Loading

மனையாளின் கடும் அதிர்ச்சிக்குத் தானே காரணம் என்பதை உணராத தீரன், தலைவலியில் சோர்ந்து உறங்கி விட, பெண்ணவளிற்கு தான் இதயம் தாறுமாறாகத் துடித்தது.

ஏதோ யோசனையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த நிக்கோலஸைக் கண்டதும், தேவிகா பொரிந்து தள்ளினாள்.

“உங்களுக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா? கட்டுன பொண்டாட்டிக்கிட்ட புருஷனுக்கு அடிபட்டதை சொல்லாம இத்தனை நாள் இழுத்துருக்கீங்க. நீங்க செஞ்சது கொஞ்சம் கூட நல்லா இல்ல நிக்கி.” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபத்துடன் பேசியவளிடம்,

“என்னை என்னன்னு சொல்ல சொல்ற? ‘உன் புருஷன் பொழைக்கிறதே கஷ்டம்ன்னு டாக்டர் சொல்லிருக்காரு. கடைசியா ஒரு தடவை வந்து பார்த்துட்டு போ’ ன்னு சொல்ல சொல்றியா?” அவனும் கோபமாக பார்த்தான்.

“என்ன சொல்றீங்க?” அவள் அதிர,

“பின்ன என்ன தேவ்…? பாஸ் பொழைப்பாரா மாட்டாரான்னே தெரியல. நேத்து நைட்டு தான், அவுட் ஆஃப் டேஞ்சர்ன்னு டாக்டர் சொன்னாரு. அதுக்கு அப்பறம் தான் நான் சஹாகிட்ட விஷயத்தை சொன்னேன். நானுமே செம்ம ஷாக்ல இருந்தேன். எப்படி திடுதிப்புன்னு வந்து சொல்ல முடியும் நீயே சொல்லு…” என்று நியாயம் கேட்க, அதற்கு அவளிடம் பதில் இல்லை.

மேலும் பேச்சுவார்த்தையை வளர்க்காமல், நிக்கோலஸ் மருத்துவரைக் காண செல்ல, பேயறைந்த முகத்துடன் அங்கு வந்தாள் சஹஸ்ரா.

“சஹா… அண்ணா எப்படி இருக்காங்க?” எனக் கேட்டதில், “ம்ம். தூங்குறாங்க.” என்று பதில் அளித்தவள், இன்னும் அவனது ஸ்பரிசம் காதருகில் நெளிந்ததில், காதை நன்கு தேய்த்துக் கொண்டாள் பாவம்.

இரு நாட்கள் கழித்தே, தீரனை நார்மல் வார்டிற்கு மாற்ற, அதிக நேரம் மாத்திரையின் விளைவில் அவன் உறக்கத்திலேயே தான் இருந்தான். அது அவளுக்கு நிம்மதியையும் சேர்த்தே கொடுத்தது. தேவையின்றி கேள்வி கேட்கமாட்டானே!

ஆனால், எத்தனை நாட்கள் அப்படி தப்பிப்பது?

அன்று, அதிசயமாக விழித்து இருந்தவனைக் கண்டதும், “ஏதாச்சு வேணுமா தீரன்?” எனக் கேட்டபடி அவனருகில் சென்றாள்.

“முதல்ல நான் வீட்டுக்கு போகணும். இன்னும் எவ்ளோ நாள் இங்கயே இருக்குறது?” சற்றே சலித்துக் கொள்ள, “இன்னும் ரெண்டு மூணு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்ன்னு டாக்டர் சொன்னாங்க.” என்றதில்,

“வாட்? ரெண்டு மூணு நாளா? நோ வே. இங்க இருக்க இருக்க நான் முழு நோயாளியா மாறிடுவேன் போல. நான் இப்பவே வீட்டுக்கு போகணும்” என்றான் பிடிவாதமாக.

“தலைல பலமா அடிபட்டுருக்கு தீரன். அதெப்படி உடனே போக முடியும்? உங்களை கம்ப்ளீட்டா செக் பண்ணிட்டு தான் அனுப்புவாங்க. அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.” குட்டி ஜிமிக்கி ஆட, விழிகளை உருட்டி அவள் பேசிய விதத்தில், மற்றவை மறந்தான்.

