அவன் கிளம்பிச் சென்றவுடன், அவர்கள் மூவரும் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பற்றிய உரையாடல்களில் ஈடுபட்டனர்.
அதன்பின், அவர்களைத் தொந்தரவு செய்யாமல் மீனாவும், யாதவியும் தத்தமது வேலைகளைச் செய்யப் போக எத்தனித்த சமயத்தில்,
“நீங்களும் எங்க கூட உட்கார்ந்து பேசலாம்ல?” என்றாள் நிவேதிதா.
“இல்லை ம்மா. நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ணி ரொம்ப மாசமாச்சு. அதனால் நீங்க ஒருத்தருக்கொருத்தர் ஷேர் பண்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும். அதுக்கு நாங்க தொல்லையாக இருக்க வேண்டாம்னு தான் ம்மா! நீங்கப் பேசுங்க” என்று யக்ஷித்ராவின் தாயும், தங்கையும் அவளிடம் கூறி விட்டுப் போனார்கள்.
“நம்மளோட ஸ்கூல் லைஃப் – ஐ அடிக்கடி யோசிச்சுப் பார்த்துட்டு இருப்பேன் நிவி. அதெல்லாம் எவ்வளவு அழகான நாட்களாக இருந்துச்சுல்ல?” என்று தன் தோழியிடம் ஆத்மார்த்தமாக உரைத்தாள் யக்ஷித்ரா.
அதைக் கேட்டதும்,”ம்ஹ்ம். நானும் அதை யோசிப்பேன். அப்போ எல்லாம் ரொம்பவே சந்தோஷமாக இருந்தோம்ல?” என்று தன் பங்கிற்குத் தோழியிடம் கூறினாள் நிவேதிதா.
“ஆமாம்” என்று அவள் சொன்னதை ஆணித்தரமாக ஒப்புக் கொண்டவளோ,
“நம்மக் காலேஜ் லைஃப்பும் அப்படித் தான் இருந்துச்சு. ஆனால் அதுக்கப்புறம் கல்யாணம் ஆகி ரெண்டு பேரும் தனித்தனியாகப் பிரிஞ்சிட்டோம். இப்போ நீ வேற ஊரில் இருக்கிற!” என்றாள் யக்ஷித்ரா.
“நாம மறுபடியும் ஸ்கூல் யூனிஃபார்ம்மைப் போட்டுக்கிட்டு அந்த ஸ்கூலில் இருக்கிற எல்லா இடத்துக்கும் சுத்தனும்ன்னு ரொம்ப ஆசையாக இருக்கு” என்றவளுக்குத் தன் தோழியின் முகமும் அதே பதிலைத் தெரிவித்ததைக் கண்டு விரக்திப் புன்னகை வந்தது.
மேலும் தொடர்ந்தவளாக,”அம்மா கிட்டேயும், யாது கிட்டேயும் கூட நான் நிறைய பேசலாம்ன்னு வந்தேன். ஆனால் அவங்க நம்மப் பேசுறதுக்குப் பிரைவசியைக் கொடுத்துட்டுப் போய்ட்டாங்களே!” என்று அவளிடம் குறைபட்டுக் கொண்டாள் நிவேதிதா.
“நீ வெயிட் பண்ணு. நான் போய் அவங்களைக் கூட்டிட்டு வர்றேன்” என்றவளோ, தன்னுடைய அன்னை மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தாள் யக்ஷித்ரா.
“என்னம்மா நிவி?” என்று அவளிடம் வினவினார் மீனா.
தன் தமக்கைக்கு அருகில் அமர்ந்து கொண்டு,”உங்களுக்கு இடையில் நாங்க எதுக்கு?” என்று அவர்கள் இருவரிடமும் கேட்டாள் யாதவி.
அவளுக்குப் பதிலளிக்கும் வகையில்,”உங்களைப் பத்தியும் நான் தெரிஞ்சுக்கனும்ல? அதான், உங்களையும் கூப்பிட்டு வரச் சொன்னேன்” என்றாள் நிவேதிதா.
