4,499 views

 

ஹேமா சுதாகர் திருமண நாளின் மறுநாளும் முகூர்த்த நாளாகவே இருக்க, அன்றே கவின் லயா திருமண தேதியும் குறிக்கப்பட்டது. லயாவின் வீட்டினர் தான் இத்தனை சீக்கிரம் திருமணத்தை வைத்தால், உறவினர்களில் பாதி பேரை அழைக்க இயலாது என்று புலம்ப,

லயாவோ, “ம்மா. மேரேஜை சிம்பிள் – ஆ வைச்சுட்டு, ரிசெப்ஷன் வேணும்ன்னா க்ராண்ட்டா வச்சுக்கலாம். நாங்க ஹனிமூன் போயிட்டு வந்ததும்…” என்று ஆரவை ஊட்டிக்கு அழைத்து செல்ல எப்படி சம்மதம் வாங்குவது என்று தீவிர சிந்தனையுடன் உளறி வைக்க, அவளின் தாய் தந்தையர் தான் அவளை ஒரு மாதிரியாக பார்த்தனர்.

அதன் பிறகே, ‘ஐயோ… மானம் போகுது’ என்று தலையில் அடித்துக்கொண்டவள், அவர்களை  பார்த்து அசட்டு நகை ஒன்றை கொடுக்க, அவர்களுக்கும் சிரிப்பே வந்தது.

இரு ஜோடி திருமணத்தினால் தன்விக்கிற்கும் ஆரவிற்கும் தான் வேலை அதிகமாக இருக்க, சுதாகர், தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு, அவனே தனியாக ஏற்றுமதி இறக்குமதி தொழிலை ஆரம்பித்து, அதோடு சென்னையிலேயே வீடும் பிடித்திருக்க, வான்மதிக்கு தான் இருப்பு கொள்ளவில்லை.

அதில், ஆரவின் அருகில் சென்றவள், “உங்ககிட்ட பேசணும்!” என்றாள் மெதுவாக.

அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தவன், காலில் ஷூவை மாட்டியபடி நிமிர்ந்து பார்க்க, ‘என்னன்னு கூட கேட்க மாட்டீங்களா?’ என தனக்குள் முணுமுணுத்து, “சுதாகர் பத்தி பேசணும்” என்றிட, அப்போதும் அவன் பார்வையை மாற்றவில்லை.

“அவன் ஏன் அவனோட உரிமையை விட்டுக்கொடுக்கணும். அவன் வீட்டை விட்டு வந்ததும், தொழில்ல இருந்து ஒதுங்குறதும் எனக்கு சரியாப்படல.” என்றதில், சட்டையின் கைப்பகுதியை பின்னால் இழுத்தபடி எழுந்தவன்,

“இது உனக்கும் உன் அண்ணனுக்கும் இருக்குற பிரச்சனை! அதை ஏன் என்கிட்ட சொல்ற?” என பட்டும் படாமல் பதிலளித்தவன், விளையாடிக் கொண்டிருந்த இஷாந்திற்கு முத்தத்தை பதித்து விட்டு, “இன்னைக்கு ஈவினிங், மேரேஜ் பர்சேஸ்க்கு பிளான் பண்ணிருக்காங்க பசங்க. கிளம்பி இரு. நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்…” என உத்தரவிட்டு கிளம்பி விட்டான்.

அவளுக்கோ கோபமும் அழுகையும் ஒரு சேர கண்ணை நிறைக்க, மாலை அவனுக்காக காத்திராமல் சுதாகரை வரவழைத்து அவனுடனே சென்றாள்.

குறுஞ்செய்தியில், சுதாகருடன் செல்வதாக ஆரவிடம் செய்தியாக உரைக்க, அவன் பதில் ஏதும் அனுப்பவில்லை.

காரில் செல்லும்போதே, ஹேமா வீட்டிற்கும் சென்று அவளையும் அவள் வீட்டினர் சம்மதத்துடன் அழைத்துக்கொண்டு இருவரும் மீண்டும் பயணப்பட,  

வான்மதி இது தான் சமயம் என, “சுத்தி, நீ மறுபடியும் கடையை பார்த்துக்கணும்.” என்றதில், சுதாகர் புருவம் சுருக்கினான். “எனக்கு பிடிக்கல வண்டு. எனக்கு சொத்தும் வேணாம். சொந்தமும் வேணாம்…” என்றான் கடுப்பாக.

