Loading

அத்தியாயம் 37

அர்ஜித் பார்க்கும் முன்னே அங்கிருந்து சென்ற ரிஷான், நேராகக் கிளாம்பிங்கிற்குச் சென்றவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

அங்கு ஆள்கள் வேலை செய்து கொண்டிருக்க, அவர்களுக்கு வேலை ஏவிக் கொண்டிருந்த ரூஹி ரிஷானைக் கண்டதும் அவனருகில் சென்றாள்.

“என்னடா?” அவன் தோளைத் தொட்டதும் கேவிக் கேவி அழத் தொடங்கினான்.

“டேய், என்னடா ஆச்சு?” ரூஹி பதறிட,

“தப்புப் பண்ணிட்டேன் ரூஹி… நான் செஞ்சது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்பத் தான் புரியுது. நான் அவளை நம்பி இருக்கணும்ல… ஏன் நம்பாம விட்டேன். இப்ப அவள் லைஃப்குள்ள வந்தவனே, அவளை இவ்ளோ நம்பும்போது நான் நம்பி இருக்கணும்ல? இப்ப அவளுக்கு இந்த லைஃபும் ஸ்பாயில் ஆகி, எதையோ இழந்தது மாதிரி எதுலயும் பிடித்தம் இல்லாம இருந்திருக்க மாட்டாள்ல…” என முகத்தை மூடித் தேம்பினான்.

“ஐயோ ரிஷு… இப்ப எதுக்கு மறுபடியும் அதை ஸ்டார்ட் பண்ற. விடுடா… அவளே அதைப் பெருசா எடுக்கலைல. இப்ப நீ புலம்புற அளவு என்னாச்சு?”

ரிஷான் நடந்ததைக் கூறியதில் ரூஹியும் வியப்பாகப் பார்த்தாள்.

“அன்னைக்கு அகா கூட, அந்தக் கேரளாக்காரனைத் தப்பா பேசும்போது இப்படித் தான சொன்னா… ரெண்டு பேரும் இவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங்கா? ஒண்ணுமே புரியலையே டா. இவ்ளோ புரிதல் இருந்தும் ஏன் பிரிஞ்சு இருக்கணும்?” எனக் குழம்பினாள்.

“எனக்கு அகா மேல கூட கோபம் இருந்துச்சு. எதுக்காக அவனுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்றான்னு… ஆனா இப்ப அவன் குடும்பத்தையே எதிர்த்துப் பேசிச் சொந்த அண்ணனையே அவளுக்காக அடிக்கும்போது தான் புரியுது.” ரிஷான் முகத்தைத் தொங்கப் போட்டுக் கூற,

“ம்ம்… ஆனா அவளும் இவனை நம்புறா. இவனும் அவளை நம்புறான். அப்புறம் ஏன் பிரிஞ்சு இருக்கணும்?” ரூஹி சந்தேகமாகக் கேட்டாள்.

“மொதல்ல இவங்களுக்குள்ள எதுனால இவ்ளோ பிரச்சினைன்னு தெரியணும். என்னால அவளை இப்படிப் பார்க்க முடியல.” ரிஷானின் கூற்றில்,

“விஷ்ணு தான் ரிசார்ட்ல தப்புப் பண்றான்னு தெரிஞ்சதுல இருந்தே, எனக்கும் உறுத்தல் தான். பேசாம நம்ம ப்ரணீ பிரதர்கிட்ட கேட்டுப் பார்க்கலாமா?” என்றாள் ரூஹி.

அந்நேரம், அன்விதாவைப் பார்க்கும் பொருட்டு ப்ரணீத் அங்கு தான் வந்தான்.

“அடடே! அவரே வந்துட்டாரே…” ரூஹி சத்தம் கொடுத்ததில் ரிஷான் சிவந்த விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்க்க, பிரணீத்தும் அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்து விட்டு அன்விதாவைத் தேடினான்.

