Loading

அத்தியாயம் 27

 

அகரன் வீட்டிற்கு வந்ததைப் பற்றி அன்னையிடமிருந்து அறிந்து கொண்ட மென்மொழி, மற்றவர்களிடம் உடனே டெல்லி செல்ல வேண்டும் என்று கூற, “அவசரப்படாத மொழி. இப்பவும் உன் அண்ணனை எதிர்க்குற அளவுக்கு நாம இல்ல. பொறுமையா யோசிப்போம்.” என்றான் யுகேந்திரன்.

 

“ஹ்ம்ம், அதுவுமில்லாம என் பவருக்கு வேற என்னாச்சுன்னு தெரியல. திடீர்னு ஒர்க்காகுது, திடீர்னு ஸ்விட்ச் ஆஃபாகிடுது!” என்ற சுடரொளி கையிலிருந்த மென்னிழைத்தாள் பெட்டியை மறைய வைத்து சோதித்துக் கொண்டிருந்தாள்.

 

அவளின் சக்தி இம்முறை சரியாக வேலை செய்தது குறிப்பிடத்தக்கது!

 

“எனக்கும் யுகேந்திரன் சொல்றதுதான் சரின்னு படுது மொழி. அதான், அங்க பெருசா எதுவும் நடக்கலல… உன் அம்மா கிட்ட அடிக்கடி பேசி கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்.” என்று இன்பசேகரன் கூற, “ஹுஹும், இப்பவே அவங்களுக்குச் சந்தேகம் வந்துருக்கும்.” என்றாள் மென்மொழி.

 

“எவ்ளோ நாள் நாம இப்படியே வெயிட் பண்ணிட்டு இருக்கப் போறோம்? இதுவரை எந்த கேள்விக்கும் நம்ம கிட்ட சரியான விடை இல்ல. எப்பவும் குழப்பத்துலேயே சுத்திட்டு இருந்தா, இதுலயிருந்து எப்படி வெளிய வரது, எப்படி அகரனைக் காப்பாத்துறது?” என்று எட்டிப் பார்த்த எரிச்சலுடன் வினவினாள் யாழ்மொழி.

 

“கவலைப்படாதீங்க யாழ்மொழி, கூடிய சீக்கிரம் இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சுடும்னு நம்புவோம்.” என்ற மதுசூதனன், “அகரனை எதிர்த்து நேரடியா நம்மளால மோத முடியாது… இப்போதைக்கு… அப்போ அடுத்து என்ன?” என்று கேட்க, “அகரனை நெருங்க முடியாது. ஆனா, அவன் யாருக்காக வேலை செய்யுறானோ, அந்த ரத்தோரை நெருங்க முடியும்.” என்றான் யுகேந்திரன்.

 

அனைவரும் அவனைக் காண, “மொழியோட தாத்தா சொன்னதை வச்சுப் பார்த்தா, அந்த முதல் செட் கற்கள் ரத்தோர் கிட்டதான் இருந்துருக்கணும். இதுவரை அந்தக் கற்கள் பத்தின தகவல்கள் எதுவும் வெளியாகல. அப்படின்னா, அது இப்பவும் அவருக்கிட்ட இருக்க நிறைய சான்ஸ் இருக்கு.” என்றான் யுகேந்திரன்.

 

“எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க?” என்று மதுசூதனன் வினவ, “நாம தேடுன எந்த இடத்துலயும், அந்தக் கற்கள் பத்தின தகவல் இல்லை. சோ, அதைக் கவர்மெண்ட்டுக்குத் தெரியாம,  ரகசியமா எங்கேயோ வச்சுருக்கணும். என் கெஸ் படி, ரத்தோர் அந்தக் கற்களை இதுவரைக்கும் யாருக்கும் விக்கல.” என்ற யுகேந்திரனின் மனதில் வருணைப் பற்றிய எண்ணம் எழுந்தது.

 

“அப்போ அந்த பிரிஸம் டவர்ஸ்லதான் கற்கள் இருக்குமோ? அந்த இடத்தைப் பத்தி நிறைய மர்மங்கள் இருக்குறதா மொழியோட அண்ணி சொன்னாங்களே!” என்றான் இன்பசேகரன்.