“அப்படியா விஷயம்? அப்போ நாம பேசலாம். வாங்க” என்று குறும்பு வார்த்தைகளை உதிர்த்தாள் இளையவள்.
“பேசலாமே!” என்றவளோ, அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள் யக்ஷித்ராவின் தோழி.
ஆனால், அவள் தெரிந்தே செய்த ஒரே நல்ல விஷயம் அவர்களது பேச்சில் எந்த ஒரு இடத்திலும் கூட யக்ஷித்ரா மற்றும் யாதவியின் தந்தையைப் பற்றிய விவரத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டது தான்!
அதை மற்ற மூவரும் புரிந்து கொண்டு அவளுடன் நிம்மதியான உரையாடலை மேற்கொண்டனர்.
“நீ எங்கேடா மறுபடியும் வெளியே கிளம்பிட்டு இருக்கிற?” என்று தன் மகனிடம் வினவினார் அகத்தினியன்.
“நானும் என்னோட ஃப்ரண்ட்ஸ்ஸை மீட் பண்ணப் போறேன் ப்பா” என்று அவருக்குப் பதிலளித்தான் அற்புதன்.
“பார்றா! அப்போ நான் மட்டும் என்னத் தக்காளித் தொக்கா? நானும் வெளியே கிளம்பிப் போவேன்” என்று அவனிடம் வீராவேசமாகச் சூளூரைத்தார் அவனது தந்தை.
உடனே அங்கே பிரசன்னமான கீரவாஹினியோ,”தக்காளித் தொக்கு இல்லைங்க, இன்னைக்கு சண்டே, அதனால் முட்டைத் தொக்கு செய்யலாம். எனக்குக் காய்கறி வெட்ட உதவி பண்ணுங்க” என்று அவருக்கு வலியுறுத்தி விட்டு,
“டேய்! நீ சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொடுத்துட்டு உன் ஃப்ரண்ட்ஸ்ஸைப் பார்க்கப் போயிட்டு வா” என்று தங்களது மகனுக்கு உத்தரவிட்டார்.
“ஏன் ப்பா? என்னையும் சேர்த்து மாட்டி விட்டுட்டீங்களே!” என்று தன்னுடைய தகப்பனைக் குற்றம் சாட்டியவனோ, தாயிடம் சென்று சமையலுக்குத் தேவையானப் பொருட்களின் குறிப்புத் தாளை எடுத்துக் கொண்டு கடைக்குக் கிளம்பி விட்டான் அற்புதன்.
அன்றைய மதிய உணவிற்கு யக்ஷித்ரா நிச்சயமாக இந்த வீட்டிற்கு வந்து உண்ண மாட்டாள் என்பது அற்புதனுக்கும், அவனது பெற்றோருக்கும் நன்றாகத் தெரியும்.
ஆதலால், அவளைத் தவிர்த்து தங்களுக்காக மட்டும் மதிய உணவைத் தயாரிக்க எண்ணியவர், அவளுடன் சேர்ந்து இரவு உணவை உண்டு கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார் கீரவாஹினி.
மகன் வீட்டினுள் நுழைந்ததும்,”எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டியா டா? அப்பறம் எதையாவது மறந்துட்டா நீ தான் மறுபடியும் போய் வாங்கிட்டு வந்தாகனும்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிச் சிரித்தார் அகத்தினியன்.
“அப்பா! நீங்க இன்னைக்கு என்னை ரொம்ப ஓட்டிட்டு இருக்கீங்க!” என்று அவரிடம் கோபித்துக் கொண்டிருந்த வேளையில்,
“நீங்க காயைக் கட் பண்ணிக் கொடுங்க” என்று அவரிடம் டிரேயையும், கத்தியையும் தந்து விட்டு,
“நீ வெளியே போயிட்டுச் சீக்கிரம் திரும்பி வா” என மகனை அவனுடைய நண்பர்களைப் பார்க்க அனுமதி அளித்து அனுப்பி வைத்தார் கீரவாஹினி.
“உன் பையனுக்கு மட்டும் இவ்வளவு சுதந்திரம் கொடுத்துட்டு எனக்கு இப்படியான தண்டனையைத் தர்றியே ம்மா!” என்று புலம்பிக் கொண்டே காய்களை வெட்டினார் அகத்தினியன்.
