
அன்விதா தனக்கும் அமையாவிற்குமான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அமையாவிற்கு விடுமுறை என்பதால் வீட்டையே இரண்டாக்கி இருந்தாள். வசந்தியும் பாஸ்கரும் அவளுடனே ஒன்றி விட்டனர்.
“தாத்தா… நாங்க ஜாலியா ஊருக்குப் போறோமே. ப்ரணீ சித்தப்பா, அர்ஜி சித்தப்பா, அகா சித்தி, ரூஹி அத்தை, ரிஷு மாமா எல்லாரும் வர்றாங்க. ஜாலி…” எனக் குதித்தாள்.
“தாத்தாவையும் கூட்டிட்டுப் போக மாட்டியா அமையாக்குட்டி?” பாஸ்கர் கேட்டதில், “நீங்களும் வாங்க… பாட்டியும் கூட்டிட்டுப் போகலாம்” என்றாள்.
“நீ ஊருக்குப் போனதும் எங்களை மறக்க மாட்ட தான? ம்மா அன்வி அப்போ அப்போ போன் பண்ணுமா” என்று வசந்தி வருத்தத்தை மறைத்துக் கொண்டு கூறினார்.
“உங்களை நாங்க என்னைக்கும் மறக்க மாட்டோம்மா. எல்லாம் இழந்து வந்தப்ப, எனக்கு அடைக்கலம் குடுத்தது நீங்களும் அப்பாவும் தான்” என்றவளுக்கு விழி கலங்கியது.
“ஐயோ என்னமா நீ பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற. இங்க இல்லன்னா, உன்ன இன்னும் பெரிய இடத்துல தங்க வச்சுருப்பாருல… மாப்பிள்ளை” என சொல்ல வந்து விட்டு விழுங்கினார் பாஸ்கர்.
“இருக்குற இடம் பெருசா இருந்து என்ன செய்றதுப்பா. மனுஷங்க மனசும் அதே போல பெருசா இருக்கணும்ல…” என சின்ன வேதனையுடன் முறுவலித்தாள்.
அவள் கேசத்தை கோதி விட்ட வசந்தி, “எதை பத்தியும் யோசிக்காதமா. இனி நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்…: என்று மனம் நிறைய வாழ்த்தினார்.
அதில் புன்னகைத்தவள், “நீங்களும் அப்பாவும் வரலாம்ல…” எனக் குறையாகக் கேட்க, “எங்களுக்கும் வரணும்னு ஆசை தான்மா. அவ்ளோ தூரம் அப்பாவால அலைய முடியாது. எனக்கும் ரொம்ப தூரம் டிராவல் பண்ண முடியாது. எங்க ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும்” என்றார் மனநிறைவுடன்.
“அதனால தான் நானும் உங்களை போர்ஸ் பண்ணல…” எனும்போதே அகமொழி வந்தாள்.
“எல்லாம் எடுத்து வச்சுட்டியா அன்வி?”
ம்ம்… நீ எப்ப கிளம்புற?
“நான், ரிஷு, ரூஹி மூணு பேரும் மேரேஜ் அன்னைக்கு காலைல அங்க இருப்போம்” என்றதில் அன்விதா முறைத்தாள்.
“ஏன் காலைல வர்ற, ஈவ்னிங் ரிசப்ஷன் மட்டும் வாயேன்”
“இதுவும் நல்ல ஐடியா தான்” அவள் முணுமுணுத்ததில், அன்விதா அவளை முதுகில் அடித்தாள்.
“விளையாடுறியா? அட்லீஸ்ட் முந்துன நாளாவது வா…”
“ட்ரை பண்றேன் அன்வி. இங்க ஒர்க் முடியிற ஸ்டேஜ். விட்டுட்டு வந்தா கஷ்டம்ல அதான்” என்றவள் அவளது பதிலை எதிர்பாராது வெளியில் சென்று விட்டாள்.
‘அது காரணமில்லை’ என்று அனைவருக்கும் தெரியும் தான். அதிகம் வற்புறுத்தினால், அவள் வராது போய்விட்டால் கஷ்டம் என்றே அமைதி காத்தனர்.
———
“ப்ரணீ ப்ரோ கல்யாணத்துக்கு பர்ச்சேஸ் பண்ணனும். வாடா கடைக்குப் போயிட்டு வரலாம்” ரூஹியின் அனத்தலில் அவளை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றான் ரிஷான்.
