Loading

மர்மத்திற்கான காரணங்கள் அனைத்தும் போன பதிவில் கூறிவிட்டேன். ஏதாவது விடுபட்டிருந்தால் கூறவும். நான் அந்த பதிவில் கூறிய அனைத்தும் என் கற்பனையே. மைண்ட் அப்லோடிங் மற்றும் மைண்ட் டவுண்லோடிங் வைத்து சில ஆங்கிலப் படங்கள் வெளிவந்திருக்கிறது. உடலை பதப்படுத்தும் நிறுவணம் ஒன்று இப்பொழுது இயங்கி வருகிறது. அதில் நூற்றுக்கணக்கான மக்கள் உடலைப் பதப்படுத்த பதிவு செய்திருப்பதாக தகவலும் இருக்கிறது‌. Cryonics என்பது நிறுவனத்தின் பெயர். ஆனால் மீண்டும் உயிர் கொடுப்பதெல்லாம் கற்பனையே. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இது சாத்தியமா என்று அறிவியல் தான் விளக்க வேண்டும்.

 

********

 

நேத்ரனின் அறிவுரைப்படி நிரண்யாவையும் நற்பவியையும் மருத்துவமனையில் அனுமதித்திருந்தான் கீதன்.

 

நிரண்யா இருக்கும் அறைக்கு வந்தான் கீதன். 

 

“கீதன்.. எனக்கு என்ன ஆச்சு? ஏன் இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்றாள் நிரண்யா. 

 

நற்பவி ஏற்கனவே மயக்கத்தில் இருந்தாள்‌. கீதன் அழைத்ததும் நிரண்யா அவனுடன் வந்தாள். இப்பொழுது நிரண்யா கேட்கும் வினாவிற்கு அவனால் பதில் கூற முடியவில்லை. மொழி கீதனை நம்புகிறாள். ஆனால் கீதன் மொழியின் நினைவுகளைக் களையவே நிரண்யாவை அழைத்து வந்திருக்கிறான். இது அவன் மொழிக்கு இழைக்கும் துரோகம் என்று ஒரு மனம் கூறியது. 

 

‘ஆனால் நிரண்யா பாவமே. அவளிற்கு நியாயம் செய்ய வேண்டுமல்லவா. அவளுடன் வாழ வேண்டுமே. இதற்காகவா மொழியின் மனதைப் பக்குவப்படுத்தியது. மொழி ஒரு உயிரற்ற உபகரணத்தில் இருந்தாலும் உணர்வுகள் தாங்கியிருக்கிறாள். ஒருவேளை அண்டத்தில் ஆத்மாவிற்கு அழிவில்லை என்ற கோட்பாடு மெய்யாக இருப்பின், அவள் மீண்டும் மனம் வருந்துவாளோ‌. மீண்டும் ஏமாற்றம் அடைவாளோ’ என்றெல்லாம் பலவாறு சிந்தனை செய்தான், அவளின் வினாவிற்கு பதிலளிக்காமல்.

 

வாழ்க்கை அவனிற்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறது. நிரண்யாவா மொழியா என்று. அவன் சராசரி மனிதனாக நிரண்யாவையே தேர்ந்தெடுத்தான். இந்த தருணத்தில் மொழியின் பக்கம் அவனின் துலாக்கோல் சரியவில்லை. நிரண்யாவின் பக்கம் சாய்ந்து அதற்கு ஆயிரம் காரணங்கள் அளித்தது. 

 

“கீதன்.. ஆர் யூ ஆல் ரைட்..”

 

“யெஸ்… ஐ அம்..”

 

“எனக்கு ஒரு காஃபி சாப்பிடணும்.. போகலாமா? கூட்டிட்டுப் போறீங்களா?” என்றாள் பாவமாக.

 

அதற்குள் ஒரு நர்ஸ் அங்கு வந்து அவளிற்கு ஊசி போட ஏற்பாடுகள் செய்ய, தடுத்து நிறுத்தினான் கீதன். “ஒரு பத்து நிமிஷம்.. வந்துடுறோம்” என்று கூறி அவளை அழைத்துச் சென்றான் கீதன். அவனுடன் நடந்து செல்லும் பொழுது அமைதியாகவே வந்தாள் அவள். சாலையைக் கடக்கும் பொழுது அவனின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

அவளின் இந்த செயல் அவனிற்கு விசித்திரமாகத் தோன்றியது. 

