Loading

அந்த அரை மணி நேரம் முழுமையாக முடிந்து விட்ட பிறகுத் தனது அலுவலகத்திற்குச் செல்லும் சமயம் வந்து விட்டதை உணர்ந்தவனோ, அறைக்குள் சென்று உடை மாற்றி விட்டு வந்தவனுக்கு,

 

அதற்குப் பிறகுத் தான், தன்னுடைய மனைவிக்காக வாங்கிய பரிசுப் பொருளை அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும் என்ற விஷயம் ஞாபகம் வந்தது.

 

அதனால், யக்ஷித்ராவிற்குத் தெரியாத, அவள் அடிக்கடி பயன்படுத்தாத, பார்க்காத இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அந்தப் பொருளை மறைத்து வைத்து விட்டான் அற்புதன்.

 

தன் பெற்றோரிடம் விடைபெற்றுக் கொண்டவனோ,

 

“யக்ஷூ! நான் கிளம்பிட்டேன். வந்து கதவலச் சாத்திக்கோ” என்று தன் மனைவியை அழைக்கவும்,

 

வீட்டினுள் இருந்து வந்தவளோ,”போயிட்டு வாங்க” என்று அவனிடம் சொல்லி விட்டு, கணவன் தனது வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றதும், கதவைச் சாற்றி விட்டு உள்ளே போனவளோ,

 

நிவேதிதாவிற்கு வாங்கிய பரிசுப் பொருட்களைத் தன் தங்கையின் செல்பேசிக்குப் புலனத்தில் அனுப்பி வைத்தாள் யக்ஷித்ரா.

 

அதைப் பார்த்த யாதவியோ,’வாவ் க்கா! நல்லா தேடித் தேடிப் பார்த்து வாங்கிட்டு வந்து இருக்கப் போலவே?’ என்று அவளிடம் குறுஞ்செய்தியில் வினவினாள் யாதவி.

 

‘ஆமாம் டி. அவளுக்குப் பிடிச்சதையும், நான் அவளுக்குத் தரனும்ன்னு ரொம்ப நாளாக யோசிச்சு வச்சு இருந்ததையும் வாங்கி இருக்கேன்’ என்று பெருமிதத்துடன் அனுப்பியவளிடம்,

 

‘இதையெல்லாம் எந்தக் கடையில் வாங்கின?’ என்று அவளிடம் விசாரித்தாள் அவளது தங்கை.

 

அதற்கு, அவள் அந்தப் பொருட்களை வாங்கிய கடையின் பெயரைத் தங்கையிடம் தெரிவித்தாள் யக்ஷித்ரா.

 

‘அப்போ நாமளும் ஒரு தடவை அங்கே போயிட்டு வருவோம் க்கா’ என்றாள் யாதவி.

 

‘ஓகே’ என அவளுக்கு அனுப்பி வைத்து விட்டாள் அவளது தமக்கை.

 

தன்னுடன் பள்ளியில் பயின்ற உயிர்த் தோழியாகிய யக்ஷித்ராவிடம் செல்பேசியில் உரையாடியதைப் பற்றித் தன் கணவனுக்கு அழைத்து விவரித்துக் கூறினாள் நிவேதிதா.

 

அதற்கு,”ம்ம். நாங்க ஊரில் இருந்திருந்தால் உன் கூட வந்து இருப்போம்” என்றான் அவளது கணவன் சுகந்தன்.

 

“ஆமாம் ங்க. இன்னொரு தடவை போகும் போது குடும்பமாகப் போய் யக்ஷியைப் பார்த்துட்டு வந்துடலாம். சரியா?” என்று அவனிடம் வினவினாள் நிவேதிதா.

 

“சரிம்மா” என்று பதிலளித்தவனிடம்,

 

“சாப்பிட்டீங்களா? இன்னுமா வொர்க் முடியலை? எப்போ வீட்டுக்கு வருவீங்க?” என்று ஏக்கத்துடன் கேள்விகளை அடுக்கினாள் அவனது மனைவி.

