Loading

மாயம் 2

காலைப்பொழுது – அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த தருணம். தன் வெஸ்பாவில் பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த வெண்முகில், அதே பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து வந்து கொண்டிருந்த மாணவிகளை நிறுத்தி இருவர் அவர்களிடம் வம்பு வளர்ப்பதை தூரத்திலேயே பார்த்து விட்டாள்.

கண்டவுடன் உண்டான கோபத்துடன் அவர்களை நெருங்கியவளிற்கு அவர்களின் பேச்சும் செயலும் கோபத்தை அதிகரிக்கவே செய்தது.

“அட என்னமா தள்ளி நிக்குற? வா பக்கத்துல வந்து உன் புக்கை வாங்கிக்கோ.” என்று ஒருவன் வக்கிரமாக சிரிக்க, அவனருகே இருந்த மற்றவனோ, “டேய், நீ அந்த பாப்பாவை கவனி, நான் இந்த பாப்பாவை கவனிக்கிறேன்.” என்று மற்றொரு மாணவியை துகிலுரியும் பார்வை பார்த்து வைக்க, மாணவியர் இருவரும் பயத்தில் அழ ஆரம்பித்தனர்.

“அண்ணா, பிளீஸ் புக்கை குடுங்க. ஸ்கூலுக்கு லேட்டாச்சு ண்ணா.” என்று அவர்கள் கெஞ்ச, “அடடா எதுக்கு இப்படி அழுகுறீங்க? நான் தான் சொன்னேனே பக்கத்துல வந்தா புக்கை குடுக்குறேன்னு.” என்றான்.

இத்தனை நிகழ்வுகளும் மக்கள் நடமாடும் பகுதியில் தான் நடந்து கொண்டிருந்தன. அங்கு வருவோரும் போவோரும் ஓரக்கண்ணில் அதை பார்த்துக் கொண்டு சென்றனரே தவிர உதவிக்கு செல்லவில்லை.

சில மாணவர்கள் அருகில் சென்றாலும் கூட, அவர்களையும் மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தனர் அந்த இருவர்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வெண்முகிலோ மக்களின் சமூக அக்கறையை மனதிற்குள் மெச்சியவாறு (!!!) அவர்கள் அருகே செல்ல, சரியாக அதே சமயம் முதலாமவன், அந்த மாணவியின் கையை பற்றி இழுக்க முயற்சித்தான்.

அதற்கு மேல் பொறுக்காத முகில், ஓரமாக இருந்த உடைந்த செங்கலை தூக்கி அவன் கைகளில் எரிய, வலி தாங்காதவன் சட்டென்று அந்த பெண்ணின் கையை விடுவித்தான்.

வலி தந்த எரிச்சலும், நினைத்தது நடக்காத ஏமாற்றமும் அவனிடம் கோபத்தை விளைவிக்க, “ஏய், யாருடி நீ? இதுங்க என்ன உனக்கு சொந்தமா? மத்தவங்க எல்லாரும் பார்த்தும் பார்க்காத மாதிரி தான போறாங்க. நீ மட்டும் பெரிய ஹீரோயின் மாதிரி ஆஜராகுற?” என்று கத்தினான்.

அவன் கத்துவதை பொருட்படுத்தாமல், அவள் அந்த மாணவிகளிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருக்க, கத்தியவனின் அருகே இருந்தவனோ, “மச்சி, வாடா போயிடலாம்.” என்றான்.

“ஹே என்னடா பொட்டச்சிக்கு பயந்து ஓட சொல்றியா? ஏதோ தேவதை மாதிரி அவங்களை காப்பாத்த வந்தால, இப்போ அவ கையை பிடிச்சு இழுக்குறேன், என்ன பண்றான்னு பார்ப்போம்.” என்று கூறியபடி திரும்பியவன் கண்டது, குரோதத்தில் தன்னை சுட்டெரிக்க காத்திருக்கும் விழிகளை தான்.

அவற்றை கண்டவனின் தேகம் அதிர, திகைத்த நிலைக்கு சென்ற காமுகன், இப்படி ஒரு பெண்ணின் கண்களை பார்த்து பயப்படுவான் என்று சற்றும் நினைத்திருக்க மாட்டான்.

