Loading

மனமே!

 

உன்னுடன் கைக்கோர்க்க எழும்பிய கை வெட்டவெளியில் வினையின்றி இருக்கிறது…

 

கைக்கோர்க்க வருவாயா?

நான் இருக்கிறேன் என்ற இதம் தருவாயா?

 

 

அவன் தலை கோத அவள் உறங்கிவிட்டாள். எவ்வளவு நேரம் கடந்ததோ தெரியாது. கீதனின் மனம் சூரிய குடும்பத்தின் மற்றொரு கோளாக மாறி வட்டமடித்துவிட்டு வந்துவிட்டது. நிரண்யா விழித்ததும்தான் அவனும் தன்னிலை உணர்ந்தான்.

 

“மொழி, ஒரே ஒரு கேள்வி. உனக்கு தெரிஞ்சா சொல்லு.”

 

“அந்த குரலுக்கு நீயே பேரு வச்சியா?”

 

“இல்ல எனக்கு கேட்க ஆரம்பிக்கும்போது தீபன்ங்கிற அடையாளத்தோடு கேட்க ஆரம்பிச்சிது.”

 

“தீபன் என்ற பெயரில் உனக்கு வேற யாராவது தெரியுமா?”

 

“தெரியாது.” 

 

“அப்புறம் ஏன் நம்ப ஆரம்பிச்ச.”

 

“தெரியாது.”

 

“சரி விடு. ரொம்ப யோசிக்காதே” என்று தலையாட்டி வைத்தவள், சிந்திக்கத் தொடங்கினாள்.

 

சற்று நேரம் கழித்து, “ஒருநாள் எனக்கு இந்த குரல் கேட்டுச்சு. என்னோட குழந்தை என் கருவிலே கலைஞ்சு போனப்ப முதல் முதலில் கேட்டுச்சு. இன்பனுக்கும் எனக்கும் சண்டை. அதில் எனக்கு தலையில் அடி. அப்போதான் முதலில் கேட்டேன்” என்று அவள் கூற திடுக்கிட்டான் கீதன்.

 

“கூட யார் இருந்தா?”

 

“யாரும் இல்லை. நான் தனியா இருந்தேன்” என்று கூறியவள் தலை வலிக்கிறது என்று படுத்துக் கொண்டாள். 

 

இவளின் இந்த பதிலில் ஏதோ இருக்கிறது என்று அதை மனதில் குறித்துக் கொண்டான் கீதன்.

 

இப்பொழுது கீதனால் ஒன்று மட்டும் விளங்கிக்கொள்ள முடிந்தது. மொழி கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறாள். ஆனால் நிரண்யா? அது பெரிய கேள்விக்குறி. 

 

நினைக்கவே அச்சமாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. தற்கொலை செய்துகொண்டு இறந்த ஒருத்தி தன் மனைவிக்குள் இருக்கிறாள். இந்த வாக்கியத்தை அவனால் விளங்கிகொள்ள முடியவில்லை. அவள் ஆவியாக வந்து உள்ளே புகுந்து இருக்கிறாளா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. 

 

மொழியாகவே மாறியிருக்கிறாள். இந்த வாக்கயத்தின் அபத்தம் அவனை அச்சுறுத்தியது. உயிருடன் இருக்கும் பொழுது மொழியை இப்படி யாராவது குணப்படுத்தி இருக்க வேண்டும். அப்படி அவளுக்கு வாய்க்காமல் போனது அவளுடைய துரதிர்ஷ்டம்தான்.

 

நேத்ரனுக்கு அழைத்து நிரண்யா கூறியதைக் கூறினான் கீதன். நேத்ரனுக்கு ஏதோ ஒன்று விளங்குவதுபோல் இருந்தது.

 

“மிஸ்டர் கீதன்… நிரண்யாவுக்கு எப்பவாச்சும் தலையில் அடி பட்டிருக்கா” என்றான் நேத்ரன் சந்தேகமாக. 

 

அவன் கூறப்போகும் பதிலில்தான் இந்த வழக்கின் இரண்டாவது ஒற்றுமை இருக்கும்.  கீதனும் அவன் எதிர்பார்த்த பதிலைக் கூறினான்.

 

“சூப்பர்… இந்த வழக்கிற்கு அடுத்த தடயம் கிடைச்சிருச்சு. இனி நான் பார்த்துக்கிறேன். தகவல் கொடுத்ததற்கு நன்றி” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

 

மூவரும் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த ஒற்றுமையுடன் அடுத்த ஒற்றுமை மூவருக்கும் தலையில் அடி என்று மருத்துவமனையில் சேர்க்கவும் பட்டிருக்கின்றனர். 