 

“எனக்குமே எப்போடா எல்லாம் முடியும்ன்னு இருக்கு ம்மா. நீ உன் ஃப்ரண்டைப் பார்த்துட்டு வா நிவி. அதுக்கப்புறம், நானும் ஊருக்கு வரப் பார்க்கிறேன்” என அவளிடம் சொல்லிச் சமாதானப்படுத்தினான் சுகந்தன்.

 

“அப்படியே நம்மப் பசங்களையும் கூட்டிட்டு வந்து கூட வச்சுக்கலாம்ன்னுப் பார்க்கிறேன் ங்க” என்று தங்கள் மகன்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையையும் அவனிடம் வெளிப்படுத்தினாள் நிவேதிதா.

 

“நான் இங்கேயிருந்து சீக்கிரம் கிளம்பி ஊருக்கு வர்ற மாதிரி சூழ்நிலை அமைஞ்சா நானே நம்மப் பசங்களை ஊரிலிருந்து அழைச்சிட்டு வந்துட்றேன் ம்மா. நான் வர்றதுக்கு லேட் ஆச்சுன்னா நீயே போய்க் கூட்டிட்டு வா” என்று அவளுக்கு அறிவுறுத்தினான் அவளது கணவன்.

 

“சரிங்க. நீங்க வேலையில் மட்டும் கவனத்தை வச்சிட்டுச் சரியாகச் சாப்பிடாமல் இருக்காதீங்க” என்ற அனுசரணையான வார்த்தைகளைக் கூறி விட்டு அந்த அழைப்பைத் துண்டித்து விட்டவளுக்குத் தனது இரண்டு மகன்களைப் பற்றிய ஞாபகம் வந்து விட்டது.

 

அதனால், அவர்களது தாத்தா, பாட்டிக்கு அழைத்து அவர்களுடனும் சிறிது நேரம் அளவளாவி விட்ட பிறகுத் தான் செல்பேசியை அணைத்துக் கீழே வைத்தாள் நிவேதிதா.

 

தாங்கள் இருவரும் நேரில் சந்திக்கப் போகும் நாள் நெருங்கி விட்டதை உணர்ந்த தோழிகளோ, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.

 

“நீ ஊரிலிருந்து தனியாக கிளம்பி வரப் போற! அதனால், பார்த்துப் பத்திரமாக வா நிவி” என்று அவளிடம் வலியுறுத்தினாள் யக்ஷித்ரா.

 

“பக்கத்து ஊர் தானே? நான் சேஃப் ஆக வந்துடுவேன் ம்மா” 

 

“அப்படியே இருந்தாலும் உன்னோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம் நிவி!”

 

“சரிம்மா தாயே! அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை உனக்கு மெசேஜ் பண்ணித் தகவல் சொல்றேன். ஓகே யா?” என்று அவளுக்கு வாக்குறுதி அளித்தாள் நிவேதிதா.

 

“ம்ஹ்ம்‌. ஓகே!” என்றவளோ,

 

“எந்தப் பஸ்ஸைப் புக் (பதிவு) செஞ்சு இருக்கிற?” என்று அவளிடம் வினவினாள் யக்ஷித்ரா.

 

அதற்கான பதிலைக் கூறியவுடன்,”உன்னோட டிக்கெட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்பி விடு” என்க,

 

உடனே அதையும் செய்து முடித்தவளுக்கு தோழியின் இந்த நடவடிக்கைகளைக் கண்டு உள்ளம் பூரித்துப் போனது.

 

ஏனென்றால், தாங்கள் இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவள் தான் யக்ஷித்ராவைக் காபந்து செய்யும் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இப்பொழுது, தன் மீதான அவளுடைய பொறுப்புணர்வை எண்ணுகையில் நிவேதிதாவிற்கு வியப்பாகவும், பெருமையாகவும் இருந்தது.

 

“ஓகே நிவி. நீ நைட் கிளம்பி அங்கே போய்ச் சேர்ந்ததும் கால் பண்ணு” என்று கூறி விட்டு வைத்தாள் யக்ஷித்ரா.

 

தன்னுடைய ஒரு செட் உடையையும், பேஸ்ட், ப்ரஷ் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்து தன்னுடைய பயணப் பெட்டியில் அடுக்கிய நிவேதிதாவோ, எந்தக் காரணத்தைக் கொண்டும் மறக்காமல் தனது தோழிக்காக தேடியலைந்து வாங்கிய பரிசையும் அதனுள் பொருத்தினாள்.

