Loading

மறுநாள் காலை சமுத்ரா சொன்னதை போலவே தன் உடைமைகளோடு தன் அத்தை வீட்டிற்கு வந்துவிட்டான் ஷாத்விக்.

காலை நேர பரப்பரப்பில் சமையலில் மும்முரமாக இருந்த மாலதி யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தவர் அந்நேரத்தில் ஷாத்விக்கை அங்கு எதிர்பார்க்கவில்லை.

“தம்பி நீங்க…” என்றவர் அவனை உள்ளே அழைக்ககூட மறந்துநிற்க

“சித்தி உள்ள போய் பேசுவோம்.” என்று ஷாத்விக் கூற அவன் உள்ளே செல்ல வழிவிட்டார் மாலதி.

அவன் திரும்பி வந்தது மாலதிக்கு சந்தோஷமாக இருந்த போதிலும் அடுத்து என்ன நடக்கபோகிறது என்ற பயமே அதிகமாக இருந்தது.

அதனை தெரிந்துகொண்டவனை போல்

“சமுத்ரா கூட பேசிட்டேன் சித்தி.” என்று கூட மாலதிக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

“நீங்க உள்ள போங்க தம்பி. உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என்று அவர் சமையலறைக்குள் புகுந்திட

அப்போது அரக்கபறக்க தயாராகி வெளியே வந்தனர் மஹதியும் வினயாஸ்ரீயும்.

அங்கு அந்நேரத்தில் ஷாத்விக்கை எதிர்பாராத இருவரின் கண்களும் அடுத்த நொடி சமுத்ராவின் அறைப்பக்கம் சென்றது.

அதை கண்ட ஷாத்விக் மனதினுள்

“என்னடா இது… குடும்பமே ஒரே ரியாக்ஷனை கொடுக்குது.” எண்ணி சிரித்துக்கொண்டவன்

“என்ன இரண்டு வாலும் என் ஆளு ரூமை நோட்டம் விடுறீங்க?” என்று ஷாத்விக் கேட்க

“கோவிச்சிட்டு போனவரு திடீர்னு வந்துட்டீங்க. அமைதியாக இருந்தவ என்ன சொல்லப்போறாளோங்கிற பயம் தான்.” என்று மஹதி சொல்ல

“இன்னொரு பயங்கரமான தகவல் சொல்லவா?” என்று ஷாத்விக் கேட்க

“என்ன அண்ணா?” என்று வினயாஸ்ரீ கேட்க

“கிட்ட வாங்க” என்று இருவரையும் அருகே அழைத்த ஷாத்விக்

“சமுத்ரா தான் வரச்சொன்னா.” என்று கூற இப்போது இருவரும் அதனை நம்பமுடியாது திகைத்து நின்றனர்.

“என்ன மாமா சொல்லுறீங்க? அக்கா அவ வாயால உங்களை வீட்டுக்கு வாங்கனு சொன்னாளா?” என்று மஹதி நம்பமுடியாமல் கேட்க

“வேற யாரு வாயாலமா சொல்லனும்?”என்று ஷாத்விக்கும் கிண்டலாக கேட்க

“அண்ணா நெஜமாவே மதினியா சொன்னாங்க?” என்று வினயாஸ்ரீ நம்பமுடியாமல் கேட்க

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. அவளே வந்து சொல்லுவா. அப்போ நம்புங்க.” என்று ஷாத்விக் சொல்ல

“அந்த காட்சியை பார்க்க இப்போ எங்களுக்கு டைம் இல்லை. நீங்க ரெகோர்ட் பண்ணி வைங்க. எக்ஸாம்ஸ் முடிச்சிட்டு வந்து அமைதியாக பார்க்கிறோம்.” என்று சொன்ன மஹதி, வினயாஸ்ரீயையும் இழுத்துக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.

இருவரும் கிளம்பியதும் ஷாத்விக் தான் ஏற்கனவே தங்கியிருந்த அறைக்கு சென்றான்.

ஷாத்விக் குளித்து முடித்து வெளியே வரும்வரை சமுத்ரா எழுந்திருக்கவில்லை. 

சமுத்ராவின் அறையை பார்த்தபடியே மாலதியை தேடிச்சென்றவன்

“என்ன சித்தி சமுத்ரா இன்னும் எழுந்திரிக்கலயா?” என்று கேட்க அவனிடம் தேநீரை கொடுத்தவர்

“இன்னும் இல்லப்பா. இந்நேரம் எழுந்திரிச்சிக்கனும். அசந்து தூங்கிருப்பானு நெனைக்கிறேன்.” என்றபடியே அவர் தன் வேலையை கவனிக்க ஷாத்விக்கிற்கோ பவன் சொன்னதே மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

“சித்தி சமுத்ரா நல்லா தானே இருக்கா?” என்று மாலதியிடம் கேட்க

“ஏன் தம்பி அப்படி கேட்குறீங்க?” என்று மாலதி குழப்பத்துடன் கேட்க

“சித்தி நான் சொல்லுறதை பதட்டப்படாமல் கேளுங்க.” என்று அவனுக்கு தெரிந்த அனைத்தையும் சொன்னான்.

“என்னால சில விஷயங்களை சமுத்ராகிட்ட நேரடியாக கேட்கமுடியல. அதனால நீங்க தான்.” என்று ஷாத்விக் கூற மாலதிக்கும் அப்போது தான் சில விஷயங்கள் மனதில் வந்து போனது.

வீட்டில் பெண்கள் அதிகமென்பதால் சேனிட்டரி நாப்கின்களின் பாவனை அதிகமென்பதால் அதனை ஒரேடியாக வாங்கிவிடுவர். நேற்று பொருட்கள் வாங்க பட்டியலிட்டபோது வழமைக்கு மாறாக சேனிட்டரி நாப்கின்கள் மீதமிருப்பதை கவனித்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் பல குழப்பங்கள் என்றபடியால் அவரால் சரியாக எதையும் கவனிக்கமுடியவில்லை.

அதை யோசித்தவருக்கு இப்போது ஷாத்விக் கூறியது உறுத்த 

“நான் விசாரிக்கிறேன் தம்பி. எந்த பிரச்சினையும் இருக்காது. அதோடு உடம்பு ரொம்ப பலவீனமாக இருந்தாலும் இப்படி நடக்கும். எதுவும் பயப்படுற மாதிரி இருக்காது.” என்று மாலதி நம்பிக்கையாக கூற ஷாத்விக்கிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

அப்போது ஷாத்விக்கின் மொபைல் அலற அதில் தன் அன்னையின் பெயரை பார்த்து அழைப்பை ஏற்றான் ஷாத்விக்.

“சொல்லுங்க அம்மா. என்ன காலையிலேயே கூப்பிட்டிருக்கீங்க?” என்று ஷாத்விக் கேட்க

“அடுத்த வாரம் புதன்கிழமை நாள் நல்லா இருக்கிறதா ஜோசியர் சொன்னாரு. அன்னைக்கே கடைதிறப்பை வச்சிக்கலாம்.” என்று இந்திராணி சொல்ல

“சரிம்மா. நான் மத்த ஏற்பாட்டை கவனிக்கிறேன். நீங்களும் அத்தையும் எப்போ வாரீங்க?” என்று ஷாத்விக் கேட்க

“அடுத்த வாரம் வாரோம். நீ மத்த ஏற்பாட்டை கவனி. மருமககிட்டயும் விஷயத்தை சொல்லிடு.” என்றவர் மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

“யாரு தம்பி அக்காவா?” என்று மாலதி கேட்க

“ஆமா சித்தி. கடை ஓபனிங்கிற்கு நல்ல நாள் பார்த்து சொல்லச்சொல்லியிருந்தேன். அதை சொல்ல தான் கூப்பிட்டாங்க. அடுத்த புதன்கிழமை நாள் நல்லா இருக்குனு சொன்னாங்க.” என்று ஷாத்விக் தன் அன்னை சொன்னதை சொல்ல

“ரொம்ப சந்தோஷம் தம்பி. சமுத்ராகிட்டயும் சொல்லிடுங்க.” என்று அவர் பங்குக்கும் சொல்ல

“சரி சித்தி. நீங்க காபி கலந்து தாங்க. நான் அவளுக்கு கொடுத்துட்டு விஷயத்தை சொல்லிட்டு வருகிறேன்.” என்று ஷாத்விக் சொல்ல மாலதியும் தாமதிக்காது காபியை சூடு பண்ணி கொடுத்தார்.

சமுத்ராவுக்கு காபி எடுத்து சென்றவன் அவளின் அறைக்கதவை தட்ட உள்ளே இருந்து யார் என்ற குரல் வந்தது.

“நான் தான். காபி எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்று ஷாத்விக் குரல் கொடுக்க

“கதவு திறந்து தான் இருக்கு. உள்ள வாங்க.” என்று சமுத்ரா கூற ஷாத்விக் கதவை மெல்ல தள்ளி திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்.

உள்ளே சமுத்ரா தலைசுற்றலை கடினப்பட்டு சமாளித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

ஷாத்விக் கண்களுக்கு அவளிடமிருந்த வித்தியாசம் தெரிய

“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி சோர்வா இருக்க? முகமும் வெளிறி போய் இருக்கு.” என்று ஷாத்விக் கேட்க சமுத்ராவிற்கு தான் பதில் சொல்வதற்கு கூட தெம்பிருக்கவில்லை. 

சற்று முன் தான் வயிற்றில் இருந்த அனைத்துயும் வாய் வழியே வெளியேற்றிவிட்டு வந்து அமர்ந்தாள். வயிறு காலியாக இருந்த போதிலும் வயிறு புரட்டிக் கொண்டே இருக்க தலை சுற்றலும் அதிகமாக இருந்தது. ஏதாவது குடித்தால் தேவலாமென்று அவள் நினைத்துக்கொண்டிருக்கும் போது தான் ஷாத்விக் வந்தான்.

“எனக்கு காபி வேண்டாம். குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாரீங்களா?” என்று சமுத்ரா சொல்ல சரியென்றவன் வெளியே வந்து மாலதியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு அவளுக்கு சத்துமா கஞ்சி கலந்து எடுத்துவந்தான்.

அதனை வாங்கி அருந்தியவளுக்கு வடிந்திருந்த மொத்த பலமும் மெதுமெதுவாக மீண்டெழத்தொடங்கியது.

அவள் அருந்திமுடிக்கும் வரை அவளை கவனித்தபடியே அமர்ந்திருந்தவன்

“என்னாச்சு?” என்று கேட்க சமுத்ராவோ அமைதியாக இருந்தவள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் ஷாத்விக்கிற்கு பதில் சொன்னாள்.

“உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.” என்று சமுத்ரா சொல்ல 

“சொல்லு.” என்று ஷாத்விக் சொல்ல

“நான் கன்சீவ்வாக இருக்கேன்.” என்று சமுத்ரா கூற

“சரி. இது….” என்றவனுக்கு அப்போது தான் அவளின் வார்த்தைகளுக்கான அர்த்தம் சரியாக பிடிபட்டது.

“ஹே… நீ… நீ.. என்ன சொல்லுற? எப்படி நீ..” என்றவனுக்கு அவர்களின் கூடல் நினைவு வர நாவிலிருந்து வார்த்தைகள் வரமறுத்தது.

அடுத்து என்ன என்று எண்ணி குழம்பியிருந்தவன் சத்தியமாக இப்படியொரு செய்தியை எதிர்பார்த்திருக்கவில்லை. அதனாலேயே சமுத்ரா விஷயத்தை சொன்னதும் அவனுக்கு புரியவில்லை.

பல உணர்வுகளின் கலவையில் சிக்கிக்கொண்டவன் தன்னை சமன்படுத்திக்கொண்டு

“நீ நீ சொல்லுறது நிஜமா?” என்று ஷாத்விக் தன் உணர்வுகளை பெருஞ்சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு கேட்க சமுத்ராவோ தனது அலமாரியை காட்டி

“அதுல செகன் ஷெல்ப்ல ஒரு பைல் இருக்கு. அதை எடுங்க.” என்று சமுத்ரா சொல்ல தன் மனதின் ஆர்ப்பரிப்புகளை கட்டுப்படுத்திக்கொண்டு அவள் சொன்ன பைலை எடுத்தான் ஷாத்விக்.

அதை வெளியே எடுத்தவன் சமுத்ராவை பார்க்க படி என்பதை போல் அவளும் சைகை காண்பிக்க நடுங்கும் கரங்களால் அதனை மெல்ல திறந்து பார்த்தான் ஷாத்விக்.

அதிலுள்ள அனைத்தும் புரியாத போதிலும் அதிலிருந்த சில வார்த்தைகள் அவனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய போதுமானதாக இருந்தது.

 

அந்த பைலிலிருந்த அனைத்தையும் புரட்டி பார்த்தவனின் கண்களிரண்டும் கலங்கியது.

அல்ட்ரா சவுண்ட் ரிப்போர்ட்டை பார்த்தவனது கை அதனை தடவிக்கொடுக்க அது கொடுத்த நெகிழ்ச்சியான நிறைவை தன் அதரங்களை கடித்து கட்டுப்படுத்திக்கொண்டான்.

அதனை மூடியவன் சமுத்ராவை பார்க்க அவள் மற்ற விவரங்களை சொன்னாள்.

“நேத்து ரிப்போர்ட்டை காட்ட தான் ஹாஸ்பிடல் போனேன்.” என்று சமுத்ரா கூற அவளருகே வந்தவன் அவளை இழுத்து இறுக அணைத்துக்கொண்டான்.

அவனின் இந்த திடீர் அணைப்பை எதிர்பார்க்காதவளுக்கு முதலில் சற்று கூச்சமாக இருந்த போதிலும் மனமோ அதில் மயங்கித்தான் போனது.

இரண்டு நாட்களாய் யாரிடமும் வெளிப்படையாக சொல்லமுடியாமல் தவித்த அவளின் இறுக்கமான மனநிலை இப்போது முற்றாக சரியாகி சமநிலையடைந்திருந்தது.