“சரிய்ய்… அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.” என இழுத்தவன், “இங்க உட்காரு” என கட்டிலில் அவனுக்கு அருகில் கை காட்ட,

‘வேணாம் சஹா, இவன் பக்கத்துல போறது சேஃப்’ இல்ல என அவளின் உள்மனம் எச்சரித்தாலும், அதனை செயல்படுத்த அவன் விடவில்லை.

“நான் உன் புருஷன் தான… என்னமோ பக்கத்துல உட்கார்றதுக்கு இவ்ளோ யோசிக்கிற?” அவன் விழி இடுங்க முறைத்ததில், தன்னிச்சையாக அவன் அருகில் அமர்ந்தாள்.

“ம்ம்… சரி! நான் ரெண்டு மூணு நாள் இருக்கணும்ன்னா ஒரு கண்டிஷன்!” என பீடிகையுடன் ஆரம்பிக்க, என்ன என்பது போல பார்த்தாள்.

“நம்ம மீட் பண்ண ஸ்டார்ட் பண்ணதுல இருந்து, இப்போ வரை நடந்தது எல்லாத்தையும் எனக்கு சொல்லணும். எஸ்பெஷல்லி, நம்ம லவ் பார்ட்!” எனக் கேட்டபடி நன்றாக பின்னால் சாய்ந்து அமர்ந்தவன், அவளது கையையும் எடுத்து, தனக்குள் வைத்துக் கொள்ள, அவளுக்கோ எங்காவது ஓடிவிடலாம் போல இருந்தது.

‘முன்ன பின்ன செத்தா தான சுடுகாடு தெரியும்ன்னு சொல்லுவாங்க…!’ என நொந்தவள்,

‘என்ன ஆனாலும் பரவாயில்லை. உண்மையை அவனிடம் கூறி விடலாம்’ என்றெண்ணி வாய் திறக்கும் வேளையில்,

அவனே, “ஆமா உன் ஃபேமிலி, அப்பா அம்மா எல்லாம் எங்க இருக்காங்க” என்று கேட்டான் அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்.

‘ஹப்பாடா பேச்சை மாத்திட்டான்.’ என ஆசுவாசமானவள், அவளின் தந்தையைப் பற்றிக் கூற அவனிடம் ஒரு வியப்பு பரவியது.

“ஹே! நீ விஸ்வநாதன் சார் பொண்ணா?” எனக் கேட்க, “ம்ம்” என்றவளிடம்,

“உன் அப்பா நல்லவரு தான். ஆனா கொஞ்சம் ஹெட் வெய்ட். அவரை நான் ஏதோ ஒரு ஃபங்ஷன்ல பார்த்து இருக்கேன். பட், சரியா ஞாபகம் வரல…” என கட்டிட்டு இருந்த பின்னந்தலையில் கை வைக்க, அவள் பதறி அவன் கையை எடுத்து விட்டாள்.

“வலிக்க போகுது தீரன். என் அப்பாவை ஞாபகம் இருக்கே அதுவே போதும். ஆனா, என் அப்பா ஒண்ணும் ஹெட் வெய்ட் இல்லை” என்றாள் சிலுப்பலாக.

ஒரு நொடி அவளின் அக்கறையில் இதமாக குளித்தவன், “எப்படின்னு தெரியல… பட் உன் அப்பா ஹெட் வெய்ட்ன்னு மட்டும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” என நமுட்டு நகை புரிந்தவனை அவள் முறைத்தாள்.

“ஓகே ஓகே சில். எப்படி அவரு நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரு?” எனப் புரியாமல் தீரன் கேட்க, அதில் முகம் வாடினாள்.

வருத்தத்துடன், தந்தை இறந்ததையும், அதன் பிறகு அவர் தொழில் வீழ்ந்ததையும், பின், தன் தொழிலில் அவன் பார்ட்னராக சேர்ந்ததையும் அவள் உரைக்க,

“ஓ! சாரி… இதெல்லாம் ஞாபகத்தில இல்ல. இவ்ளோ நடந்து இருக்கா?” என்றவன், லேசாக கலங்கி இருந்த அவள் கண்கள் கண்டு, அதனை துடைக்க முயன்று கையைத் தூக்க, ஏற்கனவே ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்ததில் வீங்கி இருந்த கரம் சுள்ளென வலித்தது.