“உங்க ஆளு இல்ல பிரதர்… அமையா ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங் போயிருக்காங்க…”

“ஓ… ஓகே!” என்றவன் மீண்டும் திரும்பிச் செல்ல முயன்றான். அவர்களிடம் அவ்வளவாகப் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

அதே நேரம் ரிஷான் வேகமாக அவனைத் தடுத்து, “உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்…” என்றான்.

கையைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தவன் என்ன என விழியுயர்த்த, “அகாக்கும், அவ ஹஸ்பண்ட்கும் என்ன பிரச்சினை?” எனக் கேட்டான்.

“ஒண்ணா, ரெண்டா? எந்தப் பிரச்சினையைப் பத்திக் கேட்குற?”

“அது… ஹான்! என் எங்கேஜ்மெண்ட்கு வந்து ஏன் அவள் மேல பொய்ப் பழி போட்டான்?” ரிஷான் சற்றே கடுப்புக் கலந்து கேட்க, “இதை அன்னைக்கே அவன்கிட்ட கேட்டிருக்க வேண்டியது தான?” ப்ரணீத்தும் முறைத்தான்.

அதில் தலையைக் குனிந்தவன் மௌனத்தை நீட்டிக்க, பிரணீத்தே தொடர்ந்தான்.

“அர்ஜியைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? அவனைப் பத்தி இஷ்டத்துக்கு ரிவியூ போட்டிருக்கீங்க. இந்த மாதிரி அடுத்தவங்களைப் பத்தி அவதூறு பரப்புறது அவனுக்குச் சுத்தமா பிடிக்காது. உங்க மூணு பேரையும் சும்மா விட்டதே பெருசு. இல்லன்னா விஷ்ணு இடிக்கிறதுக்கு முன்னாடி அவன் தான் கிளாம்பிங்கை இடிச்சிருப்பான். ஏதோ என் சிஸ்டர் மேல அவனுக்கு லவ்வு கிவ்வு வந்துட்டதுனால விட்டான்.” என்றதில், ரூஹி அதிர்ந்து விட்டாள்.

இப்போது அவள் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.

“அப்போ… அப்போ அந்த ரிவியூ தான் எல்லா பிரச்சினைக்கும் காரணமா?” காற்றுத் தான் வந்தது அவளுக்கு.

“ம்ம்!”

தரையில் அப்படியே அமர்ந்து விட்டவள், தலையில் கை வைத்து உண்மையை ஏற்க இயலாது திணறினாள்.

“ரூஹி…” ரிஷான் அவளைப் பிடித்துக் கொள்ள,

“அவள்கிட்ட எத்தனைத் தடவை கேட்டேன்… ரிவ்யூனால தான் இவ்ளோ பிரச்சினையான்னு. அவள் கடைசி வரை ஒத்துக்கவே இல்ல. நான் வருத்தப்படுவேன்னு தான அவள் சொல்லாம இருந்திருக்கா… சாரிடா, என்னால தான் உன் லைஃபும் போச்சு. அவள் லைஃபும் போச்சு…” எனத் தேம்பத் தொடங்க, “ஏய் லூசு, அதெல்லாம் ஒன்னும் இல்ல. விஷ்ணு நம்மளைப் பத்தித் தப்பா போட்டதுனால தான நம்மளும் செஞ்சோம். பேர் மாறிடுச்சு. ஆனா உண்மை தான அது… ரூஹி, அழாத ப்ளீஸ்!” என்றான் தவிப்பாக.