 

அவன் இன்னும் சில தகவல்கள் திரட்டியிருந்தான். தேவாவிடம் சமீப காலமாக அதகமான பணப்புழக்கம் இருக்கிறது. குருத்தணு சேகரிப்பு மூலம் நிச்சயம் இவ்வளவு பணம் புழங்க வாய்ப்பு இல்லை. அவனுடன் சில கோடிகளில் புரளும் பணக்காரர்கள் பழக்கத்தில் இருந்தனர். அவர்களுடன் அவன் அடிக்கடி உரையாடுவது தெரிந்தது. இதில் மைத்ரேயன் என்ன ஆனான் என்றுதான் தெரியவில்லை. மைத்ரேயன், தேவா என்று இவர்களின் பெயரை மண்டைக்குள் இவன் உருட்டிவிட்டான். ஆனால் இவன் மனதின் நாயகர்கள் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

 

மைத்ரேயனின் இடத்தில் தேவா காட்டத்துடன் அமர்ந்திருந்தான். அவனின் விழிகள் மைத்ரேயனை குற்றம் சாடியது.

நம்பிக்கை துரோகத்தில் அவன் விழிகள் எரிமலையென கனன்று கொண்டிருந்தது. 

 

“மைத்ரேயன் ஏன் இப்படி செஞ்ச?”

 

“காரணம் உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.”

 

“நீ என்னோட பிச்சையால உயிர் வாழ்ந்துட்டு இருக்க. அதை மறந்துட்டு பேசுற” என்று அவன் கூற, மைத்ரேயன் அவனின் சட்டைக் காலரைப் பிடித்தான். 

 

“உனக்கு மனசாட்சி இருக்காடா.. இந்த ஆராய்ச்சியை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நாம போட்ட ஒப்பந்தம் ஞாபகம் இருக்கா. என்னை மொத்தமா ஏமாத்திட்டு நீ நல்லா இருக்கணும்னு நினைச்சா நான சும்மா விடுவேன்னு நினைச்சியா?”

 

“அதுக்காக நற்பவிக்கு ஏன் உன்னோட மெமரீஸ் கொடுத்த. இது எவ்ளோ முட்டாள் தனம்னு தெரியுமா உனக்கு. இது விபரீதமா போச்சுன்னா நீயும் மாட்டுவ. நானும் மாட்டுவேன்.”

 

அவன் பதில சொல்லாமல் அவனைப் பார்த்து ஏளனமாய் சிரித்தான்.

 

“எனக்கு கவலையில்லை. நற்பவியை நான் ஜெயிச்சுட்டா நான் வாழலாம். இல்லைன்னா நான் செத்துப் போறேன். இந்த ஆராய்ச்சி தோல்வின்னு நினைச்சுக்கலாம். என்னோட சேர்ந்து நீயும் செத்துப்போ” என்றான் சர்வ சாதாரணமாக.

 

“உன்னைக் கொல்லாம விடமாட்டேன்.”

 

“அது நீ செத்த அப்புறம் நடக்கும்” என்றான் திமிராக.

 

அடிப்பட்ட பாம்பாக தேவா அவன் அறையைவிட்டு வெளியில் வந்தான்.

 

அவனின் முதுகை வெறித்தவன், “ஐ வாண்ட் மை மெமரீஸ் டு லிவ் இன் சம் ஃபார்ம். ஆனா நீ இந்த உலகத்தைவிட்டு போகப்போற நேரம் வந்தாச்சு” என்று முணுமுணுத்தான் மைத்ரேயன்.

 

மைத்னரேயனை எப்படி அவன் வளையத்திற்குள் கொண்டு வருவது என்று நினைத்து ஒருவன் தவித்துக் கொண்டிருக்கிறான். தன்னைப் பற்றி ஒருவன் ஆராய்ந்து கொண்டுருக்கிறான் என்பதை அறியாத அவனோ, அவன் குடும்பத்தினருடன் இருந்தான். மாதம் ஒருமுறை குடும்பத்தைக் காண வருவான். இறந்துவிட்டதாக நினைத்த ஒருவன் திரும்பி வந்தால் அந்த குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படித்தான் அவனது குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள், ஏன் எங்களைப் பார்க்க வரவில்லை என்று அவனின் மனைவி கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவனிடம் பதிலில்லை. தான் உயிருடன் இருப்பதை தன் குடும்பத்திற்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தான். ஏனென்றால் அவன் இன்னும் எத்தனை வருடங்கள் இருப்பான் என்று அவனுக்கு தெரியாது. மீண்டுமொரு இழப்பை அவன் குடும்பம் தாங்குமா என்று எண்ணினான். ஆனால் இத்துப்போன மனம் செத்துப்போனாலும் மாறாது. எதை வேண்டாம் என்று புறக்கணிக்க நாம் நினைக்கிறோமோ அதைச் சுற்றியே வருகிறது. 