அதில், “ஸ்ஸ்…” என வலியை முகத்தில் அப்பட்டமாக காட்டி, கையை கீழே போட்டவனை நோக்கி அவசரமாக விரைந்தவள்,

“என்னாச்சு தீரன். கையை தூக்காதீங்க. பாருங்க. எப்படி வீங்கி இருக்குன்னு. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணாம ரெஸ்ட் எடுங்க.” என்று இயல்பாக தலை தூக்கிய அக்கறையில், அவன் கரத்தை நீவிக் கொடுத்தாள்.

முன் பின் அவளைப் பார்த்த நினைவு அவன் மூளையில் சுத்தமாக இல்லை. ஆனாலும், அவளிடம் பேசவும் பழகவும் உடலிலுள்ள அத்தனை அணுவும் துடித்ததை எண்ணி வியந்தவன், ‘ஒருவேளை இது தான் காதலோ!’ என்ற யோசனையுடனே உறங்கிப் போனான்.

அவனைக் கண்டு பெருமூச்சு விட்டவள், ‘முன்ன எல்லாம் தேவை இல்லாம என்கிட்ட பேச கூட மாட்டாரு. இப்போ என்னன்னா விடாம பேசுறாரு. ஒருவேளை இதான் இவரோட உண்மையான குணமா?’ என முறுவலித்தவள், மீண்டும் கடந்த காலத்திற்கு சென்றாள்.

ராவ்க்கு சொந்தமான ரிசார்ட்டில் வேலைகள் நடைபெறத் துவங்கியது. அந்த சம்பவத்திற்கு பிறகு, அவள் ராவை பார்க்கவும் இல்லை. அதுவே அவளுக்கு திருப்தியைக் கொடுக்க, சிரத்தையாக தொழிலில் மூழ்கினாள்.

ஆனால், அடுத்த பிரச்சனை வீட்டிலேயே முளைத்தது. வினோதினிக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி முடித்த சுலோச்சனா, அதனை சஹஸ்ராவிடம் கூற, அவளுக்கு அது மகிழ்வு என்றாலும் ஒரு நெருடலைக் கொடுத்தது.

“இப்ப நம்ம இருக்குற நிலமைல, பெரிய இடம்ன்னா ரொம்ப எதிர்பார்ப்பாங்களேம்மா.” சஹஸ்ரா தயங்க,

சுலோச்சனா, “ஏன் நம்ம என்ன அப்படி குறைஞ்சு போய்ட்டோம். இந்த வீடு இருக்கு, நீ இப்ப தலைல தூக்கி வச்சு இருக்குற கம்பெனி இருக்கு, இன்னும் உன் அப்பா என் பேர்ல வாங்கி போட்டுருக்குற இடம் இருக்கு” என அடுக்கினார் கோபத்துடன்.

‘எல்லாம் இருக்கு. ஆனா, அதை வித்தா ஒரு மாசத்துல காலி பண்ணிடுவீங்க’ என வாய் வரை வந்தாலும் அதனை விழுங்கிக் கொண்டவள்,

“அதுக்காக எல்லாத்தையும் வித்துட்டு கடைசில ரோட்டுல நிப்பீங்களா? இனிமே தயவு செஞ்சு எதையும் விற்காதீங்க. சவிதா வேற இருக்கா. கொஞ்சம் புருஞ்சு நடந்துக்கோங்க மா.” என தாய்க்கு அறிவுரை கொடுத்தாள்.

அதில் வினோதினி சிலுப்பிக்கொண்டு, “உங்க மக இருக்குற பங்கையும் ஆட்டைய போட பாக்குறாம்மா. இப்ப மேடம் தனியா தொழில்லாம் பண்றாங்கள்ல. அதுல நம்மளை கழட்டி விட பாக்குறாங்க.” என விஷமாய் பேச,

“நிறுத்துக்கா. நான் அப்படிலாம் நினைச்சு இருந்தா, எப்பவோ இங்க இருந்து போயிருப்பேன். நான் நம்ம நல்லதுக்கு தான சொல்றேன்.” என பேசி முடிக்கும் முன்னே,

“என்ன நல்லது? ஹான்? இப்படி ஒரு சம்பந்தம் வந்து இருக்குன்னு ஒரு சின்ன சந்தோசம் கூட இல்ல உனக்கு. பொறாமைல கண்டபடி பேசுற…” என்றாள் அபாண்டமாக.