“என் கையை பிடிச்சு இழுத்துருந்தா வெட்டியிருப்பேன்.” என்று அடிக்குரலில் கூறியவள், அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்து, “ஆம்பளைங்கிற திமிருல தான இப்படியெல்லாம் ஆடுறீங்க?” என்று எள்ளலாக கூறி, மின்னலென தன் ஒரு காலை முட்டிவரை மடக்கி எதிரிலிருந்தவனின் உயிர்நாடியை இடித்தாள்.

சட்டென்று நிகழ்ந்ததால் ஒன்றும் புரியாதவனிற்கு, வலி அனைத்தையும் புரிய வைத்திட, அலறியவாறு கீழே சரிந்தான்.

“எவ்ளோ தைரியம் இருந்தா என் ஸ்கூல் பொண்ணுங்க கிட்டயே வம்பிழுப்பீங்க? இனிமே, பொண்ணுங்களை தப்பான முறையில நெருங்கணும்னு நினைச்சா இந்த அடி தான் ஞாபகம் வரணும். இன்னொரு தடவை இங்க சுத்திட்டு இருந்தீங்க, வார்னிங் எல்லாம் குடுக்க மாட்டேன், டிரெக்ட்டா பனிஷ்மெண்ட் தான்.” என்று கூறிவிட்டு அந்த மாணவிகளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

*****

வாகனம் ஜெட் வேகத்திலும் இல்லாமல், ஆமை வேகத்திலும் இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட்ட வேகத்தில் சென்று கொண்டிருக்க, ஓட்டுநர் இருக்கைக்கு அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ஹரிஹரனோ ரியர் வியூ மிரரை தன் முகம் தெரியும்படி திருப்பி, தன் மீசையை முறுக்கிக் கொண்டிருந்தான்.

அவனின் செயல்களை இன்னதென்று வகைப்படுத்த முடியாத பாவனையுடன் அவ்வபோது ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தான் அலெக்ஸ் பாண்டியன்.

“என்ன அலெக்ஸா நான் அழகா இருக்கேனா?” என்று ஹரிஹரன் வினவ, சட்டென்று பிரேக்கை அழுத்தியிருந்தான் ஹரிஹரனால் ‘அலெக்ஸா’ எனப்பட்டவன்.

அவனின் அதிர்ச்சி ‘அலெக்ஸா’ என்ற விளிப்பினாலா இல்லை அதற்கடுத்த கேள்வியினாலா என்பது அவன் மட்டுமே அறிந்தது.

“ப்ச், எதுக்கு இப்படி பிரேக் போட்ட?” என்று ஹரிஹரன் வினவ, என்ன சொல்வதென்று தெரியாமல், “அது சார்… நாய் ஒன்னு குறுக்க வந்துடுச்சு.” என்று சமாளிக்க முயன்றான்.

“ஓஹ்! யாரை சொன்ன?” என்று ஹரிஹரன் வினவ, “சார்!” என்று திடுக்கிட்டவன், “சார் நாயை… நாயை தான் சொன்னேன்.” என்று பாவமாக கூறினான் அலெக்ஸ்.

“ஏன்யா பதறுர? நான் என்ன என்னை சொன்னன்னா சொன்னேன்?” என்று நிறுத்திய ஹரிஹரன், அவன் புறம் திரும்பி, “என்னை சொல்லலைல?” என்று விஷமம் நிறைந்த குரலில் வினவினான்.

அதை உணராத அலெக்ஸோ, வேகமாக இல்லை என்று தலையசைத்தான்.

அவனின் பாவனைகளால் உண்டான சிரிப்பை மறுபுறம் திரும்பி அடக்கிய ஹரிஹரனின் பார்வையில் விழுந்தது அந்த காட்சி.

பள்ளி மாணவிகளை இருவர் வம்பிழுப்பதைக் கண்டவன் அலெக்ஸிடம், “என்னய்யா பிரச்சனை அங்க?” என்று வினவ, பதட்டத்தில் இருந்தவனோ, “தெரியல சார்.” என்றான்.

