Loading

அதன் பின்னர், தனது அலுவலக வேலை நேரம் முடிந்தவுடன் வீட்டிற்குப் போனவளோ,

 

அங்கே தன்னுடைய கணவன் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு,”நான் வொர்க் முடிஞ்சு வர்றேன். நீங்க ஆஃபீஸூக்குக் கிளம்பிட்டு இருக்கீங்க!” என்று கூறித் தன் சோகத்தை அவனிடம் பகிர்ந்து கொண்டாள் யக்ஷித்ரா.

 

அதைக் கேட்டவுடன்,”எனக்கும் அதே கஷ்டம் தான் ம்மா” என்று அவளருகே சென்றவனது, விழிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தவள், திடுமெனப் புன்னகைக்கவும், மனைவியைக் குழப்பத்துடன் ஏறிட்டான் அற்புதன்.

 

“நான் உங்ககிட்ட என்னோட ஃபேர்வெல் டே ஃபங்க்ஷன் கதையைச் சொன்னேன்ல? அது ஞாபகம் வந்ததும், எனக்கு நிவியைப் பத்தின ஞாபகமும் வந்துருச்சு. அதனால், நான் ஆஃபீஸில் இருக்கும் போது அவளுக்கு மெசேஜ் பண்ணிப் பேசினேன்” என்று உற்சாகமாக கூறியவளிடம்,

 

“ஹேய்! சூப்பர் யக்ஷிம்மா! அவங்க எப்படி இருக்காங்களாம்?” என்று அவளிடம் விசாரித்தான் அவளது கணவன்.

 

“நல்லா இருக்கா. இன்னொரு குட் நியூஸ் சொல்லட்டுமா ங்க?” என்றாள் யக்ஷித்ரா.

 

“என்னது ம்மா?” 

 

“இப்போ ஃப்ரீயாகிட்டு நாங்க ஃபோன் பண்ணிப் பேசிக்கப் போறோம். அப்போவே அவகிட்ட நாம நேரில் மீட் பண்ணலாமான்னுக் கேட்கப் போறேன் ங்க” என்று குதூகலத்துடன் உரைத்தாள் அவனது மனைவி.

 

“பார்றா! ஓகே ம்மா. எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்” என்றவனோ, அவர்களது அறையிலிருந்து வெளியேறி தன் அன்னை மற்றும் தந்தையிடம் போய்,

 

“நான் ஆஃபீஸூக்குப் போயிட்டு வர்றேன் ப்பா, ம்மா” என்று அவர்களிடம் கூறினான் அற்புதன்.

 

“சரிப்பா” என அவனை வழியனுப்பி வைத்தார்கள் அவனது பெற்றோர்.

 

அதற்குப் பிறகு, யக்ஷித்ராவிற்குத் தேநீர் கலக்கிக் கொடுத்து விட்டுத் தன் வேலைகளைப் பார்க்கப் போய் விட்டார் கீரவாஹினி.

 

அந்தப் பானத்தைப் பருகி முடித்தவளோ, தன்னுடைய உடையை மாற்றிக் கொண்டு நிவேதிதாவிற்குக் குறுந்தகவல் அனுப்பி விட்டுக் காத்திருக்கலானாள் யக்ஷித்ரா.

 

அரை மணி நேரத்திற்குப் பிறகுத் தோழியிடம் இருந்து அழைப்பு வந்ததும் அதை உடனே ஏற்று,”ஹாய் நிவி!” என்று அவளிடம் பரவசத்துடன் பேசியவளிடம்,

 

“ஹாய் யக்ஷி! டீ எல்லாம் குடிச்சு முடிச்சாச்சா?” என்று அவளிடம் வினவினாள் நிவேதிதா.

 

“ம்ம். இப்போ தான் குடிச்சேன். நீ என்னப் பண்ற? நான் உன்னைத் தொந்தரவு பண்ணிடலையே?” 

 

“ஹைய்யோ! அப்படியெல்லாம் இல்லை யக்ஷி. நீ சொல்லு, உன் லைஃப் எப்படி போகுது?” 

