சு போய்டலாமா?” என்றதும்,

“நம்ம வேணும்னா அப்படியே குதிச்சு, காருக்கு போயிட்டு நாளைக்கு வரலாமா?” என மிரட்சியுடன் கேட்டாள் விஹானா.

“மூடிக்கிட்டு தாவுடி…” என்ற உத்ஷவி, பாய்ந்து மறுபுறம் தாவினாள்.

“எங்க தாவுறது… நானே தவந்துட்டு இருக்கேன்” என்று புலம்பிய விஹானா, முழு பலத்தையும் உபயோகித்து, புதைகுழியை தாண்டி விட்டாள்.

அத்தியாயம் 5

“அடுத்து, என்னத்தை வச்சு இருக்கானுங்களோ தெரியலடி. நாய் ஏதாவது இருக்குமோ” என விஹானா மிரண்டு கேட்க,

உத்ஷவி, “ம்ம்ஹும், நாய் எல்லாம் இல்ல. தைரியமா வா…” என்றபோதே, “ஒருவேளை காலை வச்சா வெடிக்கிற மாதிரி கன்னி வெடி எதுவும் வச்சுருக்க போறானுங்கடி.” என்றாள் விழித்து.

“இந்த நேரத்துல கன்னியை வேணா வச்சு இருப்பானுங்க.” என நமுட்டு நகையுடன் உத்ஷவி கலாய்க்க, அவளை வெறியுடன் முறைத்த விஹானா, “நானே மரண பயத்துல வர்றேன். உன் மொக்கையை மூட்டை கட்டிடு.” என மூச்சிரைத்தாள்.

வெற்றியுடன் கதவை நெருங்கி விட்டனர். கையில் வைத்திருந்த டூப்ளிகேட் சாவிகளை உபயோகித்து, கதவை திறக்க முயன்றவர்களுக்கு, அந்தோ பரிதாபம் அது முழுக்க முழுக்க, பாஸ்வர்ட், கைரேகைகளை கொண்டு திறக்கும் ‘ஸ்மார்ட் டோர்’ என்று தெரியவில்லை. 

சிறிது நேரம் கழித்தே, உத்ஷவிக்கு அது புரிபட, அவசரமாக தோளில் மாட்டி இருந்த லேப்டாப் பையிலிருந்து, மடிக்கணினியை ஆன் செய்தாள்.

“இந்த நேரத்தில நீ லாப்டாப்ல கேம் விளையாட போறியாடி” என விஹானா கடுகடுக்க, “ப்ச்… நான் இந்த டோரை ஹேக் பண்ண போறேன்.” என்று தீவிரத்துடன் மடிக்கணினியில் மூழ்கினாள்.

“இதுலாம் தெரியுமா உனக்கு? இந்த வித்தையை எல்லாம் நீ இதுவரை காட்டுனதே இல்லையே டார்ல்ஸ்…” என்றாள் வியப்பாக.

“ஓரளவு, இன்டெர்னட்ல கத்துக்கிட்டேன். ரொம்ப டீப்பாலாம் தெரியாது. ஜஸ்ட் எனக்கு தெரிஞ்சதை வச்சு ட்ரை பண்ணி பாக்குறேன். இதுவரை நம்ம போன வீட்ல இப்படி ஸ்மார்ட் டோர்லாம் இல்லைலடி.” என முயற்சி செய்தவளால் அதனை ஹேக் செய்து திறக்க இயலவில்லை.

இன்டர்நெட்டின் உதவியுடன், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்திட, இம்முறை அவள் முயற்சி வெற்றிபெற்றது.

விஹானாவிற்கு தான் மிகவும் திகிலாக இருந்தது. ‘எப்பவும் போவோம் வருவோம்… சிசிடிவியை ஜாமர் யூஸ் பண்ணுவோம். ஆனா, இது பிக்பாஸ் வீடு மாதிரி பல டாஸ்க் இருக்கே…’ என எண்ணியவளுக்கு எதற்கு வந்தோம் என்றே மறந்து விட்டது.

“ஆமா, இப்ப நம்ம ஏன் இங்க வந்து இருக்கோம்?” ஹஸ்கி குரலில் கேட்ட விஹானாவின் குரலே பயத்தில் நடுங்கியது.

“ம்ம்… புருஷன் வீட்டுக்கு விளக்கேத்த வந்துருக்கோம்… கேக்குறா பாரு கேள்வி. திருட வந்துருக்கோம்.” என்றபடி பங்களாவினுள் நுழைந்து விழிகளை சுழற்றினாள் உத்ஷவி.