 

அப்போது மென்மொழி மதுசூதனன் புறம் திரும்பி, “உங்களால பவரை சென்ஸ் பண்ண முடியுமே… அப்போ அந்தக் கற்கள் இருக்குற இடத்தைக் கண்டுபிடிக்கலாம்ல?” என்று கூற, “பவர்ஸ் ஆக்டிவேட்டானதான் என்னால கண்டுபிடிக்க முடியும் மொழி.” என்று தலையை இருபுறமும் அசைத்தான் அவன்.

 

“இப்போ என்ன அந்தத் தாத்தாவைப் பார்க்கப் போகணுமா?” என்று சுடரொளி பட்டென்று வினவ, அனைவரின் இதழ்களும் குறுநகையை சிந்த, “நீதான் ரொம்ப ஆர்வமா இருக்க போல!” என்றான் இன்பசேகரன்.

 

“நான் எல்லாம் இந்த ஆட்டத்துக்கு வரல. திரும்ப என்னைக் கூட்டிட்டுப் போய் என் பவரை ஷட்டவுன் பண்ணவா?” என்று முதல் ஆளாகப் பின்வாங்கினாள் சுடரொளி.

 

“நீ வர வேண்டாம். உன் ஃபிரெண்டுஸுக்குத் துணையா இங்கேயே இரு. நாங்க போயிட்டு வரோம்.” என்ற யுகேந்திரன் மற்ற இரு ஆண்களையும் பார்க்க, “சுடர் இல்லன்னா, என்னோட ஹெல்ப் உங்களுக்குத் தேவைப்படலாம்.” என்று முன்வந்தாள் யாழ்மொழி.

 

சிறிது யோசித்த யுகேந்திரனோ யாழ்மொழி வருவதற்குச் சம்மதிக்க, அந்த நால்வரும் அடுத்தப் பயணத்திற்கு ஆயத்தமாகினர்.

 

அப்போது யுகேந்திரன் ஏதோ சிந்தனையில் இருப்பது தெரிய, அவனிடம் தனியே அதைப் பற்றி வினவினாள் மென்மொழி.

 

அதற்கு அவனோ, “இன்னும் வருண் பத்தின டீடெயில்ஸ் மத்தவங்க கிட்ட சொல்லலையே, அதைத்தான் யோசிச்சுட்டு இருந்தேன்.” என்று கூற, “அவ்ளோ தானா?” என்று புருவத்தைச் சுருக்கினாள் மென்மொழி.

 

“என்னை விட மைண்ட் ரீடிங் பண்றதுல நீதான் எக்ஸ்பெர்ட்டாகிட்டு வர போல!” என்று கேலியாகக் கூறியவன், உயரதிகாரியுடன் நடந்த உரையாடலைப் பற்றி உரைத்தான்.

 

அதைக் கேட்டவளோ, “அந்த சிசிடிவி ஃபோட்டோவை அகரன்தான் அனுப்பியிருப்பான்னு நினைக்கிறீங்களா?” என்று வினவ, “உறுதியா தெரியல. ஆனா, இப்போதைக்கு அகரனை மட்டும்தான் சந்தேகப்பட முடியுது.” என்றவன், “எனக்கென்னவோ ஏசிபியோட பார்வை நம்ம பக்கம் இனி திரும்பும்னு தோணுது. ஏற்கனவே, என்னைச் சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாரு. சோ, இனிமே நாம பிளான் பண்றப்போ, இதையும் மனசுல வச்சுக்கணும்.” என்றவன், மற்றவர்களிடமும் விஷயத்தைப் பகிர்ந்தான்.

 

ஒருவழியாக நால்வரும் கிளம்ப, அவர்கள் மறையும் முன்னர், “ஹே இன்பா, இந்த முறை நீங்க இன்விசிபிலா இருக்க மாட்டீங்க. சோ, வேற எங்கயாவது கூட்டிட்டுப் போயிடாம, சரியான இடத்துக்கு கூட்டிட்டுப் போ.” என்று சுடரொளி கூற, “உன்னோட பவர் குறைஞ்சதுக்குப் பதிலா, வாய் குறைஞ்சுருக்கலாம்.” என்றபடி கிளம்பினான் இன்பசேகரன்.