 

மருத்துவமனையின் எதிரில் இருந்த ஒரு கடைக்குச் சென்றனர் இருவரும். ஒரு உயர்ரக காப்பிக் கடை அது. கடையின் சிப்பந்தி வந்ததும், அவனிடம் இரண்டு கோல்ட் காஃபி கொண்டு வருமாறு கூறினாள் நிரண்யா. அவனிடம் வினவாமல் அவளே அவனுக்கும் சேர்த்து சொல்லவும், யோசனையாக அவளைப் பார்த்தான் கீதன். ஏனெனில் அவள் ஆர்டர் செய்திருக்கும் கோல்ட் காஃபி அவனுக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் அவளின் விருப்பமான பானம் இல்லை.

 

“என்ன கீதன்.. எப்பவும் நிறைய பேசுவீங்க.. இன்னைக்கு அமைதியா இருக்கீங்க.”

 

“அது… அது… சரி.. அது இருக்கட்டும். நீ ஏன் உனக்கும் கோல்ட் காஃபி ஆர்டர் செஞ்ச. உனக்குப் பிடிக்காதே அது.”

 

“இப்போ பிடிச்சிருக்கு. உங்களால ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் ரொம்பவே பிடிச்சிருக்கு” என்று அவள் கூற, அவன் புருவம் யோசனையில் நெளிந்தது.

 

அவனுக்கு பதில் கூற நா எழவில்லை. அமைதியாகவே இருந்தான். பானம் வந்ததும், அலுப்பென்பதே இல்லாமல் கலக்கிக் கொண்டிருந்தான்.

 

“குற்றவுணர்வா கீதன்” என்று அவள் வினவ, திருதிருவென விழித்தான். உடல் வியர்க்க ஆரம்பித்தது. அவளின் உடல் மொழியே சரியில்லையே. அவள் ஏதேனும் தகராறு செய்யப் போகிறாளோ என்று அவளைப் பார்த்து வைத்தான். அவளிடம் சற்று முன் வரை இருந்த நெருக்கம் இப்பொழுது விடைபெற்று தொலை‌தூரம் சென்றிருந்தது. எங்கு உள்ளுக்குள் இருக்கும் மொழியால் நிரண்யாவிற்கு ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சினான். இன்னும் சற்று நேரம் சமாளித்துவிட்டால், மொழியின் நினைவுகள் நிரண்யாவை விட்டுச் சென்றுவிடும் என்று அவனுக்கு அவனே கூறிக் கொண்டான். பதற்றத்தில் அவன் மனம் பிதற்றிக் கொண்டிருந்தது. 

 

“இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க நிரண்யா உங்களுக்குக் கிடைச்சிடுவாங்க. ஆனா நான்?” என்றாள் வலியுடன். விழிகள் விழிநீர் உகுக்க தயாராக இருந்தது. 

 

அவன் பேச மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இது என்ன அடுத்த பிரச்சனை என்று. அவளின் முகம் காண முடியாமல் தலைத் தாழ்த்திக் கொண்டான். சற்று நேரம் அமைதி. அது மிகவும் சூன்யமாக இருந்தது. 

 

ஏழ்பரியோன் இளஞ்சிவப்பு நிறத்தை அள்ளித் தெளித்து அடங்கிக் கொண்டிருந்தான். அதுவரை வீசிக் கொண்டிருந்த தென்றல் எங்கு சென்றது என்று தெரியவில்லை. வெற்றிடமாக மாறியது. கீதனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. தன் கைக்குட்டையை எடுத்து அவனிடம் நீட்டினாள் அவள்.

 

“காஃபி குடிங்க..” என்றாள். காஃபியின் குளுமையும் சுட்டது நாக்கை.

 

“என்னைச் சீப்பா நினைச்சுட்டீங்கள்ள” என்றாள் சற்று கோபமாக. 

 

“உனக்கு எப்படி…..?” என்று அவன்‌ கூறி முடிக்கும் முன் அவள் ஒரு சாவியை எடுத்து அவனிடம் நீட்டினாள். அதில் அவர்கள் திருமணத்தின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் அச்சாகியிருந்தது. 

 

“இந்த சாவி.. அப்புறம் நீங்க பேசுன போன் கால்ஸ்.. சிலது ஒட்டுக் கேட்கும் நிலைமை வந்துச்சு. அதையெல்லாம் வச்சு ஏதோ தப்பாக இருக்குன்னு என்னால ஊகிக்க முடிஞ்சது. ஆனா என்ன தப்பா இருக்குன்னு தெரியலை. அதை சரி செய்யத்தான் இப்போ ஹாஸ்ப்பிட்டல் வந்திருக்கணும்” என்றாள் அவள். மிகவும் தெளிவான பேச்சு. மருத்துவரின் ஆலோசனைப்படி திருமண புகைப்படங்கள் அனைத்தையும் மறைத்தே வைத்திருந்தான். ஆனால் இதை கவனிக்கவில்லை அவன்.