 

அடுத்த நாள் இரவில், தான் ஊருக்குப் போவதற்காகப் பதிவு செய்திருந்தப் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டு, தன்னுடைய கணவன் மற்றும் தோழிக்கு அந்தத் தகவலைத் தெரிவித்தாள் நிவேதிதா.

 

அதைத் தன் தங்கை யாதவிக்குக் குறுந்தகவல் அனுப்பி வைத்து விட்டாள் யக்ஷித்ரா.

 

பேருந்துப் பயணம் என்றில்லை, வேற எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும், இரவு நேரத்தில் மிகுந்த பாதுகாப்பு உணர்வுடன் இருக்க வேண்டும்.

 

ஏனெனில், அந்தச் சமயத்தில் பல அசம்பாவிதங்களால் நடக்க வாய்ப்பிருக்கிறது.

 

அதை எண்ணிப் பார்க்கையில் நிவேதிதாவிற்குக் கொஞ்சம் பயமாகவும், பதட்டமாகவும் தான் இருந்தது. 

 

அதனால், அவற்றை மறக்கடிக்க அல்லது தற்காலிகமாக அதையெல்லாம் தன் மனம் நினைப்பதை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.

 

எனவே, அதற்கு ஒரு சில வழிகள் இருந்தது. தன் செல்பேசியில் இருக்கும் ஏதாவது ஒரு படத்தைப் பார்க்க வேண்டும். இல்லையெனில், உறக்கத்தை மேற்கொள்வது, அதுவும் முடியவில்லை என்றால், ஏதாவதொரு கடந்த கால விஷயத்தையோ, நிகழ்வையோ எண்ணிப் பார்த்து அசை போடுவது இவையெல்லாம் தான் அவளுக்குத் தெரிந்த வழிகளாக இருந்தது.

 

முதல் முதலாகத் தான் பள்ளியில் சேர்ந்த போது தனக்கென்று தோழிகள் கிடைப்பார்கள் என்ற ஆவலுடன் இருந்தாள் நிவேதிதா.

 

அவள் ஆசைப்பட்டபடியே அவளுக்குத் தோழிகள் கிடைத்தார்கள் தான்! ஆனால், அவர்கள் யாவரும் தத்தமது நெருங்கிய நண்பிகளுடன் தான் எந்நேரமும் பேசிக் கொள்வார்கள்.

 

அந்தச் சமயத்தில் தான், தனது வகுப்பில் இருக்கும் யக்ஷித்ரா என்ற மாணவியைப் பார்த்தாள்.

 

ஆனால் அவளோ, யாரிடமும் பேசாமல் தன்னுடைய புத்தகத்தில் மூழ்கி இருந்தாள். அதனால், அவளிடம் சென்று பேசலாம் என்ற அவளது எண்ணத்தைக் கை விட்டு விட்டாள் நிவேதிதா.

 

அதற்குப் பிறகு வந்த நாட்களிலும் கூட, யக்ஷித்ராவின் நடவடிக்கைகளும், செய்கைகளும் இவளது கவனத்தை ஈர்த்தது.

 

அவள் யாரிடமும் பேசவும் இல்லை, பேச முயற்சிக்கவும் இல்லை என்பதையும் அறிந்து கொண்டவளோ, 

 

அவளிடம் சென்று,”ஹாய்!” எனப் பேசத் தொடங்கினாள் நிவேதிதா.

 

தன்னிடம் வந்து இப்படி பேசுவது யார் என்று கழுத்தை உயர்த்தி முகத்தை நிமிர்த்தி ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்தாள் யக்ஷித்ரா.

 

அதைக் கண்டு கொண்டவளோ,”என் பேர் நிவேதிதா!” என்று கூறிப் புன்னகைக்க,

 

“ஓஹ். என் பேர் யக்ஷித்ரா” என்றாள்.

 

“உங்கப் பேர் ரொம்ப நல்லா இருக்கு” என்று அவளிடம் கூறவும்,

 

“தாங்க்ஸ்” எனப் பதில் வந்தது.

