
திருப்பம்-04
“அடேய் இப்ப என்னடா சாரத்த (லுங்கி) உடுத்திகிட்டு வந்து உக்காந்தருக்க? அவியள்ட நீயும் வரனுல நான் சொல்லிவச்சிருக்கேன். நீ வராட்டி உங்கக்கா சாமியாடிபுடுவா” என்று தெய்வநாயகி கூற,
“ம்மா என்ன விளையாடுதீங்களா? நைட்டெல்லாம் வேலை. ஏத்தத்துக்கு கொடுத்து எல்லாம் அனுப்பிட்டு இப்பத்தேம் வரேம் நான். எல்லு (விலா) உடைய வேலை பார்த்துட்டு உக்காந்துருக்கேன். கிளம்பு கிளம்புனு பறக்குறீய” என்று வளவன் கூறினான்.
“அடேய்.. என்னடா இப்படி பேசுற? அவிய வீட்ல கேப்பாங்கடா” என்று தெய்வநாயகிக் கூற,
“அம்மா.. அவன்தான் நோவுதுங்குறான்ல? நீயும் பாத்ததான? மோந்திக்குப் போனவன். இப்பத்தான் வந்துருக்கான். போய் ஒறங்கட்டும் ம்மா” என்று திருவிக்ரமன் கூறினான்.
“உங்கக்காகாரி ஒடக்கிழுப்பாடா” என்று தெய்வா சோர்வாய் கூற,
உள்ளே சமையலறையில், “இவ எப்பத்தான் இழுக்காம இருந்திருக்கா?” என்று தனலட்சுமி முனுமுனுத்தாள்.
அவள் கையில் ஒரு போடு போட்ட கார்த்திகா, “உங்கம்மா காதுல விழுந்தா சங்குதான்டி உனக்கு” என்று கூற,
“அய்யோ மைணி.. சங்கு எனக்கில்லை.. எங்கண்ணனுக்கு” என்று கேலி செய்தாள்.
“யாருக்கு சங்கு?” என்றபடி விக்ரமன் உள்ளே வர,
அவன் கையில் தேநீரை நீட்டிய தனலட்சுமி, “எல்லாம் உங்க கூடவே பிறந்த இரட்டை சகோதரனுக்குதான்” என்று கத்திக் கூறினாள்.
கூடத்தில் நீள்விருக்கையில் படுத்திருந்தவன் அவள் போட்ட சத்தத்தில் எழுந்து லுங்கியை மடித்தபடி அங்கு வந்து நின்றான்.
“என்ன அண்ணா.. சங்கு ஓகேதான?” என்று தனம் கேட்க,
“அண்ணே.. போய் அந்த நம்பட்டிய எடுத்துட்டுவா. ஒருத்திக்கு பெறந்தலய பெளக்க வேண்டியிருக்கு” என்றான்.
அதில் களுக்கென்று சிரித்த கார்த்திகா, “கொழுந்தநாரே.. நெஞ்ச தொட்டு சொல்லுங்க. மனசுக்குள்ள குற்றால சாரல் வீசல?” என்று கேட்க,
“மைணி..” என்று கத்தியவனுக்கு அழகாய் வெட்கம் ஒட்டிக்கொண்டது.
“அண்ணேனுக்கு வெக்கத்த பாத்தீயளா?” என்று சிரித்த தனம், “ஃபோன் நம்பர் எதும் வாங்கிணியாண்ணா?” என்று கேட்க,
“அதெல்லாம் வாங்கிருப்பான் தனா.. பய எப்படிபட்ட ரெமோ தெரியும்ல?” என்று விக்ரமும் கேலியில் இறங்கினான்.
“டேய்.. போடா அங்குட்டு” என்று கூறியவன் நகர முற்பட, அவனை பிடித்து வைத்துக்கொண்டு அனைவரும் கேலியில் இறங்கினர்.
தயார் நிலையில் வந்த சுயம்புலிங்கம் கூட இதை அழகான புன்னகையுடன் ரசித்தார்.