“என்ன பேசுற? கிட்டத்தட்ட 10 வருஷம் உன்னோட உழைப்பும் அதுல அடங்கி இருக்கு. என்னதான், அப்பா பல இடத்துல பிரான்ச் வைச்சு இருந்தாலும், ஷார்ட் டைம்ல இந்த அளவு ரீச் ஆகி இருக்குன்னா, அதுக்கு நீயும் காரணம் சுத்தி.

சொந்தம் வேணாமா? அந்த முடிவை எடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்ல. வீட்டை விட்டு வந்துட்டா, எல்லாம் சரி ஆகிடுமா?” என விழி சுருக்கி நியாயமாய் கேள்வி எழுப்ப, அவனோ சாலையில் கண்ணை பதித்தபடி,

“ப்ச், மதி… அவங்க…” என ஆரம்பிக்கும்போதே, “இங்க யாரும் பெர்ஃபக்ட் கிடையாது அண்ணா. எல்லாருமே சுயநலவாதிங்கதான். நான் முதற்கொண்டு…! அவங்க தப்பு பண்ணிருக்காங்க தான். அதுக்காக, என்ன பண்ண முடியும்? வீட்டை விட்டு வந்து, பேசாம இருந்து நீ திருத்த போறியா? இல்ல திருந்த தான் போறாங்களா…? நிச்சயமா இல்ல.

அண்ணியை நீ வீட்டுக்கு கூட்டிட்டு போனா கண்டிப்பா ஹர்ட் பண்ற மாதிரி நடந்துப்பாங்க. சோ, அவங்களை நான் இதுல இழுக்கல. பட், நீ ஒதுங்கி போறது இட்ஸ் நாட் ஃபேர். எனக்கு அவங்க எப்படி வேணும்ன்னாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா, உன்னை பொறுத்தவரை அவங்க உன் அப்பா, அம்மா. அவங்க கொலையே பண்ணாலும் அந்த உறவை முறிக்கிற உரிமை நமக்கு கிடையவே கிடையாது. ரொம்ப சொந்தம் கொண்டாட சொல்லல. தள்ளி நின்னு உறவை பாதுகாத்துக்கோ. அதே மாதிரி உன் தொழிலையும் தயவு செஞ்சு விட்டு குடுக்காத.” என்றவள்,

ஹேமா ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டு, “நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனிமே நீ என்ன முடிவு எடுக்குறதுனாலும் அண்ணிட்ட கேட்டு எடுத்துக்கோ.” என பேச்சை முடித்தாள்.

ஹேமாவோ, தனக்காகவும் சிந்தித்ததில் அவளை பரிவாய் பார்த்து விட்டு, “மதி சொல்றதும் சரி தான்னு தோணுது சுதாகர். எதுக்கும் இதை பத்தி இன்னொரு தடவை யோசிங்க. ஆனா, நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே தான்…” என்று தீர்மானமாக கூறியதில், அவன் முகம் இன்னும் குழப்பத்தில் மிதந்தது.

இவர்களுக்கு முன்பே, ஆரவ் ஜவுளிக்கடையில் நிற்க, வான்மதியைக்
கண்டதும், அவளை முறைத்தபடி இஷாந்தை வாங்கி கொண்டு முன்னால் நடந்தான். 

மற்ற ஜோடிகள், உடை தேர்வு செய்வதில் மூழ்க, தன்விக் அப்போது தான், “மோனி கிளம்பிட்டியா? ட்ரெஸ் எடுக்க போறதுக்கு ஏண்டி, ட்ரெஸ் கடை மாடல் மாதிரி ஒரு மணி நேரமா ரெடி ஆகுற” என புலம்பியபடி கத்தினான்.

‘நிம்மதியா கிளம்ப விட மாட்டுறான்…’ என அவனை வாய்க்குள்ளேயே திட்டிக்கொண்ட மோனிஷா, கிளம்பி வந்ததும் இருவரும் வண்டியில் கடையை நோக்கி செல்ல, தன்விக் தான் ஆரம்பித்தான்.