“அது தெரியுதுடி. எப்பவும் ஒரு ஸ்கெட்ச் போட குறைஞ்சது ஒரு வாரம் ஆச்சு எடுத்துப்போம். இந்த ப்ராஜெக்ட் பத்தி நம்ம பாஸ் மார்னிங் தான் சொன்னாரு. இன்னைக்கு நைட்டே இதை எக்சிகியூட் பண்ணனுமா. நான் ஏதோ நார்மல் பிராஜக்ட்ன்னு நினைச்சேன். ஆனா இந்த வீட்ட பார்த்தா அப்படி தெரியல ஷவி.” என புலம்பியவாறு அந்த நவீன பங்களாவை மிரட்சியுடன் பார்வையிட்டாள்.

உத்ஷவிக்கும் அது உறுத்தியது தான். ஆனாலும், எப்போதும் போல அதனைக் கருத்தில் கொள்ளாமல், “பொலம்பாம… நீ கீழ இருக்குற ரூம்ஸ்ல சுருட்டு. நான் மேல இருக்குற ரூம்ஸ்ல சுருட்டுறேன்.” என விஹானாவிற்கு வேலையை பிரித்துக் கொடுத்து விட்டு, கையில் மாட்டி இருந்த கையுறையையும், முகமூடியையும் அட்ஜஸ்ட் செய்தபடி படியில் ஏறினாள்.

மாடியில் இருந்த அறைகளில் ஒவ்வொன்றாக நுழைந்த உத்ஷவி, ‘ச்சை… சரியான கஞ்சப் பிசுனாரி வீடா இருக்கும்போல, ரூமுக்குள்ள ஒரு கப்போர்ட் கூட இல்ல. வெளில பார்க்க தான் பிரம்மாண்டமா இருக்கு.’ என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

அந்த வீட்டின் உள்வடிமைப்பு அப்படி. சுற்றி சுற்றி வெறும் சுவர் மட்டுமே இருந்ததே தவிர, எங்கும் ஒரு சிறிய கப்போர்டை கூட காண இயலவில்லை.

‘இதேதுடா பெரிய தலைவலியா இருக்கு… வந்ததுக்கு ஒரு டீ குடிக்க கூட ஒண்ணும் கிடைக்காது போல. சோ சேட்!’ என்றவள், காதில் மாட்டி இருந்த ப்ளூடூத்தை அழுத்தி, “விஹா… ஏதாச்சு கிடைச்சுதாடி?” எனக் கேட்க,

“அதை ஏண்டி கேக்குற. இங்க ஒரு ரூம்குள்ள நுழைஞ்சேன். ரூமா அது… கண்டதை, கண்ட இடத்துல போட்டு வச்சுருக்கான்டி. பேச்சுலர்ஸ் வீடுன்னு சொன்னப்பவே உசார் ஆகிருக்கணும். நீ தான் பேச்சுலர்ஸை ஏமாத்துறது ஈஸின்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்ட. தரைல காலை வைக்க முடியலடி. சட்டை ஒரு பக்கம், பேண்ட் ஒரு பக்கம், உள்ள போடுறதை கூட ஏதோ அலங்கார பொருள் மாதிரி சேர்ல மாட்டி வச்சு இருக்கான்டி. உள்ள நுழைஞ்சா சிகரெட் வாடை வேற குமட்டுது. ஆனா, பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்லை. இந்த பங்களாவை வேணும்ன்னா அனுமான் மாதிரி தோள்ல தூக்கிட்டு போகலாம். கடைசியா அதை தான் பண்ணனும் போல.” விஹானா தான் புலம்பி தள்ளி விட்டாள்.

பங்களாவின் வெளிப்புற அழகை ‘ஆ’ வெனப் பார்த்துக் கொண்டிருந்த அக்ஷிதா, இவர்களின் உரையாடலைக் கேட்டு, “சும்மா பினாத்தாதீங்கடி. வாட் அ மார்வலஸ் பங்களோ. முதல்ல கிட்சனுக்குள்ள போய் கூலிங்கா ஏதாச்சு இருக்கான்னு பாருங்க. இந்த மாதிரி இடத்துலலாம், பிரிட்ஜ்ல நிறைய சாப்புடுற பொருள் வச்சுருப்பானுங்க.” என பல்லைக் காட்டினாள்.

உத்ஷவி தான் தன்னை நொந்து, “இப்படியே பேசிட்டு இருந்தா, கடைசில ஜெயில்ல களி தான் திங்கணும். வந்த வேலையை பாருங்கடி அப்பரசண்டிங்களா.” எனத் தீவிரத்துடன் கூறி விட்டு, மற்றொரு அறைக்குள் நுழைந்தாள்.