 

அவனுடன் மற்ற மூவரும் அங்கிருந்து மறைந்தனர்.

 

*****

 

பிரிஸம் டவர்ஸ்…

 

இம்முறை அவர்கள் சரியாக வாயிலில் வந்து இறங்கியிருக்க, அதுவே வினையாகிப் போனது.

 

சட்டென்று அவர்கள் வாயிலின் முன்பு வந்து தோன்றியதைக் கண்ட காவலாளிகளோ குழப்பம் பாதி பதற்றம் மீதியென்று நால்வரை நோக்கியும் ஆயுதங்களை ஏந்தி இருந்தனர்.

 

நொடிக்குள் நிலைமையை உணர்ந்து கொண்ட மதுசூதனன், அவனது சக்தியின் மூலம், அவர்களின் ஆயுதங்களைத் தூக்கி எரிந்திருக்க, கண்முன் நடப்பதை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள்.

 

“நாம சீக்கிரம் வேலையை முடிக்கணும்.” என்று யுகேந்திரன் கூற, “நானும் இன்பாவும் இங்க பார்த்துக்குறோம். நீங்க உள்ள போய் வேற ஏதாவது தெரிஞ்சுக்க முடியுதான்னு பாருங்க.” என்றான் மதுசூதனன்.

 

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த யுகேந்திரனும், மற்ற இருவரிடம், “ஜாக்கிரதை…” என்று எச்சரித்து விட்டு யாழ்மொழியுடன் உள்ளே சென்றான்.

 

அங்கும் சில காவலாளிகள் வந்து கொண்டிருக்க, அவர்களைத் தன் சக்தியின் மூலம் கட்டுப்படுத்திய யுகேந்திரன், சுவரில் மாட்டப்பட்டிருந்த பெரிய புகைப்படத்தைக் கண்டான்.

 

அது பிரேம் ரத்தோர்தான்!

 

அதைக் கண்ட யுகேந்திரன் யாழ்மொழிக்கு கண்களைக் காட்ட, அவளும் புரிந்து கொண்டவளாக, மறுநொடியே அவளின் உருவத்தை பிரேம் ரத்தோரைப் போன்று மாற்றி இருந்தாள்.

 

உருவத்தை மாற்றியவளால் உடையை மாற்ற முடியவில்லை!

 

பிரேம் ரத்தோரைப் போன்ற வயதான மனிதர், உடலைக் கவ்விப் பிடிக்கும் ஜீன்ஸ் மற்றும் டீ-ஷர்ட்டில் காட்சியளித்தால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது?

 

அப்படித்தான் உள்ளிருந்து இருவரையும் நோக்கி வந்த காவலாளி, அவனின் முதலாளி இருந்த நிலையைக் கண்டு விழி பிதுங்கி நிற்க, அப்போதுதான் உடையைக் கண்டு மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டாள் யாழ்மொழி.

 

எனினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், முன்னே நின்ற காவலாளியிடம், “அவர்… க்கும், மேரா கமரா கஹா ஹை?” (என்னோட ரூம் எங்க?) என்று சிடுசிடுப்புடன் வினவ, பிரேம் ரத்தோரின் இயல்பு அறிந்தவன் என்பதால், சற்றும் யோசிக்காமல், ‘ஏன்’ என்ற கேள்வி கூட கேட்காமல் அவரின் அறை நோக்கி கரத்தை நீட்டியிருந்தான் அவன்.

 

இக்கட்டான நிலையை சமாளித்த திருப்தியில், “இங்க நின்னு என்ன பார்த்துட்டு இருக்க. வெளிய சில ரவுடிஸ் சண்டை போட்டுட்டு இருக்காங்க. போய் அதைப் பாரு.” என்று ஹிந்தியில் கூறி, அவனை அனுப்பி வைத்தவள்,  பிரேம் ரத்தோரின் அறையை நோக்கி ஓடினாள், உடையை மாற்றுவதற்காக.