“மோனி… கவி, ஹேமா மேரேஜ் முடிஞ்சதும் ஒரு ட்ரிப் பிளான் பண்ணிருக்கோம்.” என யோசனையுடன் கூறியதும், “வாவ். ட்ரிப்பா? எங்க மாமா?” என ஆர்வமாக கேட்டாள்.

“ஊட்டிக்கு. ஹனிமூன் மாதிரி…” என்று விட்டு அவன் வண்டியில் கவனமாக, அவன் தோளில் கையை பதித்திருந்தவளுக்கு, வெட்கம் ஆட்கொண்டது.

அவள் முகம் தெரியாததால், “ஹே… இது நீ நினைக்கிற மாதிரி இல்ல.” என்றவன், அதற்கான விளக்கத்தை கொடுத்து, “மத்தபடி நீ பயப்படுற அளவு ஒன்னும் இல்ல. ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்ட்லி ட்ரிப் மாதிரி போயிட்டு வந்துடலாம். ஓகே தான?” எனக் கேட்டான் தயக்கமாக.

அவளுக்கு தான் பொசுக்கென ஆகிவிட்டது. கண்ணில் நீர் திரையிட, “வெறும் ஃப்ரெண்ட்லி ட்ரிப் மட்டும் தானா?” வெகுவாய் தவிப்பை சுமந்து அவளின் வார்த்தைகள் வெளிவர, “ஆமாடி. யூ டோன்ட் வொரி.” என்றான் வேகமாக.

அத்தோடு கடையும் வந்திருக்க, மேலும் வெதும்பியவள், “நான் ஏன் வொரி பண்ண போறேன். நீ கூட வரும் போது…” என்றவளின் குரல் தேய,

“நான் ஒன்னும் உன்ன தப்பா நினைக்கல. ஏதோ குழப்பத்துல அப்படி நடந்துக்கிட்டேன். அவ்ளோ தான். அதுக்காக என்னால சாரி எல்லாம் சொல்ல முடியாது. உனக்கு பிடிக்கலைன்னா, நீ ப்ரெண்ட்லி ட்ரிப் – ஆவே நினைச்சுக்கோ. ஆனா எனக்கு இது தான் ஹனிமூன்” என்று மடமடவென பேசிவிட்டு, விறுவிறுவென கடைக்குள் செல்ல, அவனோ விழி விரித்து அவள் சென்ற திசையை பார்த்து விட்டு, “ஏய்… நில்லுடி…” என்று வேகமாக அவள் பின் சென்றான்.

அவளோ தெளிவாக வான்மதியின் அருகில் சென்று நின்று கொண்டு, அழகு காட்ட, அதில் மெலிதாய் முறுவலித்தவன், “இங்க வா…!” என்றான் விழியால். “போடா…பட்டர்!” என வாயசைத்தவளை, இன்னுமாக ரசித்து வைத்தவன், ‘ஊட்டிக்கு வாடி உன்னை பாத்துக்குறேன்…’ என தனக்குள் புன்னகைத்துக்கொண்டான்.

வான்மதி மொத்தமாக ஹேமா லயாவிற்கு உடை தேர்ந்தெடுப்பதில் மூழ்க, “அண்ணி… இது உங்களுக்கு நல்லா இருக்கும்” என்று ஒரு புடவையை எடுத்து லயாவிடம் காட்டியதில், அவளோ கண்ணில் விரலை வைத்து,

“இங்க பாரு என்னை போடி வாடின்னு கூட கூப்டு. ஆனா இந்த அண்ணி நொண்ணின்னு கூப்பிட்டு பிஞ்சு மனச கலங்க வைக்காத. என்னைக்கா இருந்தாலும் உன் புருஷன் தான் என் முதல் சைட்டு க்ரஷு…” என்று சுடிதார் காலரை தூக்கி விட்டுக்கொள்ள, கவின் தான் “உனக்கு மான ரோஷமே இல்லைல…” என்றான் கேவலமாக ஒரு பார்வை பார்த்து.

“உங்க கூட எல்லாம் சேர்ந்தா எப்படிடா இருக்கும். ரொம்ப பேசுன… நான் கல்யாணத்தை கேன்சல் பண்ணிட்டு, அவனுக்கும் டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுவேன் எப்படி வசதி” என்றாள் மிரட்டலாக.