அவ்வார்த்தையில் சஹஸ்ரா தான் திகைத்து விட்டாள்.

“நான் ஏன் பொறாமை பட போறேன்க்கா. முட்டாள்தனமா உளறாத. இப்ப என்ன, அந்த சம்பந்தத்தையே பேசலாம். எவ்ளோ கேட்டாலும் செய்யலாம்.” என்று பேச்சை முடித்துக்கொண்டாள்.

அடுத்த வாரமே, அவளுக்கு நிச்சயம் என்றான நிலையில், தன்னிடம் இருந்த பணத்தையும் கரைத்து அனைத்தையும் ஏற்பாடு செய்தாள். அதிலும் வினோதினி ஒவ்வொன்றையும் தடபுடலாக திட்டமிட, அதற்கு அவளும் ஒத்துழைக்க வேண்டியதாகப் போயிற்று.

அப்படி செய்யவில்லை என்றால், இருக்கும் வீட்டையும், ஊரைத் தாண்டி எங்கோ இருக்கும் சிறிது நிலங்களையும் விற்று விட்டு, இறுதியில் தன்னுடைய தொழிலிலும் கை வைத்து விடுவார்கள் என்று அறிந்தவளாகிற்றே.

ஆனால், அவள் செலவழித்த பணமெல்லாம் வீண் விரயம் என்பது போல நிச்சயத்திற்கு முன் தினம் வினோதினி அந்த ஏற்பாட்டை நிறுத்தி விட, சஹஸ்ராவிற்கு கோபமே வந்தது.

“உனக்கென்ன பைத்தியமா? இவ்ளோ கஷ்டப்பட்டு ஏற்பாடு செஞ்சதுக்கு அப்பறம் ஏன் நிறுத்துன?” எனக் கேட்க,

“எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கல. என் டேஸ்ட்க்கு அவன் ஒத்து வரமாட்டான்னு தோணுச்சு” என அசட்டையாக கூறினாள்.

“இவ்ளோ நாளா அது உனக்கு தெரியலையா? அப்படி ஒன்னும் அந்த மாப்பிள்ளை செட் ஆகாம இல்ல. உங்கிட்ட கேரிங் – ஆ தான இருந்தாரு.” எனக் கேட்டவளுக்கு ஆத்திரமாக வந்தது.

“இங்க பாரு… எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கல. அவ்ளோ தான். நம்ம அப்பா நான் என்ன கேட்டாலும் வாங்கி தருவாரு. இதுவரை நான் கேட்டு இல்லைன்னு சொன்னதே இல்ல. ஆனா, அவன்…? நான் கேட்ட ஒரு டயமண்ட் நெக்லஸை வாங்கி தர முடியாதுன்னு சொல்லிட்டான். இப்பவே இவ்ளோ கணக்கு பார்த்தா, கல்யாணத்துக்கு அப்பறம்…? நோ வே. எனக்கு இவன் வேணாம்” என்று கூறி விட்டு அடுத்த வேலையை பார்க்க செல்ல, சஹஸ்ராவிற்கு தலை சுற்றியது.

ஏற்கனவே, நிச்சயத்திற்கு சஹஸ்ரா செய்த செலவுகள் மட்டுமன்றி, மாப்பிள்ளை வீட்டிலும் வினோதினிக்கு நகைகள் செய்தனர். ஆனால், அதற்கும் மீறி அவள் கேட்டதற்கு தான் அவன் முடியாது எனக் கூறி இருப்பான் என எண்ணி சோர்ந்தவளுக்கு, ஒன்றும் செய்ய இயலாத நிலை.

‘எல்லாம் இந்த அப்பாவால வந்தது…!’ என காலமான தன் தந்தையை திட்டிக்கொண்டவள், அலுவலகம் செல்ல, அன்று தீரன் வரவில்லை.

அவனிடம் இருந்து அலைபேசி அழைப்பே வந்தது. வெளியில் ஏதோ வேலை இருந்ததில், இன்று அவனின் தம்பி அலுவலகத்திற்கு வருவான் எனக் கூறிட, ‘அய்யயோ’ என்றிருந்தது அவளுக்கு.