அவருக்கு எப்போதும் தான் பெற்ற பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதில் கொள்ளை பிரியம். திரிபுரா மட்டும் இவர்களுடன் ஒட்டாமல் இருப்பது அவருக்கு பெரும் வருத்தமாக இருக்கும். தன்னிடம் அவளது காரியத்தை சாதித்துக்கொள்ள இயலாது என்பதற்காக தெய்வாவை அவள் காக்காய் பிடித்து வைப்பதில் அவருக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கும். சமயத்தில் திட்டியும் விடுவார். இருப்பினும் அவரது மூத்த மகளாயிற்றே! ஒதுக்கமெல்லாம் காட்டிப் பழக்கமில்லை.
“டேய்.. உடம்பு நோவுதுனு சொல்லிட்டு இங்க என்னடா அரட்டை உனக்கு?” என்று தெய்வநாயகி அதட்ட,
“ம்மா ஏம்மா அவன நோண்டிகிட்டே இருக்க?” என்று தனம் கேட்டாள்.
“பெரியவ வீட்ல விசேஷம். வீடுதேடி வந்து கூப்பிட்டிருக்காவ. இவன் வரமாட்டேன்னு நிக்குறானே? அவ என்ன நினைப்பா?” என்று தெய்வநாயகி வருத்தமாய் கேட்க,
“எப்போபாரு உங்களுக்கு உங்க மூத்த பொண்ணுதான் முக்கியமா ம்மா?” என்று கேட்டேவிட்டான், வளவன்.
“டேய்.. என்னடா இப்படி பேசுற?” என்று தொய்வநாயகி வருத்தமாய் கேட்க,
“பின்ன என்னம்மா? நான் முடியலைனு சொல்றேன். வந்தாதான் ஆச்சுனு நிக்குறீய. எல்லாருமே போறீய தானே? நான் ஒருத்தன் வராததுல என்னம்மா? முடியாததால தானே சொல்றேன்” என்று கேட்டான்.
“தெய்வா.. அவன் தான் முடியலைனு சொல்றான்ல? விடு. நாம போவோம்” என்று சுயம்புலிங்கம் கூறிவிட, பிறகு தெய்வா ஏதும் பேசிக்கொள்ளவில்லை.
திரிபுரா கணவனது தாத்தாவின் எம்பதாவது பிறந்தநாள் விழா நடைபெறவுள்ளது.
அனைவருமாக புறப்பட்டு செல்ல, தன் அறைக்கு வந்து படுத்தவனது அலைபேசியில் கடந்த ஒரு வாரமாய் வரும் புது காலை வணக்கச்செய்தி இப்போதும் வந்தது.
அதை எடுத்துப் பார்த்தான்.
‘அழகான விடியலோடு பொன்னான நாள் துவங்க, இனிய காலை வணக்கம்’ என்ற புகைப்படக் குறுஞ்செய்தி வந்திருக்க, அவன் இதழ்களில் அழகான புன்னகை ஒன்று உதயமானது.
காதலிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, தினம் தவறாமல் காலை வணக்கம் மற்றும் இரவு வணக்கம் மட்டுமேதான் அனுப்புகின்றாள்.
இதைவிடுத்து எப்போதாவது ‘சாப்பிட்டீங்களா?’ என்ற செய்தி வரும்.
இந்த ஒரு வாரம், இவ்வழகிய புதுமைக்கு அவன் பழகியிருந்தான்.
அவன் பக்கமிருந்து அடிகள் எடுத்து வைக்குமளவு அவனுக்கு நேரம் அமைந்திருக்கவில்லை. தற்போது மணியைப் பார்த்தான். எட்டரை என்று காட்டியது.
அவள் பேருந்தில் புறப்படவுள்ள நேரம்.
அழைப்பு விடுத்தான். முதல் அழைப்பு!
பேருந்திற்காக சென்றுகொண்டிருந்தவள், அவன் அழைப்பைத் தாங்கி ஒலிக்கும் அலைபேசியை பார்த்தாள்.
‘என்ன ஃபோன்லாம் பண்றாங்க?’ என்று பதட்டம் எழுந்தது.