அதில் மிரண்டவன், “யம்மா நீ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத.” என்று விட்டு, வான்மதியிடம் “நீ அவளை அண்ணின்னு மட்டும் கூப்பிடாதம்மா” என்றான் பாவமாக.

அவளோ பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டு, “அப்போ நான் எப்படி சார் கூப்புடுறது?” என யோசனையாக கேட்க, அவனுக்கோ எப்போதும் போல அவள் அழைப்பில் முகம் சுருங்கியது.

அதனை வெளிப்படையாகவே காட்டி விட்டு, அவளை முறையாக அழைக்க சொல்லவும் சங்கடப்பட்டு, சற்று தள்ளி நின்று கொண்டான்.

சுதாகருடன் பேசிக்கொண்டிருந்த ஆரவிற்கு, இது எதுவும் கண்ணில் இருந்து தப்பவில்லை. அதன்பிறகு, விடிவதும் அடைவதும் கூட தெரியாதவாறு, திருமண வேலைகளில் மூழ்கி இருந்தவர்களை மகிழ்வூட்டும் விதமாக ஹேமா சுதாகரின் திருமண நாளும் இனிதாக விடிந்தது.

மணப்பெண் அலங்காரத்தில் ஹேமா ஜொலிக்க, அவளுக்கு பார்த்து பார்த்து அனைத்தும் உடன் இருந்து செய்தது வான்மதி தான். மோனிஷா ஹேமாவின் அக்காவிற்கு துணையாக இருக்க, வான்மதியோ “அண்ணி… என் அண்ணனை பத்திரமா பார்த்துக்கோங்க. உங்க ஃப்ரெண்ட நினைச்சு, என் அண்ணனை டீல்ல விட்டுடாதீங்க…!” என கிண்டல் போல கூறியதில், ஹேமா முறைத்தாள்.

“ஏன் நீ மட்டும்… எவனோ செஞ்ச தப்புக்கு என் ஃப்ரெண்ட டீல்ல விடலாம். அதையே உன் அண்ணனுக்கு செஞ்சா அது தப்பா?” என நக்கலாக குத்தியவள், “இங்க பாரு. இப்ப நான் உனக்கு நாத்தனார். மவளே. ஒழுங்கா நான் சொல்றதை கேட்டு நடந்துக்கல. நாத்தனார் கொடுமை என்னன்னு கொடூரமா காட்டுவேன்.” என்று விழிகளை உருட்டி விரல் நீட்டி எச்சரிக்கை, ஏனோ அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

அவள் சிரிப்பை கண்டு ஹேமாவும் சிரித்து விட, “நான் என்ன காமெடியா பண்றேன்?” என்றாள் போலியாய் முறைத்து.

“ஓ! மிரட்டுனீங்களா? மிரட்டுனேன்னு எழுதி ஒட்டுங்க அண்ணி” என அவளை வார, ஹேமா செல்லமாக அவளை கொட்டினாள்.

“டேய்… இப்ப நீ நெளியாம நிக்க போறியா இல்லையா?” ஆரவ் கையில் சுதாகரின் வேட்டியை பற்றிக்கொண்டு, அவனை முறைக்க, அவனோ “அடேய். எப்படி கட்டுனாலும் கழறுதுடா. உனக்கு என்ன, நீ தெளிவா பேண்ட் சட்டையோட ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்து எஸ்கேப் ஆகிட்ட. இதை கட்டுனா தான கஷ்டம் தெரியுது” என ஏகத்துக்கும் புலம்பினான்.

தன்விக்கும் கவினும் தான், ‘இவன்லாம் எப்படி நம்ம பிரெண்டை கல்யாணம் பண்ணி, நம்ம கூட குடும்பம் நடத்த போறான்’ என்ற தீவிர சிந்தனையில் இருந்தனர்.

ஒருவழியாக, தயாராகி இருவரும் மணமேடைக்கு வர, இருவர் முகத்திலும் புன்னகையும் வெட்கமும் தாண்டவமாடியது. வான்மதியின் பெற்றோர் மட்டும் திருமணத்திற்கு வந்திருக்க, அவளுக்கே வியப்பு தான் அவர்கள் வந்ததை எண்ணி.