ஏற்கனவே அவனைப் பற்றி தேவிகா கூறி இருக்கிறாளே!

‘அவன் வந்தா வந்த வேலையை பார்த்துட்டு போயிடுவான்.’ என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

ஆனால் வந்தவன் தனியாக வரவில்லை. கூடவே ஒரு அழகியையும் துணையாக அழைத்து வந்திருந்தான்.

தேவிகா அவசரமாக சஹஸ்ராவின் அறைக்குள் நுழைந்து, “சஹா சஹா உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா?” எனப் பரபரக்க, அவள் என்னவென்று பார்த்தாள்.

“நான் நினைச்ச மாதிரி அந்த தம்பிக்காரன் வேலையை காட்டிட்டான். இதை ஆபிசுன்னு நினைச்சானா இல்ல ஹோட்டல்ன்னு நினைச்சானான்னு தெரியல…” என புலம்பித் தள்ள, அதன் பிறகே விவரம் அறிந்து அதிர்ந்தாள்.

“வாட் த ஹெல்!” பற்களை நறநறவெனக் கடித்த சஹஸ்ரா, வேகமாக அவன் அறைக்கு செல்ல, அவனோ அப்போது தான், உடன் வந்திருந்த இளம்பெண்ணிற்கு ரசனையுடன் இதழ் ஒத்தடம் அளிக்க ஆயத்தமாகி இருந்தான்.

“ஸ்டாப் திஸ்!” முகத்தில் அருவருப்புடன் அவள் நிறுத்த, “ஹூ இஸ் தி டிஸ்டர்பன்ஸ்.” என எரிச்சலுடன் நிமிர்ந்தவனின் கண்ணில் விழுந்தாள் சஹஸ்ரா.

“கதவை தட்டிட்டு வரணும்ன்னு பேசிக் மேனர்ஸ் தெரியாதா உனக்கு?” அவன் கடுப்பாக கேட்க,

“இது என்னோட ஆபிஸ் மிஸ்டர். இங்க நீங்க உங்க இஷ்டத்துக்கு நடந்துக்குறதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்.” என்றாள் அழுத்தமாக.

அவனோ சுற்றி முற்றி அந்த அலுவலகத்தை பார்த்து விட்டு, “ஆபிஸா… எது இந்த குப்பையா? ஏதோ போனா போகுதுன்னு என் அண்ணன் இதை எடுத்துட்டு நடத்திட்டு இருக்கான். இல்லன்னா, இதோட சேர்த்து உன்னையும் குப்பை தொட்டில தான் போடணும். அண்ட் தென், இதுல பாதி ஷேர் எங்களுக்கும் இருக்கு. மைண்ட் இட்” எனத் திமிராக பேசினான்.

அவன் ‘குப்பை’ என்றதில் அவளுக்கு கோபம் எங்கிருந்து தான் வந்ததோ தெரியவில்லை. அவனை சப்பென அறைந்து விட்டாள். அதனை அவனும் எதிர்பார்க்காதது அவனின் அதிர்ந்து சிவந்த விழிகளிலேயேத் தெரிய, உடன் வந்த பெண்ணோ பயந்து வெளியேறி விட்டாள்.

“ஏய்…” என கர்ஜித்தவன், அதன் பிறகு கேட்ட கேள்வியும் பார்த்த பார்வையும் அவளுக்கு நினைக்க கூட பிடிக்கவில்லை.

‘இவன்லாம் மனுஷ ஜென்மம் தானா? அதுவும் தீரனுக்கு இப்படி ஒரு தம்பியா’ என்றே எண்ணத் தோன்றியது. மறுநாள், தீரன் அலுவலகத்திற்கு வந்ததுமே, அவனை பிடிபிடியென பிடித்து விட்டாள்.

“உங்க அண்ணன் தம்பி உறவையெல்லாம் வீட்ல வச்சுக்கோங்க தீரன். இன்னொரு தடவை அவன் இங்க வந்தான்… நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என கண்டமேனிக்கு திட்டிட,

தீரனோ ஒன்றும் புரியாமல், “ரிலாக்ஸ்! சில் சஹா. இப்ப என்ன ஆகிடுச்சு?” எனக் கேட்டான் பொறுமையாக.