மெல்லிருட்டில், யாரோ மெத்தையில் உறங்குவது உணர்ந்து, அவ்வறையை சுற்றிப் பார்க்க, அது விஹானா கூறியது போல அல்லாமல், சுத்தத்தின் மறுபெயராக இருந்தது.

ஆனால், வழித்து எடுத்தது போல, அங்கும் சுவற்றில் ஒரு கப் போர்ட் கூட இல்லை. ‘இந்த ப்ராஜக்ட் ஹோகயா தான்… பாஸ் கோடிக்கணக்கில காசு தரேன்னு சொன்னப்பவே நினைச்சேன். இப்படி டிவிஸ்ட் இருக்கும்ன்னு’ என மனதினுள் எண்ணியபடி, பூனை போல அடியெடுத்து வைத்து உள்ளே முன்னேறியவள், ட்ரெஸ்ஸிங் டேபிள் ட்ராயரை அதற்கு வலிக்காமல் திறந்தாள்.

அங்கு, வாட்ச், பாடி ஸ்ப்ரே, குளிர் கண்ணாடி இதர சில இத்தியாயங்களை தவிர வேறு ஒன்றும் இல்லை.

அந்த சாம்பல் நிற கண்ணாடி உத்ஷவின் கவனத்தை கவர, ‘ஹை….! காலைல பார்த்த க்ளாஸ் மாதிரியே இருக்கு’ என்று அதனை எடுத்து அணிந்து கொண்டாள்.

“ம்ம். நைட் விஷன் க்ளாஸ் பக்கா…” என்றெண்ணி, கண்ணாடியில் உடலையும் முகத்தையும் முழுதாய் கவர் செய்திருந்த தன்னை ஒரு முறை ரசித்துக் கொண்டவளுக்கு, சிறிது நேரத்தில் எரிச்சலாக வந்தது.

பின்னே, எண்ணிய காரியத்தை முடிக்காமல் எந்த வீட்டில் இருந்தும் அவள் பாதியில் வந்ததில்லையே. இப்போது என்னவென்றால், ஒன்றை கூட திருட இயலாமல், மீண்டும் ஒரு முறை வீட்டை அலசி ஆராய்ந்து கிளம்ப எத்தனித்தாள்.

மாடியில் இருந்து இறங்கி வந்தவள், ப்ளூடூத்தின் வழியே, “விஹா… கிளம்பலாம்டி. இங்க ஒரு எழவும் இல்ல. பத்து ரூபா கூட வச்சுருக்க மாட்டானுங்க போல. பாஸ்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு அடுத்து பிளான் பண்ணிக்கலாம்” எனக் கிசுகிசுப்பாக கூறிக் கொண்டே வெளியில் செல்ல நினைக்கும் போதே, ஒரு வலிய கரம் அவளது வாயை மூடி பின்னிழுத்தது.

அதனை எதிர்பாராமல் தடுமாறியவள், விடுபட முயல, அவளால் நகர கூட இயலவில்லை. இரு கையையும் வாயையும் பிடித்துக் கொண்ட அந்த உருவம், அவள் காலால் அவனைத் தாக்க வருவதை உணர்ந்து, காலாலும் அவளை வளைத்துப் பிடித்துக் கொண்டதில் உத்ஷவிக்கு வியர்த்து வழிந்தது.

கூடவே தன்னை பிடித்திருப்பது மனிதனா அல்லது டைனோசரா என்ற அச்சம் வேறு உள்ளுக்குள் பொங்கியது. ‘மனுஷன்னா கொஞ்சமாவது நகர ஈஸியா இருக்குமே…’ என எண்ணும் போதே, அவ்வுருவம் அவளை தரதரவென எங்கோ இழுத்துச் சென்றது.

———

விஹானா அந்த அறையை விட்டு வெளியில் வர தான் முயற்சித்தாள். ஆனால் முடியவில்லை. திறந்திருந்த அறைக்குள் நுழைந்தவளுக்கு, அந்த அறைக்கதவு எப்போது பூட்டப்பட்டது என்றே தெரியவில்லை. முதலில் சுற்றிலும் இருந்த சுவரில், எது கதவு என்றே தெரியாமல் தடதடத்த மனதுடன் நின்றிருந்தாள்.

சுவரையும் கதவையும் பிரித்து கண்டறிய இயலாதபடி இருந்தது, அந்த அறையின் வடிவமைப்பு.