 

“இப்போ தான், என் வாழ்க்கை நல்லபடியாகப் போயிட்டு இருக்கு நிவி” எனத் தன் கணவன் மற்றும் அவனது பெற்றோரும் தன்னை எப்படியெல்லாம் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை அவளிடம் விளக்கமாக கூறி முடித்தாள் யக்ஷித்ரா.

 

“ஹப்பாடா! நான் உன்னை நினைச்சுக் கவலைப்படாத நாளே இல்லை ம்மா. நீ இப்போ சொன்னதைக் கேட்டதும் தான் எனக்கு நிம்மதியாக இருக்கு” என்று உளமார்ந்த அன்புடன் உரைத்தாள் நிவேதிதா.

 

“ம்ஹ்ம். உன்னைப் பத்தி சொல்லு. இப்போ எந்த ஊரில் இருக்கீங்க?” 

 

“நாங்க இப்போ வேற ஊருக்கு மாறி வந்துட்டோம் யக்ஷி” என்று கூறி விட்டு அந்த ஊரின் பெயரையும் சொல்லவும்,

 

“சூப்பர்! நம்ம ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்து ஊரில் தான் இருக்கோம். அப்போ நாம கண்டிப்பாக மீட் பண்ண வாய்ப்பு இருக்கு நிவி?” என்ற தோழியிடம்,

 

“ஆமாம் யக்ஷி. நானும் இதையே தான் கேட்கனும்ன்னு நினைச்சு உனக்குக் கால் செஞ்சேன். நம்ம மீட்டிங்கை எப்போ, எங்கே வச்சுக்கலாம்?” என்று அவளிடம் வினவினாள் நிவேதிதா.

 

“எங்க வீட்டுக்கு வந்துட்றியா?” என்கவும்,

 

“முதல் மீட்டிங் – யே வீட்டில் வேண்டாம் மா. நாம ஃபர்ஸ்ட் ஏதாவது ஒரு ஹோட்டலில் பார்த்துப் பேசிட்டு அடுத்த தடவை உங்க வீட்டுக்கு வர்றேன்” என்று அவளிடம் தெரிவித்தாள் அவளது தோழி.

 

“சரி. நீ இங்கே வர்றியா? நான் உங்க ஊருக்குக் கிளம்பி வரவா?” என்று அடுத்தக் கேள்வியை எழுப்பினாள் யக்ஷித்ரா.

 

“என்னோட ஹஸ்பெண்ட் வேலை விஷயமாக வெளியூர் போயிருக்கார். எங்களோட பசங்களும் அவங்க தாத்தா, பாட்டி வீட்டுக்குப் போயிருக்காங்க. அதனால், நானே உன்னைப் பார்க்க வர்றேன்” என்றதும்,

 

“ஓகே நிவி. இங்கே எந்த ஹோட்டல் பெஸ்ட் அண்ட் நமக்கும் பேசுறதுக்கு நல்ல இடமாக இருக்கிற மாதிரியும் பார்த்துட்டு உனக்குச் சொல்றேன்” என்றாள் யக்ஷித்ரா.

 

“ஏதாவது ஒரு லீவ் நாளில் பார்த்துப் பேசுவோம். அப்போ தான், நாம நிறைய விஷயங்களை ஷேர் பண்ண முடியும்” என்று தோழிக்கு அறிவுறுத்தினாள் நிவேதிதா.

 

“நான் அதுக்கு ஏத்த மாதிரியே ஃபிக்ஸ் பண்றேன்” என்று அவளுக்கு வாக்கு அளிக்கவும்,

 

“உன்னைப் பார்க்கிறதுக்குக் குழந்தைங்களையும் என் கூடக் கூட்டிட்டு வரலாம்ன்னுப் பார்த்தால் இந்த முறை அது முடியாமல் போயிருச்சு” என வருத்தம் மேலிட கூறியவளிடம்,

 

“இருக்கட்டும் நிவி. அவங்களை இன்னொரு நாள் பார்த்துட்டா போச்சு. எப்படியும் இரண்டாவது தடவை இங்கே வீட்டுக்கு வருவ தானே? அப்போ அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு வா” என்று அவளைச் சமாதானப்படுத்தும் விதமாகப் பேசினாள் யக்ஷித்ரா.