அவள் சிலவற்றை தவிர்த்து நடந்தவற்றை கூறி விட்டு, “நான் உங்க கூட தான் பார்ட்னெர்ஷிப் வச்சு இருக்கேன் தீரன். உங்க தம்பி கூட இல்ல…” என சினத்துடன் உரைக்க, அவன் விழிகளோ அவளை அதிகமாகவே ஆராய்ந்தது.

“இனிமே அவன் இங்க வரமாட்டான் போதுமா?” சிறிதாய் கண்கள் சுருங்க அவன் பார்க்க, ஏனோ அம்மென்மைக்கு பின் கோபத்தை பிடித்து வைக்க அவளால் இயலவில்லை.

இப்போதும் இதழோரம் மென்புன்னகை தாக்க, தீரனின் முகத்தையே பார்த்திருந்தாள். அவனுடன் இருக்கும் நேரம் எப்போதும் ஒரு வித பாதுகாப்பு உணர்வு சூழும். இப்போதும் அந்த உணர்வுடன், வேறு சில உணர்வுகளும் அவளுள் ஆர்ப்பரிக்க, அதனை பிரித்தறியும் வழி தெரியாமல் தவித்தாள்.

அடுத்த இரு நாட்களில், தீரனின் பிடிவாதத்தில் அவனை டிஸ்சார்ஜ் செய்திட, இருவரும் வீட்டிற்கு வந்திருந்தனர்.

தீரனுக்கு தான் இதயம் ஒரு நிலையில் இல்லை. என்ன தான் உடன்பிறந்தவன் மீது சில நேரம் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தாலும், உடன்பிறந்த பாசத்தை எப்போதும் காட்டத் தவறியதில்லை.

பள்ளி படிக்கும் காலத்திலேயே தாய் இறந்திருக்க, தந்தை மறுமணம் செய்து கொண்டு, வெளிநாட்டில் வசிக்கிறார். இவர்களுக்கு சேர வேண்டிய சொத்து மட்டுமே இருவரிடமும் இருந்தது.

வெறும் பணம் மட்டுமே வாழ்க்கைக்கு தேவை இல்லையே! ஆனால், அது மட்டுமே நிரம்பி இருந்த வாழ்க்கையில் இருவரின் திசையும் வெவ்வேறாக இருந்தது. அதிலும், இறுதியாக அவன் செய்து வைத்த குளறுபடிகள் எல்லாம் தீரனின் நினைவிற்கு வந்து விட்டால்? எதையும் சிந்திக்கும் திராணியற்று சோபாவில் சரிந்தான்.

அவன் வேதனையை அவளும் உணர்ந்தே இருந்தாள் தான். இழப்புகளை எதிர்கொள்ளப் பழகத் தானே வேண்டும்! அவனுக்கு ஆறுதல் அளிக்க வார்த்தைத் தேடி அது முடியாமல், “தீரன், ரூம்ல வந்து படுங்க.” என்றாள் மென்மையாக.

“ம்ம்…” என்றவன், கண்ணை மட்டும் திறக்காமல் இருக்க, அவளுக்குத் தான் ஏதோ செய்தது.

‘அவனிடம் இருந்து விலகியே நில்!’ என்ற மனதின் அறிவுரையை ஒதுக்கி விட்டு, மெல்ல சுருங்கி இருந்த அவன் புருவத்தை நீவி விட்டவள், “எல்லாம் சரி ஆகிடும் தீரன்” என்றாள்.

அதற்கு பதில் ஏதும் கூறாதவன், எழுந்து அவன் தம்பியின் அறைக்குள் நுழைய, அங்கோ பெரிய சுவர் முழுக்க அவனது புகைப்படமே இருந்தது. தானாக உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்தவனுக்கு துக்கம் நெஞ்சை அடைக்க, சஹஸ்ராவிற்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

சிறிது நேரத்தில், அவன் அங்கேயே உறங்கியும் விட, அவளுக்குத் தான் அந்த அறைக்கு செல்லக் கூட பிடிக்கவில்லை. என்ன தான், ஒருவரின் இழப்பில் மகிழக் கூடாது என்றாலும், ஒரு அரக்கன் இவ்வுலகில் இல்லை என்பதிலேயே மனம் ஆறுதல் அடைந்தது.