ரூஹி ரிஷானைப் பார்ப்பதும், பின் ஆடை தேர்வில் மூழ்குவதுமாக இருக்க, அவளைக் கண்டுகொண்டவன் “என்ன?” எனக் கேட்டான் புருவம் சுருக்கி.
“அது… அன்னைக்கு அர்ஜித் ப்ரோட்ட, நான் தான் ரிவியூ போட்டேன்னு சொல்ல வந்தப்ப நீ ஏன் உன் மேலயும் பழி போட்டுக்கிட்ட?”
“அவன் உன்மேல கோபப்பட்டு உன்னைப் பழி வாங்க வரவா. பழி வாங்குனா சேர்த்து வாங்கட்டும்ன்னு தான்” அவன் இயல்பாகக் கூற,
“ஏ.. ஏன்?” அவளிடம் சிறு தடுமாற்றம்.
“ஏன்னா?” அவன் இன்னுமே குழப்பமாகப் பார்த்தான்.
“அவன் என்னைப் பழி வாங்குனா உனக்கு என்ன பிரச்சினை?”
“அப்படி இல்ல… துணையா இருக்க வேண்டியவளுக்கு நான் அந்த நேரத்துல தப்பு பண்ணிட்டேன். உன்னையும் அப்படி விடக்கூடாதுல. நல்லது நடந்தா ஒன்னாவே நடக்கட்டும். கெட்டது நடந்தாலும் ஒண்ணா நடக்கட்டும்” என்று சிரித்தான்.
அவளுக்குள் சிறு ஏமாற்றம். இன்னதென்று பிரித்தறிய இயலவில்லை. சில நாள்களாகத் தான் இந்த சஞ்சலமும் அவளை வாட்டுகிறது.
“ஓ!”
கைக்கு கிடைத்த உடையை எடுத்தவள், “நான் ட்ரையல் பார்த்துட்டு வரேன்” என நகர முற்பட்டு பின், “நீ அகாவை மறந்துட்டியா?” எனக் கேட்டாள் தயக்கமாக.
“அவளை மறக்குறது இருக்கட்டும். நீ இதையா ட்ரை பண்ண போற?” என அவளை சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்ததில், அவள் புருவம் சுருக்கிக் கையைப் பார்த்தாள்.
ஆண்கள் அணியும் உள்பனியன் இருந்தது.
அதில் அசடு வழிந்தவள், “மாத்தி எடுத்துட்டேன்…” என சரியான உடையை எடுத்துவிட்டு ஓடினாள்.
அவளை விசித்திரமாகப் பார்த்த ரிஷானுக்கு அழைப்பு வர “ஹலோ” என்றவன் திகைத்தான்.
“எதே… அவள் என்னை கொன்னுடுவா.”
எதிர்முனையில் என்ன சொல்லப்பட்டதோ, “ப்ரோ ப்ரோ… அப்படி எல்லாம் பண்ண முடியாது. அவள் கேட்டா என்ன சொல்றது… ஹலோ அட கடங்காரா…” அழைப்புத் துண்டிக்கப்பட்டதில் தலையை சொறிந்தான்.
ட்ரையல் அறைக்குச் சென்ற ரூஹிக்கு, தன்னை எண்ணியே கலக்கம் தோன்றியது.
திடீரென தனக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. குளிர் ஜுரம் வருவது போல உடலெல்லாம் நடுங்கியது. திடீர் திடீரென நெஞ்சம் பதறியது. தவித்தது. மருகியது. சட்டென ஒரு ஏக்கம், சடுதியில் சில சலனம். வாங்கிய புது துணியைப் போட்டுப் பார்க்காமலேயே திரும்பி வெளியில் வந்து விட்டாள்.
அங்கோ தலையில் கையில் வைத்து நின்றிருந்த ரிஷானை குழப்பமாகப் பார்த்தாள்.
அவனை நண்பனாக மட்டுமே பார்க்க வேண்டும் அதைத் தாண்டி எவ்வித உணர்வையும் உள்ளுக்குள் வரவழைக்கக் கூடாது என்று தீர்க்கமாக எண்ணிக் கொண்டாள்.
அதுவும் அவன் வேகமாக அவள் அருகில் வந்ததும் நொடியில் கரைந்து போனது.
“ரூஹி… அந்தக் கேரளாக்காரன் என் வாழ்க்கைல சூனியம் வைக்கிறதையே ஃபுல் டைம் ஜாபா பார்த்துட்டு இருக்கான்” எனப் புலம்பினான்.
