Loading

இப்படியாக சில நாட்கள் கடந்த நிலையில், யக்ஷித்ராவிற்குப் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு வருவதற்கான நாள் கிட்டத்தட்ட அருகில் வந்து விட்டிருந்தது.

 

அதனால், அவர்களது வகுப்பு ஆசிரியைகள் யாவரும் தங்களது மாணவிகளுக்குத் தேர்வின் மீதிருக்கும் பயத்தைப் போக்கும் வகையில் உரையாடிக் கொண்டு இருந்தனர்.

 

அவற்றையெல்லாம் கேட்டதற்குப் பிறகுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களுடைய பயத்தைப் போக்கிக் கொண்டார்கள்.

 

அனைத்து மாணவிகளும் சிறப்பாகத் தேர்வுகளை எழுதி முடிப்பதற்காகத் தங்களால் ஆன உதவிகளை அவர்களுக்குச் செய்து கொண்டிருந்தனர் மாணவிகள்.

 

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, அவர்கள் அனைவரும் தங்களது பள்ளிப் படிப்பை முடிக்கப் போகிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காக, “பிரிவு உபச்சார விழா” நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கினர் பள்ளியின் முதல்வர், ஆசிரியைகள் மற்றும் சக மாணவிகள். 

 

எனவே, அனைத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளையும் ஒரு வகுப்பிற்குள் உட்காருமாறு உத்தரவிட்டார் அந்தப் பள்ளியின் முதல்வர்.

 

ஏற்கனவே, பிரிவு உபச்சார விழாவைப் பற்றிக் கேள்விப்பட்டதில் இருந்து, யக்ஷித்ராவிற்கும், நிவேதிதாவிற்கும் மனம் என்னவோ செய்வதைப் போல உணர்ந்தனர்.

 

அதன் வெளிப்பாடாக,”இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம பிரின்சிபால் மேடம் வந்து, ஃபேர்வெல் டே – யைப் பத்திப் பேசுவாங்கள்ல?” என்றாள் யக்ஷித்ரா.

 

அதற்கு,”ஆமாம் யக்ஷி. அதை நினைச்சா தான், எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கு‌. நம்மளோட ஸ்கூல் லைஃப் – யே முடியப் போகுதுல்ல?” என்று அவளிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்தாள் நிவேதிதா.

 

“ஆமாம். நாம இந்த ஸ்கூலுக்கு வர்ற நாட்களில் தான் ஜாலியாக, சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கிறோம்! அதுக்கு இப்போ ஒரு முடிவு வரப் போகுது…!” என்று வேதனைப்பட்டாள் அவளது தோழி.

 

அந்தச் சமயத்தில், அந்த வகுப்பிற்குள் ஆசிரியைகளும், பள்ளி முதல்வரும் வந்து சேர்ந்தனர்.

 

அந்தப் பள்ளியில் படிக்கும் ஒட்டு மொத்தப் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளும் அந்த வகுப்பறையில் கூடி இருப்பதைப் புன்னகையுடன் பார்த்து விட்டு,

 

“நீங்க எல்லாரும் பப்ளிக் எக்ஸாமை நினைச்சு மன அழுத்தத்தில் இருப்பீங்கன்னு எங்களுக்கு நல்லா தெரியும்! அதைப் பத்தித் தனியாக டிஸ்கஷன் வச்சுக்கலாம். இப்போ உங்களுக்கு நடத்தப் போகிற ஃபேர்வெல் டே – யைப் பத்திப் பேசுவோமா?” என்று அவர்களிடம் புன்னகையுடன் வினவினார் முதல்வர்.

 

“எஸ் மிஸ்” என்று அனைவரும் கோரஸ் பாடினர்.

 

“சரி. நீங்க இந்த ஸ்கூலில் இவ்வளவு வருஷமாகப் படிச்சிட்டு இருந்துட்டு இப்போ திடீர்னு ஸ்கூல் லைஃப் – யே முடியப் போகுதுன்ற கவலையையும், சோகத்தையும் உங்க எல்லாரோட கண்லேயும் பார்க்க முடியுது!” என்றவர், 

 

மேலும்,”இந்த ஸ்கூல், உங்களோட ஃப்ரண்ட்ஸ், அப்பறம் உங்களுக்குப் பிடிச்ச டீச்சர்ஸ், நீங்க இங்கே பண்ணின அட்டகாசங்கள் இப்படி எல்லாத்தையும் உங்களுக்குள்ளே ஒருத்தருக்கொருத்தர் பேசிட்டு இருப்பீங்கன்னும் எனக்குத் தெரியும்!” என்றவரைப் பார்த்து தாங்களும் புன்னகை புரிந்தனர் அந்த மாணவிகள்.

 

“கரெக்ட் ஆக கணிச்சு சொல்லிட்டேனா?” என்று கேட்கவும்,

 

“ஆமாம் மிஸ்” என்றார்கள் அனைவரும்.

 

“ம்ம். உங்களுக்கு எக்ஸாமைப் பத்தின அழுத்தம், பதட்டம், படப்படப்புன்னு எல்லாமே இருந்தாலும், இந்த நாளில் இருந்து எக்ஸாம் முடியுற நாள் வரைக்கும் இங்கே நடக்கிற எல்லாத்தையும் சந்தோஷமாக அனுபவிங்க. எதையும் மிஸ் பண்ணிடாதீங்க! ஏன்னா, இந்த ஸ்கூல் லைஃப் போனால் திரும்பி வராது! அதனால், உங்க ஃப்ரண்ட்ஸ் அண்ட் டீச்சர்ஸ் கூட நல்லா பேசுங்க. உங்களுக்கு ஃபேர்வெல் டே முடிஞ்சதுக்கு அப்பறம் நீங்க எல்லாரும் வேகமாக எக்ஸாமுக்குத் தயாராக ஆரம்பிச்சிடுவீங்க! அதுக்குத் தான், இப்போவே இதையெல்லாம் உங்ககிட்ட சொல்றேன்!” என்றார் முதல்வர்.

 

“ஓகே மிஸ்” என்ற பதில் வரவும்,

 

“உங்களோட ஃபேர்வெல் டே- க்கு என்னென்ன சாப்பாடு வேணும்ன்னு ஒவ்வொரு கிளாஸூம் செலக்ட் செஞ்சு உங்க கிளாஸ் டீச்சர்ஸ் கிட்ட சொல்லுங்க. எந்தெந்தப் பதார்த்தம் எல்லாம் நிறைய தடவை சொல்லி இருக்கீங்களோ, அதை நாங்க முடிவு பண்ணுவோம். சரியா?” என்று அவர்களிடம் வினவியதும்,

 

“சரிங்க மிஸ்” என ஒப்புதல் அளித்தனர் அந்த மாணவிகள்.

 

“வேற ஏதாவது சந்தேகம் இருந்தால் என்கிட்டே கேளுங்க” என்று கூறி விட்டு அனைவரையும் பார்த்து நின்றார் பள்ளி முதல்வர்.

 

அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை அவர்கள் அனைவருடைய முக பாவனைகளும், மௌனமும் சொல்லி விட்டதால்,

“உங்க முகத்தை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லைன்னுப் புரியுது. அதனால், எல்லாரும் அமைதியாக எழுந்து உங்க கிளாஸூக்குப் போங்க” என்று அவர்களிடம் கூறி விட்டு, அங்கேயிருந்த ஆசிரியைகளைப் பார்த்து,”நீங்களும் போய் உங்க ஸ்டூடண்ட்ஸ் கிட்டே பேசிட்டு வாங்க” என அவர்களையும் அனுப்பி வைத்து விட்டுத் தனது அறைக்குப் போனார் பள்ளி முதல்வர்.

 

அந்த அறையிலிருந்து வெளியேறி தங்களது வகுப்பிற்கு வரிசையாக சென்று கொண்டிருந்த மாணவிகளின் முகங்கள் யாவும் சோகத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

 

அதனோடு தான், வகுப்பறைகளுக்குச் சென்று தத்தமது இடத்தில் அமர்ந்து கொண்டார்கள் அனைவரும்.

 

இங்கே, தங்களுடைய இடத்தில் உட்கார்ந்திருந்த தோழிகள் இருவரின் மனநிலையைப் பற்றிச் சொல்லவே தேவையின்றி அத்துணை பரிதாபத்திற்குரியதாக இருந்தது.

 

“நம்ம பிரின்சிபால் மேடம் பேசப்பேச எனக்கு அப்படியே கண்ணுக் கலங்கிருச்சு!” என்றவுடன்,

 

“எனக்கும் தான் நிவி! நான் அழுகையைக் கட்டுப்படுத்திட்டுத் தான் அவங்கப் பேசுறதைக் கேட்டுட்டு இருந்தேன்! நாம இப்படியே இந்த ஸ்கூல்லயே வாழ்க்கை முழுசும் படிக்க மாட்டோமான்னு இருக்கு!” என்று அவளிடம் பகிர்ந்து கொண்டாள் யக்ஷித்ரா.

 

“ம்ஹ்ம். அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லைன்னு நல்லா தெரிஞ்சும். எனக்கும் அப்படி நடந்தால் நல்லா இருக்குமேன்னுத் தோனுது!” என்ற நிவேதிதாவைப் பார்த்துக் கசந்தப் புன்னகையை உதிர்த்து விட்டு,

 

“அடுத்து நமக்குக் காலேஜ் லைஃப் இருக்குன்னு மனசைத் தேத்திக்க வேண்டியது தான்!” என்று அவளிடம் சோகமாக கூறினாள் யக்ஷித்ரா.

 

“ஆமாம். ஆனாலும் இந்த லைஃப் – யைக் கண்டிப்பாக மிஸ் பண்ணுவோம்!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த வகுப்பின் ஆசிரியை உள்ளே நுழைந்தார்.

 

உடனே வகுப்பு மாணவிகள் அனைவரும் தங்கள் இடத்திலிருந்து எழுந்து அவருக்கு வணக்கம் வைத்தனர்.

 

அதை ஏற்றுக் கொண்ட ஆசிரியையும், அவர்களை உட்காரச் சொன்னவரோ,”பிரின்சிபால் மேடம் சொன்னதை எல்லாம் கேட்டீங்க தானே? இப்போ சத்தம் போடாமல் ஒவ்வொருத்தராக எழுந்து உங்க ஃபேர்வெல் டே – க்கு என்னென்ன சாப்பாடு எல்லாம் வைக்கலாம்ன்னு சொல்லுங்க பார்ப்போம்” என்றார்.

 

அவர் கூறியதைக் கேட்டதும், அந்த விஷயத்தில் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றெண்ணிய யக்ஷித்ராவும், நிவேதிதாவும் தங்களுக்குப் பிடித்தமான சில உணவுகளின் பெயர்களைச் சொன்னார்கள்.

 

அவற்றுடன் சேர்த்து, மற்றவர்கள் கூறியவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு,“நீங்க எல்லாரும் சொன்னதையும் குறிச்சுக்கிட்டேன். நான் இதைப் போய் பிரின்சிபால் மேடம் கிட்டே கொடுத்துட்டுப் பேசிட்டு வர்ற வரைக்கும் அமைதியாகப் படிச்சிட்டு இருங்க” என்று அவர்களிடம் பொதுவாக கூறி விட்டு, அந்த வகுப்பின் தலைமை மாணவியை அழைத்து, வகுப்பை அமைதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்று அந்த மாணவிக்குக் கட்டளையிட்டு விட்டுச் சென்றார் அந்த வகுப்பாசிரியை.

 

அவர் அங்கேயிருந்து கிளம்பிய பின், அந்த வகுப்பில் இருந்த மாணவிகள் அனைவரும் தங்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 

“கேர்ள்ஸ்! கொஞ்சம் மெதுவா பேசுங்க. மிஸ் வந்தால் என்னை தான் திட்டுவாங்க!” என்று அவர்களை எச்சரித்து விட்டுத் தன்னுடைய இடத்தில் அமர்ந்து கொண்டாள் அந்த வகுப்பின் தலைமை மாணவி.

 

அதனால், அவர்கள் எல்லாரும் மிகவும் மெதுவாகப் பேசத் தொடங்கினர்.

 

“இதெல்லாம் இருக்கட்டும். நாம இதைப் பத்தி அப்பறம் பேசலாம். நான் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்ன்னு நினைச்சு இந்த மீட்டிங் வந்துட்டதால் கிளாஸூக்கு வந்து சொல்லிக்கலாம்னு இருந்தேன்” என்று தன்னுடைய தந்தைக்கும், தனக்கும் நிகழ்ந்த உரையாடல், அதில், தனது தாய் மற்றும் யாதவியின் பங்கு என்னவெல்லாம் இருந்தது என்பதையும் தோழியிடம் விவரித்து முடித்தாள் யக்ஷித்ரா.

 

அதைக் கேட்ட நிவேதிதாவோ,”இவ்ளோ நடந்துருச்சா? அப்போ உங்க கைச்செலவுக்கு என்னப் பண்றீங்க?” என்று அவளிடம் வருத்தம் மேலிட வினவினாள்.

 

“அவர் மளிகைச் சாமான், படிப்புக்குன்னு, அத்தியாவசியத் தேவைக்கு எல்லாம் பணத்தைக் கொடுத்துடுவார். எங்களுக்கு மேற்செலவு எதுவும் இல்லாததால் நாங்க எக்ஸ்ட்ரா காசு கேட்கிறது இல்லை நிவி” என்க,

 

“அப்போ அதுக்கப்புறம் தேவைப்பட்டால் என்னப் பண்ணுவீங்க?” என்று தன்னிடம் கேட்ட தோழிக்கு,

 

“எங்க மூனு பேருக்கும் பணத் தேவை வரும் போது பாத்துக்கலாம்!” என்று அவருக்குப் பதிலளித்தாள் யக்ஷித்ரா.

 

“சரி” என்று கூறிய பிறகுப் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கி விட்டார்கள் இருவரும்.

 

அதன் பின்னர், மதிய உணவு இடைவேளையில், தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாட்டை யக்ஷித்ராவும், நிவேதிதாவும் பகிர்ந்து உண்டனர். 

 

இந்த இடத்தில் கதைச் சொல்வதை நிறுத்தி விட்டுத் தன்னுடைய கணவனை ஆராய்ந்து பார்த்தவளிடம்,

 

“உங்க அப்பாவை என்னால் புரிஞ்சுக்கவே முடியலை ம்மா” என்றான் அற்புதன்.

 

அதற்கு,”எங்களாலேயும் தான் ங்க. ஆனால், எப்பவும் வீட்டுக்குக் கொடுக்கிற காசு, ஃபங்க்ஷன்ஸ் வந்தால் அதுக்கு டிரெஸ் எடுத்துத் தந்துருவார். இதெல்லாம் கரெக்ட் ஆக செஞ்சிருவார்” என்று அவனிடம் கூறினாள் யக்ஷித்ரா.

 

“நம்மக் கல்யாணப் பேச்சு முடிவான அப்போ கூட அவர் எதுவுமே தலையிட்டுக்காமல் தேவைக்கு மட்டும் எங்ககிட்டப் பேசினா மாதிரி இருந்துச்சு. அதுக்குக் காரணம் இது தானா?” என்று மனைவியிடம் வினவவும்,

 

“அவர் உங்ககிட்ட மட்டுமில்லை எல்லார்கிட்டயும் அப்படித்தான் நடந்துப்பார். அவருக்கு யாரும் ஸ்பெஷல்ன்னு இல்லை. எல்லாரையுமே ஒரே மாதிரி தான் நடத்துவார். ஆனால், அடிக்கடி வர்ற கோபத்தினால் எங்கம்மாவைத் தான் பேசியே ரொம்ப டார்ச்சர் பண்ணுவார்!” என்றவளிடம்,

 

“ம்ஹ்ம்” என்றவனுக்கும் அவளையும், அவளது அன்னை, தங்கையையும் நினைத்தால் மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது.

 

இப்பொழுதாவது நிம்மதியாக இருக்கிறார்களே என்று ஆசுவாசம் அடைந்து கொண்டவனோ,

 

“நீ சொல்ற இந்தக் கதையில் நம்மளோட கல்யாணக் கதையும் வரும் தான?” என்று குறும்புடன் கேட்டான் அற்புதன்.

 

அதில் புன்னகை பூத்தவளோ,”அந்தக் கதை தான் நம்ம ரெண்டு பேருக்குமே தெரியுமே ங்க? அதனால், அதைத் தவிர்த்திடலாமான்னுப் பார்க்கிறேன்” என்று தன் தாடையில் ஒற்றை விரலை வைத்து யோசிப்பதைப் போல பாசாங்குக் காட்டினாள் யக்ஷித்ரா.