தனக்கு பின்னால், வெகு அருகில் சிகரெட் புகை வந்ததில், சட்டென பின்னால் திரும்பி நகன்று நிற்க, அங்கு விழிகளில் அனல் பறக்க நின்றிருந்தான் ஜோஷித் அவ்தேஷ்.

அவனைக் கண்ட நொடியில் இதயமே நின்று விட்டது அவளுக்கு. பார்க்க மலைமாடு மாதிரி இருக்கானே. இவன் அடிச்சா நான் தாங்குவேனா. அய்யயோ ஜெயில்ல ஒரு மணி நேரம் குளிக்க விடுவாங்களான்னு தெரியலையே… என பதறியவள், அவன் அவளருகில் நெருங்கியதில் மயங்கி விழுந்தாள்.

—–

பங்களாவின் அழகை, காருக்குள் இருந்து ரசித்தது போதாதென்று, வெகு சிரத்தையாக ஜன்னலின் வழியே தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷிதா. கையில் பசிக்காக எடுத்து வந்த சிப்ஸ் பாக்கெட்டுடன்.

“நைட்டு நேரத்துல இத்தனை லைட்டை போட்டு வச்சுருக்கானுங்களே… கரெண்ட் பில்லு எகிறிடாது?” என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.

அந்நேரம், சஜித் அவ்தேஷ் காரில் வீடு நோக்கி வந்து கொண்டிருக்க, தூரத்திலேயே தங்களது பங்களாவிற்கு அருகில் நின்ற வேனையும், அக்ஷிதாவையும் பார்த்து விட்டு பல்லைக் கடித்தான்.

“பர்ஸை அடிச்சது பத்தாதுன்னு வீட்டுக்குள்ள வந்து திருட பாக்குறியாடி…” என கறுவியவன், காரை தூரத்திலேயே நிறுத்தி விட்டு, மெல்ல நடந்து வேனின் அருகில் சென்றான்.

அவளுக்கு மறுபுறம் இருக்கும் கதவை சத்தம் வராமல் திறந்தவன், பூனை போல உள்ளே ஏறி அமர்ந்து, “என் பர்ஸ் எங்கடி?” என்று கர்ஜனையுடன் கேட்டான்.

திடீரென கேட்ட குரலில் இருக்கையிலேயே பயந்து துள்ளியதில், கையில் வைத்திருந்த சிப்ஸ் பாக்கெட் சஜித் மீது மழையாக பொழிந்து அபிஷேகம் செய்தது.

——

உத்ஷவியை ஏதோ ஒரு அறைக்குள் தள்ளிய அவ்வுருத்திற்கு சொந்தக்காரனாக ஸ்வரூப் அவ்தேஷ், அவள் மறுக்க மறுக்க, அவளது முகமூடியைக் கழற்றினான்.

அவளை பார்த்த கணம் திகைத்து, ‘காலைல இவளை தான பார்த்தோம்?’ என சிந்தித்திட, அவளும் அவனை இங்கு எதிர்பாராமல் சற்று திகைத்தாள்.

“யாரு நீ?” எதிரில் அவள் உருவகப்படுத்திய டைனோசராகிய மனிதன் அவளை விழிகளால் அளவெடுத்துக் கொண்டிருந்தான்.

ஏற்கனவே அவள் முகமூடி அவனால் பறிக்கப்பட்டிருக்க, கையில் இருந்த கிளவ்சையும் கழற்றி இருந்தவள், இடுப்பில் கை வைத்து சுற்றி முற்றி பார்த்தாள்.

அது ஏதோ பழைய ஜாமான் வைக்கும், ஸ்டோர் ரூம் போல இருந்தது.

அவள் முன் சொடுக்கிட்டவன், “உன்னை தான். யாரு நீ?” இம்முறை குரலில் அழுத்தம் மிகுந்தது.

“ப்ச்… என்னை தெரியல. நான் தான் இந்த ஜில்லா கலெக்டர்…” என நக்கலாக பார்த்தாள் அவள்.

அவன் மொக்கை வாங்குவான் என எதிர்பார்க்க, அவனோ பார்வையை மாற்றாமல் நின்றிருந்தான்.

அவளுக்கு தான் அவன் பார்வையே மூச்சு முட்டியது.

“இப்ப எதுக்கு இப்படி பாக்குற? உன் வீட்டுல திருட வந்தேன். மாட்டிக்கிட்டேன். அவ்ளோ தான்.” என தோளைக் குலுக்கினாள்.