 

குறிப்பாக அவனின் குணம் இதுவல்ல. முன்பு கூறியதுபோல் அதிகாரமும் அடக்குமுறையுமே அவன் குணம். ஆனால் வெகுநாட்களாக பிரிந்த உறவுகளிடமோ தேடிய உறவுகளிடமோ நம் அழுத்தங்களைக் கடைப்பரப்ப முடியாதே. அதனால் குடும்பத்தைப் பொறுத்தளவு அவன் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறான். ஆனால் அவன் மட்டுமே அறிவான் அவன் இறப்பின் ரகசியமும் பிறப்பின் ரகசியமும். மேலும் குற்றவுணர்ச்சி வேறு நெஞ்சை குறுகுறுக்க வைத்தது.

 

குடும்பத்துடன் இருக்கும்போது அவன் தன்னிலை இழந்து உணர்ச்சியின் பிடியில் இருப்பான் என்றே கூறலாம். அந்த ஒரு சமயத்தைதான் நேத்ரன் பயன்படுத்திக்கொண்டான். இப்பொழுது நேத்ரன் முன்பு மைத்ரேயன் அமர்ந்திருந்தான். இதுவரை நேத்ரனின் நெற்றியில் இருந்த சிந்தனை ரேகைகள் இப்பொழுது மைத்ரேயனின் நெற்றிக்கு மாறி இருந்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். நெற்றியின் சுருக்கம் வினா எழுப்பியது வார்த்தைகள் இல்லாமலே.

 

“வழக்கமாய் எதிரியை பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கணும். அப்போதான் குற்றவாளியைப் பிடிக்க முடியும்னு நினைக்கிறது வழக்கம். ஆனால் நான் இந்த முறை வித்தியாசமா யோசிச்சேன்” என்று கூறி அவனை ஆராய்ந்தான் நேத்ரன்.

 

“என்ன புரியலையா? நீ செய்ற விஷயமும் அப்படித்தான் இருக்கு. எனக்கு இன்னும் உன்ன பத்தி எல்லாம் தெரியாது” என்று நேத்ரன் கூற, மைத்ரேயனின் விழிகளில் அனல் பறந்தது.

 

“தென் ஹவ்? என்னோட கனவை உடைச்சிட்ட நீ” என்றான் சற்று அதிகாரமாக.

 

அவன் உணர்ச்சிவசப்படுவது கண்டு சிரித்தான் நேத்ரன்.

 

“உன்னோடு வீக் பாயிண்ட் என்னன்னு யோசிச்சேன். அத மட்டும் தேடினேன். நீ செத்துட்டதா டெத் சர்டிபிகேட் இருக்கு. ஆனா உண்மையா நீ உயிரோட இருந்தா நிச்சயம் ஒரு  முறையாவது உன் குடும்பத்தை போய் பார்த்திருக்கணும்னு கணிச்சேன். என்னோட கணிப்பு சரி” என்று நேத்ரன் கூற, அவன் அதிர்ந்தான் என்றே கூறலாம். 

 

சற்று நேரம் அமைதி.

 

“சரி இப்போ சொல்லு” என்றான் நேத்ரன் கால் மேல் கால் போட்டு.

 

“என்ன சொல்லணும்?” என்று இரண்டு கைகளையும் பின்னால் முறுக்கினான் மைத்ரேயன்.

 

“உனக்கு தெரிஞ்சதெல்லாம்.”

 

“எனக்கு பிரியாணி எப்படி செய்யணும்னு தெரியும். சொல்லவா?”

 

“டோண்ட் ட்ரை டு பீ டூ ஸ்மார்ட்..”

 

“நான் ஆல்ரெடி ஸ்மார்ட்தான். உனக்குக் கண்ணு தெரியலையா?” என்றான் நக்கலுடன்.

 

“நீ இப்போ என்னோட கஸட்டடில இருக்க. ஞாபகம் இருக்கட்டும்” என்றதும் நகைத்தான் மைத்ரேயன்.

 

“உனக்கு ஒரு விஷயம் சொல்லவா.. உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது.”

 

“ஒரே ஒரு புல்லட் போதும். முடிச்சுட்டு போய்கிட்டே இருப்பேன்” என்று அவன் கூற, மைத்ரேயன் குரூரமாக சிரித்தான்.

 

“நற்பவிக்கு என்ன ஆச்சுன்னு தெரிய வேண்டாமா?”

 

திகையாதே மனமே!

 

மக்களே.. என்ன ஆச்சுன்னு ஏதாவது கெஸ் இருக்கா.. இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்