 

“ம்ஹ்ம். அவங்க இல்லாமல் வீடே வெறிச்சோடி இருக்கு” என்றவளிடம்,

 

“எனக்கு உன்னோட மனநிலை புரியுது நிவி. உனக்கு எவ்வளவு நேரம் என் கூடப் பேசத் தோனுதோ, அது வரைக்கும் பேசு. ஒன்னும் பிரச்சினை இல்லை” என்று தன்னிடம் கனிவுடன் சொன்ன தோழியை எண்ணிப் பெருமிதம் அடைந்தவளோ,”தாங்க்ஸ் ம்மா. ஆனால், உனக்கு வீட்டில் வேலை இருக்கும்ல? நீயும் இப்போ தானே ஆஃபீஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போயிருப்ப?” என்று அவளிடம் வினவவும்,

 

“ஆமாம் மா. ஆனால், எனக்கு இப்போதைக்கு எந்த வேலையும் இல்லை. அதனால், நீ இப்போ தாராளமாக என் கூட அதிக நேரம் பேசலாம்” என்று அவளுக்கு உறுதி அளித்தாள் யக்ஷித்ரா.

 

அவளே அனுமதி கொடுத்தப் பிறகு, அவளிடம் தனது குடும்பம், வேலை மற்றும் இதர விஷயங்களைப் பற்றிய விவரங்களைத் தோழியிடம் விவரித்து முடித்தாள் நிவேதிதா.

 

“ம்ம். இதையெல்லாம் கேட்கவே ரொம்ப ஹேப்பியா இருக்கு ம்மா” 

 

“ஓகே யக்ஷி. இன்னைக்கு இது போதும். மத்ததை நாம நேரில் பேசிக்கலாம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டாள் நிவேதிதா.

 

அதன் பிறகுத், தானும், தன்னுடைய தோழியும் வீட்டில் இல்லாமல் வெளியே ஒரு இடத்தில் சந்திக்கப் போவதைப் பற்றித் தன் கணவனிடமும், மாமனார், மாமியாரிடமும் எப்படி சொல்லி அனுமதி பெறுவது என்று சிந்திக்கத் தொடங்கினாள் யக்ஷித்ரா.

 

தன் கணவனிடமும், அவனது பெற்றோரிடமும் தனது தோழியைச் சந்திக்கச் செல்வதற்காக வேண்டி அனுமதி பெற தயக்கம் கொள்ளவில்லை யக்ஷித்ரா.

 

அவர்கள் மூவரும் அதையெல்லாம் எதிர்பார்க்கவே மாட்டார்கள் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.

 

ஆனால், அவளது தோழியை வீட்டிற்கு அழைத்து வராமல் வெளியே எங்கோ ஓரிடத்தில் சந்திக்கப் போவதாக முடிவெடுத்து இருப்பதை அறிந்தால் அதை எண்ணிச் சங்கடம் அடைவார்கள். அதனால் தான், அந்த விஷயத்தை அவர்களிடம் வெளிப்படுத்துவதில் இருக்கும் சிக்கலைக் கலைவதற்கு என்ன வழி என்பதை அவள் யோசிக்க வேண்டும்.

 

அது மட்டுமில்லாமல், தனது கணவனின் வேலை முடிந்து வரும் சமயத்தில் தான் இதை அவனுடன் சேர்த்து தன் மாமனார் மற்றும் மாமியாரிடம் பகிர வேண்டும் என்றும் முடிவு செய்தவளோ, அந்த மூவரும் வீட்டில் இருக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தாள் யக்ஷித்ரா.

 

அந்தச் சந்தர்ப்பமும் விரைவிலேயே அவளுக்குக் கிடைத்து விட்டிருந்தது. 

 

நிவேதிதாவைப் பார்க்கப் போவதற்கு முந்தைய வாரத்தில் வந்த ஞாயிற்றுக்கிழமையின் போது, முதலில் தனது கணவனிடம் விஷயத்தைச் சொல்லும் விதமாக அவனிடம் மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் யக்ஷித்ரா.

 

“ஏங்க! நான் நிவிக்குக் கால் செஞ்சுப் பேசினேன்” என்றவளிடம்,

 

“ஓஹ்! ஆமால்ல? அன்னைக்கே அவங்க கூடப் பேசனும்ன்னு சொல்லிட்டு இருந்த! என்னாச்சு? உன் ஃப்ரண்ட் என்ன சொன்னாங்க?” என்றான் அற்புதன்.

