Loading

“மாளாத் துயரில் இருந்து மனித இனம் மீளப் போவதில்லை.. என்னை சிறிதும் பெரியதுமாக சிதைத்தற்கு என்றாவது ஒருநாள் விடை கூறிட வேண்டும் மனித இனம். தயாராய் இருங்கள்” நனியிதழ்.

வந்தவள் அவள் வேலை முடிந்தது என்று சென்றுவிட்டாள் நனியிதழ்.

“சார் அந்த பொண்ணு போகுது போய் புடிங்க சார்.. புடிங்க சார்..” என்று திராவிடன் கத்தவும்தான் மற்ற மூவரும் சுய நினைவுக்குத் திரும்பினர்.

“என்னது பிடிக்கனுமா.. உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா..” கீர்த்தி.

“உங்களுக்கு தான் கிறுக்கு பிடிச்சிருக்கு… அவ ஏதோ தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவளா இருக்கணும்…” திராவிடன்.

“யாரை பிடிக்கணும்..? யாரை‌ சொல்ற..” அதி.

“அவளதான்.. அந்த பொண்ணு ஏதோ தப்பு பண்ணுது சார்.. விவசாயத்தப் பத்தி அந்த பொண்ணு எப்படி தப்பா பேசலாம்..”

“அந்த பொண்ணு சொன்னதுல எதுவும் தப்பு இருக்க மாதிரி தெரியல எனக்கு…” அதி.

“விவசாயத்தை எப்படி தப்புன்னு சொல்லலாம்..” திராவிடன்.

“அவ விவசாயத்த தப்புன்னு சொல்லிட்டு போகல. அவளோட கண்ணோட்டம் புரியல உனக்கு.. அவ இயற்கை அன்னை..” என்றான் அதி அவனுக்கு புரிய‌ வைத்திடும் நோக்குடன்..

“என்ன சார் உளறிட்டு இருக்கீங்க.. அப்படிலாம் யாரும் கிடையாது..” திராவிடன்.

“டேய் கிறுக்கு… காத்து கறுப்பு இருக்குன்னு நம்புற… நீ சொன்னப்போ நாங்க நம்பல. இயற்கை அன்னை இருக்காங்கன்னா நம்ப மாட்டியோ..” கீர்த்தி.

“நீங்க எங்க நம்புனீங்க..”

“நாங்க நம்பலைனாலும் நீ இப்போ நம்புற..”

“இந்த மிரட்டுர வேலைலாம் வச்சுகாதீங்க.. ரெண்டு வருஷம் முன்னாடி உடைக்க முடியாத கேஸ கண்டுபிடிக்க கணி சாருக்கு இவதான் உதவி செஞ்சா..” என்ற அதியைப் பைத்தியம் போல் பார்த்துவைத்தான் திராவிடன்.

“ஐயோ அவ தப்பிச்சு போயிட்டா..?” திராவிடன்.

“திரும்ப வரனும்னா ஒரு செடிய புடிங்கி போடு… வந்து கைல வச்சிருக்க கல்லிச்செடியாலே அடிப்பா..” அதி.

கணி இன்னும் முழுமையாக நினைவுலகுக்கு வரவில்லை. மது பல்லவியுடன் இருந்த பொழுதுகளுக்கு இடம் பெயர்ந்திருந்தது. அவள் காணாமல் போகும் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்ததை நினைத்துப் பார்ததான்.

**********

அவன் தீவிரமாக ஒரு விசாரணையில் இருந்த போது, இடைஞ்சலாக அலைபேசி அழைப்பு வர, அதை துண்டித்துக் கொண்டே இருந்தான் கணி. மது பல்லவிதான் அழைத்தது. அவளும் விடுவதாய் இல்லை. மீண்டும் மீண்டும் அழைக்க, கோபமாக ஏற்று காதில் வைத்தான்.

“கணி.. உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்… கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வறீங்களா..” மது.

“மது.. ஆர் யூ மேட்.. நான் ஒரு விசாரணைல இருக்கேன்… இப்போ வர முடியாது.. இத்தனை தடவ கட் பண்றேனே.. மூளையில்ல.. திரும்ப திரும்ப கூப்டுட்டே இருக்க..” என்று அனலாய் காய்ந்தான்.

“சரி… கூல்.. ரொம்ப முக்கயம விஷயம். நான் ஸ்டேஷன் கிளம்பி வரேன்..” என்றாள் அவளும் பொறுமையாகவே.

“ஏய்… லூசு… நான் ஸ்டேஷன்ல இல்லை.. விசாரணைனா ஸ்டேஷன்லதான் இருக்கணுமா.. நான் வெளில இருக்கேன்… நீ வராத..”

“எங்க இருக்கீங்க கணி.. நான் வரேன் லொக்கேஷன் அனுப்புங்க.. சில தருணங்களை வாழ்க்கையில தவறவிட்டா திரும்ப அனுபவிக்க முடியாது.”

“மது…‌‌ டோண்ட் பிஹேவ் லைக் எ ஸ்டுப்பிட்.. அப்படி என்ன மண்ணாங்கட்டி தருணம். என் வேலைல குறுக்க வர வேலை வச்சுக்காத. மனிஷனா இருக்க மாட்டேன். நைட் பாக்கலாம்.. இதெல்லாம் தெரிஞ்சுதான போலீஸ்க்காரன கல்யாணம் பண்ணிக்கிட்ட..” என்று அழைப்பைத் துண்டித்தான்.