“ஓஹ்ஹோ! சரிங்க. அப்போ நீங்களும் உங்களுக்குப் பிடிச்ச இடத்துக்குப் போயிட்டு வாங்க. இது எல்லாத்தையும் நானே பார்த்துக்கறேன்” என்று தன்னிடம் சோகமாக உரைத்த மனைவியைக் காதலுடன் ஏறிட்ட அவரது கணவரோ,
“நான் உன்னை விட்டு எங்கே ம்மா போவேன்? உன் சமையலுக்கு ஹெல்ப் பண்றதை விட எனக்கு எந்த முக்கியமான வேலையும் இல்லை. இன்னும் காய்கறி இருந்தாலும் எடுத்துட்டு வா. நான் அதைக் கட் பண்ணித் தர்றேன்” என்று அவரிடம் கனிவாய்க் கூறினார்.
“நானும் உங்ககிட்ட பொய்யாகத் தான் ஃபீல் பண்ணிப் பேசினேன் ங்க” என்று அவரிடம் கூறிப் புன்னகைத்தார் கீரவாஹினி.
அந்த ஞாயிற்றுக்கிழமையில் தான், தன்னுடைய தோழர்களுடன் வெகு நேரம் செலவழித்துக் கொண்டிருந்தவனோ,
தன்னுடைய மனைவியைப் போலவே, தானும் அவ்வப் பொழுது தனது தோழமைகளைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தான் அற்புதன்.
அந்த அளவிற்கு அவனது நேரம் அவனால் நன்முறையில் செலவழிக்கப்பட்டது.
அவர்களுடன் இணைந்து நிறையப் புகைப்படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டான் அற்புதன்.
அவனது நண்பர்களும் கூட,”டேய்! நீ என்னடா இன்னைக்குப் புதுசா இவ்வளவு ஃபோட்டோஸ் எடுத்துட்டு இருக்கிற?” என்று அவனிடம் ஆச்சரியத்துடன் வினவினார்கள்.
அதற்கு அற்புதனோ,”என்னைக்காவது தான் நான் உங்களைப் பார்த்துப் பேசுறா மாதிரியான சுவிட்சுவேஷன் கிடைக்குது. அப்படியிருக்கும் போது ஃபோட்டோஸ் எடுத்து வச்சுக்க வேண்டாமா? அதான்!” என அவர்களுக்குப் பதில் சொன்னான்.
“அப்போ நீ வாராவாரம் எங்களைப் பார்க்க வருவியா?” என்றார்கள்.
“ஆமாம் டா. நாம இப்படி அடிக்கடி இனிமேல் மீட் பண்ணிக்கலாமா?” என்று தன் நண்பர்களிடம் கேட்கவும்,
அதற்கு அவர்களோ,”ஷூயர் டா. நாங்களும் ஃப்ரீயாக இருந்தால் வாரக் கடைசியில் பார்த்துக்கலாம்” என்று அவனுக்கு வாக்குக் கொடுத்தனர்.
யக்ஷித்ராவின் தாய் வீட்டிலோ, அவளும், அவளது அன்னை மற்றும் தங்கையும், நிவேதிதாவுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது,”ஓகே ம்மா. லேட் ஆச்சு. இப்போ போனால் தான் லன்ச் சமைச்சு முடிக்க முடியும். நீங்கப் பேசுங்க” என்று தனது சின்ன மகளை அழைத்துப் போய் விட்டார் மீனா.
“ஹேய் யக்ஷி! அம்மாகிட்ட இன்னைக்குச் சைவ சாப்பாட்டையே சமைக்கச் சொல்லேன் ப்ளீஸ்!” என்று அவளிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் அவளது தோழி.
“ஏன் ம்மா?” என்றவளிடம்,
“என் ஃபேமிலியோட வரும் போது விருந்தே வைங்க. நோ பிராப்ளம். ஆனால் இப்போ வேண்டாம்!” என்று முடிவாகச் சொல்லி விட்டதால், அவளது கோரிக்கைக்கு இணங்கித் தன்னுடைய தாயைத் தேடிப் போய் விஷயத்தைக் கூறினாள் யக்ஷித்ரா.