“அப்போ இங்கேயே உட்கார்ந்திருந்தா என்னன்னு தெரிஞ்சுடுமா? போய் என்னன்னு பாரு மேன்.” என்று கட்டளையிட, அப்போது தான் நிகழ்விற்கு வந்த அலெக்ஸோ, “நானா சார்?” என்றான்.

“பின்ன நானா? இன்னும் என்ன மேன் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க?” என்று ஏகவசனத்தில் பேச ஆரம்பிக்க, ‘காலைலயே இப்படியா?’ என்று தன் விதியை நொந்தபடி இறங்கிச் சென்றான் அலெக்ஸ்.

அதற்குள் ஒரு பெண் அந்த மாணவியை தன்புறம் இழுப்பதைக் கண்டான் ஹரிஹரன்.

பலர் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, தையலின் துணிச்சலைக் கண்டவன், தன்னிச்சையாக வாகனத்திலிருந்து கீழே இறங்க, அடுத்து அவள் செய்ததைக் கண்டு ‘அட!’ என்று அவனின் உதடுகள் முணுமுணுத்தன.

அவள் அந்த மாணவிகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அறியவில்லை, அடுத்தடுத்து அவளை சந்திக்கும்போது எல்லாம், இதே ‘அட’க்களை பலமுறை அவன் சொல்லப்போவதை.

அலெக்ஸ் பாண்டியனோ, அந்த இருவரையும் விசாரித்துக் கொண்டிருக்க, சுயத்தை அடைந்த ஹரிஹரனும் அங்கு சென்றான்.

கீழே விழுந்தவன் இன்னும் எழாமல் இருக்க, மற்றொருவன் புறம் திரும்பிய ஹரிஹரன், “என்னாச்சு? என்ன பிரச்சனை?” என்று வினவினான்.

அவனோ தயக்கத்துடன் நடந்ததை கூற, “ஓஹ்…” என்று தாடையை தடவியவன், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சப்பென்று எதிரிலிருந்தவனை அறைந்திருந்தான்.

“பொண்ணுங்களை வம்பிழுக்குறதே தப்பு, அதை தைரியமா என்கிட்டயே சொல்றியா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஹரிஹரன் வினவ, ‘நீதானய்யா கேட்ட?’ என்பது அடி வாங்கியவனின் மனக்குரல் மட்டுமல்ல, அலெக்ஸினுடையதும் கூட!

அதை கண்டுகொண்டவனாக அலெக்ஸின் புறம் திரும்பி, “என்ன அலெக்ஸா? தப்பு பண்ணது ரெண்டு பேரு. ஒருத்தனுக்கு மட்டும் தண்டனை குடுத்தா எப்படி?” என்று புருவம் உயர்த்தி வினவ, ‘ஆம்’ என்றே  தலையசைக்க முடிந்தது அலெக்ஸினால்.

“அப்பறம் அலெக்ஸா, ரெண்டு பேரையும் வண்டியில ஏத்து. ஸ்டேஷன் போய் இன்னும் கொஞ்சம் கவனிக்கலாம்.” என்றபடி ஹரிஹரன் முன்னே செல்ல, அவன் சொல்லியதை செய்ய ஆரம்பித்தான் அலெக்ஸ்.

கூடவே சிறு முணுமுணுப்பும்!

“நான் என்னமோ இவரோட பொண்டாட்டி மாதிரி செல்லப்பேரு வச்சு அதை ஏலம் போட்டுட்டு இருக்காரு! அலெக்ஸாவாம் அலெக்ஸா!” என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்பியவனிற்கு, இதயத்துடிப்பு ஒரு நொடி நின்று தான் போனது.

அங்கு கைகளை கட்டிக்கொண்டு அலெக்ஸையே தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.

“சார்… அது…” என்று ஏதோ கூற வந்த அலெக்ஸை இடைவெட்டியவன், “அது என்ன எல்லாருக்கும் என் பொண்டாட்டி போஸ்டிங் மேலேயே கண்ணா இருக்கு?” என்று சம்பந்தமில்லாமல் வினவ, அலெக்ஸோ என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்தான்.

*****

‘பள்ளி தாளாளர்’ என்று பொறிக்கப்பட்டிருந்த அறைக்குள் வேகமாக நுழைந்தான் வாசுதேவ்.