அவளது ஷர்ட்டின் நடுவில் தொங்க விட்டிருந்த அவனின் குளிர் கண்ணாடி மீது பார்வையை படர விட்டவன், “கூலிங் க்ளாஸ் திருடியா நீ?” என அமர்த்தலாக கேட்டு, நொடியில் அதனை எடுக்க கையை தூக்கினான்.

தற்செயலாக கையால் தன்னை மறைத்துக் கொண்டவள், “என்னடா பண்ற?” என மிரள, “எனக்கு என் க்ளாஸ் வேணும். நீ குடுக்குறியா இல்ல…” என இழுத்தபடி மீண்டும் கையை அவளை நோக்கி நீட்டினான்.

“இரு இரு…” அவனை முறைத்தபடி நிறுத்தியவள், அவளே கண்ணாடியை எடுத்துக் கொடுக்க, அதனை வாங்கி அவனது டீ ஷர்ட்டின் நடுவில்  தொங்க விட்டுக் கொண்டவன் அவளை போலவே, “இட்ஸ் சோ ஹாட்” என்றான் விஷமமாக.

“ஹா என்னது…?” உத்ஷவி புரியாமல் கேட்க,

“கிளாஸை சொன்னேன்.” சொல்லி விட்டு மீண்டும் அவளை அளக்கும் வேலையை தொடர்ந்திட, அவன் கூறிய உள்அர்த்தம் புரிந்து, சூடானாள்.

இருந்தும் அதனை அடக்கிக் கொண்டு, “வழி விடு. நான் போகணும்.” என அவனைத் தாண்டி செல்ல எத்தனிக்க,

“இன்னும் ட்ரெஸ்க்குள்ள எதையெல்லாம் திருடி மறைச்சு வச்சுருக்க மிஸ். திருடி.” எனக் கேட்டவனின் பார்வை ஏனோ அவளை சற்றே நடுங்க வைத்தது.

“இங்க பாரு. இங்க திருடுறதுக்கு ஒரு மண்ணும் இல்லன்னு உனக்கே நல்லா தெரியும். வேஸ்ட் ஆஃப் டைம் ஆகிடுச்சு. ஒழுங்கா என்னை விடு.” என மிரட்டினாள் பயத்தை மறைத்துக் கொண்டு.

“இதுவரைக்கும் திருடல… ஓகே… ஆனா நீ எதை திருட வந்த?” அவனது கூர்மையான கேள்வியில் திணறியவள், “பணத்தை தான் திருட வந்தேன்.” என்றாள் எச்சிலை விழுங்கி கொண்டு.

“இஸ் இட்?” தீவிரத்துடன் கேட்டபடி, அவளை நோக்கி முன்னேறியதில், அவள் பின்னோக்கி சென்றாள்.

“ஆமா… கா… காசு தான் திருட வந்தேன்…” காற்று தான் வந்தது உத்ஷவிக்கு.

“ம்ம்ஹும்… நீ திறந்து பார்த்த ட்ரெஸ்ஸிங் டேபிள் ட்ராயர்ல பணம் இருந்துச்சே. அதை எடுத்துட்டு கிளம்பி இருக்கலாமே.” என அர்த்தப்பார்வை பார்க்க, ‘நான் அதை திறந்தது இவனுக்கு எப்படி தெரிஞ்சுச்சு’ என்ற ரீதியில் விழித்தாள்.

அவனது விழிகள் இப்போது நெருப்பை கக்க, “சொல்லு. அந்த பணத்தை ஏன் எடுக்கல. பணம் இல்லன்னா வேற எதை திருட வந்த?” கிட்டத்தட்ட கர்ஜித்தவன், அவள் திகைத்து நிற்பதைக் கண்டு, இதழ்களை சிறிதாக வளைத்து குரூர புன்னகை சிந்தினான்.

“சோ நீ சொல்ல மாட்ட… ம்ம்… அப்போ பதில் சொல்ற வரை இங்கயே இரு.” என்று அவள் கண்ணிமைக்கும் நேரத்தில், அவளை ஸ்டோர் அறையில் அடைத்துப் பூட்டினான் ஸ்வரூப் அவ்தேஷ்.

முதலும் முடிவும் நீ!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
46
+1
5
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Indhu Mathy

      விஹா ஷவி அக்ஷிதா 🤣🤣🤣🤣🤣 செம காமெடி… 😂😂😂😂😂 அலிபாபா குகைக்குள்ள மாட்டிகிட்ட மாதிரி மூணு ஆடுங்களும் தானா வந்து தலையை குடுத்துடுச்சுங்க… அவனுங்களை பத்தி தெரியாம.. 😝😝😝😝