 

சில நிமிட இடைவெளியில் பிரேம் ரத்தோராகவே மாறி வந்த யாழ்மொழியை அழைத்துக் கொண்டு ரகசிய இடம் நோக்கிச் சென்றான் யுகேந்திரன்.

 

ஏற்கனவே, தாக்க வந்திருந்த காவலாளி ஒருவனின் மனதைக் கட்டுப்படுத்தி ரகசிய இடம் பற்றி யுகேந்திரன் அறிந்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அடித்தளத்தை நோக்கி இருவரும் செல்ல, முதல் தடைக்கல்லாக வந்தது மின்தூக்கியில் பொருத்தப்பட்டிருந்த கைரேகை வருடி (ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேன்னர்)!

 

கைரேகை பொருந்தினால்தான், மின்தூக்கி அடித்தளத்தை அடையும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

 

விரலை வைக்குமாறு யாழ்மொழியிடம் யுகேந்திரன் சைகை காட்ட, “ஃபிங்கர்பிரிண்ட் மேட்சாகுமா என்ன?” என்ற சந்தேகத்துடனே விரலை வருடியில் வைக்க, அது எடுத்துக் கொண்ட ஒவ்வொரு நொடியும் யாழ்மொழிக்குத்தான் பக்கென்று இருந்தது.

 

மின்தூக்கியின் கதவும் மூடப்படாமல் இருக்க, எந்நேரமும் காவலாளிகள் வந்து விட நேரிடும் என்பதால் யுகேந்திரனின் கவனம் முழுவதும் அங்கிருந்தது.

 

என்னதான், யாழ்மொழி ரத்தோரின் உருவத்தில் இருந்தாலும், அனைவரும் அதைக் கண்டு நம்பி விடுவர் என்று கூறிவிட முடியாதே!

 

ஒருவேளை, உண்மையான ரத்தோர் வந்து விட்டால், நிலைமை இன்னும் மோசமாகி விடும் அபாயம் வேறு இருக்கிறது.

 

ரேகை பரிசோதிக்கப்படும் நொடிக்கும் குறைவான நேரத்தில் இவற்றை எல்லாம் யோசித்து பீதியில் உறைந்திருந்தாள் யாழ்மொழி.

 

அவளின் மனதை சற்றே இலகுவாக்குவது போல, ரேகை பொருந்தி மின்தூக்கி செயல்பட ஆரம்பித்தது.

 

இருவரும் கீழே செல்ல, அங்கு அவளிற்காகக் காத்திருந்தது விழித்திரை வருடி (ரெட்டினல் ஸ்கேன்னர்)!

 

அதையும் முடித்துவிட்டு, உள்ளே சென்றதும்தான் நிம்மதி பெருமூச்சை விட்டாள் யாழ்மொழி.

 

அந்த விஸ்தாரமான அறையைச் சுற்றிப் பார்த்த யுகேந்திரனிற்கு சந்தேகப்படும் வகையில் எதுவும் தென்படவில்லை.

 

“இங்க எதுவும் இருக்குற மாதிரி தெரியலையே! ஒருவேளை, அந்தக் கற்கள் இங்க இல்லையா? இல்ல, ரத்தோர் கிட்டயே இல்லையா?” என்று யாழ்மொழி வினவ, அங்கிருந்த கணினியைக் கண்ட யுகேந்திரன், “அதைப் பார்த்தா ஏதாவது தெரியும்னு நினைக்கிறேன்.” என்றான்.

 

அவன் கணினியைத் திறக்க முயற்சிக்க, அதுவோ கடவுச்சொல் கேட்டு நின்றது.

 

அவன் அவளைத் திரும்பிப் பார்க்கும் அவகாசத்தைக் கூட தராமல், “இதெல்லாம் எனக்குத் தெரியாது.” என்றுவிட, அதற்குச் சிரித்தவனோ, “பாஸ்வர்ட் கிராக் பண்றதுக்கு சில நிமிஷமாகலாம். இன்பாக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கால் பண்ணி கேளு.” என்றவன், கையோடு எடுத்து வந்திருந்த விரலியை பொருத்தி, வேலையில் தீவிரமாகி விட்டான்.

