Loading

“ம்ஹூம்! உன் முகத்தைப் பார்த்ததும் அங்கே என்ன நடந்ததுன்னுக் கண்டுபிடிச்சுட்டேன்” என மனைவியைச் சமாதானம் செய்தான் அற்புதன்.

“அவங்களுக்கு இருக்கிற வேதனை இன்னும் குறையலைங்க” என்றாள் யக்ஷித்ரா.

“நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு நீ முழுசாக சொல்லலை” என்று குறிப்புணர்த்தினான்.

“அதைச் சொல்லவே உடம்பெல்லாம் நடுங்குது” என்று அவனது மார்பில் சாய்ந்து அடங்கிக் கொண்டாள் மனைவி.

“எனக்குப் புரியாமல் இல்லை. ஆனால், உங்க அப்பாவோட நடவடிக்கைகள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கனும்னு நினைக்கிறேன். அப்போ தான் என்னால் ஆன உதவியும் பண்ண முடியும்” என்று புரிய வைத்தான் அற்புதன்.

———————————————–

ஒன்பதாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்த சமயம்,

முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை, வேறு ஒரு பள்ளியில் படித்து விட்டு, அங்கே அதற்கடுத்த வகுப்புகள் இல்லாத காரணத்தால், வேறு ஒரு மேல்நிலைப் பள்ளியில் வந்து சேர்ந்திருந்தாள் யக்ஷித்ரா.

அவளுக்குத் தனது வகுப்புத் தோழி மட்டுமில்லாமல், இருக்கையில் தன்னுடனேயே அமர்ந்திருக்கும் நிவேதிதாவை மிகவும் பிடிக்கும். அதை விட, தோழியின் குரல் வளம் மிகவும் ஈர்த்தது யக்ஷித்ராவை.

வகுப்பிற்கு வந்த முதல் வாரத்தில்,

“நீங்க பிரேயரில் நல்லா பாட்டுப் பாடுறீங்க!” என்று நிவேதிதாவைப் பாராட்டினாள்.

“தாங்க்யூ டா” என்று நன்றி தெரிவித்தாள்.

ஒரு நாள், “கந்த சஷ்டி கவசம் பாடுவீங்களா?” என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டாள் யக்ஷித்ரா.

“பாடுவேனே”

“அப்போ எனக்காக ஒரு தடவை அதைப் பாடிக் காட்டுங்களேன்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவும்,

அவளுக்காக அந்தப் பாடலை மனமுருகப் பாடினாள் நிவேதிதா.

கண்களை மூடி அதைக் கேட்டு மகிழ்ந்த யக்ஷித்ரா,”ரொம்ப அழகும்மா!” என்று அவளுக்குப் புகழாரம் சூட்டினாள்.

அன்றிலிருந்து அவளுடைய ஆஸ்தான தோழியாகவே நிவேதிதா மாறி விட்டாள்.

யக்ஷித்ரா தீவிர கடவுள் பக்தை, அதுவும் முருகப் பெருமான் தான் அவளுடைய இஷ்ட தெய்வம்! அதனால் தான் கந்த சஷ்டி கவசப் பாடலை எப்போதும் கேட்டபடியே இருப்பாள்.

அவளுக்கும், நிவேதிதாவிற்குமான நட்பின் பிணைப்பு, இன்னும் அதிகமாக வலுவானதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். 

தோழியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தாயிடமும்,தங்கையிடமும் அறிமுகம் வேறு செய்து வைத்து விட்டாள் யக்ஷித்ரா.

அப்போதிலிருந்து, அவர்களும் நிவேதிதாவின் இனிமையான குரலுக்கு அடிமையாகி விட்டனர்.

“நீ ஏன் இவ்ளோ சத்துக் குறைவாக இருக்கிற?” என்ற தோழியின் கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என முழித்தாள் யக்ஷித்ரா.

பார்ப்பதற்கு மெல்லிய தேகம் கொண்டவள் தான் அவள்! ஆனாலும், அதை விட மெலிதாகிப் போய்க் கொண்டிருந்தாள், அதை தான் கண்டு கொண்டு, நண்பியிடம் வினவி இருந்தாள் நிவேதிதா.

மனக்குறைகள் போதுமே, உடலையும் உருக்குலைத்து விடும்! அந்தப் பாதிப்பில் தான் உடல் வலு குறைவாகிக் கொண்டிருந்தது யக்ஷித்ராவிற்கு.

“என்னாச்சு ம்மா?” என்று பரிவாக கேட்டாள் தோழி.

“அதெல்லாம் இப்போ சொல்லப் பிடிக்கலை நிவி.நேரம் வர்றப்போ நான் கண்டிப்பாக உங்கிட்ட ஷேர் பண்றேன்” என்றவளை அதற்குப் பிறகு தொந்தரவு செய்யவில்லை நிவேதிதா.

ஆனாலும், அவளின் உடல் மெலிவைக் காணப் பிடிக்காமல், மதிய உணவு வேளைகளில், யக்ஷித்ராவைத் தன் உணவில் பாதியை விழுங்க வைத்து விடுவாள்.

யக்ஷித்ராவோ பொறுமையின் சிகரம். வீட்டில் நடக்கும் விசித்திரமான விஷயங்களுக்குக் கூட எதிர்வினை ஆற்ற மாட்டாள்.