மதுபல்லவிக்கு கோபம் தலைக்கேறியது. அது என்ன இவுங்க வேலைல இருந்தா ஒழுங்கா பேசக் கூட முடிலையா.. இன்னைக்கு நீயா‌ நானானு பாக்குறேன் என்றவள் அதியை அழைத்து, “அதி, நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது. கணி இப்போ எங்க இருக்காருன்னு எனக்கு தெரியணும்..” என்றாள். 

அதி சற்று தயங்கினான்.  ஆனால் ஏனோ அவள் முகவாட்டம் அவனை செய்ய தூண்டியது.

அவனும் தயக்கத்துடனே கணிக்கு “முக்கியமான விஷயம் பேசணும். எங்க இருக்கீங்க சார்னு மெஸ்ஸேஜ்” அனுப்ப, கணி ஸ்டேஷன்ல இருக்கேன்னு ரிப்ளை செஞ்சான்.

நேராக மது காவல் நிலையம் கிளம்பிவிட்டாள்.

வெளியில் இருந்த காண்ஸ்டபுளிடம் தகவல் சொல்லி அனுப்ப, ருத்ர மூர்த்தியாக அவன் வெளியில் வந்தான். இவளும் ருத்ர தேவியாக அவதாரம் எடுத்துதானே வந்திருந்தாள்.

“ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க… வராதன்னு சொன்னா அதியவிட்டு எங்க இருக்கேன்னு செக் பண்றியா.. அவ்ளோ திமிரா உனக்கு. சொன்னா புரிஞ்சுக்க தெரியாது..”

“என்ன நானும் பாத்துட்டே இருக்கேன்.. ஓவரா பேசுறீங்க.. என்ன‌ நீங்கதான் தமிழ்நாட்டையே தூக்கி நிறுத்துறீங்களா.. போலீஸ்னா எப்பவும் சந்தேகந்தானா.. உங்கள எதுக்கு நான் வேவு பாக்கணும்..‌ உங்கள பாக்கணும்னு வரல. நான் கர்பமா இருக்கேன். ஹாஸ்பிடல் ‌போக போறேன். முடிஞ்சா கூட வாங்க. அத சொல்லிட்டு போகதான் வந்தேன்..” என்று அவனுக்கு மேல் இவள் கத்திவிட்டு தன்னுடைய காரை நோக்கி சென்றாள்.

அவன் ஒரு நிமிடம் தான் செய்வதறியாது சமைந்து நின்றான். அடுத்த நொடி காரின் சாவியை கையில் எடுத்துக் கொண்டு, இறக்கிவிட்ட கண்ணாடியின் துவாரம் வழியே அவளை குணிந்து பார்த்தான்.

“வாட் தி ஹெல் ஆர் யூ டூயிங் மிஸ்டர் கணி..”

“சரி வா ஹாஸ்பிடல் போலாம்.. உலகத்துலையே எந்த பொண்டாட்டியும் புருஷன்கிட்ட இப்படி சொல்லிருக்க மாட்டா இந்த விஷயத்தை.. எனக்கு கொடுப்பினை சரியில்ல..” என்று அவளை வம்புக்கிழுத்தான்.

“நான் வேற மாதிரிதான் சொல்லணும்னு நினைச்சேன். ஆனா இந்த சீனோட டைரக்டர் நீங்கதான்…குடுங்க சாவிய… நான் கிளம்புறேன்..”

“சரி.. விடு.. அடுத்த சீனையும் நானே டைரக்ட் பண்றேன்..”

“ஜடம்..” என்று வாயினுள் முணுமுணுத்தாள்.

“என்ன போனா போகட்டும்னு வறீங்களோ…  அப்படிலாம் யாரும் வர வேண்டாம்..”

“பல்லவி… ஐ டிண்ட் மீன் இட்..”

“பட்‌ ஐ மீன் இட்.. யூ ஆர் தி கல்ப்ரிட்..”

“பல்லவி… நான் போலீஸ் டி…”

“என்னைப் பல்லவின்னு கூப்பிடாதீங்க..”

“அப்படிதான் கூப்பிடுவேன்..”

“என்னை வேண்டாம்னு நினைக்கிற யாரும் எனக்கு வேண்டாம்.. என்னைப் பொறுத்தவரை நீங்க கல்ப்ரிட்தான். நீங்க என் வாழ்க்கைல வரலைனா நான் சந்தோசமா இருந்திருப்பேன்……. என் அப்பா கூ..” என்றவளை அழுத்தமாக பார்த்தான். அது பொய்… இதுதான் நிஜம் என்ற பொருளைத் தாங்கியிருந்தது அவனது பார்வை‌.

அவன் பார்வையின் அர்த்தம் புரியாதவளா என்ன..

“பொய்யாயிருந்தாலும் பிடிச்சிருந்துச்சு..” என்று விழிகள் பணித்தாள். அவ்வளவு நேரம் முகாமிட்டிருந்த கோபம் உவர்நீரில் கரைந்துவிட்டது போல.

“அப்போ இப்போ பிடிக்கல..”

“இல்ல.. பிடிச்சிருக்கு.. ஆனா நெஞ்சு ஓரமா ஒரு வலியிருந்துட்டே இருக்கு..”

“சரி வா.. என்கூட அந்த வலிய சரி பண்ணிடலாம்..” என்று கூறி அவளை காரிலிருந்து இழுத்துச் சென்றான்.

“எங்க கூட்டிட்டு போறீங்க..”

“வா… வண்டில போய்கிட்டே சொல்றேன்..”

“ஆர்‌ யூ மேட் கணி… டூ வீலர்ல நான் வரமாட்டேன்.. இப்போ அதுல போறது ரிஸ்க்..‌”

“அது நீ தனியா போனா… நான் கூட இருக்கும் போது உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்..” என்று கூறியவன் தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரி மணியை அழைத்தான்.

“மணி.. கமிஷ்னர் கேட்டா……”

“அந்த அக்கியூஸ்ட் ஒழுங்கா பதில் சொல்லல… அதனால கொஞ்சம் அடிக்க வேண்டியதா போச்சு.. இனி நாளைக்குதான் விசாரணை செய்யணும்னு சொல்றேன்… அதுக்கு ஏத்த மாதிரி செஞ்சுடலாம்..” மணி.

“அப்பறம்‌ கமிஷ்னர் நான் எங்கனு கேட்டா…”

“நீங்க மிஸ்ஸிங் கேஸ் விஷயமா‌ வெளில போயிருக்கீங்கன்னு சொல்லாடுறேன்..” மணி.

மது இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று பார்த்து வைத்தாள்.

“ப்ராடு..” மது.

அவன் சிரித்துக் கொண்டே வண்டியில் சாவியைப் போட்டு திருக, அவள் பின்னால் ஏறி அமர்ந்தாள். பல்லவியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

“ஏன் இதெல்லாம்..?”

“எதெல்லாம்..?”

“ஏன்‌ தெரியாத மாதிரி நடிக்கிறீங்க..”

“சரி அதெல்லாம் விடு… போலீஸ் வேலை உனக்கு புரியாது..”

“சொன்னா புரிஞ்சுப்பேன்..”

“எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வராத..”

“உங்களுக்கு பதில் சொல்ல தெரியல.. இல்ல பதில் சொல்ல இஷ்டமில்ல..”

“அம்மா தாயே… கொஞ்சம் அமைதியா வரியா..”

“இப்போ நாம எங்க போறோம்..?”

“போனோன தெரியும்..”

“இதெல்லாம் ஒரு பதில். அது எனக்கு தெரியாதா..?”

“தெரியுதுல்ல… அப்ப பேசாம வா.. உன்னைய கடத்திட்டா போறாங்க..”

“எல்லாத்துக்கு ரெடியா ஒரு பதில் வச்சுக்கங்க..”

“ஏய்… உன் பிரச்சினை என்னடி.. பதில் சொன்னா ரெடியா வசசிருக்கீங்கங்கிற.. சொல்லலைனா சொல்றதுக்கு இஷ்டமில்ல… கஷ்டமில்லனு சொல்ற.. பேசாம வாடி கொஞ்ச நேரம்.

அவளைச் செம்பியனின் சமாதிக்கு அழைத்துச் சென்றான். விழிகள் கலங்க அவனைப் பார்த்தாள்.

“போ… போய்‌ உங்க அப்பாட்ட சொல்லு.. ஆண் குழந்தை பிறந்தா செம்பியன்னு அவர் பேரு வைக்கிறதா சொல்லு..”

கண்களில் நீருடன்‌ உதட்டில் புன்னகையுடன் அவனைப் பார்த்தவள், திரும்பி நடக்க, “அவரோட மிகப்பெரிய விசிறி வந்துருக்கேன்னும் சொல்லு..” என்றான்..

திரும்பாமலே மண்டையை ஆட்டிவிட்டு சென்றாள். இதன் காரணம் அவள் அறிவாளே. அவன் அடிக்கடி சொல்லும் வாக்கியம் இது. ‘எனக்கு உங்க அப்பாவ வேதாவாவும் தெரியும். செம்பியனாவும் தெரியும்..’ என்று. அவனின வீரம், விவேகம், பாசம், செறுக்கு, அழுகை என அனைத்து பரிமாணங்களிலும் அவனைப் பார்த்தவன் அல்லவா. அதனால் செம்பியனின் விசிறி அவன்.

சிறிது நேரம் கழித்து சிவந்த விழிகளுடன் வெளியில் வந்தாள். கணி அவளுக்காக காத்துக்கொண்டிருந்தான்.

“ஆண் குழந்தை பிறந்தா செம்பியன். பெண் குழந்தை பிறந்தா என்ன பேரு வைக்கலாம்..” பல்லவி..

“நனியிதழ்” என்றான்‌ அங்குள்ள மாபெரும் விருட்சத்தைப் பார்த்து. அதிலிருந்து ஒரு இலை அவனின் மேல் விழுந்தது.

“ஏன் இந்த பேரு..”

|எனக்கு ரொம்ப பிடிக்கும்..”

“உங்க அம்மா பேரோட அப்படி என்ன ஸ்பெஷல்..”

“அம்மா அவுங்க பேரு வைக்க விடமாட்டாங்க.. அவுங்க சின்ன வயசுலே வாழ்க்கைய இழந்துட்டதால..’

“சில்லியா இல்ல..”

“என்னோட சுதந்திரத்தில் அவுங்க தலையிட மாட்டாங்க. அவுங்களோட உணர்வுகளில் நான் தலையிடமாட்டேன்..”

“அடுத்ததும் ஆண் குழந்தையா பிறந்தா…”

“பெண் குழந்தை பிறக்கிற வரை பெத்துக்க வேண்டியதுதான்.”

“அப்படி என்ன அந்த பேர் வச்சே ஆகணும்… உங்க எக்ஸ் லவ்வர் பேரா..”

“என்ன நக்கலா.. மடச்சி மாதிரி கேள்வி கேக்குற..”

“ஆமாமா… உங்களுக்கு கட்டிக்கிட்ட என்னையே லவ் பண்ண தெரியல. இதுல பாஸ்ட் இருக்கானு கேட்டது தப்புதான்..”

“அப்பா.. பதிலுகுக் பதில் பேசலேனா தூக்கம் வராது போல..”

அதன் பிறகு இருவரும் ரத்த பரிசோதனைக்கு இரத்தம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
அந்த ரிப்போர்ட் வருவதற்குள் மதுபல்லவியைக் காணவில்லை.

நனியிதழைக் கண்டவுடன், இந்த சம்பவம் முழுக்க அவன் நினைவில் நிழலாடியது.

அவன் நினைவுகளைக் களைத்தான் திராவிடன்.

“போலீஸ்தான நீங்க. நீ என்ன அந்த பொண்ண ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பேசிட்டு இருக்கீங்க. அப்போ அந்த பொண்ணுக்கும் உங்களுக்கு ஏதோ தொடர்பு இருக்கா.. அப்போது திருநல்லன் ஐயா காணாம போனதுக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா” என்று அவன் வினவ ஓங்கி அறைந்தான் கணி.

திராவிடன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கன்னைத்தை வலது கையால் தாங்கிப்பிடித்துக் கொண்டான். தகதகவென எரிந்தது.

“டேய்… ரெண்டு வருஷம் முன்னாடி நான் பொதிகை மலைல வாங்குன அடிய ஞாபகப்படுத்திட்டாரு…” அதி.

“கன்னம் பழுத்திருச்சு.. இனி வாய தொறக்க மாட்டான்..” கீர்த்தி.

“வந்துட்டு போன பொண்ணு ப்ராட்னா… அப்போ உன்னைய அடிச்ச காத்தும் ப்ராடா.. நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும். அவ உன்னோட கண்ணுக்கும் தெரியிறான்னா, அவ சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு விஷயத்தில் நீயும் சம்மந்தப்பட்டிருக்க.. நீ யாருக்கிட்ட போய் வேணா சொல்லு வெளில.. உன்னையதான் கிறுக்குன்னு சொல்லுவாங்க.. இங்க என்ன நடக்குதுன்னு நீங்க யாரும் சொல்ல மாட்டேன்ங்கிறீங்க. நானா கண்டுபிடிக்கிறேன்… அப்பறம் இருக்கு. மொத்த பயலையும்‌ தோலுரிச்சு தொங்கவிடல என் பேரு கணி இல்லை…”

“மிஸ்டர் திராவிடன்… கன்னத்துக்கு வீட்ல போய் ஒத்தடம் கொடுக்கணும்.. போலாமா..” கீர்த்தி.

அப்பொழுது மணி கணிக்கு அழைத்தான்.

அழைப்பை ஏற்ற கணி “சொல்லு மணி..” என்றான்.

“சார்.. காணாமல் போன எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு..”

“வாட்..”

“எல்லாரும் ஓ- ப்ளட் குரூப்..”

கணிக்கு மீண்டும் உற்சாகம் பிறந்தது. இத்தனை தினங்கள் ஒரு சிறிய துப்பு கூட கிடைக்கவில்லை. ஆனால் நனியை சந்தித்த சில நொடிகளிலே ஒரு வழி பிறந்திருக்கிறது. அவள் சீற்றம் கொண்டிருந்தாலும் நன்மை மட்டுமே செய்கிறாள். மூவரையும் அழைத்துக் கொண்டு அடுத்த யோசனைகளுடன் வீட்டிற்கு சென்றான்.

*************

“டேய் சென்னி… என்னடா நடக்குது… ஏன் இப்படி பண்ண..” தொல்காப்பியன்.

“என்ன செஞ்சேன்..” சென்னி.

“தெரியாத மாதிரி கேக்காத…”

“இப்படி பொடி வச்சுலாம் பேசாத..”

“மதுபல்லவி ஈஸ் ப்ரெக்னண்ட்… உனக்கு தெரியுமா‌‌..” என்று தொல்காப்பியன் கேட்க, சென்னி அமைதியாக அவனைப் பார்த்தான்..

“டேய்…. இடியட்… ஏன் டா இப்படி செஞ்ச..” காப்பியன்.

“இப்போ என்னாங்குற… தெரிஞ்சுதான் செஞ்சேன்..” என்றவனை ஓங்கி அறைந்துவிட்டான் தொல்காப்பியன்.

“நீ செஞ்சுருக்க விஷயத்தோட
வீரியம் புரியாம பேசுற..”

“அப்படி பாத்தா நாம செஞ்ச எல்லாமே வீரியமான விஷயம்தான்.”

“எப்படிடா… மது பல்லவிக்கு ஏதாவது ஆச்சுனா என்ன செய்றது.”

“அதெல்லாம் எதுவும் ஆகாது. நாம பத்திரமா பாத்துக்கலாம்..”

“நாம செய்யப் போற விஷயம் நம்ம சக்திக்கு மீறியது. பைத்தியமா‌ நீ..
கரு கலைஞ்சா…”

“நாலு நல்ல விஷயம் நடக்கும் போது இப்படி சில உயிர்கள் போனா தப்பில்ல… நம்ம இனத்துல எத்தனை பேர் கொத்து கொத்தா செத்தாங்க… யாராச்சும் வந்து கேள்வி கேட்டாங்களா..?”

“அப்போ..?”

“நீ பயப்புடாத காப்பியன். நான் பாத்துக்கிறேன்..”

“ஏற்கனவே நம்ம கம்பெனி பண்ற வேலை கவர்மெண்ட்க்கு தெரியாது.. நீ என்னடானா யாருக்கும் தெரியாம இந்த வேலை பாத்து வச்சிருக்க..”

“நீ கொஞ்ச நாள் அமைதியா இரு.. கேட்டா நமக்கே இந்த விஷயம் லேட்டாதான் தெரியும்னு சாமாளிச்சுக்கலாம்‌..”

காப்பியனுக்கு நன்றாகவே தெரியும். சென்னி ஒரு விஷயத்தை அவ்வளவு எளிதாக முடிவு எடுக்க மாட்டான். ஆனால் எடுத்துவிட்டால் அதிலிருந்து மாற்றவும் முடியாது. அழுத்தக்காரன் என்று நன்றாகவே அறிவான்.

*******************

சில தினங்களாயிற்று அவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு சென்று மயக்கம் தெளிந்து. வந்த ஒருநாள் அனைவரும் பயந்து நடுங்கியது என்னவோ உண்மை. ஆனால் அதன்பிறகு ஏனோ பயம் மாயமாய் மறைந்தது.

மறுநாளும் அதே போல் உணவு சமைக்க சிலபொருட்களை அனுப்பியிருந்தனர். அதோடு ஒரு துண்டுச் சீட்டும்.

‘யாரும் பயப்பட வேண்டாம். யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது, தப்பித்துப் போக முயற்சி எடுக்காத வரை’ என்ற பொன் மொழிகளை சுமந்திருந்தது அந்த காகித ஏடு.

அதனால் நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டனர். அவர்களுக்கு சில மாற்று துணிகளும் வந்திருந்தது.

பெண்கள் அனைவரும் சற்று பயந்தனர். எங்கே குளியலறையில் ஏதேனும் கேமரா வைத்திருப்பார்களோ என்று.

ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து குளியலறையைப் பிரட்டிப்போட்டு சோதனை செய்துவிட்டனர். எங்கும் கேமரா இருப்பது போல் தெரியவில்லை. மற்றபடி மற்ற அறைகளில் எல்லாம் ஆங்காங்கு மறைவாக இருந்தது நன்றாகவே புலப்பட்டது.

ஒரு வாரம் ஓடி விட்டது. அந்த சூழல் சற்றே பழகிவிட்டது அனைவருக்கும். குழந்தை அலர்விழிக்கும் தான். இரட்டையர்களுடன் ஒட்டிக் கொண்டாள் அவள்‌.

ஆனால் அவ்வப்பொழுது எதற்காக கடத்தி வைத்து இப்படி உணவும் அளித்து சுகமாக வைத்திருக்கின்றனர் என்று தெரியாமல் தவித்தனர். சில சமயம் இதனால் இருக்குமோ… அதனால் இருக்குமோ என்று விவாதம் கூட செய்வார்கள். அது நீயா நானா என்று செல்லுமே தவிற அனைத்து‌ காரணங்களிலும் மாபெரும் ஓட்டை இருக்கும்.

அன்றும் அப்படிதான். அனைவரும் உணவருந்த அமர்ந்திருந்தனர்.

நீர் எடுத்து வர மறந்துவிட்டாள் ஆரெழில்.

“டேய் தணிகை… போய் தண்ணி எடுத்துட்டுவா..” ஆரு.

“யாரைப் பார்த்து என்ன வேலை சொல்ற… நான் ஆம்பள சிங்கம்டி…” தணிகை.

“அசிங்கமா‌ போயிரும்.. சிங்கம் அதுவா வேட்டையாடி தான் சாப்புடும்.. ஒரு காப்பி போட்டு குடிக்க துப்பில்ல… வந்துட்டான் அங்கேந்து… ஆம்பள சிங்கமாம்.. அப்போ‌ போ… உனக்கு தேவையானத நீ தான் சமைச்சு சாப்பிடணும்..” என்று அவள்‌ கூற மற்றவர்கள் நகைத்து வைத்தனர். சித்திரன்‌ சற்று அதிகமாகவே‌ சிரித்து வைத்தான். திருநல்லன் தேவையென்றால்‌ மட்டுமே வாய் திறப்பார். அவரால் இவர்களுடன் இடைவெளியின்றி‌ பழக முடியவில்லை.

அதன்பிறகு தணிகை சென்று குவளையில் நீர் எடுத்து வந்தான்.

“இத முன்னாடியே செஞ்சிருக்கலாம்..” நேரெழில்..

இது இவர்களின் வழமையில் ஒன்றாயிற்று. ஆரு, நேரு இருவரும் தணிகையிடம் மல்லுக்கு நிற்பதும், சித்திரன் அவர்களுடன் சேர்ந்து கொள்வதும் வழமையாயிற்று. வேதன் எந்த பக்கம் இருக்கிறான் என்றே தெரியாது. அவனுக்கு தேவையானது அவனுக்கு கிடைத்துவிட வேண்டும். பசி பொறுக்க மாட்டான். ஒருசில உதவிகள் செய்வான். மற்றபடி யாருடனும் ஒட்டிப் பழகவில்லை. மது பல்லவி சண்டைகள் வந்தால் பிரித்துவிடுவது, பஞ்சாயத்து வைப்பது என்று இருந்தாள். இயல்பிலேயே அவள் நியாயவாதியல்லவா. தவறிழைத்தது தனது தந்தையாயிருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைத்தவள். அது சாதிக்க கணிக்கு அனைத்து உதவிகளையும் செய்தவள். இங்கும் அப்படிதான்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து கதை பேசினார்கள்.

“ஆமா.. இது என்ன.. ஏதாவது புது விதமா பிக்பாஸ் ஏதாவது ஆரம்பிச்சிருக்காங்களா..? நம்மள கூட்டிட்டு வந்து சோறு போட்டு துணிமணிலாம் கொடுக்குறாங்க…” தணிகை.

“டேய்… கூட்டிட்டு வரல… கடத்திட்டு வந்திருக்காங்க..” ஆரு..

“எனக்கு அப்படிலாம் தோணல… எங்க அப்பன் என்னைய வீட்டுக்குள்ளே சேக்கமாட்டாரு.. சோறு சாப்ட உக்காந்தா வண்டி‌வண்டியா திட்டுவாரு… அதையும் சேத்து செறிக்கணும் என்னோட வயிறு.. ஆனா யாரோ முகம் தெரியாது புன்னியவான், என்னை தத்தெடுத்து எனக்கு சோறு போடுற மாதிரிதான் தெரியிது..” தணிகை.

“உன்னையலாம் கொன்னுருக்கணும்.. நீ பூமிக்கு பாரம்..” நேரு..

“போடி…‌ முட்டை போண்டா.. தின்னு தின்னு பெருத்து போயிருக்க… நீயெல்லாம் என்ன பேசுற..” தணிகை.

“நாங்க பூசணிக்காயாவே இருந்துட்டு போறோம்.. ஆனா என்னோட காசுல சாப்டுறேன்… அப்பா காசுல இல்ல..” நேரு..

“மண்டைய உடைச்சு மாவெளக்கு வச்சுருவேன்..”

“மண்டைய உடைப்பேன்னு வேணா சொல்லு… நம்புறோம்.. ரெண்டாவதா சொன்னத‌ எப்புடியும் நீ செய்ய மாட்ட…” நேரு..

“ஆமா.. யாராவது செஞ்சு வச்சா தட்டைத்‌ தூக்கிட்டு வந்துருவ..” ஆரு.

“ஆமா… நான் அப்படிதான்… இப்ப அதுக்கு என்ன..?”

“தணிகை… ஆரு.. நேரு.. கொஞ்சம் பேசாம இருக்கீங்களா..” மது.

“அக்கா.. அவ தான் ஆரம்பிச்சா..” தணிகை.

“ஆரு… இந்த டாபிக் பேசுனா பிரச்சனை வருதுன்னு தெரியிது. அப்பறம் ஏன் பேசுறீங்க..” மது.

“இவன் சொன்ன மாதிரி… பிக்பாஸ்தானா.. இது எல்லாத்தையும் டெலிக்கேஸ்ட் பண்ணுவாங்களா..” வேதன்.

“அதெல்லாம் இருக்காது..” சித்திரன்.

“அதெப்படி சொல்றீங்க..” வேதன்.

“உன்னையும் என்னையும் கடத்தி பிக்பாஸ் நடத்துனா திவாலாயிரும் கம்பெனி..” சித்திரன்.

“ஆமா சின்ச்சான்… அதுக்கு எதுக்கு இந்த போண்டா கோழியையும் பிந்து கோஸையும் கடத்திட்டு வரணும்..”தணிகை.

“டேய்… உன்னைய மிக்ஸில போட்டு கரகரன்னு அரைச்சு ஜூஸா குடிக்கல.. என் பேர மாத்திக்கிறேன்..” நேரு.

“என்னானு… சேருன்னு மாத்திக்கோ.. நல்லாருக்கும்.”

“உங்களுக்கெல்லாம் சீரியஸாவே இருக்க தெரியாதா..?” மது.

“அக்கா.. இப்ப சீரியஸா இருந்து என்ன பண்ண போற.. நாம இங்கிருந்து தப்பிச்சு போக முடியுமா.. எதாவது வழி இருக்கா என்ன. எங்க இருக்கோம்னு கூட தெரியாது..” வேதன்.