 

“அவ இப்போ அவங்க குடும்பத்தோட வேற ஊரில் செட்டில் ஆகிட்டாளாம் ங்க” என்று அவளது கணவன் மற்றும் குழந்தைகளும் அவர்களது வீட்டில் தற்போது இல்லை என்பதையும் அவனிடம் தெரிவித்தாள் யக்ஷித்ரா.

 

“சரி” என்று அவன் கூறி விட,

 

“நாங்க ரெண்டு பேரும் நேரில் மீட் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம் ங்க” என்று அவனிடம் தயக்கத்துடன் கூறினாள் அவனது மனைவி.

 

“வாவ்! உன்னோட ஸ்கூல்மேட் – ஐ மீட் பண்றதைப் பத்தி சொல்லும் போது நீ ஏன் இவ்வளவு தயங்குற ம்மா?” என்று அவளிடம் ஆதூரத்துடன் வினவியவனிடம்,

 

“அது வந்து ங்க… அவ தான் என்னைப் பார்க்க இந்த ஊருக்கு வரப் போறா! அதனால்…” என்று கூறி நிறுத்தியவளைக் குழப்பத்தோடு ஏறிட்டான் அவளது கணவன்.

 

“ஆனால் அவ இங்கே நம்ம வீட்டுக்கு வரப் போறதில்லை ங்க” என்றதும்,

 

“ஏன்? இங்கே வர்றதால் அவங்களுக்கு ஏதாவது பிரச்சினையா?” என்று அவளிடம் கேட்கவும்,

 

“அவளுக்கு இங்கே வர்றதில் எந்தப் பிரச்சினையும் இல்லை ங்க‌. ஆனால், இந்த முறை வீட்டுக்கு வர வேண்டாம்ன்னு நினைக்கிறா” என்க,

 

“ஏன் ம்மா?” என்று அவனிடமிருந்து கேள்வி எழுந்தது.

 

“அவளோட ஹஸ்பெண்ட்டும், பிள்ளைங்களும் இல்லாமல் அவ மட்டும் இங்கே தனியாக வர விருப்பப்படலையாம் ங்க. அதான், எங்கிட்ட அப்படி சொல்லிட்டா” என்று தன் கணவனுக்குப் பதிலளித்தாள் யக்ஷித்ரா.

 

“ம்ஹ்ம். என்னமோ சொல்ற, அவங்களுக்கு என்ன இஷ்டமோ, அதைப் பாரு. எப்போ உங்களோட மீட்டிங் நடக்கப் போகுது?” என்று அவளிடம் விசாரித்தான் அற்புதன்.

 

“அதை இன்னும் நாங்க முடிவு பண்ணலை ங்க. அத்தை, மாமா கிட்டே சொல்லிட்டு, அப்படியே அம்மாகிட்டேயும், யாதுகிட்டேயும் இந்த விஷயத்தை ஷேர் செய்யனும்” என்றாள் அவனது இல்லாள்.

 

“சரி. அப்போ அப்பா, அம்மாகிட்டே போய்ப் பேசலாம். வா” என்று அவளைத் தன்னுடைய பெற்றோரிடம் கூட்டிச் சென்றான் அவளது கணவன்.

 

ஹாலிற்குப் போனதும்,“அத்தை, மாமா” என்று அவர்களை அழைத்தாள் யக்ஷித்ரா.

 

கீரவாஹினி,“என்னம்மா?” என்கவும்,

 

அவரிடமும், மாமனாரிடமும் விஷயத்தை உரைத்தாள் அவர்களது மருமகள்.

 

அதைச் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தான் அற்புதன்.

 

அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு முடிந்திருந்த அவளது மாமனாரும், மாமியாரும் தங்கள் முகத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

 

“என்னம்மா அந்தப் பொண்ணு உன்னை முதல் முறையாகப் பார்க்க வர்றா, அப்படியிருக்கும் போது வெளியே மீட் பண்றது எப்படி சரியா வரும்?” என்று அவளிடம் வினவினார் அகத்தினியன்.