‘காதலிக்கலாம்னு கேட்டுட்டு ஃபோன் பண்றாங்கனு சொன்னா எப்புடிடி சங்கு?’ என்று எண்ணிக்கொண்டு அவள் அழைப்பை ஏற்க,
“ஹ்ம்.. எடுக்க மாட்டியோனு நினைச்சுட்டேன்” என்று கூறினான்.
“இ..இல்ல அப்படியில்லை.. நடந்து போயிட்டிருந்தேன்.. அதான்” என்று அவள் சமாளிக்க முயற்சிக்க,
“அப்ப பஸ் ஏறிட்டு கூப்பிடு” என்று வைத்துவிட்டான்.
‘ஏது.. நான் கூப்பிடவா?’ என்று அதிர்ந்தவள் மனதில், ‘கல்யாணத்துக்கு முன்ன அடிக்கடி ஃபோனெல்லாம் பேசக்கூடாது சங்கு. பெரியவங்க சொன்னா எல்லாம் ஒரு காரணமாதான் இருக்கும்’ என்று கூறியது நிழலாடியது.
அதே யோசனையுடன் பேருந்தைப் பிடித்து அமர்ந்துகொண்டவள், அலைபேசியைப் பார்க்க, அவனிடமிருந்தே அழைப்பு வந்தது.
பட்டென ஏற்றுவிட்டாள்.
“என்ன மேடம்.. கூப்பிட மாட்டீங்களா?” என்று வளவன் கேட்க,
“இ..இல்லங்க..” என்று தடுமாறினாள்.
“இல்லங்க தவிர எதாவது பேசத்தெரியும்னா பேசலாம்” என்றபடி அவன் சோம்பல் முறிக்க,
“நீங்க என்ன இந்நேரம் கூப்பிட்டிருக்கீங்க?” என்றாள்.
“நைட்டு ஒரு எக்ஸ்போர்ட் வேலைபா. இப்பதான் வந்தேன். மூத்தக்கா வீட்ல விசேஷம்னு எல்லாம் கிளம்பி போயிருக்காங்க. நான்தான் நைட்டெல்லாம் தூங்கலை நோவுதுனு வரலை சொல்லிட்டேன்” என்று கூற,
“அச்சுச்சோ அப்ப ரெஸ்ட் எடுக்கலாம்லங்க” என்றாள்.
“ம்ம்.. கொஞ்ச நேரம் பேசுவோமேனு கூப்பிட்டேன். மேடம்கு பேச இஷ்டம் இல்லை போலயே” என்று வளவன் கேட்க,
“இ..” என்று அவள் துவங்கும் முன் அவளைப்போலவே, “இல்லங்க.. அதான?” என்றான்.
அதில் கிளுக்கின்று சிரித்தவள், “என்ன விசேஷம்?” என்று கேட்க,
“அத்தானோட தாத்தாக்கு எம்பதாவது பிறந்தநாள்” என்றான்.
“அட போயிருக்கலாம்ல நீங்க? வயசானவங்க ஆசிர்வாதம் கிடைக்குறது நல்லதுதானே?” என்று அவள் கேட்க,
“நிஜமாவே முடியலைமா. அங்க ரொம்பநேரம் நின்னது எல்லுகில்லெல்லாம் நோவுது” என்றான்.
அவன் பேசியது புரியாதவள், “ஆங்?” என்று விழிக்க,
“நீ எந்தூருமா?” என்று கேட்டான்.
“நான் பிறந்தது வளந்ததுலாம் சென்னை. அம்மாக்கு இந்த பக்கம் தான். ஸ்கூல் முடிக்குற சமயம் அப்பாக்கு இங்க மாத்தல் வந்துச்சு. நான் காலேஜ் அங்கயே ஆஸ்டல்ல முடிச்சுட்டு இங்க வந்துட்டேன் வேலைக்கு” என்று சங்கமித்ரா கூற,
“அப்ப அசலூரா” என்று கேட்டவன், “இது நம்ம நாகர்கோவில் வழக்கு. நம்ம வீட்ல அப்படியே குமரித்தமிழ் பொழியாதுனாலும் பேச்சுல குமரித்தமிழ் சாரல் தெரிக்கும். எல்லுனா விலா. நோவுனா வலி” என்று கூறினான்.