 

“நீங்க ஏன் எப்பவும் தனியாகவே உட்கார்ந்து இருக்கீங்க?” என்று அவளிடம் விசாரித்தாள் நிவேதிதா.

 

“என் கூடப் பேசுறதுக்கு யாரும் முன் வரலை போல” என இயல்பாகப் பதிலளித்தவளை ஆச்சரியத்துடன் பார்த்தவளோ,

 

“ஏன் அப்படி? அப்போ உங்களுக்கு இந்தக் கிளாஸில் எந்த ஃப்ரெண்ட்ஸூம் இல்லையா?” என்றவளிடம்,

 

“ம்ம். ஆமாம்” என்று இப்பொழுதும் சாதாரணமாக கூறியவளைக் கண்டு வியப்படைந்து போய்,

 

“நீங்க ரொம்ப படிப்பாளின்னு நம்மக் கிளாஸ்மேட்ஸ் சொன்னாங்க” என்று அவளிடம் இன்னும் பேச்சுக் கொடுத்தாள் நிவேதிதா.

 

“அப்படியா? நான் பார்த்த அளவுக்கு நீங்க தான் ரொம்ப படிப்ஸ்ன்னுத் தெரிஞ்சிக்கிட்டேன்”

 

“பார்றா! என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!” என்று கூறிச் சிரித்தவளிடம்,

 

“நான் யார் கூடவும் பேசுறது இல்லைன்னாலும் கிளாஸில் என்னென்ன நடக்குதுன்னுக் கவனிச்சுத் தெரிஞ்சிப்பேன்” என்று அவளுக்கு விளக்கிக் கூறினாள் யக்ஷித்ரா.

 

“ம்ஹ்ம். சூப்பர்!” என்று அவளைப் பாராட்டி விட்டு,

 

“நாம ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் ஆகிடலாமா? எனக்கும் இங்கே அவ்வளவாக எந்த ஃப்ரெண்ட்டும் கிடைக்கலை” என்று அவளிடம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வினவினாள் நிவேதிதா.

 

அவளது இந்தக் கேள்வியும், எதிர்பார்ப்பும் யக்ஷித்ராவின் வெற்றிடம் நிறைந்த மனதை அசைத்துப் பார்த்து விட்டது போலும்.

 

எனவே, முதல் முறையாகத் தன்னைத் தேடி வந்து, தன்னுடைய நட்பைப் பெற விரும்பும் இந்தப் பெண்ணிடம் முகத்தைத் திருப்புதல் ஆகாது என்று முடிவெடுத்தவளோ,

 

“ஓகே” என்று கூறி அவளது கோரிக்கையை ஏற்றுக் கொண்டாள் யக்ஷித்ரா.

 

“தாங்க்யூ” என்றவளோ, அவளுடன் உட்கார்ந்து கொண்டுத் தன்னைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியவளோ,

 

ஆனால், யக்ஷித்ராவைப் பற்றிய எந்தத் தகவல்களையும் தானாக முன் வந்து கேட்டுக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவளைப் பற்றிய விவரங்களை அவளாகவே தன்னிடம் கூற வேண்டும் என்று எண்ணிக் காத்திருந்தாள் நிவேதிதா.

 

அவர்களது பள்ளிக் காலத்தில், யக்ஷித்ராவைப் பொறுத்தவரையில், அவளது உணர்வுகளை அவ்வளவு எளிதில் யார் முன்னிலையிலும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டாள். 

 

 தன்னுடைய சொந்த விஷயங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற கருத்துடையவள். 

 

ஆதலால் தான், இன்னும் நிவேதிதாவிடம் கூடத் தனது குடும்பத்தைப் பற்றிய உரையாடல்களைத் தவிர்த்து விட்டாள் யக்ஷித்ரா.

 

அதையும் புரிந்து கொண்டு, தங்களது படிப்பு மற்றும் மற்ற விருப்பங்களை மட்டுமே அவளுடன் உரையாடிக் கொண்டு இருந்தாள் நிவேதிதா.

 

இவ்வளவு நாளாகத் தனது தோழியை கவனித்துக் கொண்டிருந்த வரையில் யக்ஷித்ராவிற்குத் தன்னுடைய நிறம் மற்றும் உடல்வாகு மீதும் தாழ்வு மனப்பான்மை உள்ளது என்பதை அறிந்து கொண்டவளோ, அதை தோழியிடம் கேட்டும் விட்டாள்.