“முகில் முகில்” என்று அவன் பரபரக்க, அவன் எதற்காக இப்படி வந்திருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டது போல, “ஷ், எதுக்கு இப்படி பரபரக்குற?’ என்று கையிலிருந்த கோப்பிலிருந்து பார்வையை அகற்றாமலேயே வினவினாள் வெண்முகில்.

“ஏன்னா நீ செஞ்சு வச்சது அப்படி! கொஞ்ச நேரம் இல்லாம போயிட்டேன், அதுக்குள்ள அடிதடில இறங்கியிருக்க.” என்று வாசு புலம்ப, “அந்த பொறுக்கிங்களை அடிக்காம கொஞ்சுவாங்களா? எவ்ளோ தைரியம் இருந்தா, என் மேல கையை வைப்பேன்னு சொல்லுவான்.” என்று கோபம் தெறிக்க கேட்டாள்.

“ஹ்ம்ம், அவன் வாயில வாஸ்து சரியில்ல போல.” என்று மெதுவாக முணுமுணுத்த வாசு, “போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணியா என்ன?” என்றான். அவன் மனமோ, ‘இவளுக்கு போலீஸ்னாலே ஆகாதே. இவ எப்படி சொல்லியிருப்பா?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தது.

அதையே அவளின் சுழித்த புருவமும் கூர்ப்பார்வையும் அவனிடம் வினவியது.

அவளின் கேள்வியை புரிந்து கொண்டவனாக, “இல்ல, நீ போனதுக்கு அப்பறம் போலீஸ் வந்து அந்த ரெண்டு பேரையும் அரஸ்ட் பண்ணிட்டு போனதா வாட்ச்மேன் அண்ணா சொன்னாரு. அதான் நீ எதுவும் கம்பலைன்ட் குடுத்தியான்னு கேட்டேன்.” என்று கூறும்போதே அவளாக இருக்காது என்று தோன்றியது வாசுவிற்கு.

அதை கண்டுகொள்ளாதவளாக தன் வேலைகளில் அவள் மூழ்கிப்போக, வாசுவோ ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

*****

காவல்நிலையத்திற்கு வந்த ஹரிஹரனை கண்டதும் அங்கிருந்த அனைவருமே கப்சிப்பாகி போயினர். காரணம், அவனிடம் மாட்டிவிட கூடாது என்பதாலேயே.

வந்த ஒரு வாரத்திலேயே அங்கிருந்த அனைவரையும் படுத்தியெடுத்து விட்டானே.

நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்த்து விடுவதை போல, வந்த அன்றே அனைவரையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகளால் துளைத்தெடுத்து, அவர்களை ‘போலீஸ் வேலைக்கே வந்துருக்க கூடாது!’ என்று புலம்பும் வண்ணம் லீலைகளை செய்திருந்தான் ஹரிஹரன்.

அப்படி அனைவரையும் அலற வைத்து தேடி எடுத்த வழக்குகளில் ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டு ஒரே ஒரு வழக்கை விசாரிக்க சொல்லி, வந்த அன்றே அனைவரின் கடுப்பையும் சம்பாதித்துக் கொண்டான்.

அப்போதிலிருந்தே அனைவரும் அவனிடம் எச்சரிக்கையாக இருக்க, மாட்டிக்கொண்டது என்னவோ அலெக்ஸ் தான்.

“என்ன அலெக்ஸா, எல்லாரும் அமைதியா இருக்காங்க?” என்று ஹரிஹரன் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய, “க்கும், எல்லாம் உங்க மேல இருக்க பயம் தான்.” என்று முணுமுணுத்தவன், பின் எங்கு இதையும் கேட்டு விட்டானோ என்று பதறினான்.

அவன் வயிற்றில் பாலை ஊற்றுவது போல, வழக்கு விஷயமாக மற்றொரு காவலரிடம் பேச சென்று விட்டான் ஹரிஹரன்.