“ஓ..” என்று கேட்டுக்கொண்டவள், “எனக்கு இந்த வட்டார வழக்குலாம் தெரியாதுங்க” என்று கூற,
“நம்ம வீட்டுக்கு வந்துட்டா பழிகிடும்மா” என்றான்.
என்ன பேசவென்று தெரியாமல், அவள் படிப்பு, வேலை குறித்து பேசி தெரிந்து கொண்டவன், அவளையும் ஓரளவு பேச வைத்துக் கொண்டிருந்தான்.
தாயை மீறி அவனிடம் பேசுவது கொஞ்சம் பயமாக இருந்தாலும், அவனுடன் பேசுவதற்கு மனதில் எழுந்த ஆசை அதனை தட்டி அடக்கவே செய்தது.
அவளது வேலையிடம் வந்துவிட, “ஏங்க.. ஆஃபிஸ் வந்துடுச்சு” என்று கூறினாள்.
“ஓ.. ஓகேமா. பாத்துக்க. வைக்குறேன்” என்று அவன் கூற,
மனமே இன்றி, “ம்ம்” என்றாள்.
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு அழைப்பைத் துண்டித்தவன் அலைபேசியைப் பார்த்து சிரித்துக் கொண்டான்.
அப்போதே விக்ரமிடமிருந்து ஒரு தவறிய அழைப்பு வந்திருப்பதைக் கண்டு அவன் அழைக்க, “டேய்.. தூங்கிட்டியா?” என்று கேட்டான்.
“இல்லடா.. மித்..” என்று கூற வந்தவன், “சொல்லு என்ன?” என்று கேட்க,
“மித்தோட மிச்சம் மீதியெல்லாம் புரியாம இல்லடா ராசா. சாப்பாடு இங்கருத்து கொண்டு வருவோம். எதுவும் செஞ்சு சாப்பிடாதனு சொல்லத்தான் கூப்பிட்டேன்” என்று கூறினான்.
சிரிப்போடு சரியென்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு உறங்கிவிட, “பய பொழைச்சுப்பான்” என்று சங்கமித்ராவுடன் அவன் பேசியுள்ளது பற்றி கார்த்திகாவிடம் இவன் கேலி பேசுவது தெய்வநாயகி காதில் விழுந்து மனத்தாங்களை ஏற்படுத்தியது.
‘அக்காவுக்காக வாடானா, நோவுதுனுட்டு இவகூட கதையளக்குறானாம்ல?’ என்று மனதோடு நொடித்துக் கொண்டவரிடம் வந்த திரிபுரா, “தம்பி ஏம்மா வரலை?” என்று அதிருப்தியை மறைக்காத முக பாவத்துடன் கேட்டாள்.
“அவனுக்கு குறுக்கு நோவுதுனு படுத்துகிடக்கான்டி. நேத்து நைட்டெல்லாம் வேலை. வீட்டுக்கே வரலை” என்று தெய்வா கூற,
“ம்ம்.. பொண்ணு பாத்தாச்சா? நான் வரலைனு சொல்றேன் பேச்சுக்குக்கூட வேற நாள் வச்சுப்போமானு கேட்கலை. அதுசரி.. நாங்க வந்தா என்ன வராட்டி என்ன? அப்பாக்கு அவரோட ரெண்டாது மருமகன் தான ஒசத்தி?” என்று சுருக்கென்று கேள்வி கேட்டாள்.
“என்ன திரிபுரா இப்படி பேசுற? அப்பா எப்ப அப்படி பிரிச்சு பாத்துருக்காரு? இன்னொருவாட்டி இங்குட்டு வந்து இப்படி பேசாத சொல்லிட்டேன்” என்று கண்டிப்பாகவே தெய்வா கூற,
முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டவள், “பொண்ணு எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.
“பொண்ணெல்லாம் லட்சனமாதான் இருக்கு” என்று அவர் இழுக்க,
“பொண்ணு வீடு?” என்று கேட்டாள்.