அவளது தங்கை யாதவி கூட சுட்டித் தனமாக எதையாவது கூறி விடுவாள். ஆனால் இவளோ, வாயே திறக்க மாட்டாள்.

இவர்களிருவருடைய தந்தைக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. மிகவும் புத்திசாலியானவர்.

பேராசிரியரான அவர், தன்னுடைய படிப்பில் பெற்ற அபரிமிதமான அறிவின் அடிப்படையில், பிரபலமான கல்லூரிகளின் பகுதி நேரம் பாடம் எடுக்கும் வேலையைத் தானாகவே கிரிவாசனிடம் ஒப்படைத்தார்கள்.

ஆனால், அவருடைய சுபாவம் வெகு வித்தியாசமானதாக இருக்கும். 

அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்,

“யாது!” என்று இரண்டாவது மகளை உரக்க அழைத்தார் கிரிவாசன்.

தன்னருகே வந்த மகளிடம்,”நீயும், அக்காவும் சாப்பாடு செய்யுங்க” என்று நாற்காலியில் அமர்ந்தவாறு உறுமினார்.

வெளியிலிருந்து வந்தவுடனே இப்படி கத்தி, உத்தரவிடும் தந்தையின் கோபத்திற்கு என்னக் காரணம்? எனக் கண்டறிய இயலாமல் அவர் சொன்னதைச் செய்ய முயன்றார்கள் அக்காவும், தங்கையும்.

“ஏன் நான் சமைக்கிறேனே ங்க?” என்று கணவனிடம் கேட்டார் மீனா.

எங்கிருந்து தான் அத்தனைக் கோபம் வந்ததோ,”ஒன்னும் தேவையில்ல. நீ போய்ச் சாய்ஞ்சு தூங்கு” என்று கனலைக் கக்கினார் கிரிவாசன்.

சென்ற இடத்தில் தான் ஏதோ நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்து கொண்ட மனைவியோ, எதுவும் சொல்லாமல் ஒதுங்கிக் கொண்டார்.

சமையலறையில் மகள்கள் படும் பாட்டைத் தான் அவரால் பொறுக்க முடியாது. எனவே, தண்ணீர் அருந்த, சிற்றுண்டியைச் சுவைக்க எனக் காரணம் வைத்து, கணவனுக்குத் தெரியாமல், உள்ளே சென்று சத்தமில்லாமல் அவர்களுக்கு உதவி செய்து விட்டு வருவார் மீனா.

இப்படித்தான் அவர்களது வீட்டின் நடைமுறைகள் இருக்கும்.

பத்தாவது படிப்பிற்கு, இருவரும் வெவ்வேறு வகுப்புகளில் பிரிந்து சென்று விட்டனர். ஆனாலும், மதிய உணவு வேளையின் போது, ஒன்றாக அமர்ந்து தான் உண்பர்.

ஒரு நாள் மாலை,”வீட்டுக்கு வந்து எவ்ளோ நேரமாகுது! தண்ணீர் கொண்டு வாங்க” என்று கர்ஜித்தார் கிரிவாசன்.

அடுக்களைக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டு இருந்தது மீனாவிற்கு. அதனால், கணவனுக்கு நீரைக் கொண்டு போய்த் தருவதற்கு, இளையவளை அனுப்பி வைத்தார் அந்த அன்னை.

யாதவி கொணர்ந்த செம்பை ஒரு பார்வை பார்த்து விட்டு,”உங்க அம்மா எங்க?” என்று வினவினார்.

“உள்ளே இருக்காங்க அப்பா” எனவும்,

“ஏன் அவங்க கொண்டு வர மாட்டாங்களோ?” என்றவுடன்,

தடாலென்று அங்கு வந்து, மகளுடைய கரத்திலிருந்த சொம்பை வாங்கிக் கணவனிடம் கொடுக்க வந்தார் மீனா.

“இப்போ மட்டும் எப்படி கை நீளுது? நீயே வாங்கிக் கொடு யாது” என்று இளைய மகளுக்குக் கட்டளை பிறப்பித்தார் கிரிவாசன்.

அந்த நேரத்தில், நல்லவேளையாக, யக்ஷித்ரா வீட்டில் இல்லை.சிறப்பு வகுப்பிற்குச் சென்றிருந்தாள். இல்லையென்றால், பயத்தால் மூச்சுத்திணறல் வந்திருக்கும் அவளுக்கு.

இப்படியான தந்தை இருக்கிறாரா? என்று கேட்டால், நிச்சயம் இருக்கிறார்கள். அவர்களது பிள்ளைகளைத் தத்தளித்துத் தவிக்க விடாமல், அவர்களுக்கான கடமையைச் செவ்வனே செய்து விடுவார்கள். ஆனாலும், இந்த குணங்களையும் விட்டு விட‌ மாட்டார்கள்.

இதை மாற்றிக் கொள்ள முயற்சிப்பது அவர்களிடம் தான் இருக்கிறது.

மிதிவண்டியை வெளியே நிறுத்தி விட்டு, வீட்டினுள் நுழைந்தாள் யக்ஷித்ரா.

உடுத்தியிருந்த பள்ளிச் சீருடையை அவிழ்த்து எறியும் ஆவேசம் அவளுக்கு. அந்தளவிற்கு, வியர்வையில் குளித்து இருந்தாள். வீட்டின் நீள் சாய்விருக்கையில், சாய்ந்து அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்ததும், விடுவிடுவென்று அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள் யக்ஷித்ரா.

– தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்