இருப்பினும், உள்ளே சென்றவள், தீரனை எழுப்பினாள்.

சோர்வாக கண்விழித்தவன், சுற்றி முற்றி பார்க்க, “வந்து உங்க ரூம்ல படுங்க தீரன்.” என அழைக்க, அவனோ, “நானும் அவனும் இங்க தான் தூங்குவோம்” என்றான் முணுமுணுப்பாக.

பின் என்ன நினைத்தானோ, எழுந்து விட்டான். அவனை அழைத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றவள், “இங்க இருங்க. நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என்று நகர முற்பட, அவனோ தடுத்தான்.

“கொஞ்ச நேரம் கூடவே இரு சஹி!” என்றவன், அவள் தோள்களில் முகத்தை பதித்து, வாஞ்சையாய் அணைத்துக் கொள்ள, அவளோ வெலவெலத்து விட்டாள்.

“எ… என்ன பண்றீங்க?” சஹஸ்ரா நடுங்கும் குரலில் கேட்க,

“இதென்ன கேள்வி, கட்டிப்பிடிக்கிறேன்.” என்றான் இயல்பாக.

“என்னது?” மிரண்டு அவனை விட்டு விலகியவளை அவன் தான் புரியாத பார்வை பார்த்தான்.

“ஏன் இதுவரை நம்ம ஹக் பண்ணிக்கிட்டது கூட இல்லையா என்ன?” அவன் கேட்ட தொனியில், அவள் மறுப்பாக தலையாட்டினாள்.

“வாட்? லவ் மேரேஜ்ன்னு சொன்ன… இத்தனைக்கும் கல்யாணம் ஆகி பத்து நாள் ஒண்ணா இருந்துருக்கோம்…” என ராகம் பாடியவன், அவளை ஒரு மாதிரியாக பார்க்க அவளுக்கோ அடிவயிறு கலங்கியது.

மறு பதில் கூறத் தெரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு நின்றிருந்தவளைக் கண்டு, ரசனையாக புன்னகைத்தவன், “ஒரு ஹக் கூட இல்லாம நம்ம என்ன லவ் பண்ணோம்? நான் அவ்ளோ தத்தியாவா இருந்துருக்கேன்” என யோசிக்கும் பாவனையுடன் மூக்கை சுருக்கிக் கேட்க,

அவன் பேசிய விதத்தில், அவள் ‘கிளுக்’ என சிரித்து விட்டாள்.

அடுத்ததாக அவன் முறைத்ததில், பட்டென வாயை மூடிக் கொள்ள, அவளை இழுத்து மீண்டும் தோள் வளைவில் முகத்தை புதைத்தவன், “அப்போ ஒழுங்கா லவ் பண்ணலைன்னா என்ன… இப்போ பண்ணலாம் பிரின்சஸ்!” என மெதுவாக அணைத்துக் கொள்ள, சஹஸ்ரா மூச்சு விட மறந்து நின்றாள்.

காதோரம், ஒரு நாள் தீரன் கூறியது தேவையின்றி நினைவு வந்து தொலைத்தது.

“கல்யாணம் ஆனாலும், உனக்கும் எனக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் இருக்க கூடாது. இருக்காது. பாதில நீ டைவர்ஸ் வாங்கிட்டு போனாலும் சரி போகலைன்னாலும் சரி, என்கிட்ட ஹஸ்பண்ட்ன்ற எந்த உரிமையையும் கடமையையும் எதிர்பார்க்காத.” திட்டவட்டமாக அவன் பேசிய வார்த்தைகள்.

இப்போதோ, அவனே காதலாய் அவளை நெருங்க, எந்த எதிர்வினையும் காட்டத் தோன்றாமல் விழித்தாள்.

அவனோ விலகி அவளை போலி முறைப்புடன் பார்த்து வைத்து, “நான் உன்ன ஹக் பண்ணுனா நீயும் பண்ணணும்டி.” என அவள் கன்னம் பற்றி கிள்ளியவன், அவளது கைகளை அவன் முதுகுக்கு பின் பரவ விட்டு, மீண்டும் அவளைக் கட்டிக்கொண்டான் பாந்தமாக.

யாரோ அவள்(ன்)
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
46
+1
108
+1
5
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment