ஷாத்விக்கும் சமுத்ராவும் உதய்யின் நிச்சயதார்த்த மதிய விருந்தினை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில்
“மாமா உங்களுக்கும் மௌனிக்காவுக்கும் இப்படி தான் கோவில்ல நிச்சயதார்த்தம் நடந்துச்சா?” என்று கேட்க
“இப்போ எதுக்கு அதை கேட்குற?” என்றவனின் குரல் சிறு வருத்தம் இழையோடியிருந்தது.
“தெரிஞ்சிக்கனும்னு தோனுச்சு. நான் உங்க நிச்சயத்தப்போ வேலைனு ஊருக்கு வரமுடியல. அதான் கேட்குறேன்.”என்று சமுத்ரா காரணம் சொல்ல
“நிஜமாகவே வேலைனு வரலயா இல்லை என் பக்கத்துல இன்னொரு பொண்ணை பார்க்கமுடியாதுங்கிறதுக்காக வரலையா?” என்று ஷாத்விக் கேட்க
“நான் அவ்வளவு கோழைனு நினைச்சிட்டீங்களா? எல்லாம் முன்னாடி நின்னு செய்த எனக்கு இதை பார்க்கிறதுல என்ன கஷ்டம்?” என்று அவளும் பதில் கொடுக்க ஷாத்விக்கோ
“மனசுல உள்ளதை இப்போதாவது சொல்லுறாளானு பாரு இந்த கல்நெஞ்சக்காரி.” என்று மனதினுள் பொருமிக்கொண்டான்.
“நான் ஒன்னு கேட்குறேன்னு தப்பா நினைக்காத. நானும் மத்தவங்களும் ஒன்னா?” என்று ஷாத்விக் திடீரென்று கேட்க
“ஒன்னுன்னா?” என்று சமுத்ரா புரியாமல் கேட்க
“மத்தவங்களுக்கு உன் பலம் பலவீனம் எதுவும் தெரியக்கூடாதுனு நினைக்கிற சரி. ஏன் என்கிட்டயும் அந்த இடைவெளி இருக்கனும்னு நினைக்கிற? நானும் மத்தவங்க மாதிரி உன்னை நடத்துவேன்னு நினைக்கிறாயா? இந்த வேலியை உடைக்கலாமே?” என்று ஷாத்விக் இத்தனை நாளாய் தன் மனதில் இருந்ததை சொல்ல இப்போது சமுத்ராவிடம் அமைதி மட்டுமே நிலவியது.
அதனை கவனித்தவன் மேலும் பேசத் தொடங்கினான்.
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் சமுத்ரா. அப்பா உன்னை பத்தி பெருமையாக பேசும் போது லைட்டா பொறாமையாக இருந்தா கூட மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். ஆரம்பத்துல நீ மௌனிகா மாதிரி இலகுவாக இருந்திருந்தா உன்னையே லவ் பண்ணியிருக்கலாம்னு பல தடவை யோசிச்சிருக்கேன் தெரியுமா? அந்த எண்ணம் மனசுல இருந்ததாலே என்னமோ அப்பா உனக்கு தாலி கட்டுனு சொன்னதும் எந்த மறுப்பும் சொல்லத்தோணல. இப்போ யோசிச்சு பார்த்தா நான் எதிர்பார்த்த சமுத்ரா தான் மௌனிகானு தோணுது.” என்று ஷாத்விக் தன் மனதில் இருந்ததை சொல்ல அதை கேட்டிருந்த சமுத்ராவுக்குமே சற்று ஆச்சர்யம் தான்.
“ஆனா அது முட்டாள்தனம்னு இந்த கொஞ்ச நாள்ல புரிஞ்சிக்கிட்டேன். ஆனாலும் என்கிட்ட நீ கொஞ்சம் இலகுவாக பழகலாமேனு ஒரு ஏக்கம் மட்டும் இருக்கு. என்கிட்ட உன் சந்தோஷத்தை பகிர்ந்துக்கனும். கவலையை சொல்லி தேவைனா தோள் சாய்ந்து அழனும். உனக்கு தேவையானதை கேட்டு அடம்பிடிக்கனும். உரிமையாய் சண்டைபோடனும். உரிமையோட என்னை கவனிச்சிக்கனும். இப்படி நீ செய்யனும்னு நான் எதிர்பார்க்கிற விஷயங்கள் பலது இருக்கு. என்கூட இருக்கும்போது மட்டுமாவது உனக்குள்ள ஒளிந்திருக்கிற அந்த குழந்தைத்தனம் வெளிப்படனும்னு எதிர்பார்க்கிறேன். உன் உணர்வுகள் மொத்தமும் கொட்டி கரைக்கிற இடமாக நான் இருக்கனும்னு விரும்புறேன்.” என்று ஷாத்விக் சொல்ல அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சமுத்ராவிற்கு ஏதோவொரு இனம்புரியாத திருப்தியை கொடுத்தது.
ஷாத்விக்கிடமிருந்து இந்த வார்த்தைகளை அவள் எதிர்பார்க்காத போதிலும் அவனின் வார்த்தைகள் தந்த அரவணைப்பு இதுவரை அவள் அனுபவித்திராத பாதுகாப்புணர்வை அவளுக்கு கொடுத்தது.
அவள் அமைதியாக இருப்பதை கண்டவன்
“ஏதும் பதில் சொல்லமாட்டியா சமுத்ரா?” என்று ஷாத்விக் எதிர்பார்ப்புடன் கேட்க அவனை திரும்பி பார்த்தவள்
“எல்லாமே தனியாகவே செய்து பழகிட்டேன் மாமா. சட்டுனு எல்லாத்தையும் மாத்திக்கமுடியாது. உங்க அக்கறை புரியிது. ஆனா என் மனசு இதை ஏத்துக்க கொஞ்ச காலம் வேணும்.” என்று சமுத்ரா
“உன் நிலைமை புரியிது. ஆனா இப்போதைக்கு மனசுல ஏதாவது கஷ்டம் இருந்தா என்கிட்டயாவது சொல்லு. அதுவே எனக்கு போதும். நான் எப்பவும் உனக்கு துணையாக இருப்பேன்னு மட்டும் மனசுல வச்சிக்கோ.” என்று கூற சரியென்று தலையை மட்டும் ஆட்டியவள் வேறு எதுவும் பேசவில்லை.
அவளிடமிருந்து பதில் வராதென்று ஏற்கனவே அறிந்திருந்ததால் அவனும் வேறெதுவும் கேட்கவில்லை.
ஆனால் அவனே எதிர்பாராவகையில் சமுத்ராவின் அடுத்து நடவடிக்கை இருந்தது.
கியரின் மீது படர்ந்து ஆசுவாசமாயிருந்த ஷாத்விக்கின் கையின் மீது தனது ஒரு கையை படரவிட்டவள் மறுகையால் அவனின் இடக்கையை அணைத்து அவனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
அவளின் இச்செயலில் முதலில் அதிர்ந்தவனின் மனம் சில விநாடிகளிலேயே குளிர்ந்துபோனது.
உள்ளுக்குள் எழுந்த சிலவிநாடி கிளர்ச்சியை அடக்கிக்கொண்டவன் தன் தோள் மீது சாய்ந்திருந்தவளின் தலையை தடவிக் கொடுத்து விட்டு வண்டியை செலுத்துவதில் தன் கவனத்தை திருப்பினான்.
இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் வழமை போல் சமுத்ராவிற்கான கவனிப்பு தொடங்கிட எப்போதும் போல் ஷாத்விக் அவளை காத்திடும் வேலையில் இறங்கினான்.
நாட்கள் இவ்வாறே நகர சமுத்ரா மற்றும் ஷாத்விக் உறவிலும் இருவரும் எதிர்பார்த்த முன்னேற்றம் தென்பட்டது.
மூன்று மாதம் முடிந்ததும் மருத்துவரை பார்க்க சென்ற சமுத்ரா மற்றும் ஷாத்விக்கிற்கு அவரிடமிருந்து சாதகமான பரிந்துரையே கிடைத்தது. சமுத்ரா மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக கூறியவர் அவர் பரிந்துரைத்த மருந்துகளை தொடரச்சொன்னார்.
ஷாத்விக் தனக்கிருந்த சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டவன் மருத்துவருக்கு நன்றி கூறிவிட்டு சமுத்ராவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
“எல்லா டவுட்டும் கேட்டுகிட்டீங்க தானே?” என்று சமுத்ரா கேட்க
“அத தான் யோசிச்சிட்டு வரேன். ஏதோ விடுபட்ட மாதிரியே இருக்கு.” என்று ஷாத்விக் யோசனையோடு கூற
“வாங்க அங்க உட்கார்ந்து பொறுமையாக ஏதாவது விடுபட்டிருச்சானு யோசிக்கலாம்.” என்று கூறிய சமுத்ரா முன்னே நடக்க
“ஹேய் என்ன கலாய்க்கிறியா?” என்று ஷாத்விக் கேட்க
“நான் எதுக்கு உங்களை கலாய்க்கப்போறேன்? நிஜமா தான் சொல்லுறேன். வாங்க இரண்டு பேரும் உட்கார்ந்து யோசிப்போம். இல்லைனா வீட்டுக்கு போனதும் திடீர் திடீர்னு நீங்க கேட்குற கேள்விக்கு பதில் தெரியாமல் அம்மா,அத்தைனு எல்லாரும் திண்டாடுவாங்க.” என்று சமுத்ரா வீட்டில் ஷாத்விக் செய்யும் அழிசாட்டியங்களை அவனுக்கு நினைவு படுத்த
“கேள்வி கேட்டது ஒரு குத்தமா?” என்று ஷாத்விக் சிறுபிள்ளை போல் கேட்க
“அதை டாக்டர்கிட்டயே கேளுங்கனு சொல்லுறேன்.”என்று சமுத்ரா பதிலடி கொடுக்க ஷாத்விக் மனதினுள்
“கொஞ்சம் ஓவரா தான் எல்லாரையும் டார்ச்சர் பண்ணுறோமா?”என்று கேட்டுக்கொள்ள அவன் காதருகே வந்த சமுத்ரா
“கொஞ்சம் இல்லை மாமா. ரொம்பவே” என்று கூற திடுக்கிட்டவன்
“ஹே என் மைண்ட் வாய்ஸ் உனக்கு எப்படி கேட்டுச்சு?” என்று ஷாத்விக் குழப்பத்துடன் கேட்க
“எல்லாம் ஒரு யூகம் தான். அது சரி உட்காருவோமா இல்லை கிளம்புவோமா?” என்று சமுத்ரா கேட்க
“போகலாம்.” என்று கூறி அவளை அழைத்து சென்றான்.
அன்றிரவு ஷாத்விக் உணவருந்தி விட்டு எப்போதும் போல் சமுத்ராவிற்கென்று பாலும் பிஸ்கட்டும் எடுத்துவர சமுத்ராவோ கட்டிலில் அமர்ந்தபடி ஏதோவொரு புத்தகத்தை மும்முரமாக படித்துக்கொண்டிருந்தாள்.
தான் கையோடு கொண்டு வந்ததை அதனிடத்தில் வைத்துவிட்டு சமுத்ரா அருகே வந்தவன்
“அப்படி என்ன சீரியஸா படிக்கிற?” என்று கேட்டபடியே குனிந்து அவளின் கையில் இருந்த புத்தகத்தின் பெயரை பார்க்க முயல சமுத்ராவோ தன் கையிலிருந்த புத்தகத்தை மூடி அதன் பெயரை படித்துக்காட்டினாள்.
“The message in a bottle (த மெசேஜ் இன் அ பாட்டில்” என்று கூற
“நாவலா?” என்று ஷாத்விக் கேட்க
“ஆமா. ஆனா கொஞ்சம் இமோஷனலா இருக்கு. அதான் ரொம்ப இன்ட்ரஸ்டா வாசிச்சிட்டு இருந்தேன்.”என்று சமுத்ரா கூற
“அப்படி என்ன இமோஷனலா இருக்கு சொல்லு கேட்போம்.” என்று ஷாத்விக் கேட்க
“ஹீரோயின் வெகேஷேன் போன இடத்துல சீ சைட் போயிருக்கா. அங்க அவளுக்கு ஒரு பாட்டில் கிடைக்குது. அதை வச்சு தான் கதையே போகுது.”
“ஓ… இதுல என்ன இமோஷனலா இருக்கு?” என்று ஷாத்விக் புரியாமல் கேட்க
“ஹீரோயின் டிவோசி. அவளுக்கு இன்னொரு லைப்புக்கு போறதுக்கு விருப்பம் இருந்தும் அவளோட வயசும் அவளோட மகனோட ப்யூச்சர் பாதிச்சிருமோங்கிற பயம் அவளை இன்னொரு லைப்பை பத்தி யோசிக்க விடாமல் செய்யிது. ஆனா அவளுக்குள்ள இருக்க வெளியாட்கள் பார்க்க முடியாத ஏக்கங்களை ஆத்தர் ரொம்ப அழுத்தமாக உணர்வு பூர்வமாக எழுதியிருக்காரு. ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு உணர்வை சொல்லுது.” என்று சமுத்ரா தான் வாசித்துணர்ந்ததை ஷாத்விக்கிற்கு சொல்ல
“ம்ம் கேட்கும் போதே வாசிக்கத்தோனுது. நீ வாசிச்சு முடிச்சதும் சொல்லு.” என்று ஷாத்விக் கூற
“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும் மாமா.” என்று சமுத்ரா சொல்ல
“ம் சொல்லு.” என்று ஷாத்விக் சாதாரணமாக கேட்க கட்டிலிலிருந்து எழுந்து சென்ற சமுத்ரா தன் அலுமாரியை திறந்து ஏதோவொரு கடிதத்தை எடுத்துவந்தாள்.
அதனை ஷாத்விக்கிடம் நீட்ட அதனை வாங்கிய ஷாத்விக் அதன் நிலையை கண்டு சற்று திகைத்துத்தான் போனான்.
ஏதோ செலோடேப் சூறாவளியில் மாட்டிக்கொண்ட பேப்பர் துண்டுகளை போல் அந்த கடிதம் முழுதும் செலோடேப் மட்டுமே இருந்தது.
அதை வாங்கி விரித்து பார்த்தவனுக்கு அது சமுத்ரா எழுதிய கடிதமென்று புரிந்தது.
“இது…” என்று ஷாத்விக் தயக்கத்துடன் கேட்க
“நான் உங்களுக்காக எழுதுன முதல் லெட்டர். இதை படிச்சிட்டு தான் அம்மா மாமாவை தேடி வந்தாங்க.” என்று சமுத்ரா கூற ஷாத்விக்கிற்கு அப்போது தான் அமராவதி லெட்டர் என்று ஒரு தரம் குறிப்பிட்டது நினைவில் வந்தது.
தாமதிக்காது அந்த கடிதத்தை விரித்துபடித்தவனுக்கு உள்ளும் அழுத்திப்பிசைந்தது.
“இது… இது… எப்போ எழுதுனது?” என்று ஷாத்விக் குரலில் சிறு நடுக்கத்துடன் கேட்க
“நான் 10த் படிக்கும் போது.” என்று சமுத்ரா கூற ஷாத்விக்கிற்கு தான் அதனை நம்ம முடியவில்லை.
“10த் படிக்கும் போதா?” என்று அவன் தான் கேட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்குடன் கேட்க சமுத்ராவோ ஆமென்று தலையாட்டினாள்.
“ஆனா எப்படி? நீ என்கூட நின்னு கூட பேசமாட்டியே?” என்று ஷாத்விக் கேட்க
“நின்னு பேசலைனாலும் தூர நின்னு உங்களை பார்த்துட்டு தான் இருப்பேன்.” என்று முதல் முதலில் தன் மனதில் இருந்ததை வெளிப்படுத்தினாள் சமுத்ரா.
“நீ என்னை மறுபடியும் கலாய்க்க ஏதும் சொல்லலையே?” என்று ஷாத்விக் மீண்டு கேட்க
“கலாய்க்கிறேன் தானே… சரி அதை தாங்க” என்றபடி அவள் அவன் கையிலிருந்த கடிதத்தை பிடிங்க முயல
“மன்னிச்சிடு மன்னிச்சிடு. மறுபடியும் அப்படி கேட்கமாட்டேன். நீ கன்டினியூ பண்ணு.” என்று ஷாத்விக் ஜகா வாங்க
“இப்போ மூட் இல்லை. இன்னொரு நாள் பார்க்கலாம்.” என்ற சமுத்ரா ஷாத்விக் கெஞ்சுவதை கண்டு கொள்ளாது கட்டிலில் சென்று படுத்துக்கொண்டாள்.
“சாரி சமுத்ரா. இனி குறுக்கா மறுக்கா எந்த கேள்வியும் கேட்கமாட்டேன். ப்ளீஸ் ப்ளீஸ் முழுசா சொல்லிட்டு போ.” என்று அவன் கெஞ்ச அவளோ அதை கண்டுகொண்டதாய் தெரியவில்லை.
அவன் கெஞ்சுவதை கூட பொருட்படுத்தாமல் அவள் சற்று நேரத்திலேயே உறங்கிவிட்டாள்.
அவள் நன்கு உறங்குவதை கண்ட ஷாத்விக் அவளின் வயிற்றருகே குனிந்து மெல்லிய குரலில்
“பார்த்தீங்களா பாப்பு உங்க அம்மாவை… அப்பா இவ்வளவு கெஞ்சியும் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க. நீங்க தான் வெளியில வந்ததும் அப்பாவுக்காக பேசுனும் சரியா? இப்போ நீங்களும் சமத்தா தூங்குங்க. குட் நைட் பாப்பு.” என்றவன் சமுத்ராவின் போர்வையை சரிசெய்து விட்டு சற்று முன் நடந்ததை நினைத்தபடியே அவளருகே படுத்தான்.
மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
மிக அருமையான பதிவு….👌👌👌👌👌👌