 

“எனக்கு இந்த தெளிவு வந்ததுக்கு காரணமே நீங்கதான். ஆனா அது வந்திருக்கத் தேவையில்லையோன்னு தோணுதா கீதன்..”

 

“சாரி மொழி.. நிரண்யாவா மொழியான்னு கேட்டா நான் நிரண்யாவைத்தான் தேர்ந்தெடுப்பேன். இந்த இடத்தில் தான் ஒரு சுயநலவாதி மொழி.”

 

“மொழியை நீங்க தேர்ந்தடுக்காததில் எனக்கு வருத்தம்தான். ஆனா அதுக்காக உங்க வாழ்க்கை பாழாகணும்னு நான் நினைக்க மாட்டேன். நீங்க பயப்புட வேண்டாம்.”

 

“சாரி மொழி.. மொழியை என்னால் நல்லா பாத்துக்க முடியும். ஆனா நிரண்யா எனக்கு வேணும்.”

 

“இந்த மொழியை நீங்க புரிஞ்சுகிட்டது அவ்ளோ தானா கீதன். நான் உங்களுக்கு இடையூறாக இருப்பேன்னு நீங்க எப்படி நினைக்கலாம். உண்மையா உங்களை விட்டுப் போக எனக்கு மனசில்லை. ஆனா அது நியாயம் இல்லை. நான் இந்த உலகத்தில் என்னவா இருக்கேன்னு எனக்கே தெரியலை. ஆனா நீங்க என்னை மதிச்சு, எனக்கு நல்ல நண்பனா இருந்தீங்க. உங்களை என்னைக்கும் மறக்காம இருக்கணும்ங்கிறதுதான் ஆசை. ஆனா அது மொழியா இனி முடியாது. மறுபிறவி உண்மையா இருந்தா, உங்களுக்கு மகளா நான் பிறந்து வரணும்னு ஆசைப்படுறேன். எனக்கு உங்க அன்பு வேணும் கீதன்” என்றாள் சிறு குழந்தைபோல். 

 

அவளின் இந்த அன்பில் அவனின் விழிகளும் கண்ணீர் உகுக்க ஆரம்பித்திருந்தது. அவனின் கைகளை ஆறுதலாக அழுத்தினாள் நிரண்யா.

 

“போன முறை நான் நிம்மதியா போனேனானு தெரியலை கீதன். ஆனா இப்போ நிம்மதியா போறேன். என்னை வழியனுப்பி வைங்க.”

 

அவன் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழவே ஆரம்பித்துவிட்டான்‌. அவனும் மொழியை தன் தோழியாக ஏற்றுக் கொண்டானே. உண்மையில் ஒரு வருடம் முன்பு சந்தித்திருந்தால், மொழியும் இருந்திருப்பாளே என்றே தோன்றியது. ஆனால் இந்த முதிர்ச்சி அனைத்தும் காலத்தின் கட்டாயம். நிரண்யாவிற்கு இப்படி நிகழ்ந்ததால் வந்த முதிர்ச்சி.

 

“ஐ அம் சாரி மொழி.”

 

“இந்த உலகத்தில் என் நினைவுகள் இல்லைன்னா என்ன கீதன். உங்க நினைவுகளில் என்னைக்குமே எனக்கு இடம் இருக்குன்னு எனக்குத் தெரியும். நீங்க வாழும்வரை நிச்சயம் நானும் இருப்பேன் உங்க நினைவுகளுக்குள். அதனால் எனக்கு வருத்தமில்லை” என்றாள் புரிதலுடன்.

 

உண்மையில் இந்த உறவை என்னவென்று விளக்குவதென்று அவனுக்கு விளங்கவில்லை. ஆனால் அவன் மீது மொழி வைத்திருக்கும் அன்பு அளவுகோளற்றது. 

 

“மொழி.. உனக்காக என்னால் இப்போ ஒண்ணு மட்டும்தான் செய்ய முடியும். உனக்கு ஏதாவது ஆசையிருக்கா. உன்னோட குழந்தையைப் பார்க்கணுமா?” என்றான் ஆர்வத்துடன். அவளுக்கு ஏதேனும் செய்துவிட வேண்டும் என்ற அவசரமும் அவசியமும் இருந்தது அவனின் அசைவுகளில். 

 

“இல்லை. வேண்டாம். பார்க்க வேண்டாம்..”

 

“ஏன்?”

 

“ஒருவேளை பார்த்த அப்புறம் வாழ ஆசை வந்துட்டா. வாங்க போகலாம்” என்று அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றாள் நிரண்யா. அவளின் கைகளை அவன் பிடித்துக் கொண்டான் இப்பொழுது. 

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்