சமுத்ராவை தன் அணைப்பிலிருந்து விடுவித்தவன் அவளின் வயிற்றருகே குனிந்து

“செல்லக்குட்டி அப்பா பேசுறது கேட்குதாடா.” என்று அவன் குழந்தையோடு பேசியபடி அவள் வயிற்றில் கை வைக்க சமுத்ராவோ கூச்சத்தில் மெதுவாக அவன் கையை எடுத்துவிட்டாள்.

ஷாத்விக் என்னவென்று அவளை தலை நிமிர்ந்து பார்க்க

“எனக்கு கூச்சமா இருக்கு.” என்று கூற அவளின் வார்த்தைகளும் அவன் இதழ்களில் புன்னகையை வரவைக்க அதனை மறைத்தபடியே இடைவிட்ட உரையாடலை தொடர்ந்தான்.

சில விநாடிகள் பேசியவன் அவள் இன்னும் நின்றிருப்பதை கவனித்து

“நீ உட்காரு. இந்த மாதிரி நேரத்துல ரொம்ப கவனமாக இருக்கனும்.” என்று கூறி அவளை அமரவைத்தவன் அறையிலிருந்து வெளியே செல்ல முயல

“ஒரு நிமிஷம்.” என்று ஷாத்விக்கை இடையிட்டாள்.

“இன்னும் வீட்டுல யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.” என்று கூற இதனை ஷாத்விக் யூகித்திருந்த போதிலும் ஏன் இதனை இப்போது சொல்கிறாளென்று சமுத்ராவிற்கு புரியவில்லை.

“நானே சொல்லிடவா?”என்று ஷாத்விக் கேட்க

“இல்லை இப்போதைக்கு யாருக்கும் சொல்லவேண்டாம். குழந்தை இன்னும் ஸ்டேபல் இல்லைனு டாக்டர் சொல்லியிருக்காரு. ஏதாவது தப்பா நடந்திடுச்சுனா எல்லாருக்கும் கஷ்டமா போயிடும். மூனு மாசம் முடிந்ததும் எல்லாருக்கும் சொல்லலாம்.” என்று சமுத்ரா வேறு எதையோ மனதில் வைத்துக்கொண்டு சொல்ல ஷாத்விக்கிற்கு சமுத்ராவின் இந்த முடிவிற்கான காரணம் தெரியாத போதிலும் அவளுக்காக சரியென்றான்.

“நான் ஒன்னு சொல்றேன். தப்பா எடுத்துக்ககூடாது.” என்று ஷாத்விக் ஏதோ சொல்ல சமுத்ரா என்ன என்பது போல் பார்த்தாள்.

“நானும் இந்த ரூம்ல தங்கிக்கவா?” என்று ஷாத்விக் கேட்க சமுத்ரா எந்த தாமதமுமின்றி சரியென்றாள்.

அவளின் உடனடி சம்மதத்தில் சற்று திகைத்துதான் போனான் ஷாத்விக்.

“என்ன மறு கேள்வி கூட இல்லாமல் சரினு சொல்லிட்ட?” என்று ஷாத்விக் கேட்க

“பதில் தெரிஞ்ச விஷயத்துக்கு எதுக்கு கேள்வி கேட்கனும்?”என்று சமுத்ரா கேட்க

“அப்போ நான் அப்படி கேட்டதுக்கான காரணம் தெரியுமா?” என்று ஷாத்விக் கேட்க

“சரின்னு சொல்றதுக்கு எனக்கொரு காரணம் இருக்கு.”என்று சமுத்ரா கூற

“என்ன காரணம்?”என்று ஷாத்விக் கேட்க

“இப்போதைக்கு எனக்கு உங்களை தவிர வேற யாரும் உதவி செய்யமுடியாது. தனியாக மேனேஜ் பண்ணலாம்னு தான் நினைச்சேன். ஆனா மத்த விஷயங்கள் மாதிரி இந்த விஷயத்துல என்னால் பிடிவாதமாக இருக்கமுடியாது.”என்று சமுத்ரா உண்மையான காரணத்தை சொல்ல ஷாத்விக்கிற்கு சற்று மகிழ்ச்சியாக தான் இருந்தது.

அவன் அறிந்தவரையில் சமுத்ரா உதவியென்று யாரிடமும் வாய் திறந்து கேட்டதில்லை. தொழில்,வீடு என்று எதிலும் மற்றவர்கள் அவளின் நேர்மையை பார்த்து உதவி செய்தனரே தவிர அவளாக சென்று உதவி வேண்டியதில்லை. அப்படி செய்யப்பட்ட உதவிக்கும் நன்றிக்கடனை செலுத்த அவள் தவறியதில்லை. அப்படிப்பட்டவள் தன்னிடம் நேரடியாக உதவி கேட்காதபோதிலும் தன் உதவியை மறுக்காது ஏற்றுக்கொண்டது அவளுள் உருவாகியிருக்கும் மாற்றத்தை வெளிக்காட்டியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்