“அதான் கொஞ்சம் வெசனமாருக்கு. அவங்களுக்கு மூத்ததும் பொண்ணு. மூத்த மருமகன்னா ஒசத்தியாம்ல? எம்மூட்டு மகனுக்கு அங்கன மரியாத எம்புட்டு இருக்கமோனு இருக்கு” என்று அழுப்பாய் அவர் கூற,
“என்னவோ போம்மா. எனக்கு இந்த சம்மந்தத்துல விருப்பமே இல்லை. தம்பி நல்லாருந்தா சரி” என்றுவிட்டு திரிபுரா சென்றுவிட்டாள்.
மகள் சென்ற திசையை அதிர்ந்து பார்த்தவர், ‘இவ என்ன இப்படி சொல்லிட்டுப் போறா?’ என்று பதற,
அவள் பக்கக் காரணத்தை அறிய செல்லும்முன் சுயம்புலிங்கம் அழைத்துவிட்டதில் சென்றுவிட்டார்.
விழா இனிதே முடிய, “வேலையெல்லாம் முடிய கொஞ்சம் வந்துட்டு போடி” என்று தெய்வா திரிபுராவிடம் கூற,
“ம்ம் ம்ம்” என்றாள்.
“அம்மா” என்று அவளிடம் தீபிகாவின் பிள்ளைகள் ஓடிவர,
புன்னகையுடன், “ஏ மக்கா.. அம்மா உங்களுக்கு பொம்மை வாங்கி வச்சன்டா. இரு எடுத்துட்டு வரேன்” எனச் சென்று பொம்மைகளை எடுத்து வந்து கொடுத்தாள்.
“அட ஏன் அக்கா? ஏற்கனவே இதுக செய்ற சேட்டைக்கு வீடெல்லாம் பொம்மதேன்” என்றபடி தீபிகா வர,
“எம்புள்ளைகளுக்கு நான் தரேன்” என்று கூறினாள்.
தீபிகா தன் அக்காவின் ஏக்கம் உணர்ந்து தன் பிள்ளைகளிடம் திரிபுராவையும் அம்மாவென்றே அழைக்க கற்பித்திருந்தாள். அதில் திரிபுராவுக்கு கொள்ளை சந்தோஷம். அம்மா என்று தன்னை சுற்றிவரும் பிள்ளைகளிடம் அத்தனை பாசமாக நடந்துக்கொள்வாள்.
“பொம்மை சூப்பர்மா” என்ற பிள்ளைகள் அவளை அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைக்க, தானும் பாசமாய் பதில் முத்தம் கொடுத்தாள்.
“ஏ மக்கா” என்று சிவபாதசேகரன் அங்கு வர, “அப்பா” என்று அவனையும் அணைத்து அன்பை வெளிப்படுத்தினர்.
“சரியத்தான். நாங்க போய்டு வரம்” என்று தீபிகா கூற,
“சரிமா. வந்து விழாவ சிறப்பிச்சதுக்கு ரொம்ப சந்தோஷம்” என்று கூறினான்.
ஒவ்வொருத்தராக வந்து அவர்களிடம் விடைபெற்று செல்ல, தெய்வநாயகி மகள் கரம் பற்றி ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டுச் சென்றார்.
வீடு திரும்பியவர் மனம் படபடவென்றே அடித்துக் கொண்டது. தன் கையால் பூ வைத்து முடிவு செய்ததோடு இல்லாமல் இதோ இந்த வார இறுதியில், நாள் குறித்து புடவை வேறு எடுக்கவுள்ளோம். இன்னும் சில தினங்களில் நிச்சயத்திற்கும் நாள் குறிக்கப்பட்டிருக்க, இரண்டு மாதங்களில் திருமணம் எனும்வரை முடிவாகியுள்ளது. தற்போது வந்து மூத்த மகள் தன் மனத்தாங்களை வெளிப்படுத்துவதை எப்படி எடுத்துக்கொள்வதென்றே அவருக்கு புரியவில்லை.
ஏற்கனவே ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு காலென இருப்பவருக்கு மகளின் பேச்சில் மேலும் குழப்பம் எழ, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க ஏதுவான தூண்டிலுடன் திரிபுரா காத்திருந்தாள். அவள் பிடிக்கவுள்ள மீனுக்காக இரு நெஞ்சங்கள் தவிக்க நேரிடுமோ?