 

அதே சமயம் அங்கு திடீரென்று தோன்றிய இன்பசேகரனைக் கண்டு பயத்தில் யாழ்மொழி கத்த, அவளைக் கண்டு திகைத்து நின்றான் இன்பசேகரன். காரணம் அவளிருந்த உருவம்!

 

இருவருக்கும் சமநிலை அடைய முழுதாக ஒரு நிமிடம் தேவைப்பட்டது.

 

மறுநொடியே, “இப்படியா மூஞ்சி முன்னாடி வந்து நிப்ப?” என்று அவளும், “நீ என்ன இந்த கெட்டப்ல?” என்று அவனும் கேட்டு விளக்கத்தைப் பெற்று கொண்டிருந்தனர்.

 

“நீ எப்படி உள்ள வந்த? அப்படின்னா, முன்னாடியே உள்ள கூட்டிட்டு வந்துருக்க வேண்டியதுதான?” என்று யாழ்மொழி வினவ, “என்னமோ பல மாசமா டிரெயினிங் எடுத்தவன் மாதிரி கேட்குற. டெல்லி வரைக்கும் ஃப்ரீயா வந்ததே பெருசு.” என்றவன், கணினியில் வேலை செய்து கொண்டிருந்த யுகேந்திரனிடம், “வெளிய எல்லாரையும் டேக்கில் பண்ணியாச்சு. மது வெளியவே இருந்து யாராவது வந்தா சிக்னல் குடுக்குறதா சொன்னாரு.” என்று கூறினான்.

 

அதை கேட்டுக் கொண்ட யுகேந்திரன் கடவுச்சொல்லைக் கடந்து கணினிக்குள் சென்றிருந்தான்.

 

இடத்திற்கான பாதுகாப்பில் கவனம் செலுத்தியிருந்த ரத்தோர், கணினியில் கோட்டை விட்டு விட்டார் போலும்!

 

அதற்குள் ஏகப்பட்ட கோப்புகள் இருந்தன. சட்டப்பூர்வமான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பல பரிவர்த்தனைக்கான ஆதாரங்களும் இருந்தன.

 

அவற்றுள் ஒன்றாக, பிரேம் ரத்தோர் பல வெளிநாட்டவர்களுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தப் பத்திரமும் இருந்தது.

 

அதைக் கண்ட யுகேந்திரனின் விழிகள் விரிய, மற்ற இருவரும் அவனின் முகப்பாவனைகளைக் கண்டு, என்னவென்று விசாரித்தனர்.

 

“முதல் செட் கற்களை விக்கிறது ரத்தோரோட பிளான் இல்ல. அதை ஆராய்ச்சி செஞ்சு, அதுக்குள்ள இருக்க பவர்ஸை தனியா எக்ஸ்ட்ராக்ட் பண்ணி, என்ஹான்ஸ் பண்ணி பிளாக் மார்க்கெட்ல விக்கிறதுதான் பிளான். இந்த ஆராய்ச்சிக்கு பல ஃபாரீனர்ஸ் ஃபண்டிங் பண்ணியிருக்காங்க. அந்த டீடெயில்ஸ்தான் இதுல இருக்கு.” என்றான் யுகேந்திரன்.

 

அதே சமயம், அழைப்பில் இருந்த மதுசூதனனோ, “அபார்ட்…” என்று கூற, அந்தக் கோப்புகளை எல்லாம் விரலியில் நகலெடுக்க ஆரம்பித்தான் யுகேந்திரன்.

 

“மது என்னாச்சு? யாரு வராங்க?” என்று இன்பசேகரன் பதற்றத்துடன் வினவ, “ரத்தோர்… அங்கயிருந்து சீக்கிரம் கிளம்புங்க.” என்றான் மதுசூதனன்.

 

“அந்தாளுக்கு எப்படி தெரிஞ்சுது?” என்று யாழ்மொழி பதற, “காப்பி பண்ண எல்லாம் நேரமில்ல.” என்றான் இன்பசேகரன்.

 

வேறு வழியில்லை என்பதால், வன்தட்டை (ஹார்ட்டிஸ்க்) எடுத்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்ப முயற்சிக்க, அந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு மூவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்