 

 அதற்கு அவளோ,”ஆமாம் நிவி. அதை நானே உருவாக்கிக்கலை. இப்போ தான், நான் யார் கூடவும் பேசாமல் இருக்கிறதால் எதுவும் என் காதுக்கு வர்றது இல்லை. யாரும் என்கிட்ட வந்து என்னோட குறையைச் சொல்லிக் காட்டுறதும் இல்லை. அதனால் தான், நான் நிம்மதியாக என்னோட படிப்பை மட்டும் பார்த்துட்டு இருக்கேன்” என்று அவளிடம் விளக்கினாள் யக்ஷித்ரா.

 

அவளது வார்த்தைகளில் இருந்த வலியை நன்றாக உணர்ந்து கொண்ட நிவேதிதாவோ,”உன்னை அந்தளவுக்குப் பேசிக், கிண்டல் பண்ணிக் காயப்படுத்தி இருக்காங்களா?” எனக் கேட்டாள்.

 

“ஆமாம்” என்றவளிடம்,

 

“இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலைன்னுத் தெரியலை! கலரை வச்சும், நீ ஒல்லியாக இருக்கிறதை வச்சும் இப்படியா கிண்டல் பண்ணுறது!” என்று அவளிடம் கூறிப் பொருமினாள் நிவேதிதா.

 

“இது அவங்களைப் பொறுத்த வரைக்கும் ரொம்பவே சாதாரணமானது” என்று தன் தோழிக்கு விடையளித்தாள் யக்ஷித்ரா.

 

“நீ அவங்களுக்கு எந்தப் பதிலடியும் கொடுக்கலையா? அப்படியே அமைதியாகவே இருந்துட்டியா?” 

 

“வேற என்னப் பண்றது? எத்தனை தடவை தான் அவங்களுக்குப் பதில் சொல்லிக்கிட்டே இருக்க முடியும்? அதனால் தான் நான் எல்லாத்தையும் அமைதியாக கடக்கப் பழகிட்டேன்”

 

“எப்போ இருந்து உன்னை இப்படியெல்லாம் கிண்டல் செய்ய ஸ்டார்ட் பண்ணாங்க?” என்று அவளிடம் வினவினாள் நிவேதிதா.

 

“நான் ஆறாவது படிக்கும் போது இருந்துன்னு நினைக்கிறேன்” என்றாள் யக்ஷித்ரா.

 

“நீ இதையெல்லாம் கடந்து வராமல் உனக்குள்ளேயே வச்சிக்கிட்டு இப்படியே இறுகிப் போயிட்டே இருந்தால் அப்பறம் உனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்!” என்று அவளுக்கு அறிவுரை வழங்கினாள் அவளது தோழி.

 

“ஆமாம். என்னோட வாழ்க்கை வெறுத்து தான் போயிட்டு இருக்கு” என்று அவளிடம் அழுத்திக் கூறியவளோ, சட்டென்று தான் பதில் கூறுவதை நிறுத்தி விட்டு,

 

“இது போதும். இனிமேல் எந்த விஷயத்தைப் பத்தியும் எங்கிட்டே கேட்காதே!” என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டு அமைதியடைந்து விட்டாள் யக்ஷித்ரா.

 

அதைக் கேட்டதும் முகம் சுருங்கிப் போவனளோ,”ஓகே சாரி” என்று அவளிடம் மன்னிப்புக் கேட்டு விட்டுத் தானும் மௌனமாகி விட்டாள் நிவேதிதா.

 

அதற்குப் பின்னர், தன்னுடைய தோழியிடம் பேசும் போது சற்றே கவனமாக இருந்தாள்.

 

யக்ஷித்ராவின் மெல்லிய உடல்வாகைத் தன்னாலான வரையில் சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டாள் நிவேதிதா.

 

            – தொடரும் 

 

நிவேதிதாவின் கண்ணோட்டத்தில் இப்போது கதை ஆரம்பிக்கிறது. உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் இருந்தால் என்னிடம் தாராளமாக கேட்கலாம் ஃப்ரண்ட்ஸ்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்