அலெக்ஸோ ஒரு பெருமூச்சுடன், அவர்கள் பள்ளியின் வெளியே இருந்து அழைத்து வந்த இருவரையும் விசாரித்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில் உரையாடலை முடித்துவிட்டு வெளிவந்த ஹரிஹரன், அலெக்ஸ் விசாரித்துக் கொண்டிருந்த இருவரிடமும், “இனி எந்த பொண்ணு கிட்டயாவது பேசிட்டு இருந்ததை பார்த்தேன், அங்கேயே என்கவுண்டர் பண்ணிடுவேன்.” என்று மிரட்டி அனுப்பி வைத்தான்.

பின்னர் அலெக்ஸிடம், “எனக்கு ஒருத்தரை பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணனும்.” என்று அவன் கூற, அலெக்ஸும் ஏதோ வழக்கு சம்பந்தமாக இருக்கக்கூடும் என்று ஆர்வமாக, “யாரை பத்தின டீடெயில்ஸ் சார்?” என்றான்.

“அந்த ரெண்டு பேரையும் அடிச்சுட்டு போன பொண்ணை பத்தின டீடெயில்ஸ்.” என்று ஹரிஹரன் கூற, அலெக்ஸோ ‘பே’வென்று விழித்துக் கொண்டிருந்தான்.

*****

வெண்முகிலின் வீட்டில்… நாகேந்திரனின் ஒன்றுவிட்ட சகோதரன் கதிர்வேலன் வந்திருக்க, நீண்ட நாள் கழித்து சகோதரனை பார்த்த மகிழ்வில் அவரிடம் பேசிக் கொண்டிருந்தார் நாகேந்திரன்.

“அண்ணே, எவ்ளோ நாளாச்சு உங்களை பார்த்து? ஒருவாட்டி நம்ம ஊருக்கு வந்துட்டு போறது. முன்னாடி தான் பள்ளிக்கூடத்த பாத்துக்கணும், வட்டி காசு வாங்கணும், கடை வாடகை வசூலிக்கணும்னு இங்கனயே இருந்துட்டீங்க. இப்போ தான் எல்லாத்தையும் நம்ம பாப்பா பாத்துக்குதாமே. அப்பறம் என்ன அங்குட்டு வர வேண்டியது தான?” என்று கதிர்வேலன் வினவ, “வரணும் தான் கதிரு. என்னதான் பாப்பா பார்த்துகிட்டாலும், ஏதாவது பிரச்சனையின்னா நம்ம தான கூட இருக்கணும். ஆனா, முகிலு என்னமா பாத்துக்குது தெரியுமா? வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு அது பேசுறப்போ நானே திகைச்சு போய் தான் நிக்குறேன்.” என்று தன் மகளின் அருமை பெருமைகளை கூறிக் கொண்டிருந்தார் தந்தை.

“அட, பொண்ணு புகழை பாடனும்னா அண்ணனுக்கு சோர்வே இருக்காது போல. ஆனா அண்ணே..” என்று கதிர்வேலன் இழுக்க, “என்கிட்ட சொல்ல என்ன தயக்கம் கதிரு?” என்றார் நாகேந்திரன்.

“அண்ணே அது வந்து… ஏற்கனவே, நம்ம பாப்பா கூடவே சுத்துற பையனோட தொடர்புபடுத்தி ஊருக்குள்ள நாலு பேரு நாலு விதமா பேசிட்டு திரியிறாங்க. இதுல நம்ம பாப்பா வேற அடிதடின்னு…” என்று அவர் இழுக்க, “என்ன கதிரு சொல்ற?” என்று வினவிய நாகேந்திரனின் குரல் கடுமையாக ஒலித்தது.

“அண்ணே, கோவப்படாம கேளுங்க. நம்ம பாப்பா நடுரோட்டுல ஒரு பையனை போட்டு அடிச்சுட்டு இருந்துச்சு…” என்று அவர் கூறும்போதே, அதற்கு காரணமானவள் அங்கு பிரசன்னமானாள்.

“நான் அடிச்சதை மட்டும் தான் பார்த்தீங்களா சித்தப்பா? அதுக்கு முன்னாடி அவன் செஞ்சதை பார்க்கலையா?” என்றபடி உள்ளே நுழைந்தாள் வெண்முகில்.