“என்… என்னாச்சு?”
அவளது தடுமாற்றத்தை உணராமல், “ஏற்கனவே அவள் ஹாபிட் ஹவுஸ்கு எப்படி இவ்ளோ கம்மியான கோட் குடுத்தாங்கன்னு என் மேல விசாரணை கமிஷன் வச்சுட்டு இருக்கா. இதுல இவன்… ப்ரணீ ப்ரோ மேரேஜ்கு முன்னாடி நாளே அகாவை சென்னைக்கு கூட்டிட்டு வரணுமாம்.
அவள் என்ன ஆறு மாச குழந்தயா செரலாக் குடுத்து கூட்டிட்டு வர்றதுக்கு. ஆறறிவு ஜீவன் ஆயிரம் கேள்வி கேட்டு கொல்லும்… இதுல… இப்போதைக்கு இதை பண்ணணுமாம். ஊருக்குப் போயிட்டு பிளான் வேற சொல்றானாம். ம்ம்ஹும். இவன் இருக்குற ப்ரெண்ட்ஷிப்பையும் கட் பண்ணி விட்டுடுவான் போல” என அங்கும் இங்கும் நடந்து புலம்பித் தள்ளினான்.
அதில் நிகழ்வுணர்ந்த ரூஹி, “ஒருவேளை இதுனால அவங்க சேர்ந்தா நல்லது தானடா?” எனக் கேட்க,
“நல்லது தான். ஆனா, அதுக்கு அவள் என் பேச்சை கேட்கணுமே. லவரா இருக்கும்போதே கேட்க மாட்டாளே. அதுவும் அவனைப் பார்க்க கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு இருக்கா…” என்றான் பரிதாபமாக.
சிரிப்பை அடக்கிய ரூஹி, “அவள் என்ன தான் நினைப்புல இருக்கான்னு தெரியல. முடிஞ்ச வரை ட்ரை பண்ணலாம் ரிஷு” என்றதில்,
“முடிஞ்ச வரையா… அடியேய் அவளைக் கூட்டிட்டு வரலைன்னா, உன்னையும் என்னையும் மெரினா பீச்ல முக்கிடுவானாம்” என நொந்ததில், எச்சிலை விழுங்கினாள்.
நேராக அகமொழியிடம் சென்ற இருவரும் ‘நீ பேசு நீ பேசு’ என்று மாறி மாறி தள்ளி விட, கிளாம்பிங் அலுவலக அறையில் இருந்த அகமொழி இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன?”
அவள் கேட்டதும் ரூஹி நெளிந்தபடி, “அகா… இதுவரை நான் சென்னைக்குப் போனதே இல்ல. நம்ம முந்தின நாளே போய் சுத்திப் பார்க்கலாமா?” என ஆர்வமாகக் கேட்டாள்.
“சுத்திப் பார்க்குற அளவு அங்க ஒன்னும் இருக்காது. பீச், மால் எல்லாம் கொச்சில இருக்கும். போய் பார்த்துக்கலாம்” என்று மீண்டும் வேலையில் மூழ்கி விட சப்பென ஆனது.
“அங்க நிறைய அரசியல்தலைவர்கள் சமாதி இருக்காம். நான் அதை பார்க்கணும்” ரிஷு ஆரம்பித்தான்,
“இங்க இருந்து ரெண்டு கிலோமீட்டர்ல கல்லறை தோட்டம் இருக்கு. அங்க போய் சமாதி பார்த்துக்க…” தோள் குலுக்கியதில், இருவரும் இணைந்து முறைத்தனர்.
“இப்ப நீ எங்களை சென்னைக்கு கூட்டிட்டுப் போவியா மாட்டியா? ப்ளீஸ் அகா போலாம் ப்ளீஸ் ப்ளீஸ். ஒரு த்ரீ டேஸ் ட்ரிப் மாதிரி.”
“என்னது த்ரீ டேஸா? அதெல்லாம் முடியாது. வேணும்னா முந்தின நாள் போயிட்டு, ரிசப்ஷன் முடிஞ்ச நைட்டே கிளம்பிடலாம். நீங்க வேணும்னா இருந்துட்டு வாங்க…” என்று முடித்து விட, அவள் ஒப்புக்கொண்டதே போதும் என இருவரும் புயல் வேகத்தில் வெளியில் ஓடினர்.