பிரணீத்தை நிமிர்ந்து பார்த்தவள், “அவளுக்கும் அந்த ரிவியூக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. நான் தான் அவள்கிட்ட கேட்காம அந்த ரிவியூவை பப்ளிஷ் பண்ணேன். அப்போ கூட அவ, பிசினஸ் வேற… பெர்சனல் லைஃபை இழுக்கக் கூடாதுன்னு உடனே ரிவியூவை டெலிட் பண்ணச் சொன்னா. அப்போ வியூஸ் எதுவும் போகல. அப்பவே நான் வீடியோவை டெலிட் பண்ணச் சொல்லிட்டேன். அந்த இன்ப்ளூயன்சரும் டெலிட் பண்ணிட்டதா தான் சொன்னான். இப்ப ரீசன்டா தான் அந்த வீடியோ டெலிட் ஆகலன்னே எனக்குத் தெரியும். ஆனா, இதுனால தான் அவங்களுக்குப் பிரச்சினைன்னு தெரிஞ்சுருந்தா நான் அப்பவே கிளம்பி வந்திருப்பேன். என் அப்பா மட்டும் நல்லா இருந்திருந்தா, அப்பவே உங்க ப்ரெண்டுகிட்ட உண்மையைச் சொல்லி இருப்பேன். தப்பு நான் தான பண்ணேன். எனக்கு மட்டும் தண்டனை குடுத்திருந்தா போதும்ல. இப்ப அவளோட வாழ்க்கையும் சேர்ந்து போச்சு…” என உடைந்து அழுதாள்.

பிரணீத் தான், அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

விஷ்ணு செய்த காரியத்தில் தான் இத்தனையும். இதில் இவர்களைத் தவறு சொல்லி என்னாகப் போகிறது என்ற உண்மை உறைக்க, அவள் அருகில் அவனும் அமர்ந்தான்.

“விடு ரூஹி. தெரியாம நடந்தது, அவ்ளோ தான்… ஒருவேளை இதெல்லாம் நடக்காம இருந்திருந்தா, அர்ஜித்தும் அகாவும் சேர்ந்திருக்க மாட்டாங்க. எனக்கு ஒரு நல்ல சிஸ்டர் கிடைச்சிருக்க மாட்டா. அன்வி லைஃப்ல ஒரு பிரேக் த்ரூ வந்திருக்காது.”

“ஆனா இப்ப அவள் தான, பைத்தியம் பிடிச்சவ மாதிரி, அவன் நினைப்புலயே இருக்கா…” ரிஷான் ஆதங்கமாகக் கேட்டான்.

“அப்படி ஒன்னும் என் பிரெண்டு அவளை விட்டுட மாட்டான் ரிஷான். அவன் எது செஞ்சாலும் ஒரு ரீசன் இருக்கும்… இந்த விஷயத்தை மறந்துட்டு கேரியர்ல கான்சன்ட்ரேட் பண்ணுங்க…” என்று அறிவுரை வழங்கி விட்டுச் சென்றான்.

ஆனாலும் ரூஹிக்கு மனம் கேட்கவில்லை. இதனை அர்ஜித்திடம் நேரடியாகக் கூறி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற தீர்மானம் எழுந்திட, “வா, நம்ம சேர்ந்தே அவனைப் பார்க்கலாம்.” என ரிஷானை அழைத்துச் சென்றாள்.

ரிசார்ட் அலுவலக அறையில், கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தான் அர்ஜித் அகன்.

இன்னும் விஷ்ணுவின் பேச்சில் எழுந்த சினம் அடங்கவில்லை.

அவனைக் கொன்றே போட்டிருக்க வேண்டும். அந்நேரம் தான் கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தனர் ரிஷானும், ரூஹியும். அவர்களைக் கண்டதும் லேசர் பார்வை பார்த்தவன், “எந்தா?” எனக் கடுமையாகக் கேட்க,
ரூஹி மீண்டும் அழத் தொடங்கினாள்.

“வாட்?” அர்ஜித் முகத்தைச் சுளித்துக் கேட்க, அவளோ மீண்டும் “அந்த ரெவியூக்கும் அகாக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. நான் தான்…” என்று சொல்லி முடிக்கும் முன்னே ரிஷான், “நாங்க தான் அதை அகாவுக்குத் தெரியாம போட்டோம்.” என்று முடித்தான்.