அவளைக் கண்டதும் வந்தவர் கப்சிப்பென்று அமைதியில் மூழ்கிவிட, அவர் பேசியதற்கு எதிர்வினையாற்றாமல் விடுவாளா அவள்?

“ஓஹ், நீங்க பார்க்கல போல இருக்கு. அந்த நாய் ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்க கிட்ட தப்பா பேசி உரசிட்டு இருந்தான்.” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற, “பாப்பா, என்ன இது?” என்று கண்டித்தார் அவளின் தந்தை.

“சாரி ப்பா, நாயினு சொல்லியிருக்க கூடாது. அது நாய்க்கு தான் அவமானம்! இதுங்க எல்லாம் என்ன மாதிரி ஜென்மங்களோ!” என்றவள் அங்கு நடந்ததை கூறினாள்.

“என் ஸ்கூல் பொண்ணுங்களுக்கு நான் தான பாதுகாப்பு குடுக்கணும். நான் பண்ணது தப்பா சித்தப்பா?” என்று கதிர்வேலனிடமே கேட்டாள் வெண்முகில்.

கதிர்வேலனிற்கு வெண்முகிலை பார்த்தாலே சிறுபயம் உள்ளுக்குள் ஏற்படும். அதனாலேயே, அவள் இல்லாத நேரம் அண்ணனை பார்க்க வந்திருந்தார். வந்த இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், தந்தையிடம் மகளை பற்றி சொல்லி விட்டார். அவள் திடீரென்று அங்கு வருவாள் என்று அவர் என்ன கனவா கண்டார்?

இப்போது என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் கூறியதற்கு தலையை மட்டும் அசைத்து வைத்தார்.

அதற்கு மேல் அங்கிருந்தால் மீண்டும் வெண்முகிலின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்குமென்று நினைத்த கதிர்வேலன், “சரி அண்ணே, ஊருக்கு போற பஸ்ஸை பிடிக்கணும். நான் கெளம்புறேன்.” என்றார்.

அவர் வெளியேறியதும், “ப்பா, ஹாஸ்பிடல் போகணும்னு சொன்னேன்ல. வாங்க கிளம்புவோம்.” என்று நாகேந்திரனை கிளம்ப சொல்லியவள், வெளியே வந்து பார்க்க, கதிர்வேலன் செருப்பை மாட்டிக் கொண்டிருந்தார்.

அவரை நோக்கி, “சித்தப்பா…” என்று அவள் அழைக்க, தான் வந்த வேலை முடியாது போனதால் ஒருவித ஏமாற்றத்துடனும், யோசனையுடனும் இருந்தவரை அந்த அழைப்பு தடுத்து நிறுத்தியது.

“சித்தப்பா, நீங்க எதுக்காக இங்க வந்தீங்க, யாரு சொல்லி இங்க வந்தீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அப்பறம் அந்த ‘நாலு பேரு நாலு விதமா’ பேசுவாங்களே, அவங்களையும் பத்திரமா இருக்க சொல்லுங்க. இல்லன்னா, நாலு விதமா பேச அவங்களே இருக்க மாட்டாங்க!” என்று அவள் கேலியாக கூற, அந்த தொனியே அவருக்கு பயத்தை விளைவித்திருந்தது.

நெற்றியில் துளிர்த்து வியர்வையை பதட்டமாக துடைத்துக் கொண்டே, “அப்படியெல்லாம் இல்ல பாப்பா. உங்க அத்த தான்…” என்று சமாளிக்க முயன்றவரை கைநீட்டி தடுத்தவள், “எனக்கு எந்த விளக்கமும் தேவையில்ல. அப்பறம் இதையும் உங்க ஒன்னு விட்ட அக்கா குடும்பத்து கிட்ட சொல்லிடுங்க. என் வழியில வராத வரைக்கும், நானும் அவங்களை கண்டுக்க மாட்டேன். ஆனா, என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வச்சா கூட, அவங்க பல அடிகள் சறுக்கி விழற மாதிரி செஞ்சுடுவேன்.” என்று கர்ஜனையாக கூறியவள், எதிரில் பயந்து போய் நின்றவரை நோக்கி வெளியே செல்லுமாறு கை காட்டினாள்.

மாயங்கள் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்