அகமொழிக்கு தான் மனம் ஒரு நிலையில் இல்லை. இதோ ஏதோவென அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது.
ப்ரணீத் அன்விதா அமையாவை அழைத்துக்கொண்டு இரு நாள்கள் முன்பே சென்னைக்கு சென்று விட்டான்.
செல்வதற்கு முன்பு, அவளை அர்ஜித்தின் வீட்டிற்கும் அழைத்துச் சென்றான்.
சுஜாதா மருமகளைக் கண்டதும் கண்ணீர் பெருக அணைத்துக் கொண்டார்.
தனது மகன் செய்த தவறுக்காக மனதார மன்னிப்பும் கேட்டிருக்க, “ஐயோ என்ன அம்மே நீங்க போய் மன்னிப்பு எல்லாமே கேட்டுட்டு… நீங்க என்னை புருஞ்சுக்கிட்டதே போதும். அட்லீஸ்ட் என் அப்பா சித்தி மாதிரி இல்லாம நீங்களாவது புருஞ்சுக்கிட்டீங்களே. அதுவே எனக்குப் பெரிய விஷயம்” என்றவளை கல்யாணியும் உச்சி முகர்ந்தார்.
கேசவ நாயரும், “அவரு இல்லைன்னாலும் எந்தா… நினக்கு பொறந்த வீட்டு சொந்தமாய் ஞாங்ஙள் இரிக்கும் மோளே…(அவங்க இல்லைன்னா என்ன, உனக்குப் பொறந்த வீட்டு சொந்தமா நாங்க இருப்போம் மோளே)” என்றதில் அவளிடம் சிறு முறுவல்.
அமையா தான் அவர்களை கண்டதும் துள்ளி குதித்தாள்.
கோபால கிருஷ்ணன் பேத்தியை அணைத்துக்கொள்ள, அவளோ மடமடவென அழகாக பேசியதில் அனைவரும் வியந்து பார்த்தனர்.
“இப்போ நல்லா பேசுறா அச்சா. அங்க அகா ரிஷு ரூஹி பாஸ்கர் அப்பா, அம்மான்னு எல்லாரும் மாறி மாறி அவள்கிட்ட பேசிட்டே இருந்ததுல, இப்ப நல்லா வாயடிக்கிறா. ஆனா சேட்டை மட்டும் குறையல” எனப் புன்னகைக்க, அகமொழியைப் பற்றி பேசியதும் அங்கிருந்தவர்கள் முகமே மாறியது.
முதலிலாவது கோபம் இருந்தது. இப்போதோ அவளின்றி இளைய மகனும் உள்ளுக்குள் நொடிந்திருப்பது நாள் செல்ல செல்ல அனைவர்க்கும் புரிய தொடங்கியது.
அதிலும் அவளை பற்றி ஒரு வார்த்தையும் தவறாக பேச விடாதவனின் அன்பும் புரிந்தது தான். ஆனால் இதில் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை.
பிரணீத் சிறு தயக்கத்துடன், “என் கல்யாணத்துக்கு நீங்க யாரும் வரமாட்டீங்களா?” எனக் கேட்டிருக்க, அவர்களின் முகம் சுருங்கிப் போயிற்று.
“ஞங்ஙளுக்கும் வரான் ஆசை தான் மோனு…” சுஜாதா கூறியதில், “அப்போ வாங்க” என்றான்.
அவரோ மீண்டும் அமைதி காக்க, “என்ன உங்க மருமகளுக்கே இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்கன்னு யாரும் தப்பா பேசுவாங்கன்னு யோசிக்கிறீங்களோ?” என கிண்டலாக கேட்டதும் கல்யாணி அவசரமாக மறுத்தார்.
“ஐயோ அதல்ல மோனே… ஞாங்ஙள் வந்தா அன்விக்கும் கஷ்டமாய் இரிக்குமே!” என்று அன்விதாவை பார்க்க, அவள் விழி விரித்தாள்.
“நிஜமா நீங்க வந்தா எனக்கு சந்தோஷம் தான். எனக்கு எந்த சங்கடமும் இல்ல” என பட்டென கூறியவளை திகைப்புடன் தான் பார்த்தது மொத்தக் குடும்பமும்.
கணவன் என்றவனை வாழும்போதே வெறுத்து விட்டதாலோ என்னவோ, இப்போது எளிதாகவே அனைத்தையும் கடக்க முடிந்தது அவளால்.
“உங்களுக்கு சங்கடம் இல்லைன்னா வாங்களேன் எல்லாரும்…” என அவளே அழைக்க, “கண்டிப்பா நாங்க வரோம்” என்றனர்.
அமையா முதலில் விஷ்ணுவை தேடினாள். பின் இல்லையென்றதும் இயல்பாகி விட்டாள்.
முழுதாகப் புரியவில்லை என்றாலும், இனி பிரணீத் வீட்டில் தான் இருக்கப் போகிறோம் என்றளவு புரிந்தது.
குறும்பு குணம் கொண்டவளுக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் குதூகலம் தான் அதிகம் இருந்தது.
நல்லவேளையாக விஷ்ணு தன்மீது போலி காதலை காட்டியது போன்று, மகளிடம் போலி அன்பை உண்மை போல விதைக்கவில்லை. அதுவே அவளை எளிதாக அணுக முடிந்தது என்றே நிம்மதி கொண்டாள் அன்விதா.
பிரணீத்திற்கு அலைபேசி அழைப்பு வர, வாசலுக்கு சென்றவன், யாரோ அழுகும் சத்தம் கேட்டு சுற்றி முற்றி பார்த்தான்.
தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்து அனகா தான் அழுது கொண்டிருந்தாள்.
“ஓய் குட்டிச்சாத்தான், நான் உன்னை உள்ள தேடுனா, இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என பதற்றமாகக் கேட்டான்.
“சாரி சேட்டா…”
எப்போதும் டார்லிங் என்றழைப்பவளின் சேட்டா என்ற அழைப்பே அவளது மனநிலையை உரைக்க, “எதுக்குடா சாரி எல்லாம்?” என்றான் வருத்தமாக.
“நீங்ங லவ் செய்யுன்னுனு தெரிஞ்சும், ஞான் விஷ்ணு கல்யாணத்தை நிறுத்தாதது எவ்ளோ பெரிய தப்பல்லே? அதனால நீங்ஙளும் ஏடத்தியும் எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கீங்ங… ஞான் உண்மையை பரஞ்சு அந்தக் கல்யாணத்தை நிறுத்தி இருக்கணும்ல…” ” எனக் கண்ணீருடன் கேட்டதில்,
“ஏய் அரை மெண்டல். நீ மட்டும் அப்படி செஞ்சுருந்தா, பிரச்சினை தான் ஆகியிருக்கும். அந்த வயசுல உன்னால என்ன பண்ணிருக்க முடியும் அனு. நியாயமா என் காதலை நான் தான் காப்பாத்தி இருக்கணும். தேவை இல்லாம உன் மேல நீ பழி போட்டு கில்டி ஆகிக்காத. உன் ஏடத்தி பார்த்தா, இந்த கல்யாணம் நடக்குறது பிடிக்காம அழுதுட்டு இருக்கன்னு நினைக்க போறா…” என இறுதி வரியை கிண்டலாக உரைத்தான்.
“அய்யோ இல்ல இல்லடா… இப்போழெங்கிலும் நிங்ஙளுடே கல்யாணம் நன்னாய் நடக்கணம். சத்யமாய் எனக்கு வளரே சந்தோஷமுண்டு டார்லிங்… என்டே ஏடத்தியை பத்திரமாய் நோக்கிக்கோணே!” ” என்றவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
சென்னைக்குச் சென்றதும் அன்விதாவிற்கு ஒரு நெருடல் இருக்கத் தான் செய்தது. குமரனும் அமுதினியும் எப்படி நடந்து கொள்வார்களோ என்று.
ஆனால், பள்ளிக் காலத்தில் அந்தச் சிறிய வீட்டிற்கு வரும்போது எப்படி அன்பையும் பாசத்தையும் கொட்டுவார்களோ, அதே போலவே தான் இப்போது வாழ்விழந்து குழந்தையுடன் அங்கு வந்த போதும் சிறிதும் முகம் சுளிக்கவில்லை.
இருவருக்கும் மகனின் மனம் தெரியும். இத்தனை வருடங்கள் அவனுள் புழுங்கிக் கொண்டிருந்ததும் தெரியும்.
இறுதி வரை அழுத்தமாக இருந்து விடுவானோ என்ற பயமே, இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள செய்தாலும், அன்விதாவை அவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.
வேணி இந்த உலகத்திலேயே இல்லை. அவளுக்கு அதீத மகிழ்வு. தனது தமையனின் இத்தனை ஆண்டு கால தவம் அல்லவோ நிறைவேறப்போகிறது.
அனைவரும் ஒரு ஒரு விதத்தில் மகிழ்ச்சியில் ஆர்பரிக்க, சொன்னது போன்றே முந்தைய நாள் மாலையே சென்னைக்கு வந்தனர் அகமொழி குழுவினர்.
“வெல்கம் ஹோம் சிஸ்டர்” பிரணீத் நமுட்டு நகை புரிய, ‘இவனுங்க கமிட் ஆகுறதுக்கு நாம சிங்கிளா அல்லோலப்பட வேண்டியதா இருக்கு…’ என முணுமுணுத்தபடி இளித்து வைத்தாள்.
“உங்க வீடு சூப்பரா இருக்கு ப்ரோ” ரூஹி கூறியதில், “உங்களை மாதிரி இல்லாம நல்ல ஆர்கிடெக் வச்சு கட்டுனோம்” என வாரிட, “மலையேறுனாலும் மச்சான் தயவு வேணும்னு சொல்லுவாங்க மச்சான்” என நொடித்த ரிஷான்,
“இன்னும் மேரேஜ் ரிஜிஸ்டர் ஆகலைல…” என்றவன், “அன்விக்கா… நீங்க ஏன் உங்க முடிவை மறுபரிசீலனை செய்ய கூடாது” என்று யோசனை கூறினான்.
“உங்க தம்பின்ற முறையில சொல்றேன். இந்த ப்ரெண்ட்ஸுங்க எப்ப எப்படி கழட்டி விடுவாங்கன்னே தெரியாது…” என்று வராத கண்ணீரை துடைத்தபடி கூற, அன்விதா வாய்விட்டு சிரித்தாள்.
“அடேய்…” பிரணீத் தான் அவனைக் குனிய வைத்துக் குத்தினான்.
பேச்சும் சிரிப்புமாக வீடே சிரிப்பில் நிறைய, அகமொழி மட்டும் முன் வந்தபோது அவளும் அர்ஜித்தும் தங்கி இருந்த அறைக்குச் சென்றாள்.
அறையே வெறுமையாக இருந்தது. கடற்கரையில் கைப்பிடித்து நடந்ததெல்லாம் நினைவு வந்ததோடு, இரவில் தானாய் அளித்த இதழ் முத்தமும் இதயத்தை உளி கொண்டு தாக்கியது.
ஜன்னல் வழியே தூரத்தில் தெரிந்த கடல் நீலத்தை வெறித்து விட்டுத் திரும்பும்போதே, யாரோ குளியலறையில் இருந்து வரும் அரவம் கேட்டதில் நிமிர்ந்தவள் சர்வ நிச்சயமாக அங்கு அர்ஜித் அகனை எதிர்பார்க்கவில்லை. அதிலும் முன்னெற்றி கேசத்திலிருந்து நீர் சொட்ட சொட்ட, இடுப்பில் துண்டோடு.
யாருமில்லா அறையிலிருந்து யாரோ வருவதைக் கண்டு தன்னிச்சை செயலாக கத்தி விட்டவள், அதன்பிறகே அவன் என உணர்ந்து வாயை பொத்தினாள்.
அவனோ இடுப்பில் கையூன்றி அவளையே மேலும் கீழுமாக அலட்டலாக பார்த்திருக்க, சட்டென அவனிடம் இருந்து பார்வையைத் திருப்பியவள் விறுவிறுவென அங்கிருந்து வெளியில் ஓடி விட்டாள்.
நெஞ்சம் தடதடத்தது.
இங்கு ரூஹி வேறு, “பீச்சுக்குப் போகலாம் அகா” என நேரம் காலம் தெரியாமல் கேட்க, “வீட்டுக்குப் பின்னாடி தான் இருக்கு. போயிட்டு வாங்களேன்…” என பிரணீத் கமுக்கமாக சிரித்தான்.
“அப்டியா? வாடி போயிட்டு வரலாம்…” என வம்படியாக இழுத்துப் போக, அவர்களுடன் ரிஷானும் அமையாவும் உடன் சென்றனர்.
அமையாவுடன் ரிஷானும் ரூஹியும் கடல் நீரில் ஆட்டம் போட, கரையிலிருந்தே அவர்களை புன்னகையுடன் பார்த்திருந்தாள் அகமொழி.
“அகா நீயும் வா…” ரிஷான் அழைக்க, “நான் வரல” என்றவளுக்கு ஆடவனின் நினைவே கொன்றது.
“சித்தி வாங்க.” அமையா வலுக்கட்டாயமாக அழைக்க, கொஞ்சம் முன்னேறி காலை நனைத்தவள், “இங்கேயே நிக்கிறேன் அமையா. நீங்க ரொம்ப உள்ள போகாதீங்க” என்று கண்டித்தாள்.
அவர்களே விளையாடி சோர்வடைந்து விட்டு, “வீட்டுக்குப் போகலாம்” என்றிட, அகமொழிக்கு ஆண்மகனின் நினைவு தரும் இடத்தை விட்டுச் செல்லவே மனம் இல்லை. “நீங்க போங்க… நான் பின்னாடி வர்றேன்” என்றாள்.
ரிஷானும் ரூஹியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி “ஓகே” என்று விட்டுச் செல்ல, அவர்கள் அதிகம் வற்புறுத்தாது அவளுக்கு உறைக்கவில்லை.
கடல் அலைகளைப் போலவே அல்லாடியது அவளது காதலும்.
இதழ்கள் உரசிய தருணம், கை கோர்த்து அவன் கைபிடித்து நடந்தவை எல்லாம் நெஞ்சில் பாரமாக ஏறி இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து உள்ளே சென்றிருந்தாள்.
அர்ஜித் அகன் அவளை அழைத்துச் சென்ற இடம் வரை. எத்தனை நேரம் அப்டியே நின்றாளோ அவளுக்கே தெரியாது. அலைகளின் அளவு பெரிதாகும் போது தான், சுற்றுப்புறம் உணர்ந்தாள்.
மெல்ல இருட்டி இருந்தது. நெஞ்சின் ஆழத்தில் அந்த இருட்டும், மங்கிய கடற்கரையும் இடைக்கு மேல கடல்நீருமாக தான் நின்ற கோலம் அவளுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தி இருக்க, வேகமாக கரைக்கு செல்ல முயன்றவளுக்கு கால் தடுமாறியது.
அதில் கீழே விழப் போனவளை விழாமல் பிடித்தது அவனது இரும்புக் கரம்.
தன்னைப் பிடித்தவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் அகல விரிய, அவனோ புருவம் இடுங்க விழி சுருக்கி அவளைக் கோபமாகப் பார்த்தான்.
“அறிவில்ல… இவ்ளோ நேரம் இங்க எந்து கொண்டா நின்னது?”
“நான் எங்க நின்னா உனக்கு என்ன பிரச்சினை?” அவளது கேள்வியில் தடுமாறியவன், அவளை இன்னுமாக இறுக்கிப் பிடித்து “இன்னும் கொஞ்சம் உள்ளே போயிருந்தால் அலை உன்னை ஆழத்திலேக்கு இழுத்துட்டுப் போயிருக்கும்… ” என்றான்.
“நான் போனா என்னைத் தேடி நீ வரப்போறியா?” அவள் விழிகளில் சிவப்பு நிறைந்த அடக்கப்பட்ட ஆதங்கம்.
“நீ மரணத்தின்டே எல்லை தாண்டிப் போயினாலும் ஞான் வருவேண்டி… உன்டே நிழலாய் வந்தாலும் நினக்கு என்னை புரியுல்லா. என்னை விட்டுப் போயினால் அல்லே நினக்கு இழந்தது எல்லாம் கிடைக்கும்…” அவளது கன்னத்தை இரு விரல்களால் பற்றினான். கோபத்திற்கு பதிலாக அர்ஜித் அகனின் முகம் காதல் வலியை கொட்டியது.
அவளோ அவன் சட்டையைப் பிடித்து, “உன்னை விட்டுப் போறதே சாவோட விளிம்பைத் தாண்டி போற மாதிரி தான்டா…” இதோ அதோவென கலங்கி வழிய துடித்த கண்ணீரை உள்ளிழுத்தாள்.
சிறு திகைப்பை மொழிந்த அவன் நயனங்கள், அவளது கண்களுக்குள் புதையத் தொடங்க, அவளும் அவனுக்குள் தொலைந்து போன தன்னைத் தேடி ஓய்ந்தாள்.
ஓடி ஓய்ந்த அலைகளை போலவே கரை தொட்டு மீளாதோ காதலும்!
அகன் வசமாவாள் (வான்)
மேகா
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


💖💕💞💛💜💗🫂
செம