 

அதைக் கண்டு,”ஹேய்! என்னம்மா இப்படி சொல்ற? அதை உன் வாயாலே சொல்லிக் கேட்கனும்ன்னு தான் ரொம்ப நாளாக காத்துட்டு இருக்கேன். அதில் மண்ணள்ளிப் போட்டுடாதே ம்மா!” என்று அவளிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டான் அவளது கணவன்.

 

“ஓஹ்ஹோ! சரி. நீங்க கேட்கிறதால் நான் அதையும் சேர்த்து சொல்றேன்” எனப் போனால் போகிறது என்பதைப் போல அவனுக்கு உறுதி அளிக்கவும்,

 

“ரொம்ப தாங்க்ஸ் ம்மா” என்று தன் மனைவிக்கு நன்றி தெரிவித்தான் அற்புதன்.

 

இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகுத், தன் கணவனிடம் இயல்பாக உரையாடும் பழக்கத்தை வைத்துக் கொண்டாள் யக்ஷித்ரா.

 

அது மட்டுமில்லாமல், அவளது பள்ளிப் படிப்பின் போது நிகழ்ந்தப் ‘பிரிவு உபச்சார விழாவைப்’ பற்றிப் பேசிக் கொண்டு இருந்ததால், அந்தச் சமயத்தில் நடந்தவை யாவும் அவளுடைய நினைவுகளில் வந்து போனது.

 

அந்த நேரத்தில், தன் ஆருயிர்த் தோழியாக இருந்த நிவேதிதாவைப் பற்றிய ஞாபகங்களும் மனதில் எட்டிப் பார்க்கவும், தன்னுடைய அலுவலகத்தில் இருக்கும் போது, தனது கைப்பேசியில் இருந்து அவளது எண்ணிற்கு,’ஹாய் நிவி!’ என்ற புலனச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்து விட்டுக் காத்திருந்தாள் யக்ஷித்ரா.

 

அப்போது,”லன்ச் சாப்பிடப் போகலாம். வா” என்ற நேஹாவுடன் சேர்ந்து மதிய உணவுண்ணப் போய் விட்டு வந்து மீண்டுமொரு முறை தன் செல்பேசியை நோட்டம் விட்டவளுக்குத் தோழியின்,’ஹாய் யக்ஷி!’ என்றக் குறுந்தகவல் காணக் கிடைத்தது.

 

உடனே,’எப்படி இருக்கே நிவி? அங்கே எல்லாம் நல்லா இருக்காங்களா?’ என்று அவளுக்கு அனுப்பவும்,

 

‘நாங்க எல்லாரும் சூப்பராக இருக்கோம் யக்ஷி. நீங்க எப்படி இருக்கீங்க?’ என்று தானும் தோழியிடம் விசாரித்தாள் நிவேதிதா.

 

‘நல்லா இருக்கோம் நிவி. நீ என்னப் பண்ணிட்டு இருக்கிற?’ 

 

‘நான் இப்போ ஆஃபீஸில் இருக்கிறேன் யக்ஷி. வீட்டுக்குப் போயிட்டு கால் பண்ணவா? உனக்கு எப்போ வேலை முடியும்ன்னு சொல்லு. நாம ரெண்டு பேரும் பேசி ரொம்ப நாளாச்சுல்ல?’

 

‘நானும் ஆஃபீஸில் தான் இருக்கேன் நிவி. எனக்கு நாலு மணிக்கு மேல் வேலை முடிஞ்சிரும். வீட்டுக்குப் போயிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன். நீயும் ப்ரீ ஆகிட்டுப் பேசு. மறந்துடாதே!’ 

 

‘கண்டிப்பாகப் பேசலாம் யக்ஷி’ என்ற தகவலுடன் அந்த உரையாடல் முற்றுப் பெற்று விட்டது.

 

தன் நெருங்கிய பள்ளித் தோழியுடன் பேசப் போகும் உற்சாகத்துடன் தனது வேலையைப் பார்த்தாள் யக்ஷித்ரா.

 

                  – தொடரும் 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்