ரூஹி அவனைத் திகைப்பாகப் பார்க்க, அவனோ நடந்து முடிந்ததை எடுத்துரைத்து விட்டு, “இதுனால தான் அவள்கூட பிரச்சினைன்னா தயவு செஞ்சு அவளைக் கூட்டிட்டுப் போயிடுங்க. எங்களால அவளை இப்படிப் பார்க்க முடியல. இல்ல நாங்க தான் பிரச்சினைன்னா, நாங்களும் போயிடுறோம்…” எனும்போதே குரல் கமறியது ரிஷானுக்கு.

இருவரையும் பார்வையால் ஊடுருவிய அர்ஜித் அகன், “அத்தரே உள்ளு… (அவ்வளவு தானே) கிளம்புங்க. எனிக்கு ஜோலி உண்டு.” என்று மடிக்கணினியில் பார்வையைப் பதிக்க, இருவரும் செய்வதறியாது நின்றனர்.

“ஞான் எந்தா மியூசியமோ? ரெண்டு பேரும் நிந்து வெறிச்சு நோக்கியிட்டு இரிக்கனது?(ரெண்டு பேரும் வெறிச்சி பார்த்திட்டு இருக்கீங்க)” விழிகளைத் திருப்பாமலேயே கேட்டதில், வேறு வழியற்று வாசலை நோக்கிச் சென்றனர்.

“வெயிட்!” அர்ஜித்தின் குரலில் நின்றவர்களிடம் கண்ணைக் காட்ட, இருவரும் மீண்டும் முன்னே வந்தனர்.

ரிஷானிடம் ஒரு கவரைக் கொடுத்தவன், “இது ஹாபிட் ஹவுஸ் கட்டனதினான கோட்…(கட்டுறதுக்கான கோட்)” என்றதில், அதனை வாங்கிப் பிரித்தான்.

“என்ன, கன்ஸ்ட்ரக்ஷன் காஸ்ட் இவ்ளோ கம்மியா இருக்கு?”

“எதில் எல்லாம் காஸ்ட் கட்டிங் செய்யான் பற்றுமோ(செய்ய முடியுமோ), அதிலெல்லாம் செய்திருக்கு.

நியூ கம்பெனி. சோ ஆபர் பேஸிஸ்னு எங்கனே வேணமெங்கிலும் விஸ்வசிப்பிக்காம். (எப்படி வேணாலும் நம்ப வைக்கலாம்.) அது நிங்கள்டெ இஷ்டம்.

பட் ஈ கோட்கு அவள் ஓகே பரயணம். இல்லா… ரெண்டு பேரையும் தலைகீழே கெட்டித் தொங்கான் விடும்!(இதுக்கு அவள் ஓகே சொல்லணும். இல்ல ரெண்டு பேரையும் தலைகீழா கட்டித் தொங்க விடுவேன்)” என்று மிரட்டினான்.

“ஹான்?” ரூஹி அரண்டு பார்த்தாள்.

“இவ்ளோ கம்மியா ஆபர் யார் குடுப்பா ப்ரோ…” அவள் தயக்கமாகக் கேட்க,

“இப்ப கிளாம்பிங் கட்டிட்டு இரிக்குன கம்பெனி தன்னே, ஆபர் ப்ரைஸில் இதைச் செய்யுவாந்து பரயு. விஸ்வசிக்கும்…(இப்ப கிளாம்பிங் கட்டிட்டு இருக்குற கம்பெனி தான், ஆஃபர் ப்ரைஸ்ல இதை செய்றாங்கன்னு சொல்லு. நம்புவா)” என்றான்.

“ஆனா அவள் எப்படி நம்புவா?” ரிஷான் பரிதாபமாகக் கேட்க,

“இப்ப நீ வெள்ளைக் காக்கா பறக்குந்து எந்து பரஞ்சால் கூடே அவள் விஸ்வசிக்கும்…” என்றான் அவளது மனநிலை உணர்ந்து.

இருவரும் குழப்பத்துடன் வந்தனர்.