மனநிறைவுடன், ஹேமாவிற்கு சுதாகர் மாங்கல்யத்தை அணிவிக்க, வான்மதி நாத்தனார் முடிச்சிட்டு சுதாகரை கட்டிக்கொண்டாள், “காங்கிரேட்ஸ்டா சுத்தி…” என்று.

அவனும், தங்கையை பரிவுடன் கட்டிக்கொண்டு ஹேமாவை கண்ணில் நிரப்ப, கவினும் தன்விக்கும் ‘இப்படி போய் சிக்கிட்டியே…’ என்று கேலியாய் வருந்தினர். லயா மட்டும் திருமண நேரத்திற்கு வந்து விட்டு, மறுநாள் அவளுக்கு திருமணம் இருந்ததில் உடனே கிளம்பியும் விட்டாள்.

ஆரவ் தான், தள்ளி நின்றே ஹேமாவை பார்த்திருந்தான். பள்ளிக்காலம் தொடங்கி, இப்போது வரை பெண்களின் மீது வெறுப்பு வராமல் இருக்க அவளே காரணம். தாயும் மனைவியும் ஏமாற்றும் போது கூட, அவனெண்ணத்தில் ஹேமாவே வருவாள். அதுவே, அவனை எப்போதும் நடுநிலையாய் வைத்திருக்க முதற் காரணம்.

அவளை சிறு சிரிப்புடன் ஏற இறங்க பார்த்தவன், “ப்ச்… சகிக்கல எச். ஆர்ரே…” என நாக்கை நீட்டி தலையாட்ட, அவனை முறைப்பாய் விழித்ததில், அதே புன்னகையுடனே அவளருகில் வந்தவன், தோளோடு அணைத்துக்கொண்டான்.

“இந்த கெட் – அப் தான் கொஞ்சம் காமெடியா இருக்கு உனக்கு…!” என அவளின் அலங்காரத்தை கிண்டல் செய்ய, அவளுமே உணர்ச்சிவசப்பட்டிருந்தாள். இப்போது, சற்றே மட்டுப்பட்டு, “உன் பொண்டாட்டி தாண்டா என்னை வைச்சு செஞ்சுட்டா…!” என கோள் மூட்ட,

தன்விக் “ஓ, அதான் இன்னைக்காவது கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்கியா?” என நக்கலடிக்க, கவினோ, “இருந்தாலும் பௌடர்ல மூஞ்சி கொஞ்சம் கம்மியா இருக்குலடா” என்று மேலும் வாரினான்.

“டேய்… ஏதோ பாசமா பக்கத்துல வந்துருக்கீங்கன்னு பார்த்தா கலாய்க்கவா செய்றீங்க?” என்று உதட்டை பிதுக்க, ஆரவ் தான் சுதாரிடம் “உண்மையா சொன்னா உன் பொண்டாட்டிக்கு கோபம் வருதுடா” என சிரித்தான்.

சுதாகரோ, “டேய் டேய்… என் பொண்டாட்டி ரியல் அழகுடா. ரொம்ப தான் கலாய்க்கிறீங்க…” என்று தன் மனைவிக்கு கொடி தூக்கிக்கொண்டு வர, கவின் தான் வெடித்து சிரித்து, “மச்சான்… கல்யாணம் ஆனதும் நீ சொல்ற முதல் பொய். கல்வெட்டுல எழுதி வைச்சுக்க!” என்றதில் அங்கு சிரிப்பலை பரவியது.

ஆனாலும், நண்பர்களின் வார்த்தைகளில் சிறு நாகரிகம் உணர்ந்தவள், கவனமாக அவளை ‘டி’ என அழைப்பதை மூவரும் தவிர்ப்பதை அறிந்து, சுருக்கென வலித்தாலும், அவர்களின் புரிதலில் புன்னகையும் அரும்பியது. 

வான்மதியின் விழிகள் தான் ஆரவையே சுற்றி வந்தது. அவ்வப்பொழுது கண்களை சிமிட்டிக்கொண்டவனை ஆழ்ந்து பார்த்தவள், சிறிது நேரத்தில் அவனை தரதரவென இழுத்துக்கொண்டு தனியாக சென்றாள்.