“சரிம்மா. அப்படியே செஞ்சிடலாம்” என்று மகளிடம் சொல்லி அனுப்பி வைத்து விட்டுச் சைவ சாப்பாட்டையே சமைக்கத் தொடங்கி விட்டார் மீனா.
“உன்னோட வாழ்க்கையிலும் என்னை மாதிரியே நிறைய கசப்பான விஷயங்கள் நடந்திருக்கே? அதெல்லாம் இப்போ சரி ஆகிடுச்சா?” என்று அவளிடம் வினவவும்,
“எல்லாமே சரி ஆகிடுச்சு யக்ஷி. எங்க அப்பாவும் இப்போ அம்மாவையும், தம்பியையும் நல்லா கவனிச்சுக்கிறார். அவங்களும் அப்பாவை நல்லா பாத்துக்கிறாங்க. நானும், என்னோட புருஷனும் அங்கே அடிக்கடி போயிட்டு வருவோம்” என்று அவளிடம் உரைத்தாள் நிவேதிதா.
“ஓஹ்! சூப்பர். உன் தம்பி என்னப் பண்றான்? அவனோட ஃபேமிலி எப்படி இருக்கு?” என்று அவளிடம் விசாரித்தாள் யக்ஷித்ரா.
“அவனுக்கு என்ன? தன்னோட குடும்பத்தோட நல்லா சந்தோஷமாக இருக்கான். ஃபோட்டோ காட்டுறேன். பாரு” என்று தனது தம்பி, அவனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை தோழிக்குக் காண்பிக்கவும்,
“வாவ்! மிதுனோட வொய்ஃப்பும், அவனோட குழந்தையும் ரொம்ப அழகாக இருக்காங்க!” என்று அவளிடம் சொல்ல,
“ம்ம்” என்றாள் நிவேதிதா.
“அவங்க எந்த ஊரில் தங்கி இருக்காங்க?” என்றவளது கேள்விக்குப் பதில் அளித்தவளிடம்,”அந்த ஊர் இங்கே இருந்து ரொம்ப தூரமாச்சே?” என்று வினவினாள் யக்ஷித்ரா.
“ஆமாம். என்னப் பண்றது? அங்கே தானே அவனுக்கு வேலை கிடைச்சது. அதான், அங்கேயே போய்ச் செட்டில் ஆகிட்டான்”
“அதுவும் சரி தான்”
சமையலறையில்,”குழம்பைக் கிளறி விடு யாது” என்று இளையவளுக்கு அறிவுறுத்திக் கொண்டே சமையல் வேலைகளைத் துரிதமாக பார்த்துக் கொண்டிருந்தார் மீனா.
“சாப்பாட்டுக்கு இந்த அளவு அரிசி போதுமா ம்மா?” என்று அவரிடம் சந்தேகத்தைக் கேட்டாள் யாதவி.
“இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோ” என்று அவளுக்குப் பதிலளித்தார் அவளது அன்னை.
அவர்களுடைய சுறுசுறுப்பான நடவடிக்கைகளின் மூலமாக சமையல் வேலைகள் அனைத்தையும் வேகமாகச் செய்து முடித்து விட்டிருந்தனர்.
“யக்ஷி! நிவி! சாப்பாடு தயார்! டைனிங் டேபிளுக்கு வாங்க” என்று அவர்களுக்குக் குரல் கொடுத்தார் மீனா.
“அம்மா கூப்பிட்றாங்க. வா போகலாம்” என்று அவ்விருவரும் சாப்பாட்டு மேஜைக்குச் சென்று விட, அங்கேயிருந்த நாற்காலியில் நிவேதிதாவை அமர வைத்து விட்டு தாய் மற்றும் தங்கையிடம் போய்,”நானும் உங்க கூடச் சேர்ந்து பரிமாறுறேன்” என்றாள் யக்ஷித்ரா.
“எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து தான் சாப்பிடப் போறோம்” என்று தன்னுடைய மகளிடம் உணவுப் பாத்திரங்களைக் கொடுத்து அனுப்பி வைத்தார் அவளது அன்னை.