பனிமூட்டத்தை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்த அகமொழியிடம் வந்த ரிஷான், “ஹே அகா… நம்ம ஹாபிட் ஹவுஸ்க்கு கம்மி கோட்லேயே, நம்ம இப்பப் பண்ணிட்டு இருக்குற கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி கட்டித் தர்றாங்களாம். லேபர்ஸும் எக்ஸ்ட்ரா கிடைக்கும். நம்ம ஒண்ணாவே கட்டிடலாம். என்ன சொல்ற?” என்றான்.

“ஓ… ஆனா, எப்படிடா இவ்ளோ கம்மியா?”

“ஏதோ ஆஃபராம்!” எச்சிலை விழுங்கிச் சமாளித்தான்.

“ஓ… ஓகே!” என்றவளை ஓரக்கண்ணில் பார்த்தான்.

அவளுக்கோ, வங்கியில் அகனின் அண்மை உணர்ந்து முகம் பார்க்காதது ஏக்கத்தை விதைத்திருந்தது.

ரிஷான் தான், “அங்க பாரேன், வெள்ளைக் காக்கா பறக்குது.” என்று எங்கோ காட்ட அவளும் விழி திருப்பிப் பார்த்து விட்டு, “ம்ம்” என்றவள் மீண்டும் மலைமுகட்டின் பனிமூட்டத்தில் தானும் தொலைந்து போனாள்.

“ரொம்ப முத்திருச்சு!” முணுமுணுத்தபடி அவள் தவத்தைக் கலைக்க விரும்பாதவனாக அங்கிருந்து நகன்றான்.

முதலில் அவர்களுக்கு ஒரு தற்காலிக அலுவலக அறையை உருவாக்கி இருந்தனர். அதில் தான் நால்வரும் இணைந்து மார்க்கெட்டிங் திட்டங்கள் தீட்டுவர்.

அன்று அன்விதா நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க, அலுவலக அறையில் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த அகமொழிக்கு உறக்கம் கண்ணைச் சுழற்றியது.

இரவெல்லாம், அவனது வாசமின்றி உறங்க அத்தனைக் கடினமாக அல்லவோ இருக்கிறது!

அதில் தன்னை மீறித் துயில் கொண்டவளின் விழிகளுக்குள், அகனின் முகமே தெளிவாய் தெரிந்தது.

“என்னைப் பார்க்கக் கூட உனக்குப் பிடிக்கலைல…” மனத்தின் ஆழத்தில் துளைத்துக் கொண்டிருந்த கேள்வி கனவாக வெளிப்பட, “நின்னைக் கண்டபின்னே, என்டெ மனசும், தேகமும் என்டெ பேச்சைக் கேள்கில்லல்லோ காந்தாரி…” என்றான் செவியோரம் வெப்ப மூச்சுத் தீண்ட.

ஒற்றை விரலால் அவளது கன்னத்திலும் கோடிழுத்தான். நாசி உணர்ந்த வாசம், அவள் துயில் கலைக்க, கண்ணைச் சுருக்கிக் கண் விழித்தவள் சட்டென நிமிர்ந்து அமர்ந்தாள்.

எதிரில் யாருமில்லை. ஆனால் செவியில் மூச்சின் வெப்பமும், கன்னத்தில் விரலின் ஸ்பரிசமும், மூச்சில் ஆடவனின் சுவாசமும் அப்படியே நிறைந்திருந்தது.

‘நடந்தது கனவா நினைவா?’ குழம்பிப் போனாள் அகமொழி.

வேக வேகமாக வெளியில் வந்து பார்த்தாள். அங்கு யாருமே இல்லை. கனவிற்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாத அளவு அவனின் நினைவில் சிறிது சிறிதாகத் தன்னை இழப்பது புரிந்தது அவளுக்கு.

‘தன்னைப் பைத்தியமாக்குவதில் அவனுக்கு என்ன அத்தனை மகிழ்வு?’

கண்ணை இறுக்கி மூடித் திறந்தவள், மனத்தைத் திடப்படுத்த முயன்றாள்.