“நாம ஏதோ குளிர் பிரதேசத்தில் இருக்கோம்..” திருநல்லன். வெகு நேரமாக வாய் திறக்காதவர் வாயைத் திறந்தார்.

அனைவரும் ஆச்சரியமாக அவரைத் திரும்பி‌ பார்த்தனர்.

“எப்படி பா சொல்றீங்க..” மது.

“அம்மாடி பல்லவி.. நேத்து சமைச்சது இன்னும் கெட்டுப் போகாம இருக்கு..  இங்க ஏசி இல்ல… ஆனா நமக்கு வேர்க்கல.. வெளில குளிரா இருக்கணும். அப்பதான் இது சாத்தியம்..” திருநல்லன்.

“அப்பா… செம… உங்க அனுபவம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிடும் போல..” மது.

“ஆமா… இது தெரிஞ்சு என்ன ஆக போகுது.. போறதுக்கு ஒரு சந்து பொந்து கண்டுபிடிச்சா தப்பிச்சாவது போகலாம்..” தணிகை.

“பெரியவுங்கள மதிக்க கத்துக்கோ… அப்பதான் வாழ்க்கையில் உருப்புடுவ.. அப்பதான் நாலு பேரு மதிப்பாங்க..” ஆரு..

“அதையெல்லாம் நாலு பேரு மிதிப்பாங்க.. மதிக்கிறதுக்குலாம் வாய்ப்பு இல்லை..” நேரு.

“எப்படி..? வந்த அன்னைக்கு நீங்க ரெண்டு பேர் மிதிச்சதா சொன்னீங்களே… அந்த மாதிரியா..” சித்திரன்.

“டேய்‌ மலைமாடு.. உன்னை போறதுக்குள்ள மர்டர் பண்ணாம விடமாட்டேன்..” தணிகை.

“அதுக்கு ‌மொதல்ல இங்கேருந்து போகணும்..” சித்திரன்.

“என் புருஷன் என்னை தேடிட்டு இருப்பாரு..  நிச்சயம் நம்ம எல்லாரையும்‌ கண்டுபிடிச்சிருவாரு..” மது.

“என்னமோ போக்கா… உன்னைய கடத்துனதுல ஒரு நியாயம் இருக்கு. உன் புருஷன் வேற போலீஸ்..  ஏதோ பணம் கொஞ்சம் வச்சிருக்க.  எங்களைக் கடத்துனதுல கூட ஒரு நியாயம் இருக்கு. நாங்க பொண்ணுங்க..” ஆரு.

“ஏய் நிறுத்து.. நீ பொண்ணுனு இன்னோரு தடவை சொன்ன நான் மனிஷனா இருக்க மாட்டேன்…” தணிகை

“அப்ப செத்து போ..” ஆரு.

“உங்கள மாதிரி வெத்துவேட்ட எல்லாம் எதுக்கு கடத்தினான்னு தெரியல..” நேரு.

“ஆமா அக்காவ கடத்துனதுல நியாயம் இருக்கு. அத நான் ஒத்துக்குறேன்.. இரண்டாவதா ஒன்னு சொன்னியே…” வேதன்.

“அது ஒன்னும் இல்ல மச்சான்.. டீ ல முக்கி சாப்ட பண்ணுனு நினைச்சு ரெண்டையும் தூக்கிட்டாங்க..” என்று தணிகை கூறவும் இரட்டையர் இருவரும் முறைத்தனர்.

உணவு தயார் செய்ய அடுத்து தேவையான காய்களை எடுத்து தணிகையிடம் கொடுத்து வெட்ட சொன்னாள் ஆரு..

“இன்னைக்கு இந்த வேலை செஞ்சாதான் சாப்பாடு..” ஆரு..

அவளை முறைத்துவிட்டு காய்களை நறுக்க ஆரம்பித்தான்.

“பாத்து… முறைச்சா சிங்கம் அசிங்கமா இருக்கு..” என்று கூற அவளைத் திட்டிக் கொண்டே அழுத்தமாக வெட்ட, விரலை வெட்டிவிட்டான்.

அம்மா என்று அவன் அலறிய அலறலில் அனைவரும் பயந்துவிட்டனர்.

கொஞ்சம் ஆழமாக இறங்கிவிட்டது போல கத்தி. இரட்டையர் இருவரும் சேர்ந்து அவனுக்கு முதலுதவி செய்தனர். காப்பி தூள் வைத்து உதிரப்போக்கை நிறுத்த முற்பட்டனர்.

“ஐயோ.. எங்க அம்மாட்ட குடிச்சு பால் எல்லாம் இப்படி ரத்தமா போகுதே..” தணிகை..

“அடச்சி வாய மூடு.. வெண்டைக்காய வெட்ட சொன்னா விரல வெட்டி வச்சிருக்க..” சித்திரன்.

எப்படியோ சமாளித்து அவனுக்கு கட்டு போட்டனர்.

மற்றவர்கள் சமைத்து முடித்தனர். அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

“இந்த காயெல்லாம் வளமான மண்ணுல விளைஞ்ச மாதிரி இல்ல..” திருநல்லன்.