அவனோ புரியாமல், “என்ன?” எனக் கேட்க, அவளும் “என்ன?” என்றாள் கையை கட்டிக்கொண்டு.

“அதை தான் நானும் கேக்குறேன்…! எதுக்கு இழுத்துட்டு வந்த?” அவன் அவளை பாராமல் கேட்க, அவனின் கன்னம் பற்றி அவளை காண வைத்தவள்,

“இது என்ன இஷு பேபி மாதிரி… ஹேமா என்ன கல்யாணம் பண்ணிட்டு கண்காணாத தூரத்துக்கா போக போறாங்க. இங்க தான இருக்க போறாங்க?” என அவனை கண்டு கொண்டு கேள்வி கேட்டவளைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்தவன், “நான் ஒன்னும் ஃபீல் பண்ணலையே…” என்றான் தோள்களை குலுக்கிக்கொண்டு.

“அதான் பாத்தாலே தெரியுதே…!” என அவள் தலையை சாய்த்து அவனை கூர்ந்து பார்க்க, அவன் மீண்டும் கலங்கி நின்ற கண்களை சிமிட்டியபடி,

“என் கூடவே இருந்துட்டாளா… டக்குன்னு டீசன்ஸி பார்த்து பேச ஒரு மாதிரி இருக்கு. பட் பழகிடும். அதுக்காக அவன் முன்னாடி அவளை வாடி போடின்னு கூப்பிட்டா நல்லா இருக்காது.” என அவனுக்கு அவனே சமாதானம் சொல்லிக்கொள்ள, இங்கோ தன்விக்கும் ஒரு பக்கம் கண்ணீர் மழையில் நனைந்து கொண்டிருந்தான்.

இஷாந்தை கையில் வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த மோனிஷா, ‘என்ன இது விசும்பல் சத்தம் கேக்குது. ஆனா இஷு குட்டி சிரிச்சுட்டு தான் இருக்கான்…’ என புரியாமல் திரும்பி பார்க்க, அங்கு தன்விக் பத்து டிஷ்ஷியூ பேப்பரை கண்ணீரை துடைத்த படி கீழே போட்டுக்கொண்டிருந்தான்.

அதில் பதறியவள், “என்ன மாமா ஆச்சு. எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க? நம்ம கல்யாணத்துல கூட நீ அழுகவே இல்லையே.” என கேட்க,

“ஹேமா இருக்காள்ல, நாங்க இத்துனூண்டா இருக்குறதுல இருந்து எங்க கூடவே தான் இருப்பா. இன்னும் கூட அதே குட்டி பொண்ணா தான் தெரியிறா மோனி. சடனா கல்யாணம் ஆனதும், எங்களுக்குள்ள ஒரு கேப் விழுந்த ஃபீலிங்க். தங்கச்சிக்கு கல்யாணம் ஆனா, ஒரு மாதிரி மனசு எல்லாம் பாரமா இருக்குற மாதிரி இருக்கும்ல அந்த மாதிரி ஒரு பீல்…” என வருந்தியக்குரலில் கூறியவன், தன்னை அடக்கிக்கொண்டு கண்ணீரைக் கட்டுப்படுத்த, கவின் ஹேமாவை விட்டு நகரவே இல்லையே.

நகர்ந்தால், கலங்கி விடுவோம் என்று அறிந்து, அவளுடனே நின்று கொண்டான்.

வான்மதிக்கு தான் ஆரவை எண்ணி ரசனையும் சிரிப்பும் ஒருங்கே தோன்ற, அவனின் கண்களை அழுந்தி துடைத்து விட்டாள். அவனோ நகர்ந்து, “நானே துடைச்சுக்குவேன்” என முணுமுணுத்து விட்டு நகர, “பேபியை விட மோசம் முகில் நீங்க…” என முறுவலித்தாள்.

மறுநாள், கவி லயா திருமணமும் இனிதே நடைபெற, லயாவை சீண்டும் பொருட்டு, “நான் தான் நாத்தனார் முடிச்சு போடுவேன்” என்று கிண்டலடித்தாள் வான்மதி. அதில் அவளை திரும்பி முறைத்தவள், “மவளே, தாலி மேல கையை வைச்ச, அடுத்த ஜென்மத்துல உன்ன போட்டு தள்ளிடுவேன்.” என எச்சரித்தாள்.