 

அவரிடமிருந்து வந்த வினாவிற்குச் சரியான விடையைக் கூறி விட்டாள் யக்ஷித்ரா.

 

“நீங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் கழிச்சு ஒருத்தரையொருத்தர் பார்த்துப் பேசிக்கப் போறீங்கன்னு சொல்ற, அப்படின்னா, நீங்க எதுக்கு ஹோட்டலில் பார்த்துப் பேசனும்? அந்தப் பொண்ணை உங்க வீட்டிலாவது தங்க வைக்க வேண்டியது தானே ம்மா? அங்கேயிருந்து நல்லா மனசு விட்டுப் பேசிக்கலாமே?” என்று அவளுக்கு யோசனை சொன்னார் அவளது மாமியார்.

 

“சரிங்க அத்தை. இதை அவகிட்டே சொல்லிப் பார்க்கிறேன்” என்றவளிடம்,

 

“என்னைக்குப் போய்ப் பார்க்கப் போறேன்றதை இன்ஃபார்ம் பண்ணிடு ம்மா” என்று அவளுக்கு வலியுறுத்தினார் அகத்தினியன்.

 

“சரிங்க மாமா” என்றவளுடனும், தங்கள் மகனுடனும் சேர்ந்து அன்றைய இரவு உணவை உண்டனர் அற்புதனின் பெற்றோர்.

 

அதற்குப் பிறகுத் தன் தாய் மற்றும் தங்கையிடம் நிவேதிதாவுடன் பேசியதைப் பற்றிப் பகிர்ந்து கொண்டாள் யக்ஷித்ரா.

 

அவர்கள் இருவரும் அவளது புகுந்த வீட்டார் கொடுத்த உபதேசத்தையே அவளுக்குப் போதித்தார்கள்.

 

“நான் அவளுக்குக் கால் பண்ணி இதைப் பத்திப் பேசுறேன்” என்று அவர்களிடம் சொல்லி விட்டு அடுத்த நிமிடமே தன் தோழிக்கு அழைத்து, அவளிடம் இந்த யோசனையைக் கூறினாள் யக்ஷித்ரா.

 

“உங்க வீட்டில் வந்து தங்கிட்டுப், பேசிட்டுப் போனால் அப்பறம் உன்னோட புகுந்த வீட்டு ஆளுங்களுக்குச் சங்கடமாக இருக்காதா?” என்று தோழியிடம் வினவினாள் நிவேதிதா.

 

“இந்த ஐடியாவைச் சொன்னதே அவங்க தான்!” என்று அவளிடம் தன் வீட்டில் நடந்த முழுக் கதையையும் சொல்லவும்,

 

“என்னது? உண்மையாகவா சொல்ற?” என்றாள் அவளது நண்பி.

 

“ஆமாம் நிவி. அதனால் தான், நானே இதை தைரியமாக உங்கிட்ட சொன்னேன்” என்றுரைத்தாள் யக்ஷித்ரா.

 

“அப்போ நான் நம்ம மீட்டிங்கிற்கு முந்தைய நாளே உங்க வீட்டுக்கு வந்துடறேன்”

 

“சரி. நான் உனக்கு யாதுவோட மொபைல் நம்பரை மெசேஜ் பண்றேன். நீ ஊருக்கு வந்ததும் அவளுக்குத் தகவல் சொல்லிரு” என்று அவளிடம் உரைத்து விட, 

 

அதன் பின்னர், அந்த இரு உயிர்த் தோழிகளும் தங்கள் சந்திப்பு நிகழப் போகும் நாளையும் முடிவு செய்து விட்டிருந்தனர்.

 

“அந்தத் தேதியைத் தான் செலக்ட் பண்ணுவீங்கன்னு நான் முன்னாடியே நினைச்சேன்!” என்றான் அவளது கணவன்.

 

யக்ஷித்ரா,“எப்படி ங்க?” என்றதும்,

 

“அன்னைக்கு சண்டே ம்மா! அன்னைக்குத் தானே உங்களுக்கு லீவ்? அதான்!” என்று அவளிடம் கூறிச் சிரித்தான் அற்புதன்.

 

                       – தொடரும் 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்