கன்னத்தை அழுந்தத் தேய்த்து, ஸ்பரிசத்தின் மிச்சத்தைத் துடைத்தெறிய முற்பட, அதுவோ அழுத்தமாக மனத்தில் அல்லவோ பதிந்து விட்டது.

கிளாம்பிங் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. இரண்டு மாதங்களை விவாகரத்து வழக்கும், பணிகளும் விழுங்கி இருந்தது.

விஷ்ணு, அர்ஜித் அடித்த கோபத்தில் விவாகரத்து வழங்க மாட்டேன் என்று மீண்டும் பிரச்சினையைக் கிளப்ப, அர்ஜித்தோ சேகரித்த மொத்த ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தான்.

அதுவே விஷ்ணுவிற்கு எதிராக முடிந்திருந்தது.

ரிசார்ட்டில் சில பெண்கள் விரும்பியே அவனுடன் உறவு வைத்துக் கொண்டாலும், சிலரை வேலை போய்விடும் என அதிகாரத்தைப் பயன்படுத்திப் பயமுறுத்தித் தான், தன்னுடன் இருக்க வைத்திருந்தான்.

அந்தப் பெண்கள் கொடுத்த வழக்கும், ஆதாரமும் குற்றமாகக் கருதப்பட்டதுடன், கட்டிய மனைவியையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதும், விவாகரத்து வழக்கிற்கு அழுத்தமான அடித்தளமாக மாறி விட, விஷ்ணு கைது செய்யப்பட்டான்.

ஏற்கெனவே மியூச்சுவல் கான்சென்ட்டில் கையெழுத்திட்டதும் அவளுக்குச் சாதகமாகப் போக, இனி இருவரும் சேர்ந்து வாழ வழியே இல்லை என்ற நிலையைக் கருதி, விவாகரத்து வழங்கத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும், ரிசார்ட் வழக்கில் இன்னும் ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருப்பதாலும், அங்கு வேலை செய்யும் பெண்கள் இன்னும் என்ன மாதிரியான பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்றும், தீவிர விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.

தீர விசாரித்து, அவனது தண்டனைக் காலத்தை முடிவு செய்யும் இறுதித் தீர்ப்பை அடுத்த மாதம் ஒத்தி வைக்க, விவாகரத்துக் கிடைத்த நிம்மதியில் வருத்தமும் கொள்ளாது, அதீத மகிழ்வும் கொள்ளாது நீதிமன்றத்தை விட்டு வெளியேறினாள் அன்விதா.

நிச்சயமாகத் தனக்குத் துணையாக யாரையும் வரவேண்டாமெனச் சொல்லி விட்டாள். அதில் அர்ஜித் அகனும் அடக்கம்.

வழக்கறிஞர் மூலமாக விவாகரத்து உறுதியான செய்தியைக் கண்டதும், உடனடியாக அகமொழிக்குத் தான் குறுஞ்செய்தி அனுப்பினான். தனது அறையில் அமையாவுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும் மனமெல்லாம் வழக்குப் பற்றியே தான் இருந்தது.

அன்விதாவிடம் இருந்து தகவல் தெரியக் காத்திருந்தவளுக்கு, அர்ஜித் அகனிடம் இருந்து செய்தி வந்ததில் துள்ளிக் குதிக்காத குறை தான்.

“வாவ்! சூப்பர்…”

அவளும் பதிலுக்கு அனுப்பினாள்.

“அமையா அன்விட்ட தான? விஷ்ணுக்குத் தண்டனை எதுவும் குடுத்துருக்காங்களா?” என அவள் கேள்வியாக அடுக்க, “ம்ம்… நெக்ஸ்ட் மந்த் ஹியரிங்!” என்றான்.

அவனது குறுஞ்செய்தியிலேயே அவன் மனநிலையையும் இணைந்தே உணர்ந்தாள்.