அதை மேஜையில் மீது இடம் பெறச் செய்தவளோ,”எல்லாமே வெஜ் ஐட்டம்ஸ் தான் செஞ்சிருக்காங்க. அதனால் நல்லா சாப்பிடனும். சரியா?” என்று தோழிக்கு அறிவுறுத்தவும்,
அவளோ,”சாப்பாட்டோட வாசனையே மூக்கைத் துளைக்குது யக்ஷி. அதனால், நீ இதையெல்லாம் சொல்லவே வேண்டாம்! நான் என்ஜாய் பண்ணிச் சாப்பிடப் போறேன்” என்று அவளுக்கு உறுதி அளித்தாள் நிவேதிதா.
“ம்ஹ்ம்” என்று அவளுக்குப் பதிலாகப் புன்னகையை உதிர்த்தாள் யக்ஷித்ரா.
அதற்குள், அங்கே மற்ற இருவரும் வந்து விட,”என்னம்மா? உனக்குப் பிடிச்ச ஐட்டம்ஸ் ஏதாவது இருக்கான்னுப் பார்த்துட்டியா?” என்றார் மீனா.
“எனக்கு இதெல்லாமே ரொம்ப பிடிக்கும் மா” என்று அவரிடம் கூறிச் சிரித்தாள் நிவேதிதா.
“யாது! நீயும் உட்கார்” என்று அவளையும் அமரச் செய்து விட்டுத் தானும் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து சாப்பிட அமர்ந்தவரோ,
“எல்லாத்தையும் தயங்காமல் எடுத்துப் போட்டுச் சாப்பிடு ம்மா” என்று தன் மகளின் தோழிக்கு அறிவுறுத்தி விட்டுத் தனது உணவில் கவனத்தைச் செலுத்தினார் யக்ஷித்ராவின் தாய்.
அவர்கள் செய்திருந்த உணவின் சுவை நாவைச் சுண்டி இழுக்கவும், சற்று அதிகமாகவே சாப்பாட்டை ருசித்து உண்டவளோ, அதை வெளிப்படையாகத் தன் தோழியின் குடும்பத்திடம் சொல்லி அவர்களைப் பாராட்டவும் செய்தாள் நிவேதிதா.
“தாங்க்ஸ் ம்மா” என்று அவளுக்கு யக்ஷித்ராவும், அவளது குடும்பத்தாரும் நன்றி தெரிவித்தார்கள்.
அனைவரும் நன்றாகச் சாப்பிட்டு முடித்ததும் மீண்டுமொரு உரையாடலை மேற்கொண்டனர்.
அந்தச் சமயத்தில், தன்னுடைய இல்லத்திற்குச் சென்று தன் பெற்றோருடன் இணைந்து மதியச் சாப்பாட்டை உண்டு முடித்த அற்புதனிடம்,
“இப்போ யக்ஷியோட மனநிலை எப்படிடா இருக்கு? இப்பவும் சோகமாகவே இருக்காளா?” என்று வினவினார் கீரவாஹினி.
தங்கள் மருமகள் வீட்டில் இல்லாத நேரத்தில் அவளைப் பற்றித் தங்களது மகனிடம் விசாரிப்பது தவறு தான் என்றாலும் கூட அவளைப் பற்றிய தவறான விஷயங்களையோ, குற்றச்சாட்டுகளையோ அவனிடம் கேட்கவில்லையே?
அவர்களிடையே சுமூகமான உறவு இருக்கிறாதா என்பதை தான் கேட்டுத் தெரிந்து கொள்ள விழைந்தார் அவனது அன்னை.
தன் தாயின் கேள்வியைக் கேட்டதும்,”அவ இப்போ எவ்வளவோ பெட்டர் ஆக இருக்கா ம்மா. அவளோட மனசில் இருந்த பாரத்தை எல்லாம் எங்கிட்ட ஷேர் பண்ணிக் கொஞ்சம், கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்துட்டு இருக்கா ம்மா!” என்று அவரிடம் உரைத்தான் அற்புதன்.
- தொடரும்