கவினோ, “தேவை இல்ல தேவை இல்ல. மோனிஷா தான் என்னை வாய் நிறைய அண்ணன்னு கூப்புடுறா. அவளே நாத்தனார் முடிச்சு போடட்டும்.” என வான்மதியை வார, அவள் மௌனமாகி விட்டாள்.

ஆரவ் தான், “டேய்… அதை அப்பறம் டிஸ்கஸ் பண்ணலாம் முதல்ல தாலியை கட்டு…” என்று முறைக்க, சிறு புன்னகையுடன் தன் ஆசை காதலிக்கு பொன் தாலியை அணிவித்தவன், ஒரு முடிச்சிட்டதும், வான்மதியை நிமிர்ந்து பார்த்து, “நீ போடுறியா… இல்ல நானே போடட்டுமா? என்னை அண்ணனா நினைக்கலைன்னா வேணாம்…” என்று சட்டென்று குனிந்து விட, அவளோ மறுநொடி அமர்ந்து மீதி முடிச்சுகளை இட்டாள்.

லயா தான், “ஏண்டா உன் அண்ணன் பாசத்தை காட்ட, நான் தான் கிடைச்சேனா? யாராச்சு முடிச்சு போட்டு விடுங்கடா குனிஞ்சு கழுத்து வலிக்குது.” என்று கதற, அங்கு மெலிதாய் சிரிப்பொலி பரவியது.

ஆரவ் தான், எதுவும் பேசாமல் கள்ளத்தனமாக வான்மதியை ரசித்திருந்தான். ஆனாலும், அவனுக்கு புரியாத ஒரு விஷயம், எப்படி இவள் தன் நண்பர்களிடம் இத்தனை இலகுவாக இருக்கிறாள் என்பது தான். அதனை புரிந்து கொள்ளும் வாய்ப்பை நண்பர்களே, அமைத்து கொடுத்தனர்.

திருமணம் முடிந்த கையோடு, ஊட்டிக்கு செல்ல போவதை நண்பர்கள் அறிவித்ததும் ஒரு நொடி திகைத்து தான் போனான். அதே திகைப்பு துளியும் மாறாமல் வான்மதியின் முகத்திலும் அப்பட்டமாக பரவியது.

அவளறியாமல் கண்கள் கண்ணீரை சுரக்க, அவனுக்கோ மனம் தீயாக எரிந்தது. “ஆபிஸ்ல வேலை இருக்கும். நீங்க ஆறு பேரும் போயிட்டு வாங்க…” என சமாளித்துப் பார்த்தான்.

ஆனால், யாரும் அதனை காது கொடுத்து கேட்கவில்லை. அவன் வந்தால் தான் செல்வோம் என அடம்பிடிக்க, வான்மதிக்கு மீண்டும் ஆரவின் குறும்பையும் காதலையும் காண ஒவ்வொரு செல்லும் துடித்தது.

அதற்கு இதுவே தக்க சமயம் என உணர்ந்தவள், தன் மனதிலிருக்கும் அத்தனையையும் கொட்ட முடிவெடுத்து, “எனக்கு ஓகே.” என்றாள் நிதானமாக.

அவனுக்கோ, நண்பர்கள் தன்னை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை உணர்ந்து கோபமும் ஆதங்கமும் பொங்க, ‘என்ன ஆனாலும் சரி… ஊட்டில அவளை பார்த்த எதையும் அவள்கிட்ட சொல்ல மாட்டேன். சொல்லவே மாட்டேன். நான் செத்தாலும்…’ என தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்து, சம்மதம் சொல்ல, அவனெடுத்த தீர்மானம் அவனை பார்த்து சிரித்தது எகத்தாளமாக.

தேன் தூவும்…!
மேகா!

Next ud on monday drs🤩

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
36
+1
214
+1
1
+1
3

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  3 Comments

  1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.

  2. priyakutty.sw6

   எல்லா ஜோடிக்கும் கல்யாணம் ஆகிடுச்சு… 🥰🥰

   வாழ்த்துக்கள்…. ❤