என்னவாகினும் தமையனுக்குத் தண்டனை கிடைக்கப் போகிறது என்றால் அவனுக்கும் அது மனரீதியான துன்பம் தானே.

மொத்தக் குடும்பமும், அந்தத் தகுதி இல்லாத தற்குறியாலேயே எத்தனை மனவேதனைகளை அடையப் போகிறதோ!

அகமொழிக்கு வருத்தமாக இருந்தது.

“ஆர் யூ ஓகே அகன்?” மனம் கேளாமல் கேட்டிருந்தாள்.

“ம்ம்…”

அந்த ‘ம்ம்’ அவளை அதிகம் தாக்கியது.

மகிழ்ச்சியில் திளைத்திருந்த அவனது குடும்பமே, தற்போது வெறுமையை ஏந்தி இருந்தது.

பெரியவர்களின் கண்ணீரைக் காணப் பிடிக்காமல் ரிசார்ட்டில் அடைந்திருக்கிறான்.

பல நாள்களாக உறக்கத்தை இழந்திருந்தான்.

நாற்காலியில் பின்னால் சாய்ந்து கண்ணை மூடியவனுக்குத் தானாய் துயில் அழைத்தது.

பழகாத நேரத்தில் உறக்கம் தொட்டதாலோ என்னவோ, கனவுகளும் கண் முன்னே படர்ந்தது.

அக்கனவில் தேவதையாகத் தோன்றினாள் அவள்.

அவனது அடர்ந்த புருவத்தை ஒற்றை விரலால் நீவி விட்டாள்.

“எந்தினாடி போயது?(ஏண்டி போன)”

மனத்தில் உழன்று கொண்டிருந்த கேள்வியைக் கேட்டு விட்டான்.

“உன்னை விட்டுப் போக எனக்கும் ஆசையில்ல மிஸ்டர் மலையாளி…” அவன் நெற்றியில் இதழீரம் படர இதழ் பதித்தாள்.

சட்டென உறக்கம் கலைய, கண் விழித்தவனின் எதிரில் வெறுமை மட்டுமே…

அழுத்திய புருவமும், நெற்றியில் தங்கிய ஈரமும் கனவோ நிஜமோ என்ற குழப்பத்தைத் தோற்றுவிக்க, நாற்காலியைப் பின்னால் தள்ளி அவசரமாக வெளியில் வந்து பார்த்தான்.

யாரும் இல்லை. கனவு தானோ?

‘என்னே பிராந்தன் ஆக்குந்து ஆ காந்தாரி…’ பக்கவாட்டில் இருக்கும் தடுப்புச் சுவரை நங்கெனக் குத்தினான்.

அந்தத் தடுப்புச் சுவரின் மறுபக்கம் மறைந்து நின்றிருந்த அகமொழிக்கு, சுவரின் அதிர்வு மனவதிர்வுகளை ஏற்படுத்த, அவனிடம் மாட்டிக் கொள்ளக் கூடாதென்று கண்ணை இறுக்கி மூடிப் பல்லி போல ஒட்டினாள்.

சில நொடிகளில் அர்ஜித் அகனின் கோபம் மெல்ல மறைய, இதழ்களில் சிறு முறுவல்.

“ரூம் சர்விஸ்…” என யாரையோ அழைத்தவன், “என்டே ரூமில் நிறைய பல்லிடே சல்யம் (தொல்லை). நந்தாயி க்ளீன் செய்யு. யாரெங்கிலும் பல்லி குருமா செய்து வைக்கண்டா…(நல்லா க்ளீன் பண்ணு. யாராவது பல்லி குருமா செய்யப்போறாங்க)” என அந்தச் சுவரை மீண்டும் ஒரு குத்துக் குத்தினான்.

‘கண்டு பிடிச்சுட்டானோ’ எனத் தடுமாறிப் போனவளுக்கு, மனம் படபடவென அடித்தது.

அகன் வசமாவாள் (வான்)
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 134

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
118
+1
4
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அகன் உணர்வது அழகு