“இவரு ஒருத்தர்… எப்பபாரு ஏதாச்சும் சொல்லிக்கிட்டு.. மண்ணுல விளையாம இந்த பண்ணுங்க மேலையா விளைஞ்சிது..” தணிகை.

“டேய்… உனக்கு வைத்தியம் பாத்ததுக்கு பதில் ரத்தத்தை உறுஞ்சி குடிச்சிருக்கணும்..” ஆரு.

“காட்டேரி.. ஓ- குரூப் வேற… அம்புட்டு சீக்கிரம் ரத்தம் கிடைக்காது..” தணிகை.

“வாட்… ஓ- வா..?” ஆரு..

“ஆமா..?”

“நாங்க கூட ஓ- தான்..” ஆரு..

“நானும்..” என்றான் சித்திரன் அதிர்ச்சியுடன். வரிசையாக அனைவரும் ஓ- என்று கூற, அனைவருக்கும் திக்கென்று இருந்தது.

சிறிது நேர அமைதி.

“ஓ- ப்ளட் குரூப் வச்சு என்ன செய்ய போறாங்க..” வேதன்.

“ஐயோ.. நல்லா சாப்பாடு போடுறத பாத்தா நம்ம உடம்புல உள்ள கிட்னி, லிவர்னு எடுத்து வித்துருவாங்களா..?” ஆரு..

“என்னது கிட்னி எடுப்பாங்களா..?” தணிகை.

“பின்ன..‌‌ ஒத்த பைசா பிரயோஜனம் இல்லாத உன்னைய‌ கடத்திருக்காங்கனா காரணம் இல்லாம இருக்குமா..” நேரு..

“நேரங்கெட்ட நேரத்தில கவுண்டர் குடுக்குறதே பொழப்பா வச்சிருக்க..” தணிகை.

“ஒரு நிமிஷம் உங்க பஞ்சாயத்த நிறுத்துங்க.. உங்க யாருக்காவது குடிக்கிற பழக்கம் இருக்கா.. ஸ்மோக்கிங்.. ஐ மீன் செயின் ஸ்மோக்கிங்..?” மது..

“அக்கா… உனக்கு மண்டை கலங்கிப் போச்சா..?” தணிகை.

“அந்த பழக்கம் இருந்தா லிவர் கிட்னிலாம் பாதி எக்ஸ்பைரி ஆயிருக்கும்… அதை திருடி வேற ஒருத்தருக்கு பொருத்த முடியாது. நல்ல ஆரோக்கியமான பாகத்தைதான் வேற ஒருத்தருக்கு பொருத்துவாங்க.. அதுக்குதான் கேக்குறாங்க அக்கா..” நேரு.

“ஐயோ அக்கா… அந்த‌ மாதிரி பழக்கம்லாம் இல்லையே..” தணிகை.

“நான் ஒரு அனாதை. தினம்‌ சாப்பாட்டுக்கே கஷ்ட படுறப்போ அதெல்லாம் நான் நினைச்சு‌ கூட‌ பாக்க முடியாது..” வேதன்.

“நான் உடம்பை நல்லா ஆரோக்கியமா வச்சிக்கிட்டாதான் எனக்கு பொழப்பு.. சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்..” சித்திரன்.

“எதுக்கு சுவரு… நீயே பெருசாதான் இருக்க… உன் மேலையே வரையலாம்..” தணிகை..

“ஷ்ஷ்…‌தணிகை..” மது.

“ஐயோ அக்கா… இப்போ என்ன செய்றது. இப்பிடி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் முன்னாடியே குடிச்சிருப்பனே..” தணிகை..

“என்னைக்கோ ஒரு நாள் சாவ போற.. எதுக்கு வெயிட்‌ பண்ற.. இன்னைக்கே சாவு…” ஆரு.

“சரி… இதுல நாம செய்றதுக்கு ஒன்னும் இல்ல.. எதுவரைக்கும் போறாங்கன்னு பாக்கலாம்..” மது..

“எதுவரைக்கும்னா… கிட்னி எடுக்கிறவரைக்குமா..”

“இல்ல உன் கிட்னி எடுத்து சட்னி அரைக்கிற வரைக்கும்..”

“ஏய்… முட்டை போண்டா… வாய்ல நல்ல வார்த்தையே வராதா..?”

“வரும்… ஆனா உனக்கு வராது..”

“கொஞ்சம் அமைதியா‌ இருக்கீங்களா.. எப்ப பாரு கத்திக்கிட்டே.. அப்பா நீங்க ஏதோ சொன்னீங்களே… இந்த காயெல்லாம் வளமான மண்ணுல விளைஞ்ச மாதிரி இல்லைன்னு… ஏன் அப்படி சொன்னீங்க.. சொல்லுங்க..”

“நல்ல மண்ணுல விளைஞ்ச காய் நெத்து நெத்தா இருக்கும் மா.. இது கஷ்டப்பட்டு வளத்த செடிலேந்து விளைஞ்ச காய் மாதிரி தெரியிது.. இத்தனை வருஷமா மண்ண இந்த கையால களறி விவசாயம்‌ பாத்த கைக்கு தெரியாதா எது எப்பிடி விளைஞ்சிதுன்னு..”

“எல்லாமே புரியாத புதிரா இருக்கு.  எதையுமே லின்க் பண்ண முடியலையே‌‌..” மது..

அரல் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்